இவனெல்லாம் பாபாவைக்கும்பிடுகிறான், சண்டாளன்! என்று யாராவது உன்னைத் திட்ட நேர்ந்தால் பக்தனாவதற்கு முன்பு செய்த செயலுக்காக
இந்த திட்டு உனக்குக் கிடைக்கிறதா?
பக்தனாகி இப்போதைய செயலுக்காகத் திட்டு வாங்குகிறாயா? என நீ யோசிக்க வேண்டும்.
பக்தனாகும் முன்பு எல்லோருமே ஆசையின் பிடியில் இருந்தவர்கள் தாம். அதன்விளைவாக
என்னென்ன செயல்களோ நடைபெற்றுவிட்டன. அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமாகத்தான் பகவானைப் பற்றிக் கொண்டிருக்கிறோம். இவர்களின் தூற்றுதலும் அந்தக் கறைகளைப் போக்குவனவாக
இருக்கட்டும் என அமைதியாக இருங்கள்.
பக்தனான பிறகு இவ்வாறான ஏச்சைக் கேட்கும் போது வெட்கப்படுங்கள். காரணம், உங்கள் பக்தியில் பழுது இருக்கிறது. பிறர் கண்களுக்கு தவறான ஏதோ ஒன்று உங்களிடம் இருப்பதால் அவர்கள் இப்படி
பேசுகிறார்கள். அப்படி எதுவுமில்லை, அவர்கள் தவறாகப்
புரிந்துகொண்டு பேசுகிறார்கள் என்றால்
அதற்கு சந்தோஷப்படு. இறைவனை அடையும் தூரம்
வெகுதூரத்தில் இல்லை என்பதன் அடையாளம் இது.
வால்மிகியைக் கள்வன் என்று கூறுவார்கள். அருணகிரிநாதரைப் பெண் பித்தன் என்பார்கள். இப்படி பலர் உதாரணத்திற்காக இருந்தார்கள். பிற்காலத்தில் மற்றவர்கள் சாதிக்கமுடியாததைஅவர்கள்
சாதித்தார்கள்.
பில்வமங்களர் கதையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தென்னாட்டில் கிருஷ்ணவேணி என்ற நதிக்கரையில் வாழ்ந்த
அந்தணர் மகன் பில்வமங்களர். துர்நடத்தையுள்ள இவர் பெண்
பித்தராகவும் வாழ்ந்தார். ஆற்றின்
மறுபக்கம் வாழ்ந்த சிந்தாமணி என்ற வேசியின் மீது ஆசை கொண்டு அவளையே கதி எனக் கிடந்தார்.
ஒருமுறை அவரது தந்தையாருக்குத் திதி வந்தது. அன்றைய தினமாவது பில்வ மங்களர் வீட்டில் இருப்பார் என நினைத்தார்கள். அவரோ திதியை முடித்துக்கொண்டு சிந்தாமணி வீட்டிற்குச் செல்ல ஆர்வம் காட்டினார்.
அந்த நேரம் பார்த்து மழை பெய்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. ஓடக்காரனிடம் கெஞ்சினார், நிறைய பணம் தருவதாக வேண்டினார். அவன் வரவேயில்லை. இருட்டத் தொடங்கியது,
அவளைப் பார்க்காமல்
இருக்கமுடியவில்லை என்பதால் எப்படியாவது
ஆற்றில் குதித்து அக்கரை சேர்ந்துவிடத் தீர்மானித்து
குதித்தார். வெள்ளச்சுழல் அடிக்க, ஏதோ ஒன்று மிதந்துவந்தது.
கட்டையாக இருக்கும் என நினைத்து அதைப் பிடித்துக்கொண்டு நீந்தி அக்கரை சேர்ந்தார்.
வேசியின் வீடோ உள்தாழ் போடப்பட்டிருந்தது. கூப்பிட்ட குரலுக்கு பதில் இல்லை. யோசிக்கவும் நேரமில்லை. எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என நினைத்தவருக்கு சுவற்றின் மீது தொங்கிக்கொண்டிருந்த கயிறு கண்ணுக்குத்தெரிந்தது. அதைப்
பிடித்துக் கொண்டு சுவரேறி உள்ளே குதித்தார்.
இவரைப் பார்த்துப் பதற்றப்பட்ட சிந்தாமணிக்கு தன்மீது இவ்வளவு ஆசையா என அவர் மீது அக்கறை வரவில்லை, கோபம்தான் வந்தது. எப்படி வந்தாய்? எனக் கேட்டாள். ஆற்றில்
கட்டையைப்பிடித்து நீந்தி வந்ததையும், சுவற்றின் மீதிருந்த கயிறைப் பிடித்து
ஏறி வந்ததையும் சொன்னார். சுவரின் மீது கயிறா? என சந்தேகம் வந்தது
அவளுக்கு. வெளியில் பார்ததாள், மழை நின்றிருந்தது. விளக்கை
ஏற்றி எடுத்துக்கொண்டு வெளியே அவருடன் வந்தாள். சுவற்றின்
மீது பயங்கரமான பெரிய கருநாகம் ஒன்று
தொங்கிக்கொண்டிருந்தது. திடுக்கிட்ட சிந்தாமணிக்கு இதைப் பிடித்துக்கொண்டு சுவர் ஏறி வந்திருக்கிறார்
என்பது புரிந்தது. அப்படியானால் அந்தக் கட்டை என்னவாக இருக்கும் என ஆற்றங்கரைக்கு வந்தாள். பெண்ணின் பிணம் ஒன்று கிடந்தது. இதைப்
பிடித்துக்கொண்டுதான் இவர் கரையைக் கடந்திருக்கிறார்என்பது தெரிந்தது.
தன் மீது இவ்வளவு மோகம் உள்ளவரா இவர்? என அவள் கட்டித் தழுவவில்லை. மயங்கவில்லை, மாறாகக் கோபம் கொண்டாள்.
நீயெல்லாம் ஒரு அந்தணனா? ஒருநாள் இப்படி கேவலம் அழுகி நாற்றமெடுக்கப் போகிற இந்த உடம்பின் மீதா இவ்வளவு மோகம் கொண்டு தர்மங்களையும் கர்மங்களையும் துறந்துவந்தாய்? நீயெல்லாம் ஒரு பிறவியா? இவ்வளவு கீழ்த்தரமானவனா நீ?
இதே வேகத்தையும்
ஆர்வத்தையும் இறைவனை அடைவதில் காட்டியிருந்தால்
இந்நேரம் பகவானை அடைந்திருக்கலாமே! என
பலவாறாகப் பேசி அவரது மனதைப் புண்படுத்தினாள்.
பில்வமங்களர் திகைத்துப் போனார். அதே சமயம் அவர் அறிவுக்கண் திறந்தது. உடனடியாக அவளது கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். அன்றிரவு அவள் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி பாட்டுப்பாட, அதைக் கேட்டு மெய்மறந்து கொண்டிருந்த அவர், விடியலில் எழுந்து வெளியே சென்றார். போவது எங்கே எனத்
தெரியவில்லை.
வழியில் சோமகிரி என்ற பெரியவர் தியானம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கோபால மந்திரத்தைப்
பெற்றவராக, ஆர்வத்தோடு கடவுளைத்தேடித் திரிந்தார். போகும்வழியில் அழகான
பெண்ணொருத்தியைப் பார்த்ததும் அவர் மனம் தள்ளாட ஆரம்பித்து விட்டது. அப்பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று திண்ணையில் உட்கார்ந்துகொண்டார். கதவை மூடவந்த அப்பெண்ணின்
கணவன், நீங்கள் யார்?
எதற்காக இங்கே
வந்திருக்கிறீர்? எனக் கேட்டான்.
அவள் அவனது மனைவி என அறிந்தும் ஆவலைப் அடக்க முடியாமல் அந்தப் பெண்ணின் அழகுப் பெருமையைக் கூறி அவளை ஒரே முறை பார்த்துவிட்டாலாவது தன் மனம் ஆறிவிடும் எனக் கூறினார். அவரது விருப்பப்படி தனது மனைவியை அழைத்துவர உள்ளே சென்றான்.
பில்வமங்களர் யோசித்தார், என்ன அறியாமை! அபச்சாரம் செய்தோம், இதற்கெல்லாம் காரணம் இந்தக் கண்தானே! இது இருப்பதால்தான் மீண்டும் தவறு செய்யவேண்டும்
என்ற எண்ணம் தோன்றியது, இது இல்லாமல் ஒழியட்டும் என நினைத்து, பக்கத்திலிருந்த வில்வ மரத்திலிருந்து முள்ளை ஒடித்துத்
தன் கண்களைக் குத்திக்கொண்டார்.
தம்பதியர் வெளியே வந்தபோது, இரத்தம் ஒழுகும் கண்களோடு பக்திப் பரவசத்தில் ஆடிக்கொண்டிருந்தவரைப்
பார்த்து வருத்தப்பட்டார்கள். கண்கள் இழந்த நிலையில்
அங்கிருந்து கிளம்பி தரிகெட்டவரைப் போல கிருஷ்ணா
கிருஷ்ணா என புலம்பியவாறு சுற்றிக்
கொண்டிருந்தார்.
காட்டு வழியே போகும்போது மாடு மேய்க்கும் சிறுவன் வந்து, பெரியவரே உனக்குப் பசிக்கும், நான் போய் உணவு
கொண்டுவருகிறேன் எனக் கூறிச் சென்றான்.
தினமும் தருவதாகவும் சொன்னான். இதனால் அவருக்கு
அந்தச் சிறுவன் மீது பாசம் ஏற்பட்டுவிட்டது,
தினமும் அவனைப் பார்க்க ஆவல் கொண்டார்.
ஒருநாள் அவருக்கு மனதில் சிந்தனை தோன்றியது. இவ்வளவு
நாட்களாக எதை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கடவுளை நெருங்கினேனோ, அதை மறந்து இந்தப் பையனின்
மீது பாசம் வைத்துவிட்டேனே,
இறைவா என்னை மன்னித்துவிடு என வேண்டினார்.
பிருந்தாவனம் போக ஆசையிருக்கிறதா? எனக்கேட்டான் பையன்.
இக்குருடனுக்கு அங்கு போக வழியை யார் காட்டுவார்?
என விரக்தியோடு
சொன்னார் பில்வமங்களர். உங்களது தடியைப் பிடித்துக்கொண்டு வழிகாட்டுகிறேன்,
வாருங்கள் செல்லலாம்
எனக்கூறி அவரை அழைத்துச் சென்றான். நன்றி கூற அவனது
கையைப் பிடித்தார் பில்வமங்களர்.
உடனடியாக அவரது உடலில் பரவச உணர்வு ஏற்பட்டது. இதுவரை தன்னுடன் இருந்ததும், வந்ததும் கண்ணன் என்பதைப்
புரிந்துகொண்டார். கண்ணா என்னை விட்டுப் போகாதே
என அழுது புலம்பினார். முடிந்தால்
தக்கவைத்துக்கொள் என சொல்லிவிட்டுக் கண்ணன்
கிளம்ப, ஏ, மாதவா! அச்சுதா, கோபாலா உன்னை என் உள்ளத்தில் கட்டிவைத்திருக்கிறேன்,
எங்கே சென்று
விடுவாய் நீ? எனக் கேட்டுப் புலம்பினார்.
பகவானைத் தரிசனம் செய்து பிறகு அவரது திருவடித் தாமரையைப் பிடித்துக்கொண்டு வைகுந்தப் பதவிக்கு
உயர்ந்தார்.
நீ பாவியாக இருந்திருந்தாலும் அதைப் பற்றி இப்போது வருந்தாதே. பாவத்தின் மீது எத்தனை வைராக்கியம் உள்ளதோ அதே வைராக்கியத்தை பகவான் மீது
திருப்பினால் பில்வமங்களர் மாதிரி நீயும் ஆகமுடியும்!
பயப்படாமல் இருக்கும் நிலையிலிருந்து பக்தி செய்து முன்னோக்கி வா என்பதுவே உனக்குத்தரும் ஆசிர்வாதம்
ஆகும்.
- ஸ்ரீ சாயி வரதராஜன்
No comments:
Post a Comment