Showing posts with label ஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா. Show all posts

Thursday, June 30, 2016

என்னை உணர்ந்து கொள்!

என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னை விட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே ஜபம் செய்கிறான்.
முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன் பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து எனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன் பாலும்நான் சார்ந்திருக்கிறேன்.
இங்ஙனம், என்னிடம் வருபவன் ஆறானது கடலுடன் ஒன்றாவது போல், என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம்கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக!  நீங்கள் தொலை தூரமோ, அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக வேண்டாம். உங்களது நாமத்தையும் ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வு நிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.
இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சி செய்தால், சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்.    ஸ்ரீ சாயி பாபா
பாபாவுடன் ஒன்றி அவரைப் போல் ஆனவர்கள் சிவநேசன் சுவாமிகள், நரசிம்ம சுவாமிகள், விபூதி பாபா, கரூர் நரசிம்ம சுவாமிகள், ஆந்திர மாநிலம் பரத்வாஜ சுவாமிகள் மற்றும் ராதாகிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர். இவர்கள் சத்குருக்கள் என அழைக்கப்படும் தகுதியைப்பெற்றிருக் கிறார்கள். இவர்களிடம் வேண்டினாலே மிகப் பெரிய அற்புதங்கள் நடக்கும்.
பாபாவை அனைத்திலும் பார்த்த முதல் மனிதன் நெவாஸ்கர். தனது வீட்டில் நல்லப்பாம்பு ஒன்று வந்து சீறியபோது, அனைவரும் பயந்தார்கள். ஆனால் வந்திருப்பது பாபா என்று கூறி, பாம்புக்குப் பால் வார்த்தார். பாலை அருந்திய பாம்பு மறைந்தது

Monday, June 27, 2016

உனது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்..

ஒரு பிரார்த்தனை வேளையில் கோடம்பாக்கம் விஜயலட்சுமி அம்மா ஒரு கேள்வி கேட்டார்:  நாம் அவரை விழுந்து விழுந்து வணங்குகிறோம்,  எப்படியெல்லாமோ பூஜை செய்கிறோம், விரதம் மேற்கொள்கிறோம். அப்படியிருந்தும் நமக்கு எதையும் செய்யத் தயங்குகிறார். எந்த வித செயலையும் செய்யாமல் இருக்கிற பாமர மக்களுக்கு அவர்கள் கேட்டதைத் தந்துவிடுகிறார் இது ஏன்?”  என்பதுதான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்வியை ஏன் கேட்டார் என்றால்,  அறுபத்திரண்டு வயது வரை குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தவர் பரமசிவம்; அவருடைய துணைவியார் ராணி அம்மாளுக்கு ஐம்பத்து ஐந்து வயது. அந்த வயதில் பாபாவை வேண்டி குழந்தை பெற்றார்கள்.
மருத்துவர்கள் கைவிட்ட பிறகு, கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட இவர்களுக்கு அற்புதம் நடந்தது. இப்போது குழந்தைக்கு இரண்டு மூன்று வயதிருக்கும். அதை எடுத்துக்கொண்டு நமது பிரார்த்தனை மையத்திற்கு வந்து கூடியிருந்த மக்களிடம் பேசும்போது, இவ்வளவு காலம் குழந்தையில்லை. சாயி வரதராஜன் நடத்திய கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு அவருடன் சீரடிக்குச் சென்றோம். அவர் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.  இந்தக் குழந்தை பிறந்தது.
மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோது,  பரிசோதித்த கிறித்தவ டாக்டர், “ஐம்பத்தைந்து வயதுவரை மாதவிலக்கு ஆகிறதா? ஆச்சரியம், நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள், பைபிளில் சாராள் என்ற பெண் 90 வயதில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றாள். நீங்கள் இந்த முதிர் வயதில் கர்ப்பம் தரித்துக் குழந்தை பெறுகிறீர்கள்என ஆச்சர்யப்பட்டதாக சொன்னார்.
இந்த அற்புதத்தைக் கேட்டுதான் விஜயலட்சுமி அம்மா இந்தக் கேள்வியைக் கேட்டார்.  வேதம் படித்தவன் அதை மனப்பாடம் செய்து அன்றாட பூஜைக்கும், இறைவழிபாட்டுக்கும் பயன்படுத்தி, வேதம் விதித்தபடி வாழவேண்டும்.  அப்போதுதான் அவனுக்கு இறையருள் கூடும்.
உபாசகர் அல்லது சாதகர் தனது கடவுளை உடல், சொல், மனம் ஆகியவற்றில் உண்மை நிறைந்து வணங்கவேண்டும். பக்தர்கள் நீதி தவறாமல் வாழ்ந்து ஆத்மார்த்தமாகவும், மிகச்சிரத்தையுடனும் கடவுளை வணங்கவேண்டும்.
இந்த பாமரர்களுக்கு இவையெல்லாம் தூரம்.  ஆகவே, இவர்கள் ஆத்மார்த்தமாக இறைவன் நாமத்தை தியானித்தாலே போதும், கேட்டது கிடைத்து விடும். அதற்கு இந்த பரமசிவன் தம்பதி ஒரு சாட்சி என்றேன்.
அந்தம்மா என்னுடன் ரயிலில் வந்தபோது,  கண்டதையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு வந்தார். சர்க்கரை வியாதி வேறு, குழந்தை வரம் கேட்கிறீர்கள், இப்படி கண்டதை சாப்பிடுகிறீரே, எப்படி குழந்தை பிறக்கும்? எனக் கேட்டபோது, “நீங்க தான் இருக்கீங்களே. நீங்க பார்த்துக்கோங்கஎன்று சொன்னார்.
அந்த வார்த்தையில் கள்ளம் கபடமில்லை,  இது நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை.  அப்படியரு பாமரத்தனம். யாரோ ஒருவர்,  இவரிடம் போய் வேண்டிக்கொள்எனக் கூறி அனுப்பியிருப்பார்கள்; அதை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறார்.
குருவின் மீது உனது நம்பிக்கையை வைத்து விட்டால் அவர் அதை சுமந்து செயலாக்க உதவி செய்வார் என்பது கூட அவருக்குத் தெரியாது.  ஆனால் கண்மூடித் தனமான நம்பிக்கை.
கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பது அவ்வளவு உயர்வானது, கேட்டதை அளிக்கக்கூடியது.
இறைவன் விஷயத்தில் பாமரத்தனமாகத்தான் பக்தி செய்யவேண்டும். அப்படியிப்படி என எல்லாம் தெரிந்ததுபோல நடக்கக்கூடாது. அதை அவர் பார்த்து நமக்கு அனுக்கிரகம் செய்வார்.
இதுதான் எனது விளக்கம். கபடு இல்லாமல் என்னிடம் வா, நான் உன்னைக் கரைத் தேற்றி உனது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்..இது சாயியின் உத்தரவாதம்.

Monday, June 13, 2016

பக்தி செய்ய முன்னோக்கி வா

இவனெல்லாம் பாபாவைக்கும்பிடுகிறான், சண்டாளன்! என்று யாராவது உன்னைத் திட்ட நேர்ந்தால் பக்தனாவதற்கு முன்பு செய்த செயலுக்காக இந்த திட்டு உனக்குக் கிடைக்கிறதா? பக்தனாகி இப்போதைய செயலுக்காகத் திட்டு வாங்குகிறாயா? என நீ யோசிக்க வேண்டும்.
பக்தனாகும் முன்பு எல்லோருமே ஆசையின் பிடியில் இருந்தவர்கள் தாம். அதன்விளைவாக என்னென்ன செயல்களோ நடைபெற்றுவிட்டன. அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமாகத்தான் பகவானைப் பற்றிக் கொண்டிருக்கிறோம். இவர்களின் தூற்றுதலும் அந்தக் கறைகளைப் போக்குவனவாக இருக்கட்டும் என அமைதியாக இருங்கள்.
பக்தனான பிறகு இவ்வாறான ஏச்சைக் கேட்கும் போது வெட்கப்படுங்கள். காரணம், உங்கள் பக்தியில் பழுது இருக்கிறது. பிறர் கண்களுக்கு தவறான ஏதோ ஒன்று உங்களிடம் இருப்பதால் அவர்கள் இப்படி பேசுகிறார்கள். அப்படி எதுவுமில்லை, அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்றால் அதற்கு சந்தோஷப்படு. இறைவனை அடையும் தூரம் வெகுதூரத்தில் இல்லை என்பதன் அடையாளம் இது.
வால்மிகியைக் கள்வன் என்று கூறுவார்கள். அருணகிரிநாதரைப் பெண் பித்தன் என்பார்கள். இப்படி பலர் உதாரணத்திற்காக இருந்தார்கள். பிற்காலத்தில் மற்றவர்கள் சாதிக்கமுடியாததைஅவர்கள் சாதித்தார்கள்.
பில்வமங்களர் கதையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தென்னாட்டில் கிருஷ்ணவேணி என்ற நதிக்கரையில் வாழ்ந்த அந்தணர் மகன் பில்வமங்களர். துர்நடத்தையுள்ள இவர் பெண் பித்தராகவும் வாழ்ந்தார். ஆற்றின் மறுபக்கம் வாழ்ந்த சிந்தாமணி என்ற வேசியின் மீது ஆசை கொண்டு அவளையே கதி எனக் கிடந்தார்.
ஒருமுறை அவரது தந்தையாருக்குத் திதி வந்தது. அன்றைய தினமாவது பில்வ மங்களர் வீட்டில் இருப்பார் என நினைத்தார்கள். அவரோ திதியை முடித்துக்கொண்டு சிந்தாமணி வீட்டிற்குச் செல்ல ஆர்வம் காட்டினார்.
அந்த நேரம் பார்த்து மழை பெய்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. ஓடக்காரனிடம் கெஞ்சினார், நிறைய பணம் தருவதாக வேண்டினார். அவன் வரவேயில்லை. இருட்டத் தொடங்கியது, அவளைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்பதால் எப்படியாவது ஆற்றில் குதித்து அக்கரை சேர்ந்துவிடத் தீர்மானித்து குதித்தார். வெள்ளச்சுழல் அடிக்க, ஏதோ ஒன்று மிதந்துவந்தது. கட்டையாக இருக்கும் என நினைத்து அதைப் பிடித்துக்கொண்டு நீந்தி அக்கரை சேர்ந்தார்.
வேசியின் வீடோ உள்தாழ் போடப்பட்டிருந்தது. கூப்பிட்ட குரலுக்கு பதில் இல்லை. யோசிக்கவும் நேரமில்லை. எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என நினைத்தவருக்கு சுவற்றின் மீது தொங்கிக்கொண்டிருந்த கயிறு கண்ணுக்குத்தெரிந்தது. அதைப் பிடித்துக் கொண்டு சுவரேறி உள்ளே குதித்தார்.
இவரைப் பார்த்துப் பதற்றப்பட்ட சிந்தாமணிக்கு தன்மீது இவ்வளவு ஆசையா என அவர் மீது அக்கறை வரவில்லை, கோபம்தான் வந்தது. எப்படி வந்தாய்? எனக் கேட்டாள். ஆற்றில் கட்டையைப்பிடித்து நீந்தி வந்ததையும், சுவற்றின் மீதிருந்த கயிறைப் பிடித்து ஏறி வந்ததையும் சொன்னார். சுவரின் மீது கயிறா? என சந்தேகம் வந்தது
அவளுக்கு. வெளியில் பார்ததாள், மழை நின்றிருந்தது. விளக்கை ஏற்றி எடுத்துக்கொண்டு வெளியே அவருடன் வந்தாள். சுவற்றின் மீது பயங்கரமான பெரிய கருநாகம் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.  திடுக்கிட்ட சிந்தாமணிக்கு இதைப் பிடித்துக்கொண்டு சுவர் ஏறி வந்திருக்கிறார் என்பது புரிந்தது. அப்படியானால் அந்தக் கட்டை என்னவாக இருக்கும் என ஆற்றங்கரைக்கு வந்தாள். பெண்ணின் பிணம் ஒன்று கிடந்தது. இதைப் பிடித்துக்கொண்டுதான் இவர் கரையைக் கடந்திருக்கிறார்என்பது தெரிந்தது.
தன் மீது இவ்வளவு மோகம் உள்ளவரா இவர்?        என அவள் கட்டித் தழுவவில்லை. மயங்கவில்லை, மாறாகக் கோபம் கொண்டாள். நீயெல்லாம் ஒரு அந்தணனா? ஒருநாள் இப்படி கேவலம் அழுகி நாற்றமெடுக்கப் போகிற இந்த உடம்பின் மீதா இவ்வளவு மோகம் கொண்டு தர்மங்களையும் கர்மங்களையும் துறந்துவந்தாய்? நீயெல்லாம் ஒரு பிறவியா? இவ்வளவு கீழ்த்தரமானவனா நீ? இதே வேகத்தையும் ஆர்வத்தையும் இறைவனை அடைவதில் காட்டியிருந்தால் இந்நேரம் பகவானை அடைந்திருக்கலாமே! என பலவாறாகப் பேசி  அவரது மனதைப் புண்படுத்தினாள்.
பில்வமங்களர் திகைத்துப் போனார். அதே சமயம் அவர் அறிவுக்கண் திறந்தது. உடனடியாக அவளது கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். அன்றிரவு அவள் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி பாட்டுப்பாட, அதைக் கேட்டு மெய்மறந்து கொண்டிருந்த அவர், விடியலில் எழுந்து வெளியே சென்றார். போவது எங்கே எனத் தெரியவில்லை.
வழியில் சோமகிரி என்ற பெரியவர் தியானம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கோபால மந்திரத்தைப் பெற்றவராக, ஆர்வத்தோடு கடவுளைத்தேடித் திரிந்தார். போகும்வழியில் அழகான பெண்ணொருத்தியைப் பார்த்ததும் அவர் மனம் தள்ளாட ஆரம்பித்து விட்டது. அப்பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று திண்ணையில் உட்கார்ந்துகொண்டார். கதவை மூடவந்த அப்பெண்ணின் கணவன், நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்? எனக் கேட்டான்.
அவள் அவனது மனைவி என அறிந்தும் ஆவலைப் அடக்க முடியாமல் அந்தப் பெண்ணின் அழகுப் பெருமையைக் கூறி அவளை ஒரே முறை பார்த்துவிட்டாலாவது தன் மனம் ஆறிவிடும் எனக் கூறினார். அவரது விருப்பப்படி தனது மனைவியை அழைத்துவர உள்ளே சென்றான்.
பில்வமங்களர் யோசித்தார், என்ன அறியாமை! அபச்சாரம் செய்தோம், இதற்கெல்லாம் காரணம் இந்தக் கண்தானே! இது இருப்பதால்தான் மீண்டும் தவறு செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, இது இல்லாமல் ஒழியட்டும் என நினைத்து, பக்கத்திலிருந்த வில்வ மரத்திலிருந்து முள்ளை ஒடித்துத் தன் கண்களைக் குத்திக்கொண்டார்.
தம்பதியர் வெளியே வந்தபோது, இரத்தம் ஒழுகும் கண்களோடு பக்திப் பரவசத்தில் ஆடிக்கொண்டிருந்தவரைப் பார்த்து வருத்தப்பட்டார்கள். கண்கள் இழந்த நிலையில் அங்கிருந்து கிளம்பி தரிகெட்டவரைப் போல கிருஷ்ணா கிருஷ்ணா என புலம்பியவாறு சுற்றிக் கொண்டிருந்தார்.
காட்டு வழியே போகும்போது மாடு மேய்க்கும் சிறுவன் வந்து, பெரியவரே உனக்குப் பசிக்கும், நான் போய் உணவு கொண்டுவருகிறேன் எனக் கூறிச் சென்றான். தினமும் தருவதாகவும் சொன்னான். இதனால் அவருக்கு அந்தச் சிறுவன் மீது பாசம் ஏற்பட்டுவிட்டது, தினமும் அவனைப் பார்க்க ஆவல் கொண்டார்.
ஒருநாள் அவருக்கு மனதில் சிந்தனை தோன்றியது. இவ்வளவு நாட்களாக எதை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடவுளை நெருங்கினேனோ, அதை மறந்து இந்தப் பையனின் மீது பாசம் வைத்துவிட்டேனே, இறைவா என்னை மன்னித்துவிடு என வேண்டினார்.
பிருந்தாவனம் போக ஆசையிருக்கிறதா? எனக்கேட்டான் பையன். இக்குருடனுக்கு அங்கு போக வழியை யார் காட்டுவார்? என விரக்தியோடு சொன்னார் பில்வமங்களர். உங்களது தடியைப் பிடித்துக்கொண்டு வழிகாட்டுகிறேன், வாருங்கள் செல்லலாம் எனக்கூறி அவரை அழைத்துச் சென்றான். நன்றி கூற அவனது கையைப் பிடித்தார் பில்வமங்களர்.
உடனடியாக அவரது உடலில் பரவச உணர்வு ஏற்பட்டது. இதுவரை தன்னுடன் இருந்ததும், வந்ததும் கண்ணன் என்பதைப் புரிந்துகொண்டார். கண்ணா என்னை விட்டுப் போகாதே என அழுது புலம்பினார். முடிந்தால் தக்கவைத்துக்கொள் என சொல்லிவிட்டுக் கண்ணன் கிளம்ப, , மாதவா! அச்சுதா, கோபாலா உன்னை என் உள்ளத்தில் கட்டிவைத்திருக்கிறேன், எங்கே சென்று விடுவாய் நீ? எனக் கேட்டுப் புலம்பினார்.
பகவானைத் தரிசனம் செய்து பிறகு அவரது திருவடித் தாமரையைப் பிடித்துக்கொண்டு வைகுந்தப் பதவிக்கு உயர்ந்தார்.
நீ பாவியாக இருந்திருந்தாலும் அதைப் பற்றி இப்போது வருந்தாதே. பாவத்தின் மீது எத்தனை வைராக்கியம் உள்ளதோ அதே வைராக்கியத்தை பகவான் மீது திருப்பினால் பில்வமங்களர் மாதிரி நீயும் ஆகமுடியும்!
பயப்படாமல் இருக்கும் நிலையிலிருந்து பக்தி செய்து முன்னோக்கி வா என்பதுவே உனக்குத்தரும் ஆசிர்வாதம் ஆகும்.
- ஸ்ரீ சாயி வரதராஜன்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...