Saturday, August 15, 2015

குழந்தை பிறக்கும்!



தினத்தியானம் 5
”இப்பாதங்கள் மிகவும் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை.  என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்”                                                                         (அத் ; 48)
குழந்தை பிறக்கும்!
சோலாப்பூர் மாவட்டம் அக்கல்கோட் என்ற ஊரைச் சேர்ந்தவர் சபட்ணேகர். ஒரு வக்கீல்.
திருமணம் நடந்து பத்தாண்டுகள் கழித்தபிறகு. அவரது மகன் திடீரென காலமான பிறகு, வாழ்க்கையில் நிம்மதியை இழந்த அவர், பல புனிதத்தலங்களுக்குப் போய் வந்தார். அப்படியும் மனதிற்கு சமாதானம் கிடைக்கவில்லை.
சீரடிக்கு வந்தார். பாபாவோ ”வெளியே போ” என விரட்டிவிட்டார். மனம் நொந்து திரும்பிய சபட்ணேகர், மறு ஆண்டும் வந்தார். அப்போதும் பாபா ”வெளியே போள” என விரட்டினார். இதனால் அவர் போக்கிடம் இல்லாமல் கலங்கினார்.
ஒரு நாள் அவரது மனைவிக்கு ஒரு கனவு. நீர் எடுக்க கிணற்றுக்குச் செல்கிறாள், அங்கே வேப்ப மரத்தடியில் ஓர் துறவி அமர்ந்துகொண்டு,இவரைப்பார்த்ததும், ”தாயே எதற்கு ஆயாசம்? நான் நிரப்பித் தருகிறேன்” எனக் கேட்கிறார். அவரைப் பார்த்து பயந்து ஓடி வந்த போதும், அந்தத் துறவி, இவளை தொடர்ந்து துரத்துவது போல கனவு கண்டாள்.
கனவைப் பற்றி கணவரிடம் சொன்னபோது, ”நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது” என்று கூறி, பாபாவிடம் மீண்டும் சீரடிக்கு வந்தார். இப்போதும் பாபா,  “வெளியே போ” என்றுதான் சொன்னார். இந்த முறை சபட்ணேகர் போகவில்லை.
பாபாவின் பாதங்களின் மீது தலையை வைத்து, அவரது பாதங்களை மெதுவாக வருடிக் கொடுத்தார். தாயன்பு மிக்க பாபா, அவரை ஆசீர்வதித்து, ”இறந்த குழந்தைக்கு வருந்தாதே! அதை மீண்டும் இதே கருப்பையில் வைக்கிறேன் இப்பாதங்கள் மிகவும் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்”  என்றார்.
சபட்ணேகர் சீரடியில் தங்கி தினமும் பாபாவை தொழுவார். அடிக்கடி நமஸ்காரம் செய்துகொண்டே இருப்பார். இதை கவனித்த பாபா,  “நீ ஏன் அடிக்கடி வணங்குகிறாய். பணிவுடனும் அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்!”  என்றார்.
அவர்கள் விடைபெறும்போது, ஒரு தேங்காயை எடுத்துக் கொடுத்து,  “இதை உன் மனவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும் படாமல் சவுகரியமாகப் போய் வா!”  என ஆசீர்வதித்தார். அவருக்கு அடுத்த ஆண்டே முரளிதரன் என்ற பெயருடைய மகன் பிறந்தான்.
சபட்ணேகர் சாயி பக்தியோடு வாழ்ந்தார். பாபா, வெளியே போ என அதட்டி விரட்டியது அவரையல்ல, அவருக்குள் இருந்த கவலையை, மன இறுக்கத்தை, கர்மாவை, அவநம்பிக்கையை. நீங்கள் நம்பிக்கையோடு பாபாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிக் கொண்டதில் உறுதியாக நில்லுங்கள். நிச்சயமாக உங்களுக்குக் குழந்தைப்பிறக்கும். புதிய தேவைகள், வசதி வாய்ப்புகள் போன்ற அனைத்தும் உருவாகிக் கிடைக்கும்.
பிரார்த்தனை
எங்கள் மீது எப்போதும் அன்பு கொண்டுள்ள சமர்த்த கடவுளான சாயி பாபாவே, உங்கள் திருவடித்தாமரைகளை வணங்குகிறோம்.
எங்களுடைய பாரங்கள் அனைத்தையும் உங்கள் மீது இறக்கிவைக்கிறோம். தேற்றுவார் இல்லாததாலும், மருத்துவர்கள் கைவிட்டதாலும், குழந்தைப்பேறு மிகவும் கடினமானதாக இருப்பதாலும் நாங்கள் குழம்பியிருந்தோம். இதனால் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதில் சிரமமாக இருந்தது. எங்கள் சிரமத்தைப்போக்கி, குழந்தை வரம் அருளவேண்டும் எனப்பிரார்த்திக்கிறோம். அருள்வீராக.

Friday, August 14, 2015

இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள்!

தினத்தியானம் 4
” இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை யுகம் முடியும்வரை அடைய மாட்டார்! இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.
இது சாதாரண மசூதி அன்று.  ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப்பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.
சாயி சத்சரித்திரத்திலிருந்து       
இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள்!
நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த மாலே காங்வ் ஊரைச்சேர்ந்த டாக்டர் முல்கி என்பவரின் அண்ணன் மகன், விலா எலும்பில் புரையோடிய ரணம் இருந்தது. முல்கி மிகப் பெரிய அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தும், அவனை காப்பாற்ற இயலாத நிலையில் இருந்தார்.
சிகிச்சைகளும், வழிபாடுகளும் பலன் தராத நிலையில் செய்வது அறியாமல் திகைத்தார்கள். அந்த நேரத்தில் ”சீரடியில் ஒரு முஸ்லிம் மகான் இருக்கிறார். அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளை நிவர்த்தியாக்குகிறது. அவரது கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணம் அடைகின்றன” என்று டாக்டர் கேள்விப்பட்டார்.
இதை தன் அண்ணனிடம் சொன்ன போது,  “பாபாவின் பாதங்களை வணங்குவதற்காகப்போவோம். கடைசி முயற்சியையும் செய்து பார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும் என முடிவெடுத்து, சீரடிக்கு வந்தார்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் பாபாவைப் பார்த்த மாத்திரத்தில் துக்கத்தால் மனம் உடைந்து கதறினார்கள்.
”ஓ!  சமர்த்த சாயி! மகன் படும் வேதனையையும், அனுபவிக்கிற துக்கத்தையும் பார்க்க சகிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. நாங்கள் இவனுக்கு சிகிச்சை செய்து களைத்து விட்டோம். உங்கள் மகிமையைக்கேள்விப்பட்டு இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம். முழுமையாக உங்களை சரணடைகிறோம். உங்களுடைய  அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய நோயைப்போக்குங்கள், இவனது உயிரை தானமாக எங்களுக்கு தருவீர்களாக” என்று வேண்டினார்கள்.
பக்தன் அழுதால் தாங்காத கருணை உள்ளம் படைத்த வரான சாயிநாதன், ஆறுதல் கூறினார்: ” இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை யுகம் முடியும்வரை அடைய மாட்டார்! இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.
இது சாதாரண மசூதி அன்று.  ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப்பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.
இங்கு வந்தவர் நிவாரணம் பெற வில்லை என்பது, சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நடக்காத விக்ஷயம். உம் காரியம் கைகூடும் என்பதை அறிவீர்களாக” என்று வாக்குறுதி அளித்தார்.
பையனை தன் எதிரில் உட்கார வைக்கச் சொன்னார். அவனது தலையை அன்போடு வருடிக்கொடுத்தார். கால்களை தடவி விட்டார். அன்போடு பார்த்தார். சாயி தரிசனம் உடலில் மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தந்த உதி எட்டு நாட்களில் கொடிய காயத்தை ஆற்றியது.
அவர்கள் நான்கு நாட்கள் சீரடியில் தங்கி பாபாவை தரிசனம் செய்து வீடு திரும்பிச் சென்றார்கள். எப்படிப்பட்ட நோயையும் உதி குணமாக்கும் அற்புதம் பாபாவின் அருட்பார்வைக்கு உண்டு.
பிரார்த்தனை
சமர்த்த சாயி நாத குருவே!
உங்கள் குழந்தையான நாங்கள் படும் பாட்டை அறிந்து தயவு கூர்ந்து விரைவாக எங்கள் நோயை போக்கியருள வேண்டும் எனப்பிரார்த்தனை செய்கிறோம்.
உங்கள் உதியால் எங்களுக்கு விரைந்து தீர்வு தருவீராக.

Thursday, August 13, 2015

கவலைப்படவேண்டாம்!

தினத் தியானம் 3
”மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம், தரையானது மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால் நீர் அதைப் பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்”                                          அத்: 22
 
கவலைப்படவேண்டாம்!

கோபர்காங்வ் தாலுகாவில் கொராலே என்ற கிராமத்தைச் சேர்ந்த அமீர் சக்கர் என்ற ஒரு தரகர், தனது முடக்குவாத நோயைத் தீர்க்குமாறு பாபாவிடம் முறையிட்டார்.
அவருக்கு உடனடியாக நிவாரணம் அளிக்காமல், சாவடியில் தங்குமாறு பாபா கூறினார். பாபாவின் சாவடி மிகப் பழையது. மேற்கூரையும், கீழ்த்தளமும் சிதிலம் அடைந்திருந்தது.
விரிசல்கள் நிறைந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது போன்ற அந்தக் கட்டிடத்தில் தேள்களும்,ஓணான் போன்ற ஜந்துக்களும் சர்வ சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தன.
போதாக் குறைக்கு குஷ்டரோகிகள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எச்சில் இலைகள் அந்தப் பகுதியில் வீசப்பட்டதால் நாய்கள் வேறு இருந்தன. சாவடியின் பின்பகுதியில் இடிபாடுகள் கொட்டப்பட்டு முழங்கால் ஆழத்திற்குப் பல குழிகள்
இருந்தன. அது மட்டுமல்ல, அது மழைக்காலம். கூரையிலிருந்து மழைநீர்  ஒழுகியது. தரை முழுவதும் ஈரம் தேங்கி ஓதம் ஏற்பட்டிருந்தது. இவற்றினூடே கடுமையான குளிர்காற்று வீசியது.
இந்த இடத்தில் எப்படி தங்குவது என அமீருக்கு கவலையாக இருந்தது. அதைப் புரிந்துகொண்ட பாபா அவரிடம்,  “மழை பெய்யலாம், இடம் ஓதமாக இருக்கலாம், தரையானது மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால் நீர் அதைப்பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்.  சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்!”  என்று கூறினார்.
அந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடையாது. தரிசனத்திற்குக் கூட அனுமதியில்லை. சக்கர் ஒன்பது மாதங்கள் வரையில் அந்த சாவடியில் தங்கியிருந்தார். குளிர் காற்றில் மூட்டுகள் விறைத்துக் கொண்டன. படுத்த படுக்கையாக இருந்து துன்பப்பட நேரிட்டது.
சாவடியில் பாபா ஒருநாள் விட்டு ஒருநாள் படுத்துக்கொள்வார். பாபாவுக்கும் அமீருக்கும் இடையே ஒரு மரப்பலகையிலான தடுப்புக் கதவு மட்டுமே இருக்கும். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொள்வார்கள்.
இன்று குணமாகும், நாளைக்குக் குணமாகும் என எதிர்பார்த்த அமீர்சக்கருக்கு வியாதி குணமானதாக தெரியவில்லை. மாறாக சாவடி என்கிற சிறையில் அடைபட்டது போன்ற நிலை தோன்றியது.
இங்கிருந்து வேறு எங்கேனும் ஓடிப் போக வேண்டும் என்று நினைத்தவராக, பாபாவிடம் சொல்லாமல் கோபர் காங்வ் என்ற இடத்திற்கு ஓடிச்சென்றார். அன்றைய இரவைக் கழிக்க அங்கிருந்த ஒரு தரும சத்திரத்தில் தங்கினார்.
தர்ம சத்திரத்தில் தாகத்தால் தவித்த ஒரு பக்கீர், “தண்ணீர் தண்ணீர்” என கேட்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு அவருக்கு நீர் கொடுத்தார். அதை அருந்தியவுடனே, அந்த பக்கீர் இறந்து போனார்.
அக்கம் பக்கம் யாருமில்லை. தன் மீது கொலைப்பழி விழும் என அமீர் பயந்தார். விடிந்தால் பக்கீரின் மரணம் பற்றி விசாரணை நடக்கும். அமீர் கைது செய்யப்படுவார், உண்மையைச் சொன்னா லும் நீதி மன்றம் அதை கேட்கப்போவதில்லை.
நான்தான் நேரடி காரணம் என பிறர் குற்றம் சொல்வார்கள். உண்மையான காரணம் தெரிய வரும் வரையில் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.
“இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி சீரடிக்கு கொண்டு போய் சேருங்கள் பாபா. இனி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை விட்டுப் போக மாட்டேன்என்று பிரார்த்தனை செய்தார்.
சாயி பெயரை ஜெபம் செய்தவாறே சீரடியை வந்து அடைந்தார். அவரது பிரார்த்தனையும் நம்பிக்கையும் அவருக்கு விடுதலையளித்தன. விரைவில் அவர் நோயிலிருந்து குணமானார்.
பாபாவிடம் வந்தவுடனே உங்கள் வேண்டுதல் அனைத்தும் நடந்துவிடும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், நடக்கமாட்டேன் என்கிறது.
இப்படி நினைப்பவரா நீங்கள்?
கஷ்ட நேரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறான் என்பதை நிதர்சனமாகத் தெரிந்துகொள்ளுங்கள். இறைவன் உங்களோடு தங்கியிருக்கிற இந்த நிலையில், நீங்கள் கஷ்டப்படுவதை பொறுத்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் காத்திருங்கள்.
உங்களுக்குத் தேவை பொறுமை. நம்பிக்கை, சரணாகதி. இந்த ்ன்றும் இருந்தால் இழந்துபோன அனைத்தையும் மீட்டுத் தருவார். பாபா கைவிட்டுவிட்டார் என நினைத்து, நீங்கள் வேறு எங்கேனும் சென்றிருந்தாலும் உடனடியாகத் திரும்பி வந்துவிடுங்கள். வேறு நிவாரணம் பெற உங்களால் இயலாது.
யார் ஒருவர் சத்குருவை சரணடைகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலக லாபங்களும், மேலுலக மேன்மைகளும் கிடைக்கின்றன என்பதை உறுதியாக அறிந்துகொண்டு சரணாகதி செய்யுங்கள். எப்போதெல்லாம் நம்பிக்கை தளர்வது போல இருக்கிறதோ அப்போதெல்லாம் நாம ஜெபம் செய்து வாருங்கள்.
உங்களை பாபா அறிந்திருக்கிறார் என்ற உண்மையில் தெளிவு கொண்டு, காத்திருந்தால் நிவாரணம் நிச்சயம். இந்த நிவாரணத்துடன் அவர் வேறு வேதனையை கூட்டமாட்டார். எதிலும் பொறுமை என்ற ஒன்றை மட்டும் கடைப் பிடித்தால் நம்பிக்கையும் சரணாகத உணர்வும் தாமாக வந்துவிடும். நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். விசுவாசம் உங்களை விடுவிக்கும்.
உங்கள் நம்பிக்கை உங்களைக் காத்துக்கொள்ளும். பதில் கிடைக்காத பிரார்த்தனை என எதுவும் இல்லை என்பதை உணருங்கள்.
பிரார்த்தனை
சமர்த்த சத்குருவே சாயி நாதப் பிரபுவே!
 இதுவரை என்னுடைய பிரச்சினைகளை தீர்க்க வழி தெரியாமல் தவித்த நான், நிவாரணம் தேடி எவ்வளவோ இடங்களை சுற்றிவிட்டேன். இப்போது நீங்கள் என்னை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்.
என்னுடைய இப்போதைய பிரச்சினை எப்படியிருந்தாலும், உங்கள் அருளால் அவை அனைத்தும் காணாமல் போய் விடும் என்பதை முழுமையாக நம்புகிறேன். உங்கள் மீது மாறாத விசுவாசம் வைத்துக் காத்திருக்கிறேன். எனது விசுவாசத்தை திடப்படுத்தி என்னை இந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்து காத்தருள்வீராக.
எனது நோய்கள், கடன்கள், பிரச்சினைகள், பிற தொல்லைகள் அனைத்தையும் விலக்கி என்னை உங்கள் அருள் காக்கட்டும்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...