நேற்றைய தொடர்ச்சி
நான்கு நாட்கள்கூட ஆகவில்லை. என் மைத்துனர் போன் செய்து,
ஒரு திருமணத்தில் நம் மகளின் போட்டோவைப்
பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு, பெண்ணைப்
பிடித்திருக்கிறது என்றும், பெண்
பார்க்க வருவதாகவும் கூறினார்கள். அவர்கள் வந்தால் பேசலாம் என்றார்.
பணம் இல்லாத நிலையில் என்ன செய்வது என யோசித்தேன்..
பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மைலாப்பூர் பாபா ஆலயத்திற்கு வழக்கமாகச் செல்பவர்.
அவர், பயப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும் என்று கூறி உதி கொடுத்தார்.
எனது மகளின் தோழிகள் நான்கு பேர் வாசலில் இருந்தார்கள்.
அப்போது ஒருவர் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்தப் பெண்கள், இவர்தான் நம் அக்காவுக்குப் பொருத்தமான
மாப்பிள்ளை என சத்தமாகச் சொன்னார்கள்.
நாங்களும் வந்து பார்த்தோம். மாப்பிள்ளையை பிடித்திருந்தது.
என் மகளும் மேலிருந்து அவரைப்பிடித்திருப்பதாகக் கூறினாள். மாப்பிள்ளையின்
தகப்பனார் பெரும்புதூரில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் என்னிடம்,
’எங்களுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது.. வேறு எதுவும் சீர் செனத்தி என
பெரிதாகப்பண்ணவேண்டாம். நமக்குக் குடும்பம், உறவுகள் அதிகம். அதனால் திருமணத்தை நல்ல சத்திரத்தில் வைத்தால்
மட்டும் போதும்’ என்றார்.
கையில் பணமில்லை, என்ன செய்வது என திகைத்தேன். என் மனைவி அவளது
தம்பிகளிடம் சொல்லி அழுதிருப்பாள் போலும். தாம்பரத்திலுள்ள என் மைத்துனர்
சக்கரபாணி, அக்காவிடம் வந்து,
’அக்கா, பணமில்லை என வருந்தாதே!
நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றார்.
சக்கரபாணி, பாண்டுரங்கன், பால கிருஷ்ணன், துரை பாபு ஆகிய எனது நான்கு மைத்துனர்களும் எங்களை
எதுவும் செய்யவிடவில்லை. எல்லாப் பொறுப்புகளையும் அவர்களே செய்து திருமணத்தை சிறப்பாக
நடத்தினார்கள்.
எங்கள் மாப்பிள்ளை மோகன், கடுமையான உழைப்பாளி. சாதாரண நிலையிலிருந்து இன்றைக்கு நானூறு
பேருக்கு வேலை அளிக்கும் நிலைக்கு
உயர்ந்து இருக்கிறார். பெரும்புதூரில் மோகன் அசோசியேட்ஸ் என்ற பெரிய
நிறுவனத்தை நடத்திவருகிறார். தயாள குணமுள்ள இவர், பல கோயில்களைப் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார்.
என் மகள் ஜெயந்தி, மாப்பிள்ளை மோகன் தம்பதியருக்கு ஒரே
மகள் வளர்மதி. தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.. அன்றைக்கு அற்புதங்களைச்
செய்து என் மகளை வளமாகவும், மகிழ்ச்சியாகவும்
இன்று வாழவைத்துக்கொண்டிருக்கிறார் பாபா.
தொழில் அதிபரான என் மகன் தரன் வாழ்வில் அவர் செய்த
அற்புதத்தையும் கூறிவிடுகிறேன். என் மகன் திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தான்.
இது எங்களுக்குக் கவலையாக இருந்தது. வாழ்க்கையைத் துறந்து எங்காவது போய்விடலாமா என்றுகூட
நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம்.
ஒருநாள் நானும் என் மகனும் என் மகனின் தொழிற்சாலையில்
இருந்தபோது, காவி கட்டிய ஒரு பெரியவர்
என் மகனிடம் நேராக வந்து, ’எனக்குக் காசு ஐந்து ரூபாய் கொடு.’ என்று கேட்டார்.
மகனிடம் நூறு ரூபாயாக இருந்ததால், என்னிடம், ’அப்பா,இவருக்கு
என்னவேண்டுமோ அதைக்கேட்டு செய்யுங்கள்’ என என்னிடம் அனுப்பினான்.
நான் பெரியவரை அமரச்சொல்லி உபசரித்து, காபி கொடுத்தேன். அதை அருந்தியபடி, தன் கைப்பைக்குள் கையைவிட்டு, அதிலிருந்து சில பன்னீர் புஷ்பங்களை எடுத்து
ஒரு தாளில் மடித்து, ‘இதை எங்கேனும் வைத்துக்கொள்..’ என்று கூறினார்.
’ஏன் கவலை? மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்றா?
எங்கேனும் சாமியாராகப்போய்விடலாம் என
நினைக்கிறீர்களா? கவலைப்படாதே,
மகனுக்கு திருமணம் நடக்கும்’ என்றார்.
நான் அவரைப் பார்த்தபோது, ‘என் பேச்சில் நம்பிக்கையில்லாவிட்டால்,
நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துப் பிரி’ என்றார். அதைப்பிரித்துப் பார்த்தபோது, பன்னீர் புஷ்பங்கள் எல்லாம் அட்சதை அரிசிகளாக
மாறியிருந்தன.
இதன் தொடர்ச்சி நாளை....
No comments:
Post a Comment