Sunday, May 17, 2015

சாயி பிரச்சாரத்தின் முதல் கட்டம்



ஆன்மீக ஞானம் பெற்ற நரசிம்ம ஸ்வாமிக்கு சீரடியில் இருந்து திரும்பிச்செல்ல மனமே இல்லை. அது குறித்துக் கூறுகையில் ' என் குருநாதரை இறுதியில் சந்தித்தேன். அந்த ஆனந்தத்தை எப்படிக் கூறுவது? எனக்குள் அவர் தன் நம்பிக்கையை வளர்த்து விட்டதும் அல்லாமல் எனக்கு என்ன தேவையோ அதை விட அதிகம் தந்தார்'
     அறுபது ஆண்டுகாலமாக அத்தனை சிறிய இடத்தில் அமர்ந்து கொண்டு அற்புதங்களை நிகழ்த்தி வந்த பாபாவின் கருணையையும் பெருமையும் நினைத்து வியந்து நின்றார் நரசிம்மசுவாமி. இனி அவருடைய புகழை அனைத்து இந்தியாவிலும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலில் மராத்திய மாநிலம் முழுதும் அவர் பெருமையை பரப்பத் துவங்க வேண்டும் என எண்ணினார்.
      ஒரு தென் இந்தியர் எடுத்த அப்படிப்பட்ட முயற்சியை சாயி சமஸ்தானத்தினர் பாராட்டினர். முதலில் அவர் கூறியபடி சமாதியில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர். பூஜா முறையை பண்டைய கால முறையில் அமையுமாறு மாற்றி ஆரத்தியிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். தாமே சாயி அஷ்டோத்திரம் என்ற உச்சாடனையை இயற்றி அதை மந்திரங்களுடன் கூடிய பூஜையாக தினமும் செய்ய ஏற்பாடு செய்தார்.
     அவர் பாபாவின் புகழை பரப்பும் முன் அதற்க்கு முன்னோடியாக அவருடைய அனுபவங்களைப் பெற்ற மராத்திய மாநில மக்களின் செய்திகளை சேகரித்தார். அவருக்கு மராத்திய மொழி தெரியும் என்பதினால் அதில் சிரமம் ஏற்படவில்லை. பாபா உயிருடன் இருந்த போது அவருடன் இருந்தவரும் துவாரகாமாயியை தினமும் பெருக்கி, துடைத்து சுத்தம் செய்தும்,  செடிகளுக்கு நீர் ஊற்றியும் வந்திருந்த அப்துல்லா பாபா , பாபாவின் பெருமையை கதா காலட்சேபமாக செய்து வந்திருந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிளான கணபதி ராவ் தத்தாத்ரேயா சஹஸ்றபுதே என்ற தாஸ் கன மகராஜ் , இந்தூரில் இருந்த எம்.கே.ரெகே போன்றவர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தன. 1936 ஆம் ஆண்டில் குளிர்காலத்தில் வரும் ஆர்திரைடிஸ் என்ற மூட்டு வலி நோய் வந்து நரசிம்மசுவாமி அவதிப்பட்டாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தமது கடமையை செய்து வந்தார்.
     இடமிடமாகச் சென்று பாபா தன் பக்தர்களின் துயர் துடைக்க செய்த அற்புத லீலைகளைக் கேட்டு அறிந்தார். அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி உள்ளார் என்பதையும் கேட்டு குறிப்புகள் எடுத்தக் கொண்டார். அவற்றை பக்தர்களின் அனுபவங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் மூன்று பாகமாக வெளியிட்டார்.
     அந்த அனுபவங்களைக் கேட்டறிந்த நரசிம்மஸ்வாமி பாபா உண்மையிலேயே கிருஷ்ணர், ராமர் போன்றவர்களின் அவதாரமாக மனித உருவில் வந்து இருந்தார் என்பதை உணர்ந்து கொண்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரை உண்மையான தெயவமாகவே போற்றி இருப்பார்கள் எனப் புரிந்து கொண்டார்.
      தாஸ் கன மகராஜ் ஏற்கனவே சாயி லீலாம்ருதம் என்ற மராத்திய புத்தகத்தை எழுதி இருந்தார். மும்பை சான்தாக்ருச்சில் இருந்த வழக்கறிஞரான எம். வீ. பிரதான் என்பவர் பாபாவை சந்தித்தபின் எழுதி இருந்த ஆன்மீக ஒளியின் சிதறல்கள் மற்றும் அன்னசாஹெப் டபோல்கர் என்பவர் எழுதி இருந்த ஸ்ரீ சாயி சரிதா போன்ற புத்தகங்களும் அவருக்கு உதவின. அவைகளில் கிடைத்த செய்திகள் மற்றும் தாம் கேட்டறிந்தவை என அனைத்தையும் ஒன்றாக்கி எம்.கே.ரெகே மற்றும் தாஸ் கன மகராஜ் போன்றவர்களின் துணையுடன் மராட்டிய மாநிலம் முழுதும் பயணம் செய்து சாயி பிரசாரம் செய்தார்.
     தமிழ் நாட்டில் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் சாயி பாபா பற்றிய தொடரை வெளியிட்டார். 1938 ஆம் ஆண்டில் அப்படிப்பட்ட பிரசாரத்தை மேற்கொண்டவர் 1939 ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பினார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...