Sunday, July 7, 2013

நான் உன்னைக் காப்பாற்றுவேன்...2





நேற்றைய தொடர்ச்சி
நான்கு நாட்கள்கூட ஆகவில்லை. என் மைத்துனர் போன் செய்து, ஒரு திருமணத்தில் நம் மகளின் போட்டோவைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு, பெண்ணைப் பிடித்திருக்கிறது என்றும், பெண் பார்க்க வருவதாகவும் கூறினார்கள். அவர்கள் வந்தால் பேசலாம் என்றார்.
பணம் இல்லாத நிலையில் என்ன செய்வது என யோசித்தேன்.. பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மைலாப்பூர் பாபா ஆலயத்திற்கு வழக்கமாகச் செல்பவர். அவர்,  பயப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும் என்று கூறி உதி கொடுத்தார்.
எனது மகளின் தோழிகள் நான்கு பேர் வாசலில் இருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்தப் பெண்கள், இவர்தான் நம் அக்காவுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை என சத்தமாகச் சொன்னார்கள்.
நாங்களும் வந்து பார்த்தோம். மாப்பிள்ளையை பிடித்திருந்தது. என் மகளும் மேலிருந்து அவரைப்பிடித்திருப்பதாகக் கூறினாள். மாப்பிள்ளையின் தகப்பனார் பெரும்புதூரில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் என்னிடம், எங்களுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது.. வேறு எதுவும் சீர் செனத்தி என பெரிதாகப்பண்ணவேண்டாம். நமக்குக் குடும்பம், உறவுகள் அதிகம். அதனால் திருமணத்தை நல்ல சத்திரத்தில் வைத்தால் மட்டும் போதும் என்றார்.
கையில் பணமில்லை, என்ன செய்வது என திகைத்தேன். என் மனைவி அவளது தம்பிகளிடம் சொல்லி அழுதிருப்பாள் போலும். தாம்பரத்திலுள்ள என் மைத்துனர் சக்கரபாணி, அக்காவிடம் வந்து, அக்கா, பணமில்லை என வருந்தாதே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
சக்கரபாணி, பாண்டுரங்கன், பால கிருஷ்ணன், துரை பாபு ஆகிய எனது நான்கு மைத்துனர்களும் எங்களை எதுவும் செய்யவிடவில்லை. எல்லாப் பொறுப்புகளையும் அவர்களே செய்து திருமணத்தை சிறப்பாக நடத்தினார்கள்.
எங்கள் மாப்பிள்ளை மோகன், கடுமையான உழைப்பாளி. சாதாரண நிலையிலிருந்து இன்றைக்கு நானூறு பேருக்கு வேலை அளிக்கும் நிலைக்கு
உயர்ந்து இருக்கிறார். பெரும்புதூரில் மோகன் அசோசியேட்ஸ் என்ற பெரிய நிறுவனத்தை நடத்திவருகிறார். தயாள குணமுள்ள இவர், பல கோயில்களைப் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார்.
என் மகள் ஜெயந்தி, மாப்பிள்ளை மோகன் தம்பதியருக்கு ஒரே மகள் வளர்மதி. தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.. அன்றைக்கு அற்புதங்களைச் செய்து என் மகளை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இன்று வாழவைத்துக்கொண்டிருக்கிறார் பாபா.
தொழில் அதிபரான என் மகன் தரன் வாழ்வில் அவர் செய்த அற்புதத்தையும் கூறிவிடுகிறேன். என் மகன் திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தான். இது எங்களுக்குக் கவலையாக இருந்தது. வாழ்க்கையைத் துறந்து எங்காவது போய்விடலாமா என்றுகூட நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் நானும் என் மகனும் என் மகனின் தொழிற்சாலையில் இருந்தபோது, காவி கட்டிய ஒரு பெரியவர் என் மகனிடம் நேராக வந்து, எனக்குக் காசு ஐந்து ரூபாய் கொடு. என்று கேட்டார்.
மகனிடம் நூறு ரூபாயாக இருந்ததால், என்னிடம், அப்பா,இவருக்கு என்னவேண்டுமோ அதைக்கேட்டு செய்யுங்கள் என என்னிடம் அனுப்பினான்.
நான் பெரியவரை அமரச்சொல்லி உபசரித்து, காபி கொடுத்தேன். அதை அருந்தியபடி, தன் கைப்பைக்குள் கையைவிட்டு, அதிலிருந்து சில பன்னீர் புஷ்பங்களை எடுத்து ஒரு தாளில் மடித்து,  ‘இதை எங்கேனும் வைத்துக்கொள்.. என்று கூறினார்.
ஏன் கவலை? மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்றா? எங்கேனும் சாமியாராகப்போய்விடலாம் என நினைக்கிறீர்களா? கவலைப்படாதே, மகனுக்கு திருமணம் நடக்கும் என்றார்.
நான் அவரைப் பார்த்தபோது,  ‘என் பேச்சில் நம்பிக்கையில்லாவிட்டால், நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துப் பிரி என்றார். அதைப்பிரித்துப் பார்த்தபோது, பன்னீர் புஷ்பங்கள் எல்லாம் அட்சதை அரிசிகளாக மாறியிருந்தன.

இதன் தொடர்ச்சி நாளை....

Saturday, July 6, 2013

நான் உன்னைக் காப்பாற்றுவேன்...1




என் பெயர் கோதண்டபாணி. சென்னையில் தங்கசாலையில் வசிக்கிறேன். அறுபத்தாறு வயது ஆகிறது. என் தந்தையா கண்ணையா நாயுடு அவர்கள் சிற்ப வேலை செய்வதில் நிபுணர்.
கண்ணன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சிலைகள் விற்பனை செய்யும் கடையை 1957 –ல் ஆரம்பித்தோம். எங்களுக்கு கும்பகோணத்தில் இரண்டு பட்டறைகள், கே.கே. நகரில் கல் பட்டறை இரண்டு, மகாபலிபுரத்தில் இரண்டு பட்டறைகள், சுவாமி மலையில் விக்ரகம் ஊற்றும் பட்டறை இரண்டு ஆகியவை இருந்தன. எங்கள் வீட்டில் மொத்தம் நாற்பத்தைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சென்னையில் எங்கள் கடையைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
மேல் மருவத்தூரிலுள்ள விக்ரகம், ராமச்சந்திரா மருத்துவமனையிலுள்ள விக்ரகம், டெல்லியில் டாக்டர் சசிக்குமார் அவர்கள் பெரிய கோயில் ஒன்றை
கட்டினார். ஜனாதிபதியின் டாக்டராக இருந்த இவர் கட்டிய கோயில்களின் அனைத்து விக்ரகங்களையும் நாங்கள்தான் செய்து தந்தோம்.
அந்தக் காலத்தில் அப்பா தவிர, குடும்பத்தில் உள்ள பலர் திராவிட இயக்கத்தில் இருந்தார்கள். இதனால் நாத்திகனாக இருந்தேன். 1964 - ல் படிப்பை நிறுத்திக் கொண்டேன். 1971 ல் ஐடிசி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து 1985 வரை அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றேன். அதன் பிறகுதான் சாயி பக்தரானேன். பாபா எனக்குச் செய்த அற்புதங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
அது 1986 - ம் வருடம். வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். காலமாற்றம் என் விஷயத்திலும் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. தந்தையாரின் தொழில்கள் நசித்து, சொத்துக்கள் அனைத்தும் இழந்து என் உழைப்பில்தான் பிழைக்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருந்தேன்.
என் ஒரே மகள் ஜெயந்திக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை, அதை நடத்த முடியாத நிலையில் இருந்தேன்.
இந்தக் கவலையுடன் ஒருநாள், மின்ட் பகுதியிலிருந்து சாந்தி தியேட்டருக்கு நள்ளிரவு காட்சி படம் பார்க்க வந்தேன். படம் முடிந்து தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தேன்.
மின்ட் அருகே ஒரு முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் அருகே வந்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னால் வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் நடந்து செல்வதை கவனித்தேன். அப்போது அதிகாலை இரண்டு மணியிருக்கும்.
தனியாக வருகிறவரை முனீஸ்வரர் மிரட்டுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இது அப்படித் தான் இருக்கும் என நினைத்தபடி நடந்தேன். ஆனால் மனதில் பயமில்லை. காரணம், நான் என் மகளைப்பற்றி நினைத்தபடி சென்றதுதான்.
முன்னால் சென்ற உருவம் நின்று திரும்பியது. பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டேன். அது ஓர் ஆள். என்னைப் பார்த்து, என்ன உன் மகளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலையா? கவலைப் படாதே, இன்னும் நான்கு நாட்களுக்குள் உனக்கு நல்ல சேதி வரும் என்றார்.
என் மனதில் உள்ளதைச் சொல்கிறாரே என வியந்தபடி, தலையைத் தூக்கி முன்னால் பார்த்தேன். எனக்கு முன்னால் யாருமே இல்லை. சற்று தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும் நின்று கொண்டு இருந்தது. அதில் பாபா படம் ஒட்டப்பட்டு இருந்தது.
நான் கையெடுத்துக் கும்பிட்டேன்.. பாபா, நான் உன்னை வணங்காமல் இருந்தபோதும், நீ எனக்கு தரிசனம் தந்து உதவி செய்கிறாயே! என்று சொல்லி கண்ணீர் விட்டேன்.
எனது சிறிய தந்தையார் ஒருவர் மிகத் தீவிரமான சாயி பக்தர். வியாழன் தோறும், பாபாவை வணங்கி எல்லோருக்கும் உதிப்பிரசாதம் தருவார். ஒருநாள் அவர் திடீரென இறந்துவிட்டார்.
குடும்ப வழக்கப்படி இறந்தவர்களை எரித்து விடுவோம். அவரது சடலத்தை எரியூட்டுவதற்காக எடுத்துச் சென்றேhம். வழக்கத்துக்கு மாறாக, அடை மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. எரியூட்டவே முடியவில்லை.
அப்போது ஒருவர் சொன்னார், இவர் தீவிர சாயி பக்தராயிற்றே. தன் பக்தனின் உடம்பு எரிவதை சாயி பாபா விரும்பமாட்டார் போலிருக்கிறது. புதைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதன் படி புதைக்க முடிவு செய்தோம், மழை பட்டென நின்றுவிட்டது.
இப்படிப்பட்ட அற்புதங்கள் பலவற்றைப்பார்த்திருந்தபோதிலும் எனக்கு பாபா மீது பக்தி வந்தது இல்லை. இப்போது அவரது தரிசனத்தைப்பார்த்து நெகிழ்ச்சியடைந்து போனேன்.

இதன் தொடர்ச்சி நாளை

Friday, July 5, 2013

அன்னதானமே பிரதானம்


மைலாப்பூர் பாபா கோயில்


டாக்டர் கிருபளானியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, உலகிலேயே எங்குமில்லாத சிறப்பு நம் மைலாப்பூர் பாபா கோயிலுக்கு இருக்கிறது. என்ன தெரியுமா? என்றார்.
வேறு எந்தக் கோயிலிலும் அன்னதானம் செய்வதற்கு ஒரு வரையறை உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமே அன்னதானம் செய்யப்படுகிறது. மைலாப்பூர் பாபா ஆலயத்தில் இத்தகைய வரைமுறைகள் எதுவும் கிடையாது.
எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வயிறார இருவகை உணவு அளிக்கிறார்கள். இது போன்று அக்கோயிலில் முக்கியத்துவம் தரப்படுவதால்தான் அது உயர்ந்து வளர்ந்துகொண்டே போகிறது என்றார். இதற்கான ஏற்பாடுகளை பாபாவே செய்கிறார் என்று கூறினார்.
உண்மையிலேயே மைலாப்பூர் பாபா ஆலயத்தில் வழங்கப்படுவதைப் போன்ற அன்னதானம் வேறு எங்கும் அளிக்கப்படுவதில்லை.
ஒருமுறை மைலாப்பூரிலுள்ள அகில இந்திய சாயி சமாஜத்தலைவர் தங்கராஜ்  அவர்களிடம் பேசும் போது சொன்னார், எல்லோரும் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு வீணாகத்தூக்கி எறிகிறார்கள் என்று சிலர் குறை சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது, இவ்வாறு வீசப்படுகிற உணவுகளை நாய், பன்றி, மாடுகள், , எறும்பு உட்பட பல உயிர்களும் எடுத்து சாப்பிடுகின்றன. இவற்றுக்கும் பாபா இங்கிருந்து உணவளிக்கிறார் என்பதே உண்மை என்றார்.
அந்தளவுக்கு சாயி சமாஜ நிர்வாகத்தினர், அன்னதானத்திற்கு முக்கியத்துவம் தந்து பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறார்கள். இவ்வாறு அன்னதானத்திற்கு முக்கியத்துவம் தருவதால்தான் மைலாப்பூர் பாபா ஆலயம் விண்ணோக்கி வளர்ந்து போகிறது.

உன் குடும்பம் கரை சேரும்....3




நேற்றைய தொடர்ச்சி.....
முதலில் உனது குரு யார் என அடையாளம் காண். அவரது தகுதிகளை அறிந்துகொள்ள முயற்சி செய்.. உனது தகுதிக்கு ஏற்றவரா? உனது குணாதிசயங்களுக்கு ஒத்து வருகிறவரா? அவர் உன்னை கடைசி வரை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்ப்பாரா என்று ஆராய்ந்து பார்.
நான் ஆராய்ந்து பார்த்தேன்.. பல குருமார்களிடம் சென்றேன்.. கடைசியில் பாபாவே எல்லாவற்றுக்கும் தகுதியானவர் என்பதைத் தெளிந்து அவரைப்பிடித்துக்கொண்டேன். அவர் என் படகை செலுத்திக் கொண்டிருக்கிறார்.
மனிதர்களில் பலரை நாடினேன்.. பலரிடம் அடைக்கலம் புகுந்தேன்.. அவர்களை சோதித்தேன்..ஆனால் கடைசியில் பாண்டிச்சேரியில் உள்ள பாபா மாஸ்டர் அருணாச்சலம் அவர்களை மட்டும் மிக நெருக்கமாக பிடித்து வைத்துக்கொண்டேன்.
மானசீகமாக அன்னையாக, தந்தையாக, குருவாக அவரை நினைக்கிறேன்.. எல்லாரும் உயர்ந்தவர்கள் தான்.. ஆனால் என் இயல்புக்கு ஏற்றவர் அவர்.. நான் தப்பு செய்தால், கடுமையாக கண்டிக்கமாட்டார்... திருத்துவார்.. நான் நல்லது செய்தால் உற்சாகப்படுத்துவார்.. நான் உயர்ந்துகொண்டு போகும்போது என்னை தூக்கிவிடுவதற்கு என்ன வழிகள் உள்ளன.. எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்லித் தருவார்..
எல்லோரிடமும் என்னைப் பற்றி பெருமையாகப் பேசுவார் (என்னிடம் ஒன்றுமில்லை என்று அவருக்கு தெரிந்திருந்த போதிலும்). எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவார்.. நான் போனால் எனக்கு எளிமையாக காட்சி தருவார்.. உபசரிப்பார்..
இதனால் அவரை எல்லாவற்றுக்கும் பிடித்து வைத்திருக்கிறேன். இப்படித்தான் அனுபூதி சித்தரை நண்பராக, உறவாக, குருவாக வைத்திருக்கிறேன்..அவர்கள் இன்முகம் காட்டி நன்மையை எனக்குச்செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட குரு போல உனது சத்குரு இருக்க வேண்டும்.. அந்த குரு யார் என்பதைத் தீர்மானம் செய்.. அவருக்கு பரீட்சை வை.. தேறினால் அவர் பின்னால் போ.. இல்லாவிட்டால் அவரை கண்டு கொள்ளாதே... சத்குரு உனக்கு இன்முகம் காட்டிவிட்டால் போதும்.. உனக்கு நன்மைகள் வந்துவிடும்..சத்குருவானவர் எல்லாரையும் ஏற்கமாட்டார்.. அவர் சில தகுதிகளை உன்னிடம் எதிர்பார்ப்பார்..அந்தத் தகுதிகள் இருந்தால்தான் உன்னை ஏற்பார்.வழிகாட்டுவார்.. தேவைப்பட்டால் உனக்காக அவர் யுத்தமே செய்வார்.. உனக்காக இந்த உலகத்தையே அழிக்கவும் துணிவார்..
இவ்வளவு மேன்மையுள்ள அவரை எப்படி பிடிக்க வேண்டும்? என்னென்ன தட்சணை தர வேண்டும்? என்று கணக்குப் போட வேண்டும். உலகத்தையே கொடுத்தாலும் அவருக்குத்திருப்தியிருக்காது... பிறகு.. எதைக் கொடுப்பது? சத்சரிதத்தில் சொல்லப்படும் சோல்கரைப் போல தேநீருக்குப் போடும் சர்க்கரையை குறைத்து அவருக்கு அதை காணிக்கையாக்கு..
அதாவது.. ஒரு கப் தேநீருக்கு எவ்வளவு சர்க்கரை போடுவாய்? அதற்கு எவ்வளவு செலவாகும்..தினமும் ஒரு பத்து பைசா அல்லது ஐம்பது பைசா செலவாகும். இது நமக்குப் பெரிய விஷயமாகத்தெரியாது.. அதே சமயம் நல்லதும் நடக்கும்.கிருஷ;ண பரமாத்மா கூட, ஒரு இலை,பூ, ஒரு காய் என எதைக் கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்பதாகச் சொன்னாரே... அப்படியானால் தினமும் ஒரு பதார்த்தத்தை காணிக்கையாக வைத்து விடலாமா? என யோசிக்காதே.. பொருட்களின் மதிப்பு குறைவுதான். அதை வைத்துக் கொடுக்கும் தங்கத் தட்டின் விலை மிக அதிகமல்லவா? பகவான் நீ தரும் இலையை, பூவை வைத்து என்ன செய்வார்? அது வைக்கப்பட்ட தங்கத்தட்டைத்தான் எதிர்பார்ப்பார்..
அந்தத் தங்கத்தட்டு எது?
உன் மனது..எதையும் உள்ளன்போடு தந்தால் அதை அவர் ஏற்றுக் கொள்வார். ஆகவே, உள்ளன்போடு ஒரு நமஸ்காரம் செய், போதும். உன் அன்பை அவருக்குக்காணிக்கையாகக் கொடுத்துவிடு.. அன்பை உருவாக்கும் உள்ளத்தை அவருக்கு தந்துவிடு..
அதன்பிறகு நீ ராஜ்ஜியத்தைக் கேட்கவேண்டாம், பதவியைக் கேட்கவேண்டாம்.. ஆயுசைக் கேட்க வேண்டாம்.. வேறு எதையும் கேட்கவேண்டாம்..
அவரே உனக்கு அனைத்தையும் கொடுத்துவிடுவார். விபீஷணன் ராமரை சரணடைந்துவிட வரும் போது, அவருக்கு என்ன பிடிக்கும்? எதைத் தந்தால் அவரை அணுகலாம்?  என அனுமனிடம் கேட்டாராம்.
ஐயா, நான் ஒரு விலங்கினம். அவருக்கு என்ன தர என்னால் முடியும்? அவர் எதற்கும் மசியமாட்டார்.. ஒருவரது மேன்மை, தகுதி, செய்துவரும் சடங்கு,தருகிற பரிசுகள், பின்பற்றுகிற ஒழுங்குமுறைகள், குலப்பெருமை போன்ற எதனாலும் அவரைக்கவரமுடியாது...
அவரைக் கவர்வதற்கு, மனதை சுத்தமாக்கி, அதில் இயல்பாகப் பெருகுகிற அன்பை அவருக்குக்காணிக்கையாக்கினேன். அவர் எனக்கு வயப்பட்டார். அன்பினால் மட்டுமே அவரைக் கவரமுடியும்.
எனவே, இதயத்தை சுத்தமாக்கிக் கொண்டு அன்பினால் அவரை அணுகு.. அப்போது அவர் உன் வசப்படுவார்’, என்று சொல்லி அனுப்பினார்.
அப்படித்தான் இறைவனை அன்பால் கட்டிப்போட வேண்டும். இதற்கு எந்த செலவும் கிடையாது. இறைவனை எங்கு பார்ப்பது, எப்படி நான் அன்பு செலுத்துவது? என்று கேட்கலாம்.
கண்ணில் தெரிந்த உயிரினங்களிடம் செலுத்தும் அன்பு கடவுளுக்குச் செலுத்தும் அன்பாகும். அதை உணர்ந்து உயிரினங்களை நேசி.. அவைகளுக்கு உரியதை அவை அனுபவிக்க அனுமதி கொடு..உன்னை பிறருக்காக விட்டுக்கொடு.. அப்போது கடவுள் உன் மீது சந்தோஷப்படுவார். உனக்கு நல்ல சத்குரு அமைவார்.
நான் சுத்தமில்லாமல், பக்தியில்லாதவன் என உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே- பாவிகள் மீது தான் பகவான் பச்சாதாபப்படுவார்.
எனவே, இந்த நிலையிலேயே அவரை சரணடைந்துவிடு. உன் உள்ளத்தை அவருக்குச் சமர்ப்பித்துவிடு.. அதை அவர் எடுத்து துலக்கி சுத்தம் செய்துகொள்வார்..இந்த அன்பால் சத்குரு வசப்பட்டு உன் வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உனக்குக்கட்டுப்பட்டு உன்னிடம் தஞ்சமாக இருப்பார்..
ஜெய் சாய் ராம்..

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...