Tuesday, May 19, 2015

.நரசிம்மசுவாமிஜியின் இன்னொரு அற்புத அனுபவம்

நரசிம்மசுவாமிக்கு சாயி பாபாவிடம் இருந்து கிடைத்த ஞானத்தை தவிர இன்னொரு அற்புதமான அனுபவம் ஏற்பட்டது . 1936 ஆம் ஆண்டு , நவம்பர் இல்லை டிசம்பராக இருக்கும் , உபாசினி மகராஜ் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார் . அதில் சுவாமி ராம் பாபா என்பவரும் வந்தார் . அந்த நேரத்தில் மிகவும் மோசமான உடலமைப்புடன் இருந்த ஒரு தொழு நோயாளி அங்கு வந்தார் . பார்க்கவே அருவருப்பும் , நாற்றமும் அடித்துக் கொண்டு இருந்தவனைக் கண்டு வந்திருந்த அனைவரும் முகம் கோணி நின்றனர் .
     வந்தவருக்கு உன் கையால் உணவு கொடு என உபாசினி மகராஜ் ராம் பாபாவிடம் கூறினார் . வந்தவரினால் உணவை அருந்த முடியவில்லை . திடீரென உபாசினி மகராஜ் வந்தவரினால் உணவு அருந்த முடியவில்லை என்பதினால் அவனுக்கு ஊட்டி விடு என ராம் பாபாவிடம் கூறினார் . அதைத் தட்ட முடியாமல் போன சுவாமி ராம் பாபாவும் , கூடுமானவரை அந்த தொழு நோயாளியின் ரத்தம் வழிந்து கொண்டு இருந்த உதடுகளில் தன்னுடைய கைகள் பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டு உணவு கொடுத்தார் . அதனால் சற்று உணவு கிழே விழுந்தது .
     அதன் பின் அந்த தொழு நோயாளி போய்விட அவர் விட்டுச் சென்ற உணவை அருந்துமாறு உபாசினி மகராஜ் சுவாமி ராம் பாபாவிடம் கூறினார் . அந்த உணவிலோ சிறிது ரத்தமும் சிந்தி இருந்தது . அருவருப்பினால் எத்தனை முயன்றும் அவரால் ஒரு கவளம் கூட சாப்பிட முடியவில்லை .
     அதற்குப் பின் உபாசினி மகராஜ் நரசிம்மஸ்வாமியை பார்க்க அவர் முன் வந்து சற்றும் தாமதிக்காமல், அந்த நோயாளி விட்டுச் சென்று இருந்த உணவை அருந்தினார் . கொஞ்சம் கூட முகம் கோணவில்லை.
      கூடி இருந்த அனைவருக்கும் உபாசினி மகராஜ் கூறினார் ,' நீங்கள் எவராவது வந்தவரைப் பார்த்தீர்களா ? எத்தனை விரைவாக அவர் திரும்பிச் சென்றார் என ? உண்மையிலேயே தொழு நோயாளியாக இருந்திருந்தால் அப்படி சென்று இருக்க முடியுமா ? வந்தவர் வேறு யாரும் அல்ல . அவரேதான் சாயிநாதர் . அவரை நரசிம்மசுவாமியால்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கின்றது '
     அந்த நிகழ்ச்சியைக் கண்ட நரசிம்மஸ்வாமி , தனக்கு வெளி வேஷத்தைக் கண்டு மயங்கக் கூடாது என்ற உபதேசம் செய்யவே சாயிநாதர் அப்படிப்பட்ட வேஷத்தில் வந்திருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டார்.
     அந்த நிகழ்ச்சியே நரசிம்மஸ்வாமியின் வாழ்வில் பெரிய பாடத்தைத் தந்து இருந்தது . அவருடைய ஆன்மீக பயணத்தில் சாயிநாதரே வழி நடத்திச் சென்று கொண்டு இருந்தார் .

Monday, May 18, 2015

ஒரே குறிக்கோள்

1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தி ஒன்பதாம் தேதியன்று சாயி பாபாவிடம் இருந்து தனக்கு கிடைத்த பொக்கிஷத்தை அனைவருக்கும் தர நரசிம்மசுவாமி முடிவு செய்தார் . அந்தக் காலத்தில் அவர் உபாசினி மகராஜ் , ரமண மகரிஷி ஆசிரமம் போன்ற இடங்களில் இருந்த பொழுது அவருடன் இருந்தவர்களில் ஒருவர் சுத்தானந்த பாரதி ஸ்வாமிகள் என்பவர் . அவருக்கு நரசிம்மசுவாமிகளுடைய முகத்தில் இருந்த தேஜசும் , சாந்த குணமும் மிகவும் பிடித்து இருந்தது . அவர் பாபாவுடன் சீரடியிலும் தங்கி இருந்தவர் .
     அவருக்கு ராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் , குரான் மற்றும் கிறிஸ்துவர்களின் பைபிள் போன்றவை அத்துப்படி . அது மட்டும் அல்ல அவர் சிறிது காலம் ராமகிருஷ்ணர் , விவேகானந்தர் போன்றவர்களுடன் கல்கத்தாவில் இருந்துள்ளார் . பத்ரிநாத் , கேதார்நாத் , காசி , ஹரித்துவார் , ரிஷிகேசம் போன்ற இடங்களுக்கும் சென்று வந்தவர் . அவர் நரசிம்மசுவாமி ஆன்மீக ஞானம் தேடி வரும் முன்னரே அதற்காக அலைந்து கொண்டு இருந்தவர் .
     அத்தனை இருந்தும் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைக்கவில்லை . ஆன்மீக ஞான ஒளிகளான சாயி பாபா , உபாசினி மகராஜ் போன்றவர்களுடன் இருந்தும் ஏனோ அவருக்கு அந்த ஞானம் கிடைக்கவில்லை என்பதினால் மனம் வருந்தி அது குறித்து உபாசினி மகராஜிடம் கூறிவிட்டு , சாயி பாபாவின் அருளினால் நரசிம்மசுவாமிக்கு அந்த பரிசு கிடைத்ததிற்கு பெருமைப்படுவதாகக் கூறினார் . உபாசினி மகராஜ் அவருக்கு எந்தப் பதிலும் தரவில்லை . அன்று இரவு அதற்கு பதில் தருவதாகக் கூறி அவரை இரவு விருந்திற்கு அழைத்தார் .
     இரவு வந்ததும் சுத்தானந்த பாரதி விருந்திற்குச் சென்றார் . அவர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்ததினால் நன்கு கவனிக்கப் பட்டார் . நன்கு வயிறு முட்ட உணவு அருந்தினார் . உபாசினி மகராஜ் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு நிறைய இனிப்பு வழங்கி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார் . சாப்பிட்ட பின் சுத்தானந்த பாரதியால் எழுந்திருக்ககூட முடியவில்லை . அத்தனை சாப்பிட்டு இருந்தார் . அவருக்கு எழுந்திருக்க மற்றவர் உதவ வேண்டி இருந்தது . இரவு சுத்தானந்த பாரதியால் உறங்கக்கூட முடியவில்லை . வயிற்று வலி , வயிற்றுப் போக்கு என இரவெல்லாம் உறங்க முடியாமல் அவதிப்பட்டார் .
     மறுநாள் அவரைக் காண வந்த உபாசினி மகராஜ் அவரிடம் கேட்டார் , என்ன நன்கு உறங்கினிர்களா ?.  
     சுத்தானந்த பாரதி கூறினார் , உறங்கினிர்களாவா ? இரவெல்லாம் வயிற்று போக்கு , வயிற்று வலி . அவதிப்பட்டேன் . என்னால் இப்போது நிற்கக்கூட முடியவில்லை .
     சுத்தானந்த பாரதி அவரிடம் என்னுடைய நேற்றைய கேள்விக்கு இன்னமும் விடை தரவில்லையே . எத்தனையோ புலமை பெற்ற எனக்கு ஏன் ஆத்ம ஞானம் கிடைக்கவில்லை ?
      உபாசினி மகராஜ் சிரித்தபடிக் கூறினாராம் , 'உன்னுடைய இந்த நிலையே உனக்கு பதிலாக இருக்குமே . உன் மனதில் ஒரே குறியை நோக்கிச் செல்லும் எண்ணம் இல்லை . நிறைய படித்து என்ன பயன் ? என்ன செய்யவேண்டும் என மனதில் ஒரு தீர்மானமான குறிகோளை வைத்துக் கொள்ளவில்லையே . நீ பெற்ற பெரும் கல்விகள் அதனால்தான் வயிற்றுப்போக்கு போல ஆகிவிட்டது . அதனால்தான் உன்னால் ஞானம் பெற முடியவில்லை. நரசிம்மசுவாமிக்கு மனதில் தனக்கு ஆன்மீக ஞானம் கிடைக்க சத்குரு வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருந்தது . சுமார் பதினோரு வருட முயற்சியினால் அவரால் அந்த குறிக்கோளை எட்ட முடிந்தது . சாயி பாபா அவருக்கு அதைத் தந்தார்

Sunday, May 17, 2015

சாயி பிரச்சாரத்தின் முதல் கட்டம்



ஆன்மீக ஞானம் பெற்ற நரசிம்ம ஸ்வாமிக்கு சீரடியில் இருந்து திரும்பிச்செல்ல மனமே இல்லை. அது குறித்துக் கூறுகையில் ' என் குருநாதரை இறுதியில் சந்தித்தேன். அந்த ஆனந்தத்தை எப்படிக் கூறுவது? எனக்குள் அவர் தன் நம்பிக்கையை வளர்த்து விட்டதும் அல்லாமல் எனக்கு என்ன தேவையோ அதை விட அதிகம் தந்தார்'
     அறுபது ஆண்டுகாலமாக அத்தனை சிறிய இடத்தில் அமர்ந்து கொண்டு அற்புதங்களை நிகழ்த்தி வந்த பாபாவின் கருணையையும் பெருமையும் நினைத்து வியந்து நின்றார் நரசிம்மசுவாமி. இனி அவருடைய புகழை அனைத்து இந்தியாவிலும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலில் மராத்திய மாநிலம் முழுதும் அவர் பெருமையை பரப்பத் துவங்க வேண்டும் என எண்ணினார்.
      ஒரு தென் இந்தியர் எடுத்த அப்படிப்பட்ட முயற்சியை சாயி சமஸ்தானத்தினர் பாராட்டினர். முதலில் அவர் கூறியபடி சமாதியில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர். பூஜா முறையை பண்டைய கால முறையில் அமையுமாறு மாற்றி ஆரத்தியிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். தாமே சாயி அஷ்டோத்திரம் என்ற உச்சாடனையை இயற்றி அதை மந்திரங்களுடன் கூடிய பூஜையாக தினமும் செய்ய ஏற்பாடு செய்தார்.
     அவர் பாபாவின் புகழை பரப்பும் முன் அதற்க்கு முன்னோடியாக அவருடைய அனுபவங்களைப் பெற்ற மராத்திய மாநில மக்களின் செய்திகளை சேகரித்தார். அவருக்கு மராத்திய மொழி தெரியும் என்பதினால் அதில் சிரமம் ஏற்படவில்லை. பாபா உயிருடன் இருந்த போது அவருடன் இருந்தவரும் துவாரகாமாயியை தினமும் பெருக்கி, துடைத்து சுத்தம் செய்தும்,  செடிகளுக்கு நீர் ஊற்றியும் வந்திருந்த அப்துல்லா பாபா , பாபாவின் பெருமையை கதா காலட்சேபமாக செய்து வந்திருந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிளான கணபதி ராவ் தத்தாத்ரேயா சஹஸ்றபுதே என்ற தாஸ் கன மகராஜ் , இந்தூரில் இருந்த எம்.கே.ரெகே போன்றவர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தன. 1936 ஆம் ஆண்டில் குளிர்காலத்தில் வரும் ஆர்திரைடிஸ் என்ற மூட்டு வலி நோய் வந்து நரசிம்மசுவாமி அவதிப்பட்டாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தமது கடமையை செய்து வந்தார்.
     இடமிடமாகச் சென்று பாபா தன் பக்தர்களின் துயர் துடைக்க செய்த அற்புத லீலைகளைக் கேட்டு அறிந்தார். அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி உள்ளார் என்பதையும் கேட்டு குறிப்புகள் எடுத்தக் கொண்டார். அவற்றை பக்தர்களின் அனுபவங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் மூன்று பாகமாக வெளியிட்டார்.
     அந்த அனுபவங்களைக் கேட்டறிந்த நரசிம்மஸ்வாமி பாபா உண்மையிலேயே கிருஷ்ணர், ராமர் போன்றவர்களின் அவதாரமாக மனித உருவில் வந்து இருந்தார் என்பதை உணர்ந்து கொண்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரை உண்மையான தெயவமாகவே போற்றி இருப்பார்கள் எனப் புரிந்து கொண்டார்.
      தாஸ் கன மகராஜ் ஏற்கனவே சாயி லீலாம்ருதம் என்ற மராத்திய புத்தகத்தை எழுதி இருந்தார். மும்பை சான்தாக்ருச்சில் இருந்த வழக்கறிஞரான எம். வீ. பிரதான் என்பவர் பாபாவை சந்தித்தபின் எழுதி இருந்த ஆன்மீக ஒளியின் சிதறல்கள் மற்றும் அன்னசாஹெப் டபோல்கர் என்பவர் எழுதி இருந்த ஸ்ரீ சாயி சரிதா போன்ற புத்தகங்களும் அவருக்கு உதவின. அவைகளில் கிடைத்த செய்திகள் மற்றும் தாம் கேட்டறிந்தவை என அனைத்தையும் ஒன்றாக்கி எம்.கே.ரெகே மற்றும் தாஸ் கன மகராஜ் போன்றவர்களின் துணையுடன் மராட்டிய மாநிலம் முழுதும் பயணம் செய்து சாயி பிரசாரம் செய்தார்.
     தமிழ் நாட்டில் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் சாயி பாபா பற்றிய தொடரை வெளியிட்டார். 1938 ஆம் ஆண்டில் அப்படிப்பட்ட பிரசாரத்தை மேற்கொண்டவர் 1939 ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பினார்.

Saturday, May 16, 2015

நரசிம்ம ஸ்வாமி கடவுளை நேரில் கண்டார்








1936 ம் ஆண்டு. ஸ்ராவண மாதம் . அன்றுதான் சகோதரிகள் தமது சகோதரர்களுக்கு கையில் கங்கணம் போல ராக்கி கட்டிவிடுவது பழக்கம். காலப்போக்கில் சடங்குகள் மாறிக்கொண்டு இருந்தாலும் பிராமணர்கள் பூணூல் போடும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அன்று நரசிம்மஸ்வாமி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டார்.
     தனது குடும்பத்தினருடன் சேலத்தில்  வாழ்ந்த வாழ்கையை நினைத்துப் பார்த்தார் . என்றைக்கு தான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வு அர்த்தம் இல்லாமல் இருப்பதையும், எத்தனை கஷ்டப்பட்டும் தம்மால் தம்முடைய குருநாதரை சென்று அடைய முடியவில்லையே என்று எண்ணியபொழுது மனதில் விரக்தி தோன்றியது. தன்னுடைய ஆசைக்கு விடி மோட்சமே இல்லை என்பதினால் இனி சென்னைக்கே சென்று மகன் வேங்கடராமனுடன் வாழ்ந்தபடி காலத்தை ஓட்டிவிடலாம் என எண்ணினார். ஆனால் தன்னுடைய எண்ணத்தை உபாசினி மகாராஜ் தெரிந்து கொண்டால் தன்னை தடுத்துவிடுவார் என எண்ணியவர் தூரத்தில் இருந்தே அவரிடம் மனதார விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
     ஆசிரமத்தை விட்டு வெளியேறி சுடுகாட்டில் இருந்து வெளி வந்தவரை வழியில் ஆஜானுபாகுவான ஒரு மனிதரைச் சந்தித்தார் . ஏறனியா வம்ச மனிதர் போன்று தோற்றம் தந்தவர்  'மதராசி சாது மகாராஜ், நீங்கள் எங்கே போகின்றீர்கள்?' என்று கேட்டார்.
     'இத்தனை நாளும் மன அமைதி தேடி ஆன்மீகப் பயணத்தில் இருந்த நான் சொந்த ஊருக்குப் போகின்றேன்"  என்றார் நரசிம்மசுவாமி.
      'வந்ததுதான் வந்தீர்கள், பக்கத்தில் உள்ள சீரடிக்குச் சென்று,  சாயீ பாபாவை தரிசனம் செய்து விட்டுப் போவதுதானே' என்றார் அந்த மனிதர்.
     மனதில் வெறுப்பு இருந்ததினால் அந்த பதானுடன் பேச்சைத் தவிர்க்க எண்ணினார்.  1918ம் ஆண்டிலேயே, அதாவது பதினெட்டு வருடம் முன்னரே சமாதி அடைந்து விட்டவரை காண்பதினால் எனக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படப் போவது இல்லை.நான் ஏற்கனவே ஹச்ரத்பாபாஜன் ,க்வாஜா சிஸ்டே ஷெரிப் மற்றும் தசுட்டின் பாபா போன்றவர்களை எல்லாம் சந்தித்துவிட்டேன். எவராலும் எனக்கு ஆன்மீகப் பாதையை காட்ட முடியவில்லை. அவர்கள் என் இதயத்திலும் அமரவில்லை' என்றார்.
     பதான் விடுவதாக இல்லை, நீங்கள் ஒரு முறையாவது அருள் வீசிக்கொண்டு இருக்கும் சாயிநாதரின் சமாதிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பலாமே என்றே தோன்றுகின்றது ' என்றார்.
     அந்த மனிதரிடம் ' சரி அங்கு செல்கிறேன்' எனக் கூறிவிட்டு ரயில்நிலையம் நோக்கி நடந்தார். சென்னைக்குச் செல்ல கிளம்பியவர் தன்னை அறியாமலேயே அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீரடி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தார். சீரடியை அடைந்த போது பதினோரு மணி இருக்கும். பாபாவின் சமாதியை அப்துல்லா பாபா என்பவர் மயில் தோகையினால் வருடிக்கொண்டு இருந்ததார் . சமாதி முன் சென்று நின்றவர் மனதில் அமைதி தோன்றியது. மனதில் இருந்த பாரம் குறைந்தது போல இருந்ததை உணர்ந்தார். பதினெட்டு ஆண்டுகளாக பாபா தனக்கு ஒரு தகுதியான சீடரை தேடிக்கொண்டு இருந்தார் போலும். ஒரே ஒரு கணம்தான்,   பாபா தன்னுடைய உடலை முழுமையாக ஆக்ரமிப்பதை உணர்ந்தார். ஆமாம் அவருக்கு பாபா ஞானம் தந்து விட்டார்.
      நரசிம்மசுவாமி தான் தேடி வந்த புதையல் கிடைத்துவிட்டது என்பதை உணர்ந்தார். அந்தக் கணத்தில் இருந்து அவர் பாபாவின் சீடராக மாறிவிட்டார். திருவண்ணாமலையில் ரமண முனிவரிடம் கண்டறிந்த ஆன்மீக ஞானம் என்ற மந்திரத்தைப் போலவே சகோரியில் பெற்றார். அந்த சகோரி முனிவர் 1941 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அது குறித்து இப்படி பேசினார் ' நான் சீரடிக்கு வருவதற்கு முன்னால் கட்டுக்கு அடங்காமல் இருந்த என் ஆன்மீகப் பசி அங்கு சென்ற பின் எத்தனை தேவையோ அதற்கு மேலும் அதிகம் தந்து என்னுடைய குருநாதர் என்னை ஆசிர்வதித்து உள்ளார்.  அவரே என் சத்குருவான சாயிநாதர்.  இன்றைக்கும் நான் தொடர்ந்து அவருடன் என் எண்ண அலைகளை பரிமாறிக் கொண்டுதான் இருக்கிறேன்'.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...