Monday, September 26, 2011

சாயியின் குரல்



மகளே! என்னோடு பேசு!

என் அன்பு மகளே!


                    உன் சுந்தர முகத்தின் அழகையும் அதிலிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்களையும் என் பெயரையே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் உதடுகளையும், என்னையே சுவாசமாக்கி உள்ளிழுத்து வெளிவிடும் உன் மூக்கினையும், என் நாமத்தையே சுவை என்று கூறும் உன் நாக்கினையும் என் பெயரைக் கேட்டதும் சிலிர்ப்படைந்து உருகும் செவிகளையும் எனது முத்தங்களால் நான் ஆசீர்வதிக்கிறேன்.
என் மகளே! 

                    என் அப்பா எனக்கு எல்லாம் தருவார், என் தந்தை என்னைப் பார்த்துக்கொள்வார் என்று மனதில் நினைத்து உருகி நிற்கும் உன்னைப் பார்க்கும்போது என் அடி வயிறு கலங்குகிறது. இவளுக்கு என்ன குறைச்சல் என உன்னைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு நீ நடந்து கொண்டாலும், உன் உள்ளத்தில் கொட்டிக் கிடக்கும் பிரச்சினைகளையெல்லாம் எண்ணிப் பார்த்தால் அவை இந்த உலகத்தை விட அல்லவா பெரிதாக இருக்கிறது-
உன்னைப் புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில், அவர்களுக்காக உன்னைக் கரைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிற என் மகளே, உன்னை நினைத்து நான் பெருமிதப்படுகிறேன்.
                         நாள் தோறும் சிக்கல்கள், குடும்பத்தில் பிரச்சினை, நிராகரிப்பு என நீ படும் அவஸ்தைகளைப் பார்க்காத இவர்கள் உன்னை பெருமைக்காரியாக நினைத்து உன் மீது பொறாமைப்படுகிறார்களே! அப்பா என்றைக்கு என் பிரச்சினையை தீர்த்து வைப்பாய் என்று ஏக்கத்தோடு என்னைப் பார்த்து, ஓசையின்றி உள்ளத்தால் நீ அழுவதைக் காணும் போதெல்லாம் என் இதயம் கரைவது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? தனக்காக வேண்டாமல், பிறருக்காகவும் பரிந்து நின்று வேண்டுவதையும், எனக்கு உன் விருப்பம் போல செய் அப்பா என சொல்லி என் மீது உன் பாரத்தைப் போடுவதையும் பார்த்து நான் மெழுகை விட மேலாக உருகிக் கொண்டிருக்கிறேன். என் கண்களிலிருந்து ஆறாய் பெருகும் சூடான நீரினால் உன் கர்ம வினைகளை கழுவிக் கொண்டிருக்கிறேன்.
                        நீ எவ்வளவு உயர்ந்தவள், எவ்வளவு மேன்மை யானவள், காசு பணம் இல்லாமல் போனாலும் பிறரை நேசிக்கும் சுத்த மனசுக்காரியாயிற்றே நீ, பெற்று வளர்த்து ஆளாக்கிய என் பெயரைச் சொல்ல பிறந்த பெண் பிறப்பாயிற்றே நீ,  உன்னை எப்படி மறப்பேன் நான்? உன் வேண்டு தலைக் கேட்டும் கேட்காமல் எப்படியிருப்பேன் நான்? உன்னை மறந்து யாருக்கு நான் அருள் புரியப் போவேன் என் செல்ல மகளே!  உன் மனக்குமுறல்கள் என்னை அசைக்கும்போது நான் நிம்மதியாக உறங்குவது எப்படி? நிதானமாக இருப்பது எப்படி?
                          இதெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். உன்  மனதிலுள்ள குறைகளைப் புரிந்துகொள்ள முடியாத மனித ஜென்மங்கள் மத்தியில் நீ படுகிற அவஸ்தை அவர்களுக்குப் புலப்படாது.  நீ அவர்களைப் பற்றி கவலைப்படாதே. உன்னிடம் கை நீட்டி வாழும் அளவுக்கு உன்னை வைத்து இருப்பேனே தவிர, நீ சென்று அவர்கள் வீட்டு வாசலில் நிற்குமாறு வைத்திருக்கமாட்டேன்.
                            உன் கஷ்டங்களின் கணக்குகளை எல்லாம் எடுத்துப் பார்த்தேன், மிகவும் அதிகமாக இருந்தன. அவற்றை சரி செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
என்னை நோக்கி நீ வேண்டுதல் செய்யத் துவங்கிய அந்த நேரத்திலேயே உனக்கு பதில் தரும் வேலையை துவங்கிவிட்டேன் என்பதையும், அதனால் தான் நீ சோதனைகளை அனுபவிக்கிறாய் என்பதையும் உனக்குப் பலமுறை அறிவுறுத்தி வைத்திருக்கிறேன். இப்போது அதை நினைவு படுத்துகிறேன்.
என் மகளே! புதிதாக வீட்டுக்கு வரும்போது வெள்ளையடித்து அதிலுள்ள குப்பைகளைப் பெருக்கி கழுவி கோலம் போட்டு சுத்தமாக்கிய பிறகுதானே  உள்ளே வந்து குடும்பம் நடத்தத் தொடங்குகிறாய்.
                              அப்படித்தான் குழந்தாய், உன் பிரச்சினைகளுக்கு தீர்வு வரும்போதும், தீர்வு காண நான் செயல்படும் போதும் உன்னை சுத்தமாக்குகிறேன். இப்போது நீ கர்ம வினை என்ற குப்பைகளாலும், மாயை என்கிற அழுக்குகளாலும் முற்றிலும் மாசு பட்டிருக்கிறhய். இதில் வேறு முதாதையர், உறவினர் செய்கிற பாவங்கள் என்கிற ஒட்டடை வேறு உன்னைச் சூழ்ந்து இருக்கிறது. உலக பந்தம் என்ற கட்டில் சிக்கிக் கொண்டு கஷ்டம், நஷ்டம், பிரச்சினை என்று பேதலித்து வருந்துகிறாய்.
                           அவற்றையெல்லாம் நான் மெதுவாக சுத்தம் செய்யும்போது உனக்கு சோதனை அதிகமாவது போலத் தெரிகிறது. சோதனைக் காலம் வரும்போது நீ பயப்படாதே, கலங்காதே, திகைப்படையாதே, நான் உன் தந்தை, உன் கூடவே இருக்கிறேன். தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதைப் போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக் கடிந்து கொண்டு நடத்துகிறேன். இதை புரிந்து கொண்டு நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். வானம் நிலைகுலைந்தாலும் குலையலாம். மலைகள் இடம் பெயர்ந்தாலும் பெயரலாம். ஆனால் நானோ உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன், உன்னை கைவிடவும் மாட்டேன்.
                      உன் வழியில் எல்லாம் என்னை நினைத்துக் கொண்டே இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உன் பாதைகளை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்.  ஒரு குழந்தைக்குப் போதனை செய்வதைப்போல திரும்பத் திரும்ப உனக்கு நான் போதித்துக் கொண்டே இருப்பதால் உனக்கு சலிப்பு வருகிறதா? மகளே, நான் எங்கும் வியாபித்திருக்கிறேன், எந்த இடத்திலும் நிறைவாக இருக்கிறேன்- உன்னுள்ளும் ஒளிந்தபடி உறைந்திருக்கிறேன். ஆனாலும் நீ உணர்ந்து கொள்வதற்காகவே உன்னை பெருங்களத்தூருக்கு அழைத்தேன்.
                        என் அப்பாவின் பிரசன்னத்தைக் காண நான் பெருங்களத்தூர் வந்துவிட்டேன்.. வா.. வா.. எனக் கூப்பிட்டீர்களே, இதோ வந்துவிட்டேன்.. இனி எல்லாம் உன் பொறுப்பு என வாய்விட்டு குறைகளைச் சொல்லி உருகி நிற்கும்போது, உனக்கு விடுதலையின் உணர்வு, என்னை தரிசித்தபோதே நான் உன்னை வரவேற்கும் சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறாய். இன்னும் வரும்போதெல்லாம் உணர்வாய்.
                     மகளே!  உன் தந்தையைப் பார்க்கும்போது மனம் விட்டுப் பேசு. அப்பாவுக்கு என் நிலை தெரியாதா! அவர் எனக்கு எல்லாம் செய்வார் என்று அமைதி காத்திடாதே!
                  பசுவின் மடி முழுவதும் நிரம்பியிருந்தாலும் கன்றானது தனது தலையால் முட்டி வாயால் உறிஞ்ச ஆரம்பிக்கும்போதுதான் பால் சுரக்க ஆரம்பிக்கும். அது போலத்தான் நீ கேட்கும்போதுதான் கருணையும் சுரக்க ஆரம்பிக்கும்.
                          என்னைப் பற்றியும் என் லீலைகளைப் பற்றியும் உன் காதுகளால் கேள்விப்பட்ட போதுதானே என் மீது உனக்கு பக்தி பிறந்தது. வாயாலும் மனதாலும் என்னிடம் கேட்ட போதுதானே உன் வேண்டுதல் நிறைவேற ஆரம்பித்தது. அப்படியே தொடர்ந்து கேள், என்னோடு பேசு. முடிந்தால் வாய்விட்டுப் பேசு, தனிமையில் மனதுக்குள் பேசு. பேசுவதை விடாதே.
அம்மா! உனக்கு லவுகீக சவுக்கியங்களுக்குக் குறைவு வராது. உன் பிள்ளைகள், உன் விருப்பப்படி நன்றhக இருப்பார்கள். உரிய காலத்தில் அவர்களுக்கு வேலையும் நல்ல வாழ்க்கையும் அமையும். உனது தட்டு எப்போதும் நிரம்பியே இருக்கும்.
                       நான் இல்லாமல் நீ எப்படி தனித்து ஒரு நொடியும் இருக்கமுடியாதோ அப்படித்தான் உன்னைப் பிரிந்தும் என்னால் ஒரு நொடியும் தனித்திருக்க முடியாது. நான் வெல்லத்தைக் காண்பித்து சோதனை என்கிற மருந்தைக்கொடுக்கும்போது அதை தயங்காமல் குடி.
விரதமோ, உபவாசமோ தேவைப்படாமல், தீர்த்த யாத்திரைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் உன்னை மீட்டு விடுகிறேன்.
என் மகளே! நான் உன்னை எனது வலது கரத்தால் தாங்குகிறேன். ஸஞ்சித கர்மாக்கள் சிறிதும் மீதம் இராமல் நசிந்துவிடும் அளவுக்கு என் பெயரை சதா நீ உச்சரித்துக்கொண்டே இருப்பதால், ஒரு லோபியை போல, எனது பொக்கிக்ஷமான உன்னை இரவு பகலாக நினைத்துக்கொண்டு உன்னைப் பற்றியே அசை போட்டுக்கொண்டிருக்கிறேன்.
                     கல்லான அப்பா எப்படி என்னுடன் பேசப் போகிறார் என நீ நினைக்கலாம். யாருடைய ஆன்மாவில் நான் நீக்கமற நிறைந்திருக்கிறேனோ, அந்த ஆன்மாவின் வாயிலாக நான் எப்போதும் என்னை வெளிப்படுத்துகிறேன், யாரிடம் நீ மனம் விட்டு உன் குறைகளைப் பகிர்ந்து கொள்கிறாயோ அங்கிருந்தே நிவர்த்திக்கான வழிகளை நேர் செய்கிறேன். யாரை தேடிப் போகிறாயோ அவராகவே நானிருந்து உன்னை வரவேற்று உபசரிப்பேன். யாரைப் பார்த்ததும் உன் இதயம் இளகுகிறதோ அவரது வாயிலாகவே நன்மை செய்கிறேன்.. எனக்குப் பிரியமானவர்கள் உனக்கு ஆசி கூறுவார்கள், அந்த ஆசியை வழழூ;குவது நானே என்று அறிந்துகொள். யார் வாயின் வழியாகவாவது ஆறுதல் சொன்னால் அதுவும் நானே. சோதனையின் போது உன்னோடு யாரேனும் சேர்ந்து அழுதால் அதுவும் நானே என்று அறிந்துகொள்.
                     இந்த அறிந்துகொள்ளுதல் உனக்குப் பணிவை உண்டாக்கும். புத்தியைத் தரும். பாவத்தைப் போக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள். நீ நேசிக்கிற உன் கணவனை சந்தோஷ‌மாக வைத்துக் கொள். அவன் உன்னை புரிந்துகொள்ளாமல் இல்லை, தனது நிலையில் இல்லாததால் எதையும் வெறுத்து ஒதுக்குவதைப் போல நடந்துகொள்கிறான். உன்னை கவனிக்காததைப் போல இருக்கிறான். அவனது மனம் உன்னை நினைத்து புழுக்கமடைகிறது. ஆனால் அதை அவனும் வெளிப்படுத்தவில்லை, நீயும் உன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. மனம் விட்டுப் பேசு, மகிழ்ச்சியை வெளிப்படுத்து, சின்னச் சின்ன விக்ஷயங்களுக்கும் நன்றியைச் சொல். இதை நான் விரும்புகிறேன்.
                       வீட்டில் இருக்கும் சந்தோஷ‌ம்தான் மிகப் பெரிது. அந்த சந்தோஷத்தின் அடிப்படையில்தான் உனது கஷ்டம் நீங்குவதன் வேகமும் இருக்கும். ஆகவே, தனித்தனியாய் உட்கார்ந்து அவரவர் வேலையைப் பார்க்காமல் ஒன்றாக உட்காரும் பழக்கத்தை நீயாக முன் வந்து ஏற்படுத்து. மனம் விட்டுப் பேசு. அவனை சேர்த்துக்கொண்டு என்னிடம் வா.. என் நாமத்தை ஜெபி. அப்போது உனக்கு பலன் கிடைக்கும்.
                           நீ என் மகள் என்ற மமதையுடன் இல்லாமல் என்னை சரணாகதி அடைந்து பக்தி செய்தாலே போதும், இவை அனைத்தையும் கொடுத்துவிட்டு, உன்னை எல்லா இக்கட்டுகளில் இருந்தும் விலக்கிக் காப்பேன்.
மகளே! அன்புடன் என் மீது பக்தி செய்து எனக்கு சேவை செய்தால் தேவாதி தேவனான நான் உன் மீது மட்டுமல்ல, உன் தலைமுறைகள் மீதும் கருணை வைத்து காப்பேன். என்றும் குறையாத‌ நிதியமும் உனக்குக் கிடைக்கும். நானாக உனக்கு வலியக் கொடுக்காமல் நீயாக எடுத்துக் கொள்ளும் நிலை உண்டாகும்.
                      ஏ, அம்மா,  உன் உள்ளத்துள் ஒளிந்திருக்கும் எல்லா கஷ்டங்களையும் அவற்றை அனுசரித்து நீ குடும்பம் நடத்துவதையும், பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்பட்டு நிற்பதையும், அநியாயமாக உன் உடைமைகளை பிறர் அபகரித்துக் கொண்டு உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்ததையும், இன்னும் பலர் அப்படி முயற்சிப்பதையும் நான் அறியாமலா இருக்கிறேன்?
                          அவர்களும் என் குழந்தைகள்தானே என்று பொறுமை காத்தேன். இனி அப்படி பொறுக்க மாட்டேன். துஷ்டக் குழந்தையைப் பிரம்பால் அடிப்பேன். தப்பு செய்தவர்களுக்கு தண்டனையை  தப்பாமல் தந்து உனக்கு நீதியை நான் சரி செய்யும் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
சரிந்து கிடக்கும் உன் முந்தானையை எடுத்து நன்றாக சொருகிக்கொள். கலைந்து கிடக்கும் கூந்தலை சீவி அழகுபடுத்து. கவலையால் துவண்டு கிடக்கும் உன் முகத்தை சோப்பு போட்டுக் கழுவி திலகத்தையும் எனது உதியையும் தரித்துக் கொள். புலம்புகிற மனதை அடக்கி என் நாமத்தைச் சொல். தளர்ந்த கால்களை திடப்படுத்தி எழுந்து நின்று பெருங்களத்தூருக்குப் புறப்பட்டு வா.. ஒரே பார்வை.. ஒரு துளி உதி... உன் விதியையே மாற்றிவிடுகிறேன். ஆனால் வரும் முன் ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டு வரவேண்டும்.
                          என் சேவை, பஜனை, என்னிடம் முழுமையான சரணாகதி ஆகியவற்றுடன், எனக்குள் என் அப்பா முழுமையாக நிறைந்திருக்கிறார்.. இதனால் நான் அவரைப்போல முழுமையானவளாக இருக்கிறேன்.. எனது இந்த முழுமை என் பிரார்த்தனைக்குப் பலனைத் தரப்போகிறது என உறுதி செய்துகொண்டு வா.. அதை எப்போதும் மனதில் வைத்திரு.
                             ஆறு விஷயங்கள் எனக்கு அருவருப்பானவை. அது மற்றவரை விட தன்னை மேலாக நினைத்துக் கொள்ளும் மனோபாவம், பொய்யை உடைய நாக்கு, குற்றம் இல்லாதவர்கள் மீது பழி சுமத்தும் வாய், கெட்ட ஆலோசனைகளைக் கூறும் இயல்புடைய இதயம், அடுத்தவருக்கு தீமை செய்வதற்காக விரைந்து செல்லும் கால்கள், ஒரு சார்பாகப் பொய் சாட்சி சொல்லுதல், அக்கம் பக்கத்தினரிடமும் சகோதரர்களிடமும் விரோதத்தை உண்டாக்கும் குணம். இந்த அருவருப்புகள் நீங்கி சுத்தமாக உன்னை மாற்றிக் கொண்டு வா. உன் துன்பங்கள் தொலையும், விருப்பங்கள் நிறைவேறும்.


அன்புடன்
அப்பா சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...