Showing posts with label பாபா செய்த அற்புதம். Show all posts
Showing posts with label பாபா செய்த அற்புதம். Show all posts

Monday, August 8, 2016

உன் வீட்டுக்கு வருகிறேன்


சிட்டுக்குருவியின் காலில் ஏற்ற நேரத்தில் நூலைக் கட்டி பாபா இழுப்பார் என்பதற்கு நானும் எனது குடும்பத்தாரும் ஓர் எடுத்துக்காட்டு.
எப்படியெல்லாம் எங்களோடு இருந்து எங்களை பாபா வழிநடத்தினார் என்பதையும் பெருங்களத்தூருக்கு எப்படி இழுத்தார் என்பதையும் எழுதுகிறேன். ஹேமாட்பந்த் கூறுவதைப் போல பாபா என்னுள் இருந்து எழுதுவதாக நினைக்கிறேன்.
என் பெயர் பவானி. கணவர் தினேஷ் சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறோம். இரு மகன்கள். அழகான குடும்பம். எனது கணவர் சாயி பக்தர்.
மைலாப்பூர் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அங்கிருந்துதான்  ஒருமுறை பாபா விக்கிரகம் ஒன்றை வாங்கிவந்தார். இதை எங்களது பூஜை அறையில் வைத்து மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கு பூஜை செய்வதைப் போலவே செய்துவந்தேன்.
எங்கள் பக்கத்து வீட்டில் ஓர் அக்கா பாபாவுக்கு ஒன்பது வார விரதமிருந்து புத்தக விநியோகம் செய்தார். அதன் பிறகுதான் பாபாவை எப்படி வழி படுவது என்பதை அறிந்துகொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக தம்பதியருக்குள் பிரச்சினை ஏற்பட்டது. சில சமயம் பொறுமையை இழக்கும் நிலை கூட ஏற்பட்டது. கர்மவினையின் காரணமாகவும் ஏற்பட்ட பிரச்சினையான காலக்கட்டத்தில் பாபா என்னோடு வந்து கலந்ததை நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் பாபாவின் வழித்தடத்திலேயே இன்றுவரை நடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடங்கள் கடந்தும் குடும்பத்தில் பிரச்சினைகளும், பொருளாதார நெருக்கடியும், வியாபாரத்தில் மந்தமும் ஏற்பட்டது. இதனால் சற்று துவண்டிருந்தோம்.
நானும் என் கணவரும் ஒரு முறை சென்னை சாலிகிராமத்தில் பார்வதி பவன் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றிருந்தோம். அங்கிருந்த புக் ஸ்டாலில் உனது பிரார்த்தனை கேட்கப்பட்டது என்ற தலைப்பு தரப் பட்ட புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கினேன். அத்துடன் அங்கு கோயில் கொண்டுள்ள குபேர சாயியையும் தரிசித்துவிட்டு வந்தேன்.
புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் பாபா என்னுடன் இன்னும் அதிக அதிகமாக நெருங்குவதையும், பேசுவதையும் உணர்ந்தேன்.
பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நான் தனியாக பெருங்களத்தூருக்கு வந்தேன். அன்று சனிக்கிழமை என்பதால் கோயிலில் யாரும் இல்லை. பாபாவை நன்றாக தரிசனம் செய்துவிட்டு, உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற புத்தகத்தை வாங்கிவந்தேன்.
அதன் பிறகு நான் பெருங்களத்தூர் சென்றதையும், சாயி வரதராஜனின் கூட்டுப் பிரார்த்தனை மகிமைகளையும் என் கணவரிடம் பகிர்ந்துகொண்டேன்.
ஓர் ஆவல் ஏற்பட்டு அவர் என்னுடன் அடுத்த வாரமே பெருங்களத்தூர் வந்தார். அவருக்கு ஒரு திருப்தியும் ஏற்படவில்லை. பாபா எங்களை நீங்கள் இங்கு இழுத்ததற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள்தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டு வந்தேன்.
நான் புத்தகங்களைப் படித்து அவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது என் கணவர் மீண்டும் பெருங்களத்தூர் சென்று அவரைப் பார்த்துவிட்டு வரலாம் எனக் கூப்பிட்டார். சந்தோக்ஷத்துடன் அவருடன் வந்து சாயி வரதராஜனை தரிசித்து கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம்.
மாதங்கள் செல்லச் செல்ல என் கணவர் வாரம் தோறும் தவறாமல் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள என்னையும் அழைத்து வருகிறார். ஒரு வாரம் கூட தவறியதில்லை.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சாயி தரிசனம் இதழில் வெளியான ஸ்ரீ சாயியின் குரலில் மகளே! நான் இங்கு இருந்து தான் உன் வீட்டிற்கு வந்தேன் என்பதையும் உன் பிரச்சினைகளை நானே கவனித்து வருகிறேன் என்பதையும் எனக்கு உறுதிபடுத்தினார். அப்போதுதான் எனக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற புத்தகத்தை நான் இங்கிருந்து வாங்கி சென்ற தும் ஞாபத்திற்கு வந்து மெய் சிலிர்த்துப் போனேன்.
இன்னொரு சம்பவம், நாங்கள் சீரடிக்கு செல்வதற்காக அக்டோபர் மாதம் சீரடி செல்ல தீர்மானித்து அது கடைசியில் அவசர வேலை காரணமாக சீரடி செல்ல முடியாமல் போனது. அதையும் பாபா டிசம்பர் மாத சாயி தரிசனம் இதழில், நீ சீரடி செல்லத் தீர்மானித்து அது கடைசியில் போகமுடியாமல் போயிருக்கலாம். இந்த ஆண்டு கண்டிப்பாக உங்களை வந்து தரிசிப்பேன் எனத் தீர்மானம் செய்துகொள் எனக் கூறியிருக்கிறார்.
இன்றும் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ பாபா, சாயி வரதராஜன் அவர்கள் மூலம் ஆன்மிகத்தையும் வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சிட்டுக்குருவியை இழுத்தது போல இன்னும் பல குடும்பங்களை பாபா, அப்பா சாயி வரதராஜன் மூலம் தம் வசம் இழுப்பார்.

பவானி தினேஷ், அம்பத்தூர்

Thursday, June 23, 2016

மானசீகமாக வேண்டினால் நோய் தீரும்!

இரண்டு வயதில் ஓர் ஆண், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையுடன் நல்லபடியாகப்போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென என் தந்தையார் காலமானார். அவரது தலை திவசத்திற்கு தாய் வீட்டிற்கு அழைத்துவந்த என் கணவர், தனக்கென ஒரு வேலை பார்த்து,  வீடு பார்த்துவிட்டு வருவதாகப் போனார். போனவர் போனவர்தான் திரும்ப வரவேயில்லை.
கணவனால் கைவிடப்பட்ட என்னையும் என் குழந்தைகளையும், அம்மா, எனது தம்பி, தம்பி மனைவி என எல்லோரையும் எனது அக்காதான் இன்றுவரை காப்பாற்றிவருகிறார். இதற்காகவே அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது எனது மகள் எம்.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். மகன் பி.ஈ இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.
நாங்கள் பாபாவை நம்பி வணங்கி எங்கள் வாழ்க்கையை நகர்த்திவருகிறோம். இந்த நிலை ஏற்பட பாபாவே காரணம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு கல்வித்தொகை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். கல்லூரி திறக்க இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் விரதமிருந்தால் எனது வேண்டுதல் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் விரதத்தை ஆரம்பித்தேன்.
ஆறு வாரம் முடிந்தபோது, என் தம்பி ஒரு நாள் ஒரு கட்டு பணத்துடன் வந்தான். அதை பாபா திருவடிகளில் வைத்து வணங்கினான். பணம் ஏது எனக் கேட்டபோது, நண்பர் ஒருவர் தந்தனுப்பியதாகவும் பிறகு வந்து வாங்கிக் கொள்வதாகச்சொன்னதாகவும் கூறினான். இந்த நிலையில் மகளுக்கு கவுன்சிலிங்கில் சீட்டு கிடைத்தது.
எனது தம்பி, தனது நண்பரிடம் விஷயத்தைச்சொல்லி மூன்று மாதத்தில் திரும்பத் தருவதாகக்கூறி பணத்தைப் பெற்று கல்லூரியில் சேர்த்தோம். மகளுக்கு ஆறு மாதத்திற்கு மேல் அவ்வப்போது தொடர்ச்சியாக மாதாந்திரப் பிரச்சனையால் பாதிப்புக்கு ஆளானாள். மாத்திரைகளை சாப்பிட்டு உடல் பருமன் ஏற்பட்டு அது வேறு அவதியானதே தவிர, நோய் குணமாகவில்லை.
என் மகளிடம், “பாபாவிடம் மானசீகமாக வேண்டு, நிச்சயம் உனது நோயை குணப்படுத்துவார்எனக் கூறினேன். அவளும் வேண்டினாள், மனம் உருகி வேண்டிய அன்றே அவளது நோய் குணமானது. தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தேன்.
பாபாவின் உதியை தண்ணீரில் கலந்து குடித்து குணமானேன். தினமும் மூச்சுவிட சிரமமாக இருந்தது, இந்தப் பிரச்சினை தீரவும் பாபாவின் உதியைத்தான் உள்ளுக்கு சாப்பிடும் மருந்தாகப்பயன் படுத்தி குணம் பெற்றேன். இப்படி நிறைய அற்புதங்களை அவரது அருளால் அனுபவித்து அவருக்கு ஒரு உண்மையான சாட்சியாக வாழ்ந்து வருகிறேன். எங்களைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அவர் பொறுப்பு என அவரது பாதங்களையே சரணடைகிறேன்.
திருமதி. மலர், அண்ணாநகர்

Saturday, May 14, 2016

பாபா எனது உயிரைக் காப்பாற்றினார்



எனது கணவர் வேலைக்குச் செல்பவர். இரண்டு மகன்களில் மூத்தவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். இளையவன் வெளியூரில் தங்கிப் படிக்கிறான்.
கடந்த பொங்கல் அன்று காய்ச்சல் ஏற்படுவதுபோல் இருந்தது. இது அடிக்கடி ஏற்படுகிற விஷயம் என்பதால் வழக்கம் போல மாத்திரை போட்டுக் கொண்டு ஓய்வு எடுத்தேன். சமைக்க முடியாததால் வெளியில் உணவு வாங்கித் தந்துவிட்டு கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார்.
உதவிக்கு யாருமில்லாத நிலையில், சட்டென்று இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் நாடித்துடிப்பு ஆகியவை குறைய ஆரம்பித்துவிட்டது. தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.
எங்கள் வீட்டின் அருகே மெடிக்கல் கடை வைத்திருக்கும் கண்ணன் என்பவருக்கு போன் மூலம் தகவல் சொன்னேன். என்னால் பேசக்கூட முடியாத நிலையிருப்பதை உணர்ந்த அவர், பக்கத்திலிருந்த ஈஸ்வரி என்ற செவிலியருக்குப் போன் செய்து என நிலையைக் கூறியிருக்கிறார். உடனடியாக வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து நான் அபாயக் கட்டத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோன ஈஸ்வரி, உடனடியாக வீட்டிலேயே டிரிப்ஸ் ஏற்றினார்.
அவர் என் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோதுதான் எனக்கிருந்த அபாய நிலைமை எனக்கே தெரிந்தது. சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தேன்.
வழக்கமாக மாத்திரை மட்டும் கொடுத்தனுப்பும் கண்ணன் அண்ணா அவர்கள், தாமாக ஈஸ்வரிக்குப்போன் செய்து தகவலைச் சொல்லி அவர் வந்து சிகிச்சை தந்திராவிட்டால் ஒரு மணி நேரத்தில் என் வாழ்வு முடிந்திருக்கும். அன்று பாபா நிகழ்த்திய அற்புதத்தால் அன்று அவரது மகிமையைச் சொல்லும் சாட்சியாக நிற்கிறேன். அவரைச் சரணடைந்தால் கைவிடமாட்டார் என்பதற்கு நானே ஓர் உதாரண சாட்சி.

திருமதி ராணி, தாசில்தார் நகர். அண்ணாநகர், மதுரை

Tuesday, June 16, 2015

முதலில் உனக்கு அற்புதம் நடக்கும்!

நீண்ட நாட்களாக சீரடிக்குப் போகும் ஆசை இருந்ததால், சீரடி செல்லும் நண்பரை அணுகி, என்னையும் சீரடிக்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டேன். அதற்கு அவர், ”நீங்கள் நினைத்தவுடன் சீரடி செல்லமுடியாது, பாபா அழைத்தால்தான் போக முடியும்!”  என்று கூறினார். நான் இதை நம்பவில்லை.
டிக்கெட் எடுத்தால் யார் வேண்டுமானாலும் போகலாமே, இவர் ஏன் இப்படி கூறுகிறார் என நினைத்தேன். பிறகு பெங்களூர் சென்றுவிட்டேன். பெங்களூரில் இருந்தபோது, எனக்குத் தெரிந்த நபர் போன் செய்து, ”சீரடி போகிறோம், உங்களுக்கும் ஒரு டிக்கெட் எடுக்கட்டுமா?” எனக் கேட்டார்.
”எனக்கும் என் மனைவிக்குமாக டிக்கெட் எடுங்கள், அதற்கான பணத்தை வந்து தந்து விடுகிறேன்” எனக் கூறினேன்.
ஜூன் 2010ல் பெங்களூர் வழியாகப் புறப்பட்டு கோபர்கானில் இறங்கி வேன் மூலம் சீரடி அடைந்தோம். அன்று வியாழக்கிழமை. பாபாவை தரிசித்தபோது அவரது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனம் திருப்தி அடையவில்லை. ஒரு நிமிட தரிசனத்துக்காகவா வேலூரிலிருந்து வந்தேன்- என நினைத்தபடி அறைக்கு வந்தேன்.
மறுநாள், நான் தரிசனத்திற்குச் சென்றபோது கூட்டம் அவ்வளவாக இல்லை. அதிகமான நேரம் பாபாவை தரிசித்து பிரார்த்தனை செய்யமுடிந்தது. பாபா என்னை திருப்திபடுத்தினார்.
அங்கு எனது மனைவியும் சிலரும் ஷாப்பிங் சென்றனர். ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது, பசிக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, யாரோ ஒருவர் சுடச்சுட கீ ரைஸ் எடுத்துவந்து பரிமாறி பசி போக்கினார். இது சீரடியில் எனது முதல் அனுபவம். வீடு திரும்பினோம்.
ஒருமுறை வேலூரில் உதிபாபா மாணிக்கம் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆலயத்திற்குச்செல்லவிரும்பினேன். ஆலயத்திற்குக் கிளம்பி விமான நிலையம் வரை வந்துவிட்டேன், ஆனால் கோயில் எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. எதிரில் வந்தவர்களிடம் விசாரித்தாலும் தெரியாது என்று கூறிவிட்டார்கள்.
வருத்தத்தோடு, ”உன்னை தரிசிக்கும் ஆவலில் கிளம்பிவிட்டேன், வழி தெரியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்.. நீ என்னை அழைத்துச்சென்றால் வருகிறேன்!”  எனக் கூறி காரைத் திருப்பிக்கொண்டு வேலூருக்கு வர முற்பட்டேன்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஐயப்ப பக்தர் ஒருவர், நான் கோயிலுக்குத்தான் செல்கிறேன், வாருங்கள் என அழைத்துச் சென்றார். பாபாவையும் உதி பாபாவையும் தரிசித்து மகிழ்ந்தேன்.
அந்தக் கோயிலில் சாயி தரிசனம் இதழை இலவசமாக விநியோகம் செய்துகொண்டிருந்தார்கள். அதன் பிறகு பெருங்களத்தூரிலிருந்து மாதா மாதம் எனக்கு பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் பாபா செய்த அற்புதங்களைப் படிக்கும்போது, எனக்கும் இப்படி நடக்குமா என நினைத்தேன். சாயி வரதராஜன் எழுதிய பகுதிகளை படிக்கும்போது அவரை சந்தித்து குறைந்தது ஒருமுறையாவது அவர் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
நானும் என் மனைவியும்தான் பெருங்களத்தூர் செல்ல நினைத்தோம். ஆனால், எங்களுடன் முதன் முறை சீரடி வந்த அனைவரும் வருவதாகக் கூற, எட்டு பேருடன் பெருங்களத்தூர் புறப்பட்டோம்.
அன்று வியாழக்கிழமை. சாயி வரதராஜன் ஆலயத்தில் இருந்தார். அனைவரும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தோம். நான், என் பங்கிற்கு, ”எல்லாருக்கும் பாபா கனவில் வருகிறார். என் கனவில் வரவில்லையே, என் பக்தி போதாதா?” எனக் கேட்டேன்.
சிறிது நேரம் கழித்து, ”பாபா உங்களுடனேயே இருக்கும்போது கனவில் வரவேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?ள” எனக் கேட்டார் சாயி வரதராஜன்.
என்னை திருப்தி படுத்த அவர் கூறுகிற வார்த்தை என நினைத்தேன். ஆனால் இதை எப்படி உறுதிப்படுத்திக்கொண்டேன் என பிறகு கூறுகிறேன்.
என்னுடன் வந்த சிலர், தங்களுக்குப் பேரன் பேத்திகள் பிறக்க வேண்டும் என பிரார்த்தனையை வைத்தார்கள். என் மகளுக்குக் குழந்தையில்லை என்பதால், தத்து எடுக்க முடிவு செய்திருந்தோம்.
இதற்காகவும் பிரார்த்தித்த சாயி வரதராஜன், என்னைப் பார்த்து, ”முதலில் உங்களுக்கும் பிறகு அவர்களுக்கும் கிடைக்கும் என்றார்.  மகிழ்ச்சியோடு கிளம்பினோம்.
2012ல் இரண்டாவது முறையாக சீரடி செல்ல முடிவு செய்தோம். என் மனைவி, ”சீரடிக்கு முதல் முறை வந்து பேரன் பேத்திக்காகப் பிரார்த்தனை வைத்தேன், பெருங்களத்தூரிலும் பிரார்த்தனை வைத்தேன். இதுவரை நடக்கவில்லை. இரண்டாவது முறை அழைத்திருக்கிறாய். என்ன செய்யப்போகிறாய்? என தினமும் பாபாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சீரடி கிளம்ப 15 நாட்கள் இருக்கும்போது, தான் பதிவு செய்த ஏஜென்சியிலிருந்து தனக்குக்குழந்தை கிடைத்துவிட்டதாக என் மகள் போன் செய்தாள். சாயி வரதராஜன் கூறியமாதிரி, முதலில் எங்களுக்குத்தான் முதலில் அற்புதம் நடந்தது.
சீரடிக்குப் போன கையோடு, பெருங்களத்தூரும் சென்று நன்றி கூறிவிட்டு, பிரார்த்தனையில் கலந்து கொண்டு திரும்பினேன். பாபா என் னோடு இருக்கிறார் என்று சாயி வரதராஜன் சொன்னதை எப்படி நம்புவது என எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெருங்களத்தூர் போய் திரும்பிய பிறகு,சாயி தரிசனம் புத்தகம் வந்தது. அதைப் பிரித்தவுடன் என் கண்ணில் பட்ட வரிகள்,  நான் உன்னுடன் இருக்கிறேன்என்பது.
இதைப் படித்ததும் திருப்தி ஏற்பட்டதே தவிர, நம்பிக்கை வரவில்லை. இன்னும் சில சோதனைகள் செய்ய குரங்கு மனது விரும்பியது. நான் வாசலில் நிற்கும்போது பாபா என் கண்ணில் பட வேண்டும் எனக் கேட்பேன். ஒவ்வொரு முறையும் ஒரு காரில் பாபா படம் ஒட்டி வரும்.
 பாபாவைப் பற்றி யாராவது இன்று என்னிடம் பேச வேண்டும் என நினைப்பேன். மாலைக்குள் யாராவது வந்து என்னிடம் அவர் பற்றி பேசுவார்கள். அரியூரில் தங்கக் கோயில் போகும் வழியில் ஒரு பாபா ஆலயம் உள்ளது. அங்கு வெள்ளை நிற நாய் ஒன்று இருக்கும். ஒரு சமயம், பாபாவிடம், நீங்கள் என்னுடன் இருப்பது உறுதியானால், இன்று வெள்ளை நாய்க்கு பதில் கருப்பு நாய் இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு அரியூர் கோயிலுக்குச் சென்றேன்.
என்ன அதிசயம்- அங்கே கருப்பு நாய் இருந்தது. அலமாரியை சுத்தம் செய்தபோது சாயி தரிசனம் அக்டோபர் 2011 மற்றும் நவம்பர் இதழ்கள் கண்ணில் பட்டன. அதில் ஒரு பகுதியில் இருந்த வார்த்தைகள் கன்னத்தில் பளார் என்று அறைந்தது போலிருந்தது.
”என் மகனே!  நான் இருக்கிறேன் என்பதை நம்புகிறாய். ஆனால் நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை நம்ப மறுக்கிறாய். என் படத்தை எங்கு பார்த்தாலும் பூரிப்படைகிறாய், நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை உனக்கு எவ்வளவு முறைதான் விளக்கிச் சொல்வது. முட்டாள்.. நம்பு!  நான் உன்னுடன்தான் இருக்கிறேன்!” என்றிருந்தது.
இந்த அனுபவங்களுக்குப் பிறகு பாபா என்னுடன் எப்போதும் இருப்பதை உணர்கிறேன்.

கே.வி. சுந்தரம்,
ஆடிட்டர், வேலப்பாடி, வேலூர்.


குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...