Sunday, May 15, 2016

இத்துடன் உங்கள் கஷ்டம் முடிந்துவிட்டது


கர்ம வினையினால்தான் கஷ்டங்கள் வருவதாக நமது முன்னோர் கூறிச் சென்றுள்ளனர். கர்ம வினை என்பது முற்பிறவி வினை மட்டுமன்று, இப்பிறவி வினையும் ஆகும்.
தவறு செய்தால் தண்டனை நிச்சயம். அதே தவறுக்காகப் பிராயச்சித்தம் செய்வது என்பது தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான உபாயம் அல்லவா?
இப்படிப்பட்ட உபாய மார்க்கம்தான் இறை வழிபாடு; தான தர்மம் செய்தல்; பிறருக்கு முடிந்தளவு நன்மை செய்தல் போன்றவை. இவ்வாறு நாம் செய்யும்போது கர்மவினையின் தீவிரத் தாக்கம் குறைய ஆரம்பித்து புண்ணியம் சேர்கிறது. புண்ணியம் சேரும்போது நமக்கு நல்லவிஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
புத்திசாலியாக இருக்கிறவர்கள் நல்ல விஷயம் வாழ்க்கையில் நடக்கிற காலத்தை புண்ணியகாலம் என அறிந்து, மேலும் நன்மைகளைச்செய்தால் தொடர்ந்து பலனைப் பெறலாம். தீமையிலிருந்தும் தப்பிக்கலாம். பக்த சேவை செய்தே புண்ணியம் சம்பாதித்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.
நம் உபதேசத்தின் உதாரணத்திற்கு சித்ரா பவுர்ணமியை ஒட்டிய ஒரு கதையைக்கூறுகிறேன்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்ர குப்தனை வழிபாடு செய்தால் நீண்ட ஆயுள் பெறலாம். புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதை வலியுறுத்தும் ஒரு கதையும் உண்டு. ஏற்கனவே கதை உங்களுக்குத்தெரியும், இருந்தாலும் சுருக்கமாகக்கூறுகிறேன்.
புண்ணியம் என்ன என்பதையே அறியாத முரட்டுப் பாவி ஒருவன் இருந்தான். கோயில் பக்கமும் போனது இல்லை, நல்லதையும் செய்ததில்லை. அவனது தாயார் அவனிடம் மகனே, நீ எப்படியிருந்தாலும் பரவாயில்லை, தினமும் சித்ர குப்தாய நம: என்ற ஒரு மந்திரத்தையாவது தினமும் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். அவனும் அப்படிச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அவனுடைய விதி முடியும் காலம் வந்தது. சித்ரகுப்தன் அவனுடைய பாவ புண்ணியங்களைப் பார்த்தான். எந்த நன்மையும் செய்யாத அவன், தினமும் தன்னுடைய பெயரை உச்சரித்து வந்தது தெரியவரவே, அவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய உறுதிகொண்டான்.
அவனது கனவில் சென்று, “மகனே, விதி முடிந்து இறக்கும் நேரம் வந்துவிட்டது, இறந்தால் உனக்கு கொடிய நரக தண்டனை கிடைக்கும். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமானால், பசு நீர் அருந்தும் அளவுக்கு ஒரு சிறிய குளத்தை வெட்டு, அதில் ஊறும் நீரை ஒரு பசு அருந்தினால் மூன்றே முக்கால் நாழிகைக்குப்புண்ணிய காலம் ஏற்படும்.
எம தர்மன் உன்னிடம் முதலில் புண்ணிய பலனை அனுபவிக்கிறாயா? பாவப் பலனை அனுபவிக்கிறாயா? என்று கேட்டால், புண்ணியப்பலனை அனுபவிக்கிறேன் என்று சொல். மூன்றே முக்கால் நாழிகை புண்ணிய காலத்தில் நான் உனக்கு நன்மை செய்து காப்பாற்றி விடுகிறேன் என்று கூறினான்.
இறக்க ஒருவாரம் உள்ள நிலையில், சித்ர குப்தன் கூறிய இந்த உண்மையை உணர்ந்த முரட்டுப் பாவி, குளம் வெட்ட ஆரம்பித்தான். ஆறு நாட்கள் முடிந்தும் அதில் தண்ணீர் வரவில்லை. ஏழாம் நாள் சிறிது தண்ணீர் ஊற ஆரம்பித்தது. இதற்குள் அக்குளக்கரைக்கு பசுவின் வடிவில் வந்த சித்ர குப்தன், ம்மா.. ம்மா.. எனக் கூவி மற்ற பசுக்களை அங்கு வரவழைத்துவிட்டான். இந்த நீரைப் பார்த்ததும் ஒரு பசு இறங்கி தண்ணீர் பருகியது. இதற்குள் நெஞ்சு வலி வந்து முரடன் இறந்து போனான். அவனை எமனிடம் தூதர்கள் அழைத்துச்சென்றார்கள். இவன் ஒரு புண்ணியத்தைக் கூட செய்ததில்லை, ஒரே ஒரு பசு அருந்த குளம் வெட்டினான்என்று சித்ரகுப்தன் கூறினான்.
அடே பாவி, உனக்கு மூன்றே முக்கால் நாழிகை சொர்க்க வாசம் உள்ளது. முதலில் சொர்க்கம் வேண்டுமா, நரகம் வேண்டுமா?” எமன் கேட்டார்.
முரடன் சொர்க்கம் வேண்டும் என்றான்.
சொர்க்க வாசம் கிடைத்ததும் புண்ணியப்பலன் சேர ஆரம்பித்து அவன் வெட்டிய குளத்தில் நிறைய நீர் நிறைய ஆரம்பித்தது, ஏராளமான பசுக்கள் தண்ணீர் குடித்தன. இதன் மூலம் அவனுக்கு புண்ணிய காலம் நீள ஆரம்பித்தது. நிரந்தர சொர்க்க வாசியாகிவிட்டான். இதுதான் கதை.
எமனுக்குப் போட்டுக்கொடுப்பதே சித்ரகுப்தன் தான். அவர்கூட தன்னை நம்பிய ஒரு பக்தனை காப்பாற்றுகிறார் என்கிறது கதை. தாத்பரியம் என்னவெனில், நீங்கள் யாரை வழிபட்டாலும் அவர்கள் மூலமாக உங்களுக்கு நன்மைகள் நிச்சயம் உண்டு. பேயை வணங்கினாலும்  அது உங்களுக்கு நன்மையைத்தான் செய்யும் என்பது.
இறைவன் சிலா வடிவில் இருப்பதால் சிலை வணக்கம் செய்யுங்கள், அதனால் நன்மை பிறக்கும் என்று நமது முதாதையர் கூறினார்கள். செய்யுங்கள், பலன் பெறுங்கள்.
எப்படி எனப் புரியவில்லையே என்கிறீர்களா? நீங்கள் வழிபாடு செய்யும்போது மனதை சாந்தப் படுத்தி நேர்வழியை விரும்புகிறீர்கள். பிரசாதம் போன்றவற்றை அளிக்கும்போது பலருக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்கிறீர்கள்; மற்றவர்களுடன் இன்முகத்துடன் பழகுகிறீர்கள்; அவர்கள் மனதை இதமாக்குகிறீர்கள். உங்கள் மீது கரிசனம் உண்டாகும் விதத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
இத்தகைய பல செயல்கள் அனைத்தும் இறை வழிபாட்டின் மூலம் கிடைப்பதால்தான் கல்லை நட்டுவைத்து இதுதான் உன் குல தெய்வம் இதையாவது கும்பிடு என்று முன்னோர் சொல்லி வைத்தார்கள். ஆங்காங்கே கோயில்களையும் தர்மசாலைகளையும் நிறுவி வைத்தார்கள். கொஞ்சம் அமர்ந்து யோசித்து புண்ணியத்தை பெருக்கும் வழிகளில் ஈடுபடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இப்படிச் செய்தால் இத்துடன் உங்கள் கஷ்டம் முடிந்துவிட்டது என்பதை உறுதியாக அறியுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...