Friday, June 30, 2017

பாபா மிகப்பொருத்தமானவர்!


சாயி முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல.  எறும்பு, பூச்சிகள் முதற்கொண்டு பிரம்மா வரையுள்ள எல்லா ஜீவராசிகளிலும் அவர் உறைந்திருக்கிறார்.  அவர் சர்வவியாபி.  வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர்.  அங்ஙனமே ஆத்ம உணர்விலும்.  இவை இரண்டிலுமே அவர் வல்லவராகையால் சத்குருவாய் இருப்பதற்கு அவர் மிகப்பொருத்தமானவர். 
சீடர்களைத் தட்டியெழுப்பி, அவர்களை ஆத்ம உணர்வில் ஸ்தாபிக்க இயலாத யாரும், எவ்வளவு கற்றறிந்தவராக இருப்பினும், சத்குரு என்றழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவராகார்.  பொதுவாக இவ்வுடலை அன்னை ஈன்றெடுக்கிறாள்.  தவறாமல் வாழ்வை, சாவும் பின் தொடர்கிறது.  ஆனால், வாழ்வு - சாவு இரண்டையுமே சத்குரு அழித்துவிடுகிறார்.  எனவே மற்றெவரைக் காட்டிலும் அதிகக் கருணையும், அன்பும் உடையவராவார்.
சாயிபாபா அடிக்கடி கூறுவதாவது:  "எனது ஆள் (பக்தன்) எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவியைப் போன்று ஷீரடிக்கு இழுக்கப்படுவான்".-சாயி சத்சரிதம் அத்தியாயம்28                       

என்னையே தியானி


மனச்சாந்தி இல்லாத இடம் என்று,  ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா
அழுதது போதும். கர்மா கழிந்தது. நீ அனுபவிக்கும் ஒவ்வொன்றும் எனது முழு ஆசீர்வாதத்தால் கிடைப்பது. என் மீது நம்பிக்கை வைத்து உன் பணியினை தொடர். நான் நிச்சயமாக வெற்றியடையும் படி செய்வேன்- ஷிரடி சாயி

Thursday, June 29, 2017

காகம் சில தகவல்கள்

 
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!
1.அதிகாலையில் எழுந்து கரைதல்.
2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.
3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.
4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.
5.மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.
6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச்சமமாக கருதப்படுகிறது….மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..ஆனால் மெல்ல,மெல்ல இதை நாமே பெரிதுபடுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா …. தெரியவில்லை!.. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்  மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல, அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்தப் பூஜையைச்செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக  மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப்பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.
அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும். அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா…கா…’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்குமகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை  என சில வகைகள் உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். 
அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. தந்திரமான குணம் கொண்ட காகம்
யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின் முன் அமர்ந்து  “கா…கா…’
என்று பலமுறை குரல் கொடுக்கும்.இந்தப்பழக்கம் இன்றும் உண்டு.
காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான்,
எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டிப் பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும் என்பதே பலரது ஆசை -

என்றும் நினைவில் கொள்


அன்பு குழந்தையே...!
நேற்று எப்படி இருந்தாய்? இன்று எப்படி இருக்கிறாய்? கொஞ்சமாவது வித்தியாசம் தெரிகிறதா உனக்கு? நான் உன்னுடன் கைப்பிடித்து நடப்பதும், உன் ஆழ்மனதில் அடுத்து என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்திக் கொண்டிருப்பதையும் நீ உணர்கிறாயா இல்லையா? அந்த வித்தியாசத்தை எப்போது நீ உணர்கிறாயோ அப்போதே உனக்கு  நல்ல நேரம் ஆரம்பமாகிறது. இதை நினைவில் கொள். 
நான் இரவு பகலாக இறைவனின் நாமத்தைச் சொல்வது என் குழந்தைகளாகிய உங்களின் நலனுக்காகத்தான். இந்தச் சாயியை நம்பியவர்களுக்கு சர்வ மங்களங்களும் உண்டாகும். இது எனது சத்திய வாக்கு. இந்த சாயியின் மார்கத்தில் நுழைந்தவர்கள் யாருமே வெறும் கையுடனும்மனக்குறையுடனும் இதுவரை சென்றதில்லை. இனிமேலும் செல்லப்போவதில்லை. 
சாயியின் மீது நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இருந்துப்பார். அதை விட்டு ஆற்றில் ஓர் காலும் சேற்றில் ஓர் காலும் வைக்காதே. எங்கே முழுமையான நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கிறதோ அங்கு இந்தச் சாயி பரிபூரணமாக பிரசன்னமாகிறேன்...! என்றும் நினைவில் கொள்.

என்றும் நான் துணை நிற்பேன்!!!

என் அன்புக் குழந்தையே!
உன்னைப் பற்றி நான் மிகவும் கவலைப் படுகிறேன். என் பிள்ளை ஏன் இப்படி கண்ணாடித் துண்டு போல் இருக்கிறாள் என்று. கண்ணாடியானது சிறிய தவறாலும் கீழே விழுந்து உடைந்து போகும் தன்மை கொண்டது. அது போல் நீயும் இருக்கிறாய்.
யாராக இருந்தாலும் சிறியதாக உன்னைக் காயப்படுத்தினால், உன் மனம் உடைந்து போகிற அளவுக்கு நீ இருக்கிறாய். உன் தன்மையை மாற்ற நான் போராடிக் கொண்டு இருக்கிறேன்.
யாராகினும் உன் மனதை ரணப்படுத்தி பார்க்கச் செய்யும் சிறியச்சொல் சொன்னாலும், நீ அதை கண்டு கொள்ளாதே. அவர்கள் சொன்னால் அது உண்மையாகாது. ஆதலால் நீ அதை கண்டு கொள்ளாதே. உனக்கு பக்கபலமாக என்றும் நான் இருப்பேன். உனக்கான எல்லா வெற்றியும் தேடித் தருவேன். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் நான் துணை நிற்பேன்!!!

ஸ்ரீ சாய் சத்சரித்திரம்


ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். 
ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்