Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Friday, January 31, 2014

நரசிம்ம சுவாமி - தொடர் பாகம் 3

நரசிம்ம சுவாமி சேலத்தில் வாழ்க்கை
     வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து பாடம் கற்பித்தச் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர் . நரசிம்மர் மற்றச் சிறுவரைப் போல அல்லாமல் மிகவும் புத்திசாலியாகவும் , துறுத்துறுப்பானவராகவும் இருந்தார் . பள்ளியில கூறப்பட்ட பாடங்களில் இருந்த அப்பியாசங்களை தானே சோதனை செய்து பார்த்தால் ஒழிய நம்ப மறுத்தார் . நமக்குத் தெரியாத , புரியாத , நம் அறிவுக்கு அப்பாற்பட்டதை தெரிந்து கொள்ள முயன்றார் . உலக நிகழ்வுகளை படிக்கத் துவங்கியவர் மனதை அமைதி இன்மை ஆக்ரமித்தது .
     இயற்கையிலேயே உடல் வலிமை கொண்டிருந்தவர் புதுமையாக எதையேனும் செய்ய நினைத்தார் . தன்னை சுற்றி உள்ள நண்பர்கள் சோம்பேறித்தனமாக , துடிப்பின்றி , எந்த பிரச்சனைக்கும் முடிவு காண முடியாமல் தவித்தபடி இருந்ததைக் கண்டார் . ஆகவே அவர்களுடன் தாமும் சேர்ந்து இருந்தால் எங்கே தாமும் அவர்களைப் போல ஆகிவிடுவோமோ என பயந்தார் . மந்தமாக இருப்பது தற்கொலைக்கு சமம் என நினைத்தார் .
     அவருடைய பெற்றோர்களான அங்கச்சியம்மாளும் வெங்கடகிரி ஐயரும் அவரை பக்தி மார்க்கத்தில் வைத்து வளர்த்திருந்தனர் . செல்வந்தர்கள் என்றாலும் தாராள மனம் படைத்தவர்கள் . தம் தோட்டத்தில் விளைந்த தேங்காய் ,மாங்காய் போன்றவற்றை தம் உபயோகத்துக்கென வைத்திருந்தது போக மீதியை நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் , வேலையாட்கள் என அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள் . தம்முடைய வாழ்வில் பின்னாளில் அது குறித்துக் கூறிய நரசிம்மசுவாமி தன்னுடைய தாயாரிடம் இருந்தே ஒருவர் தன வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய சமூக தர்மத்தை தாம் கற்று அறிந்ததாகக் கூறினார் .
     நரசிம்மசுவாமியின் தந்தை பக்தி மார்க்கத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்ததினால் மாலை வேளைகளில் நண்பர்கள் , அக்கம்பக்கத்தினர் வேலையாட்கள் என அனைவரையும் அழைத்து ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து சில பகுதிகளை படித்துக் காட்டி சொற்பொழிவு ஆற்றுவார் . அது போல பண்டிகை நாட்களிலும் சாதுக்கள் , சன்னியாசிகளை வீட்டிற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றுமாறுக் கூறுவார் . ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து எடுத்த காட்சிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவார் .
     அதனால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த நரசிம்மசுவாமிக்கும் சாதுக்கள் , சன்னியாசிகளின் மீது தன்னை அறியாமலேயே ஒரு ஈடுபாடு ஏற்பட்டது . அனைவரும் அந்த சாதுக்கள் , சன்னியாசிகளுக்குக் கொடுத்த மரியாதையை கண்டவருக்கு தாமும் அவர்களைப் போல சாதுவாக , சன்னியாசியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .
     நரசிம்மசுவாமியின் தந்தை மூட நம்பிக்கைகளைக் கொண்டவர் அல்ல.  தம் மதத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களையும் தம் வீட்டில் நடைபெற்ற பஜனைகளில் , பூஜைகளில் கலந்துக்கொள்ள அழைப்பதில் பாகுபாடே காட்டவில்லை . அது குறித்து பின்னர் நரசிம்மசுவாமி கூறிய பொழுது தம்முடைய வாழ்வில் தூய்மையான வாழ்வை கடைப்பிடித்தத்தின் காரணம் தம்முடைய தந்தையிடம் இருந்து அவற்றைக் கற்று அறிந்ததுதான் என்றார் .
      நரசிம்மசுவாமி வாழ்க்கை முறையை வடிவமைத்ததில் அவருடைய தாயாரின் பங்கு மிகவும் அதிகம் . தன்னுடைய மகன் பக்தி மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடல்களை பாடிக் காட்டுவார் . ஊரில் எந்த சாதுக்கள் , சன்னியாசிகள் வந்தாலும் அவர்களை தம் வீட்டிற்க்கு அழைத்து விருந்து உபசாரம் செய்வதை நரசிம்மசுவாமியின் பெற்றோர்கள் ஒரு நியமமாகவே வைத்து இருந்தனர் . சிருங்கேரி சுவாமிகளும் காரைக்காலில் இருந்த சுரக்காய் சுவாமிகளும் நரசிம்மசுவாமியின் மனதில் பெரும் இடத்தை பிடித்து இருந்தனர் . ஆதி சங்கராச்சாரியாரின் அவதாரமாகக் கருதப்பட்ட சிருங்கேரி சுவாமிகளிடம் சிறு வயதில் அவர் சென்று இருந்த பொழுது ஸ்வாமிகள் நரசிம்மசுவாமி கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தாராம் . அதன் பின் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்மபாரதி அங்கிருந்து சென்று விட்டார் . அப்போதுதான் அந்த சிருங்கேரி ஸ்வாமிகள் தரையில் தம் பாதங்கள் படாமல் வேக வேகமாகச் செல்வதை நரசிம்மசுவாமி கவனித்தார் . அவரை தாம் சிறு வயதில் சந்தித்த பொழுது அவர் நேருக்கு நேர் பார்த்த பார்வையில் இருந்த காந்த சக்தியை தம் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாகக் கருதியதாகவும் அதை தம்மால் மறக்கவே முடியாது எனவும் நரசிம்மசுவாமி கூறினார் .
     1882 ஆம் ஆண்டில் அவருக்கு பூணூல் போடப்பட்டது . காயத்ரி மந்திரத்தை தந்தை வெங்கடகிரி ஓத , வீட்டு வைதீகர் சந்தியாவந்தனத்தைக் கற்றுக் கொடுத்தார் . தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்துகொண்டும் வேத பாடசாலையில் ருத்ரம் , சமகம் , ஸ்ரீசூக்தம் போன்றவற்றையும் கற்று அறிந்தார் . பக்கத்து வீட்டில் இருந்த அலமேலு என்ற பெண்மணி அவருக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்தார் .
     நரசிம்மசுவாமியுடைய தாயார் தினமும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிய பின்னால் , பசுவுக்கு சிறிது உணவு தந்தபின்னரே உணவு அருந்துமாறு அவரிடம் கூறி இருந்தாள். அதற்குக் காரணம் கேட்டபொழுது , மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாம் உணவு அருந்துவது பாவம் என்றாளாம் அங்கச்சியமாள் தினமும் ஏழைகளுக்கும் தானம் செய்வது உண்டு .
     அப்படி ஒரு நாள் ஒருவருக்கு பிச்சை போட்டதை,  நரசிம்மர் கண்டித்தார் . அநத ஆள் அதற்குத் தகுதியானவன் அல்ல என அவர் கூறியபோது , அவருடைய தாயார் அவரிடம் , நரசிம்மா, தானம் கேட்டு வருபவன் தகுதியானவனா, இல்லை தகுதி இல்லாதவனா எனத் தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை . தானம் கேட்டு வரும் எவருமே கடவுளின் அவதாரமே , ஆகவே அவர்களுக்கு தானம் தருவது நமது கடமை என்றாளாம் .
     அது போலவே சமூகத்தினால் கீழ் ஜாதியினர் , தீண்டப்படாதவர் என ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய தாயார் உதவி வந்தாள் . அது குறித்து பின்னர் கூறிய நரசிம்மசுவாமி தம்மிடம் உள்ளவற்றை கொடுப்பவரே கடவுள்.  அதைச் செய்யாமல் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் பேய்களுக்கு சமம் என்றார் . தனது தாயார் அங்கச்சியம்மாள் கடைப்பிடித்து வந்த அந்தக் கொள்கையே கர்மயோகம் என்றார் . மனித ஜீவன்களை சிவபெருமானாகக் கருதி அதை தம்முடைய வாழ்விலும் கடை பிடிப்பவர் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் . அவர்களே புனிதமானவர்கள் என்ற தத்துவார்த்தமான உண்மையையும் புரிந்து கொண்டார் .
     அக்கம்பக்கத்தினர் உதவி கேட்டு வந்த பொழுதெல்லாம் உதவ அவருடைய தாயார் தயங்கியதே இல்லை . ஒருமுறை அடுத்த வீட்டில் இருந்தவள் சுகம் இன்றி இருந்த போது தம் வீட்டில் சமையலை முடித்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் பொய் சமைத்து கொடுத்தவளிடம் நரசிம்மர் அம்மா நீ சுயநலம் பிடித்தவளாக இருக்கின்றாயே . முதலில் அவளுக்கு சமைத்துப் போட்டுவிட்டு வந்து அல்லவா  நம் வீட்டில் சமைக்க வேண்டும் என்ற பொழுது அவருடைய தாயார் கூறினாராம் , நான் அப்படிச் செய்து இருந்தால் அவர்கள் சாப்பிடப் போகும் முன், அந்தச் சமையல் ஆறிப் போய்விடாதா ? ”. அந்த வார்த்தைகள் அவருடைய மனதில் ஆழப் பதிந்தன .
     அப்படிப்பட்ட விசாலமான மனது கொண்ட தாயார் அவருக்கு குருவாக இருந்தாள் . பிற்காலத்தில் நரசிம்மசுவாமி தன்னைப் பற்றி அதிகம் கூறிக் கொண்டது இல்லை . மாறாக தம்முடைய தாய் தந்தையின் வாழ்க்கை நெறியும் தத்துவமும் தம்மை நல்ல முறையிலான வாழ்கையை அமைத்துக் கொள்ள எப்படி எல்லாம் உதவின என்பதை அடிக்கடி கூறுவது உண்டு . சேலத்தில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவர் மேல் படிப்பு படிக்க சென்னைக்குச் சென்றார் .

………தொடரும்

நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 1
நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 2

நன்றி:

http://shirdisaibabatamilstories.blogspot.in


Tuesday, January 28, 2014

நரசிம்ம சுவாமி - தொடர் பாகம் 2

நரசிம்ம சுவாமி பிறப்பும் இளம் பருவமும்
     தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள பவானி என்ற இடம் வெகு காலமாகவே புனிதத்தலம் என கருதப் பட்டு வந்த இடம் ஆகும். அங்குள்ள சங்கமேஷ்வர் மற்றும் பவானி தேவியை வணங்கி துதிப்பதற்கு நாடு முழுவதும் இருந்தும் பல பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருவதுண்டு. அவர்களின் எண்ணிக்கையோ சொல்லி மாள முடியாது. காவேரி, பவானி மற்றும் குப்தா காமினி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தை திருவேணி சங்கம் என்று கூறுவார்கள்.
     ஸ்ரீவத்ச கோத்திரத்தை சேர்ந்த வெங்கடகிரி ஐயர் மற்றும் அவருடைய மனைவியான அங்கச்சி அம்மாள் என்ற பிராமணத் தம்பதியர் சங்கமேச்வரர் மற்றும் பவானி தேவியை வணங்கி தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி வந்தனர். ஒருமுறை அவர்களைச் சந்தித்த சாது ஒருவர் அவர்களை அங்குள்ள ஷோலங்கர் நகருக்கு சென்று நரசிம்மரை தரிசித்தால் அவர்களது வேண்டுகோள் நிறைவேறும் என்று கூற,  அவர்களும் ஷோலங்கருக்குச் சென்று அங்கு நரசிம்மரைத் துதித்தனர்.
     அவர்களுடைய வேண்டுகோள் பலித்தது. அங்கச்சியம்மாள் கருத்தரித்தாள். 1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதியன்று, சிராவண பஞ்சமி தினத்தன்று மாலை வீட்டில் இருந்த மாடுகள் வெளியில் சுற்றித் திரிந்தபின் வீடு வந்து சேர்ந்த கோதுலி முகூர்த்த வேளையின் பொழுது, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை விசித்திரமான சூழ்நிலையில் பிறந்தது.
     கருத்தரித்து இருந்த அங்கச்சியம்மாள்,  வீட்டின் பின் புறத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது,  எந்த விதமான பிரசவ வலியும் இன்றி, எவருடைய துணையும் இன்றி,  வீட்டின் முற்றத்திலேயே நரசிம்மசுவாமி என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை பிறந்தது.
     தான் பிறக்கும் இடம் வீட்டிற்கு உள்ளே இல்லாமல் அனைவருக்கும் பொதுவான இடத்தில் , பரந்த வெளியில், ஆகாயத்தின் கீழே பிறக்க எண்ணியதின் விளைவே அது. மெல்லிய காற்று இதமாக வீச, பவானி ஆற்றில் சலசலத்து ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர் அற்புதமான ஒலி ஓசை எழுப்ப, அந்த இடமே ஒரு அமைதியான சூழ்நிலையை தந்து கொண்டு இருந்தது.
     பிறந்த குழந்தை நரசிம்மர் தந்த பரிசு என எண்ணிய பெற்றோர்,  அதன் எடைக்கு எடை தங்கமும் வெள்ளியுமாக ஷோலங்கர் ஆலயத்துக்குக் கொடுத்தனர். குழந்தை ராம பிரானின் நட்சத்திரமான கடக ராசி, புனர்வசுவின் நான்காம் பாதத்தில் பிறந்ததினால், அதனுடைய தந்தை அதற்கு ராமநாதன் எனப் பெயர் இட்டார். ஆனால் அங்கச்சி அம்மாள் கேட்டுக்கொண்டதினால் நரசிம்ம பெருமாளின் நினைவாக இருக்கட்டும் என நரசிம்மர் எனப் பெயர் வைத்தார்.
     அப்படிப்பட்ட புனிதமான நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதி சங்கரர், ரமண மகரிஷி, போன்றவர்கள். அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்தவர்கள் அது பிற் காலத்தில் பெரிய மகானாக இருக்கும் என்றனர்.
     பவானி ஆற்றின் பக்கத்தில் பெரிய நிலப் பரப்பில் தேங்காய், மாங்காய் என்று பல மரங்கள் இருந்த தோப்புடன் கூடிய இடத்தில் அவருடைய தந்தையின் வீடு இருந்தது. அவர் பெரிய வழக்கறிஞ்ஞர்.
     காலம் ஓடியது. மிகவும் குறும்புக்காரராகவும், புத்திசாலியுமாகவே நரசிம்மர் வளர்ந்து வந்தார். வீட்டிற்கே ஆசிரியர் வரவழைக்கப்பட்டு பாடங்கள் போதிக்கப்பட்டன. நரசிம்மர் தனது நண்பர்களை அழைத்து வந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பார். மற்ற சிறுவர்களிடம் வேலையும் வாங்குவார்.
     நரசிம்மர் இயற்கையிலேயே தலைவரைப் போலவே இருந்தார். மற்றவர்களை அடக்கி ஆண்டார். ஆனால் அவர் எவருக்கும் அடங்க மாட்டார். எவருடனும் சண்டைக்குப் போக மாட்டார், ஆனால் வந்த சண்டையை விடவும் மாட்டார். நீதி மறுக்கப்பட்டால் அவரால் அதை ஏற்க முடியாது. அதனாலேயே பல சமயங்களில் அவர் உணர்ச்சி வசப்படுவார். தன்மானமும் தனித்தன்மையையும் கொண்டவராக இருந்ததினால்தான் அவரை எவராலும் ஏமாற்ற முடியவில்லை. அதனால்தானோ என்னவோ அவர் மற்றவர்களுடன் அதிகம் பழகியதும் இல்லை.
     அவருடைய தாயார் அவருக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததாலும், அவருக்கு தலைக்கனம் ஏற்படவில்லை. எத்தனை வேலை செய்தாலும் முகம் அதே பொலிவுடன் இருந்தது அவருக்கு இயற்க்கை தந்திருந்த பரிசு. சிறுவராக இருந்தாலும் முதிர்ந்த அறிவு கொண்டு இருந்தார்.
     நரசிம்மருக்கு மூன்று வயதான பொழுது அவருடைய தாயாருக்கு இன்னொரு மகன் பிறந்தார். அதற்கு லஷ்மணா எனப் பெயரிட்டனர். ஆனால் விதி விளையாடியது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயதான பொழுது அவனை எவரோ கடத்திச் சென்று, அதன் உடம்பில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு அதை கொன்று போட்டுவிட்டுச் சென்று விட்டனர். அது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
     லஷ்மணாவின் மரணத்துக்குப் பின் பவானி நதிக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை நரசிம்மர் கால் தவறி பவானி நதியில் விழுந்துவிட , அதை வயலில் வேலைப் பார்த்து வந்த ஒருவர் காப்பாற்றினார்.
     அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்,  அந்தக் குழந்தை ஒரு கண்டத்தில் இருந்து தப்பி விட்டதினால், எண்பது வயது வரை உயிருடன் இருக்கும் எனவும், ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை தந்தார். அது மட்டும் அல்ல, அந்தக் குழந்தை பிற்காலத்தில் பலரது வாழ்வை நிர்ணயிக்கப் போகும் மனிதராக இருப்பார் என்றும் அதனால் ஒருவேளை அவர் குடும்பத்தை விட்டு விலகி இருக்கவும் கூடும் என்றும் கூறினார். ஏற்கனவே ஒரு குழந்தையை பறி கொடுத்து விட்டதினால் அவர்களால் அதை ஏற்க முடியவில்லை.
     அவருடைய தாயாருக்கு அப்போது வயது முப்பத்தி எட்டு ஆயிற்று. அவருடைய பெற்றோர்கள் சங்கமேஷ்வரரிடமும், பவானி தேவியிடமும் தம்முடைய மகன் சன்னியாசியாக மாறிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டு, அதற்காக இனி தாம் இருவரும் சன்னியாச வாழ்க்கை வாழ்வதாக சபதம் ஏற்றுக் கொண்டனர்.
அதே நேரம் வெங்கடகிரி ஐயர் ஜோதிடரின் ஆலோசனைப்படி வீட்டை விற்றுவிட்டு அந்த ஊரின் அருகில் இருந்த சேலத்தில் சென்று வசிக்கலானார். அங்கு சென்று தன்னுடைய வக்கீல் தொழிலை தொடர்ந்தார்.

.........தொடரும்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...