Showing posts with label சாயி யுகம். Show all posts
Showing posts with label சாயி யுகம். Show all posts

Sunday, June 29, 2014

சாயி பக்தர் துமால்

foursai



என் தொழில் வக்கீல் என்பதால் என்னிடம் இன்னொரு வழக்கு வந்தது. மூன்று சகோதரர்கள் சேர்ந்து அவர்களின் எதிரி எலும்பை முறித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டவர்கள் ஒரு மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேல் தங்கி சிகிச்சை பெற்றதற்கான சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்கள்.



இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக என்னிடம் வந்தது. நானும் உடனே மேல் முறையீட்டு மனு,விடுதலை மனு தயார் செய்து, மூத்த ஆங்கிலேயரான செசன்ஸ் நீதிபதியிடம் சமர்ப்பித்தேன்.



வழக்கின் தன்மையைப் பார்த்த நீதிபதி, “ இது மிகவும் வலுவான வழக்கு. இதில் விடுதலை தர முடியாது” என்று கூறிவிட்டார். உடனே பாபாவை நினைத்தேன். பின் நீதிபதியிடம், ”ஐயா, இந்த வழக்கில் எதிரிகளின் எலும்பு முறிந்துவிட்டதாகச்சான்றளித்தவர் பதிவு பெற்ற மருத்துவரல்ல, போலி மருத்துவர். அவரது மருத்துவமனையிலேயே இருபது நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதாகக்கூறியிருப்பது வேடிக்கையானது. மேலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விவசாயிகள். தற்போது சிறையில் உள்ளார்கள். இதனால் அவர்களது விவசாயம் பாதிக்கிறது” என்றேன். குற்றம் உறுதியானால் நிரந்தர சிறைவாசம்தான் என்ற நீதிபதி எனது மனுவை ஏற்றுக்கொண்டார்.



அரசாங்க வக்கீல் என்னிடம், ”வழக்கில் விடுதலைக்காக வாதாடப் போகிறீர்களா? அல்லது நீதிபதியிடம் மன்னிப்புக் கோரி கருணை காட்ட வேண்டப்போகிறீரா?” எனக் கேட்டார்.



பாபா இருக்க பயமேன் எனக்கு? ”விடுதலைக்காக வாதாடப் போகிறேன்” என்றேன். வழக்கைத்தள்ளுபடி செய்து விடுதலை செய்ய வாதாடிய நான், பிறகு குறைந்த பட்சமாக தண்டனையைக் குறைக்க கருணை காட்டுமாறு வேண்டினேன்.



நீதிபதி என்னிடம், கருணை வேண்டும் என்றால் இவ்வளவு நேரம் வாதாடி எனது நேரத்தை வீணடித்து இருக்கவேண்டாம் என்றார்.



அரசாங்க வக்கீலிடம், ”எலும்பு முறிந்துவிட்டது என்று ஒரு போலி மருத்துவர் கொடுத்த சான்றை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் நீதிபதி. அதற்கு அரசாங்க வக்கீல், ”அடிபட்டவர்கள் மருத்துவரின் மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார்கள்” என்றார்.



கோபம் கொண்ட நீதிபதி ”இதை ஒரு மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட் இடம் சொல்லவும். நீர் ஒரு செசன்ஸ் நீதிபதி முன்னால் பேசிக்கொண்டிருக்கிறீர், மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட்டிடமல்ல!’ என்று அரசாங்க வக்கீலைக் கண்டித்தார்.



இதைக் கேட்ட அரசாங்க வக்கீல் அப்படியே அதிர்ந்துவிட்டார். மேலும் எந்த விவாதமும் தொடரவில்லை. குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்கள். வக்கீல் தொழில் செய்து கொண்டே நான் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டேன்.



அரசாங்கம் நாசிக் மாவட்;ட உள்ளாட்சிக்கழகத்தின் முதல் தலைவராக என்னை நியமித்தது. இது ஒரு கவுரவ பதவி. இதை 1-11-1917 முதல் 13-5-1925 வரை வகித்தேன்.



இந்தப் பொறுப்பில் தினம் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் கையெழுத்திடும் நிலை. இதனால் வக்கீல் தொழிலை கவனிக்க முடியவில்லை. வருமானமும் குறைந்தது. அப்போதைய எனது வருமான வரி 260 ரூபாயிலிருந்து பூஜ்யமாகக் குறைந்து விட்டது. இந்த சேவைக்காக அரசாங்கம் எனக்கு ராவ் பகதூர் பட்டம் தந்தது. இது ஒரு சாதாரண பட்டம்தான். ஆனால் கவுரவப் பட்டம். இருந்தாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டு சேவையைத் தொடர்ந்தேன்.



ஒருநாள் கையெழுத்துக்காக ஆவணங்களை பியூன் என்னிடம் கொண்டுவந்தார். பொதுவாக எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு அன்றே அனுப்பிவிடுவேன். ஆனால் அன்று என்னைப் பார்க்க ஒரு முக்கியப் பிரமுகர் வந்திருந்தார். அவரிடம் நள்ளிரவு வரை பேசியதால் கையெழுத்து இடவில்லை. காலையில் இடலாம் என விட்டுவிட்டேன்.



காலையில் அவசர வேலையாக வெளியில் சென்றதால், ஆவணங்களை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன். மறுநாள் வழக்கம் போல் ஆவணங்கள் வந்தன. அதில் முந்தைய நாள் கையெழுத்திடாத ஆவணங்கள் ஏதுமில்லை.



அவற்றை வாங்கிப் பார்த்தபோது அனைத்திலும் என கையெழுத்து இருந்தது. நான் அதிர்ந்தேன். இது சாத்தியமே இல்லை. பியூனையும் முந்தைய இரவு சாப்பாட்டுக்கு அனுப்பிவிட்டேன். இது பாபாவின் செயல்தான் என நான் எண்ணி நெகிழ்ந்தேன்.



இந்தப் பதவியில் இருக்கும்போது துவக்கப்பள்ளிகள் எனது கட்டுப் பாட்டில் இருந்தன. பள்ளிக்கல்வி ஆய்வாளர் தீபாவளிக்கு முன்னதாக எல்லாருக்கும் சம்பளம் தர கூறினார். அவர் ஒரு முஸ்லீம். அந்த நேரத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கூறினார். தலைமை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, அரசாங்கத்திலிருந்து பணம் வரவில்லை, ஆகவே, சம்பளம் தர இயலாது எனக் கூறினார். மீண்டும் கல்வி ஆய்வாளர் நினைவூட்டினார்.



எனக்கு தர விருப்பம், ஆனால் முடியவில்லை. பாபாவிடம் சீட்டுக் குலுக்கிப் போட்டேன். கொடு என வந்தது. எல்லோருக்கும் சம்பளம் தரப்பட்டது. அனைவரும் மகிழ்ந்தனர். இதனால் வெகுநாட்கள் கழித்து எனக்கு தணிக்கை அதிகாரியிடமிருந்து ஆட்சேபணை வந்தது. நானும் நோட்டட் பார் பியூச்சர் கெயிடன்ஸ் என எழுதி பாபாவின் ஆசியால் அதை முடித்து விட்டேன்.



என் வாழ்வில் பாபாவின் உதவி எண்ணில் அடங்காது. ஆனால் சிலவற்றை மட்டும்தான் நான் கூறுகிறேன். 1910ம் ஆண்டு எனது நண்பர் கோபால் ராவ் பூட்டி, என்னை இங்கிலாந்துக்கு அனுப்பி பார் அட் லா படிக்க வைக்கும் செலவையும், மேலும் இந்தியாவில் எனது குடும்பத்திற்கு ஆகும் செலவையும் தான் கடனாகத் தருவதாகக் கூறினார்.



நாங்கள் எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு பாபாவிடம் அனுமதி பெறச் சென்றோம். சாமா, பாபாவிடம், என்னை மேல் படிப்புக்கு இங்கிலாந்து அனுப்பலாமா? எனக் கேட்டார். பாபா வேண்டாம் எனக் கூறிவிட்டார்.



”துமாலின் தேவை இங்குதான் தேவை. அவனது சொர்க்கமும் இந்தியாவில்தான். பின் ஏன் இங்கிலாந்து செல்லவேண்டும்?” எனக் கேட்டார்.



எனக்கு என்ன தேவை என்பதை பாபாதான் அறிவார். ஆகவே, இங்கிலாந்து செல்லவில்லை. 1911ல் மும்பை ஜெ.ஜெ. மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை. மயக்க மருந்து தந்தார்கள்.



பாபா அறுவை சிகிச்சை மேஜைக்கு அருகில் என் தலைமாட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்துக்கொள்ள பாபா இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது.



1915ம் ஆண்டு நாசிக்கில் எனக்கு அரசாங்க வக்கீல் பதவியை அளிக்க அரசு முன்வந்தது. இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். பாபாவுக்குக் கடிதம் எழுதினேன்.”இப்போது உள்ள வேலை நன்றாகவே உள்ளது. புதிய பதவி வேண்டாம்” என்றார் பாபா. எனவே, அதையும் மறுத்துவிட்டேன்.



1918ம் ஆண்டு பாபா மகாசமாதிக்கு முன், சீரடி, பூனா மற்றும் பல இடங்களில் ப்ளு காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. பூனாவில் என் சகோதரன் மனைவிக்குக் காய்ச்சல் கடுமையாக உள்ளதாக தந்தி வந்தது. நான் உடனே எண்பது ரூபாய் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். போகும் வழியில் பாபாவிடம் ஆசீர்வாதமும், உதியும் பெற்றுச் செல்லலாம் என சீரடி வந்தேன்.



பாபாவை தரிசித்தபோது, அவர் என்னிடமிருந்து எண்பது ரூபாயையும் தட்சணையாகப் பெற்றுக்கொண்டார். எனக்குப் புரிந்துவிட்டது, என்னை அனுப்ப பாபாவுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் பாபாவிடம் அனுமதி கேட்டேன். நாளை பார்க்கலாம் என்றார். இப்படியாக மூன்று நாட்கள் தங்கினேன். மீண்டும் சகோதரரிடமிருந்து அவர் மனைவி இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது.



பூனாவில் என்ன நடக்கப் போகிறது என பாபாவுக்கு மட்டுமே தெரியும். காரண, காரியம் எனக்குத் தெரியவில்லை. அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டேன். பின் பூனா சென்றேன். இது பாபாவின் மகாசமாதிக்கு முன் நிகழ்ந்தது.



ஆகவே, பாபாவை அவரது ஸ்தூல தேகத்தில் தரிசிக்கும் வாய்ப்பையும், அவரோடு சில நாட்கள் தங்கும் வாய்ப்பையும் எனக்கு அவர் அளித்தது அவரின் கருணைதான்.

Thursday, June 26, 2014

நாம ஜெபம் செய்யுங்கள்!



bigsai



தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள். ஒருவனுக்கு ஏற்படும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் அவன் எண்ணம் சொல், செயல் மூன்றுமே காரணம். இறுதியாக அவனது கர்மம்தான் காரணம்.



கர்மத்தை ஒழுங்கு படுத்தினால் அதாவது நல்ல கர்மம் செய்துவந்தால் நல்லதுதான் நடக்கும். நடந்து விட்ட கர்மவினையைக் குறைப்பது எப்படி? கர்மவினையை மனிதனாலோ உடம்பாலோ கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு அவமானப்பட்டு துடைத்துவிட வேண்டும். ஆனால் நிச்சயம் அதன் தாக்கத்தை குறைக்க முடியும்.



கஷ்டம் வந்துவிட்டால் மனம் குழம்பும். யார் யார் என்ன சொல்கிறார் களோ அதையெல்லாம் செய்யத் தோன்றும். மனம் சோர்வுறும். செயல் படத்தோன்றும். மனிதன் நிர்க்கதியாகி விட்டது போல் நினைப்பான். இந்த நேரத்தில் சத்சரிதத்தில் சொல்லியது போல் வெறுப்புணர்வை நீக்கி, சித்தத்தை மயங்கவிடாமல் ஒன்றில் நிலை நிறுத்தும் சாதனம்தான் நாம ஜெபம். சாயி நாம ஜெபம். இதைத் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினை படிப்படியாகக் குறையும்.



இரண்டாவது தான தர்மம் செய்தல். தனது சக்திக்கு உட்பட்டு செய்தல், மிகவும் எளியது தினமும் ஓர் உயிர்க்கு உணவளித்தல்.



மூன்றாவது மகான்களின் தரிசனம். சாயி பகவானை தரிசித்தல், திருவடி தரிசனம், திருமுக தரிசனம். திருவடித் தியானம், ரூப தியானம். இவை மிகமிக எளிய முறை.



நான்காவது ஆலய தரிசனம். அங்கே பிரார்த்தனை. ஒரு மனிதன் தன்னிடமுள்ள பிரச்சினையை பாபாவிடம் சொல்லலாம். அவர் காது கொடுத்துக் கேட்பார். அவர் செவிடு அல்ல, உனக்கு நல்ல அற்புதமான சிக்கலற்ற தீர்வைத் தருவார்.



இதைவிட்டு யோகம், யாகம், தியானம் என்ற பெயரில் மூக்கு நுனியைப் பார்த்தல், தீபத்தை உற்று நோக்குதல், காசைக் கண்டபடி வாரியிறைத்து கண்ட கண்ட பயிற்சிகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இது மிக மிக ஆபத்தானது. இவற்றை செய்யவே கூடாது.



ஓர் இளைஞர் தூக்கம் வருவதற்காக இன்டர் நெட் பார்க்க ஆரம்பித்தார், சி.டி போட்டு பார்த்தார். தற்போது தூக்கம் வராமல் அவதிப்படுகிறார். நமது மூளை மிகவும் அற்புதமானது. அதை அனாவசியமாக தொந்தரவு செய்யக்கூடாது.



எனக்குத் தெரிந்தவரை எல்லாவற்றிற்கும் உன்னதமான பயிற்சி நாம ஜெபம். அதிலும் உன்னதமானது சாயி நாமம். நல்லது எல்லாம் தரும் நாமஜெபம்.  சகலமும் தரும் சாயி நாமம். சாயி நாம ஜெபம் செய்வோம்,



சந்தோஷமாய் இருப்போம்.



சாயிராம்!  சாயிராம்!  சாயிராம்!



கு.இராமச்சந்திரன்

Wednesday, June 25, 2014

கர்ம வினையை கழி!

20142



நல்ல புத்தகம் நல்ல நண்பன். வாசிப்பு ஓர் அருமையான பொழுதுபோக்கு. உருப்படியான உயர்வு தரும் பொழுது போக்கு. வாசிப்பை ஏனோதானோ என்றில்லாமல் ஒரு மனத்தோடு செய்தால் அதன் பலன் நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.



திருக்குறள், பகவத் கீதை, பைபிள், குர்ஆன், ஸ்ரீ சீரடி சாய் சத்சரிதம் மற்றும் அந்தந்த மதநூல்களின் வாசிப்பு, ஒரு மனிதன் என்றைக்காவது என்ன செய்வது எனத் தோன்றவில்லையே என தவித்து நிற்கும்போது கை கொடுக்கும். வழிகாட்டும். இதில் எளிமையானது மற்றும் முதன்மையானது சாயியின் சத்சரிதம்.



இது ஒரு பாராயண நூல் மட்டுமல்ல, ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒரு புது அர்த்தம் தோன்றும். நின்று நிதானித்து ஆழமாகப்படிக்கும்போது ஒரு பிரமிப்பு உண்டாகும். மனிதனின் தற்கால எல்லா பிரச்சினைக்கும் அது வழிகாட்டுகிறது.



பூனாவைச் சேர்ந்தவர் கோபால் நாராயண் அம்படேகர். இவர் பாபாவின் பக்தர். தாணா மாவட்டத்தில் சுங்க இலாகாவில் பத்தாண்டுகளும், ஜவகர் மாவட்டத்தில் பத்தாண்டுகளும் பணி யாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றபின் வேறு வேலை தேடினார் கிடைக்கவில்லை. இவரை கடுமையான கஷ்டம் துரத்தியது. ஒவ்வொரு ஆண்டும் சொல்லவொணாத துயரம்.



ஆண்டு தோறும் சீரடிக்கு வருவார். பாபாவிடம் தன் துயரத்தைச் சமர்ப்பிப்பார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் ஓடின.



1916ம் ஆண்டு தாங்க முடியாத கஷ்டம். சீரடிக்கு வந்தார். பக்தர்கள் தங்கும் தீட்சித் வாதாவில் இரண்டு மாதம் மனைவியோடு தங்கி னார். ஒருநாள் வாதாவின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த மாட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் கிணறு இருந்தது. தாங்க முடியாத தொல்லைகளால் அவதிப் பட்ட அவர், அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.



அப்போது பக்கத்திலிருந்த ஓட்டல் முதலாளி சகுண்மேரு நாயக் ஆம்படேகரிடம் வந்து அக்கல்கோட் மகராஜ் சரித்திரத்தைப் படிக்கக் கொடுத்தார்.



சகுண் மேரு நாயக்கிடம் வெண்ணெயில் சர்க்கரை போட்டு, காலையில் தனக்குக் கொடுக்குமாறு பாபா கூறுவார். இந்தப் பழக்கம் இன்னும் சீரடியில் தொடருகிறது. சீரடி சன்ஸ்தான் இதைப் பிரசாதமாக வழங்குகிறது.



அதை வாங்கிய அம்படேகர், அதிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பிரித்துப் படித்தார். மகராஜின் பக்தன் ஒருவன் தீராத நோயால் கஷ்டப்பட்டான். இதிலிருந்து தப்ப தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் விழுந்தான். உடனே மகராஜ் அவன் முன்னே தோன்றி, அவரை தன் கைகளால் தூக்கியெடுத்து காப்பாற்றினார்.



அவனிடம் சொன்னார், ”நல்லதோ, கெட்டதோ உனது முந்தையை கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும். தற்கொலை தீர்வு இல்லை. மீதியுள்ள கர்மவினையை அனுபவிக்க நீ மீண்டும் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்” என்றார். இதைப் படித்த அம்படேகர் கண்ணீர் விட்டார்.



ஆகா, பாபா அல்லவா தம்மை சாவிலிருந்து காத்தார் என நெகிழ்ந்தார். பின் வீடு திரும்பினார். உழைத் தார், செல்வம் பெருக்கினார், வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தார்.



கு.ராமச்சந்திரன்

Thursday, June 19, 2014

பாபாவிடம் பெற்ற அனுபவம்!

baba2



ராவ் பகதூர் எஸ்.பி. துமால் நாசிக்கைச் சேர்ந்த சட்ட வல்லுநர். பாபாவிடம் அவர் பெற்ற அனுபவம் பற்றி கேட்ட போது,  “எனது வாழ்வில் இரவும் பகலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவம்தான், எதைச் சொல்ல?”  என்றார்.



இவை ஒவ்வொரு பக்தனுக்கும் சொந்தமானவை. இவை பிரசுரிக்கப்படக்கூடாது. மக்களின் கேலிக்கு உள்ளாகும். பாபாவின் அற்புதத்தை அவரவர் அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் அதன் மகிமை புரியும். மேலும் அதை எனது மொழியில் சொல்ல, வேறு மொழியில் எழுத அர்த்தம் மாறும். பாபா எங்கு



சென்றுவிட்டார்? இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். முன்பைவிட மிகுந்த சுறுசுறுப்போடு இருக்கிறார். சமாதி மந்திரில் அவரைப் பாருங்கள், இன்றும் என்றும் அவரைப் பணிவோடு வழிபட்டால் தொடர்பு கொள்ளலாம். இருந்தாலும் தன்னிடம் பாபாவின் மகிமையைப்பற்றி கேட்டதால் அவற்றை சொல்கிறேன் என துமால், தனது அனுபவத்தைக் கூற ஆரம்பித்தார்.



1907 ம் ஆண்டு நான் பாபாவை தரிசித்தேன். அவரது அதீத தெய்வத் தன்மையையும், சக்தியையும் கண்டு என்னுள்ளே ஓர் திருப்தி. ஆனந்தம். அதன் பின் பூட்டியையும் பாபாவுக்கு அறிமுகம் செய்தேன். அவர் பாபாவின் பக்தராகிவிட்டார்.



என்னுடைய ஒவ்வொரு செயலையும் பாபாதான் தீர்மானிக்கிறார், நடத்தி வைக்கிறார் என்ற நம்பிக்கை என்னுள் தீர்க்கமாக ஏற்பட்டு விட்டது. ஒருமுறை பாபா என்னிடம், “துமால், உனது ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்து வருகிறேன். இல்லையென்றால் உனக்கு என்ன ஆகியிருக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார். இது மிகையல்ல, உண்மை. மற்றொரு முறை நானும் பாபாவும் தனித்திருந்தபோது, “துமால் நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. நேற்று இரவு முழுவதும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.



இதைக்கேட்ட நான் நன்றியால் நெகிழ்ந்து போனேன். கண்ணீர் விட்டு அழுதேன். பாபாவுக்கு நான் என்ன சேவை செய்துவிட்டேன்? எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. இதற்காக அவர் என்னைப் பற்றி எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்?



எனக்கு வரப்போகும் கெடுதல்களை எல்லாம் தடுத்து, நல்லதைச் செய்துக்கொண்டிருக்கிறார்.  இப்படியாக நடந்தவை ஏராளம்.



அவர் வாழ்ந்த போதும், சமாதியானபோதும் எனக்கு வழிகாட்ட அவரின் படத்தின் முன் சீட்டுப்போட்டுப் பார்ப்பேன். எப்போதும் அவர் சரியான வழியையே காட்டித் தந்தார்.



அவர் வழிகாட்டுதல் படியே நடந்தேன், தொல்லையில்லை. அவர் வாழ்ந்தபோது எந்த ஒரு பிரச்சினைக்கும் கடிதம் எழுதுவேன். சாமா பாபாவிடம் பதில் பெற்று எழுதுவார். அதன் படியே நடப்பேன்.



நாசிக்கில் எனது பூர்வீக வீட்டில் நான் வாழ்ந்து வந்தேன். அங்கே திடீரென பிளேக் நோய் பரவியது. எலிகள் செத்துக்கிடந்தன. உடனே பாபாவுக்கு கடிதம் எழுதினேன். அவரே என்னைக் காப்பவர். எனக்கு வழிகாட்டி. பதில் வரும்வரை எனக்கு எந்த தீங்கும் நேராது என உணர்ந்தேன்.



அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். நாசிக்கில் என்ன நடக்கிறது என அவருக்கு நிச்சயம் தெரியும். நான் ஒரு குழந்தை போல் அவரை சார்ந்து இருந்தேன். ஆகவே, பாபா எனக்கு எந்த தீங்கும் நேரவிடமாட்டார். கடந்த 29 ஆண்டுகளில் நான் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போனதில்லை.



பாபாவிடமிருந்து பதில் வந்தது. நாங்கள் பெரிய பங்களா வீட்டிற்கு மாறினோம். ஆனால் அதே இரவு எனது சகோதரனின் மகன் படுக்கையருகே எலி செத்துக்கிடந்தது. அதாவது பிளேக் நோய்தான் காரணம். மீண்டும் பாபாவுக்கு எழுதினேன். வீட்டை மாற்றவேண்டாம் என பதில் வந்தது. வீட்டிலும், வெளியிலும், வேலைக்காரர் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும், நாங்கள் தண்ணீர் எடுக்கும் கிணற்றிலும் எலிகள் செத்துக்கிடந்தன. மீண்டும் பாபாவுக்கு கடிதம் எழுதினேன். பதில் வரும் முன் சாமான்களை எடுத்துக்கொண்டு பழைய வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்தேன். பாபாவின் பதிலைப் படித்தேன். நாம் ஏன் வீட்டை மாற்ற வேண்டும்? என கேட்டிருந்தார்.



உடனே சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பங்களா வீட்டிற்கே வந்துவிட்டேன். தண்ணீரை வீட்டுக் கிணற்றிலிருந்து எடுக்காமல் கோதாவரியிலிருந்து எடுத்துக்கொண்டோம்.



பிளேக் சமயத்தில் ஒரு நாளில் பதினாலு பதினைந்து பேர் இறந்தார்கள். ஆனால் எங்களுக்கு எந்த வித தீங்கும் நேரவேயில்லை. மிகவும் பாதுகாப்பாக இருந்தோம்.



நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனித்து வருகிறேன். இரவு பூராவும் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட பாபா, தொழில் ரீதியாகவும் நிறைய அற்புதங்கள் செய்தார்.



1910 அல்லது 1916ம் ஆண்டு. சீரடியில் ஒரு கிரிமினல் வழக்கு. எல்லா கிராமத்திலும் இருப்பது போல சீரடியிலும் மக்கள் இரு பிரிவுகளாக பிளவு பட்டிருந்தனர். பாபாவுக்கு சேவை செய்யும் ரகு மற்றும் அவருடன் சேர்ந்த ஐந்து பேரை மார்வாடி பெண்ணை இழிவாகப் பேசியதாக கை செய்து, நீதி மன்றத் தீர்ப்பின்படி ஆறு மாதம் சிறையில் அடைத்தனர். நேரடியாகப் பார்த்தவர்கள் வலுவான சாட்சி அளித்ததால் வழக்கு வலுவடைந்தது. பாபா பக்தர் தாத்யா கோதே பாடீல், குற்றவாளிக்காக இரக்கப்பட்டார்.



தீர்ப்பின் நகலை எடுத்துக் கொண்டு சீரடியில் இருந்த புகழ்பெற்ற வக்கீல் திரு. கபர்டே, காகா சாகேப் தீட்சித், ஓய்வு பெற்ற நீதிபதி ராவ் பகதூர் சாதே இவர்களிடம் காட்டி மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டினார். அவர்கள் தீர்ப்பின் நகலைப் படித்துவிட்டு, வழக்கு மிக வலுவாக உள்ளதால் மேல்முறையீட்டுக்கு மறுத்துவிட்டனர். தாத்யா, பாபாவிடம் ஆலோசனை கேட்டார்.



எல்லா பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு  ‘பாவ்’ இடம் (துமாலிடம்) போ என்றார். தாத்யா என்னிடம் நாசிக் வந்தார். நான் எல்லாவற்றையும் படித்து விட்டு மும்பை அல்லது அகமது நகரிலுள்ள தலை சிறந்த வக்கீலிடம் செல்லச் சொன்னேன். வழக்கு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.



உடனே தாத்யா, பாபாதான் என்னிடம் அனுப்பியதாகக் கூறினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே, மேல் முறையீட்டு மனுவை தயாரித்து அகமது நகரின் மாவட்ட நீதிபதியின் வீட்டுக்குச்சென்றேன். அவரிடம் தீர்ப்பின் நகல் வரவில்லை, படிக்கவில்லை. எனது மேல் முறையீட்டு மனுவையும் அவர் படிக்கவில்லை. என்ன வழக்கு எனக் கேட்டார். ”சீரடியில் ஒரு மார்வாடி பெண்ணை இழிவாக பேசியதாக, நேரடி சாட்சியங்களை வைத்து ஆறு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது”  என்றேன்.



”துமால், வழக்கு வலுவாக உள்ளது. உனது கருத்து என்ன?”  எனக் கேட்டார் நீதிபதி.  ”இந்த வழக்கும், சாட்சியங்களும் இரு பிரிவினருக்கு இடையேயுள்ள பகையால் ஏற்பட்டது”  என்றேன்.



”அப்படியா நினைக்கிறாய்?” என்றார் நீதிபதி.



”அப்படி நினைப்பது மட்டுமல்ல நீதிபதி அவர்களே, இதுவே என உறுதி மொழியும் கூட!” என்றேன்.



நான் சொன்னதை நம்பிய நீதிபதி, உடனே மேல் முறையீட்டு மனுவை வாங்கி அந்த ஆறு பேரையும் நிரபராதி என தீர்ப்பு வழங்கி எழுதி விட்டார். பின் என்னிடம் நீதிபதி,  “உன் சீரடி சாயி பாபா எப்படி இருக்கிறார்? அவர் இந்துவா? முஸ்லிமா? உனக்கு என்ன உபதேசிக்கிறார்”  எனக் கேட்டார்.



“அவர் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல.  அதற்கும் மேலானவர். அவரின் உபதேசத்தை என்னால் விளக்கமுடியாது. அதை நீங்களே நேரடியாக பாபாவிடம் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்!”  என்றேன்.



அதற்கு அவரும் ஒத்துக்கொண்டார். ஒரு கோடை விடுமுறையில் கோபர்கான் வரை வந்தார். அங்கே வெயில் கடுமையாய் இருந்ததால் சீரடி செல்லாமலே திரும்பிவிட்டார்.



இந்த வழக்கில் ஒரு நூதனத்தை நீங்கள் பார்க்கலாம்.. அகமது நகர் நீதிபதிக்கு தீர்ப்பின் நகல் வரவில்லை. அதை அவர் படிக்கவும் இல்லை. நான் கொடுத்த மேல் முறையீட்டு மனுவையும் படித்தது இல்லை. போலீசுக்கும், அரசாங்க வக்கீலுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், உடனே தீர்ப்பு வழங்கிவிட்டு, சாய்பாபாவைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். இது எதைக் காட்டுகிறது? பாபாவின் தெய்வீக சக்தியை அல்லவா காட்டுகிறது. நான் உடனே சீரடி திரும்பினேன்.



அங்கே பாபா மசூதியில் சில பேரைக் கூப்பிட்டு இன்னும் சற்றுநேரத்தில் எனது சமத்காரத்தைப் பார்ப்பீர்கள் என்றார்.



ஆனால் அன்றுதான் காகா சாகேப் தீட்சித்தின் மகன் இறந்து அடக்கம் செய்ய எல்லோரும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எந்த சமத்காரத்தையும் காணாததால் சென்றுவிட்டார்கள். நான் சீரடி வந்து ஆறு பேர்களின் விடுதலை பற்றி கூறியவுடன், இதுதான் பாபா சொன்ன சமத்காரம் என அனைவரும் புரிந்து கொண்டார்கள்.



நு}று ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு எதிரான இழிவான பேச்சு, நடத்தை கடும் குற்றமாகக் கருதப்பட்டது. வழக்கு பொய் வழக்கு என்பதால் தோற்று விட்டது என்பது வேறு விஷயம்...





கு. இராமச்சந்திரன்

Saturday, May 31, 2014

எல்லாம் கடந்தவர் பாபா!

DSC_0005



பாபா யாருக்கும் மந்திரம், தந்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்ததில்லை. எனக்கும் அப்படித்தான். இதை ஷாமா ஒருமுறை என்னிடம் கூறினார்.



ராதாபாய் தேஷ்முக் என்ற மாது சீரடி வந்தார்.  பாபாவிடம் உபதேசம் பெற முயற்சித்தார். மந்திர உபதேசம் பாபா செய்வதில்லை என்பதை அறிந்து உபவாசம் இருக்க ஆரம்பித்தார். உபவாசத்தின் நான்காம் நாள், ஷாமா இதைப் பற்றி கூறி ஏதாவது ஒரு கடவுளின் மந்திர உபதேசத்தை அவளுக்குக்கூறுங்கள் என்றார்.



பாபா அவளைக் கூப்பிட்டார். ”நான் மந்திர உபதேசம் தருவது வழக்கம் அல்ல. எனது குருவும் அப்படித்தான். நான் என் குரு முன் சென்று நிற்பதற்கே நடு நடுங்குவேன். குருவின் உதவி என்பது ரகசியமானது. சூட்சுமம் நிறைந்தது. நான் யாருடைய காதிலும் உபதேசம் செய்வதில்லை. மேலும் எங்களின் வழிமுறைகள் அலாதியானது ” என்றார்.



பாபா மற்றவர்கள் போல பிரசங்கம் செய்ததில்லை.  ஆனால் ஒன்றிரண்டு வார்த்தை அல்லது வாக்கியத்தில் குறிப்புகள் தருவார். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் அளப்பரிய நன்மை உண்டு என்பது என் அனுபவம். மோட்சத்தை அடைவதுதான் மக்களின் நோக்கம். விவேகம், வைக்கியம் தேவை என்றெல்லாம் பாபா என்னிடம் கூறியதில்லை.



ஆனால், எல்லா சமுத்திரத்தையும் உலகங்களையும் கடந்து ஆண்டவனை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். என்னிடம் இந்த உலகம், இங்குள்ள எல்லாமே மாயை என்று கூறியது இல்லை. ஆனால், இந்த உலகமும் அதைத்தாண்டியுள்ள அனைத்தும் உண்மையானவை. ஆகவே, இங்கு என்ன உள்ளதோ அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.



பாபா அடிக்கடி கர்மா பற்றியும், மறுபிறவி பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். ஆகவே, இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நாம் நல்லதையே செய்யவேண்டும் என்றார். அடிக்கடி மற்றவர்களின் கடந்த பிறவி பற்றியும், வரும் பிறவி பற்றியும் சொல்லியுள்ளார்.



இப்பிறவியில் என்ன செய்கிறோமோ, அதன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்துத்வா தத்துவம். ஆனால் பாபா தான்,  எந்த மதம், இனம், ஜாதி என எப்போதும் கூறியதில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர்.



பாபா பகவத் கீதை, பாவர்த்த ராமாயணம், ஏக்நாத் பாகவதம், பஞ்சதசி, யோக வசிஷ்ட்டம் ஆகியவற்றில் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். இவற்றில் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.



ஞான தேவரின் ஆரத்தி ஆரம்பித்தவுடன் நெஞ்சின் முன் கரம்கூப்பி, கண்களை மூடி அமர்ந்து விடுவார். கபர்டேயிடம் பஞ்சதசி நமக்கு ஓர் பொக்கிக்ஷம் என்றார். யோக வசிஷ்டத்தை மிகவும் புனிதமாகக் கருதினார்.





கு.இராமச்சந்திரன்

Friday, May 30, 2014

ஆன்மீக முன்னேற்றம்!

baba2



அது 1914 ம் ஆண்டு. பாபா என்னிடம் பலமுறை பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர், ”உன்னிடம் பணம் இல்லை என்பது தெரியும். ஆனால், நீ யோக வசிஷ்டம் படிக்கிறாய் அல்லவா? அதிலிருந்து கொடு”  என்றார்.



அதாவது நான் யோக வசிஷ்டத்தில் உள்ள நல்ல போதனைகளை படித்து அதை  நெஞ்சில் நிறுத்திக்கொள்வதே நான் அவருக்குக் கொடுக்கும் தட்சணை.



அவர் என் இதயத்திலேயே நீங்கா இடம் பெற்றுள்ளார் அல்லவா?



இராமனையும், கிருஷ்ணரையும் புனிதர்களாகக்கருதினார். ஞானேஸ்வர், துகாராம் போன்ற ஞானிகளையும் வெகுவாக மதித்தார். கடவுளை அடைய நான்குவித மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.



தியானம், கர்மம், ஞானம், பக்தி.



தியானத்தில் ஆசனம், பிராணாயாமம், ஒருமுனைப்படுத்தல், குண்டலினி -  பின் இதன் மூலம் சக்தி பெறுதல். ஆனால் பாபா இதைப் பற்றியெல்லாம் அக்கறை காட்டியதுமில்லை, பிறரைச் செய்யச்சொன்னதும் இல்லை. ஆனால் என்னிடம் ஒருமுறை பிராணாயாமம் செய்கிறவர்கள் எல்லாம் மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய என்னிடம் வருவார்கள் என்றார்.





கு.இராமச்சந்திரன்

Monday, May 26, 2014

தட்சணை

DSC_0005

 

பாபா பேசும்போது, ஏதோ கதை போல் சொல்வார். உருவகப்படுத்தி சொல்வார். மேம்போக்காக குறிப்பு ஒன்று சொல்வார்.



இது எல்லோருக்கும் தெரியாது. கேட்பவருக்கு அர்த்தம் அற்றது போல் தெரியும். இதற்கு நேரடி அர்த்தமும் கொள்ளக்கூடாது. மிகவும் ஆழ்ந்து யோசித்தால்தான் தெரிய வரும்.



ஒருமுறை ஒருவர் சீரடிக்கு வந்து பாபாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தார். அவரிடம் ”பாபா பற்றி என்ன நினைக்கிறீர்?”  என்றேன்.



அதற்கு அவர்,  “எப்போதும் காசு பற்றியே (தட்சணை) பேசும் ஒரு ஞானியை நான் இதுவரை கண்டதேயில்லை. என்ன ஞானி இவர்? “  என அலுத்துக்கொண்டார்.



என்னைப் பொறுத்தமட்டில் பாபா காசு காசு என்று சொல்வதெல்லாம் புண்ணியத்தைப் பற்றித்தான்.



தட்சணை புண்ணியத்தைக் குறிக்கும். அகங்காரத்தை அழிக்கும். நல்ல குணத்தை வளர்க்கும். பாபாவின் மகத்துவம் எல்லோருக்கும் தெரியாது.



கு.இராமச்சந்திரன்

Friday, May 23, 2014

எங்கும் நிறைந்தவர் பாபா!

ac821-sridisaibaba



பாபா இந்த பூலோகத்தில் மட்டுமல்ல, மற்ற உலகத்திற்கும், பூலோகத்தில் வெகு தூரத்திற்கும் சென்று வந்துள்ளார். காலை வேளையில் துனியிடம் அமர்ந்திருக்கும்போது, மற்ற பக்தர்களிடம் நேற்று இரவு, தான் எங்கெங்கு சென்றேன், என்ன செய்தேன் என்பது பற்றி சொல்வார். ஆனால் மசூதியிலும் சாவடியிலும் அவரோடு தூங்கியவர்கள் இரவு முழுவதும் பாபா அங்கேயே தூங்கினார் என்பார்கள்.



அந்தந்த இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை, பாபாவுடைய பேச்சுடன் வைத்து சோதித்துப் பார்த்தால் பாபா சொல்வது சரியாக இருக்கும்.



ஒருநாள் சீரடியில் மார்வாடி ஒருவரின் மகன் இறந்து விட்டான். ஈமச்சடங்கு முடித்துவிட்டு சோகத்துடன் மசூதிக்கு வந்தனர். அப்போது பாபா அந்தப் பையன் நதிக்கு அருகில் செல்கிறான், நதியைக் கடந்து விட்டான் என்றார். அவர் குறிப்பிட்டது, நரகத்தின் பக்கத்திலுள்ள வைதாரணி நதியைத்தான்.



பாபா, பக்தர்கள் சூழ்ந்திருக்கும்போது யாராவது ஒருவருக்கான செய்தியைச் சொல்வார். மற்றவருக்குப்புரியாது. ஆனால், யாருக்காக சொல்கிறாரோ அவருக்குத்தெரிந்துவிடும். அப்படித்தான் எனது நான்கு முந்தைய பிறவி பற்றியும், அதில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் கூறினார். எனக்கு மட்டுமே புரிந்தது. அவருடைய சொல்லும் செயலும் நிறைய பேருக்கு நன்மையையே செய்தது.



திடீரென்று என்னிடம், ”நீ எங்கே இருக்கிறாய்?  நான் எங்கே இருக்கிறேன்? இந்த உலகம் எங்கே உள்ளது ” எனக் கேட்பார். சில சமயம், தனது உடலைக் காட்டி, “இதுதான் எனது வீடு. நான் இங்கு இல்லை. எனது குரு மௌர்ஷாத் என்னை எடுத்துச் சென்று விட்டார்” என்பார்.



பெரும் உண்மை என்னவென்றால், சாய் பாபா இன்றும் வாழ்கிறார். அன்று எங்கிருந்தாரோ, இன்றும் அங்கே வாழ்கிறார். அன்றும் வாழ்ந்தார், இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார். இவ்வுலகிலும் மற்ற உலகிலும் தனது செயல்பாடு என்ன.. தான் இறந்து போன ஆன்மாவின் விதியை எப்படி கட்டுப்படுத்தினேன் எனக் கூறுவார்.



பாபாவின் வார்த்தைகள் என்றும் பொய்த்தது இல்லை. புரியாத -  அர்த்தமற்ற வார்த்தைகளையும் பேசியதில்லை. இது எல்லோருக்கும் புரியாது, நான் புரிந்துகொண்டேன்.





கு.இராமச்சந்திரன்

Wednesday, May 21, 2014

பாபாவின் வார்த்தைகளின் அர்த்தம்

DSC_0005



1914ல் மூர்தாவிலிருந்து காச நோயால் அவதிப்பட்ட ஒரு பணக்கார முதியவர் சீரடி வந்தார். சீரடியில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம். ஆகவே, சீரடியிலேயே தங்கிவிட முடிவு செய்தார். இரண்டாம் மாதம் முடிவில் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.



இதைக் கண்ட அவர் வீட்டார், என்னிடம் பாபாவிடம் சென்று உதி வாங்கி வரச் சொன்னார்கள். நானும் பாபாவிடம் கேட்டேன்.  “உதி என்ன செய்யும்? அவன் இந்த உலகை விட்டு செல்வதே நல்லது. சரி, உதி எடுத்துச் செல்!”  என்றார் பாபா. நானும் அவ்வீட்டில் உதியைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், பாபா சொன்னதைச்  சொல்லவில்லை.



ஷாமா பாபாவிடம் வந்து, முதியவர் இறந்து விட்டதைக் கூறினார். உடனே பாபா, அவன் எப்படி இறக்க முடியும்? காலையில் உயிர் பிழைப்பான் என்றார். இதைக் கேட்ட உறவினர்கள் -  முதியவரின் உடலைச்சுற்றி விளக்கேற்றி வைத்தனர். மதியம் வரை பிழைக்கவில்லை. பின் அடக்கம் செய்தனர்.



பாபா பொய் கூறிவிட்டதாக கோபம் கொண்டு உறவினர்கள் குடும்பத்தோடு மூர்தா சென்று விட்டார்கள். மூன்று ஆண்டுகள் சீரடிக்கு வரவேயில்லை.



ஒருநாள் இரவு முதியவரின் உறவினர் கனவு கண்டார். இறந்த முதியவரின் தலையோடு பாபா தோன்றினார். நுரையீரலைத் திறந்து காட்டினார். அழுகியிருந்தது.



”இந்த கொடுமையிலிருந்து நான் அவனை காப்பாற்றினேன்” என்றார் பாபா. பின் அவர்கள் சீரடிக்கு வரஆரம்பித்தனர்.



அவன் எப்படி இறப்பான்? காலையில் பிழைத்துக்கொள்வான் என்பதை தவறாகப் புரிந்துகொண்டனர். அந்த முதியவர் காலையில் மறுபிறவி எடுத்துவிடுவார் என்பதைத்தான் பாபா இப்படி கூறினார். ஆகவே, பாபாவின் எந்த வார்த்தையையும் சரியாக உள்வாங்கி அர்த்தம் காண வேண்டும்.  



கு.இராமச்சந்திரன்

Tuesday, May 13, 2014

பாபாவை வழிகாட்டச் சொல்லுங்கள்!

Image





ஜி.கே. நார்கே. இவர் பாபாவின் பெரும் பணக்கார அடியவரான நாக்பூரைச் சேர்ந்த பூட்டியின் மருமகன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வி கற்றவர். புவியியல் துறையிலும், ரசாயனத் துறையிலும் பேராசிரியர்.  நரசிம்மசுவாமி இவரைச் சந்தித்து அவரின் அனுபவங்களைப்பற்றி கேட்ட போது, அது ரகசியம் எனக் கூற மறுத்து விட்டார். எதைப் பெற்றாயோ, அது ரகசியமாகவே இருக்கட்டும் என கபீர் சொன்னதை நினைவுபடுத்தினார். பாபாவிடம் பெற்ற அனுபவத்தைக் கூற முயன்றாலே தன் வாய் தானாகவே மூடிக்கொள்கிறது என்றார்.



பாபா பற்றி மேலெழுந்த வாரியாக சொல்லிவிட்டுப் போய் விடலாம். ஆனால் பொய்யும், புரட்டும் நிறைந்த உலகில் உண்மையைக் கூறுவது அவசியம் எனறு கூறி தான் பாபாவிடம் பெற்ற அனுபவத்தை உண்மையான அனுபவத்தை சுவாமியிடம் கூறினார்.



பாபா, ஒரு தெய்வீகப் புருக்ஷர். கடவுளின் அவதாரம். தினந்தோறும் வீட்டிலேயே வழிபடும் ஒரு தெய்வமாகவே அவரைக் கருதினேன். ஆகா என்ன ஒளி மிகுந்த கண்கள்!  அவரின் செயல்பாடும், சக்தியும் அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்தன. இப்படிப்பட்டவரை நான் எப்படி சந்தித்தேன்!



 என் மாமனார், தாய், மனைவி எல்லோரும் பாபாவின் பக்தர்கள். இவர்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபட்டனர். 1905ம் ஆண்டு எம். ஏ. பட்டம் பெற்றேன் .  1907 -  1909 ல் கல்கத்தாவில் புவியியல் துறையில் பயிற்சி பெற்றேன்.



1909- ம் ஆண்டு இந்திய அரசால் மான்செஸ்டருக்கு அனுப்பப்பட்டு புவியியல், சுரங்கத்துறையில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றேன். 1912-ல் இந்தியா திரும்பினேன். என் மாமனார், தாய், மனைவி அடிக்கடி சீரடி சென்று வந்தார்கள். என்னையும் போகச் சொன்னார்கள்.



சாயிபாபா விரும்பினால் நான் போவேன் எனக் கூறினேன். பாபாவிடம் கேட்டு அனுமதி பெற்று சீரடி சென்று பாபாவை தரிசிக்கச் சொன்னார்கள். நான் 1913 ஏப்ரல் மாதம் சீரடி சென்றேன்.



மாதவ்ராவ் தேஷ்பாண்டே என்னை அழைத்துச் சென்று பாபாவுக்கு அறிமுகப்படுத்தினார்.



”என்னஷாமா? இவனையா எனக்கு அறிமுகப்படுத்துகிறாய்? இவனை எனக்கு முப்பது தலைமுறையாகத் தெரியும் ! ‘என்றார் பாபா.



இதைக்கேட்டு நான் அதிர்ந்துவிட்டேன். முற்பிறவி பற்றி பாபாவுக்கு எத்தனை ஞானம்! என ஆச்சரியப்பட்டேன்.



Image                                       பாபா, சில சமயம் என் தாயைப் பார்த்து, துள்ளி குதிப்பார். அவ்வளவு சந்தோசம்! அதன் விவரம் பாபா மட்டும் அறிவார். பாபாவைப் பார்த்தவுடன் என்னைக் கவர்ந்தவை அவரது கண்கள் தாம். அவை என் இதயத்தைத் துளைத்துச் சென்றன.

   அடுத்தது, அவர் சாவடியில் அமர்ந்திருந்த நிலை. நானும் பாபாவின் ஆரத்தியில் கலந்து கொண்டேன். சிறு சிறு சேவைகள் செய்தேன். ஒரு ஆரத்தியின் போது, பாபா கோபப்பட்டார். ஆவேசப்பட்டார். காரணமே இல்லாமல் சபித்தார். இவரென்ன பைத்தியமா? என எண்ணினேன். ஆரத்திமுடிந்தது. அன்று மாலை பாபாவிடம் வந்தேன். காலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். என் தலையை லேசாகத்தட்டி,  “நான் பைத்தியமில்லை”என்றார் பாபா.



நான் திடுக்கிட்டேன். மதிய ஆரத்தியின் போது நான் நினைத்ததை அறிந்து கொண்டார். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவர் என்னுள்ளே உள்ளார். எனது ஆத்மாவின் தலைவன், எங்கும் நிறைந்திருப்பவர். பாபாவிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. ஆகவே, எண்ணுவதை எல்லாம் நல்லதாகவே எண்ணுங்கள். உங்களுக்கு நல்லதைச் செய்வார்.



நான் நிறைய முறை பாபாவை சோதித்து உள்ளேன். நான் என்ன நினைக்கிறேனோ, அதை அப்படியே பேசினார். அப்போதுதான் உணர்ந்தேன்,



அவரே என் தெய்வம் என-! எல்லாம் அறிந்தவர்.  எல்லாவற்றையும் பார்ப்பவர். தனது எண்ணப்படி ஒவ்வொருவரையும் உருவாக்கினார். அவரை மீறி எதுவும் நடக்காது. எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவரின் தீர்க்க தரிசனம் வியக்கத்தக்கது.



1913ம் ஆண்டு, என்னிடம் பாபா,  “உன் மாமனார் சீரடியில் மாளிகை ஒன்று கட்டுவார். அதில் நீ பொறுப்பு வகிப்பாய்”  என்றார். 1915 - 16ல் என் மாமனார், மாளிகை கட்டினார். அதுதான் பாபாவின் சமாதி மந்திர். 1918 -  19 க்குப் பின் நான் அந்த சமாதி மந்திர் நிர்வாகத்தில் ஒரு தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்றேன்.



நான் நன்கு படித்திருந்தேன். ஆனால் சரியாக வேலை கிடையாது. கிடைத்த வேலையிலும் வெகு நாட்கள் நீடிக்க முடியவில்லை. முதன் முதலாக சீரடி சென்ற போது மூன்று நான்கு நாட்கள் மட்டுமே தங்கினேன். பின் வேலை விஷயமாக பர்மா சென்றேன். அங்கும் மூன்று மாதங்கள்தான் வேலை.



பின் நாக்பூர் திரும்பினேன். பின் சீரடி வந்தேன், அங்கு நான்கு மாதங்கள் மனைவியோடு தங்கிய பின் நாக்பூர் திரும்பினேன். ஷாமா என்னை சீரடிக்கு வரும்படி கடிதம் எழுதினார். சென்றேன். 13 மாதங்கள் தங்கினேன்.



வேலையில்லாத பட்டதாரி. கவலைப்படவில்லை. பாபாவைப் பார்த்து பக்கிரி வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது என எண்ணினேன்.



1914ம் ஆண்டு பாபாவிடம் நிறைய அங்கிகள் இருந்தன. அதை எல்லோருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஒன்று கொடுத்தார். விசேச நாட்களிலும், பஜனையின் போதும் போட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன். பாபா அங்கி கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். என்னைக் கூப்பிட்டு, ”நார்கே! வருத்தப்படாதே. உனக்கு அங்கி கொடுக்க கடவுள் அனுமதிக்கவில்லை” என்றார்.



இப்போதும் என் மனதைப் படித்தறிந்தார். நான் படித்தவன், கல்யாணம் ஆனவன். ஆனால் வேலையில்லாதவன். சம்பாதிக்காதவன். என் அண்னைக்கு ஒரே கவலை. என் தாயும், உறவினர்களும் நார்கே வேலைக்காக கல்கத்தா, பர்மா என அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு நல்ல வேலையாகப் பார்த்து சொந்த ஊருக்கு அல்லது சீரடிக்கு அருகாமையிலோ அமைத்துக் கொடுங்கள் என பாபாவிடம் வேண்டினர். பாபாவும் அவனுக்குப் பூனாவில் வேலை கிடைக்கும் என்றார்.



சில சமயம் எனக்கு ஒரே நேரத்தில் வேலைக்கான அழைப்பு நிறைய வரும். நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் சிறு குழந்தை தன் தாயையே நம்பி இருப்பது போல், நான் பாபாவையே நம்பி அவரிடம் ஒவ்வொரு முறையும் வழி காட்ட வேண்டுவேன். ஆனால், அவரின் வழி முறை அலாதியானது. வேலை, கல்கத்தா அல்லது பர்மாவிலா என்றால்.. பாபா “பூனா போ” என்பார். ஒவ்வொரு முறையும் அவர் பூனாவை சேர்த்துக் கொள்வார்.



எனக்கு ஒரு முறை காசியில் பேராசிரியர் வேலைக்கும் பர்மாவில் உயர்பதவிக்கும் வாய்ப்பு வந்தது. பாபாவிடம் கேட்டபோது,  “பர்மாபோ!  பூனா போ”  என்றார்.



எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. நான் ஒரு புவியியல் சுரங்கப்பொறியாளன். பூனாவில் இதற்கான வாய்ப்பே இல்லை. பின் ஏன் பாபா இப்படி சொல்கிறார் என சிரித்துக்கொள்வேன். என்  எதிர்காலம் எப்படி என அவருக்குத்தான் தெரியும்.



1916ல் வெகுகாலம் கழித்து சீரடி வந்தேன். அன்று பாபாவுக்கு யார் என்ன என்ன சேவை செய்கிறார்கள் என கேட்டேன். வாமன்ராவ் படேல் என்கிற வக்கீல் பாபாவுக்காக யாசிக்கச் செல்வார் என்றார்கள். எனக்குள் ஒரு எண்ணம்!  அடடா, நாம் ஏன் யாசிக்கக்கூடாது? என எண்ணிக்கொண்டு, கோட், சூட், தொப்பி, காலில் காலணியோடு பாபாவிடம் சென்றேன்.



இன்று பாபாவுக்காக யாசிக்க வாமன்ராவை அனுப்பலாமா? என மூன்று முறை கேட்டார்கள். பாபா என்னைக் காட்டி, நார்கேவை அனுப்பு என்றார்.



நான் அப்படியே யாசிக்கச் சென்றேன். நான்கு மாதங்கள் பாபாவுக்காக யாசித்தேன். இதன் காரணம், யாருக்கும் தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும். எனது ஆசையை பாபா பூர்த்தி செய்துவிட்டார்.



ஒவ்வொரு முறையும் பாபா என்னுள்ளே இருந்து எனது ஆசையைப் பூர்த்தி செய்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவரே என் அந்தர்யாமி. பாபாவுக்காக யாசிப்பதை அவர் வெகு சிலருக்கே அனுமதி தந்தார்.



1917ல் பூனா பொறியியல்கல்லூரிக்கு புவியியல் துறைக்குப் பேராசிரியர் தேவை என அறிவிப்பு வந்தது. விண்ணப்பிக்கலாமா என பாபாவிடம் கேட்டேன். விண்ணப்பிக்குமாறு கூறினார். பூனா சென்றேன், விண்ணப்பித்தேன். வேலைக்கு நிறைய பேர் விண்ணப்பித்து இருந்தனர். நிறைய சிபாரிசு வேறு! ஆகவே, எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.



நான் சீரடியை விட்டுப் புறப்பட்டவுடன்அங்கே இருந்தவர்களிடம், ”நார்கே எங்கே?”  என்று பாபா கேட்டுள்ளார்.



“வேலை விஷயமாக பூனா சென்றுள்ளார்” என்று சொல்லியுள்ளனர். உடனே பாபா, ”கடவுள் ஆசீர்வதிப்பார்” என்றாராம்.



மீண்டும் பாபா, ”நார்கேக்கு குழந்தைகள் உண்டா?” எனக் கேட்டாராம். குழந்தைகள் இறந்து விட்டன என்ற போது. பாபா, கடவுள் ஆசீர்வதிப்பார் என்றாராம்.



பாபா ஜெயித்து விட்டார். அன்று என் வேலை பற்றி பாபா, பூனா என்று சொன்னபோது நான் உள்ளுக்குள் சிரித்தேன். என் அறியாமை. நிறைய விண்ணப்பங்கள், பலத்த சிபாரிசு. பூனா பொறியியல் வேலை எனக்குக் கிடைக்காது என சந்தேகப்பட்டேன். 1918ல் புனா கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்து விட்டது. என்னுள்ளே நான் நெகிழ்ந்து விட்டேன்.



1919ம் ஆண்டு அந்த வேலை நிரந்தரமாகிவிட்டது. பாபாவிடம் என் தாயார், என்ன பிரார்த்தித்தார்? என் மகனுக்கு சீரடிக்குப் பக்கத்திலோ, சொந்த ஊருக்குப் பக்கத்திலோ வேலை அமைய வேண்டும் என்றார். அப்படியே சீரடிக்குப் பக்கம் பூனாவிலே வேலை கிடைத்துவிட்டது. என் தாயின் ஆசையையும் பூர்த்தி செய்துவிட்டார்.



அது மட்டுமல்ல, இதுவரை பிறந்த குழந்தைகள் இறந்தன. இதற்குப்பின் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். எல்லோரும் நன்றாகவே உள்ளனர். இவையெல்லாம் பாபாவின் ஆசீர்வாதம் இல்லாமல் நடந்திருக்க முடியுமா?



பாபாவிடம் யாராவது உதவி, பாதுகாப்பு என்று கேட்டால், கேட்பவர் தகுதிக்கு ஏற்ப தன்னையே மாற்றிக்கொண்டு நன்மை செய்தவர். செய்கிறவர். அவரைப்பற்றி மேம்போக்காக அறிந்தவர்க்கு எல்லாம் இது தெரியாது. ஆழ்ந்து நோக்கினால் பாபாவின் அற்புதம் புரியும்.



என்னுடைய பழக்கம் என்னவென்றால், எதையும் கலந்துநோக்கி, சீர்தூக்கிப்பார்த்து நியாயம் சொல்வேன். இதை கவனித்த பாபா, என்னை புத்திசாலிஎன்றார்.



சில சமயம் தவறு நேரும்போது என்னை சுத்த சோம்பேறி என்பார். யாராவது சரியான முறையில் கேள்வி கேட்டால், அவரை அடக்காமல் சரியான பதில் சொல்வார்.



அவரது சொல்லும் செயலும் அர்த்தம் பொதிந்தவை என்பது எனக்கு நன்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை, அவர் எனது சரியான ஆசையை சரியாகவே நிறைவேற்றினார்.



யாருக்கு எது உகந்தது என அறிந்து அதை தப்பாமல் செய்திடுவார். இது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நடக்கும்.



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:



ஒவ்வொரு முறையும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும் பாபாவிடம் வழிகாட்டச் சொன்னேன் அல்லவா? அப்படியே நீங்களும் கேட்டால் வழிகாட்டுவார். நடப்பவை எல்லாம் நன்மைக்கே. நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கிறது.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...