ராமபிரான் வசிஷ்டரின் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த போது, அங்கே அனந்தன் என்ற வேலைக்காரன் இருந்தான். அவன் ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமற்ற சேவை செய்து வந்தான்.
ராமனின் எழுத்தாணியை கூராக்கிக் கொடுப்பான். வில்லின் நாண்களை சரிசெய்வான். பூஜைக்காக மலர் பறித்து தருவான். இருவரும் இணைபிரியா நண்பர்களாயினர்.
ஒருநாள், அனந்தன் பூப்பறிக்க போயிருந்த நேரத்தில், வசிஷ்டர் ராமனிடம், ""ராமா! உன் படிப்பு முடிந்தது. ஊருக்கு கிளம்பு,'' என்றார். ராமனும் சென்று விட்டார்.
அனந்தன் திரும்பி வந்தான். மற்றவர்கள் என்றால் என்ன செய்திருப்பார்கள்? இத்தனை நாள் பழகிய நண்பன் சொல்லாமல், கொள்ளாமல் போய்விட்டானே என்று கோபித்திருப்பார்கள். ஆனால், அனந்தனோ, ""ஐயோ! ராமா! நீ கிளம்பும்போது,
என்னால் உன் அருகில் இருக்க முடியவில்லையே. உன்னை இனி எப்போது காண்பேன்,'' என புலம்பித் தீர்த்தான்.
நாளாக ஆக, ராமனின் பிரிவை அவனால் தாங்க முடியவில்லை. அரண்மனைக்கு கிளம்பி விட்டான். அங்கே சென்றதும், ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் காட்டிற்கு தாடகை வதத்திற்கு புறப்பட்டு சென்ற தகவல் கிடைத்தது.
அவன் விஸ்வாமித்திரரை மனதுக்குள் திட்டினான். "சிறுவன் என்றும் பாராமல் ராமனைக் காட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாரே' என பதறினான்.
ராமனைத் தேடி காட்டிற்கே போய்விட்டான். "ராமா! ராமா!' என புலம்பித் திரிந்தான். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணீர் வழிய, "ராம் ராம் ராம் ராம்' என சொல்லிக்கொண்டே அமர்ந்து விட்டான். காலப்போக்கில், அவனைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்து விட்டது.
இதற்குள் ராமனுக்கு திருமணமாகி, சீதை கடத்தி மீட்கப்பட்டு, அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. சில முனிவர்கள், புற்று இருந்த இடத்தைக் கடந்து அயோத்தி சென்ற போது, புற்றுக்குள் இருந்து "ராம்...ராம்' என்ற குரல் கேட்கவே, புற்றை இடித்துப் பார்த்தனர். உள்ளே தாடி மீசையுடன் ஒருவர் இருந்தார். நடந்ததை அறிந்தனர். அவரது ராமபக்தியை மெச்சிய அவர்கள், ராமனிடம் அழைத்து சென்றனர்.
ராமன் பட்டாபிஷேகத்திற்காக மேடை நோக்கி நடந்த போது, அவரைப் பார்த்து விட்ட அனந்தன், "டேய் ராமா' என அழைத்தான்.
""அரசரை மரியாதையில்லாமல் பேசுகிறாயா?'' என்ற காவலர்கள் அவனை உதைக்க ஓடினர். அனந்தனை அடையாளம் கண்டு கொண்ட ராமன், காவலர்களைத் தடுத்து, ""அனந்தா! நீயா இப்படி ஆகி விட்டாய். உன்னிடம் சொல்லாமல் வந்ததற்காக என்னை மன்னித்துக் கொள்,'' என்றார் பணிவுடன்.
அருகில் நின்ற ஆஞ்சநேயர், "ராமா! என்னைப் போலவே இவரும் தங்கள் மீது அதீத பக்தி பூண்டுள்ளார். இவருக்கு தகுந்த மரியாதை செய்ய வேண்டும்' என்றார். ராமனும் அனந்தனை வாரியணைத்து ஆசி அருளினார்.
பின்னர் வசிஷ்டரிடம், "குருவே! என் தந்தை இருந்திருந்தால் என்னை "டேய்' என உரிமையுடன் அழைத்திருப்பார். இப்போது இவன் என்னை அதே முறையில் அழைத்தான். எனவே, இவனை என் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்க அனுமதி வேண்டும்' என்றார் ராமன்.
வசிஷ்டரும் சம்மதம் தெரிவித்தார். ராமன் தனது சிம்மாசனத்தில், அனந்தனை அமர வைத்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றார். கூடியிருந்தவர்களின் கண்கள் பனித்தன. அனந்தனோ மெய்மறந்து விட்டார். பின்பே ராமன் பட்டம் ஏற்றார். எந்த ஊரில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நிஜநட்பு என்றும் தொடரும்.
No comments:
Post a Comment