என் பெயர் கோதண்டபாணி. சென்னையில் தங்கசாலையில்
வசிக்கிறேன். அறுபத்தாறு வயது ஆகிறது. என் தந்தையா கண்ணையா நாயுடு அவர்கள் சிற்ப
வேலை செய்வதில் நிபுணர்.
கண்ணன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சிலைகள் விற்பனை செய்யும்
கடையை 1957 –ல் ஆரம்பித்தோம். எங்களுக்கு கும்பகோணத்தில் இரண்டு பட்டறைகள்,
கே.கே. நகரில் கல் பட்டறை இரண்டு,
மகாபலிபுரத்தில் இரண்டு பட்டறைகள், சுவாமி மலையில் விக்ரகம் ஊற்றும் பட்டறை இரண்டு
ஆகியவை இருந்தன. எங்கள் வீட்டில் மொத்தம் நாற்பத்தைந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
சென்னையில் எங்கள் கடையைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
மேல் மருவத்தூரிலுள்ள விக்ரகம், ராமச்சந்திரா மருத்துவமனையிலுள்ள விக்ரகம், டெல்லியில் டாக்டர் சசிக்குமார் அவர்கள் பெரிய
கோயில் ஒன்றை
கட்டினார். ஜனாதிபதியின் டாக்டராக இருந்த இவர் கட்டிய கோயில்களின் அனைத்து
விக்ரகங்களையும் நாங்கள்தான் செய்து தந்தோம்.
அந்தக் காலத்தில் அப்பா தவிர, குடும்பத்தில் உள்ள பலர் திராவிட இயக்கத்தில்
இருந்தார்கள். இதனால் நாத்திகனாக இருந்தேன். 1964 - ல் படிப்பை நிறுத்திக் கொண்டேன்.
1971 ல் ஐடிசி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து 1985 வரை அங்கு பணியாற்றி ஓய்வு
பெற்றேன். அதன் பிறகுதான் சாயி பக்தரானேன். பாபா எனக்குச் செய்த அற்புதங்களை
வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
அது 1986 - ம் வருடம். வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன்.
காலமாற்றம் என் விஷயத்திலும் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. தந்தையாரின் தொழில்கள்
நசித்து, சொத்துக்கள் அனைத்தும்
இழந்து என் உழைப்பில்தான் பிழைக்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருந்தேன்.
என் ஒரே மகள் ஜெயந்திக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை,
அதை நடத்த முடியாத நிலையில் இருந்தேன்.
இந்தக் கவலையுடன் ஒருநாள், மின்ட் பகுதியிலிருந்து சாந்தி தியேட்டருக்கு நள்ளிரவு
காட்சி படம் பார்க்க வந்தேன். படம் முடிந்து தனிமையில் நடந்து சென்று
கொண்டிருந்தேன்.
மின்ட் அருகே ஒரு முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்த
ஆலயத்தின் அருகே வந்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னால் வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் நடந்து செல்வதை கவனித்தேன்.
அப்போது அதிகாலை இரண்டு மணியிருக்கும்.
தனியாக வருகிறவரை முனீஸ்வரர் மிரட்டுவார் எனக்
கேள்விப்பட்டிருக்கிறேன்.. இது அப்படித் தான் இருக்கும் என நினைத்தபடி நடந்தேன்.
ஆனால் மனதில் பயமில்லை. காரணம், நான்
என் மகளைப்பற்றி நினைத்தபடி சென்றதுதான்.
முன்னால் சென்ற உருவம் நின்று திரும்பியது. பார்த்துவிட்டு
தலையை குனிந்து கொண்டேன். அது ஓர் ஆள். என்னைப் பார்த்து, ’என்ன உன் மகளுக்கு இன்னும்
கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலையா? கவலைப்
படாதே, இன்னும் நான்கு நாட்களுக்குள்
உனக்கு நல்ல சேதி வரும்’ என்றார்.
என் மனதில் உள்ளதைச் சொல்கிறாரே என வியந்தபடி, தலையைத் தூக்கி முன்னால் பார்த்தேன். எனக்கு
முன்னால் யாருமே இல்லை. சற்று தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும் நின்று
கொண்டு இருந்தது. அதில் பாபா படம் ஒட்டப்பட்டு இருந்தது.
நான் கையெடுத்துக் கும்பிட்டேன்.. பாபா, நான் உன்னை வணங்காமல் இருந்தபோதும், நீ எனக்கு தரிசனம் தந்து உதவி செய்கிறாயே!
என்று சொல்லி கண்ணீர் விட்டேன்.
எனது சிறிய தந்தையார் ஒருவர் மிகத் தீவிரமான சாயி
பக்தர். வியாழன் தோறும், பாபாவை
வணங்கி எல்லோருக்கும் உதிப்பிரசாதம் தருவார். ஒருநாள் அவர் திடீரென
இறந்துவிட்டார்.
குடும்ப வழக்கப்படி இறந்தவர்களை எரித்து விடுவோம்.
அவரது சடலத்தை எரியூட்டுவதற்காக எடுத்துச் சென்றேhம். வழக்கத்துக்கு மாறாக, அடை மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. எரியூட்டவே முடியவில்லை.
அப்போது ஒருவர் சொன்னார், ’இவர் தீவிர சாயி பக்தராயிற்றே.
தன் பக்தனின் உடம்பு எரிவதை சாயி பாபா விரும்பமாட்டார் போலிருக்கிறது. புதைக்க ஏற்பாடு
செய்யுங்கள்’ என்றார். அதன் படி புதைக்க முடிவு செய்தோம், மழை பட்டென நின்றுவிட்டது.
இப்படிப்பட்ட அற்புதங்கள்
பலவற்றைப்பார்த்திருந்தபோதிலும் எனக்கு பாபா மீது பக்தி வந்தது இல்லை. இப்போது
அவரது தரிசனத்தைப்பார்த்து நெகிழ்ச்சியடைந்து போனேன்.
இதன் தொடர்ச்சி நாளை
No comments:
Post a Comment