Monday, December 30, 2013

காகா மஹாஜனி

  காகா மஹாஜனி ஒருமுறை சிர்டீயில் ஒருவாரம் தங்கவேண்டுமென்ற விருப்பத்துடன் பம்பாயி­ருந்து சிர்டீக்கு வந்தார்.
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும். சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்படும்; பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்த ஜனங்கள் ஆனந்தக்கூத்தாடுவர்.

     மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்டமி பண்டிகையின் கோலாகலங்களில் நேரில் கலந்துகொள்ளும் ஆவலுடன் காகா சில நாள்களுக்கு முன்னமேயே வந்துவிட்டார்.

     ஆனால், முதல் தரிசனத்திற்குப் போனபோதே பாபா கேட்டார், ''ஆக, எப்பொழுது நீர் வீடுதிரும்பப் போகிறீர்? இதைக்கேட்ட காகா மஹாஜனி திடுக்கிட்டார்.

    ''என்னைப் பார்த்தவுடனே எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார்? என்று காகா திகைத்துப் போனார். வாஸ்தவத்தில் அவர் சிர்டீயில் எட்டு நாள்கள் தங்கவேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தார்.

     பாபா கேள்வியைக் கேட்டவிதத்திலேயே, என்ன பதில் சொல்லவேண்டும் என்பதைக் காகா நிர்ணயித்துவிட்டார். இதனால், காகா கொடுத்த பதில் மிகப் பொருத்தமாக அமைந்தது.

    ''எப்பொழுது பாபா ஆக்ஞையிட்டாலும் அப்பொழுது வீடு திரும்பிவிடுகிறேன் என்று காகா பதிலுரைத்தார். இந்தப் பதிலைக் காகா சொல்­லிக்கொண் டிருந்தபோதே, ''நாளைக்கே வீடு திரும்பிவிடும் என்று பாபா சொல்­விட்டார்.

    பாபாவினுடைய ஆக்ஞையை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டு, பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு கோகுலாஷ்டமி விசேஷங்களையும் தள்ளிவைத்துவிட்டு பாபாவின் சொற்படியே வீடு திரும்பிவிட்டார் காகா.

    வீட்டை அடைந்தபின் அலுவலகத்திற்குச் சென்றபோது, முதலாளி அவருடைய வருகைக்காகச் சஞ்சலத்துடன் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண் டிருந்ததைக் கண்டார்.

     முதலாளியின் மணியக்காரர் திடீரென்று நோய்வாய்ப்பட்டிருந்தார்; ஆகவே, அவருக்குக் காகாவினுடைய உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. காகாவை உடனே திரும்பி வரச்சொல்­லி சிர்டீக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார்.

    தபால்காரர் காகாவைப்பற்றி விசாரித்துக்கொண்டு வந்தபோது, காகா சிர்டீயி­ருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்குத் திருப்பி அனுப்பப்பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் தம் வீட்டில் கிடைத்தது.



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

Sunday, December 29, 2013

முலே சாஸ்திரி – 2

நேற்றைய தொடர்ச்சி.........

         ஆயினும்முலே சாஸ்திரி தம்முடைய கரத்தை நீட்டிக்கொண்டே ஸாமுத்திரிகா பலன்கள் சொல்வதற்காக பாபாவின் கரத்தை நாடி முன்னேறினார். அம்மாதிரி அவர் முன்னேறியதைத் தாம் பார்க்கவேயில்லாததுபோல் பாபா அதைக் கண்டுகொள்ளவில்லை.
    முலே சாஸ்திரியின் நீட்டிய கரங்களில் நான்கு வாழைப்பழங்களை வைத்துவிட்டு அவரை அமரும்படி சொன்னாரே  தவிரகையைக் காட்ட மறுத்துவிட்டார்.
       இறைவனின் ஸேவையில் வாழ்நாள் முழுவதும் உடம்பைத் தேய்த்தவருக்கு ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரம் என்ன பலன் தரும். பக்தர்களுக்குத் தாயும் தந்தையுமான ஸாயீசகல விருப்பங்களும் நிறைவேறியவரல்லரோ.
      பாபாவினுடைய விருப்பமற்ற நிலையையும் ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரத்தை உதாசீனம் செய்ததையும் பார்த்த முலே சாஸ்திரிஇது வீண் முயற்சி என்று தீர்மானித்துமேலும் முயற்சி செய்வதை நிறுத்திக்கொண்டார். சிறிது நேரம் அங்கு மௌனமாக அமர்ந்துகொண் டிருந்துவிட்டுமற்றவர்களுடன் வாடாவிற்குத் திரும்பிவிட்டார். ஸ்நானம் செய்த பின்,  தாம் தினமும் செய்யும்  அக்கினிஹோத்திரத்தைச்  செய்ய ஆரம்பித்தார்.
      பாபா, ''இன்று நம்முடன் கொஞ்சம் காவிச்சாயம் எடுத்துக்கொண்டு  செல்லலாம். இன்று காவி உடை உடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி­க்கொண்டே எப்பொழுதும் போல லெண்டிக்குக் கிளம்பினார்.
      காவிச்சாயத்தை வைத்துக்கொண்டு பாபா என்ன செய்யப்போகிறார் என்றும்என்றுமில்லாமல் திடீரென்று இன்று ஏன் காவி உடையைப்பற்றி நினைக்கிறார் என்றும் அனைவரும் வியப்படைந்தனர். 
       இம்மாதிரி ஸங்கேத பாஷையில் பேசுவது பாபாவுக்கே கைவந்த கலை. இதி­லிருந்து என்ன புரிந்துகொள்ள முடியும் ஆனால் அவ்வார்த்தைகளை ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டு அதைப்பற்றி  யோசிக்க ஆரம்பித்தால் பலவிதமான விளக்கங்களைக் கண்டுபிடிக்கலாம்.
         மேலும்ஒரு ஞானியினுடைய திருவாய்மொழி என்றுமே அர்த்தமற்றதாக ஆகாது. அவர்களுடைய சொற்கள் பொருள்பொதிந்தவை. யாரால் அச்சொற்களை எடைபோட முடியும்?       முத­ல் கவனமுள்ள எண்ணம்பிறகு பேச்சு. இதுவே ஞானிகளின் வழிமுறை.  பிறகுஅவர்களுடைய சொல் நேர்மையான முறையில் செயலாகவும் மாற்றமடைகிறது.
       இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் ஞானிகளின் சொல் என்றுமே அர்த்தமில்லாமல் போகாது. ஆழமான தியானம் அச்சொற்களின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும்.
       பாபா லெண்டியி­ருந்து திரும்பி வந்தார். முரசுகளும் கொம்புகளும் ஒ­க்க ஆரம்பித்தன. பாபு ஸாஹேப் ஜோக் சட்டென்று முலே சாஸ்திரிக்கு யோசனை சொன்னார்.
      ''ஹாரதி நேரம் நெருங்கிவிட்டதுநீங்கள் மசூதிக்கு வருகிறீர்களா? மடி ஆசாரத்தை விடாப்பிடியாகக் கடைப்பிடித்த முலே சாஸ்திரிதம்முடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார்.
     ஆகவே அவர் பதிலுரைத்தார், ''நான் அப்புறமாகப் பிற்பக­ல் தரிசனம் செய்துகொள்கிறேன்”.. ஜோக் ஹாரதிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
     பாபா திரும்பி வந்துவிட்டிருந்தார்ஆசனத்தில் அமர்ந்துகொண்டு  ஜனங்களோடு பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராகத் தங்கள் பூஜையை முடித்தனர்ஹாரதி ஆரம்பிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன. 
      திடீரென்று பாபா சொன்னார், ''இன்று வந்த பிராமணரிடமிருந்து தக்ஷிணை வாங்கிக்கொண்டு வாருங்கள். உடனேஸ்ரீமான் புட்டியிடம் தக்ஷிணை வாங்கிக்கொண்டு வருவதற்குக் கிளம்பினார்.
      முலே ஸ்நானத்தை முடித்துவிட்டுமடி ஆசாரமான ஆடைகளை அணிந்துகொண்டு யோகாசன நிலையில் நிம்மதியான மனத்துடன் உட்கார்ந்துகொண் டிருந்தார்.
      பாபா அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் அவருடைய மனத்தை சந்தேகம் தாக்கியது. ''நான் எதற்காக தக்ஷிணை கொடுக்கவேண்டும்நான் தினமும் அக்கினிஹோத்திரம் செய்யும் நிர்மலமான பிராமணன்.
     ''பாபா ஓர் உயர்ந்த ஞானியாக இருக்கலாம். ஆனால்நான் அவருக்கு எவ்விதத்திலும் கடமைப்பட்டவன் அல்லேன்! என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார்? அவருடைய மனம் தத்தளித்தது.
     ''அதே சமயம்ஒரு சிறந்த ஞானி தக்ஷிணை கேட்கிறார்இச்செய்தியை ஒரு கோடீச்வரர் எனக்குக் கொண்டுவருகிறார். முலே சாஸ்திரிக்கு மனத்தில் சந்தேகம் இருந்தபோதிலும் கொஞ்சம் தக்ஷிணை எடுத்துக்கொண்டார்.
    இன்னும் ஒரு சந்தேகமும் இருந்தது. ஆரம்பித்துவிட்ட சடங்குகளை முடிக்காமல் மசூதிக்கு எப்படிச் செல்வதுஆனால், (பாபாவுக்கு தக்ஷிணை) இல்லை என்று சொல்லவும் மனமில்லை. சந்தேகம் கொண்ட மனத்திற்கு முடிவெடுக்கும் உறுதி இருக்காதுஏதாவது ஒரு வழியில் செல்லாதுஅவர் திரிசங்கு நிலையி­ருந்தார்.    ஆயினும்அவர் போவதற்கு  முடிவுசெய்துஸபாமண்டபத்தினுள் நுழைந்து தூரத்திலேயே நின்றுகொண்டார்.
     ''நான் மடி ஆசாரமாக உடை உடுத்திக்கொண் டிருக்கிறேன்மசூதி ஓர் ஆசாரமில்லாத இடம்பாபாவின் அருகில் நான் எப்படிப் போகமுடியும்?  இவ்வாறு நினைத்துக்கொண்டு கூப்பிய கைகளுக்குள் இருந்த பூக்களை பாபாவின்மீது புஷ்பாஞ்ஜலி­ செய்தார். ஈதனைத்தும் தூரத்தி­ருந்துதான் நடந்தது.
  ஓ! அவருடைய கண்ணெதிரிலேயே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அமர்ந்திருந்த ஆசனத்தில் பாபா தெரியவில்லைமாறாகத் தம் பூஜ்யகுரு கோலப் மஹராஜையே பார்த்தார்.



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

நீயே அது!

      
     பல்வேறு வகையான முனிவர்களை எல்லாம் நமக்குத் தெரியாது. அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதெல்லாம் நாம் அறியோம்.
     
      அறியாமை உள்ள, பிணிக்கப்பட்ட ஆன்மாக்களை விடுவிக்க கடவுளருளால் அவர்கள் இவ்வுலகில் தங்களை அவதரித்துக் கொள்கிறார்கள்




சாயி சத்சரிதம் அத்:  23 – 47- 51

Saturday, December 28, 2013

முலே சாஸ்திரி - 1


        குருவின் மஹாத்மியத்தைப் பிரகாசப்படுத்தும் சுவாரசியமான இந்தக் காதையை அவசியம் கேளுங்கள். குருபக்தர்களுக்குத் தம்முடைய பிரேமையை ஸாயீ அளிப்பதை நிதரிசனமாகத் தெரிந்துகொள்ளலாம்.
        ஒரு சமயம் நாசிக் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தி­ருந்து, சடங்குச்செல்வரும் ஆசாரசீலரும் அக்கினிஹோத்திரியுமான முலே சாஸ்திரி என்பவர் பூர்வபுண்ணிய பலத்தால் சிர்டீக்கு வந்தார்.
      முலே, ஸ்ரீமான் புட்டியைச் சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் சிர்டீக்கு வந்தார்.  அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹஸியமான திட்டம் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.
        முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியைச் சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்குப் போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்லவேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார்.
        முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; ஸாமுத்திரிகா லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர். பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்துபோனார்.
        அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்குப் பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய் போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர்.
        மேலும், கொய்யாப்பழம், வாழைப்பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப்பட்டபோது, தாமே பாக்கெட்டி­ருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார்.
         தம்முடைய பணத்தைச் செலவுசெய்து கூடைகூடையாக மாம்பழங்களோ அல்லது குலைகுலையாக வாழைப்பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்.
         ஒவ்வொரு மாம்பழமாகக் கையில் எடுத்துக்கொள்வார். இரு உள்ளங்கைகளாலும் அழுத்தித் தேய்த்துக் கொளகொளவென்று செய்துவிடுவார். அதன்பிறகு ரஸத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார்.
        இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப்பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரஸத்தையெல்லாம் ஒரு பாத்திரத்தி­ருந்து குடிப்பதுபோலக் குடித்துவிடலாம். தோலையும் கொட்டையையும் மாத்திரம் எறிந்துவிடலாம்.
       வாழைப்பழங்களை அவர் கையாண்டவிதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தாம் தோலைத் தின்பார். ஓ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவை!
      பழங்களையெல்லாம் தம்முடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அவர் உண்பதென்னவோ எப்போதோ ஒரே ஒரு பழம்.
      எப்பொழுதும்போல, பாபா அன்று கூடைகூடையாக வாழைப்பழங்கள் வாங்கி விநியோகம் செய்துகொண் டிருந்தார்.  முலே சாஸ்திரி பாபாவினுடைய திருவடிகளைக் கண்டு ஆச்சரியமடைந்து, கொடி, வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கின்றனவா என்று பார்த்தறிய விரும்பினார்.
      காகாஸாஹேப் தீக்ஷிதர் அப்பொழுது அருகி­ருந்தார்; நான்கு வாழைப்பழங்களை எடுத்து பாபாவின் கைகளில் வைத்தார்.
       ''பாபா, இவர் புண்ணிய க்ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார். இந்தப் பழங்களை அவருக்குப் பிரஸாதமாகக் கொடுங்கள் என்று சொல்­லி பாபாவை உந்தினார்.
      யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார். ஆகவே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது?
      மேலும், முலே சாஸ்திரிக்கு வாழைப்பழம் வேண்டா; பாபாவினுடைய கைரேகைகளைப் பார்க்கவே விரும்பினார். இதற்காகவே அவர் தம்முடைய கையை நீட்டினார். பாபா இதைக் கண்டுகொள்ளவில்லை; பிரஸாதம் விநியோகிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
      முலே பாபாவிடம் வேண்டினார், ''எனக்குப் பழம் வேண்டா; உங்களுடைய கையைக் காட்டுங்கள்; ஸாமுத்திரிகா (லக்ஷணத்தின்படி) பலன் சொல்கிறேன். ஆனால், பாபா கையைக் காட்ட அடியோடு மறுத்துவிட்டார்.
       இதன் தொடர்ச்சி நாளை காணலாம்.....



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...