Saturday, July 1, 2017
உதி உன் விதியையே மாற்றும்.
Tuesday, June 27, 2017
சாயியின் உதி
Friday, June 13, 2014
சித்தம் சுத்தமடைய...
சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களைச்செய்யாது சித்தம் தூய்மை அடையாது. சித்தம் தூய்மை அடையாதவனால் ஞானத்தை சம்பாதிக்க முடியாது.
ஞானம் அடைவதற்கு மூலக் காரணம், கர்மங்களைச் செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். பூஜை, உபாசனை போன்ற நித்திய கர்மாக்களையும், சிறப்பு நாட்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனத்திலுள்ள மலத்தைக் கழுவி தூய்மை அடையும் ஒரே வழி..
சாயி சரித்திரம் அத்தியாயம் அத்: 44-45
Tuesday, June 10, 2014
புனிதத்தீ!
கோடைகாலமோ, குளிர்காலமோ, இலையுதிர்காலமோ, வசந்தகாலமோ, மழைகாலமோ- ஆண்டு முழுவதும் மசூதியில் பாபா துனியை (புனிதத் தீ) வளர்த்து வந்தார்.
பாபாவின் மனோதிடம் விசித்திரமானது! அக்கினிஹோத்திரம் செய்யும் பிராமணர்களின் வேள்வித்தீயைப் போன்று, பாபாவின் துனி இரவு பகலாக அணையாமல் எரிந்துகொண் டிருந்தது.
துனிக்காகவே பாபா விறகுக்கட்டுகள் வாங்குவார். சபா மண்டபத்தின் சுவரை ஒட்டி, விறகு குவியல் குவியலாக வைக்கப்பட்டிருக்கும்.
வாரச்சந்தை நாளின் நிலவரத்தை அனுகூலமாக உபயோகித்து பாபா விறகு வாங்கிச் சேமித்து வைப்பார். அந்த விறகு குவிய¬ல் மீதும் அண்டை அயலார் கண் வைத்தனர். சுயநலம் கருதாதவர் இவ்வுலகில் அரிதினும் அரிதன்றோ!
''பாபா, அடுப்பெரிக்க ஒரு குச்சியும் இல்லை; இன்று சமையல் செய்யமுடியாது போலிருக்கிறது” என்று புனைந்துரைப்பர். அவர்களுக்கும் அவ்விறகில் கொஞ்சம் பங்கு கிடைக்கும்.
சுயநலவாதிகள் இயல்பாகவே துஷ்டர்கள். சபாமண்டபத்திற்குக் கதவு ஏதும் இல்லாதது அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்தது. வறியவர்கள், வஞ்சகர்கள், இருசாராருமே சமமாகப் பயனடைந்தனர்.
நாம ஜெபம் நிச்சயம் பலன் தரும்
ஒருவன் படிக்காமல் முரடனாக வளர்ந்தான். இதைக் கண்டு வருந்திய தாயார், அவனிடம் சித்ர குப்தாய நம என தினமும் கூறு என அறிவுரை கூறினார். அவன் பொல்லாங்கு செய்தாலும் தினமும் சித்ர குப்தாய நம என்பதை மறக்க மாட்டான். இப்படியே 52 வயதானது.
அவனது ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. சித்ர குப்தன் அவனது ஏட்டைப் பார்த்தார். சித்ர குப்தாய நம் என்று சொன்னதைத் தவிர, வேறு எந்த நன்மையும் அவன் செய்யாததை அறிந்தார்.
தன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தவனுக்கு நன்மை செய்ய நினைத்து, அவன் கனவில் சென்று, ”மகனே, நீ என் பெயரை உச்சரித்ததைத் தவிர, வேறு நல்ல காரியத்தைச் செய்யவில்லை. அதனால் உனக்கு நரகம் கிடைப்பது உறுதி. ஒரு வாரத்தில் இறக்கப் போகிறாய். அதற்குள் உன் நிலத்தில் ஒரு குளம் வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால் மூணே முக்கால் நாழிகை உனக்கு சொர்க்க வாசம் உண்டு. பல மாடுகள் நீர் குடித்தால் உன் சொர்க்க வாசம் நீளும். மாடுகளின் உடலில் தேவர்கள் குடியிருக்கிறார்கள், அந்தப் புண்ணியத்தையும் சேர்த்துப் பெறலாம். நீ இறந்த பிறகு யமன் சொர்க்க நரகத்தில் எது முதலில் வேண்டும் எனக் கேட்டால் சொர்க்கம் எனக் கூறு” என்று அறிவுரைக் கூறி மறைந்தார்.
முரடனும், சித்ரகுப்தன் கூறியது போல கிணறு வெட்டினான். அவன் செய்த பாவத்தால் நீர் வரவில்லை. ஆறு நாட்கள் முடிந்துவிட்டன. மறுநாள் அவன் இறக்கப் போகும் நிலையில் ஒரு சிறு ஊற்று வந்தது.
சித்ரகுப்தன் மாடாக வந்து, குளக்கரையில் நின்று ”ம்மா” என்று குரல் கொடுத்தார். அதைக் கேட்டு பல மாடுகள் அங்கு வந்தன. ஒரு மாடு நீர் குடித்தது. அவ்வளவுதான் தண்ணீர். அதற்குள் நெஞ்சு வலியால் அவன் இறந்து போனான்.
யமன் அவனது பாவ புண்ணியத்தைப் பற்றி சித்ரகுப்தனிடம் கேட்டார். ”இவன் துராத்மா. ஒரே ஒரு புண்ணியம் மட்டும் செய்திருக்கிறான், சாகும் முன்பு ஒரு குளம் வெட்டியிருக்கிறான். அதில் ஒரே மாடு தண்ணீர் குடித்திருக்கிறது” என்றார்.
”இந்த ஒரு புண்ணியத்திற்கு மூன்றே முக்கால் நாழிகை சொர்க்கம் உண்டு. உனக்கு முதலில் சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா?” என முரடனிடம் கேட்டார்.
அவன் சொர்க்கம் என்றான்.
சொர்க்க வாசம் அனுபவிக்க ஆரம்பித்த அதே நேரத்தில் அவன் வெட்டிய குளத்தில் நிறைய நீர் சுரக்க ஆரம்பித்தன. குளக்கரையிலிருந்த மாடுகள் அனைத்தும் நீர் பருக ஆரம்பித்தன. இதனால் அவனது புண்ணியக் கணக்கும் ஏறியது. சொர்க்கத்திலேயே சுகமாக இருக்கலானான்.
Monday, June 9, 2014
காந்தி தரிசித்த மகான்!
உபாசினி மகராஜ் பாபாவால் விரும்பப்பட்டவர். பலவேளை பட்டினி (உபவாசம்) இருந்து, வேத பாராயணம் செய்ததால், காசிநாத் என்கிற அவர், உபாசினி பாபா என அழைக்கப்பட்டார்.
உபாசினி பாபா, தன்னை எப்போதும் உயர்வாக நினைத்துக்கொள்வார். பிறரிடம் அதிகமாகப் பேசமாட்டார், சேரவும் மாட்டார். பாபாவும் அவர் தனித்திருப்பதையே விரும்பினார். பாபா அவர் மீது அதிக அன்பு கொண்டதைக் கண்டு சகபக்தர்களுக்குப் பொறாமை. சில பல தொல்லை தந்தனர்.
ஒருமுறை, சாப்பாட்டு விடுதி நிர்வாகி, பலர் மத்தியில் உபாசினியிடம், ”நாளை முதல் நீர் இங்கு சாப்பிட வர வேண்டாம்” எனக் கூறிவிட்டார்.
கோபம் கொண்ட உபாசினி ”இன்று மட்டும் எதற்கு சாப்பாடு?” என்று கூறி, வெளியே சென்றுவிட்டார். அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசியால் வாடினார். சில சமயம் சொற்ப உணவு கிடைக்கும். பல சமயம் பட்டினியாக இருப்பார்.
இந்த நிலையைக் கண்டு இவரை கேலி செய்வதற்காகத்தான் பக்தர்கள் இவரை உபாசினி என்று அழைத்தார்கள். பட்டினி கிடந்ததால், மூலம், பவுத்திரம், மலச்சிக்கல் என பலவித உபாதைகள் வந்தன. இவை தன்னைப் பக்குவப் படுத்தவே பாபாவால் தரப்பட்டன என்பதை பின்னாளில் உணர்ந்துகொண்டார் உபாசினி.
மற்ற பக்தர்கள் பாபா வெளிச்சத்தால் வெளியே தெரிந்தார்கள். ஆனால் உபாசினி மகராஜ் மட்டும், சகூரி என்ற இடத்திற்கு சென்று, மிகப் பெரிய அறக்கட்டளை நிறுவி மிகப்பெரும் சக்தியாக சேவை செய்தார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் இவரை மகாத்மா காந்தி தரிசித்து சென்றிருக்கிறார்.
வித்தியாசமான அணுகுமுறை, முற்போக்கு சிந்தனை ஆகியவை இவருக்குப் பெரிய அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தின. இதனாலும் இவர் இன்னலுக்கு ஆளானார். அப்படியிருந்தும், இன்றும் அவரது சமாதி புனிதமானதாக வணங்கப்படுகிறது. அவருக்கென பக்தர்கள் உள்ளனர்.
என் இதயத்தில் இருக்கிறாய்!
சாயி பக்தர் ரேகே, 1922 ல் மாதவநாத் மகராஜ் என்ற சத்குருவை சந்தித்தபோது, சாயி வடிவில் அவரைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரை எடுத்து, அருகில் அமர்த்திய மாதவநாத், உன்னை பாபா தன் செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டபோது, நானும் அங்கிருந்தேன் என்று கூறி, அவர்களிடையே நடந்த உரையாடல்களையும் எடுத்துக்கூறினார்.
பாபாவுக்கு எண்ணெய்த் தேய்த்து குளிப்பாட்டும் சேவையை ரேகே செய்வார். தனக்கும் அவ்வாறே எண்ணெய்த் தேய்த்து குளிக்கவைக்க வேண்டும் என்று மாதவநாத் கேட்டுக்கொண்டார்.
இதைக் கண்ட அவரது பக்தர் கள், தங்களிடம் ரேகே எத்தகைய இடத்தைப் பெறுகிறார் எனக் கேட்டார்கள். உடனே மகராஜ், ”நீங்கள் யாவரும் என் அருகில் இருக்கிறீர்கள். ஆனால் இவனது இடமோ இங்கே” என தன் இதயத்தைக் காட்டினார்.
அவர் ரேகேயிடம், உலகத்தில் மிகச்சிலருக்கே கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமான பிரேம சாகரம் உனக்குக் கிடைத்திருக்கிறது. பாபா உன் அன்னையானால் நான் உனது வளர்ப்புத் தாய் என்று கூறினார் மகராஜ்.
Sunday, June 8, 2014
தலைவலிக்கு மருந்து!
1915 ம் ஆண்டு தாராபாய் என்ற அம்மையார் கொடிய தலைவலியால் அவதிப்பட்டார். எந்த வைத்தியத்திற்கும் பலன் கிடைக்கவில்லை. இறந்துவிடுவது ஒன்றுதான் வலிக்கு நிவாரணம் என நினைத்த தாராபாய், இறப்பதாக இருந்தால் இங்கு ஏன் இறக்க வேண்டும்? பாபாவின் முன்னால் சீரடியில் இறப்பது நல்லது எனத் தீர்மானித்து சீரடிக்குப் புறப்பட்டார்.
கோபர்கான் அருகில் வந்ததும், கோதாவரி நதியருகே வண்டியை நிறுத்தச் சொல்லி, எப்படியோ சாகப் போகிறோம், கோதாவரி தீர்த்தத்தில் தலை மூழ்கினால் புண்ணியமும் கிடைக்கும், குளிர்ந்த நீர் பட்டு தலைவலி அதிகமாகி இறப்பும் சீக்கிரம் வரும் என அந்த அம்மாள் நினைத்து, தண்ணீரில் மூழ்கினார்.
தலைவலியோடு மூழ்கி எழுந்த தாராபாய்க்கு ஆச்சரியம்! இத்தனை காலமாக அவளை வாட்டியெடுத்த தலைவலி முற்றிலுமாக குணமடைந்துபோனது. அதன் பிறகு வரவேயில்லை. பாபாவின் அதிசய சிகிச்சையை நினைத்துப்புல்லரித்தார்.
கால் வலிக்கு மருந்து!
இடுப்பு வலி தாங்காமல் துடித்த ஒருவன் சாயி தரிசனத்திற்கு வலியோடு வந்திருந்தான். அப்போது, பாபா, தன்னுடன் இருந்தவர்களிடம் எனக்கு தாங்க முடியாத கால் வலி. லெண்டித் தோட்டத்திலுள்ள பசுந்தழைகளை நன்கு நெருப்பில் வாட்டி, வலிக்கும் பக்கத்தில் போட்டால் வலிபோய் விடும் என்றார்.
சோற்றுக் கற்றாழையா? என்றார்கள். ஆம்! அதைக் கொண்டுவந்து, இரண்டாகப் பிளந்து தீயில் நன்கு வாட்டி, வலிக்கும் இடத்தில் போட்டால் வலி போய் விடும் என்றார் பாபா. இந்த வைத்தியத்தைக் கையாண்டதும் நோய் குணமானது.
பாபா மஹா பரோபகாரி
பாபா மஹா பரோபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிப்பேன்? வெளிப்பார்வைக்கு உக்கிரமாகத் தோன்றிய போதிலும், உள்ளே இளகிய மனமுடையவர்.
அவருடைய பெருமை அளவிடமுடியாதது. தன்னுடைய அஹம்பாவத்தை விடுத்து, வாக்கு அவருடைய பாதங்களைப் பணிந்தால்தான் பெருமையை விளக்கும் சக்தியைப் பெறும்.
இறைவன் இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதை நிரந்தரமாக உணர்ந்தவரால் யாரை விரோதியாகப் பார்க்க முடியும்?
சிருஷ்டியனைத்தையும் பத்துத் திசைகளையும் நமக்கு முன்னேயும் பின்னேயும் இறைவன் வியாபித்திருக்கும்போது, யார்மீதும் வக்கிரமான பார்வை அவருக்கு வருத்தமளித்தது.
தம்மளவில் பூரணமான துறவியாக இருந்தபோதிலும், பக்தர்களுக்கு போதனையளிப்பதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் இல்லறத்தாரைப் போல நடந்துகொண்டார்.
ஓ, இந்த மஹாத்மாவின் தன்னடக்கந்தான் என்னே! அதை விவரித்தால், கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். கேட்டால், பக்தர்களின்மீது அவருக்கிருந்த அன்பும் அவதார நோக்கம் நிறைவேறியதும் அறியப்படும்.
தீனர்களிடம் அவருக்கிருந்த தாயன்பு இணையற்றது; அவர் நைச்சிய பாவத்தையே (அடியார்க்கும் அடியேன் பண்பையே) விரும்பி நாடினார். இதைத் தெளிவுபடுத்தக் கோடானுகோடி கதைகள் சொல்லமுடியும்.
Saturday, June 7, 2014
எது முக்கியம்?
கடவுள் பெயரால் குழந்தைகளைப் பட்டினி போடுகிறோம். குழந்தை அழுதால் பூஜை நேரத்தில் இப்படி அழுது தொலைக்கிறதே என சலித்துக் கொள்வோம். ஆனால், பாபா என்ன செய்தார் என்று பாருங்கள்.
சாயி பக்தர் பிரதான் அவர்களின் மனைவி ஒரு சமயம் சீரடியில் பாபாவுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். திடீரென பாபா, ”பூஜையை நிறுத்திவிட்டு, விடுதிக்குப் போ!” என்றார்.
அங்கு சென்று பார்த்தபோது, அவளது குழந்தை பாபு அழுதுகொண்டிருந்தான். அவனை சமாதானப்படுத்திவிட்டு, மசூதிக்கு திரும்பினாள் அந்த அம்மாள். இப்போது பூஜை செய் என்றார் பாபா.
Friday, June 6, 2014
நான் உன்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!
எல்லாம் போயிற்று! பூமியே வீடு, வானமே கூரை என்ற நிலைக்கும் வந்தாயிற்று! இனி என்னிடமிருந்து பறிப்பதற்கு என்ன இருக்கிறது? காப்பதும் அழிப்பதும் உன் பொறுப்பு என்ற முடிவுக்கு வந்துவிட்ட என் குழந்தாய்!
நான் உன்னை விட்டு விலகவும் இல்லை, கை விடவும் இல்லை. எப்போதும் உன்னை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
யாருக்கு நான் அனுக்கிரகம் செய்ய விரும்புகிறேனோ, அவனுடைய உடைமைகள் யாவற்றையும் நான் பறித்துக்கொள்கிறேன் என்பதை உனக்கு உணர்த்தவே இவ்வளவு விஷயங்களைச் செய்து, உன்னை கஷ்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி வந்திருக்கிறேன்.
எனக்கு விருப்பமான நீ, என்னைத் தவிர உனக்கு வேறு கதி எதுவுமில்லை, யாருமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும், என் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனைகள் உனக்கு அளிக்கப்பட்டன.
இதனை அறியாதவர்கள் உன்னை இதற்காக இகழ்ந்தார்கள், அவமதித்தார்கள், பேசினார்கள், மானம் போனதாக கண்ணீர் விட்டாய், தற்கொலை செய்து கொள்ளலாமா என முடிவும் செய்தாய்.
ஆனால், நான் உன்னை இன்று பொறு, நாளை வரட்டும் என ஒவ்வொரு தினத்தையும் தள்ளிப் போட்டுக்கொண்டே வரச் செய்தேன். ஏனென்றால், பிறர் பேசுவதையோ, நினைப்பதையோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
மனம் உடைந்து வேறுவித செயல்களில் ஈடுபடக்கூடாது. மாறாக, எல்லாம் என்னையே சார்கிறது என்பதை நீ உணர்ந்து கொள்ளத்தான்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் திடமனதோடு சகித்துக்கொள்ளப் பழகு. நீ என்னுடைய கண்காணிப்பில் இருக்கிறாய் என்பதை உணர்ந்து கொள்.
அப்படியிருந்தும் உன்னைக்கஷ்டம் தொடர்வதற்குக்காரணம், உன் மனம் சஞ்சலப் படாமல், உறுதியாக என்னைப் பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே கஷ்டமும், துன்பமும் இன்றைக்கு இருந்து நாளைக்கு மறைந்துவிடும். ஆனால் என்னிடம் நீ கற்றுக்கொண்ட நம்பிக்கையும் பொறுமையும் என்றைக்கும் உன்னிடம் உறுதியாக இருக்கும். இவை இருக்கும்போது நீ நினைத்த விஷயங்களை நினைத்தவுடன் பெறலாம்.
நான் உன்னை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!
உன்னால் கடவுளாக இன்றைக்கு வணங்கப்படுகிறேன். நான் கடவுள் என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், அந்த நிலையை மக்களுக்கு உணர்த்துவதற்குள் நான் எவ்வளவு பாடுபட்டேன் என்பதை நினைத்துப் பார்.
பெற்றோரை இழந்து அனாதையாகத் திரிந்தேன். குருவால் தலைகீழாகத் தொங்க விடப்பட்டேன். அவரையே தஞ்சமென நம்புவதற்கு வற்புறுத்தப்பட்டும், தள்ளப்பட்டும் வாழ்ந்தேன். என் குரு என்னை விட்டுச் சென்ற பிறகு பாழடைந்த மசூதியில் தங்க வைக்கப்பட்டேன்.
பன்றிகளுக்கும், நாய்களுக்கும் மத்தியில், நாற்றத்தோடும், சேறு சகதிகளோடும் எனக்கு குடியிருப்பு வழங்கப்பட்டது. பிள்ளைகளும், பிறரும் என்னை கல்லால் அடித்தார்கள்.
நான் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டேன்.. இருட்டிலிருந்து வெளிச்சத்தைப்பார்க்க, எண்ணெய்கூட இரவலாகக் கேட்டேன், ஆனால் மறுத்தவர்கள் தான் அதிகம்.
பசியோடும், தாகத்தோடும் எத்தனை நாட்கள் காடுகளில் திரிந்திருப்பேன், எத்தனை நாட்கள் உடையின்றி தவித்திருப்பேன்.. கொஞ்சம் யோசித்துப்பார்.. இவற்றையெல்லாம் நான் சகித்துக்கொண்டு என் குருவின் பெயரையே இறை நாமமாக நினைத்து தியானம் செய்து வந்ததால்தான் இன்று கடவுள் என போற்றப்படுகிறேன்.
ஒன்றை இழக்காமல் வேறொன்றைப் பெற முடியாது என்பார்கள். நானும் இதற்கு விதி விலக்கு அல்ல. நீ எந்த ஒன்றையும் இழக்காமல் மேலும் மேலும் கொடுப்பதற்காகவே, இன்றைக்கு உன்னிடமிருப்பதை நான் எடுத்துக்கொண்டு, ஒளித்து வைத்திருக்கிறேன். இதை நன்றாகப் புரிந்துகொள்..
நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை நான் புறம் தள்ளுவது இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான்..
நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை.
அதேபோல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்.
யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால், மேம்போக்காக வேண்டுகிறார்கள்.
எந்த வெள்ளம் புரண்டுவருகிறதோ அந்த வெள்ளம் வழிகளை உண்டாக்குகிறது. எங்கே நீர் வரத்து இல்லையோ அங்கே வழிகள் உண்டாவதில்லை. இதுதான் கண்ணீருடன் வேண்டுகிற வேண்டுதலுக்கும், கடமைக்காக வேண்டுகிற வேண்டுதலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்.
என்னிடமிருந்து பறித்துக்கொண்டாயே எனக்கேட்டு அழாதே.. நீ என்னைப் பற்றிக் கொண்டு என்னிடமிருக்கிறாயே! நான் என்ன பேறு பெற்றவன் என எண்ணி அழுது என்னைப் போற்று..
என்னை வணங்குவதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும், பிறர் பாராட்ட நடந்து கொள்வதையும் தவிர்த்துவிடு.. நான் இதை விரும்புவதில்லை. வெளிப்படையான ஆடம்பர வழிபாட்டுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை.
காரணம், அதைச் செய்வதற்கான பலனை உடனே அடைந்துவிட முடியும். அதற்கு மேல் பலனை எதிர்பார்க்க முடியாது அல்லவா? ஆத்மார்த்தமாக - இதயத்திற்குள் என்னை குடியேற்றி, அங்கே என்னை வழிபடு. அப்போது உன் மனதும், செயலும் யாருக்கும் தெரியாது.
அனைத்தும் ரகசியமாக இருப்பதால், நானும் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன். நான் விரதமிருக்கிறேன் என்று நாலு பேருக்கு முன்னால் சொல்லவேண்டாம். அதனால் என்ன பலன் கிடைக்கும்? உனது விரதம் உன்னோடு இருக்கட்டும்.. அப்போது அதை பாராட்டி, பெருமிதப்படுவேன்.
என்னைப் போற்றுகிற அஷ்டோத்திரம் உனக்கு அத்துப்படியாக இருக்கலாம்.. பொருள் தெரியாத மந்திரங்களால் என்னைப் போற்றும் போது, எப்படி என் உயர்வை நீ உணர்வாய்? அதனால் இதைக்கூட செய்யாமல் சும்மா இருந்தால் போதும்.. நான் பார்த்துக்கொள்கிறேன்.
சும்மா இருப்பது என்பது..எதையும் செய்யாமல் சும்மா இருப்பதைக் குறிக்காது. மனதை வெறுமையாக்கி வைத்திருப்பது என்று பொருளாகும்.
வெற்றிடமாக வைக்கப்பட்ட மனதில் நான் குடியேறி மகிழ்வேன். நான் குடியேறிய பிறகு, உனக்குத் தன்னம்பிக்கை அதிகமாகும். வாழ்ந்துவிடுவோம் என்று வாழ்வின் மீது பிடிப்பு ஏற்படும்.
நாளை நாளை என தள்ளிப் போனாலும், நிச்சயம் தீர்வு உண்டு என்ற தைரியத்தில் நீ தலை நிமிர்ந்து நடப்பாய்..
என்னால் முடியவில்லை என்று கூனிக் குறுகி நடந்தாலும் உனது பிள்ளைகளை வைத்து உன் காரியத்தை முடித்துத் தருவேன்..
இப்படித்தான் இதற்கு முன்பும் செய்தேன்.. இதோ உனக்கும் செய்கிறேன்.. இனி வரும் காலத்திலும் செய்வேன்..
மனிதர்கள் புகழுமாறு நடப்பதால், உனக்கு எந்த நன்மையும் கிடைக்காது. நான் மெச்சும் படி நடந்தால் அனைத்தும் உனக்குக் கிடைக்கும்.
இவ்வளவு நாட்களாக, உன்னைச் சிறு சிறு விஷயங்களிலும் சரிப்படுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உனக்கு ஒரு ரகசியத்தை கற்றுத்தருகிறேன். அது என்னவெனில், ஒவ்வொரு உடலிலும் மூன்று அடுக்குகள் அதாவது லேயர்கள் உள்ளன.
உடம்புக்கு வெளியே ஒரு அடுக்கு உள்ளது. அதற்கு உள்ளே இன்னொன்று, அதனுள்ளே இன்னொன்று. மேலேயுள்ள அடுக்கு என்னைச் சார்ந்தது. அது மூன்றாவது அடுக்கு தெளிவடையும்போது வெளியே தெரிய ஆரம்பிக்கும். இதைத் தெரிந்தவர்கள் ரெய்கி என்ற பெயரில் இதை முறைப்படுத்துகிறார்கள்.
இந்த உடம்பினுள் இருக்கிறதே, அந்த அடுக்கு உன் பாப உருவம். அது என்ன செய்யும் என்றால், உன்னை இந்த உலகப் பொருளுக்கு அடிமை செய்து வைத்திருக்கும். குரு சொல்வதைக்கேட்காதே, நான் சொல்வதை மட்டும் கேள்..உருப்படுவாய் என தன் போக்கில் உன்னை இழுக்கத்தொடங்கும். இதற்கு நீ மனசாட்சி என்று பெயரிட்டுக் கொண்டிருப்பாய்.
உண்மையல்லாத - நிலையில்லாத அனைத்தையும் நிலை என நம்ப வைக்கும். எல்லாப் பொருளின் மீதும் ஆசைப்பட வைத்து அலைக்கழிக்கும். இதுதான் நரகத்தைத் தீர்மானிப்பது. இதற்குள்ளே இன்னொன்று உள்ளது அல்லவா? அது உன்னை தன்னம்பிக்கையோடு இரு..தெய்வத்தை நம்பு, அவரிடம் சரணடை என்று போதிக்கும்.
நம் கர்மாவால்தான் கஷ்டம் வந்தது. நமது துன்பத்திற்கு நாமே காரணம், யாரையும் நொந்து பிரயோசனமில்லை. எது வந்தாலும் அனுபவிக்கலாம் என அது சொல்லும். ஆனால் அதை கூடுமானவரை, இரண்டாவது அடுக்கு அழுத்தி விடுவதால், அதன் பேச்சை நம்மால் கேட்க முடியாது.
இந்த மூன்றாவது அடுக்கைத்தான் ஆத்மா அல்லது ஆத்மார்த்தம் என்கிறோம். இந்த ஆத்மா இன்பத்தை பற்றியோ துன்பத்தைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது. எது வந்தாலும் ஏற்று நடக்கும் தன்மை படைத்தது.
நீ இதன் பேச்சைக் கேட்டு நடந்துகொண்டால் இரண்டாவது அடுக்கு நாளடைவில் மறைந்து விடும். அதாவது இன்பம் வந்தால் மகிழமாட்டாய், துன்பம் வந்தால் துவளமாட்டாய். இந்த நிலை தொடரும் போது, மூன்றாவது அடுக்கும், உடலுக்கு வெளியேயுள்ள அடுக்கும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும். அதாவது இந்த உடலை தங்கள் வசப்படுத்தி புண்ணிய உடலாக மாற்றும்.
அப்போது, முதலில் நீ எதற்கெல்லாம் ஆசைப்பட்டாயோ, அவையெல்லாம் கேட்காமலே உன்னிடம் நிரம்பி வழியும். பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இந்த நிலை வரும் போது, அனைத்தும் ஆண்டவன் சொத்து என்ற எண்ணத்தில் இருப்பாய். அது உனக்கு ஆசீர்வாதமாக மாறி, சொர்க்கத்தில் உனக்கு நிரந்தர இடத்தை உண்டாக்கும். நான் சொன்னது உனக்குப் புரிந்ததோ இல்லையோ, புரியுமாறு சொல்கிறேன்.
உலகை ஜெயிக்க வழி காட்டுவதாக மனம் சொல்வதை அதிகமாக கேட்காதே. ஆத்மார்த்தமாக என்ன தோன்றுகிறதோ அதைக் கேள். நல்லதைச்செய்தால் நல்லது நடக்கும். துன்பத்தை சகித்தால் இன்பம் பிறக்கும், கடவுளுக்கு பயந்து நடந்தால் அவரது ஆசி எப்போதும் உனக்கு இருக்கும் என அவை கூறுவதைக் கேள். அப்போது எனது பலம் உனக்கு முற்றும் கிடைக்கும். நீ வளமாக - நலமாக வாழ்வாய்.
ஆக, இப்போதிருக்கும் நிலையைப் பற்றி எப்போதும் கவலைப்படாதே. ஏனெனில், நான் உன்னை - உனது மாற்றத்தை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். உனது தகுதிக்கும்,தேர்ச்சிக்கும் ஏற்ப பலன்களை நிச்சயம் அனுப்பிக் கொண்டே இருப்பேன்.
இன்று ஒரு நாள் பொறு, நாளை உனக்கு நல்ல நாளாக இருக்க உன்னை இன்று தகுதிப்படுத்து. விழிகளில் நீரை தேக்கி உற்சாகமாகப் பிரார்த்தனை செய். பிறகு பார், எல்லாம் தாமாக வரும்.
அன்புடன் அப்பா
சாயி பாபா.
Thursday, June 5, 2014
கூட்டுப் பிரார்த்தனை மகிமை!
என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் வசிக்கிறேன். மூன்று வருடங்களாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் எங்கள் மகனுக்கு திருமணம் செய்ய, நல்ல வரன் தேடிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் வேண்டாத தெய்வமில்லை, எல்லா பரிகாரங்களும் செய்தோம். மனதில் கவலைதான் மிச்சம். நல்ல வரன் அமையவில்லை.
ஆகஸ்டு 2013 ல் அமெரிக்காவிலிருந்து எங்கள் நண்பர் ஒருவர், எங்கள் இல்லம் வந்து பெருங்களத்தூர் சீரடி சாயி பாபா பிரார்த்தனை கோயில் பற்றிச் சொன்னார்கள்.
நாங்கள் உடனே அதே மாதத்தில் சென்று பாபாவை வழிபாடு செய்து, எங்கள் வேண்டுதலை ஒரு கடிதத்தில் எழுதி பாபா பாதத்தில் பிரார்த்தனை செய்து வைத்துவிட்டு வந்தோம்.
அங்கு, சாயி தரிசனம் புத்தகம் வாங்கிவந்து படிக்க ஆரம்பித்தோம். அதில், சாயி வரதராஜன் அவர்கள், சாயி பாபாவிடம் சரணடைந்து திடமான நம்பிக்கையை வைத்து, நம் சுமையை பாபாவிடம் விட்டுவிட்டால் வேண்டுதலை நிறைவேற்றுவார் என எழுதியிருந்தார்.
இதைப்படித்தவுடன்தான் எங்களுக்கு பாபா மீது திடமான நம்பிக்கை வந்தது, பக்தி வந்தது. அவர் பாதங்களே கதி என்று முடிவு எடுத்து, எங்கள் சுமையை சாயி பாபாவிடம் வைத்தோம். எப்படியும் பாபா நமது பிரார்த்தனையை நிறைவேற்றிவிடுவார் என மனதார பிரார்த்தனை செய்துவந்தோம்.
நாங்கள், பாபா பாதத்தில் கடிதம் வைத்த ஒரே வாரத்தில், நாங்கள் நினைத்த மாதிரி பாபா நல்ல வரன் காண்பித்தார். மீண்டும் புதுப்பெருங்களத்தூர் சாயி பாபா கோயில் வந்தோம். சாயி வரதராஜன் அவர்களின் கூட்டுப் பிரார்த்தனையில் இந்த என் மகனுக்கு அமைய பிரார்த்தனை செய்தோம்.
புதுப்பெருங்களத்தூர் பாபா அருளால் திருமண நிச்சயதார்த்தம் நடந்து, மார்ச் மாதம் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. எல்லாமே கூட்டுப்பிரார்த்தனையின் மகிமை.
திடமான நம்பிக்கையும், பொறுமையுமே நமக்கு இருக்கவேண்டும் என சாயி பாபா நமக்குப் புரிய வைக்கிறார்.
முழுமையாக சரணடைந்தால் பாபா காப்பாற்றுவார்!
அலோபதி மருத்துவரான, டாக்டர் பிள்ளையை பாபா சகோதரனே என்று பாசத்தோடு அழைப்பார். இவரிடம் அடிக்கடி பேசுவது, விஷயங்களைக் கலந்து ஆலோசிப்பது, தம் அருகிலே இருக்க விரும்புவது இவை பாபாவுக்குப் பிடிக்கும்.
இரு முறை இவர் காலில் சிலந்திக் கட்டி வந்து அவதிப்பட்டார். நண்பர் தீட்சித்திடம், ’வலி உயிரை எடுக்கிறது. செத்துவிடலாம் போலிருக்கிறது, பாபாவிடம் சொல்லி, இந்த வலியை பத்து ஜன்மத்துக்கு அனுபவிப்பதாகச் சொல்” என்று நொந்துக்கொண்டார் பிள்ளை.
தீட்சித் பாபாவிடம் வந்து பிள்ளை படும் துன்பத்தைச் சொன்னார். இதைக் கேட்ட பாபா உருகிவிட்டார். “பயப்பட வேண்டாம் என்று சொல், அவர் ஏன் பத்து ஜன்மங்கள் கஷ்டப் பட வேண்டும்? பத்தே நாட்கள் உழைத்து அவரது கஷ்டத்தையும் கர்ம வினைகளையும் நீக்கிவிடலாம். அவருக்கு நன்மை செய்வதற்கென்றே நானிருக்கிறேன்? பிறகு எப்படி அவர் சாக முடியும்? உடனே சென்று அவரை தூக்கி வாருங்கள் என்றார் பாபா. பிள்ளையை பாபாவிடம் அழைத்து வந்தார்கள்.
அவருக்கு பாபா தனது திண்டைக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார். பிறகு, ”பிள்ளை, முன் வினைகளின் பயனை அனுபவிப்பதுதான் இதற்கு சரியான சிகிச்சை. கஷ்டத்தை, வலியை பொறுத்துக் கொள். கடவுள்தான் நமது காப்பாளர் எல்லாவற்றையும் தீர்ப்பவர். அவரை எப்போதும் நினை.. அவர் உன்னை பாதுகாப்பார். உனது எண்ணமே, செயல், செல்வம் எல்லாவற்றாலும் அவரை முழுமையாக சரணடைந்து விடு. அவர் உன்னை நிச்சயம் காப்பார்!” என்றார் பாபா.
”நானா சாகேப் பேண்டேஜ் போட்டார். அதனால் எந்த வித பிரயோசனமும் இல்லையே” என்றார் டாக்டர் பிள்ளை.
”நானா மடையன். பேண்டேஜை உடனே கழற்றிவிடும். இல்லாவிட்டால் நீ செத்து விடுவாய். இப்போது ஒரு காக்கை வந்து உன்னைக் கொத்தும் ! நீ குணமடைவாய்!” என்றார் பாபா.
அப்போது மசூதியை சுத்தம் செய்து கொண்டிருந்த அப்துல்பாபா, தவறுதலாக டாக்டர் பிள்ளையின் கால்களை மிதித்து விட்டார்.
உடனடியாக சிலந்திக்கட்டி உடைந்து அதிலிருந்து ஏழு சிலந்திப்புழுக்கள் வெளி வந்தன. டாக்டர் பிள்ளை வலி தாங்காமல் அழுது அரற்றினார்.
இதைப் பார்த்து, ”பாருங்கள், நமது சகோதரன் நன்றாகப் பாடுகிறார்”என்றார் பாபா.
”காக்கை எப்போது வரும்?” எனக் கேட்டார் டாக்டர் பிள்ளை.
’ஏற்கனவே வந்து கொத்தி விட்டுச் சென்றுவிட்டது. நீ வாதாவில் போய் ஓய்வெடு!’ எனஅனுப்பிவைத்தார்.
புண்ணில் உதியைத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தார் பிள்ளை. பத்தே நாட்களில் நோயிலிருந்து முற்றிலுமாக குணமானார்.
உடலாலும் மனதாலும் தாங்கமுடியாத வேதனையால் வலியால் அவதிப்படுவது முன் வினைப் பயனாகும். கர்மத்தின் பலனை அனுபவித்தாக வேண்டும். வேதனையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பாபா.
சில நேரங்களில் இந்த வேதனை முந்தைய பிறவியின் பலன் என்பர். முந்தைய பிறவியும் இனி வரும் பிறவியும் நமக்குத் தெரியாது. எனவே நல்லதை எண்ணி, நல்லதைச் சொல்லி, நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும்.
இதற்காகவே பாபா எண்ணம், சொல், செயலால் இறைவனை சரணடை என்கிறார். இதைச் செயல்படுத்துவது கடினம். இதைச் செயல்படுத்த பயிற்சி முக்கியம். நாம ஜெபம், தான தர்மம், ஞானிகளின் தரிசனம்ஆகியவை கர்ம வினையின் தீவிரத்தைக் குறைக்கும்.
வெயிலை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.ஆனால் ஒரு குடை அவற்றின் தீவிரம் நம்மை தாக்காமல் காக்குமல்லவா? இப்படித்தான் ஞானியரிடம் சரணடைவதும் நம்மைக் காக்கும். நல்லதை செய்வதும், கெடுதல் செய்யாமல் இருப்பதும் நம்மை கர்ம வினையிலிருந்து காக்கும் உபாயங்கள் ஆகும்.
பாபாவின் திருவடிகளை நினைத்து இன்றே நாம ஜெபம், தான தர்மம், ஞானியரை சரணடைதல் ஆகியவற்றைச் செய்ய ஆரம்பிக்கலாம்.
கு. இராமச்சந்திரன்
Tuesday, June 3, 2014
சாயி சாயி என்றே சொல்!
ஸ்ரீ சாயி சத்சரித்திரம் அத்தியாயம் மூன்றை கருத்தூன்றிப் படித்தோமானால், பாபாவின் அமுத மொழிகள் மிகவும் சுவையானதாகவும், பயனுள்ளதாகவும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்திருப்பதை அறியலாம்.
இதோ அமுத மொழிகளில் சில..
எவனொருவன் பாபாவின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கிறானோ அவனது ஆசைகள் பூர்த்தியாகின்றன.
பாபாவின் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடினால் எல்லா திக்குகளிலும் பாபா சூழ்ந்திருப்பார்.
நம்பிக்கையுடன் அவரது லீலைகளை இசைத்தால் எல்லையற்ற பேரின்பம் பெற்று திருப்தியடைவான்.
எவன் பாபாவிடம் பூரண சரணாகதி, விசுவாசத்துடன் வணங்குதலை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் செய்கின்றானோ அவன் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாவான்.
பாபாவின் கதைகள் கேட்கப்பட்டால் எல்லா நோய்களும் விலகும். கதைகளைக் கேட்டு கிரகித்துக் கொண்டால், அடியார்களின் பெருமையும் அகம்பாவமும் அகன்றுவிடும், மனம் அமைதிப்படும்.
இதயம் நிறைந்த பக்தியாயிருப்பின் மனம் உச்ச உணர்ச்சி யுடன் ஒன்றாகிவிடும்.
சாயி சாயி என்று சாதாரணமாக சொல்லி வந்தாலே, பேசுவதிலும் கேட்பதிலும் உள்ள பாவங்கள் தீர்ந்துவிடும்.
Monday, May 26, 2014
நம்பினால் அருள் செய்வேன்!
எங்களது வாழ்க்கையில் பாபா எப்படி வந்தார் என்பது நினைவில்லை. எனது மகன் கல்லு}ரியில் சேர அவரிடம் முறையிட்டேன். அவர் சரியான வழியைக் காண்பித்தார்.
எங்கள் இடத்தில் ஒரு பிரச்சினையிருந்தது. அதையும் பாபா சரி செய்தார். பின் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்ந்தேன். வயிற்றில் கட்டியிருந்தது. அறுவை சிகிச்சை நடைபெற்று கர்ப்பப் பையை எடுத்து விட்டார்கள். அடுத்த ஒரு வாரமாக கடுமையான குளிர் காய்ச்சல்.
மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தபோது, கருப்பைப் பகுதியில் இரத்த உறைவு ஏற்பட்டு உள்ளதால் இப்படியாகிறது என்றார்கள். அதோடு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றார்கள்.
”என் அக்கா எனக்கு வேண்டும்!” எனக் கூறி., என் தங்கை மறு அறுவை சிகிச்சைக்கு என்னை கட்டாயப்படுத்தி சேர்த்தாள். எனக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை சாய் ராம் எழுதிக் கொண்டிருந்தாள்.
அறுவை அரங்கினுள் நுழையும் போதிலிருந்து சாயி ராம் என சொல்லிக்கொண்டிருந்தேன். மயக்கம் போடும்போது சாய் எனச் சொன்னது நினைவு இருக்கிறது. தெளிந்து கண் விழித்தபோதும் எனது உதடுகள் சாயிராம் என உச்சரித்தது. அப்போதுதான் சாயி பாபா என்னை இந்த நாமத்தை உச்சரிக்கவைத்தார் என்பதை உணர்ந்தேன்.
எங்களது இல்லத்திற்கு அருகில் இளம் தம்பதியர் இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு குழந்தையில்லை. கர்ப்பம் ஐந்து மாதம் ஆறு மாதம் என நான்கு முறை ஏற்பட்டு கலைந்து போய்க் கொண்டிருந்தது. அவர் மிகவும் அவதிப்பட்டாள்.
பாபாவை நினைத்து அவரைப் பிடித்துக்கொள்..இந்த முறை கர்ப்பம் கலையாது என ஆறுதல் கூற, அவளும் பாபாவை பிடித்துக்கொண்டாள். மறுபடி கர்ப்பம் தரித்தாள்.. மூன்று மாதமான நிலையில் வயிற்று வலி வந்தது. டாக்டரிடம் காண்பித்த போது, நஞ்சுக் கொடி நார்மலாக இல்லை என்றும், அதிகமாக நடமாடாமல் இருக்குமாறும் கூறினார்கள்.
அவள் அழுத அழுகையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பாபாவை கெட்டியாகப் பிடித்துக்கொள். நல்லவிதமாக நடக்கும் என்றேன்.
ஒருமாதம் சென்ற பிறகு மீண்டும் செக் அப் சென்றாள். போகும் போது, இந்தக் குழந்தையும் இல்லை என்றால் என்னை உயிருடன் பார்க்க முடியாது அக்கா.. என்று கூறிவிட்டுச் சென்றாள். போய்..வா.. பாபா கூட இருக்கிறார் எனக் கூறி அனுப்பினேன். போகும்போது உங்கள் கையால் காசு கொடுங்கள் என்றாள். பாபாவை நினைத்துக் கொடுத்தேன்.
செக் அப் முடித்து வந்தவள்.. குழந்தையும் நன்றாக உள்ளது. நஞ்சுக் கொடியும் நன்றாக உள்ளதாக டாக்டர் ஆச்சரியத்துடன் கூறினார் என மகிழ்ந்தாள்.
அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது.. இன்று அக் குழந்தையின் வயது பன்னிரண்டு. குடும்பத்திலிருந்து பிரிந்துபோன ஒரு முதியவருக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்து வந்தேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து சேர்ந்தார் அவர்.
நம்பியவர்களுக்கு பாபாவின் அருள் எப்போதும் உண்டு.
சாந்தி சீனிவாசன்,
காஞ்சீபுரம்
தட்சணை
பாபா பேசும்போது, ஏதோ கதை போல் சொல்வார். உருவகப்படுத்தி சொல்வார். மேம்போக்காக குறிப்பு ஒன்று சொல்வார்.
இது எல்லோருக்கும் தெரியாது. கேட்பவருக்கு அர்த்தம் அற்றது போல் தெரியும். இதற்கு நேரடி அர்த்தமும் கொள்ளக்கூடாது. மிகவும் ஆழ்ந்து யோசித்தால்தான் தெரிய வரும்.
ஒருமுறை ஒருவர் சீரடிக்கு வந்து பாபாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தார். அவரிடம் ”பாபா பற்றி என்ன நினைக்கிறீர்?” என்றேன்.
அதற்கு அவர், “எப்போதும் காசு பற்றியே (தட்சணை) பேசும் ஒரு ஞானியை நான் இதுவரை கண்டதேயில்லை. என்ன ஞானி இவர்? “ என அலுத்துக்கொண்டார்.
என்னைப் பொறுத்தமட்டில் பாபா காசு காசு என்று சொல்வதெல்லாம் புண்ணியத்தைப் பற்றித்தான்.
தட்சணை புண்ணியத்தைக் குறிக்கும். அகங்காரத்தை அழிக்கும். நல்ல குணத்தை வளர்க்கும். பாபாவின் மகத்துவம் எல்லோருக்கும் தெரியாது.
கு.இராமச்சந்திரன்
Saturday, May 24, 2014
பாபாவின் ஆசிர்வாதம் பெற…..
நான் சாய் ராம் கோயிலுக்குப் போகமுடியவில்லை..நேரமே கிடைக்கவில்லை.. பாபா மன்னித்துவிடுங்கள்..என்று வேண்டுகிற ரகமா நீங்கள்?
எந்த வேலையிருந்தாலும் கோயிலுக்குப் போவதை நிறுத்த மாட்டேன் என்கிறவரா நீங்கள்?
பாபா பாபா என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே தவிர, அவரை பூஜிப்பதிலோ, அவரது கோயிலுக்குச்செல்வதிலோ எனக்கு ஆர்வம் வருவதில்லை என்கிறவரா நீங்கள்?
நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விக்ஷயம்..
உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அந்த வழியில் இறைவனை வணங்கினால் போதும். கோயிலுக்குப் போனால் நல்லது.. போகவில்லை, வீட்டில் அவரது பாடலைக் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன்..
சத்சரித்திரத்தை சி.டி. போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன்..டி.வியில் லைவ்வாக ஆரத்தி பார்த்துக் கொண்டிருந்தேன் என எப்படி அவரை நினைத்தாலும் அவரை வழிபட்டதுதான். எந்த வழியில், என்ன முறையில் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்கிறவர் பாபா.
கண்களை மூடி தியானிக்க வேண்டா, ஹோம குண்டத்தில் அமர்ந்து பூஜிக்க வேண்டா, புனித சரித்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டு பட்டும் படாமல் பாராயணம் செய்யவேண்டா..
பின்னர் என்னதான் செய்வது?
அவர் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருங்கள். அது போதும்.. சத்சரித்திரம் நமக்கு ஒரு வழிபாட்டை சொல்லித் தருகிறது.
”நீங்கள் உங்களது உலகக் கடமைகளை செய்து கொண்டோ, கவனித்துக் கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனதை சாயிக்கும் அவரது கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்..”
சிலர்.. நானும் இப்படித்தான் செய்கிறேன்.. ஆனால் பாபாவை சமயங்களில் நினைக்கமுடியவில்லை என்கிறார்கள். இதைவிட சுலபமான வழியைச் சொல்கிறேன்..
பாபாவின் உருவப் படங்களை சுவரில் மாட்டி வைப்பது, ஸ்டிக்கர்களாக வாங்கி ஆங்காங்கே ஒட்டி வைப்பது, அவரது அருளுரைகளை எழுதி கண்ணில் படும் இடங்களிலும், கைகள் தொடும் இடங்களிலும் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அப்போது அவரது நினைவு வந்துவிடும்.
அதிகாலையில் உறங்கி எழுந்திருக்கும்போதே, பாபாவை நினைத்துக் கொண்டு எழுந்திருங்கள்.. நாள் முழுக்க அவரது நினைவு இருக்கும்.
இந்த நினைவு உங்களது எல்லா கஷ்டங்களையும் விலக்கி சர்வ மங்களங்களைக் கொண்டு வரும்.
Friday, May 23, 2014
என்னை நம்பினால் 100 சதவீத வெற்றி கிடைக்கும்!
என் பெயர் அருள் ஜோதி. எனது கணவர் ரவிச்சந்திரன். எங்களுக்கு ஜெயஸ்ரீ மற்றும் நித்யஸ்ரீ_ என்று இரண்டு மகள்கள். எங்கள் நண்பர்கள் மூலம் பாபாவின் பெருமையை கேள்விப்பட்டு, அவரை வணங்க ஆரம்பித்தோம்.
எனது கணவர் டிப்ளமோ முடித்திருந்தார். பார்ட்டைம் பி.ஈ, படிப்பில் சேர முயற்சித்து வந்தார். அதற்கு பல தடங்கல்கள் இருந்தன. கம்பெனியில் வேலைப்பளு மற்றும் பார்ட் டைம் பி.ஈக்கான போட்டி ஆகியவற்றால் அது தள்ளிப் போனது.
நடக்கிற அனைத்திற்கும் பாபாவே பொறுப்பு என மனதில் திண்ணமாக நினைத்துக்கொண்டு தீவிரமாக முயற்சி செய்தோம். சத்ய பாமா பல்கலைக் கழகத்தில் சீட் கிடைத்தது.
சீட் கிடைத்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் என் கணவருக்கு வேலை போய்விட்டது. இது பாபாவின் சோதனைதான் என உணர்ந்து அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டுவிட்டோம்.
நடக்கிற அனைத்தையும் அனுபவிப்போம் என நினைத்து பாபாவை தியானிக்க ஆரம்பித்தேன். சில நாட்களுக்குள் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அது மட்டுமல்ல, எனது கணவருடைய நெருங்கிய நண்பர் வந்து, தான் நடத்தி வந்த தொழிலை ஏற்று நடத்துமாறு எனது கணவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
தொழிலில் ஆரம்பத்தில் அனுபவமின்மை காரணமாக சில தோல்விகளும், உறவினர்களை நம்பியதால் சில இழப்புகளும் ஏற்பட்டன.
ஒவ்வாரு முறையும் பாபா எங்களை காப்பாற்றி வழி நடத்திச் சென்றார். இப்போது தடைகள் அனைத்தையும் கடந்து நல்ல நிலையில் எங்கள் தொழில் நடந்துகொண்டிருக்கிறது.
என் கணவருக்கு பி.ஈ சீட் கிடைத்தபிறகு ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக, மீண்டும் புதிய கம்பெனியில் சேர்ந்த பிறகு, தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே நிறைய நேரங்களை அவர் செலவிட வேண்டியிருந்தது. இதனால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால் அவரது ஆறாவது செமஸ்டரில் மூன்று செமஸ்டர் பேப்பர் முழுவதும் சேர்த்து எழுத வேண்டிய கட்டாயம். அனைத்தையும் பாபாவிடம் ஒப்படைத்து விட்டு கடினமாக உழைக்க எனது கணவருக்கு உறு துணையாக இருந்தேன்.
என்ன ஆச்சர்யம்! அனைத்து பேப்பரிலும் வெற்றி என கணவர் சொன்னபோது, கண்கள் ஆனந்த கண்ணீரை வடித்தது. வாரக் கடைசி மற்றும் சனிக்கிழமை விடுப்பு என கம்பெனியில் எனது கணவர் நிறைய விடுப்பு எடுத்ததால் எங்களால் சீரடி வர இயலவில்லை.
பிஈ முடிந்ததும் சீரடி வருவதாக பாபாவிடம் சொல்லியிருந்தேன். அதன்படி டிசம்பர் 13 - ல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிந்தது. ஜனவரி 22 – ம் தேதியில் செல்ல முன் பதிவு செய்திருந்தேன்.
என்னை பார்க்கும்போது பி.ஈ டிகிரி வாங்கியிருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல, 18 – ம் தேதியே தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நூறு சதவிகித வெற்றியுடன் அவரை தரிசிக்கச் சென்றேhம்.
அருள்ஜோதி ரவிச்சந்திரன்,
மடிப்பாக்கம், சென்னை - 91
Thursday, May 22, 2014
குருவை எப்போது நினைக்க வேண்டும்?
உடல் ஆரோக்கியமாகவும்,பலமாகவும் இருக்கும் போது எப்போதும் குருவை தியானிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.
வயதாகி, நோய்கள் வந்து, பலம் இழந்து பிறரால் கைவிடப்பட்டு நினைவு தடுமாறி, படுக்கையில் விழுந்துகிடக்கிற நேரத்தில் கடவுளை நினைக்க முடியாது. எனவே, இன்றே, இப்போதே குருவை - கடவுளை தேர்வு செய்யவேண்டிய நேரம். அதை செய்யுங்கள்.
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...

