Showing posts with label நீ என் தாசனாக மாறு. Show all posts
Showing posts with label நீ என் தாசனாக மாறு. Show all posts

Saturday, May 10, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 6

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 ஆத்ம விசாரணை செய்யவேண்டும்



பாபா சொன்னார்: “போய் உம்மிடத்தில் உட்கார்ந்து கொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் மலிவாகவே வாங்கலாம். ஆனால் உலகமெங்கும் தேடினாலும் ஆத்ம விசாரம் செய்யும் ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கடினம்.”



ஆத்ம விசாரம் என்பது, என்னைப் போல இவர்களும் நன்மை அடையவேண்டும் என நினைப்பது. மழை எல்லோருக்காகவும் பொழி கிறது,



சூரியனும் சந்திரனும் எல்லோருக்காகவும் ஒளிர்கின்றன. இருள் எல்லோருக்காவும் சூழ்கிறது. காற்று எல்லோருக்காகவும் வீசுகிறது. மண் எல்லோரையும் தாங்குகிறது. நெருப்பு எல்லோருக்காகவும் எரிகிறது. இதுதான் ஆத்ம விசாரம்.



தனது சேவையில் எதையும் பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! என்றார்கள்.



யாதும் ஊரே! யாவரும் நண்பர்! என்றார்கள். என்னாடு, என் மக்கள் என்றார்கள். எவ்வெவ்வுயிரும் என்னுயிரே என்றார்கள். உன்னைப் போல பிறனை நேசி என்றார்கள். அன்பே சிவம் என்றார்கள்.



இப்படி, அன்பால், அரவணைப்பால், இரக்கத்தால், கருணையால் பிறரை உண்மையாக நேசித்து அவர்களுக்கு உதவுவதுதான் ஆத்ம விசாரம்.



இவற்றையெல்லாம் நீ சரியாகச் செய்வாயானால், செய்ய முயற்சிப்பாயானால் அதுவே நீ சாயி பக்தனாக இருப்பதற்கானத் தகுதி. இந்த தகுதியை பெற்றுவிட்டால் உன்னை விட்டு இமைப்பொழுதும் பாபா நீங்கவே மாட்டார்.



      ஜெய் சாய்ராம்!                                                                                                                                        சாயி வரதராஜன்

Friday, May 9, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 5

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 சமபாவம் உள்ளவராக இருக்கவேண்டும்:



பாபா ராமதாசியிடம், ”ஒரு ராமதாசிக்கு ’என்னுடையதுள’ என்ற எண்ணமே உதவாது. எதையும், எல்லாரையும் சமபாவணையாகப் பார்க்கவேண்டும்.” என்றார்.



அதாவது, ஒரு சாயி பக்தனுக்கு சுயநலம் இருக்கக்கூடாது என்கிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருநாள் போகப்போகிறோம். அந்த நாள் இன்றாகவும் இருக்கலாம், நாளையாகவும் இருக்கலாம், நான்கு வருடங்கள் கழித்தோ, நாற்பது வருடங்கள் கழித்தோ வருவதாகவும் இருக்கலாம்.



நிரந்தரமானது எதுவுமில்லை. நன்மையோ, தீமையோ அவற்றுக்கு ஒரு முடிவு உண்டு. அது உன்னோடு முடிந்துவிடும். தொடராது. நல்லவை உனக்குப் பிறகும் தொடரவேண்டும், தீயவை உன்னோடு இன்றோடு முடிந்துவிடட்டும். இது எப்போது சாத்தியமாகும்? அனைத்தையும் சமமாகப் பார்க்கும்போது சாத்தியமாகும்.



நாங்கள் கோயில் கட்ட இடம் பார்த்தபோது, ஒரு தம்பி சொன்னார்் சார், நாங்கள் எஸ்.சி, எஸ்.டி வசிக்கிற பகுதி என்பதால் இங்கு கோயில் அமைவதை சிலர் விரும்பவில்லை. இதனால் வேறு விதமாக திசை திருப்புகிறார்கள்.. என்றார்.



இறைவனின் பார்வையில் எல்லோருமே எஸ்.சி. எஸ்.டி தான். அதாவது அவனது பட்டியலில் இடம் பெற்றவர்கள்தாம் நாம். பல ஜென்மங்களாக வந்து வந்து போகிற பழங்குடிகள் நாம். ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்திப் பார்ப்பது பாவம். பாபா



இதை அழகாகச் சொன்னார்: ”புலையனும் நானே, நோயாளியும் நானே, கருப்பு நாயும் நானே- நகரும் நகராப் பொருட்கள் அனைத்திலும் வியாபித்து இருப்பவனும் நானே”



ஆதிசங்கரர் ஒருநாள் கங்கையில் குளித்து விட்டு கோயிலுக்கு போய்க்கொண்டிருந்தார். புலாலை சுமந்தபடி நடந்த புலையன் ஒருவன் தற் செயலாக அவரைத் தொட்டுவிட்டான். அடே, என்ன அடாத செயல்? என்னை ஏன் தொட்டாய்? என அதட்டினார்.



அதற்கு அவன், ”ஆத்மாவை எதுவும் தொடமுடியாது. என்னை ஒதுங்கிப் போகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொன்னது எனது இந்த உடம்பையா? ஆத்மாவையா?” எனக் கேட்டான்.



ஆத்மாவில் மேலும் இல்லை. கீழும் இல்லை. இதை உணர்ந்துகொள்ள வேண்டும். சமபாவனை உணர்வு வர, சிந்திக்கவேண்டும். பாபா எல்லோரிடமும் உள்ளார். எல்லா நைவேத்தியத்தையும் சாப்பிடுகிறார். எல்லா குடிசைகளிலும் வசிக்கிறார். அருவருப்பான இடம் என அவருக்கு எதுவுமே இல்லை. அவருக்கே அப்படியென்றால், அவரது பக்தன் என்று சொல்லிக்கொள்கிற நான் எப்படியிருக்க வேண்டும்?



இப்படி நினைத்து சிறிது சிறிதாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்!

Thursday, May 8, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 4

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 மென்மையானவராக மாறவேண்டும்:



ராமதாசியைப் பற்றி சாமா என்ன சொன்னார் பாருங்கள்: அந்த ராமதாசி, இயற்கையாகவே துஷ்டர், முன்கோபி, பிடிவாதக்காரர், சுலபமாக டென்ஷனாகிவிடுபவர். சந்தேகப்படுபவர்.



அவரைப் பற்றிய பிற சான்றுகளைப் பாருங்கள்: ராமதாசி ஒரு முரட்டு மனிதர். அண்ணா பாபரே என்பவர் சொன்னதைக்கேட்டு சாமாவிடம் சண்டைக்குப்போனவர். அதாவது அடுத்தவர் சொல்லைக் கேட்டு நடப்பவர்.



அவரைப் பற்றி பாபா என்ன சொன்னார் பாருங்கள்: சண்டை விரும்பி, மென்மையாகவும், இனிமையாகவும் பேசாதவர், எந்நேரமும் போதி படித்தும் அசுத்த மனம் உள்ளவர். உலகியல் பொருட்களை உதாசினம் செய்யாதவர். அடம் பிடிப்பவர். கடவுளே சொன்னாலும் கேட்காதவர். இப்படிப்பட்டவர் ராம பக்தராக இருப்பதில் என்ன பிரயோசனம்? ராமனுக்கு அல்லவோ இழுக்கு? நீங்களும் பாபாவை வழிபடுவதாகச்சொல்லிக்கொண்டு, ராமதாசி போல நடப்பதால் யாருக்கு இழுக்கு? பாபாவுக்குத்தானே சாயி பக்தர் என்பவர் சாயியைப் போல மாறவேண்டும். சாயி எப்படிப்பட்டவர்?



தாயினும் சாலப் பரிந்தவர். கருணையே வடிவானவர். பாவத்தின் மீது கோபப்பட்டு, புண்ணியத்தைச்சேர்க்கிறவர். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல, எல்லோரையும் தாமாகப் பார்த்தவர். தனக்குக் கிடைத்ததை பேதமின்றி பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டவர். அனைத்தையும் வெளிப்படையாக வைத்திருந்தவர்.



மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா என்பார்கள். நீங்கள் நாமத்தைப் படிக்கப்படிக்க உங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். சாயி பக்தரான உமக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கவேண்டும். அது வெளியே தெரியவேண்டும். எல்லோரைப்போலவும் நடக்கக்கூடாது, அதில் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் உங்கள் மனதில் மென்மையாக வெளிப்பட வேண்டும். அன்பு கலந்த மனம் உங்களில் படைக்கப்பட வேண்டும்.

Wednesday, May 7, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 3

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்:



 



நிறைய பக்தர்கள் படிக்கிறார்கள், ஆனால் அதைப்பின்பற்றுவதில்லை. மேலோட்டமாகப் படிப்பதால் மனம் சுத்தமாகாது, விக்ஷயமும் தெரியாது. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.



அந்தக் காலத்தில் நிறைய மகான்கள் விஷ்ணு சகஸ்ர நாமாவளியைக் கொடுத்து மக்களைப் படிக்கவைத்தார்கள். விஷ்ணு சகஸ்ர நாமா வளியைப்படிப்பதோ, பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்து கொள்வதற்கு சுலபமான நேர்வழிப்பாதையாகும்.



நால்வர் தேவாரத்தில் சிவனைப் போற்றுகிற போற்றிகள் நிறைய உள்ளன. இவற்றை பாராயணம் செய்தார்கள். நமக்கு இவை வேண்டா எனத் தோன்றினால், சாயி சத்சரித்திரம் உள்ளது.



இதை வார்த்தை வார்த்தையாகப் படிக்கவேண்டும். படித்தால் மனம் சுத்தமாகிவிடும்.

Tuesday, May 6, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 2

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 



எப்போதும் நாமாவை ஜபிக்க வேண்டும்:



சாமாவுக்கு நாமத்தின் மகிமையைப் பற்றிச் சொன்ன பாபா, நாமா மலை போன்ற பாவங்களையும் அழிக்கும். நாமம், தேகாபிமானத்தை உடைக்கும். நாமம் கோடிக் கணக்கான தீய நாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும். நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும். ஜனன மரண சுழலில் இருந்து விடுவிக்கும்.



முயற்சி செய்து, நாம ஜபம் செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் ஜபம் உன்னதமானது.



அந்த உணர்வு இல்லாமல் சும்மா சொன்னாலும் அதன் பலன் சோடை போகாது. எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும்பலன் தரும். நம்மைப்பரிசுத்தப்படுத்திக் கொள்ள நாம ஜபத்தைவிட, சுலபமான வழி வேறு எதுவும் தேவையில்லை.



நாமமே நாக்குக்கு அணிகலன், நாமம் ஆன்மீக வாழ்க்கையை வளமாக்கும் உரம். நாம ஜபம் செய்வதற்கு நீராடத் தேவையில்லை, சடங்கு சாஸ்திரம் பார்க்கவேண்டியதில்லை. நாம ஜபம் செய்தால் மட்டும் போதுமானது. வேறு வித உபாசனை தேவையில்லை. நாம ஜபம் எல்லா பாவங்களையும் அழிக்கும் பவித்திரமானது.



பாபா சொன்னார்: ”எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வ காலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப்பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரை விட சிறந்தவராகிறார். என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தால், அக்கரை சேர்ந்துவிடுவீர்கள். வேறு உபாசனை ஏதும் தேவையில்லை. அதுவே மோட்சத்தை அளிக்கும். (அத்:27)



நாம ஜபத்தை எந்நேரமும் ஜபிக்கலாம். தடங்கலே கிடையாது, வழிபாடு செய்யக்கூடாத நாட்களிலும் நாம ஜபம் செய்யலாம்.பாபா பக்தராக விரும்புகிறவர், தனது பாவங்கள் போகவும், தான் பரிசுத்தமடையவும், வாழ்வில் உயரவும், இறைவனை அடையவும் நாம ஜபம் செய்யவேண்டும்.

Monday, May 5, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 1

Image

ஒருவர் சாயி பக்தராக வேண்டுமானால் பிரச்சினையை முன்னிறுத்தி பிரார்த்தனை செய்தால் போதும், ஒன்பது வார விரதமிருந்தால் போதும், சப்தாகம் எனப்படுகிற ஏழு தினங்களுக்குள் சாயியின் சத்சரித்திரத்தைப் படித்தால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள்.



இவையெல்லாம் நமது வேண்டுதல் நிறைவேறுவதற்கான நேர்த்திகளே!



பாபாவின் பக்தராக வேண்டுமானால் வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஒரு சில வழியை மட்டும் பார்க்கலாம்.



எப்போதும் அவரது நாமாவை ஜபிக்க வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மென்மையானவராக மாறவேண்டும். சமபாவம் உள்ளவராக இருக்கவேண்டும். ஆத்ம விசாரம் செய்யவேண்டும்.



இப்படி செய்தால்தான் ஒருவர் சாயி பக்தராக மாறமுடியும். இதற்கு ஆதாரம் இருக்கிறதா சாயி எனக் கேட்கலாம்.



சத்சரித்திரம் இருபத்தேழாம் அத்தியாயத்தில் இதற்கான பதில் இருக்கிறது.



பாபாவின் தீவிரமான பக்தரான சாமாவுக்கு அருள் செய்யவேண்டும் என்ற எண்ணமும், மசூதிக்கு வழக்கமாக வந்து ராமாயணம் படிக்கிற ராம பக்தரை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பாபா மனதில் எழுந்தது. அதற்காக ஓர் உபாயம் செய்தார் பாபா.



வழக்கமாக காலையில் ராமாயணத்தையும், விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த ராம பக்தரைக் கூப்பிட்டு, ”எனக்குத் தாங்கமுடியாத வயிற்றுவலி. குடலே வெடித்துவிடும் போலிருக்கிறது. சீக்கிரம் போய் பேதி மருந்து வாங்கிவாரும். ஒரு சிட்டிகை வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.



தான் படித்துக்கொண்டிருந்த பகுதியில் அடையாளம் வைத்துவிட்டு, ராமதாசி கடைக்குப்போனார். அவர் சென்றதும், இருக்கையிலிருந்து எழுந்துவந்து, அங்கிருந்த புத்தகங்களில் விஷ்ணு சகஸ்ர நாம புத்தகத்தை எடுத்து வந்த பாபா,



சாமாவிடம், அதன் பெருமையைச் சொன்னார், “ ”சாமா, இந்தப் புத்தகம் பரம மங்களத்தை அளிக்கக்கூடியது. நான் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டேன். உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்ட நிலையில், இதை எனது மார்பின் மீது வைத்துக்கொண்டேன். உடனே இதயப் படபடப்பு நீங்கி நலமடைந்தேன். இதை நீ வைத்துக்கொள்.. தினமும் ஒரு நாமாவைப் படித்து அதை தியானம் செய். உனக்கு மங்களம் உண்டாகும்” என்றார்.



அடுத்தவர் பொருளை வாங்க விரும்பாத சாமா, ”நான் இதைத் திருடிவிட்டதாக இந்த ராமதாசி சண்டை போடுவார். இது சமஸ்கிருதத்திலுள்ளது. எனக்கு உச்சரிப்பு சரியாக வராது” என மறுத்தார்.



ஆனால் பாபா வலுக்கட்டாயமாக அவரது கையில் அந்தப் புத்தகத்தைத் திணித்துவிட்டார். இந்த நேரத்தில் அங்குவந்த ராமதாசி, சாமாவின் மேல் கோபம் கொண்டு சண்டை போட்டார். பாபா அவர்களை சமாதானப்படுத்தினார். இந்த நிகழ்வின் போதுதான், பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளை இனி ஒவ்வொன்றாக இனி பார்ப்போம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...