Sunday, May 31, 2015

ஸ்ரீ சாயி நாதனின் கருணை!
நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பதவி உயர்வில் வெளியூருக்கு மாறுதல் செய்யப்பட்டேன். அங்கு பணியில் சேர்ந்த பிறகு நான் சந்தித்த இன்னல்கள் பல. நிறுவனத் தலைவருக்கு என்னைக் கேலி கிண்டல் செய்வதே பொழுதுபோக்காகிவிட்டது.
நான் இந்த நிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன். தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூட முடிவு செய்தேன். ஆனால் சாயி நாதன் தனது அதிஅற்புதத்தை நடத்தி அந்த நிறுவனத் தலைவரை, நான் பணியில் சேர்ந்த ஒரே மாதத்தில் வேறு நிறுவனத்திற்கு மாறுதல் செய்து விட்டார்கள்.
பின்னரும் அந்த நிறுவனத்தில் புதியதாகப் பணியில் சேர்ந்த நிறுவனத் தலைவராலும், வேறு ஒருவராலும் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏதோ ஒரு சமாதானத்தை தெரிவித்து விடுமுறையில் சென்றுவிட்டேன்.
நிறுவனத் தலைவர் என்னைப் பற்றி தலைமையக உயர் அலுவலருக்குக் கடிதம் அனுப்பி என் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துவிட்டார்.
நான் தலைமையக உயர் அலுவலரை சந்தித்து என் நிலையை எடுத்துக் கூறினேன். அவர் என் மீது கோபப்பட்டு, உனக்கு காலதாமதமாகத்தான் வேலை வழங்கஇயலும் எனத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் நான் சாயிநாதனை மனதார வேண்டிக்கொண்டேன். சாயி நாதா! எனக்காக எத்தனையோ அற்புதங்களைச் செய்திருக்கிறாய்.. எனக்கு மீண்டும் விரைவில் வேலைக் கிடைக்கவும், விடுமுறை சம்பளம் கிடைக்கவும் நீதான் வழி செய்யவேண்டும் என்றும், எனக்கு கிடைக்கவேண்டிய இரு மாத சம்பளத்தை கீரப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளப் போகும் பாபா திருக்கோயிலுக்கு அளிக்கிறேன் என்றும், இந்த நிகழ்வுகளை சாட்சியாக  ஸ்ரீ சாயி தரிசனம் இதழில் எழுதுவதாகவும் வேண்டிக் கொண்டேன்.
பெருங்களத்தூர் பாபா கோயிலிலும் வந்து வேண்டிக்கொண்டேன். அங்கு எனக்காகப் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
ஒரு மாதம் கழித்து சாயி அருளால், வேறு ஒரு ஊரில் உள்ள நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. என் மீது குறை தெரிவித்து தலைமையக உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதிய நிறுவனத் தலைவரும் அங்கு நீடிக்காமல் ஒரே மாதத்தில் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்.
எல்லாம்  ஸ்ரீ சாயி நாதனின் கருணையே ஆகும்.
சாயி தாசன்
சுப்பிரமணியபுரம்

பாபா கொடுத்த பிறந்த நாள் பரிசுஎன் பெயர் ஜெயா. எஸ்ஆர் எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறேன். சுமார் ஆறு மாதங்களாக பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து செல்கிறேன்.
பாபா என் அப்பா- என் குரு. எனக்கு எவ்வளவோ அற்புதங்களைச் செய்திருக்கிறார். சமீபத்தில் சிறு நீரகக் கல் பாதிப்பினால் அவஸ்தைப் பட்டேன். கல்லின் அளவு 11 செ.மீ. இருந்ததால் அதற்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஏற்கனவே எனக்கு வேண்டிய ஒருவருக்கு எட்டு செ.மீ. அளவு இருந்த கல்லுக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள்.
அவர்கள் கூட என்னிடம் அறுவை சிகிச்சை செய்துகொள் என வற்புறுத்தினார்கள். நானோ, பாபா நிச்சயமாகக் காப்பாற்றுவார் எனக் கூறி, சாயி வரதராஜன் அப்பா கொடுத்த உதியை தவறாமல் சாப்பிட்டு வந்தேன்.
என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு பெரிய கல், சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிட்டது. நான் முழு அளவில் குணமடைந்துவிட்டேன். பாபாவின் உதியின் மகத்துவத்தை உணர்ந்து ஆனந்தப் பரவசப்பட்டேன்.
இதேபோல என்னால் மறக்கமுடியாத சம்பவம், இந்தப் பிறந்த நாள். பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னரே, பாபாவிடம் அப்பா எனக்கு பிறந்த நாள் வருகிறது. எவ்வளவு வாழ்த்துக்கள் மற்றும் பரிசு வந்தாலும் என் மனம் உங்களிடமிருந்து வரும் வாழ்த்தையும் பரிசையும்தான் எதிர்பார்க்கும் என்று கூறியிருந்தேன்.
இந்த பரிசு விக்ஷயம் பற்றி ஒவ்வொரு நாளும் பாபாவிடம் நினைவுபடு;த்திக்கொண்டிருப்பேன். எனது பிறந்த நாளும் வந்தது. ஈஞ்சம்பாக்கம் பாபா ஆலயம் செல்லவிருந்தேன். ஆனால், என்ன தடையோ ஏற்பட்டு என்னால் அங்கு செல்ல முடியாத நிலையில், பெருங்களத்தூருக்கு வந்தேன்.
கோயில் உள்ளே நுழையும்போதே பாபா சிரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் உணவாக எனக்கு சர்க்கரைப் பொங்கல் தரப்பட்டது. பாபாவைப் பார்த்துவிட்டேன், சர்க்கரைப்பொங்கலும் சாப்பிட்டுவிட்டேன் என்ற திருப்தியில், பாபவின் காலைப் பிடித்து, பாபா, ஏன் இன்னும் எனக்கு பரிசு அளிக்கவில்லை- என்னை ஏமாற்றினீர்கள்? நிச்சயமாக உங்களிடம் பேசமாட்டேன் என்றேன்.
பரிசு கூட வேண்டாம் பாபா, சாயி வரதராஜன் ஐயாவையாவது வரவழையுங்களேன், நான் ஆசி பெற்றுச் செல்கிறேன்!  என வேண்டிக் கொண்டு எழுந்து திரும்பிப் பார்க்கிறேன், என்ன அதிசயம்! சாயி வரதராஜன் ஐயா வருகிறார்!  எனக்கு அவரைப் பார்த்தவுடன் உடனே ஒன்றும் புரியவில்லை. ஓடிச் சென்று அவரை வணங்கி ஆசி பெற்றேன். அவருடன் மற்றொரு சாய் ராம் இருந்தார். இருவருக்கும் இனிப்புகள் வழங்கினேன்.
பிறகு, சாயி வரதராஜன் ஐயா ஆசி வழங்கி, இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எனக்கு வழங்கினார். வாய் மட்டுமே அதை வேண்டாம் எனக்கூறுகிறது. கரும்பு தின்னக் கசக்குமா? அதை வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
பாபாவிடம் சென்று அவரை வணங்கினேன். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க, அவருக்கு முத்தமிட்டுச் சென்றேன். நான் பிறந்த பத்தொன்பது ஆண்டுகளில் இந்தப் பிறந்தநாளை என்னால் மறக்கவே முடியாது.
நிறைய பக்தர்கள் சாயி வரதராஜன் ஐயாவிடம் நூறு ரூபாய் பெற்றேன், முன்னூறு ரூபாய் பெற்றேன் என்று கூறும்போதெல்லாம், எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தாலும் நான் பாக்கிசாலி என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் நம் பாபாவோ, தன் மகளுக்கு எது தேவை, எதில் ஆர்வம் உள்ளது என்பதை ஆராய்ந்து அதை நிறைவேற்றி வைத்தார். அப்போது எனக்கு ஞாபகம் வந்தது்
என் பக்தர்கள் எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அவர்களை சிட்டுக்குருவியின் காலில் கயிறைக் கட்டி இழுப்பதுபோல இழுத்துக்கொள்வேன் என்பதுதான்!
ஐயா கொடுத்த அந்த ரூபாய் நோட்டுகளை நான் பிரேம் செய்து என் பூஜையறையில் வைத்து பூஜித்து வருகிறேன்.
செல்வி. ஜெயா,
எஸ்.ஆர். எம். கல்லூரி, சென்னை

Saturday, May 30, 2015

எந்த மனிதரையும் ஆசிர்வதிக்கிறார்!

சத்சரித அத்தியாயம் பதினொன்றை எவர் பக்தியுடன் படிக்கிறாரோ அவர் எல்லாக்கேடுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்று சத்சரிதம் தெளிவாகக் கூறுகிறது. நமது குருநாதர் சாயி வரதராஜன் அவர்களும் இதை சத்சங்கத்தில் அடிக்கடி குறிப்பிடுவார். அப்படி என்னதான் பதினொன்றாம் அத்தியாயம் சொல்லுகிறது.
எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருப்பின் வெகு விரைவில் கடவுள் காட்சியைக் காணலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறி, அவாவற்றவராகி இறுதியில் உயர்நிலை எய்துவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
சகுண பிரம்மமாக சாயி இருப்பதால் அவரை வழிபடுவது எளிதாகிறது. சகுண பிரம்மத்தை ஒரு குறிப்பிட்ட காலக் கூறு வரை வணங்கினால் ஒழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியடையாது.
நாம் முன்னேறும்போது அது நம்மை வழிபட இட்டுச் செல்லுகிறது. உருவம், யாக குண்டம் தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்கு உரியவை என்றாலும் சாயியே இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்.
சாயி எல்லையற்ற அளவு மன்னிப்பவராகவும், கோபமற்றவராகவும் நேர்மையாளராகவும், மென்மையாளராகவும், சகிப்புத் தன்மை உடையவராகவும், உவமை கூற முடியாத அளவு திருப்தி உடையவராகவும் இருக்கிறார்.
கங்கை நதி, தான் கடலுக்குச் செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட எல்லா  ஜீவராசிகளுக்கும் குளிர்ச்சி அளித்து, புத்தணர்ச்சியூட்டி, உயிரை அளித்து, பலரது தாகத்தையும் தணிக்கிறது.
அதுபோல், சாயி போன்ற புண்ணிய புருக்ஷர்கள் அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் தருகிறர்கள். கிருஷ்ண பரமாத்மாவும் ஞானி எனது ஆத்மா எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம் என்று கூறியிருக்கிறார்.
சச்சிதானந்தம் (சத்து சித்து ஆனந்தம்) என அறியப்படும் இந்த விவரிக்க முடியாத ஆற்றலின் சக்தியே சீரடியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.
பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார். அவர்கள் விரும்பியபடி தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார். சீரடியில் அவர் வாழ்ந்தது போல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார். அவரின் எங்கும் நிறைத் தன்மையை அவரது பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள். இன்றும் உணர்ந்து வருகிறார்கள்.
பக்தர்கள் விரும்பியபடி பாபாவை வழிபட அனுமதித்தார் என்பதற்கு டாக்டர் பண்டிட்டின் வழிபாடு ஒரு உதாரணமாகும். ஒரு முறை தாத்யா சாகேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் பாபாவுக்கு நெற்றியில் சந்தனம் பூசி வழிபாடு செய்தார். அதுவரை பாபாவுக்கு நெற்றியில் சந்தனம் பூச எவரும் துணிந்ததில்லை. மகல்சாபதி மட்டுமே பாபாவுக்கு கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். பின் எப்படி டாக்டர் பண்டிட் செய்தார்?
பாபா அதற்கு விளக்கம் அளித்தார். டாக்டர் பண்டிட் தம்மை அவரது குருவான காகா புராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஷ்வரைச் சேர்ந்த ரகுநாத் மகராஜ் என்று நம்பி, அவரது குருவுக்குச்செய்வது போலவே செய்தார் எனச் சொன்னார்.
டாக்டர் பண்டிட்டும், தமது குருவாகவே பாபா அமர்ந்திருந்ததால் தாம் நெற்றியில் சந்தனம் பூசியதாகவும் ஆமோதித்தார். தற்பெருமை உடையவர்களையும் மாற்று சிந்தனையாளர்களையும் பாபா ஒருபோதும் உடனடியாக அனுமதிக்க மாட்டார். அவர்கள் திருந்துவதற்கும் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பார் என்பதற்கு சித்திக் பால்கே நிகழ்வும் ஒரு உதாரணம்.
சித்திக் பால்கே என்ற முகமதிய பெருந்தகையை பாபா ஒன்பது மாதங்கள் வரை மசூதியில் நுழைய அனுமதிக்க வில்லை. பால்கே மிகவும் வருத்தமுற்று சாமா மூலம் பாபாவை தரிசிக்க முயன்றார்.
பாபாவும் கடைசியில் அவரை, ஏன் உன்னை தற்பெருமைப் படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப் போல் பாவனை செய்து கொண்டிருக்கிறாய். குர்ஆனை நீ இவ்விதமாகவா கற்றுணர்ந்தாய்? உனது மெக்கா தலயாத்திரை குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? அதனால்தான் என்னை நீ அறியவில்லை என்றார்.
பால்கே தனது தவறை உணர்ந்தவுடன் பாபா ஏற்றுக்கொண்டார். மனிதர்களின் தவறுகளை, பெருமை களை பாபா சரி செய்வது போல் பஞ்சபூதங்களின் மேலும் கட்டுப்பாடு வைத்திருந்தார்.
பயங்கரமான புயல் வீசி, மேகங்கள் கர்ஜித்து இடி மின்னல், மழை வெள்ளமாய் சீரடி தத்தளித்து மக்கள், ஜீவ ஜந்துக்கள் யாவும் அவதியுற்று அல்லல் பட்டபோது பாபா மசூதியிலிருந்து வெளி வந்து புயலை அடக்கி மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தார்.
அதே போன்று மசூதியில் துனியில் நெருப்பு பிரகாசமாக எரிந்தபோதும் பாபா அதன் ஜுவாலையை அடக்கி மக்களுக்கு நிம்மதியைத் தந்தார். எனவே, எல்லையற்ற சக்தியாகத் திகழும் பாபா, தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதி அடைந்த எந்த மனிதரையும் ஆசீர்வதிக்கிறார். அவர்களை தண்டிக்காமல், மென்மையாகத் திருத்தி வழி நடத்துகிறார் என இந்த அத்தியாயம் வலியுறுத்திக் கூறுகிறது.
தினந்தோறும் இந்த அத்தியாயத்தை படியுங்கள், நிம்மதியைப் பெறுங்கள்.
ஜெய் சாய் ராம்

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...