Showing posts with label ஸ்ரீ சாயிபாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயிபாபா. Show all posts

Wednesday, June 29, 2016

அது இதுதான்:

2015 ஜனவரி சீரடி யாத்திரை வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. 98 பேர் கொண்ட குழுவுடன் பாபாவை தரிசித்தது மட்டுமல்ல, ஒரு சிறிய அளவு பிரச்சினை கூட எழாமல் அவர்களாக வரிசையை உருவாக்கிக் கொண்டு ஒத்துழைப்புத் தந்து, விட்டுக்கொடுத்து புனித யாத்திரையாக இந்தப் பயணத்தை மாற்றினார்கள். இந்தக் குழுவில் வந்தவர்களுள் பலர் என்னுடன் ஏற்கனவே பலமுறை பயணித்தவர்கள்.
பாபாவை மட்டுமே தரிசிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் வந்தவர்கள். நம்முடைய அன்புக்குரிய சாரதா அம்மா உட்பட சிலர் ரயிலில் அமர்ந்து சத்விக்ஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தபோது, அழகிய குரலில் பாடிக்கொண்டு வந்த ஒரு முஸ்லிம் பாடகனை அழைத்து அமரச் சொன்னேன்.
இன்னும் சற்று பாடுமாறு நான் விரும்புவதை உணர்ந்துகொண்ட அவன், என் அருகே அமர்ந்து உரத்தக் குரலில் பாடினான். கேட்க இனிமையாக இருந்தாலும் பொருள் தெரியாது அல்லவா? சாரதா அம்மாவிடம் இதற்கான பொருளை விசாரித்தபோது, பாடலை மொழியாக்கம் செய்து கூறினார்.
அது இதுதான்:
உன்னை மட்டுமே நம்பிச் செயல்படு. வீட்டில் கைகட்டி உட்கார்ந்திருந்தால் உனக்கு எதுவுமே கிடைக்காது. இப்போதுள்ள கலியுகத்தில் தினமும் ஐந்து நிமிடங்களாவது அல்லாவைத் தொழ வேண்டும். அப்படி எவன் ஒருவன் செய்கிறானோ அவனை அல்லா கண்டிப்பாகக் காப்பாற்றுவார்.
உனக்கு எத்தனை சகோதரர்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் அனைவரும் உனது அன்புக்காக யாரும் காத்திருப்பது இல்லை. சொத்துக்காகவே இருப்பார்கள். அந்தப் பணமும் சொத்தும் இல்லாவிட்டால் எவனும் உன்னைத் தீண்டமாட்டான். கஷ்ட காலத்தில் உன்னிடம் வரமாட்டான். உதவமாட்டான். இதுதான் மாயை.
ஆகவே, எல்லா நேரமும் அல்லா மீது பக்தி வைத்து அவரைக் கூப்பிட்டால் அவர் நம்மோடு உற்ற உறவாக இருப்பார்.
இந்தக் காலத்தில் மாதா பிதாகூட சொத்துள்ள பிள்ளையை மட்டுமே அண்டியிருப்பார். ஆகவே, அம்மா அப்பா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மகன் மகள் யாவும் மாயை.
உன்னுடைய கடமையைச் செய்துகொண்டு அல்லாவை நினைத்தபடி போய்க்கொண்டே இரு. அவன் உன் கூடவே இருப்பார். இதுதான் கலியுகம்.
ரயில் பாடகனுக்கு நூறு ரூபாய் அன்பளிப்பு செய்து அனுப்பினேன்.. உறவுகளின் நிலையை நினைவு படுத்தியமைக்காக!

Monday, June 27, 2016

தைரியமாக இரு….


என் ஆன்மக் குழந்தைகளே!
சாயி பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் தைரியம். யார் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தைரியம் கைகூடும்.
பிரச்சினையில்லாமல் யாரும் வாழவில்லை, அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல்தான் நம்மில் பலர் சிக்கித் தவித்து வருகிறோம்.
இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி, கடைசி நேரத்தில் மீண்டு எழுந்து இறைவன் அருளால் சுகமாக வாழ்கிற சாயி பக்தர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அது பிறரது வாழ்க்கை மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
நம்முடைய பக்தி முதலில் நம்மையும் நமது வாழ்வையும் மாற்றுவதாக இருக்கவேண்டியது அவசியம். இந்த மாற்றம் ஏற்பட்டால் பிறகு தாமாக நமக்கு ஆன்மிக ஞானம் தோன்றும்.
தைரியத்தை இழந்துவிடாதீர்கள், நாம் அமர்ந்து யோசித்து விவாதித்து ஒருவர் பிரச்சினையை இன்னொருவர் எப்படி தீர்க்கலாம் என்பதற்கான வழியை ஆராயலாம். லவுகீகத்தில் தோற்பவர் ஆன்மிகத்திற்குள் நுழைவார்கள் என்பது பழைய கதை. இப்போது வேறுவிதமாக தவறான வழிகளில் அவர்கள் ஈடுபட்டுவிடுகிறார்கள். லவுகீகத்தில் வெற்றிபெற வேண்டும். அதுதான் ஆன்மிகத்தில் நம்பிக்கை தோன்றுவதற்கான முதல் படி. இதை நாம் பெறுவதற்காக பிரச்சினையான நேரத்தில் அமர்ந்து இறைவன் நாமத்தை இடைவிடாமல் தியானம் செய்யுங்கள். அப்போது நமது பாரத்தை இறைவன் ஏற்றுக்கொண்டு பிரச்சினையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் கடன் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்காக மாதந்தோறும் சத்திய நாராயண விரத பூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிரமம் பாராமல் கலந்து கொண்டு பலன் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
அன்புடன்
ஸ்ரீ சாயி வரதராஜன்

Saturday, June 18, 2016

உனக்குச் செல்வம் வந்து சேரும்!



இறைவன் எப்போதும் நமக்கு அருள் செய்வதற்குத்தயாராகவே இருக்கிறார். நாம் தான் அதைப் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை. நமது செயல்களால் அவருடைய அருளைப் பெறும் தகுதியை இழந்துவிடுகிறோம்.
ஒரு கஞ்சன் இருந்தான், அவனிடம் சிவன் கோயில் கட்ட பணம் தந்தார்கள். அதை சரிவர அவன் செலவிடவில்லை. அவனது மனைவி கனவில் தோன்றிய சிவன், நீயாவது எனக்குக் கோயில் கட்டு, தேவையானதை நான் தருகிறேன் என்று கூறினார்.
அப்பெண்மணி தனது கனவு பற்றி கணவரிடம் தெரிவித்தாள். அவனோ இது சரியானதல்ல என்று எடுத்துக்கூறியும் கேளாமல் கோயில் கட்டும் பணியில் இறங்கத்தீர்மானித்து, தனது வீட்டில் தனக்கு சீதனமாகத் தந்த நகை அனைத்தையும் விற்று கோயில் கட்ட முன் வந்தாள்.
இந்த விஷயத்தை அறிந்த கணவன் ஒரு நல்ல நாளில், மனைவியின் நகைகளை தானே எடுத்துக்கொண்டு அதற்கு ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு செய்து பணத்தை அளித்தான்.
அந்த நிலம் டுபகி என்ற பெண்ணுடையது. அவள் இதை பணக்கார கஞ்சனிடம் இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தாள். இந்த நிலத்தைத் தன் மனைவி பெயருக்கு எழுதிக் கொடுத்து இதை சிவனுக்கு அர்ப்பணி என்றான்.
சிறிது காலத்தில் கஞ்சன், அவன் மனைவி, நிலத்துக்குச் சொந்தக்காரி யான டுபகி ஆகியோர் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்கள்.
மறுஜென்மத்தில் கஞ்சன் வீர பத்ரப்பா என்பவனாக பிறக்க, அவன் மனைவி கவுரி என்ற பெயருடன் அந்த சொத்துக்கு பாத்தியதை உள்ள குடும்பத்தில் பிறந்தாள். நிலத்தை ஏமாந்த டுபகி சனபசப்பா என்ற பெயரில் பிறந்தாள்.
கவுரியை வீர பத்ரப்பா திருமணம் செய்துகொண்டான். அவன் பிறவி ஏழையாக இருந்தான். கவுரி சாயி பக்தை. இதனால் ஏழையான வீர பத்ரப்பா சாயியை சரண் அடைந்து தனது கஷ்டத்தைப் போக்க வேண்டி நின்றான். அவனை ஆசுவாசப்படுத்தி, பாபா ஆசிர்வதித்தார்.
பாபாவின் ஆசியால் கவுரியின் நிலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை போனது. வாங்கியவர் பாதிப் பணம் ரொக்கமாகவும் மீதிப் பணத்தை இருபத்தைந்து ஆண்டுகளாக வட்டியும் முதலும் ஆகவும் தருவதாக ஒப்புக்கொண்டார்.
பணம் முழுவதும் கவுரிக்குச் சேர வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்ட போது, சனபசப்பா எழுந்து, சிவனுக்கு எது சமர்ப்பணம் செய்யப்பட்டாலும் அதன் மீது உரிமை உள்ளவன் நான். எனவே, எனக்கு வருட வட்டியில் பாதி தரவேண்டும் என்றான்.
வீரபத்ரப்பா எதையும் தரத் தயாராக இல்லை. எனவே சண்டையிட ஆரம்பித்தார்கள்.
பாபா சண்டையை விலக்கி, சனபசப்பாவுக்கு பாதி வட்டியைத் தருமாறும், வீரபத்ரப்பாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதைக் கேட்ட வீரபத்ரப்பா பாபா மீது கோபப்பட்டான். மொத்த பணத்தையும் பாபாவே பிடுங்கிக் கொள்ள நினைக்கிறார் என அவரிடம் நேரடியாக சண்டையிட்டான். பணத்தைக் கேட்டு வந்தால் சனபசப்பாவைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான். மிரட்டி வாழ்ந்த வீரபத்ரப்பா நாகமாகவும், பயந்து வாழ்ந்த சனபசப்பா தவளையாகவும் பிறந்தார்கள் என்பது சத்சரித்திரத்தில் பாபா சொன்ன கதை.
நாம் விஷயத்திற்கு வருவோம். கணவனோ மனைவியோ உங்களில் யாரேனும் ஒருவர் பூர்வத்தில் பாபாவுடன் தொடர்பில் இருந்தவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். பூர்வ ஜென்மத் தொடர்பு இன்றி யாரும் சாயி பக்தராகமுடியாது.
பூர்வ வினையின் காரணமாக கஷ்டத்தை அனுபவித்து வருகிறீர்கள். இதை நீக்க அவரிடம் வேண்டுதல் வைத்துள்ளீர்கள்.
நிச்சயமாக நீங்கள் எதிர்பாராமல் பலன் தருவார் பாபா. இப்போது அதற்கான நேரம் வந்து விட்டது என்று உறுதி தந்திருக்கிறார்.
இந்தப் பணமும் உங்கள் மனைவி வாயிலாக வரப்போகிறது என்பதில் தெளிவாக இருங்கள். மனைவிக்கு வேண்டியவர் அல்லது அந்த சொத்தில் பாத்தியதை உள்ள யாரோ ஒருவர் உங்களிடம் பங்கு கேட்கப் போகிறார்.
உங்கள் கஷ்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றால், அவர் கேட்கிறதைத் தந்துவிட்டு, மீதம் உள்ளதை மனைவியின் அனுமதியோடு செலவு செய்யவோ, கடனை அடைக்கவோ முயற்சி மேற்கொள்ளுங்கள்.
பாபா தரக்கூடியதை பாபாவுடையது என்ற எண்ணத்துடன் அனுபவிக்க வேண்டும். பணம் வர வர மனம் மாறிவிடக்கூடாது. ஒருவேளை மாற நேர்ந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பணத்தை சம்பாதி!
ஒருவனுக்குச் சிறப்பு தருவது பணம். பணம் இல்லாதவனைத் தாயே நிந்திப்பாள், தந்தை மகிழ்ச்சியடையான், உடன் பிறந்தவர்கள் பேசமாட்டார்கள், பணியாளன் கோபிப்பான், மகன் அப்பா வழி நடக்கமாட்டான், மனைவி தழுவமாட்டாள். தன்னிடம் பணம் கேட்பான் என பயந்து நண்பனும் ஒதுங்குவான். ஆகவே, என் குழந்தாய்! பணத்தை சம்பாதி, தேவைக்கும் தானத்திற்கும் போக, நீ மீதியை பத்திரப்படுத்து. அது உனது மரியாதையை அதிகப்படுத்தும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...