Monday, June 30, 2014

கீரப்பாக்கம் ஸ்ரீ சாயி பேராலயம்

உலகம் மாறிவருகிறது. எதிர்கால சந்ததிகள் என்னவாகப் போகிறார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது.  பந்த பாசங்களும், அன்பும் அரவணைப்பும் குறைந்து வரும் நிலையில், நமது சந்ததியினர் வேலையையும், பணத்தையும் கட்டிக்கொண்டு, படாடோபம் என்ற பெயரில் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறார்கள்.இதற்கு முன்பு நமது மூதாதையர் குழுவாக வாழ்ந்தார்கள். நம் பெற்றோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். நாம் தனிக் குடும்பமானோம். நம் பிள்ளைகள் தனித்தனியாக வாழ்கிறார்கள். வேலை நிமித்தமாக மகன் ஒரு இடத்திலும், மருமகள் ஓரிடத்திலும், பேரப்பிள்ளை விடுதியிலும், பெரியவர்கள் முதியோர் இல்லத்திலும் வாழ்கிறார்கள். சமூகம் தனி மனிதன் என்ற பிரிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.எவ்வளவு சொத்து சேர்த்தாலும், பணமிருந்தாலும் மனதில் நிம்மதியில்லாத நிலை வந்துவிட்டது. இவர்கள் இப்போது மதுபானக் கடைகளுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் செல்லலாம். மனம் போன போக்கிலும் நடக்கலாம். கடைசியில் ஒரு காலம் இருக்கிறது. அது கடவுளைத் தேடி வரும் காலம்எங்கும் கிடைக்காத நிம்மதியை பெறுவதற்காக கடவுளைத் தேடி ஆலயத்திற்க்கு வருவார்கள். இப்போது எல்லா இடமும் அடுக்கு மாடி வீடுகளாவதால் ஆலயம் அமைக்கமாட்டார்கள். அவர்களால் முடியாது. ஆனால், நாம் நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை செய்யவே வாழ்கிறோம். இவர்கள் செம்மையாக வாழ, ஆலயம் செய்வோம். ஆளுக்கொரு ஆலயம் செய்ய முடியாது. ஊருக்கு ஒரு ஆலயம் செய்யலாம். ஊருக்கு ஒரு ஆலயம் அமைக்க முடியாவிட்டாலும், நகருக்கு ஒரு ஆலயமாவது அமைக்க நம்மால் முடியும்.இந்த சேவையை எல்லோரும் சேர்ந்து செய்யலாம். வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்கு அருகே கீரப்பாக்கம் என்ற கிராமத்தில் மலைப்பகுதியில் பாபாவிற்க்கு மட்டுமன்றி, பக்தர்கள் வணங்குகின்ற மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைகிறது.முதன்முதலாக விநாயகர் ஆலயம் மலையின் மலையின் கீழ்ப்பகுதியில் அமைகிறது.ஆலயம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் திருக்கரங்களால் ஆலயம் அமைத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள்.இது எதிர்காலத்திற்க்கு நாம் செய்கிற உண்மையான தொண்டு. ஒரு செங்கல் துண்டு, ஒரு இரும்புத்துண்டு என துண்டு துண்டுகளாக இணைத்து தூண்களையும், கோயிலையும் உருவாக்கலாம். வாருங்கள்! உங்கள் கைங்கர்யத்தோடு நாங்கள் பொறுப்பெடுத்து ஆலயம் அமைக்க முயற்சித்து வருகிறோம். முழு மனதோடு இந்தக்கோயில் திருப்பணிக்கு அழைக்கிறோம். முடிந்தவர்கள் உதவலாம். முடியாதவர்கள் பிரார்த்திக்கலாம்விவரங்களுக்கும் நன்கொடைகள் அனுப்பவும்SHIRDI SAI SAMADARMA SAMAJ, 3E/A, SECOND STREET, BUDDHAR NAGAR, NEWPERUNGALATHUR, CHENNAI - 600 063. Phone No. 9841203311மேலதிக விபரங்களுக்கும், சாயி பேராலயம் பற்றி அறியவும்http://keerapakkamsrisaitemple.blogspot.in/

ஆயிரம் காரணங்கள் இருக்கும்!

tvmalaiதிருவண்ணாமலை அகஸ்தியர் ஆஸ்ரமம் நிறுவிய வேங்கடராம சுவாமிகள் சத்குருவாக வணங்கப்படுகிறவர். அவரை வாத்யாரே என்று அழைப்பார்கள். அவர் தொப்பி பற்றி கூறிய ஒரு விக்ஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்..திருப்பணிகள் நடக்கும்போது கைங்கர்யம் செய்வதால் புண்ணியம் உண்டு என்று தெரிந்தவர்கள், பொருள்களோடு உடலுழைப்பையும் தருவார்கள். இப்படித்தான் அகத்தியர் ஆசிரமம் கட்டப்பட்ட காலத்தில், அரசு நிறுவனங்கள், வங்கிகள், எஞ்சினியரிங், மருத்துவம் என பல துறைகளிலும் பணிபுரிபவர்கள், கடுமையான உடல் உழைப்பிற்கு பழக்கமில்லாதவர்கள் ஆகியோர் பங்கு பெற்று சேவை செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது வெயில் கடுமையாக இருந்தது. ஒரு சேவையாள் வந்து, குருவிடம், வாத்யாரே, வெயில் மிக கடுமையாக இருக்கிறது. ஒரு தொப்பி கொடுத்தால் வெயிலின் கடுமை தெரியாமல் இருக்கும் என்று கேட்டார்.hatஅப்படியா, ஒன்றிரண்டு தொப்பிகள் இருந்தன. அதை மற்ற அடியார்கள் வாங்கிப் போய்விட்டனர். நம்மிடம் நிறைய தொப்பிகள் இருந்தாலும், அவற்றை எங்கு வைத்தேன் என நினைவில்லை. முடிந்தால் அப்புறம் தேடித் தருகிறேன். களைப்பாக இருந்தால் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். வெயில் தாழ, வேலையைத் தொடரலாம் என்றார் வேங்கடராமன் குரு.மளிகை சாமான், கட்டுமானப் பொருட்கள், தொப்பி போன்றவற்றை பொறுப்பில் வைத்துள்ளவர், குருவின் பக்கத்தில் இருந்தார். அவர், வாத்யாரே, அடியேனுக்குத் தொப்பியிருக்கும் இடம் தெரியும். எடுத்து வந்து தரட்டுமா? எனக் கேட்டார். அப்படியா, ரொம்ப சந்தோக்ஷம். எங்காவது ஒரு தொப்பியிருந்தால், போய் கொண்டு வந்து நண்பரிடம் கொடு என குருதேவர் கூறினார்.தொப்பியைப் பெற்றுக்கொண்டு அடியார் வேலைக்குச் சென்றுவிட்டார். அவர் சென்றதும், தொப்பியைக் கொடுத்தவரிடம், ”ரொம்ப புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்து விட்டாயோ!” என்று குரு கேட்டதும், தொப்பி கொடுத்தவர், தான் ஏதோ தவறு செய்து விட்டதை உணர்ந்து தலைகுனிந்து நின்றார்.குரு சொன்னார், “ ஏம்ப்பா, நாங்க ஒன்னு சொன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். நாங்கள் எதையும் எப்போதும் மறப்பது கிடையாது. அவ்வப்போது மறப்பது போல சில காரணங்களுக்காக நாடகமாட வேண்டியிருக்கும். அந்த அடியார் இன்றைக்கு இரண்டு மணி நேரம் வேலை செய்தால் அதனால் கிடைக்கும் புண்ணியம் அவருடைய குடும்பத்திற்குப் போதும் என்ற தெய்வீகக் கணக்கை நாங்கள் அறிந்திருப்ப தால், அவருக்குத் தொப்பி தராமல் அதைக் காரணம் காட்டி அவரை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லுகிறோம். ஆனால் உன்னுடைய புத்திசாலித்தனத்தினால், அவர் தொப்பியைப் போட்டுக்கொண்டு இன்னும் இரண்டு மணி நேரம் வேலை செய்து மேற்கொண்டு புண்ணியத்தைச் சேர்த்துக்கொள்ளக் கூடிய நிலை உருவாகி விட்டது. இந்த அதிகப்படியான புண்ணிய சக்தி அவர் தன்னுடைய தொழிலில் செய்யும் தவறுகளில் இருந்து காப்பாற்றுவதால், மேலும் விபரீதமான பல தவறுகளைச் செய்ய முயற்சிப்பார். அதனால் வரும் தண்டனைகளுக்கு யார் பொறுப்பேற்பது?” என்று கூறி தொப்பி கொடுத்த அடியாரைப் பார்க்க, அடியார் தலை குனிந்தார்.இதேபோல, கிரிவலம் வந்த ஓர் அடியார், குருவிடம் வந்து, வாத்யாரே, வெயில் அதிகமாக இருக்கிறது. அடியேனுக்கு ஒரு தொப்பி கொடுத்தால், அதை கிரிவலம் முடிந்து திருப்பித்தந்துவிடுகிறேன் என்றார். பக்கத்திலிருந்தவரிடம், தொப்பி ஏதேனும் இருக்கிறதா? எனக் கேட்டார் குருதேவர்.hat3தெரியவில்லையே குருதேவா! நீங்கள் சொன்னால் தேடிப் பார்க்கிறேன் என்றார் அவர். அவர்தான் தொப்பி கொடுத்து குட்டுப்பட்டவர்.இந்த முறை, குரு தேவர் சொன்னார், “ இவர் என்னோடு பல ஆலயத் திருப்பணிகளில் ஈடுபட்டவர். ரொம்ப சீனியர் அடியார். இவர் கேட்கும்போது இல்லை என்று சொல்லமுடியாது.. எங்காவது தேடி நாலு தொப்பி எடுத்துக் கொடு என்றார்.”அடியாருக்கு தொப்பியிருக்கும் இடம் தெரியுமாதலால், விரைந்து சென்று தொப்பிகளை எடுத்து வந்து கொடுத்தார். சத்குரு அதை தன் கைகளால் அவர்களுக்குக் கொடுத்து, ”நல்ல படியாக கிரிவலம் சென்று வாருங்கள். சென்று வந்தபிறகு, அதை இவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அடுத்தமுறை ஆசிரமம் வரும்போது, இதுபோல நாலு டஜன் தொப்பி வாங்கி வாருங்கள், மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்!” என்று கூறி அனுப்பிவைத்தார்.கிரிவலம் முடிந்து மாலையில் வந்த அந்த குடும்பத்தார், தொப்பிகளை திருப்பிக் கொடுத்தனர். பிறகு, ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.குருதேவர், அடியாரைக் கூப்பிட்டு, ”தொப்பிகளை எங்கு வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டார்.அவைகளை மற்ற தொப்பிகளுடன் வைத்திருப்பதாகக் கூறினார் அடியார். இதைக் கேட்டு குருவுக்குக்கோபம் வந்துவிட்டது. அதை ஏன் மற்ற தொப்பிகளுடன் வைத்தாய்? அதை எடுத்து நெருப்பில் போட்டுவிடு என்று கூறினார். அடியாரும் அப்படியே செய்தார்.அவர் வந்த பிறகு குருதேவர் கூறினார், “அந்தத் தொப்பிகளைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. இங்கு வந்த அடியார், பலரிடம் ’தொப்பி’ போட்டே பலரிடம் தனது காரியத்தை சாதித்துக்கொண்டவன். பல லட்சக் கணக்கான ரூபாயை லஞ்சமாக சம்பாதித்தவன். கடுமையான கர்ம பாக்கியை சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறான். இருப்பினும் அவன் அடியேனிடம் வந்துவிட்டதால், முடிந்த மட்டும் அவன் முற்பிறவிகளில் சேர்த்து வைத்த சஞ்சித கர்மாவை நாங்கள் குறைக்க முயற்சி செய்கிறோம். அதனால்தான் இந்த கொளுத்தும் வெயிலில் திரு அண்ணாமலையை வலம் வரச் செய்து, புனிதமான இந்த ஆசிரமத்தில் சில மணி நேரம் தங்க வைத்து, கர்ம வினைகளின் வேகத்தை ஓரளவுக்கு குறைத்து அனுப்புகிறோம். அதே சமயம், நல்ல உள்ளம் படைத்த பல அடியார்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எங்களுக்கு இருப்பதால் கடுமையான கர்ம வினைப்படிவுகள் தோய்ந்த அந்தத் தொப்பிகளை நெருப்பில் இட்டுப் பொசுக்கிவிடுகிறோம். அவனிடம் பல புதிய தொப்பிகளை வாங்கி அதைப் பல அடியார்கள் பயன்படுத்தும் போது இன்னும் கணிசமான அளவில் அவனுடைய கர்ம வினைகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது!” என்றார்.மகான்களின் செயல்களுக்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதில் நாம் தலையிடவே கூடாது.ஆதாரம்: கடவுள் தவறு செய்தால்? என்ற புத்தகம்

குருவிடம் பெற்ற அனுபவம்!

devoteesபாபா தன் குருவிடம் பெற்ற அனுபவத்தைக் கூறும்போது,”குரு மகாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார். வெறும் கல், மணி இவையிரண்டுமே மெருகு ஏற்றுவதற்காகத் தேய்க்கப்படலாம். எவ்வளவு தேய்த்தாலும் கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும். இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும் வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?ஆகவே, நான் குரு பாதங்களில் பன்னிரண்டு வருடங்கள் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தை போல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. அவருடைய இதயம் என் மீது அன்பால் பொங்கி வழிந்தது.அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப் போல குரு கிடைப்பது அரிது. அவரது சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோக்ஷத்தை விவரிக்கவே முடியாது.ஓ! அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். இருவருமே ஆனந்த மயமாகிவிடுவோம். வேறு எதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.இரவு பகலாக அவரது முகத்தை உற்றுப்பார்க்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப் பட்டது.அவரைத் தவிர வேறு எதன் மேலும் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்தது இல்லை. கவனிக்காமல் விட்டதும் இல்லை. சங்கடங்களில் அவர் என்னை எப்பொழுதும் ரட்சித்தார்.சில சமயங்களில் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன், சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன். ஆயினும் எப்பொழுதும் அவருடைய கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக்கொண்டார்.தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழி தான் என் குருவினுடையதும். அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார். தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை.அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் சந்தோக்ஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறு எந்த உபதேசமும் செய்யத்தெரியாது.தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன. அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. ஆகவே, நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப்பிடிவாதம் பிடிக்க வேண்டும்.நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும். நீங்கள் வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை என்னிடம் காட்டுங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறு எதையும் கற்றுத் தரவில்லை.யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை. ஆறு சாஸ்திரங்களை அறிய வேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும். இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மகேஸ்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவன் ஆவான்.”இவ்வாறு பாபா மூதாட்டிக்கு போதனையளித்ததாக சத்சரித்திரத்தில் எழுதப் பட்டிருக்கிறது. குருவின் திருநாமத்தை தியானித்தாலே போதும். அந்த நாமத்தை எப்போதும் நினைத்தாலே போதும், அவனுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். இதை விட வேறு மந்திர தீட்சை தேவையில்லை என்பதே பாபா கூறியவற்றின் உட்பொருள். இதை உணராமல் நான் மந்திர தீட்சை பெற விரும்பு கிறேன் என்பது மடமை.பாபா, பாமரர்களும் நன்மை பெறவேண்டும் என விரும்பிய இறைவன். அதனால்தான் அவர் தீட்சையை யாருக்கும் கூறாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொள் என்றார்.எப்போதும் அவர் மீது மாறாத நினைவை வைத்திருக்க வேண்டும். வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை தன் மீது வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அன்பு எப்போது, எப்படி வரும் என்றால், சதாநேரமும் அவரது நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருக்கும் போதுதான் வரும். அவரது லீலைகளை எப்போதும் தியானித்தால்தான் வரும்.எப்போதும் சாயி சாயி என்று சொல்வீர்களானால் உங்களை ஏழு கடலுக்கு அப்பாலும் கொண்டு சென்று சேர்ப்பேன் என்றிருக்கிறார். சிலரிடம் ராஜாராம் ராஜாராம் என்று சொல்லுங்கள் என்றிருக்கிறார். இவையெல்லாம் மந்திர தீட்சைகள்தாம். இந்த தீட்சையின் நோக்கம் நமது நல்வாழ்வு.அவர் பூரண பிரம்மம். அந்த பிரம்மம் நமது நன்மைக்காக மண்ணில் இறங்கிவந்தது.. நம்மோடு இருந்தது, இப்போது இருக்கிறது.. இனி வரும் சந்ததியோடும் இருக்கும் என்ற உறுதியில் நின்றால் மட்டும் போதும். அவர் என்ன நமக்காக சொல்லியிருக்கிறார் என்பதில் சிந்தையைச்செலுத்தினால் மேலான நன்மைகள் கிட்டும்.எப்படி ஒரு ஊருக்கு நாலு வழியிருக்குமோ அப்படி, நமது ஆன்மாவை கடைத்தேற்றுவதற்கான வழிகள் இவை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. லவுகீக வெற்றி, ஆன்ம ஈடேற்றம். இதுவே மந்திர தீட்சையின் நோக்கம்.

Sunday, June 29, 2014

மதுப்பழக்கம் மறைந்தது!

bless2009 நவம்பர் முதல்வாரத்தில் முதன் முதல் சீரடிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு என்னிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தது. சீரடிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த பிறகு பாபாவை முழு மனத்தோடு நம்பினேன்.”சீரடி ஸ்தலத்திற்கு வந்து தங்களை தரிசித்து ஊர், திரும்பிய பிறகு மதுப்பழக்கத்தை என் மனத்திலிருந்து நீக்கிவிடவேண்டும்!” என்று வேண்டினேன். அதை நிறைவேற்றினார். இந்த நான்கு ஆண்டுகளில் அந்த எண்ணமே என் மனதில் ஏற்படவில்லை. அன்று முதல் அவர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.இந்த நான்கு ஆண்டுகளில் ஒன்பது முறை சீரடிக்குச் சென்று வந்திருக்கிறேன். இரண்டு வருடங்களாக எனது பிறந்த நாள் அன்று பாபாவை தரிசிக்கும் பக்தர்கள் வயிறார சாப்பிட அன்னதானம் செய்து வருகிறேன். அதுவும் அவர் என் மனதில் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தியதால்தான்.கரூரில் ஒரு பாபா ஆலயம் உள்ளது. அங்குதான் என் பிறந்த நாளின் போது அன்னதானம் செய்கிறேன். சென்ற மாதம் எனது நண்பரை சீரடிக்கு அழைத்துச்சென்றேன். படிப்படியாக பலரை சாயி பக்திக்குள் வழிநடத்துகிறேன்.சாயி தரிசனம் புத்தகத்தில் பாபா ஆலயம் அமைக்க உதவி கேட்கப்பட்டதில், எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தந்தார். இடம் அமைந்து விட்டதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.சீரடியில் இருப்பதைப்போலவே இந்தக் கோயிலும் அமைய வேண்டும் என பாபாவை வேண்டிக்கொள்கிறேன். பாபா கோயில் கட்ட ஆகும் மொத்த சிமெண்ட் செலவை நானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தாலும், நிரந்தர வேலையோ, போதிய வருமானமோ இல்லாதது ஒரு குறையாக உணர்கிறேன். எனது சக்திக்கு ஏற்றவாறு 25 மூட்டை சிமெண்ட் வாங்கித் தரவுள்ளேன்.பாபாவுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன். என் மனதிலும் சில எண்ணங்களை நினைக்க வைத்து சில செயல்களையும் செய்ய வைத்த என் பாபாவுக்கு நன்றி. தற்சமயம் பாபா கோயிலில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் பாபா நிறைவேற்றி விட்டால், அதை விட பாக்கியம் இவ்வுலகில் எனக்கில்லை.டி.எஸ். கணேஷ்.

சாயி பக்தர் துமால்

foursaiஎன் தொழில் வக்கீல் என்பதால் என்னிடம் இன்னொரு வழக்கு வந்தது. மூன்று சகோதரர்கள் சேர்ந்து அவர்களின் எதிரி எலும்பை முறித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டவர்கள் ஒரு மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேல் தங்கி சிகிச்சை பெற்றதற்கான சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்கள்.இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக என்னிடம் வந்தது. நானும் உடனே மேல் முறையீட்டு மனு,விடுதலை மனு தயார் செய்து, மூத்த ஆங்கிலேயரான செசன்ஸ் நீதிபதியிடம் சமர்ப்பித்தேன்.வழக்கின் தன்மையைப் பார்த்த நீதிபதி, “ இது மிகவும் வலுவான வழக்கு. இதில் விடுதலை தர முடியாது” என்று கூறிவிட்டார். உடனே பாபாவை நினைத்தேன். பின் நீதிபதியிடம், ”ஐயா, இந்த வழக்கில் எதிரிகளின் எலும்பு முறிந்துவிட்டதாகச்சான்றளித்தவர் பதிவு பெற்ற மருத்துவரல்ல, போலி மருத்துவர். அவரது மருத்துவமனையிலேயே இருபது நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதாகக்கூறியிருப்பது வேடிக்கையானது. மேலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விவசாயிகள். தற்போது சிறையில் உள்ளார்கள். இதனால் அவர்களது விவசாயம் பாதிக்கிறது” என்றேன். குற்றம் உறுதியானால் நிரந்தர சிறைவாசம்தான் என்ற நீதிபதி எனது மனுவை ஏற்றுக்கொண்டார்.அரசாங்க வக்கீல் என்னிடம், ”வழக்கில் விடுதலைக்காக வாதாடப் போகிறீர்களா? அல்லது நீதிபதியிடம் மன்னிப்புக் கோரி கருணை காட்ட வேண்டப்போகிறீரா?” எனக் கேட்டார்.பாபா இருக்க பயமேன் எனக்கு? ”விடுதலைக்காக வாதாடப் போகிறேன்” என்றேன். வழக்கைத்தள்ளுபடி செய்து விடுதலை செய்ய வாதாடிய நான், பிறகு குறைந்த பட்சமாக தண்டனையைக் குறைக்க கருணை காட்டுமாறு வேண்டினேன்.நீதிபதி என்னிடம், கருணை வேண்டும் என்றால் இவ்வளவு நேரம் வாதாடி எனது நேரத்தை வீணடித்து இருக்கவேண்டாம் என்றார்.அரசாங்க வக்கீலிடம், ”எலும்பு முறிந்துவிட்டது என்று ஒரு போலி மருத்துவர் கொடுத்த சான்றை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் நீதிபதி. அதற்கு அரசாங்க வக்கீல், ”அடிபட்டவர்கள் மருத்துவரின் மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார்கள்” என்றார்.கோபம் கொண்ட நீதிபதி ”இதை ஒரு மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட் இடம் சொல்லவும். நீர் ஒரு செசன்ஸ் நீதிபதி முன்னால் பேசிக்கொண்டிருக்கிறீர், மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட்டிடமல்ல!’ என்று அரசாங்க வக்கீலைக் கண்டித்தார்.இதைக் கேட்ட அரசாங்க வக்கீல் அப்படியே அதிர்ந்துவிட்டார். மேலும் எந்த விவாதமும் தொடரவில்லை. குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்கள். வக்கீல் தொழில் செய்து கொண்டே நான் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டேன்.அரசாங்கம் நாசிக் மாவட்;ட உள்ளாட்சிக்கழகத்தின் முதல் தலைவராக என்னை நியமித்தது. இது ஒரு கவுரவ பதவி. இதை 1-11-1917 முதல் 13-5-1925 வரை வகித்தேன்.இந்தப் பொறுப்பில் தினம் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் கையெழுத்திடும் நிலை. இதனால் வக்கீல் தொழிலை கவனிக்க முடியவில்லை. வருமானமும் குறைந்தது. அப்போதைய எனது வருமான வரி 260 ரூபாயிலிருந்து பூஜ்யமாகக் குறைந்து விட்டது. இந்த சேவைக்காக அரசாங்கம் எனக்கு ராவ் பகதூர் பட்டம் தந்தது. இது ஒரு சாதாரண பட்டம்தான். ஆனால் கவுரவப் பட்டம். இருந்தாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டு சேவையைத் தொடர்ந்தேன்.ஒருநாள் கையெழுத்துக்காக ஆவணங்களை பியூன் என்னிடம் கொண்டுவந்தார். பொதுவாக எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு அன்றே அனுப்பிவிடுவேன். ஆனால் அன்று என்னைப் பார்க்க ஒரு முக்கியப் பிரமுகர் வந்திருந்தார். அவரிடம் நள்ளிரவு வரை பேசியதால் கையெழுத்து இடவில்லை. காலையில் இடலாம் என விட்டுவிட்டேன்.காலையில் அவசர வேலையாக வெளியில் சென்றதால், ஆவணங்களை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன். மறுநாள் வழக்கம் போல் ஆவணங்கள் வந்தன. அதில் முந்தைய நாள் கையெழுத்திடாத ஆவணங்கள் ஏதுமில்லை.அவற்றை வாங்கிப் பார்த்தபோது அனைத்திலும் என கையெழுத்து இருந்தது. நான் அதிர்ந்தேன். இது சாத்தியமே இல்லை. பியூனையும் முந்தைய இரவு சாப்பாட்டுக்கு அனுப்பிவிட்டேன். இது பாபாவின் செயல்தான் என நான் எண்ணி நெகிழ்ந்தேன்.இந்தப் பதவியில் இருக்கும்போது துவக்கப்பள்ளிகள் எனது கட்டுப் பாட்டில் இருந்தன. பள்ளிக்கல்வி ஆய்வாளர் தீபாவளிக்கு முன்னதாக எல்லாருக்கும் சம்பளம் தர கூறினார். அவர் ஒரு முஸ்லீம். அந்த நேரத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கூறினார். தலைமை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, அரசாங்கத்திலிருந்து பணம் வரவில்லை, ஆகவே, சம்பளம் தர இயலாது எனக் கூறினார். மீண்டும் கல்வி ஆய்வாளர் நினைவூட்டினார்.எனக்கு தர விருப்பம், ஆனால் முடியவில்லை. பாபாவிடம் சீட்டுக் குலுக்கிப் போட்டேன். கொடு என வந்தது. எல்லோருக்கும் சம்பளம் தரப்பட்டது. அனைவரும் மகிழ்ந்தனர். இதனால் வெகுநாட்கள் கழித்து எனக்கு தணிக்கை அதிகாரியிடமிருந்து ஆட்சேபணை வந்தது. நானும் நோட்டட் பார் பியூச்சர் கெயிடன்ஸ் என எழுதி பாபாவின் ஆசியால் அதை முடித்து விட்டேன்.என் வாழ்வில் பாபாவின் உதவி எண்ணில் அடங்காது. ஆனால் சிலவற்றை மட்டும்தான் நான் கூறுகிறேன். 1910ம் ஆண்டு எனது நண்பர் கோபால் ராவ் பூட்டி, என்னை இங்கிலாந்துக்கு அனுப்பி பார் அட் லா படிக்க வைக்கும் செலவையும், மேலும் இந்தியாவில் எனது குடும்பத்திற்கு ஆகும் செலவையும் தான் கடனாகத் தருவதாகக் கூறினார்.நாங்கள் எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு பாபாவிடம் அனுமதி பெறச் சென்றோம். சாமா, பாபாவிடம், என்னை மேல் படிப்புக்கு இங்கிலாந்து அனுப்பலாமா? எனக் கேட்டார். பாபா வேண்டாம் எனக் கூறிவிட்டார்.”துமாலின் தேவை இங்குதான் தேவை. அவனது சொர்க்கமும் இந்தியாவில்தான். பின் ஏன் இங்கிலாந்து செல்லவேண்டும்?” எனக் கேட்டார்.எனக்கு என்ன தேவை என்பதை பாபாதான் அறிவார். ஆகவே, இங்கிலாந்து செல்லவில்லை. 1911ல் மும்பை ஜெ.ஜெ. மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை. மயக்க மருந்து தந்தார்கள்.பாபா அறுவை சிகிச்சை மேஜைக்கு அருகில் என் தலைமாட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்துக்கொள்ள பாபா இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது.1915ம் ஆண்டு நாசிக்கில் எனக்கு அரசாங்க வக்கீல் பதவியை அளிக்க அரசு முன்வந்தது. இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். பாபாவுக்குக் கடிதம் எழுதினேன்.”இப்போது உள்ள வேலை நன்றாகவே உள்ளது. புதிய பதவி வேண்டாம்” என்றார் பாபா. எனவே, அதையும் மறுத்துவிட்டேன்.1918ம் ஆண்டு பாபா மகாசமாதிக்கு முன், சீரடி, பூனா மற்றும் பல இடங்களில் ப்ளு காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. பூனாவில் என் சகோதரன் மனைவிக்குக் காய்ச்சல் கடுமையாக உள்ளதாக தந்தி வந்தது. நான் உடனே எண்பது ரூபாய் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். போகும் வழியில் பாபாவிடம் ஆசீர்வாதமும், உதியும் பெற்றுச் செல்லலாம் என சீரடி வந்தேன்.பாபாவை தரிசித்தபோது, அவர் என்னிடமிருந்து எண்பது ரூபாயையும் தட்சணையாகப் பெற்றுக்கொண்டார். எனக்குப் புரிந்துவிட்டது, என்னை அனுப்ப பாபாவுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் பாபாவிடம் அனுமதி கேட்டேன். நாளை பார்க்கலாம் என்றார். இப்படியாக மூன்று நாட்கள் தங்கினேன். மீண்டும் சகோதரரிடமிருந்து அவர் மனைவி இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது.பூனாவில் என்ன நடக்கப் போகிறது என பாபாவுக்கு மட்டுமே தெரியும். காரண, காரியம் எனக்குத் தெரியவில்லை. அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டேன். பின் பூனா சென்றேன். இது பாபாவின் மகாசமாதிக்கு முன் நிகழ்ந்தது.ஆகவே, பாபாவை அவரது ஸ்தூல தேகத்தில் தரிசிக்கும் வாய்ப்பையும், அவரோடு சில நாட்கள் தங்கும் வாய்ப்பையும் எனக்கு அவர் அளித்தது அவரின் கருணைதான்.

Saturday, June 28, 2014

சிறு வயதுக் கனவை நிறைவேற்றிய பாபா!

 faceதிருச்சியில் வசித்து வருகிறேன். எனது மகள் ஜி. பாரதி சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றாள்.டாக்டராக வேண்டும் என்பது அவளது சிறுவயது கனவு. எனவே எம்பிபிஎஸ் கவுன்சிலிங் மட்டுமே விண்ணப்பித்தோம். வேறு எதற்கும் விண்ணப்பிக்கவில்லை.கவுன்சிலிங் தேதி வேறு தள்ளிக் கொண்டே போனது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பொழுது எங்கள் குடும்ப நண்பர் திருமதி சுப.மணிமேகலை, பாபாவை வேண்டிக்கொண்டு ஒன்பது வாரம் பாபா ஆலயம் போகச் சொன்னார். எனது மகளும் செல்ல ஆரம்பித்தாள்.கவுன்சிலிங் ஆரம்பித்து அழைப்புத் தேதியும் வந்தது. சென்னை வந்தோம். முதல்நாளே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாக இன்டர்நெட்டில் போட்டுவிட்டார்கள். அழுது கொண்டே திரும்பி வந்துவிட்டோம். எனது மகள் விடாமல் பாபா கோயிலுக்குச் சென்று வந்தாள்.ஒன்பதாவது வாரம் பாபாவுக்கு கேசரி செய்துகொண்டு சென்றாள். ரஷ்யாவில் சீட்டு கிடைத்து படிக்கச்சென்றுவிட்டாள். வருகிற ஜூலை மாதம் வருகிறாள்.எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது எப்படி அனுப்பினோம் என்று இன்று நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது. எல்லாம் பாபாவின் அருளால் கிடைத்தது என்பதை மட்டும் என்னால் மறுக்கமுடியாது. அவள் இன்றும் ரஷ்யாவில் பாபாவை நினைக்காமல் எந்த காரியத்தையும் செய்யமாட்டாள்.அமுதா குணசேகரன், திருச்சி.

தாசகணு மகராஜ்

greenதாசகணு மகராஜ் கீர்த்தனைகள் பாடுவதில் வல்லவர். பாபாவைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றி, அதை வடமாநிலங்களில் பரப்பிய பெருமை இவரைத்தான் சாரும். இவர் கீர்த்தனைகள் செய்தால் கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்.ஒரு சமயம் சீரடியில் கதா கீர்த்தனம் செய்ய நீளமான கோட்டு, மேலே அங்க வஸ்திரம், தலைப்பாகையும் கட்டிக்கொண்டு அலங்காரமாக வந்தார்.பாபாவுக்கு நமஸ்காரம் செய்வதற்காக வந்த போது, ஆஹா, மணமகனைப் போன்று அலங்காரம் செய்துகொண்டு வந்திருக்கிறீர். இவ்வளவு அலங்காரத்துடன் எங்கே செல்லப்போகிறீர்? என்று பாபா கேட்டார். தாசகணு, தாம் கதா கீர்த்தனம் செய்ய புறப்படுவதாகச் சொன்னார்.“எதற்காக இந்த நீளமான கோட்டு?  எதற்காக இந்த அங்க வஸ்திரமும் தலைப்பாகையும்? எதற்காக இந்த வீண் முயற்சியெல்லாம்? நமக்கு இதெல்லாம் தேவையில்லை. இவை அனைத்தையும் இப்பொழுதே, என் முன்னிலையிலேயே கழற்றிவிடும். இந்த சுமையை எதற்காக உம் உடம்பின் மேல் ஏற்றிக் கொள்ள விரும்புகிறீர்?” என்று பாபா கேட்டார்.தாசகணு மகராஜ், பாபாவின் கட்டளைக்குக்கீழ்ப்படிந்து உடனடியாக அவர் முன்னிலையிலேயே எல்லா அலங்கார ஆடைகளையும் கழற்றி, பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டார். அன்று முதல் திறந்த மார்பும், கழுத்தில் மாலையும், கையில் சப்ளாக்கட்டையுமாக கதா கீர்த்தனம் செய்தார்.நாராயணனுக்கு நாரதர் மாதிரி, சாயிக்கு தாசகணு நமது வீண் ஆடம்பரங்களை மக்கள் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை? நமது இதயத்தை இறைவன் பார்க்க வேண்டும். அதை நல்ல குணங்களாலும், பண்புகளாலும் அலங்கரிக்க வேண்டும். அப்போது மேலும் மேலும் நலன் விளையும்.

Friday, June 27, 2014

நமக்கு சாயி நாமத்தின் மகிமை எப்போது புரியும்?

 sairamநமக்கு சாயி நாமத்தின் மகிமை எப்போது புரியும்? ஏற்கனவே அதை ஜெபித்து, உருவேற்றி அதன் பலனை அனுபவத்தில் அடைந்தவர்கள் கூறும் போது, அல்லது அவர்கள் அனுபவத்தைக் கேள்விப்படும்போது, நாமே உணரும்போது புரியும்.மற்றவர்கள் அனுபவத்தை நமது அனுபவமாக மாற்றவேண்டும் என்ற எண்ணமும், துடிப்பும் நமக்கு இருந்தால்தான் இந்த விக்ஷயம் நமக்குச் சித்தியாகும். இல்லாவிட்டால் விரையம்தான்.ஒரு சொல் மந்திரச் சொல்லாக மாறவேண்டுமானால், அந்த சொல்லின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாயி பாபாவை வணங்க ஆரம்பித்த பக்தர்கள், அவரது நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்துள்ள பக்தர்கள் ஆகியோர், பாபா பற்றிய வரலாறு, பக்தர் அனுபவம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பிறர் படித்துச்சொன்னதைக் கேட்கலாம், நாமே படிக்கலாம். எது சுலபமோ அதைப் பின்பற்றுவது நல்லது.உங்கள் கோரிக்கை நிறைவேற சப்தாகம் செய்யுங்கள், அதாவது சாயி பாபா வரலாற்றை ஏழு நாட்களுக்குள் படித்து முடித்துவிடுங்கள் என்று பிறர் கூறக் கேட்டிருப்பீர்கள்.ஏதோ ஒரு நாவலை படிப்பது போலவோ, கடமைக்கு படிக்க வேண்டும் என்றோ படிக்காமல் சத் சரித்திரத்தில் என்ன எழுதியிருக்கிறது, அதில் பக்தர்கள் நலனுக்காக பாபாவால் தரப்பட்ட உறுதி மொழிகள் என்ன, பக்தர் அனுபவம் என்ன என்பன போன்ற விக்ஷயங்களைத் தரம் பிரித்துப் படிக்கவேண்டும். தெரிந்து கொண்ட விக்ஷயத்தை நமக்கு அவர் தந்த உறுதி மொழியாக, நாம் பெறப்போகும் நன்மைக்கு அடையாளமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.சொக்கலிங்கம் சுப்பிரமணியம் போன்றவர்கள் மொழி பெயர்த்துள்ள சத்சரித்திரம் கைக்கு அடக்கமாக, பாபாவின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவதாக, ஏழு நாட்களுக்குள் படிக்கும் வகையில் இருக்கின்றன.இவற்றை அத்தியாயம் அத்தியாயமாக வேகமாகப்படித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும். இரண்டாவது முறை படிக்கும் போது முதல் முறை படிக்கையில் நமக்குப் புரியாமல் போன விக்ஷயங்கள் கூடுதலாகப் புரியும். இப்படி புரிந்துகொள்ளப் படிப்பதுதான் சப்தாகத்தின் நோக்கம்.படிக்கும்போது கலங்கிய மனம் தெளிவடைந்து, பாபா அருளை நிச்சயமாகப் பெறும் என்கிற உறுதிப்பாட்டில் தான் இதை சப்தாகம் செய்யச்சொல்கிறார்கள். எனவே, படிக்கும்போது பொருள் உணர்ந்து படிக்கவேண்டும்.படிக்கும்போது பாபாவின் நேரடி வார்த்தைகள், அதை அவர் பயன்படுத்திய விதம், சூழ்நிலை, அதை அவர் சொன்னதற்கான காரணங்கள் போன்றவற்றை நம்முடைய வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி, ஒப்பிட்டுப் பார்த்து, அந்த உறுதி மொழிகள், அறிவுரைகள் ஆகியவற்றை நமதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.இப்படியே ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கும் போது, நீங்கள் பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அறிந்தவராவதோடு, அவரது அருளுக்கும் பூரண பாத்திரமாகிவிடுவீர்கள்.அதேபோல, பாபா பற்றி வருகிற புத்தகங்களை வாசிப்பது நல்ல பலனைத் தரும். அவரது பிறப்பு, அவர் இந்துவா முஸ்லிமா, பிராமணரா, பிராமணர் அல்லாதவரா, அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பன போன்ற குதர்க்கமான விக்ஷயங்களை ஆராய்ச்சி செய்யவேண்டாம். அது தேவையற்ற ஆராய்ச்சி.சோகாமேளா என்ற ஞானி ஜாதியில் ஆதி திராவிடர், ரோகிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. ஸஜன் கசாயி என்ற ஞானி பிழைப்புக்காக கசாப்புக் கடை நடத்தியவர். ஆனால் யார் இந்த ஞானிகளின் ஜாதியைப் பற்றி சிந்திக்கின்றனர்.உலக ஷேமத்திற்காகவும் பக்தர்களை ஜனன மரணச் சுழலில் இருந்து விடுவிப்பதற்காகவுமே உருவமும் குணங்களும் அற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள்.இந்த சாயி பிரத்யட்சமான கற்பக விருட்சமாகும். நாம் விரும்பியதைத் தரும் தேவலோக மரம். இந்த கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார். அடுத்த கணமே அவர் ஸ்ரீ ராமராக மாறிவிடுகிறார்.. இப்படி சத்சரித்திரம் கூறுகிறது.

Thursday, June 26, 2014

நாம ஜெபம் செய்யுங்கள்!bigsaiதீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள். ஒருவனுக்கு ஏற்படும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் அவன் எண்ணம் சொல், செயல் மூன்றுமே காரணம். இறுதியாக அவனது கர்மம்தான் காரணம்.கர்மத்தை ஒழுங்கு படுத்தினால் அதாவது நல்ல கர்மம் செய்துவந்தால் நல்லதுதான் நடக்கும். நடந்து விட்ட கர்மவினையைக் குறைப்பது எப்படி? கர்மவினையை மனிதனாலோ உடம்பாலோ கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு அவமானப்பட்டு துடைத்துவிட வேண்டும். ஆனால் நிச்சயம் அதன் தாக்கத்தை குறைக்க முடியும்.கஷ்டம் வந்துவிட்டால் மனம் குழம்பும். யார் யார் என்ன சொல்கிறார் களோ அதையெல்லாம் செய்யத் தோன்றும். மனம் சோர்வுறும். செயல் படத்தோன்றும். மனிதன் நிர்க்கதியாகி விட்டது போல் நினைப்பான். இந்த நேரத்தில் சத்சரிதத்தில் சொல்லியது போல் வெறுப்புணர்வை நீக்கி, சித்தத்தை மயங்கவிடாமல் ஒன்றில் நிலை நிறுத்தும் சாதனம்தான் நாம ஜெபம். சாயி நாம ஜெபம். இதைத் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினை படிப்படியாகக் குறையும்.இரண்டாவது தான தர்மம் செய்தல். தனது சக்திக்கு உட்பட்டு செய்தல், மிகவும் எளியது தினமும் ஓர் உயிர்க்கு உணவளித்தல்.மூன்றாவது மகான்களின் தரிசனம். சாயி பகவானை தரிசித்தல், திருவடி தரிசனம், திருமுக தரிசனம். திருவடித் தியானம், ரூப தியானம். இவை மிகமிக எளிய முறை.நான்காவது ஆலய தரிசனம். அங்கே பிரார்த்தனை. ஒரு மனிதன் தன்னிடமுள்ள பிரச்சினையை பாபாவிடம் சொல்லலாம். அவர் காது கொடுத்துக் கேட்பார். அவர் செவிடு அல்ல, உனக்கு நல்ல அற்புதமான சிக்கலற்ற தீர்வைத் தருவார்.இதைவிட்டு யோகம், யாகம், தியானம் என்ற பெயரில் மூக்கு நுனியைப் பார்த்தல், தீபத்தை உற்று நோக்குதல், காசைக் கண்டபடி வாரியிறைத்து கண்ட கண்ட பயிற்சிகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இது மிக மிக ஆபத்தானது. இவற்றை செய்யவே கூடாது.ஓர் இளைஞர் தூக்கம் வருவதற்காக இன்டர் நெட் பார்க்க ஆரம்பித்தார், சி.டி போட்டு பார்த்தார். தற்போது தூக்கம் வராமல் அவதிப்படுகிறார். நமது மூளை மிகவும் அற்புதமானது. அதை அனாவசியமாக தொந்தரவு செய்யக்கூடாது.எனக்குத் தெரிந்தவரை எல்லாவற்றிற்கும் உன்னதமான பயிற்சி நாம ஜெபம். அதிலும் உன்னதமானது சாயி நாமம். நல்லது எல்லாம் தரும் நாமஜெபம்.  சகலமும் தரும் சாயி நாமம். சாயி நாம ஜெபம் செய்வோம்,சந்தோஷமாய் இருப்போம்.சாயிராம்!  சாயிராம்!  சாயிராம்!கு.இராமச்சந்திரன்

Wednesday, June 25, 2014

கர்ம வினையை கழி!

20142நல்ல புத்தகம் நல்ல நண்பன். வாசிப்பு ஓர் அருமையான பொழுதுபோக்கு. உருப்படியான உயர்வு தரும் பொழுது போக்கு. வாசிப்பை ஏனோதானோ என்றில்லாமல் ஒரு மனத்தோடு செய்தால் அதன் பலன் நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.திருக்குறள், பகவத் கீதை, பைபிள், குர்ஆன், ஸ்ரீ சீரடி சாய் சத்சரிதம் மற்றும் அந்தந்த மதநூல்களின் வாசிப்பு, ஒரு மனிதன் என்றைக்காவது என்ன செய்வது எனத் தோன்றவில்லையே என தவித்து நிற்கும்போது கை கொடுக்கும். வழிகாட்டும். இதில் எளிமையானது மற்றும் முதன்மையானது சாயியின் சத்சரிதம்.இது ஒரு பாராயண நூல் மட்டுமல்ல, ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒரு புது அர்த்தம் தோன்றும். நின்று நிதானித்து ஆழமாகப்படிக்கும்போது ஒரு பிரமிப்பு உண்டாகும். மனிதனின் தற்கால எல்லா பிரச்சினைக்கும் அது வழிகாட்டுகிறது.பூனாவைச் சேர்ந்தவர் கோபால் நாராயண் அம்படேகர். இவர் பாபாவின் பக்தர். தாணா மாவட்டத்தில் சுங்க இலாகாவில் பத்தாண்டுகளும், ஜவகர் மாவட்டத்தில் பத்தாண்டுகளும் பணி யாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றபின் வேறு வேலை தேடினார் கிடைக்கவில்லை. இவரை கடுமையான கஷ்டம் துரத்தியது. ஒவ்வொரு ஆண்டும் சொல்லவொணாத துயரம்.ஆண்டு தோறும் சீரடிக்கு வருவார். பாபாவிடம் தன் துயரத்தைச் சமர்ப்பிப்பார். இவ்வாறு ஏழு ஆண்டுகள் ஓடின.1916ம் ஆண்டு தாங்க முடியாத கஷ்டம். சீரடிக்கு வந்தார். பக்தர்கள் தங்கும் தீட்சித் வாதாவில் இரண்டு மாதம் மனைவியோடு தங்கி னார். ஒருநாள் வாதாவின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த மாட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் கிணறு இருந்தது. தாங்க முடியாத தொல்லைகளால் அவதிப் பட்ட அவர், அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.அப்போது பக்கத்திலிருந்த ஓட்டல் முதலாளி சகுண்மேரு நாயக் ஆம்படேகரிடம் வந்து அக்கல்கோட் மகராஜ் சரித்திரத்தைப் படிக்கக் கொடுத்தார்.சகுண் மேரு நாயக்கிடம் வெண்ணெயில் சர்க்கரை போட்டு, காலையில் தனக்குக் கொடுக்குமாறு பாபா கூறுவார். இந்தப் பழக்கம் இன்னும் சீரடியில் தொடருகிறது. சீரடி சன்ஸ்தான் இதைப் பிரசாதமாக வழங்குகிறது.அதை வாங்கிய அம்படேகர், அதிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பிரித்துப் படித்தார். மகராஜின் பக்தன் ஒருவன் தீராத நோயால் கஷ்டப்பட்டான். இதிலிருந்து தப்ப தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் விழுந்தான். உடனே மகராஜ் அவன் முன்னே தோன்றி, அவரை தன் கைகளால் தூக்கியெடுத்து காப்பாற்றினார்.அவனிடம் சொன்னார், ”நல்லதோ, கெட்டதோ உனது முந்தையை கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும். தற்கொலை தீர்வு இல்லை. மீதியுள்ள கர்மவினையை அனுபவிக்க நீ மீண்டும் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்” என்றார். இதைப் படித்த அம்படேகர் கண்ணீர் விட்டார்.ஆகா, பாபா அல்லவா தம்மை சாவிலிருந்து காத்தார் என நெகிழ்ந்தார். பின் வீடு திரும்பினார். உழைத் தார், செல்வம் பெருக்கினார், வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்தார்.கு.ராமச்சந்திரன்

Tuesday, June 24, 2014

கவலைப்படாதே நான் இருக்கிறேன்!

babaஎங்கள் குடும்பம் பெரியது. மூத்த அக்காவுக்கு 76 வயதாகிறது. கடந்த ஐந்து வருடங்களாக உடல் பருமன் உபாதையால் கஷ்டப்பட்டு, அதற்குரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார். பத்தடி தூரம் நடந்தாலே மூச்சு இரைக்கும்.2013 நவம்பரில் திடீரென ஒருநாள் மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டதால், கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.நான்கு நாட்கள் அக்காவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் எங்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன வலியையும், நாங்கள் அடைந்த துயரத்தையும் வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது.கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள சாயி மந்திருக்கு அவ்வப்போது சென்று அங்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனங்களில் கலந்துகொள்வது உண்டு. வட கோவையில் பாபா கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துவருவதுண்டு.எனது அக்கா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அருகிலிருந்த ஒருபெட்டிக்கடையில், பல வார இதழ்கள் வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அதில் சாயி தரிசனம் இதழும் இருந்தது.இதற்கு முன்பு சீரடி பாபாவைப் பற்றி அதிகமாக எதுவும் எனக்குத் தெரியாது. 2013 நவம்பர் மாதத்திய அந்த இதழை வாங்கிப் புரட்டினேன். அதில் முதலில் என் கண்களில் பட்டது, ”எதைப்பற்றியும் கவலைப்படாதே” என்ற மனதைக் குளிர வைத்த வாசகமும், அடுத்த பக்கத்தைப் புரட்டியதும் பரிச்சிட்ட, தைரியத்தை இழந்துவிடாதே! சுகமாகிவிடும்! என்ற வாசகமும்தான்.மிகவும் மோசமான சூழ்நிலையில் எனது அக்கா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால், பெரும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருந்த எனக்கு, மேற்கண்ட அருள் வார்த்தைகளைப் பார்த்தவுடன், அக்கா பூரண நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம் என எனக்குள் மின்னலடித்தது போன்ற நம்பிக்கை ஏற்பட்டது.ரேஸ்கோர்ஸ் ஆலயத்திற்குச் சென்று அக்கா நலம் பெற வேண்டும் என பாபாவிடம் மனமுருக வேண்டினேன். வேண்டியபடியே அக்கா பூரண நலம் அடைந்து வீடு திரும்பினார். இந்த தெய்வீக அற்புதம்தான் என்னை _ சாயி பாபாவின் திருவடிகளை நோக்கி ஈர்த்தது.அடுத்ததாக டிசம்பர் 2013 இதழை வாங்கினேன். புதுப்பெருங்களத்தூருக்கு வா என்ற மங்கள கரமான வார்த்தையிருந்தது. பாபா அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன்.வயது முதிர்ச்சியின் காரணமாகவும், எனக்குள்ள சூழ் நிலை காரணமாகவும் அவ்வளவு சீக்கிரம் புதுப்பெருங்களத்தூர் செல்வது சாத்தியப்படாதே என எண்ணி வருந்தினேன்.ஆனால், என்ன அற்புதம்! அடுத்த நாளே, சென்னைக்கு அருகிலுள்ள மேல் மருவத்தூர் கல்லு}ரியில் படித்துவரும் எனது மகளிடமிருந்து, ”மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து கையெழுத்திட வேண்டியுள்ளதால் நீங்கள் உடனே புறப்பட்டு வரவும்” எனத் தொலைபேசித்தகவல் வந்தது.நான் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? கவலைப்படாதே! நான் இருக்கிறேன், நீ புறப்பட்டு வா என்று அப்பா, சீரடி பகவானே என்னை கூப்பிட்டுள்ளார் என்பதை உணர்ந்து நான்அடைந்த மகிழ்ச்சி மிகப் பெரியது.அடுத்தநாளே மேல்மருவத்தூர் சென்று, வேலை முடிந்த பிறகு பெருங்களத்தூர் வந்தேன். அங்கு கல்கி தெருவிலுள்ள சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையத்தில் ஞான குரு சீரடி பகவானை மனம் குளிர தரிசித்து விட்டு கோவை திரும்பினேன்.இந்த தரிசனம் பலவிதக் கவலைகளிலும், மன உளைச்சலிலும் இருந்த எனக்கு விவரிக்க முடியாத புதுத் தெம்பையும் வாழ்க்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையையும் வாரி வழங்கியுள்ளது.நான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளேன். அங்கே என்னைப் போன்ற அரசு ஊழியர்களுக்கு தனி நபர்க்கடன் தருவது அரசு ஆணைப்படி வாடிக்கை.நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த வங்கியின் லோன் பிரிவு மேனேஜரை தனி நபர் கடனுக்காக அணுகிக் கேட்டபொழுது இன்னும் பத்து மாதம் கழித்தே லோன் பெற முடியும் எனக் கூறிவிட்டார். இந்த விஷயத்தை அத்துடன் மறந்துவிட்டேன்.கடந்த மாதம் சில எதிர்பாராத நிகழ்வுகளால், திடீரென பொருளாதாரத் தேவை ஏற்பட்டது. நான் துயரப்பட்டுக் கொண்டிருந்தபோது, எனக்கு மிக வேண்டிய நண்பர் ஒருவர், பணத்திற்காக ஏற்பாடு செய்து நாளை தருவதாக வாக்களித்தார். ஆனால், மறுநாள், பணம் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகும் எனக் கூறிவிட்டார்.அதே நாளில், நான் வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு, பெருங்களத்தூரிலிருந்து எடுத்து வந்திருந்த சீரடி பகவானின் தெய்வீகமான உதியைக்கொஞ்சம் எடுத்து நீரில் கலந்து குடித்து விட்டு, எனது வீட்டிலிருந்து கிளம்பி, வங்கிக்கு வேறு வேலை விஷயமாகச் சென்றேன்.சென்ற வேலை சிறிது நேரத்தில் முடிந்து விடவே, கிளம்புவதற்காக வெளியே வந்தேன். அப்போதுதான் நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத அந்த அதிசயம் நடந்தது.எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்த வங்கியின் லோன் பிரிவு மேலாளர், என்னிடம், ”நீங்கள் தானே நான்கு மாதங்களுக்கு முன்பு லோன் கேட்டு வந்தவர்?” எனக் கேட்டார். பதில் சொல்வதற்குள், ”நாளை வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என மடமடவெனக் கூறி மறைந்தார். எனக்கு ஏற்பட்ட பிரமிப்புக்கு அளவேயில்லை. இன்ப அதிர்ச்சி. என்ன அதிசயம் கொஞ்ச நேரத்தில் நடந்தது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் புரிந்தது, வந்தவர் வங்கி அதிகாரியல்ல, என் அப்பா,அந்தக் கருணை வள்ளல் பாபா என்பது ஏனெனில், நண்பர் மூலமாக உறுதியளிக்கப்பட்டது அன்று நடக்கவில்லை. ஆனால் சிறிதும் எதிர் பார்க்காத அந்த வங்கிப் பணம் கிடைக்க அருள் பாலித்துவிட்டார் அந்த சாயி பகவான்.அடுத்த நாள் வங்கிக்குச் சென்று அரை மணி நேரத்தில் பணம் கிடைக்கப் பெற்றேன். எத்தகைய இக்கட்டான நிலையில் அந்தப் பணத்தைப் பெற்றேன் என்பது எனக்குத்தான் தெரியும்.நவம்பர் 2013ல்தான் அப்பா சீரடி சாயி பாபாவின் அருட் கடாட்சம் நிறைந்த அறிமுகம் எனக்குக்கிட்டியது. அன்றிலிருந்து இன்று வரை எனது அன்றாட வாழ்க்கையில் அந்த தெய்வம் அளித்து வரும் அருட் கொடைகளின் மகிமையையும், மகத்துவத்தையும் வார்த்தைகளால் இயம்ப இயலாது.சாயி வரதராஜன் கூறியதுபோல, ”அப்பா பகவானே! என்னைக் கரி மண்ணாகத் தங்கள் திருவடிகளில் ஒப்படைத்துவிட்டேன். அந்த கரிமண்ணுக்கு இறுதி வரை அருளாசியைத் தாங்கள்தான் வழங்கி அருள வேண்டும்!” என முற்றும் சரணாகதி அடைந்துவிட்டேன்.சா.நடராஜன்,சிட்கோ, கோவை

Monday, June 23, 2014

நம்பிக்கை இருந்தால் தரிசனம் தருவேன்!

sai-guide-usநான் சமாதியடைந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள் என்று பாபா சொன்னார். ஆனால், சாயி பக்தர் என சொல்லிக் கொள்ளும் நம்மில் பலருடைய நிலையைப் பாருங்கள்..இன்ப நேரத்தில் பாபா இருக்கிறார் என்றும், துன்ப நேரத்தில் பாபா என்னை கைவிட்டார்.. அவர் இல்லை என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.பாபா இருப்பது உண்மை என்பதில் உறுதியாக இருந்தால், எந்த நிலையிலும் அவர்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை என்பது உண்மைதான்.ஏனெனில், அவர்கள் பாபாவை தங்கள் மனதிலிருந்து கொன்று விடுகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் துயரத்திலும் திடமாக இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரையே சரணடைகிறார்கள்.நம்பிக்கை இழக்கிற நிலை எதற்காக வருகிறது? என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாபாவின் உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை அசட்டை செய்கிறோம். மந்தமாக, உற்சாகமின்றி சோம்பியிருக்கிறோம். குருத்துரோகம் செய்கிறோம்.சீரடிக்குப் போனாலும், பாபா ஆலயத்திற்குப் போனாலும் அது புனிதத் தலம் என்பதை நினைக்காமல் வெட்டிப் பேச்சுப் பேசி, பிறர் மீது குறை காண்கிறோம். பாபா நடமாடும் தெய்வம் என்பதை உணரத் தவறுகிறோம்.பாபா அளித்த சலுகைகளைப் பெற நாம் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு முயற்சிக்கிறோம். யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது என்ற பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை.நம் கடமைகளை மறந்துபோய் ஷேம லாபம் அடையாது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். பக்தர்களையும் பக்தர் அல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயி நாதரை இழந்தோம்.சத்சரித்திரம் 43வது அத்தியாயத்தில், நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர் தெரிவது இல்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார். மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.சாவடியில் ஒளிந்த ரூபம், மசூதியில் பிரம்ம ரூபம்., சமாதியில் சமாதி ரூபம், மற்றெல்லா இடங்களிலும் சுக சொரூபம்.ஆயினும், தற்சமயத்தில், சமர்த்த சாயி இங்கு வாசம் செய்வதற்கு பங்கம் ஏதும் நேரவில்லை என்பதிலும் அவர் இங்கு என்றும் அழிவின்றி அகண்டமாக நிலைத்திருப்பார் என்பதிலும் பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.பாபா சமாதியடைந்த நிகழ்ச்சியைப் பற்றி தபோல்கர் விவரிக்கும்போது:”ஓ, சாயி நாதரே! ஆனந்தத்தின் மூலமே! ஆனந்த தெய்வத் திருமேனியே! பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக உருவம் ஏற்றீர். அந்த செல்வத்தை சம்பாதித்த பிறகு ஐயகோ, சீரடியிலேயே உடலை உகுத்தீர்.புத்தி தடுமாறிப் போன எங்களுக்கு சோர்வேதும் இல்லாமல், இரவு பகல் பாராமல் இருபத்து நான்கு மணி நேரமும் எங்கள் நன்மை கருதி உபதேசங்களை அளித்தீர்.எங்களுக்கு அளிக்கப்பட்ட அத்தனை உபதேசங்களும் கவிழ்த்து வைக்கப்பட்ட பானையின் மேல் ஊற்றப்பட்ட நீரைப் போல வீணாகிப் போயின. ஒரு துளி நீர்கூட நிலைக்கவில்லை.நீங்கள் யாரையாவது அவமரியாதையாகப்பேசினால் உடனே எனக்கு வலிக்கிறது என்று ஒவ்வொரு படியிலும் எங்களுக்கு அறிவுறுத்தினீர். ஆயினும் நாங்கள் தங்களுடைய வார்த்தைகளை மதிக்கவில்லை. உங்களுடைய நல்லுபதேசங்களைக் கடைப்பிடிக்காத நாங்கள் அபராதிகள். அவ்வாறு நாங்கள் ஆக்ஞைக்கு பங்கம் விளைவித்த பாவத்திற்குப்பிராயச் சித்தமாகவோ இவ்வாறு செய்து விட்டீர்?தேவரீர் தொண்டை வறண்டுபோகும் வரை செய்த உபதேசங்கள் எங்களுடைய உதாசீனத்தால் பிரயோஜனமில்லாமல் போனது கண்டு மனம் உடைந்து, காதுகளின் வழியாகக் கபாலத்திற்கு போதனை ஏற்றும் முயற்சியைக் கைவிட்டீரோ?நாங்கள் செய்த அசட்டையால் எங்கள் மீது முன்பிருந்த பிரேமையை மறந்துவிட்டீரோ? அல்லது பூர்வ ஜன்ம சம்பந்தம் இன்றோடு முடிந்து விட்டதோ? ஒருவேளை உமது அன்பெனும் தெய்வீக ஊற்று வறண்டு போய்விட்டதா என்ன?தேவரீர் இவ்வளவு சீக்கிரமாக மறைவீர்கள் என்பது முன்பாகவே தெரிந்திருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். மக்கள் ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்திருப்பார்கள்.ஆனால், நாங்கள் அனைவரும் சோம்பியிருந்தோம். மந்தத்திலும் உற்சாகமின்மையிலும் மூழ்கி வெறுமனே உட்கார்ந்திருந்தோம். கடைசியில் ஏமாந்து போனோம். குருத் துரோகிகளாகிய நாங்கள் எந்தச் செயலையும் நேரத்தோடு செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தா லும் ஏதாவது பலன் கிடைத்து இருக்கும். நாங்கள் அதையும் செய்யவில்லை.நெடுந்தூரம் பயணம் செய்து சீரடிக்குப் போய் அங்கு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். ஒரு புனிதத் தலத்தில் இருக்கிறோம் என்பதை அடியோடு மறந்து அங்கும் இஷ்டப்படி நடந்துகொண்டோம்.பக்தர்கள் பலவகை,  புத்திமான், பற்றுடையோன், விசுவாசமுள்ள அடியவன், தர்க்கவாதி என்று நானாவிதமாக இருந்தனர். அனைவருடைய குணங்களும் தெரிந்திருந்தும் பாபா எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அதிகம் குறைவு என்னும் பேதமே அவரிடம் இருந்ததில்லை.உலகத்தில் கடவுளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. கண்ணோட்டம் அவ்வாறு இருந்ததால், அவர் தம்மை தனிமைப் படுத்தியோ, வேறுபடுத்தியோ இரண்டாவதாகக் கருதவில்லை.அறிவாளியோ, மூடனோ, தம்மை அண்டியவர் அனைவரிடமும் பாபா அத்தியந்த அன்பு செலுத்தினார். தம் உயிரை விட அவர்களை அதிகமாக நேசித்தார். அவர்களுக்குள் சிறிதளவும் பேதம் பார்க்கவில்லை.அவர் மனித உருவத்தில் நடமாடிய தெய்வம். அதை மக்களுக்கு நேரிடை அனுபவமாக அளித்தார். ஆயினும் அனைவரும் அதை உணரத் தவறினர்.இதற்குக் காரணம், பாபா அவர்களிடம் காட்டிய இளகிய மனமும் பாசமும்தான். சிலருக்கு அவர் செல்வச் செழிப்பை அளித்தார்.சிலருக்கு சந்ததியையும் சம்சார சுகங்களையும் அளித்தார். இவற்றால் பெரும் பிரமை அடைந்த மக்கள், ஞானத்தைப் பெறும் வாய்ப்பை கோட்டை விட்டனர்.பாபா எவரிடமாவது கேலியும் சிரிப்புமாகப் பேசினால், வேறு எவரிடமும் காட்டாத அற்புதமான அன்பைத் தம்மிடம் மட்டும்தான் பாபா காட்டுகிறார் என்று எண்ணி அந்த நபர் தலைக்கனம் கொள்வார் பாபா எவரிடமாவது கோபமாகப் பேசினால், பாபாவுக்கு இவரைப் பிடிக்கவில்லை, பாபா நம்மையே அதிகமாக மதிக்கிறார். மற்றவர்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பதில்லை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.பாபா அளித்த சலுகைகளைப் பெற ஒருவரை ஒருவர் முந்துவதற்கு முயன்றபோதிலும், பாபா அந்த ரீதியில் கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறாக, நம் கடமைகளை மறந்து ஷேம லாபம் அடையாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம்.பரப்பிரம்மமே மனித உருவம் ஏற்று நம்மருகில் வந்துநின்றது. ஆயினும் நாமோ, செய்யவேண்டிய காரியங்களை மறந்து அவர் செய்த வேடிக்கைகளிலும் தமாஷிலும் பிரியம் காட்டினோம். வந்தவுடனே பாபாவை தரிசனம் செய்வோம், மலர்களையும் பழங்களையும் சமர்ப்பணம் செய்வோம். தட்சணை கேட்டால் தடுமாறுவோம். அவ்விடத்திலிருந்து நழுவி விடுவோம்.யாரையும் துன்புறுத்துவது தகாத செயல். அது என்னை நோயுறச் செய்கிறது. பாபாவின் இந்த அறிவுரையை நாம் பின்பற்றவில்லை. நம் இஷ்டம் போலச் சண்டையும் சச்சரவும் செய்தோம்.பக்தர்களையும் பக்தர் அல்லாதவர்களையும் இரு சாராரையுமே உபத்திரவம் செய்தோம். அதன் விளைவாக சாயி நாதரை இழந்தோம். அவருடைய வார்த்தைகள் இப்பொழுது ஞாபகத்திற்கு வரும் போது நம்முள் ஒரு அனுதாப அலை எழுகிறது..”இப்படி சத்சரித்திரம் கூறுகிறது.நீங்கள் பாபாவை தரிசிக்க வேண்டும் என்றால், அவர் மீது நம்பிக்கை உள்ளவர்களாக மாறுங்கள். அவருடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டு, பாபா என்னை மன்னித்து விடுங்கள். இனி உங்கள் வழி காட்டுதலை மீறமாட்டேன் எனக் கூறுங்கள்.எந்த நேரத்திலும் என்னை விட்டு நீங்காமல் இருங்கள்.. இந்த மனமே உங்கள் சீரடியாக இருக்கட்டும் என வேண்டுங்கள்.எப்போதும் சாயி நாம ஜபம் செய்து, மனதை சக்தி மிகுந்த ஷேத்திரமாக மாற்றுங்கள். அவரைப்பற்றிய நினைவும், அவர் நாம தியானமும் உங்கள் மனதில் மீண்டும் அவரை உயிர் பிழைக்க வைக்கும். இதை உடனடியாகச் செய்யுங்கள். எதிலும் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுங்கள். இதை பாபா அதிகமாக விரும்பினார். யாரையும் குறை சொல்வதை அவர் பொறுத்துக்கொள்ளவில்லை. குறை கூறுவோருக்கும், புறம் பேசுவோருக்கும் அவர் தண்டனைத்தர தயங்கியதில்லை.தம்பதியருக்குள்ளோ, பெற்றோர் பிள்ளைகளுக்கு உள்ளோ, மாமியார் மருமகளுக்கு உள்ளோ, மற்றவர்களுடனோ பிணக்குகளை வளர்த்துக் கொள்ளாமல், கசப்புகளை நீக்கும் வழிகளை ஆலோசித்து செயல்படுத்துங்கள். அனைவரையும் நேசித்து அன்பு காட்டுங்கள்.அதற்கு முன்னதாக, ஒருவர் செய்த தவறை மன்னித்து விடுங்கள். நட்புக்கு நீள்வது உங்கள் கரமாக இருக்கட்டும். இப்படிச் செய்து, பொறுமையோடு அவருக்குக்காத்திருந்தால் வாழ்க்கையில் இன்பம் பெருகும். அவரது தரிசனம் தடையின்றி கிடைக்கும். சாயியின் திருவடிகளைத் தொழுவோம்ஜெய் சாய்ராம்!

Sunday, June 22, 2014

நம்பினால் பலன் கிடைக்கும்

baba6வீட்டு விவகாரங்களில் ஒத்துழைப்புக்கொடுக்கும் தனலட்சுமி எனக்கு உடன் பிறவாத சகோதரி. நான் சீரடி சென்று வந்த பிறகு, அவரிடம் என் அனுபவங்களைக்கூறினேன். என்னை அழைத்ததைப் போல பாபா அவரையும் அழைத்தார். சீரடி சென்று பாபாவை தரிசித்துவந்தாள்.அவரது மகன் விஜய் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். பரிசோதித்துப் பார்த்து கிட்னியில் புண் இருப்பதாகவும், ஈரல் கெட்டுவிட்டதாகவும் கூறினார்கள்.மனம் உடைந்துபோனவர்களாக பாபாவிடம் தனலட்சுமியும், அவரது கணவர் குணாவும் மனமுருக வேண்டினார்கள். மிகச் சிரமப்பட்டு அறுபத்தையாயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் குணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வேறு ஒரு மருத்துவரை அணுகியபோது, இவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வெறும் சத்துக் குறைவுதான், ஊட்டச்சத்து கொடுங்கள் எனக் கூறி அனுப்பினார்கள்.குடும்பப் பொறுப்பு இல்லாமல் அதுவரை மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்த குணா, பாபாவிடம் வேண்டி வேண்டி அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். இப்போது அந்தக் குடும்பம் பாபாவை உயிராக வணங்குகிறது.உடல்நலம் சரியில்லாததால் விஜய் படிப்பை தொடர முடியாமல் இருந்தான். இப்போது அவனை இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு டிப்ளமோ கோர்சில் சேர்த்து விட்டிருக்கிறோம்.குணா குடும்பத்தை கவனிக்காததால், தன லட்சுமி சீட்டுப் பிடித்தாள். அதில் லாபம் இல்லை, மன உளைச்சல்தான் மிச்சமாக இருந்தது. இப்போது அதையும் விட்டுவிட்டு, கடவுள் கொடுப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறார்கள்.நம்பியவர்களுக்கு கடவுள் கைகொடுப்பார் என்பதற்கு தனலட்சுமி, குணா தம்பதியர் வாழ்வு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.அமுதா,அயனாவரம், சென்னை-23

Saturday, June 21, 2014

கொஞ்ச நாள் பொறு! வேண்டுதல் பலிக்கும்!

sai-guide-usநீங்கள் தாமாக முன்வந்து பாபாவை வணங்குவதாக நினைக்கிறீரா? உண்மை அதுவல்ல. யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, யாருக்கு புண்ணிய காலம் பலன் தர ஆரம்பித்து உள்ளதோ அவர்கள் மட்டுமே பாபாவை வணங்குகிறார்கள் என சத்சரித்திரம் தெளிவாகக்கூறுகிறது.சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையெல்லாம் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேல் உலக சுகங்களையும் அபரிமிதமாக அளிக்கும் சக்தி வாய்ந்தது என்று சத்சரித்திரம் 12வது அத்தியாயம் கூறுகிறது.முலே சாஸ்திரி என்ற பக்தர் பாபாவை தரிசனம் செய்ய வந்தபோது, அவரை பாபாவுக்கு அறிமுகம் செய்து வைத்த காகா சாகேப் தீட்சிதர், பின்வருமாறு பாபாவிடம் கூறினார்.”பாபா இவர் புண்ணிய ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார்.” பாபாவை எல்லோரும் வணங்க முடியாது என்பதற்கு இதைவிட சான்று இருக்கமுடியாது. புண்ணிய பலம் இருந்தால் மட்டுமே அவரை வணங்க முடியும். நீங்களும் நானும் புண்ணிய பலத்தைப் பெற்று இருக்கிறோம். ஆகவே பாபாவை வணங்குகிறோம்.எவ்வளவோ திட்டங்கள் தீட்டியிருக்கிறோம், ஆனால் வெற்றி பெறத்தான் முடியவில்லை. பாபாவை வணங்கியும் நமது கஷ்டங்கள் இன்னும் தொலையவில்லை என அங்கலாய்க்கிறோம்.சத்சரித்திரம் என்ன சொல்கிறது என்றால், யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார். அது மட்டுமல்ல, நாமெல்லாருமே திட்டங்கள் தீட்டுகிறோம், ஆனால் நமக்கு ஆதியும் தெரிவதில்லை, அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும். அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை.நடந்தது, நடப்பது நடக்கப் போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெரியும்.  அவர்களுடைய விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்டால் பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவார்கள். (அத்:12)இதுவரை நாம் வேண்டியது கிடைக்கவில்லை என்றால், நாம் அவரது எதிர்பார்ப்புக்கு, விருப்பத்திற்கு நடக்கவில்லை என்று பொருள். அவரது எதிர்பார்ப்புதான் என்ன?நீங்கள் எப்போதும் சலனமற்ற மனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை தயங்காமலும், முணுமுணுக்காமலும் நீ அனுபவிக்க வேண்டும்.இன்ப துன்பமும், சுக துக்கமும் நிலையற்றவை. இன்றிருப்பது நாளை மாறிப்போகும். எனவே, மாற்றத்திற்குரிய ஒன்றுக்காக மனம் கலங்காமல் இருக்க வேண்டும்.மனதை எதன் பாலும் திருப்பாமல், அவர் பாதங்களின் மீது திருப்பி எப்போதும் சாதாரணமாக சாயி சாயி என்றோ சாயி ராம், சாயிராம் என்றோ சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் .எதைச் செய்தாலும் அவரிடம் சொல்லி விட்டுச் செய்வதும், சொல் செயல் சிந்தனை என எதிலும் அவரைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் வெறும் கருவியாக மட்டும் இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.இந்த எதிர்பார்ப்பை நீங்கள் கடைப்பிடித்தால் போதும், அவர் தனது விருப்பத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். அவரது விருப்பம்தான் என்ன?தனது பக்தனுடைய ஷேம நலனே சாயியின் விருப்பம்! நீங்கள் அவரை நினைக்கிறீர்களோ இல்லையோ, அவர் எப்போதும் உங்களை நினைத்து, உங்கள் பெயரையே எப்போதும் உச்சரித்துக் கொண்டு இருக்கிறார். இதை சத்சரித்திரம் உறுதி செய்கிறது. நம் போன்று அனுபவங்களைப் பெற்றவர்கள் உறுதி செய்கிறார்கள்.நமது நலனை விரும்புகிற நமது கடவுள் நமக்கு நன்மையை மட்டும்தான் செய்வார் என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.சில அடியார்கள் கூட சமயத்தில் தவறி விடுகிறார்கள், தடுமாறுகிறார்கள். காரணம், தங்களுக்குப் பிரச்சினை என வந்துவிட்டால் அவர்கள் குழம்பிவிடுவதுதான்.தங்களை அறியாது ஒருவித பயம் அவர்கள் மனதில் ஏற்படுவதால், இது நடக்குமோ, நடக்காதோ என்று சந்தேகப்பட்டுவிடுவார்கள். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டியிருக்கும்.விசுவாசம் இல்லாமல் நான் தன்னை அறிந்தவன், ஆத்ம நிஷ்டன் என்று சொல்லிக்கொள்பவர்கள்கூட வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள்.இப்படித்தான், பாபாவை வணங்குகிறேன் என்று சொல்லிக் கொண்டு, அவர் என்னை கண்டுகொள்ளவில்லை எனப் புலம்புகிறவர்கள் யாராவது இருந்தால், நீங்கள் உண்மையாக அவரை வணங்கவில்லை என்று பொருள்.இதனால் உங்கள் மனதில் ஒரு கணமும் நிம்மதியோ, சாந்தியோ இன்றி சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிவிடுவீர்கள். இப்படி மூழ்குகிறவர்கள் தாங்கள் பகவான் அருளைப் பெற்றுவருவதாக தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். அந்த வரிசையில் நீங்கள் இடம் பிடிக்கக் கூடாது.இன்றும் கொஞ்ச நாள் பொறுமையோடு இருங்கள். உங்கள் வேண்டுதல் பலிக்கும். பக்தி என்பது மாயா ஜால வித்தையல்ல. பக்தி செய்தவுடனே வேண்டியது கிடைப்பதற்கு. பக்தி என்பது, இறையருளையும் புண்ணியத்தையும் பெறுவதற்கான ஒரு நுழைவுச் சீட்டு. இறைவனின் அன்பைப் பெறுவதற்கான ஓர் அங்கீகாரம். இதைச் செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். உங்கள் பக்தி சோதிக்கப்படும், பிறகே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் வேகவேகமாக செய்யப் படும்.உங்கள் பக்தி பரிபூரணமானது என்பதை எப்படி உணரலாம் தெரியுமா?ஒரு ஹோட்டல் நடத்த விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.. இடம் வாங்கி, கட்டி அதில் இன்டீரியர் டெகரேஷன் செய்து, பொருட்களை எல்லாம் வாங்கி வைத்து கால விரையத்தை செய்து கொண்டிருப்பது அல்ல.எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு.. இந்தா..இதை வைத்துக்கொள்.. உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.. நீ பார்த்து ஏதேனும் செய்.. என ஒருவரை உருவாக்கி உன்னிடம் அனுப்பி வைப்பது!பக்தியில் உண்மையாயிருங்கள்.உண்மையாக பக்தி செய்யுங்கள்..உயர்வு தானாக வரும்!ஜெய் சாய்ராம்! அன்புடன்சாயி வரதராஜன்

Friday, June 20, 2014

வாழ்வை மாற்றிய ஸ்ரீ சாயி தரிசனம்! பகுதி 2

பாபா சர்வாந்தர்யாமி!

நேற்றைய தொடர்ச்சி……..

மறுநாள் காமாட்சி மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்தேன். திங்கள் காலை மருத்துவமனையில் அனுமதி, மதியம் ஒரு மணிக்கு ஆஞ்சியோகிராம். இதய வால்வில் உள்ள அடைப்பு கண்டுபிடிப்பு. மேலும் அடுத்த வாரம் உங்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஆபரேக்ஷன். இது என்ன கனவா, நிஜமா?  அதுவும் இலவச ஆபரேக்ஷன்.  கேகேடியில் அக்டோபர் 21 அனுமதி. 23ல் அறுவை, 25ல் டிஸ்சார்ஜ்.மனம் பறந்தது. ஏதோ ஒன்று என்னை வழி நடத்துகிறது. என்ன அது? தேடினேன் தேடினேன்.. நான்தான் மந்திரவாதியாயிற்றே!  மறுபடி மறுபடி தேடினேன். கண்டேன் சாயியை!அந்த வாரம் குங்குமம் வாங்கிப் படித்தேன். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே, அதில் தான் அனுபவம் உள்ளது என்ற வார்த்தைகள்..செவ்வாய், நவம்பர் 5ம் தேதி , ஸ்ரீ  சாயி தரிசனம் புத்தகம் வாங்கினேன். படித்தேன்..படித்தேன்.. புரிந்தேன் வாழ்க்கையை. தனித்திருந்த காலத்திலேயே சிறிய அளவில் பாபாவுக்கு பிரார்த்தனை மையம் அமைக்க முடிந்தது. இப்போது என்னோடு நீங்களும் இருக்கிறீர்கள். நம்மோடு சாயியும் உறுதியாக இருக்கிறார் என சாயி வரதராஜன் எழுதியிருந்தது என் மனதிற்கு இனிமையாகவும் ஏதோ செய்யப்போகிறார் என்பது போலவும் இருந்தது. அதன்பிறகு சாயி தரிசனம் புத்தகமே என் தினசரி சுப்ரபாதமாக அமைந்தது.சாயி தரிசனம் புத்தகம் வாங்கிய மறுநாள், என்னை வேலைக்கு வேண்டாம் என்றவர்களே, மீண்டும் அழைத்தார்கள். நவம்பர் 11ல் உண்மையாகவே சாயி தரிசனம்.. தலைகால் புரியவில்லை. சாயி வரதராஜனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக நன்றி தெரிவித்தேன்.என்னை வேலையில் சேர்த்த பிறகு, நான் முன்பு வேலை பார்த்த அதே இடத்திற்கு மாற்றினார்கள்.  என்னை புரிய வைத்த துவாரகாமாயியான அந்த இடத்திலேயே வேலையில் அமர்ந்தேன்.அங்கிருந்தபடியே, ஏன் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் போகக்கூடாது. போவோம்..பாபா சன்னதி என்ன? தியான மையம் பெரியதாக, இன்னும் கட்டப்படாமல் எவ்வளவோ பெரிய கோயில், எவ்வளவோ பக்தர்கள்.. ஆஹா!  சாயி வரதராஜன் என்பவர் ஒரு சாமியாராகத்தான் இருக்க வேண்டும்.. அவரையும் சென்று பார்க்க வேண்டும். இப்படியெல்லாம் மனதில் கற்பனையாக ஓட..பெருங்களத்தூர் வந்து, கல்கி தெருவைத் தேடித் தேடி மாலை ஆறு மணி நேரமாகிவிட்டது. ஆரத்தி முடித்திருப்பார்களோ, கூட்டம் அதிகமாக இருக்குமோ, சரி போனதும் ஆரத்தி முடித்து, தியான மண்டபத்தில் உட்காருவோம்.சாயி வரதராஜன் அவ்வளவு பெரிய கோயிலில் எங்கிருப்பாரோ..நம்மையும் பார்ப்பாரோ என்று உள்ளார எண்ணிக்கொண்டே அதிக கற்பனையில் கல்கித் தெருவை அடைந்தேன்.பாபா கோயில் எங்கே? என கேட்க, ஒருவர், இதோ இதுதான் என சொல்ல.. என்னுள் இருந்த கற்பனை குதிரை ஒடிந்து -  கால் ஒடிந்து - கீழே விழ.. நான் உள்ளுக்குள்ளே உடைய, போராட்டமா அது ஏமாற்றமா? இதுவா கோயில்? இதுவா நம் பாபா கோயில்? பாபா எப்படி இப்படி தெருவில் உங்களை உட்கார வைத்து...? உண்மையாகவே நான் உள்ளூர அழுதேன்.மனம் இறுகியது. அதிக எதிர்பார்ப்புகளோடு வந்த என்னை இப்படியா ஏமாற்றம் சூழும்? சரி உள்ளே போவோம் என வரிசையில் நின்றேன். பத்துக்கு பத்து இருக்குமா? இதுவா பாபா கோயில்? என எண்ணிய மனம் சற்றே தணிந்து, பாபா காலில் விழுந்து நமஸ்கரித்து மேலே படி வழியாகச் சென்றேன்.இடதுபுறம் ஏதோ வேலை பாதியில் நின்றது. இதுதான் பிரார்த்தனை மையமா? என நினைத்தவாறு உள்ளே சென்றேன். அந்த சிறிய அறையில் அஞ்சனை மைந்தன், அதனருகில் பாபா சிலை.ஒரு மூலையில் மனமில்லாது அமர்ந்து, பிரார்த்தனை செய்தேன். மூட்டை மூட்டையாய் பணம் வைத்திருப்பவர்களுக்கு மனமில்லை. எங்கே சிறிய இடம் பார்த்தாலும் அங்கே பாபாவுக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என மனம் ஆசைப் படுகிறது என அவர் எழுதியதைப் படித்திருந்தேன். அவருக்காகப் பிரார்த்தனை செய்தேன்.மறுவாரம் பெருங்களத்தூர் வந்தேன். அதே பிரார்த்தனை. எனக்கான வேண்டுதலை மறந்தேன். சாயி வரதராஜனுக்காகப் பிரார்த்தனை.மலை ஆறு மணியிருக்கும். சாதாரணமாக ஒருவர் பேண்ட் சர்ட்டுடன் வந்தார். மேலே போனார். எல்லோருக்கம் உதி தந்தார். நான் மேலே உட்கார்ந்து பிரார்த்தனை முடித்துவிட்டு, கீழே வந்தேன். அப்போதும் அவர் அங்கே எல்லோர் நெற்றியிலும் உதிப் பிரசாதம் இட்டுக்கொண்டு இருந்தார். இவர்தான் சாயி வரதராஜனா? மனம் போ போ.. போய் பேசு என்றது. நான் என் நெற்றியை மட்டும் காண்பித்தேன். உதி இடப்பட்டது. வீடு திரும்பினேன்.பாபா என் பிரார்த்தனையைக் கேட்டார்.  ஸ்ரீ சாயி வரதராஜன் என்னும் மகா பாக்கியவானால் கண்டிகையின் உள்ளே மூன்று கி.மீ. தூரத்தில் கீரப்பாக்கத்தில் ஆலயம் துவக்கம் என்னும் மகா மகா மகிழ்ச்சிச் செய்தியை சாயி தரிசனத்தில் படித்தவுடன் என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.மகா பாக்யசாலி, மகா புண்ணியசாலி அவர். அவர் அமைக்கும் இடத்தைப் போய் பார்க்கலாம் என தனியே கீரப்பாக்கம் சென்றேன். வெங்கட்ராமன் என்பவரையும் சந்தித்துவந்தேன். இருந்தும் உள்ளூர உறுத்தல். இந்த ஊரில் பாபா கோயிலா? சாயி பந்துக்கள் எப்படி வருவார்கள்?சரி, அது போகட்டும். இவ்வளவு பெரிய கோயில் கட்ட சாயி வரதராஜன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? நானும் அணில் மாதிரி உதவலாமா?எப்படி முடியும் என்னால்? என்னைச் சுற்றிதான் அவ்வளவு கடனிருக்கிறது? அதுவே முடியவில்லை.. எனக்கு உதவிட யார் இருக்கிறார்கள் என அழுகிறேன்.. அறுவை சிகிச்சைக்கு வாங்கிய கடனே முடியவில்லை.. என புலம்பினேன்.உள்மனம், இந்த ஐந்து மாத காலமாக எப்படி வாழ்கிறாய்? குடிகார சாமியாராக இருந்த உன்னை மாற்றியது _ சாயி வரதராஜன் என்னும் மகா சித்தர். அவர்தானே.. நீதான் இப்ப குடிக்கறதே இல்லையே மூன்று வேளை பிரார்த்தனை செய்கிறாய்..வீட்டை விட்டால் வேலை, வேலையை விட்டால் வீடு என்று.. உன்னை இப்படி மாற்றியது யார்? அவர்தானே?அவர்கிட்டே உன் பிரச்சினையைச் சொல்லு.. அவர் மூலமாகத்தான், அவருடைய புத்தகம் மூலமாகத்தான் என் வாழ்க்கை மாறியது, அவர்தான் என் குரு.. அவர்தான் என் குரு என பாபாவிடம் சொல்கிறாயே- அவர் கட்டும் கோயிலுக்கு நீ என்ன பண்ணப் போகிறாய்? நன்றி இல்லாதவனே.. தற்கொலை தற்கொலைன்னு அலையுறயே...கடன் கடன்னு புலம்புறியே.. நல்லா யோசிச்சுப் பாரு.. முன்பு இருந்த இருப்பு என்ன? இப்ப எப்படி இருக்க? அதற்காகவாவது அவர் கட்டும்  கோயிலுக்கு உதவி பண்ணலாம்ல.. இப்படி என் மனம் தினமும் என்னை அழவைக்கிறது.என்ன செய்வது? பாபா சொல்வது போல கர்ம வினைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும். என் பாதங்களை பத்திரமாகப் பிடித்துக்கொள். உனது காரியங்களையும், மற்றவைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. என்னும்அவரது தேன் மொழிகள்..குரு  ஸ்ரீ சாயி வரதராஜனின் பிரார்த்தனையும், வழிகாட்டுதலில் உள்ள நம்பிக்கையிலும், அவரது எழுத்து நடையிலுள்ள நேர்த்தியிலும் பாபா என்றால் சாயி வரதராஜன், சாயி வரதராஜன் என்றால் பாபா என்ற எண்ணங்களிலும் அடிக்கடி பிரச்சினை என்னும் பேய்கள் வந்து ஆட்டிவிட்டுச் செல்லும் நேரங்களில்.. இவர்கள் இருவரும் இருக்க உனக்கென்ன பயம்? நீ வருவாய் மீண்டும் வாழ்வாய் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கும்.இவற்றை நான் இவ்வளவு விரிவாக எழுதியதற்குக் காரணம், என்றைக்கு சாயி தரிசனம் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தேனோ, அன்றிலிருந்தே எனக்குள் நிறைய மாற்றங்கள்.இன்றைக்கு அனாதையாக இருக்கும் எனக்கு சாயி தரிசனம் புத்தகமும், சாயி பாபாவும், சாயி வரதராஜன் என்பவருடைய சூட்சும வரிகள் மட்டுமே துணை. மற்றபடி கொடுக்க என்னால் முடியவில்லை. அவர் சொன்னதுபோல, முடிந்தவர்கள் உதவுங்கள், முடியாதவர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று..பாபாவின் ஆசியால் கீரப்பாக்கம் ஆலயம் சீக்கிரம் வளர என் பிரார்த்தனை. அதேபோல, யுகங்கள் மாறினாலும்  ஸ்ரீ  சாயி வரதராஜன் ஐயா புகழும், தொண்டும் பாபாவின் புகழ் போலவே தொடர வேண்டும் என்பதே என் உளம் நிறைந்த எதிர்பார்ப்பு.பாபாவும்  ஸ்ரீ சாயி வரதராஜனும் இந்த உலகம் உள்ளவரை வாழ்வார்கள். நான்மட்டும் சாதாரண மனிதனாய் மரணம் வந்தால் மண்ணில் மறைந்து விடுவேன். நித்திய புண்ணியவான்கள் என்றென்றும் வாழ்வார்கள். என்றும் வாழட்டும் என்ற ஆசையில்..பி. கவுரி சங்கர்

குருவாக இருக்க தகுதி எது?

குருகுரு தனது இரு சீடர்களிடம் பிரசாதம் கொடுத்து, ”இதை தானம் செய்து புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்.ஒருவன் பிரசாதத்தை ஓர் ஏழை பிராமணருக்குத் தந்தான். மற்றவன் இறைத்துக் கொண்டும், நீர் நிலைகளில் வீசி விட்டான்.குரு பிரசாத மகத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்தியவன் மேல் கோபம் கொண்ட இன்னொரு சீடன் அவனை கடுமையாகக் கண்டித்தான்.சில நாட்களுக்குப் பிறகு குரு தனது சீடர்களில் ஒருவரை தன் இடத்தில் நியமிக்க தீர்மானித்தார்.நியமிக்கப்படாதவன்,  நியமிக்கப்பட்டவனுக்கு சீடனாக இருக்க வேண்டும். குருவுக்கான தகுதி உங்களில் யார் அதிகம் புண்ணியம் செய்தவரோ, அவரிடம்தான் இருக்கும்.. அவரே குருவாக இருக்கத்தகுதி பெற்றவர்!” என்றார்.குரு வார்த்தையை மீறாத சீடன், ”தாங்களே எங்களில் தகுதி உள்ளவரை நியமிக்கலாமே!” என்றான்.”இருவரையும் ஒரே மாதிரியாக நேசித்து அறிவு போதித்தேன். இப்போது ஒருவரை குருவாக்குவது எனக்கு சங்கடமாக இருக்கும். எனவே,  தர்ம தேவதையை அழைக்கிறேன்” என்றார் குரு.குரு தர்ம தேவதையை அழைத்தார். ”அம்மா! யார் யாருக்கு எவ்வளவு புண்ணிய பலன் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கூறு!” எனக் கேட்டார்.”குரு தேவா! இந்த இருவரில் தன்னை உத்தம சீடன் என்றும், எப்போதும் குரு வார்த்தையை மீறாதவன் என்றும் எண்ணுகிற இவனிடம் புண்ணிய பலன் ஏதுமில்லை. ஒரே ஒரு பிராமணனுக்குச் செய்த புண்ணியத்தையும் தனது கோபம், கோள் சொல்லல், தன்னைப் பற்றிய பெருமிதம், தான் குருவாக வேண்டும் என்ற ஆசை ஆகியவற்றால் இழந்து, பாபியாகிவிட்டான்.இதோ இவனோ, உங்களது பிரசாதத்தை பல உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். எல்லா உயிர்களிலும் வாசமாக இருக்கிற ஸ்ரீ ஹரி இதனால் மகிழ்ந்திருக்கிறார். பல உயிர்களைக் காத்து, மிகுதியான புண்ணியத்தைச் சேமித்துள்ளான். இவன் மீது இருந்த பாவங்கள் யாவும், சக சீடன் குறை கூறியதன் மூலம் நீங்கிவிட்டதால், இவனே மகா புண்ணியசாலி. எனவே, இவனை உங்கள் இடத்தில் நியமிக்கலாம்!” என்றது தர்ம தேவதை.உத்தமனாக இருப்பதாக நினைப்பது மட்டும் நமது தகுதியை உயர்த்திவிடாது. தர்மப் பலன் அதிகரிக்க பல்லுயிர்களைப் போஷிக்க வேண்டும். குறைகூறாது, பொறாமை கொள்ளாது வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.

Thursday, June 19, 2014

வாழ்வை மாற்றிய ஸ்ரீ சாயி தரிசனம்! பகுதி 1

hanuman1992 ல் எனக்கு ஒரு குருநாதர் இருந்தார்.  ஆவடி காமராஜர் நகரில்..அவர் ஒரு ஸ்ரீ நரசிம்ம மற்றும் ஆஞ்சநேய உபாசகர். அடையாறிலிருந்து ஆவடி வரை சைக்கிளில் செல்வேன். காலை எட்டு மணி முதல் ஆறு மணி வரை அவருடன் இருப்பேன். எதுவும் சொல்ல மாட்டார். மாலை ஏமாற்றத்துடன் ஆவடியிலிருந்து அடையாறு வரை சைக்கிளில் திரும்பி வருவேன்.ஒருநாள் தனக்குப் பின்னால் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைக் காண்பித்து, இவர் யார் தெரியுமா? பாம்பன் சுவாமிகள். இவரது ஜீவ சமாதி உங்கள் ஏரியாவில்தான் உள்ளது என்றார். அவர் சொன்னது போல, பெசன்ட் நகரிலுள்ள ஸ்ரீ பாம்பன் சுவாமி கோயிலுக்குச் சென்றேன். நானும் அவரைப் போல ஆக விரும்பி 36 நாட்கள் விரதமிருந்தேன். அப்போது என் வயது 26.  விரத நாட்களுக்குள் எண்களால் மனித வாழ்வில் ஏற்படும் நல்லவை கெட்டவை, கிடைக்கும் கிடைக்காது என்ற மாபெரும் விக்ஷயங்களை கற்றேன். இப்படி ஓடிற்று காலம்.pamban1993ல் என் வாழ்வில் திருமணம் நடந்தது. பாம்பன் சுவாமியை மறந்தேன். இல்வாழ்க்கை சுகமாக ஆரம்பித்தது. 1995 எனக்கு அழகான ஒருபெண் குழந்தை பிறந்தது. தமிழ்ச்செல்வி என பெயர் வைத்தேன். அதன் பிறகு வாழ்வில் அலைவீச ஆரம்பித்தது.1996 ல் என் வாழ்வில் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் நட்பு ஆறுதலாய் கிடைத்தது. அவளால் என் மனைவியை இழந்தேன் – மதிப்பை இழந்தேன். எல்லாம் இழந்து -  அவள் வேறு ஒருவனுடன் ஓடிப் போக, 1997 ஜனவரி மாதம் 100 தூக்க மாத்திரை எடுத்து தற்கொலைக்கு முயன்று பிறகு மீண்டு வந்தேன்.அவள் தந்த சோகம் தாளாமல் சென்னையில் ஒரு மதுரைவீரன் சுவாமி கோயிலுக்கு குறி கேட்கச்சென்றேன். அங்கு அவருக்கு பூஜைக்கு வைக்கும் மதுவைக் கண்டு, நானும் இப்படி மது குடித்தால் இவரைப் போல ஆகலாம் என நினைத்து, குடித்து குறி சொல்ல ஆரம்பித்தேன். காலை முதல் இரவு வரை ஓயாமல் ஓம் நமச்சிவாய சொல்வேன்.எனக்குள் அப்படியொரு நம்பிக்கை ஈஸ்வரன் மேல். குடித்து குடித்து குறி சொன்னேன். பேய் ஓட்டினேன்.. சூன்யம் எடுத்தேன். ஏதேதோ செய்தேன். காசில்லாமல் எல்லோர்க்கும் ஓசியில்..கட்டிங் சாமியார் என அழைக்கப்பட்டேன். அப்படியும் ஓடிப் போனவள் வரவேயில்லை.2007. என் தாயின் பி.எப் பணம் மூலமாக மேடவாக்கம் ஜல்லடியன் பேட்டையில் கால் கிரவுண்ட் வீடு வாங்கினோம். பிடித்தது சனியன். ஐந்து மாதத்திலேயே என் தாய் மரணம். இரண்டு வருடத்தில் என் 21 வருட வேலை போயிற்று. வீட்டில் ஒவ்வொரு பொருளாகப் போனது.சூன்யம் மொத்தமாக என்னை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. குறி சொல்லும் எனக்கேவா இப்படி-? என நொந்தேன். இரவு பகலாக யோசித்தேன். ஒரு நாள் கனவில் உருவமில்லாது ஒருவர் வந்து,  “உன் மனைவி உன்னை வெறுத்து ஒதுக்குவாள், அப்போது நீ உன் உயிரை விட யோசிப்பாய்.. அந்த நேரத்தில் உனக்கு அபயம் அளிப்பேன்.”  என்றார்.நான் வணங்கிய அத்தனை சுவாமிகளும் என்னைக் கை விட்டன. கதறினேன். அழுதேன்,  புரண்டேன். ஆதரவு அற்றுப்போனேன். தற்காலிக வேலை ஒன்று கிடைத்தது. வாரா வாரம் குங்குமம் பத்திரிகை வாங்கிப் படிப்பேன். அதில் ஸ்ரீ  சாயி பாபா தொடர் வரும் என்பதால்!அதில் ஓர் இதழில், ”யோக்கியதை இருப்பவர்க்கு மட்டுமே என் ஆசி பெறுவர்” என்று இருப்பதைப் படித்துப் பார்த்து, எனக்கு அது உள்ளதா என யோசித்தேன். இல்லவேயில்லை. விட்டுவிட்டேன்.2013. மார்ச் எட்டாம் நாள் அதிகாலை எனக்கு மாரடைப்பு. அடையாரில் ஏற்கனவே வேலை செய்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். மருத்துவர்கள் சோதித்து ஆஞ்சியோகிராம் மற்றும் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.பணம் வேண்டுமே, நானோர் ஆண்டியாயிற்றே உறவுகள் யாரும் உதவ முன்வரவில்லை. யாருமற்ற அனாதையானேன். ஐந்தாம் நாளில் ஏதோ மருந்து மாத்திரையோடு டிஸ்சார்ஜ் ஆனேன். இப்படியே மாதங்கள் ஓடின.காசிருக்கும்போது கட்டிங். இல்லாவிட்டால் தூக்க மாத்திரை போட்டு தூங்குவேன். என்ன செய்வது? ஏது செய்வது என்று புரியவில்லை.2013. அக்டோபர் மாதம் எட்டாம் தேதி, வேலை செய்யும் இடத்தில் உங்கள் உடம்பைத் தேற்றிக்கொண்டு வந்தால்தான் வேலை என்றார்கள். கையிலிருந்த குங்குமம் புத்தகத்தை பிரித்தேன். அதிலிருந்த சாயி தாத்தாவைப் பார்த்து, முடிந்தால் வாழ வை இல்லையேல் முடித்துக் கொள்கிறேன். உம்மேல் நம்பிக்கை வைத்து நாளை என் மனைவியிடம் என் இதய வைத்தியத்திற்கு தற்போதுள்ள வீட்டை விற்று பணம் கொடு எனக்கேட்கப் போகிறேன். அவள் சம்மதித்தால் சிகிச்சை இல்லையேல் தற்கொலை என வேண்டியபடி, கண்ணீருடன் அவர் படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டேன்.மறுநாள் புதன். காலை பத்து மணி. மனைவியிடம் கேட்டேன். அவள் மறுத்துவிட்டாள். இருப்பதா சாவதா? என சிந்தித்து சாக முடிவு செய்தேன். மறுநாள் நேரம் குறித்த அதே நேரத்தில் என் செல்லுக்கு ஓர் அழைப்பு. தெரிந்தவர் பேசி, இன்று குரு வாரம் கோவளம் தர்காவுக்குச் சென்று வாருங்கள் என்றார். சென்றேன், தங்கினேன். காலை அவரிடம் அழுதேன்.மறுநாள் காமாட்சி மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்தேன். திங்கள் காலை மருத்துவமனையில் அனுமதி, மதியம் ஒரு மணிக்கு ஆஞ்சியோகிராம். இதய வால்வில் உள்ள அடைப்பு கண்டுபிடிப்பு. மேலும் அடுத்த வாரம் உங்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஆபரேக்ஷன். இது என்ன கனவா, நிஜமா? தொடரும்……

பாபாவிடம் பெற்ற அனுபவம்!

baba2ராவ் பகதூர் எஸ்.பி. துமால் நாசிக்கைச் சேர்ந்த சட்ட வல்லுநர். பாபாவிடம் அவர் பெற்ற அனுபவம் பற்றி கேட்ட போது,  “எனது வாழ்வில் இரவும் பகலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவம்தான், எதைச் சொல்ல?”  என்றார்.இவை ஒவ்வொரு பக்தனுக்கும் சொந்தமானவை. இவை பிரசுரிக்கப்படக்கூடாது. மக்களின் கேலிக்கு உள்ளாகும். பாபாவின் அற்புதத்தை அவரவர் அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் அதன் மகிமை புரியும். மேலும் அதை எனது மொழியில் சொல்ல, வேறு மொழியில் எழுத அர்த்தம் மாறும். பாபா எங்குசென்றுவிட்டார்? இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். முன்பைவிட மிகுந்த சுறுசுறுப்போடு இருக்கிறார். சமாதி மந்திரில் அவரைப் பாருங்கள், இன்றும் என்றும் அவரைப் பணிவோடு வழிபட்டால் தொடர்பு கொள்ளலாம். இருந்தாலும் தன்னிடம் பாபாவின் மகிமையைப்பற்றி கேட்டதால் அவற்றை சொல்கிறேன் என துமால், தனது அனுபவத்தைக் கூற ஆரம்பித்தார்.1907 ம் ஆண்டு நான் பாபாவை தரிசித்தேன். அவரது அதீத தெய்வத் தன்மையையும், சக்தியையும் கண்டு என்னுள்ளே ஓர் திருப்தி. ஆனந்தம். அதன் பின் பூட்டியையும் பாபாவுக்கு அறிமுகம் செய்தேன். அவர் பாபாவின் பக்தராகிவிட்டார்.என்னுடைய ஒவ்வொரு செயலையும் பாபாதான் தீர்மானிக்கிறார், நடத்தி வைக்கிறார் என்ற நம்பிக்கை என்னுள் தீர்க்கமாக ஏற்பட்டு விட்டது. ஒருமுறை பாபா என்னிடம், “துமால், உனது ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்து வருகிறேன். இல்லையென்றால் உனக்கு என்ன ஆகியிருக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார். இது மிகையல்ல, உண்மை. மற்றொரு முறை நானும் பாபாவும் தனித்திருந்தபோது, “துமால் நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. நேற்று இரவு முழுவதும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.இதைக்கேட்ட நான் நன்றியால் நெகிழ்ந்து போனேன். கண்ணீர் விட்டு அழுதேன். பாபாவுக்கு நான் என்ன சேவை செய்துவிட்டேன்? எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. இதற்காக அவர் என்னைப் பற்றி எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்?எனக்கு வரப்போகும் கெடுதல்களை எல்லாம் தடுத்து, நல்லதைச் செய்துக்கொண்டிருக்கிறார்.  இப்படியாக நடந்தவை ஏராளம்.அவர் வாழ்ந்த போதும், சமாதியானபோதும் எனக்கு வழிகாட்ட அவரின் படத்தின் முன் சீட்டுப்போட்டுப் பார்ப்பேன். எப்போதும் அவர் சரியான வழியையே காட்டித் தந்தார்.அவர் வழிகாட்டுதல் படியே நடந்தேன், தொல்லையில்லை. அவர் வாழ்ந்தபோது எந்த ஒரு பிரச்சினைக்கும் கடிதம் எழுதுவேன். சாமா பாபாவிடம் பதில் பெற்று எழுதுவார். அதன் படியே நடப்பேன்.நாசிக்கில் எனது பூர்வீக வீட்டில் நான் வாழ்ந்து வந்தேன். அங்கே திடீரென பிளேக் நோய் பரவியது. எலிகள் செத்துக்கிடந்தன. உடனே பாபாவுக்கு கடிதம் எழுதினேன். அவரே என்னைக் காப்பவர். எனக்கு வழிகாட்டி. பதில் வரும்வரை எனக்கு எந்த தீங்கும் நேராது என உணர்ந்தேன்.அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தேன். நாசிக்கில் என்ன நடக்கிறது என அவருக்கு நிச்சயம் தெரியும். நான் ஒரு குழந்தை போல் அவரை சார்ந்து இருந்தேன். ஆகவே, பாபா எனக்கு எந்த தீங்கும் நேரவிடமாட்டார். கடந்த 29 ஆண்டுகளில் நான் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போனதில்லை.பாபாவிடமிருந்து பதில் வந்தது. நாங்கள் பெரிய பங்களா வீட்டிற்கு மாறினோம். ஆனால் அதே இரவு எனது சகோதரனின் மகன் படுக்கையருகே எலி செத்துக்கிடந்தது. அதாவது பிளேக் நோய்தான் காரணம். மீண்டும் பாபாவுக்கு எழுதினேன். வீட்டை மாற்றவேண்டாம் என பதில் வந்தது. வீட்டிலும், வெளியிலும், வேலைக்காரர் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும், நாங்கள் தண்ணீர் எடுக்கும் கிணற்றிலும் எலிகள் செத்துக்கிடந்தன. மீண்டும் பாபாவுக்கு கடிதம் எழுதினேன். பதில் வரும் முன் சாமான்களை எடுத்துக்கொண்டு பழைய வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்தேன். பாபாவின் பதிலைப் படித்தேன். நாம் ஏன் வீட்டை மாற்ற வேண்டும்? என கேட்டிருந்தார்.உடனே சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பங்களா வீட்டிற்கே வந்துவிட்டேன். தண்ணீரை வீட்டுக் கிணற்றிலிருந்து எடுக்காமல் கோதாவரியிலிருந்து எடுத்துக்கொண்டோம்.பிளேக் சமயத்தில் ஒரு நாளில் பதினாலு பதினைந்து பேர் இறந்தார்கள். ஆனால் எங்களுக்கு எந்த வித தீங்கும் நேரவேயில்லை. மிகவும் பாதுகாப்பாக இருந்தோம்.நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனித்து வருகிறேன். இரவு பூராவும் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கிறேன் என என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட பாபா, தொழில் ரீதியாகவும் நிறைய அற்புதங்கள் செய்தார்.1910 அல்லது 1916ம் ஆண்டு. சீரடியில் ஒரு கிரிமினல் வழக்கு. எல்லா கிராமத்திலும் இருப்பது போல சீரடியிலும் மக்கள் இரு பிரிவுகளாக பிளவு பட்டிருந்தனர். பாபாவுக்கு சேவை செய்யும் ரகு மற்றும் அவருடன் சேர்ந்த ஐந்து பேரை மார்வாடி பெண்ணை இழிவாகப் பேசியதாக கை செய்து, நீதி மன்றத் தீர்ப்பின்படி ஆறு மாதம் சிறையில் அடைத்தனர். நேரடியாகப் பார்த்தவர்கள் வலுவான சாட்சி அளித்ததால் வழக்கு வலுவடைந்தது. பாபா பக்தர் தாத்யா கோதே பாடீல், குற்றவாளிக்காக இரக்கப்பட்டார்.தீர்ப்பின் நகலை எடுத்துக் கொண்டு சீரடியில் இருந்த புகழ்பெற்ற வக்கீல் திரு. கபர்டே, காகா சாகேப் தீட்சித், ஓய்வு பெற்ற நீதிபதி ராவ் பகதூர் சாதே இவர்களிடம் காட்டி மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டினார். அவர்கள் தீர்ப்பின் நகலைப் படித்துவிட்டு, வழக்கு மிக வலுவாக உள்ளதால் மேல்முறையீட்டுக்கு மறுத்துவிட்டனர். தாத்யா, பாபாவிடம் ஆலோசனை கேட்டார்.எல்லா பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு  ‘பாவ்’ இடம் (துமாலிடம்) போ என்றார். தாத்யா என்னிடம் நாசிக் வந்தார். நான் எல்லாவற்றையும் படித்து விட்டு மும்பை அல்லது அகமது நகரிலுள்ள தலை சிறந்த வக்கீலிடம் செல்லச் சொன்னேன். வழக்கு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.உடனே தாத்யா, பாபாதான் என்னிடம் அனுப்பியதாகக் கூறினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே, மேல் முறையீட்டு மனுவை தயாரித்து அகமது நகரின் மாவட்ட நீதிபதியின் வீட்டுக்குச்சென்றேன். அவரிடம் தீர்ப்பின் நகல் வரவில்லை, படிக்கவில்லை. எனது மேல் முறையீட்டு மனுவையும் அவர் படிக்கவில்லை. என்ன வழக்கு எனக் கேட்டார். ”சீரடியில் ஒரு மார்வாடி பெண்ணை இழிவாக பேசியதாக, நேரடி சாட்சியங்களை வைத்து ஆறு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது”  என்றேன்.”துமால், வழக்கு வலுவாக உள்ளது. உனது கருத்து என்ன?”  எனக் கேட்டார் நீதிபதி.  ”இந்த வழக்கும், சாட்சியங்களும் இரு பிரிவினருக்கு இடையேயுள்ள பகையால் ஏற்பட்டது”  என்றேன்.”அப்படியா நினைக்கிறாய்?” என்றார் நீதிபதி.”அப்படி நினைப்பது மட்டுமல்ல நீதிபதி அவர்களே, இதுவே என உறுதி மொழியும் கூட!” என்றேன்.நான் சொன்னதை நம்பிய நீதிபதி, உடனே மேல் முறையீட்டு மனுவை வாங்கி அந்த ஆறு பேரையும் நிரபராதி என தீர்ப்பு வழங்கி எழுதி விட்டார். பின் என்னிடம் நீதிபதி,  “உன் சீரடி சாயி பாபா எப்படி இருக்கிறார்? அவர் இந்துவா? முஸ்லிமா? உனக்கு என்ன உபதேசிக்கிறார்”  எனக் கேட்டார்.“அவர் இந்துவும் அல்ல, முஸ்லிமும் அல்ல.  அதற்கும் மேலானவர். அவரின் உபதேசத்தை என்னால் விளக்கமுடியாது. அதை நீங்களே நேரடியாக பாபாவிடம் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்!”  என்றேன்.அதற்கு அவரும் ஒத்துக்கொண்டார். ஒரு கோடை விடுமுறையில் கோபர்கான் வரை வந்தார். அங்கே வெயில் கடுமையாய் இருந்ததால் சீரடி செல்லாமலே திரும்பிவிட்டார்.இந்த வழக்கில் ஒரு நூதனத்தை நீங்கள் பார்க்கலாம்.. அகமது நகர் நீதிபதிக்கு தீர்ப்பின் நகல் வரவில்லை. அதை அவர் படிக்கவும் இல்லை. நான் கொடுத்த மேல் முறையீட்டு மனுவையும் படித்தது இல்லை. போலீசுக்கும், அரசாங்க வக்கீலுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை. ஆனால், உடனே தீர்ப்பு வழங்கிவிட்டு, சாய்பாபாவைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். இது எதைக் காட்டுகிறது? பாபாவின் தெய்வீக சக்தியை அல்லவா காட்டுகிறது. நான் உடனே சீரடி திரும்பினேன்.அங்கே பாபா மசூதியில் சில பேரைக் கூப்பிட்டு இன்னும் சற்றுநேரத்தில் எனது சமத்காரத்தைப் பார்ப்பீர்கள் என்றார்.ஆனால் அன்றுதான் காகா சாகேப் தீட்சித்தின் மகன் இறந்து அடக்கம் செய்ய எல்லோரும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எந்த சமத்காரத்தையும் காணாததால் சென்றுவிட்டார்கள். நான் சீரடி வந்து ஆறு பேர்களின் விடுதலை பற்றி கூறியவுடன், இதுதான் பாபா சொன்ன சமத்காரம் என அனைவரும் புரிந்து கொண்டார்கள்.நு}று ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு எதிரான இழிவான பேச்சு, நடத்தை கடும் குற்றமாகக் கருதப்பட்டது. வழக்கு பொய் வழக்கு என்பதால் தோற்று விட்டது என்பது வேறு விஷயம்...

கு. இராமச்சந்திரன்

Wednesday, June 18, 2014

ஒன்றும் சரியில்லை!

138f5-shirdi-sai-babaபாபாவை எவ்வளவுதான் வழிபட்டாலும் ஏதோ வாழ்கிறோம் என்ற அளவில்தான் வாழ்க்கைப்போகிறதே தவிர, கஷ்டம் தொலையவில்லை. கைத் தொழிலும் சிறக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியில்லை, வழி கூறுங்கள்.( சி. நாகமணி, உத்திரமேரூர்)பலருடைய பிரச்சினை இப்படித்தான் உள்ளது.  நிறைய பேர் முயற்சி எடுத்து உழைக்காமலும், உழைப்புக்கு வழி செய்யாமலும், கிடைக்காத ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். உதாரணமாக, ரியல் எஸ்டேட்டில் தரகு வியாபாரம் செய்கிறவர்கள். இதை முடித்தால் இவ்வளவு கிடைக்கும் என அலையாய் அலைந்து தேடித் திரிவார்கள். பெரிய கமிஷன் கிடைக்கும் என விற்பனையாளரையும், வாங்குவோரையும் கண்டுபிடித்து ஒன்றாகச் சேர்ப்பார்கள். நிலைமை எப்படியாகும் என்றால், சிறிய தொகையாக இருக்கும்வரை கமிஷன் தந்து வந்தவர்கள், பெரிய தொகையாக வரும்போது, இவர்களை எப்படி துண்டிக்கலாம் என வழி பார்ப்பார்கள். இப்படி பலரது வர்த்தகம் முடிந்து போகும்.இதையே நம்பி மற்ற வேலைக்குப் போகாமலும், இருக்கிற வேலையைப் பார்க்காமலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் பாபாவிடம் வந்து எனக்கு அதைச் செய் பாபா, இதைச் செய் பாபா என வேண்டுவார்கள். நடக்காத பட்சத்தில், நான் ஆத்மார்த்தமாகத்தான் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாபா என்னை கைவிட்டுவிட்டார் என்பார்கள். ஆத்மார்த்தம் என்பது என்ன? எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வதுதானே.சித்தத்தை ஒருமுனைப் படுத்தி, என்னால் ஜெயிக்கமுடியும் என்ற உறுதியோடு, நேரம் காலம் பார்க்காமல் உழைத்துப் பாருங்கள், நிச்சயம் வாழ்க்கை உயரும். சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...