இரவு முழுக்க விழித்திருந்ததால்
அதிகாலை நான்கு மணிக்கு உறங்கி ஆறு
மணிக்கு எழுந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் சத்சரித்திரம்
வாசிக்கவில்லை. மறுநாள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் நடக்கவிருந்த
பிரார்த்தனையின்போது என்ன வார்த்தையைக் கூறி
நான் பிரார்த்தனையைச் செய்வது என்ற கேள்வியுடன் பாபாவைப்
பார்த்தேன்.
உள்ளேயிருந்து ஒரு குரல், இன்று
என்னுடைய தர்பாரைச்சேர்ந்த அநேக மக்கள் இங்கு
வரப்போகிறார்கள் என்று! வழக்கமாக
நானே பேசி, நானே பதிலையும் சொல்லிக்கொள்வேன்
என்பதால், அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது
என நினைத்துக் கொண்டு பிரார்த்தனை மையம் சென்றேன். அன்று
நான்கு மணி வரை வந்த
பக்தர்கள் அனைவரும்
என்னை முன்னமே அறிந்த சாயி
பக்தர்கள்.
அத்தனை பேரும் பாபாவின்
மீது தீவிர பக்தி செலுத்துபவர்கள்.
மெய்சிலிர்த்துப் போனேன். நிச்சயமாக என்
தர்பாரைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவார்கள்.. என்றார் பாபா! சத்சரித்திரத்தில் இது பற்றி உள்ளதா என்று
ஆராய்ந்தேன்.
அவரது தர்பாரைச் சேர்ந்தவர்கள்
யார்? என்ற எனது கேள்விக்குத்தான் சத்சரித்திரம் பதில் தந்தது. அதைத்
தருகிறேன் படித்துக் கொள்ளுங்கள்.
மும்பையில் பாந்த்ரா தாலுகாவின் வடபகுதியில், பாந்த்ரா நகரை அடுத்து சாந்தா
குணுஸ் என்ற நகரம் இருக்கிறது. இங்கு
துரந்தர் என்னும் பெயர் கொண்ட
குடும்பம் ஒன்று வசித்து
வந்தது. அந்தக் குடும்பம் ஸ்ரீ
ராமர் மீதும், ஞானியர் மீதும்
திடமான நிட்டை வைத்திருந்தனர். ராமநாமத்தின் மீது அனன்னியமான சிரத்தை கொண்டிருந்தனர்.
அவர்கள் மற்றவர்களின் வாழ்வில்
தலையிடுவதில் விருப்பமற்றவர்கள்.
எளிய வாழ்வு நடத்தினர். குழந்தைகளும்,
குடும்பப் பெண்களும் அவ்வாறே இருந்தனர். ஆதலின், சக்ரபாணி அவர்களுக்குக்கடமைப்
பட்டவரானார்.
துரந்தர் என்கிற அந்தக் குடும்பத்தைச்
சேர்ந்தவர் பாலாராம். விட்டல் பக்தர், புண்ணியசாலி.
வக்கீலாகப் பணி யாற்றிய இவர்,
கவர்ச்சிகரமாகவும், திறமையாகவும் கோர்ட்டில் வாதங்களை முன் வைத்தல், நேர்மையான சிந்தனை, தர்ப்பையின் நுனி போன்ற கூர்த்த மதி, நல்லொழுக்கம்
ஆகியவை இவரிடமிருந்த நல்ல பண்புகள்.
சமூக சேவையில் விருப்பமுடையவர்.
தனது கடமைகளைச் செய்துமுடித்தபின் ஆன்மீக சேவையில் இறங்கி, பெரும் முன்னேற்றம்
கண்டார்.
இவருடைய சகோதரர்களுக்கும், இவருக்கும்
1912 - ம் ஆண்டு சீரடிக்குச் செல்லக்கூடிய
யோகம் வாய்த்தது. அவர்கள் வருவதற்கு முன்பாகவே
பாபா சீரடியில் தன்னோடு இருந்தவர்களிடம் கூறினார்.
”என்னுடைய தர்பாரைச் சேர்ந்த அநேக மக்கள்
இன்று இங்கு வரப்போகின்றனர்”.
துரந்தர் சகோதரர்கள் பாபாவைப் பார்த்ததும், தாவிச் சென்று அவரது
பாதங்களைப் பிடித்துக்கொண்டனர். அவர்களைப் பார்த்ததும், பாபா மீண்டும் சொன்னார், “பாருங்கள், என் தர்பாரின் மக்கள் வந்துவிட்டனர்.
யார் வரப்போகிறார்கள் என்று நான் சொன்னேனோ அவர்கள் இவர்கள்தான்”.
இப்படிச் சொன்ன பாபா, அவர்களிடம்
திரும்பி, ” நீங்களும் நானும் அறுபது ஜன்மங்களாக
ஒருவரை ஒருவர் அறிவோம்!” என்றார்.
இவ்வாறு சொன்ன பாபாவின்
முன் அனைவரும் கைகட்டி நின்று பாபாவின் பாதங்களையே
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
உணர்ச்சி மேலீட்டால் அவர்கள் கண்களில் நீர் நிறைந்தது. தொண்டை
அடைத்தது, எல்லா அங்கங்களிலும் மயிர்க்கூச்செறிந்தது. இதயம் களிப்பால் நிரம்பியது.
இவர்களின் நிலையைப் பார்த்த சாயீ கூறினார்,
“சுக்கில பட்சத்து வளர்பிறைச் சந்திரனின் கலையைப்போன்று என்னை வழிபட்டு தம்முடைய
மனோ தர்மத்தை என்னிடம் முழுமையாக ஒப்படைத்தவர் பெரும் பேறு பெற்றவர் என்பதை
அறிவீர்களாக.
திடமான விசுவாசத்தை மனத்தில்
தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு
இறைவன் எக்காலமும் கடன்பட்டவன். அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்கமுடியாது.
எவர் ஹரி வழிபாட்டில்
விருப்பம் கொண்டு அரை நிமிடத்தையும் வீணாக்கமாட்டாரோ, அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தம்
அளிப்பார். பிறவிக்கடலைத் தாண்டி அழைத்துச் செல்வார்.”
பாபாவின் இந்த வசனத்தைக் கேட்ட
எல்லார் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
சித்தம் மகிழ்ந்தது. மனதில் நல்ல வழிகள்
பிறந்தன. இந்தத் தகவல் சத்சரித்திரம்
51வது அத்தியாயத்தில் பதியப்பட்டிருக்கிறது. இனி இந்த நிகழ்வை
நாம் தியானம் செய்யலாம்.
பாபாவின் தர்பாரைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் பாபாவை வழிபடுகிறார்கள். சீரடிக்கு
போகிறார்கள், விரதம்
இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாபாவின் தர்பாரைச் சேர்ந்தவர்களா? என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏன் அப்படி கூறுகிறீர்கள்?
எனக் கேட்கலாம். நாம் சீரடிக்குப் போவதும்,
பாபாவை வழிபாடு செய்வதும் நமது லவுகீக மேன்மையை
முன்வைத்து செய்கிற விக்ஷயங்கள். நமது கோரிக்கை நிறைவேறி
விட்டால் பாபாவும் சீரடியும் தூரத்தில் வைக்கப்பட்டு விடுவார்கள்.
துரந்தர் குடும்பத்தார் இறை நாமத்தின் மீது
திடமான நம்பிக்கை வைத்திருந்தவர்கள்.
மற்றவர்கள் வாழ்க்கையில் தலையிடமாட்டார்கள். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர்கள். இறைவன் மீதும் ஞானியர் மீதும்
பக்தியுள்ளவர்கள். ஆனால் நாம் எப்படி?
மற்றவர்களைப் பற்றி குறை சொல்லாமல்
இருக்க நம்மால் முடியாது. காசு பணம் வந்தால்,
கையிருப்புக்கு ஏற்ற மாதிரி ஆடம்பரமாகவோ,
அலங்காரமாகவோ வாழ வேண்டும் என
விரும்புவோம். கடன்பட்டு
வீட்டைக் கட்டி அழகு பார்ப்பதில்
ஆர்வம் உள்ளவர் நாம்.
வட்டிக்குப் பணம் வாங்கி நகையெடுத்து
காதிலும் கழுத்திலும்
மாட்டிக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள். வட்டி கட்ட, நகையை
அடகுக்கடையில் வைத்து, அதையும் எடுத்து
செலவு செய்துவிட்டு இரண்டு வட்டிகளை கட்டமுடியாமல்
கஷ்டம் என்று புலம்புகிறவர்கள்.
மருமகளைக் குறை சொல்லி நடத்துகிறவர்கள்,
மாமியாருக்கு மரியாதைத் தராமல் அம்மாவிடம் ஒப்பாரி வைப்பவர்கள்
நாம். இப்படியிருப்பவர்கள் எப்படி சாயி பக்தராக
இருக்க முடியும்?
இப்படியில்லாமல், தனது மனம் நல்லது
கெட்டது எனத் தீர்மானிப்பதை தானே செய்யாமல், இறைவா,
நீயே பார்த்துக்கொள் என அவரிடம் ஒப்படைத்து
விட்டு, என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிற பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளக்கூடிய சமயத்தில்
எதிர் பாராத சோதனைகள் வரலாம். கஷ்டங்கள் அதிகமாகலாம். ஆனால், கடவுள்
நம்மை கைவிடமாட்டார் என்பதில் திடமான நம்பிக்கை நமக்கு
இருக்க வேண்டும். அப்படியிருந்து நீங்கள் பாபாவை வழிபாடு செய்தால், அப்போதுதான்
அவரது பக்தராகக் கருதப்படுவீர்கள். அவரது தர்பாரைச் சேர்ந்தவர்களாக ஆவீர்கள்.
பாலாராமின் குணத்தைப் பாருங்கள். அவர் நல்ல ஒழுக்கம் உள்ளவர்,
கூர்த்த அறிவு உள்ளவர். வாதத்தைக்கூட
பிறர் மனம் நோகாமல் கவர்ச்சிகரமாகக்
கூறுகிறவர். நேர்மையாக சிந்திக்கிறவர். இந்த குணம் உங்களிடம்
இருந்தால் நீங்கள் சாயி பக்தர், அவரது
தர்பாரைச் சேர்ந்தவர்.
இது என்னிடமில்லை. நெக்ஸ்ட்..
என்று கூறுகிறீர்களா?
லவுகீகத்தில் இருந்துகொண்டே, சிரத்தையுடன் முயன்று ஆன்மீகத்தில் முன்னேற்றம் கண்டவர் பாலா ராம். நாம் ஆன்மீகத்தை
லவுகீகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறோமே தவிர, உலக வாழ்க்கையை ஆன்மீகமாக
மாற்ற முயற்சிப்பது கிடையாது. கீழ் நிலையிலிருந்து மேல்
நிலைக்குப்போகவேண்டும். மேல் நிலையிருந்து கீழ்
நிலைக்கு வருகிறவர்கள் சாயி பக்தர்களாக மாறமுடியாது.
இதுவும் என்னிடமில்லை. நெக்ஸ்ட்!
அவர்கள் இறைவன் மீதும்
மகான்கள் மீதும் பக்தி கொண்டிருந்தார்கள். இவ்வாறு கொண்டிருப்பவர்கள்
இறைவனின் அன்புக்குப்
பாத்திரமாக இருப்பார்கள். ஒரே கடவுளை பல
பெயர்களால் வணங்குவதாகச் சொன்னாலும், இந்தக் கடவுளை விட
இவர் பெரியவர், இவர் சின்னவர் என்று
பேதம் பார்ப்போம். மகான்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்து
அதில் யாரையேனும் ஒருவரை குறை சொல்வோம்.
இந்த குணம் உள்ளவர் சாயி
பக்தராக முடியாது.
பாபா சொன்னார், “ இறை
குரு வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிட
நேரத்தையும் யார் வீணாக்காமல் இருக்கிறாரோ அவருக்கு இறைவன் எக்காலத்தும் கடன்பட்டவன். அவன் சாயி பக்தன்.
திடமான விசுவாசத்தை மனதில் தரித்து, எவர்
தம்முடைய குருவை வழிபடுகிறாரோ அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன்.”
உறுதியான நம்பிக்கையுடன் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்
பட்டவர்தான் சாயி பக்தர். உங்கள் பக்தி எப்படி?
நீங்கள் எப்படி என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
நாம் பாபாவின் தர்பாரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அருகதை நமக்கு இல்லை
என்பது நமக்கே புரிகிறது. அப்படியிருக்க, அவர் நமது வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும்
என்று எண்ணுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
அப்படியானால், சாயி எனக்கு அருள்
செய்ய மாட்டாரா? என்று குழம்பிவிடாதீர்கள்.
நீங்கள் இப்படிப்பட்டவர்தான் என்பதை
முன் கூட்டியே அறிந்திருக்கிற பாபா, உங்களைத் தேடி
வந்து, உங்களைச் சிறிது சிறிதாக பக்தி
மார்க்கத்தில் வழிநடத்தி அவரது தர்பாரில் சேர்த்துக்கொள்வார். எப்போதும்
சுயநலத்தை மட்டுமே சிந்திக்கிற மனோபாவம் உங்களிடம் இருந்தால்
அதை மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது இறையருள் உங்கள்
இதயத்தை விரைவில் நிரப்பும், அருள் கிடைக்கும்.
இறை நாமத்தை தியானம்
செய்வது, அவர் பற்றிய கதைகளைக் கேட்பது, பாடல்களைக்கேட்பது, பக்கத்தில் உள்ள அவரது கோயிலுக்குப்போவது
ஆகியவை அவர் மீது பக்தியை
வளர்க்கும்.
எவ்வளவு இருந்தாலும் எளிமையாக
இருங்கள். கர்வம்
நமது தலையை அலங்கரிக்காது, மாறாக,
பாரத்தைக் கொடுத்து நம்மை பலவீனப்படுத்தும். எதுவொன்றும்
இல்லாமல் போனாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு எதையும் தந்துவிடாது.
மாறாக, வாழ்நாள்
முழுவதும் தோல்வியைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும்.
எப்போதும் சாயியை நம்பி அவர்
பாதங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், இந்த ஜன்மத்திலேயே நம்மை உயர்த்திக்
காட்டுவார் அவர். யார்
உண்மையான பாபா பக்தரோ அவர்
மட்டும்தான் நமது வழிபாட்டு மையத்திற்கு வருவார்.. மற்றவர்களுக்கு அந்த பாக்யம் கிடையாது. யாருக்கு
நிவாரணமோ அவருக்கு மட்டுமே இந்த இடம் திறந்திருக்கும்
என்ற பாபாவின் பதில் எனக்குத்திருப்தியைத் தந்தது.
உங்களுக்கு?
ஸ்ரீ சாயி
வரதராஜன்
No comments:
Post a Comment