Showing posts with label ஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி. Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி. Show all posts

Wednesday, May 23, 2018

நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து?





பாபாவின் மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர் ஒருமுறை வயிற்றுப்போக்கால் அவதியுற்றார்.  பாபாவுக்குத் தனது சேவை தடைப்படாமல் இருக்க, ஒரு மூலையில் பானையில் தண்ணீரை வைத்துவிட்டு, பாபா கூப்பிடும்போதெல்லாம் செல்வார்.  சாயிபாபா அனைத்தையும் அறிந்தவராயிருப்பதால் தனது வியாதியையும் அவர் சீக்கிரம் குணப்படுத்துவார் என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம் தெரிவிக்கவில்லை.  மசூதிக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் தாழ்வாரத்தின் வேலை, பாபாவால் அனுமதியளிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் உண்மையில் வேலை தொடங்கியவுடன் பாபா கொந்தளிப்புற்று பலமாகக் கூச்சலிடத் தொடங்கினார்.  எல்லோரும் ஓடினார்கள்.  காகாவும் ஓடினார்.  பாபா அவரைப் பிடித்து அங்கேயே உட்கார வைத்தார். 

பின்னர் நேரிட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய நிலக்கடலைப் பையை விட்டு ஓடியிருந்தார்.  பாபா கைநிறையக் கடலைப் பருப்புக்களை எடுத்து தமது கைகளால் அவற்றைத் தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப் பருப்புக்களை காகாவிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.  திட்டுவது, கடலையைச் சுத்தம் செய்வது, காகாவைச் சாப்பிடச் சொன்னது என்பன சமகாலத்தில் நடைபெற்றன.  பாபா தாமே சிலவற்றைச் சாப்பிட்டார்.  பையில் உள்ளவை தீர்ந்ததும், பாபா அவரைத் தாம் தாகமாய் இருப்பதால் தண்ணீர் கொணரச் சொன்னார்.  பின்னர் பாபா சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, காகாவைத் தண்ணீர் குடிக்கும்படி கூறினார்.  பாபா அப்போது, "உனது வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது.  நீ இனிமேல் தாழ்வாரத்தின் வேலையைக் கவனிக்கலாம்" என்று கூறினார்.

இதற்கு இடையில் ஓடிப்போனவர்கள் எல்லாம் திரும்பிவந்தனர்.  தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும் திரும்பி வந்து வேலையில் கலந்துகொண்டார்.  நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து?  நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரிக்கும்.  அதைக் குணப்படுத்தாது.  பாபாவின் மொழிகளே இவ்விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் உள்ள உண்மையான சிகிச்சையாகும்-சாயி சத்சரிதம் அத்தியாயம்-13🌷🙏🏻

Tuesday, May 22, 2018

குரு தேவையா?



இக்கேள்விக்கு பாபாவின்_பதில்
ஹேமத்பந்த், பாபா இவ்விஷயத்தைப்பற்றி என்ன சொன்னார் என்று எவ்விதக் குறிப்பும் விட்டு வைக்கவில்லை.  ஆனால் காகா சாஹேப் தீஷித் இவ்விஷயத்தைத் தனது குறிப்புகளில் பதிப்பித்துள்ளார்.   ஹேமத்பந்த், சாயிபாபா சந்திப்பின் அடுத்த நாளில், பாபாவிடம் காகா சாஹேப் தீஷித் சென்று, 
”நான் ஷீர்டியை விட்டுப்போக வேண்டுமா ?” எனக்கேட்டார்.  
பாபா "ஆம்" என்றார்.  
பிறகு "எங்கே போவது" என கேட்டார்.  
பாபா "உயர... மேலே...!" என்று கூறினார். 
"வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் வினவினார்.  
பாபா கூறினார்,  "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன.  இங்கிருந்தும் (ஷீர்டியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது.  பாதை கடினமானது.  புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன".  நான் (காகா சாஹேப் தீஷித்) கேட்டேன், "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன?"  அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.  புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்.  வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம் அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."

இந்நிகழ்ச்சியின்போது தாபோல்கரும் அறை அருகே இருந்தார்.  இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார்.

சாயிசத்சரிதம் அத்:2

Wednesday, June 22, 2016

சாயி புத்ரன் பதில்கள்

நீங்கள் அமைக்கிற கோயிலுக்கும் பிறர் அமைக்கிற கோயிலுக்கும் ஏதாவது வித்தியாசத்தை உணர்வீர்களா?
ஜி.கே.பிரசன்னா, மேல் மருவத்தூர்
சாயி புத்ரன் பதில்கள்
நிச்சயமாக! என் தந்தையார் என் வீட்டில் இருப்பதற்கும் அலுவலகத்திற்குச் செல்வதற்கும் உள்ள வித்தியாசம் எனக்குத் தெரிகிறது. அலுவலகம் செல்வது பிறருக்காக, என் வீட்டில் இருப்பது எனக்காக. நான் அமைத்த கோயில்கள் அனைத்திலும் அவர் எனக்காகவே எழுந்தருளினார் என்பதை என்னால் எப்படி மறக்கமுடியும்

நீங்கள் யாருடைய மகன்?
ஆர். ஜோதி, சென்னை-63
சாயி புத்ரன் பதில்கள்
நான் சிவன் மகன் என்பதை அறியாதவர்கள்தாம், எவன் மகன் எனக் கேட்டுக் குழம்புவார்கள். என்னை அறியாதவர்கள் என்னை அனுப்பியவரையும் அறிய மாட்டார்கள்; என்னை அறிந்தவர்கள் என்னை அனுப்பியவரையும் அறிந்திருக்கிறார்கள். நான் சாயி புத்ரன் ஆவேன்.

உடம்பைப் பார்த்து இது மிகவும் கேவலமாக இருக்கிறது என்று எண்ணுவது உண்டா?
பி. சத்யா, சத்துவாச்சாரி வேலூர்
சாயி புத்ரன் பதில்கள்

முன்னம் உடலை இழுக்கென்றிருந்தேன். அதுவே அவன் உறையும் ஆலயம் என்று உணர்ந்து மனம், புத்தி, புலன் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிற இந்த உடலைத்தான் பகவானிடம் ஈடுபடுத்துகிறேன். ஆகவே, தோற்றத்தைக் குறித்து ஒரு நாளும் நான் வெட்கப்படுவதில்லை.

Saturday, May 28, 2016

சாயி சத்சரிதத்தில் இருந்து..............


  ''யாருடைய பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ அந்தப் புண்ணியாலிகளே என்னை அறிந்துகொள்கிறார்கள்; என்னை வழிபடுகிறார்கள். ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண்டிருப்பீர்களானால், நான் என்னுடைய அருளால் உங்களுக்கு ஏழு கடல்களையும் அளிப்பேன் (ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன்). எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.  எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடசோபசார பூஜையோ வேண்டா. எங்கு பாவம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன்.”
         பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்பச் சொல்­யிருக்கிறார். இப்பொழுது நாம் அவ்வன்பான வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்வதில்தான் மனத்தைத் திருப்தி செய்துக்கொள்ள வேண்டும்.

Sunday, May 15, 2016

இத்துடன் உங்கள் கஷ்டம் முடிந்துவிட்டது


கர்ம வினையினால்தான் கஷ்டங்கள் வருவதாக நமது முன்னோர் கூறிச் சென்றுள்ளனர். கர்ம வினை என்பது முற்பிறவி வினை மட்டுமன்று, இப்பிறவி வினையும் ஆகும்.
தவறு செய்தால் தண்டனை நிச்சயம். அதே தவறுக்காகப் பிராயச்சித்தம் செய்வது என்பது தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான உபாயம் அல்லவா?
இப்படிப்பட்ட உபாய மார்க்கம்தான் இறை வழிபாடு; தான தர்மம் செய்தல்; பிறருக்கு முடிந்தளவு நன்மை செய்தல் போன்றவை. இவ்வாறு நாம் செய்யும்போது கர்மவினையின் தீவிரத் தாக்கம் குறைய ஆரம்பித்து புண்ணியம் சேர்கிறது. புண்ணியம் சேரும்போது நமக்கு நல்லவிஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
புத்திசாலியாக இருக்கிறவர்கள் நல்ல விஷயம் வாழ்க்கையில் நடக்கிற காலத்தை புண்ணியகாலம் என அறிந்து, மேலும் நன்மைகளைச்செய்தால் தொடர்ந்து பலனைப் பெறலாம். தீமையிலிருந்தும் தப்பிக்கலாம். பக்த சேவை செய்தே புண்ணியம் சம்பாதித்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.
நம் உபதேசத்தின் உதாரணத்திற்கு சித்ரா பவுர்ணமியை ஒட்டிய ஒரு கதையைக்கூறுகிறேன்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்ர குப்தனை வழிபாடு செய்தால் நீண்ட ஆயுள் பெறலாம். புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதை வலியுறுத்தும் ஒரு கதையும் உண்டு. ஏற்கனவே கதை உங்களுக்குத்தெரியும், இருந்தாலும் சுருக்கமாகக்கூறுகிறேன்.
புண்ணியம் என்ன என்பதையே அறியாத முரட்டுப் பாவி ஒருவன் இருந்தான். கோயில் பக்கமும் போனது இல்லை, நல்லதையும் செய்ததில்லை. அவனது தாயார் அவனிடம் மகனே, நீ எப்படியிருந்தாலும் பரவாயில்லை, தினமும் சித்ர குப்தாய நம: என்ற ஒரு மந்திரத்தையாவது தினமும் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். அவனும் அப்படிச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அவனுடைய விதி முடியும் காலம் வந்தது. சித்ரகுப்தன் அவனுடைய பாவ புண்ணியங்களைப் பார்த்தான். எந்த நன்மையும் செய்யாத அவன், தினமும் தன்னுடைய பெயரை உச்சரித்து வந்தது தெரியவரவே, அவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய உறுதிகொண்டான்.
அவனது கனவில் சென்று, “மகனே, விதி முடிந்து இறக்கும் நேரம் வந்துவிட்டது, இறந்தால் உனக்கு கொடிய நரக தண்டனை கிடைக்கும். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், பசு நீர் அருந்தும் அளவுக்கு ஒரு சிறிய குளத்தை வெட்டு, அதில் ஊறும் நீரை ஒரு பசு அருந்தினால் மூன்றே முக்கால் நாழிகைக்குப்புண்ணிய காலம் ஏற்படும்.
எம தர்மன் உன்னிடம் முதலில் புண்ணிய பலனை அனுபவிக்கிறாயா? பாவப் பலனை அனுபவிக்கிறாயா? என்று கேட்டால், புண்ணியப்பலனை அனுபவிக்கிறேன் என்று சொல். மூன்றே முக்கால் நாழிகை புண்ணிய காலத்தில் நான் உனக்கு நன்மை செய்து காப்பாற்றி விடுகிறேன் என்று கூறினான்.
இறக்க ஒருவாரம் உள்ள நிலையில், சித்ர குப்தன் கூறிய இந்த உண்மையை உணர்ந்த முரட்டுப் பாவி, குளம் வெட்ட ஆரம்பித்தான். ஆறு நாட்கள் முடிந்தும் அதில் தண்ணீர் வரவில்லை. ஏழாம் நாள் சிறிது தண்ணீர் ஊற ஆரம்பித்தது. இதற்குள் அக்குளக்கரைக்கு பசுவின் வடிவில் வந்த சித்ர குப்தன், ம்மா.. ம்மா.. எனக் கூவி மற்ற பசுக்களை அங்கு வரவழைத்துவிட்டான். இந்த நீரைப் பார்த்ததும் ஒரு பசு இறங்கி தண்ணீர் பருகியது. இதற்குள் நெஞ்சு வலி வந்து முரடன் இறந்து போனான். அவனை எமனிடம் தூதர்கள் அழைத்துச்சென்றார்கள். இவன் ஒரு புண்ணியத்தைக் கூட செய்ததில்லை, ஒரே ஒரு பசு அருந்த குளம் வெட்டினான்என்று சித்ரகுப்தன் கூறினான்.
அடே பாவி, உனக்கு மூன்றே முக்கால் நாழிகை சொர்க்க வாசம் உள்ளது. முதலில் சொர்க்கம் வேண்டுமா, நரகம் வேண்டுமா?” எமன் கேட்டார்.
முரடன் சொர்க்கம் வேண்டும் என்றான்.
சொர்க்க வாசம் கிடைத்ததும் புண்ணியப்பலன் சேர ஆரம்பித்து அவன் வெட்டிய குளத்தில் நிறைய நீர் நிறைய ஆரம்பித்தது, ஏராளமான பசுக்கள் தண்ணீர் குடித்தன. இதன் மூலம் அவனுக்கு புண்ணிய காலம் நீள ஆரம்பித்தது. நிரந்தர சொர்க்க வாசியாகிவிட்டான். இதுதான் கதை.
எமனுக்குப் போட்டுக்கொடுப்பதே சித்ரகுப்தன் தான். அவர்கூட தன்னை நம்பிய ஒரு பக்தனை காப்பாற்றுகிறார் என்கிறது கதை. தாத்பரியம் என்னவெனில், நீங்கள் யாரை வழிபட்டாலும் அவர்கள் மூலமாக உங்களுக்கு நன்மைகள் நிச்சயம் உண்டு. பேயை வணங்கினாலும்  அது உங்களுக்கு நன்மையைத்தான் செய்யும் என்பது.
இறைவன் சிலா வடிவில் இருப்பதால் சிலை வணக்கம் செய்யுங்கள், அதனால் நன்மை பிறக்கும் என்று நமது முதாதையர் கூறினார்கள். செய்யுங்கள், பலன் பெறுங்கள்.
எப்படி எனப் புரியவில்லையே என்கிறீர்களா? நீங்கள் வழிபாடு செய்யும்போது மனதை சாந்தப் படுத்தி நேர்வழியை விரும்புகிறீர்கள். பிரசாதம் போன்றவற்றை அளிக்கும்போது பலருக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்கிறீர்கள்; மற்றவர்களுடன் இன்முகத்துடன் பழகுகிறீர்கள்; அவர்கள் மனதை இதமாக்குகிறீர்கள். உங்கள் மீது கரிசனம் உண்டாகும் விதத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
இத்தகைய பல செயல்கள் அனைத்தும் இறை வழிபாட்டின் மூலம் கிடைப்பதால்தான் கல்லை நட்டுவைத்து இதுதான் உன் குல தெய்வம் இதையாவது கும்பிடு என்று முன்னோர் சொல்லி வைத்தார்கள். ஆங்காங்கே கோயில்களையும் தர்மசாலைகளையும் நிறுவி வைத்தார்கள். கொஞ்சம் அமர்ந்து யோசித்து புண்ணியத்தை பெருக்கும் வழிகளில் ஈடுபடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இப்படிச் செய்தால் இத்துடன் உங்கள் கஷ்டம் முடிந்துவிட்டது என்பதை உறுதியாக அறியுங்கள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...