மகால்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட் பூஜைப்பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்துப்போய் அதிலிருந்து பிசையப்பட்ட சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார். பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.
அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக்கொண்டிருந்தாலும் இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்?" என்று கேட்டார். இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மிடத்தில் (பாபாவிடத்தில்) அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜைக் கண்டதாகவும், அவர் குருவுக்கு செய்துகொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார். எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை.
டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவிடத்தில் தனது குரு காகாபுராணிக் அவர்களையே கண்டதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார். எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திரிபுந்த்ரத்தை பாபாவின் நெற்றியிலும் இட்டதாகக் கூறினார்.
