Showing posts with label பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம். Show all posts
Showing posts with label பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம். Show all posts

Sunday, April 22, 2018

கூட்டுப்பிரார்த்தனை விபரம்

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில், மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளிலும், கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வியாழக்கிழமைகளிலும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் மதியம் அன்னதானம் நடைபெறுவதால், பக்தர்கள் மதிய உணவினை கோயிலில் சாப்பிடலாம். கண்டிகை வரை திரும்பிச்செல்ல டாக்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதிகளைப் பற்றி விவரமாக தெரிந்து வருவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
கீரப்பாக்கம் பாபா ஆலயம் வருவதற்கான வழிகள்:
தாம்பரத்திலிருந்து கீரப்பாக்கம் வர பேருந்து எண் 55D உள்ளது. காலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு பேருந்து உள்ளது. பயண தூரம் 17.4 கி.மீ.
வண்டலூர் – கேளம்பாக்கம் வழித்தடத்தில் உள்ள கண்டிகைக்கு, தாம்பரத்தில் இருந்து பல பேருந்துகள் உள்ளன. கண்டிகையில் இருந்து கீரப்பாக்கத்திற்க்கு ஆட்டோ மூலம் வரலாம்.
வாகனங்களில் வருவோர் கண்டிகையில் இருந்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் வழியாக வந்து வலது பக்கம் பார்த்தால் மலையில் பாபா கோயில் தெரியும். 
கூடுவாஞ்சேரியிலிருந்தும் கீரப்பாக்கத்திற்க்கு பேருந்து வசதி உள்ளது. பேருந்து இல்லாதபோது ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அந்த வழியாக கீரப்பாக்கம் வரலாம்.
முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் மாலையில் சென்னை வடபழனி பார்வதி பவன் வளாகத்திலுள்ள குபேர சாயி பாபா ஆலயத்தில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.

Thursday, May 28, 2015

அநேகர் இங்கே வரப்போகின்றனர்!

இரவு முழுக்க விழித்திருந்ததால் அதிகாலை நான்கு மணிக்கு உறங்கி ஆறு மணிக்கு எழுந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.  அதனால் சத்சரித்திரம் வாசிக்கவில்லை. மறுநாள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில்  நடக்கவிருந்த பிரார்த்தனையின்போது என்ன வார்த்தையைக் கூறி நான் பிரார்த்தனையைச் செய்வது என்ற கேள்வியுடன் பாபாவைப் பார்த்தேன்.
உள்ளேயிருந்து ஒரு குரல், இன்று என்னுடைய தர்பாரைச்சேர்ந்த அநேக மக்கள் இங்கு வரப்போகிறார்கள் என்று!  வழக்கமாக நானே பேசி, நானே பதிலையும் சொல்லிக்கொள்வேன் என்பதால், அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது என நினைத்துக் கொண்டு பிரார்த்தனை மையம் சென்றேன். அன்று நான்கு மணி வரை வந்த பக்தர்கள் அனைவரும் என்னை முன்னமே அறிந்த சாயி பக்தர்கள்.
அத்தனை பேரும் பாபாவின் மீது தீவிர பக்தி செலுத்துபவர்கள். மெய்சிலிர்த்துப் போனேன். நிச்சயமாக என் தர்பாரைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவார்கள்.. என்றார் பாபா!  சத்சரித்திரத்தில் இது பற்றி உள்ளதா என்று ஆராய்ந்தேன்.
அவரது தர்பாரைச் சேர்ந்தவர்கள் யார்? என்ற எனது கேள்விக்குத்தான் சத்சரித்திரம் பதில் தந்தது. அதைத் தருகிறேன் படித்துக் கொள்ளுங்கள்.
மும்பையில் பாந்த்ரா தாலுகாவின் வடபகுதியில், பாந்த்ரா நகரை அடுத்து சாந்தா குணுஸ் என்ற நகரம் இருக்கிறது. இங்கு துரந்தர் என்னும் பெயர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்தக் குடும்பம் ஸ்ரீ ராமர் மீதும், ஞானியர் மீதும் திடமான நிட்டை வைத்திருந்தனர். ராமநாமத்தின் மீது அனன்னியமான சிரத்தை கொண்டிருந்தனர்.
அவர்கள் மற்றவர்களின் வாழ்வில் தலையிடுவதில் விருப்பமற்றவர்கள். எளிய வாழ்வு நடத்தினர். குழந்தைகளும், குடும்பப் பெண்களும் அவ்வாறே இருந்தனர். ஆதலின், சக்ரபாணி அவர்களுக்குக்கடமைப் பட்டவரானார்.
துரந்தர் என்கிற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலாராம். விட்டல் பக்தர், புண்ணியசாலி. வக்கீலாகப் பணி யாற்றிய இவர், கவர்ச்சிகரமாகவும், திறமையாகவும் கோர்ட்டில் வாதங்களை முன் வைத்தல், நேர்மையான சிந்தனை, தர்ப்பையின் நுனி போன்ற கூர்த்த மதி, நல்லொழுக்கம் ஆகியவை இவரிடமிருந்த நல்ல பண்புகள்.
சமூக சேவையில் விருப்பமுடையவர். தனது கடமைகளைச் செய்துமுடித்தபின் ஆன்மீக சேவையில் இறங்கி, பெரும் முன்னேற்றம் கண்டார்.
இவருடைய சகோதரர்களுக்கும், இவருக்கும் 1912 - ம் ஆண்டு சீரடிக்குச் செல்லக்கூடிய யோகம் வாய்த்தது. அவர்கள் வருவதற்கு முன்பாகவே பாபா சீரடியில் தன்னோடு இருந்தவர்களிடம் கூறினார்.
”என்னுடைய தர்பாரைச் சேர்ந்த அநேக மக்கள் இன்று இங்கு வரப்போகின்றனர்”.
துரந்தர் சகோதரர்கள் பாபாவைப் பார்த்ததும், தாவிச் சென்று அவரது பாதங்களைப் பிடித்துக்கொண்டனர். அவர்களைப் பார்த்ததும், பாபா மீண்டும் சொன்னார், “பாருங்கள், என் தர்பாரின் மக்கள் வந்துவிட்டனர். யார் வரப்போகிறார்கள் என்று நான் சொன்னேனோ அவர்கள் இவர்கள்தான்”.  இப்படிச் சொன்ன பாபா, அவர்களிடம் திரும்பி, ” நீங்களும் நானும் அறுபது ஜன்மங்களாக ஒருவரை ஒருவர் அறிவோம்!” என்றார்.
இவ்வாறு சொன்ன பாபாவின் முன் அனைவரும் கைகட்டி நின்று பாபாவின் பாதங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். உணர்ச்சி மேலீட்டால் அவர்கள் கண்களில் நீர் நிறைந்தது. தொண்டை அடைத்தது, எல்லா அங்கங்களிலும் மயிர்க்கூச்செறிந்தது. இதயம் களிப்பால் நிரம்பியது.
இவர்களின் நிலையைப் பார்த்த சாயீ கூறினார், “சுக்கில பட்சத்து வளர்பிறைச் சந்திரனின் கலையைப்போன்று என்னை வழிபட்டு தம்முடைய மனோ தர்மத்தை என்னிடம் முழுமையாக ஒப்படைத்தவர் பெரும் பேறு பெற்றவர் என்பதை அறிவீர்களாக.
திடமான விசுவாசத்தை மனத்தில் தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன். அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்கமுடியாது.
எவர் ஹரி வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிடத்தையும் வீணாக்கமாட்டாரோ, அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தம் அளிப்பார். பிறவிக்கடலைத் தாண்டி அழைத்துச் செல்வார்.
பாபாவின் இந்த வசனத்தைக் கேட்ட எல்லார் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. சித்தம் மகிழ்ந்தது. மனதில் நல்ல வழிகள் பிறந்தன. இந்தத் தகவல் சத்சரித்திரம் 51வது அத்தியாயத்தில் பதியப்பட்டிருக்கிறது. இனி இந்த நிகழ்வை நாம் தியானம் செய்யலாம்.
பாபாவின் தர்பாரைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் பாபாவை வழிபடுகிறார்கள். சீரடிக்கு போகிறார்கள், விரதம் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாபாவின் தர்பாரைச் சேர்ந்தவர்களா? என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏன் அப்படி கூறுகிறீர்கள்? எனக் கேட்கலாம். நாம் சீரடிக்குப் போவதும், பாபாவை வழிபாடு செய்வதும் நமது லவுகீக மேன்மையை முன்வைத்து செய்கிற விக்ஷயங்கள். நமது கோரிக்கை நிறைவேறி விட்டால் பாபாவும் சீரடியும் தூரத்தில் வைக்கப்பட்டு விடுவார்கள்.
துரந்தர் குடும்பத்தார் இறை நாமத்தின் மீது திடமான நம்பிக்கை  வைத்திருந்தவர்கள். மற்றவர்கள் வாழ்க்கையில் தலையிடமாட்டார்கள். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர்கள். இறைவன் மீதும் ஞானியர் மீதும் பக்தியுள்ளவர்கள். ஆனால் நாம் எப்படி?
மற்றவர்களைப் பற்றி குறை சொல்லாமல் இருக்க நம்மால் முடியாது. காசு பணம் வந்தால், கையிருப்புக்கு ஏற்ற மாதிரி ஆடம்பரமாகவோ, அலங்காரமாகவோ வாழ வேண்டும் என விரும்புவோம்.  கடன்பட்டு வீட்டைக் கட்டி அழகு பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் நாம்.
வட்டிக்குப் பணம் வாங்கி நகையெடுத்து காதிலும் கழுத்திலும் மாட்டிக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள். வட்டி கட்ட, நகையை அடகுக்கடையில் வைத்து, அதையும் எடுத்து செலவு செய்துவிட்டு இரண்டு வட்டிகளை கட்டமுடியாமல் கஷ்டம் என்று புலம்புகிறவர்கள்.
மருமகளைக் குறை சொல்லி நடத்துகிறவர்கள், மாமியாருக்கு மரியாதைத் தராமல் அம்மாவிடம் ஒப்பாரி வைப்பவர்கள் நாம். இப்படியிருப்பவர்கள் எப்படி சாயி பக்தராக இருக்க முடியும்?
இப்படியில்லாமல், தனது மனம் நல்லது கெட்டது எனத் தீர்மானிப்பதை தானே செய்யாமல், இறைவா, நீயே பார்த்துக்கொள் என அவரிடம் ஒப்படைத்து விட்டு, என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிற பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளக்கூடிய சமயத்தில் எதிர் பாராத சோதனைகள் வரலாம். கஷ்டங்கள் அதிகமாகலாம். ஆனால், கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்பதில் திடமான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். அப்படியிருந்து நீங்கள் பாபாவை வழிபாடு செய்தால், அப்போதுதான் அவரது பக்தராகக் கருதப்படுவீர்கள். அவரது தர்பாரைச் சேர்ந்தவர்களாக ஆவீர்கள்.
பாலாராமின் குணத்தைப் பாருங்கள். அவர் நல்ல ஒழுக்கம் உள்ளவர், கூர்த்த அறிவு உள்ளவர். வாதத்தைக்கூட பிறர் மனம் நோகாமல் கவர்ச்சிகரமாகக் கூறுகிறவர். நேர்மையாக சிந்திக்கிறவர். இந்த குணம் உங்களிடம் இருந்தால் நீங்கள் சாயி பக்தர், அவரது தர்பாரைச் சேர்ந்தவர்.
இது என்னிடமில்லை. நெக்ஸ்ட்.. என்று கூறுகிறீர்களா?
லவுகீகத்தில் இருந்துகொண்டே, சிரத்தையுடன் முயன்று ஆன்மீகத்தில் முன்னேற்றம் கண்டவர் பாலா ராம். நாம் ஆன்மீகத்தை லவுகீகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறோமே தவிர, உலக வாழ்க்கையை ஆன்மீகமாக மாற்ற முயற்சிப்பது கிடையாது. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப்போகவேண்டும். மேல் நிலையிருந்து கீழ் நிலைக்கு வருகிறவர்கள் சாயி பக்தர்களாக மாறமுடியாது.
இதுவும் என்னிடமில்லை. நெக்ஸ்ட்!
அவர்கள் இறைவன் மீதும் மகான்கள் மீதும் பக்தி கொண்டிருந்தார்கள். இவ்வாறு கொண்டிருப்பவர்கள் இறைவனின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பார்கள். ஒரே கடவுளை பல பெயர்களால் வணங்குவதாகச் சொன்னாலும், இந்தக் கடவுளை விட இவர் பெரியவர், இவர் சின்னவர் என்று பேதம் பார்ப்போம். மகான்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்து அதில் யாரையேனும் ஒருவரை குறை சொல்வோம். இந்த குணம் உள்ளவர் சாயி பக்தராக முடியாது.
பாபா சொன்னார், “ இறை குரு வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிட நேரத்தையும் யார் வீணாக்காமல் இருக்கிறாரோ அவருக்கு இறைவன் எக்காலத்தும் கடன்பட்டவன். அவன் சாயி பக்தன். திடமான விசுவாசத்தை மனதில் தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன்.”
உறுதியான நம்பிக்கையுடன் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப் பட்டவர்தான் சாயி பக்தர்.  உங்கள் பக்தி எப்படி? நீங்கள் எப்படி என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். நாம் பாபாவின் தர்பாரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அருகதை நமக்கு இல்லை என்பது நமக்கே புரிகிறது. அப்படியிருக்க, அவர் நமது வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று எண்ணுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அப்படியானால், சாயி எனக்கு அருள் செய்ய மாட்டாரா? என்று குழம்பிவிடாதீர்கள்.
நீங்கள் இப்படிப்பட்டவர்தான் என்பதை முன் கூட்டியே அறிந்திருக்கிற பாபா, உங்களைத் தேடி வந்து, உங்களைச் சிறிது சிறிதாக பக்தி மார்க்கத்தில் வழிநடத்தி அவரது தர்பாரில் சேர்த்துக்கொள்வார்.  எப்போதும் சுயநலத்தை மட்டுமே சிந்திக்கிற மனோபாவம் உங்களிடம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது இறையருள் உங்கள் இதயத்தை விரைவில் நிரப்பும், அருள் கிடைக்கும்.
இறை நாமத்தை தியானம் செய்வது, அவர் பற்றிய கதைகளைக் கேட்பது, பாடல்களைக்கேட்பது, பக்கத்தில் உள்ள அவரது கோயிலுக்குப்போவது ஆகியவை அவர் மீது பக்தியை வளர்க்கும்.
எவ்வளவு இருந்தாலும் எளிமையாக இருங்கள்.  கர்வம் நமது தலையை அலங்கரிக்காது, மாறாக, பாரத்தைக் கொடுத்து நம்மை பலவீனப்படுத்தும். எதுவொன்றும் இல்லாமல் போனாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு எதையும் தந்துவிடாது. மாறாக,  வாழ்நாள் முழுவதும் தோல்வியைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும்.
எப்போதும் சாயியை நம்பி அவர் பாதங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், இந்த ஜன்மத்திலேயே நம்மை உயர்த்திக் காட்டுவார் அவர்.  யார் உண்மையான பாபா பக்தரோ அவர் மட்டும்தான் நமது வழிபாட்டு மையத்திற்கு வருவார்.. மற்றவர்களுக்கு அந்த பாக்யம் கிடையாது.  யாருக்கு நிவாரணமோ அவருக்கு மட்டுமே இந்த இடம் திறந்திருக்கும் என்ற பாபாவின் பதில் எனக்குத்திருப்தியைத் தந்தது.
உங்களுக்கு?
ஸ்ரீ  சாயி வரதராஜன்

Thursday, March 6, 2014

பக்தர்கள் கவனத்திற்க்கு

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் தினந்தோறும் காலையில் திறக்கப்படுகிறது. பன்னிரண்டு மணிக்கு ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது. மாலையில் தினமும் நாலரை மணிக்குத் திறக்கப்பட்டு எட்டு மணி ஆரத்தி முடிந்த பிறகு நடை சார்த்தப்படுகிறது.
இந்த நேரங்களில் யார் வேண்டுமானாலும் வந்து பாபாவை விருப்பம் போல வழிபடலாம். மேல் மாடி தியானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் அமைதியாக அமர்ந்து வேண்டுதல் செய்யலாம், தியானம் செய்யலாம், பாபாவின் நாம சங்கீர்த்தனம் செய்யலாம்.
சாயி வரதராஜனை எதிர்பார்த்து வருவதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். சாயி பாபா மட்டுமே இங்கு அற்புதங்களைச் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பாபாவை நம்பி இங்கு வந்த பக்தர்கள் இதுவரை வீணானதில்லை. எனவே, பாபாவை மட்டும் நம்பி வாருங்கள், சாயி வரதராஜன் இருந்தால் அவரிடம் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

கூட்டுப் பிரார்த்தனைக்கான கடிதங்களை உண்டியலில் சேர்க்காமல் பாபாவின் திருவடிகளில் அல்லது மையத்தின் மேலாளர் திரு. பாஸ்கரன் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம். கூடுமானவரை வியாழக்கிழமைகளில் பாபாவுக்கு பூக்கள் வாங்கி பணத்தை விரையம் செய்வதற்கு பதில், பிஸ்கெட், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி நைவேத்தியம் செய்து வைத்தால், அவற்றை முதியோர் இல்லங்களுக்கும், அனாதை விடுதிகளுக்கும் சேர்ப்பித்து மற்றவர்களுக்கு உணவளித்த புண்ணியத்தைச் சேர்க்கலாம். 

கோயில் கட்டலாம் வாருங்கள்!

திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி கோயில்களை உருவாக்கி, நற்பணிகளைச் செய்திட உருவாக்கப்பட்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ; அறக்கட்டளையின் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர்  - ரத்தின மங்கலம்  - கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றிக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக் கூடம், தியானக் கூடம், அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின் வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.
மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி மாணவ ஞான  கணபதி ஆலயமாக இந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.
எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல் கம்பிகள், செங்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ  சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி வழங்கியிருக்கிறார்.
சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா உங்கள் மனதில், இந்தக் கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.

மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை அணுகவும்



சாயி வரதராஜன்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...