Tuesday, August 2, 2016

ஐந்து பிறவிகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் பல பிறவிகள் உண்டு. சில பிறவிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது முதல் பிறவி. இயற்கையானது உணவு வழியாக குழந்தைக்கு சக்தியைத் தருகிறது. கல்வி கற்க பள்ளிக்குச்செல்கிறான் அல்லவா? அது இரண்டாவது பிறவி.
வித்யா தேவியின் கர்ப்பத்தில் இருக்கிறான். இயற்கை மற்றும் தாய் தந்தையர் வித்யா தேவியின் கர்ப்பத்திற்குச் சக்தி அளிக்கிறார்கள். மூன்றாவது லட்சுமி தேவியின் கர்ப்பத்தில் வாசமாக இருக்கிறான். இதற்குத் தேவையான சக்தியை வித்யா தேவி அளிக்கிறாள். அவன் பொருள் சேர்த்து பிறர்க்கும் அளித்து, தானும் பயன்படுத்துகிறான். நான்காவதாக, அவன் உமா தேவியின் கர்ப்பத்தில் வாசம் செய்கிறான். உமா என்றால் ஞானம் என்று பொருள். ஞானத்தை அடைய அவனுக்கு வித்யா தேவி, லட்சுமி தேவி ஆகியோர் உதவுகிறார்கள். அதன் பிறகு அவன் ஐந்தாவது பிறவியை அடைகிறான். அதுதான் பரமாத்ம சொரூபமாவது.
பிரம்மச்சாரி
நிறைய பேர் கல்யாணமாகாதவனை பிரம்மச்சாரி என்கிறார்கள். இந்த ஒரு காரணத்தை மட்டும் தன்னிடம் வைத்திருப்பவன் பிரம்மச்சாரி கிடையாது. பிரம்மத்தை அறிந்தவன், தன்னுள் இருக்கும் பிரம்மத்தை எப்போதும் வணங்குபவனே பிரம்மச்சாரி. அவன் எப்படியிருப்பான் என்றால், வெளியே காண்கிற அனைத்தையும் தன்னுள் காண்பான். தன் சொந்த நலனைப் புறக்கணித்து சமூகத்திற்கு உதவுகிறவனாக இருப்பான். உறுதியான மனதுடன் மக்கள் சேவைக்காக தன்னை தயார்படுத்திக்கொள்வான். உழைப்பின் பலன் தெரிகிற வரையில் உழைப்பான் . இருப்பவன் பிரம்மச்சாரி. துன்பம் வந்தாலும் தொடர்ந்து அதை எதிர் கொண்டு மகிழ்ச்சியுடன் சேவையை முடிப்பான்.
தர்மம், தவம் இரண்டையும் கலந்த வாழ்க்கையை வாழ்வான். கடவுள் பக்தர்கள், பக்தர்கள் அல்லாத வர்கள் ஆகிய இரு தரத்தாரையும் கடவுளாக பாவித்துத்தொண்டு செய்வான். இந்த லட்சணங்கள் உள்ளவனே பிரம்மச்சாரி.

உனக்கு மங்களமாக அமையும்!



சாயி பக்தர் பாபாவை எப்போதும் நினைக்க வேண்டும், அவரை தரிசிக்க வேண்டும், அவரது பாதங்களில் மனதை லயிக்க விட வேண்டும். ஏன் இப்படி செய்ய வேண்டும் என்றால், இந்த மூன்று சாதனங்களும் நம்மை கர்ம வினையின் எல்லாவிதப் பிடிகளில் இருந்தும் விடுவித்து விடும் சக்தி பெற்றிருக்கிறது, எனவே இப்படிச் செய்யவேண்டும்.
நீங்கள் சதா சாயி சாயி என்று சொல்லிக் கொண்டு இருப்பீர்களேயானால் உங்களை ஏழு கடல்களுக்கு அப்பாலும் கொண்டு சென்று சேர்ப்பேன் என்று பாபா கூறியதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
அவருடைய திவ்விய நாமம் நமது பாவங்களைக் கழுவி விடுகிறது. இதை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமானது, எந்த தீர்த்தத்திலும் நீராட வேண்டிய அவசியமில்லை, ஷேத்திரங்களுக்குப் போக வேண்டியதில்லை. எதற்காகப் போகிறோமோ அந்த நோக்கம் பகவானின் திருநாமத்தை ஜபிப்பதால் நமக்கு நிறைவேறிவிடுகிறது. பகவான் நம்முடனேயே இருப்பான்.
ஒரு பக்தன், சாயியை அன்பு கலந்த பக்தியுடன் வணங்கவேண்டும், அவர் மீது பூரணமான நம்பிக்கையை வைக்க வேண்டும். ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்றால், யாருடைய பாவம் ஒழிந்தனவோ, யாருடைய பூர்வ புண்ய வினைகள் செயல்பட ஆரம்பித்து உள்ளனவோ, யாருக்கு நல்லது நடைபெற உள்ளதோ அவர்கள் என்னை வழிபட ஆரம்பிக்கிறார்கள் என்று பாபா கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பூரண பக்தியுடனும் விசுவாசத்துடனும் என்பால் லயமாகிற பக்தனுடைய எல்லாச் செயல்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஆகவே அவரை விடாமல் வணங்க வேண்டும்.
அவரை தரிசிக்கப் போகும்போது அவர் தனது சமாதியிலிருந்து எழுந்துவந்து நம்மை கட்டி அணைத்துக்கொள்கிறார்; நம்மைத்தொடுகிறார்;  முத்தமிடுகிறார். இந்த உணர்வு அவரது உண்மையான பக்தர்களுக்கு ஏற்படுகிற அனுபவமாகும். இந்த அனுபவத்தை நீங்கள் அடையவேண்டும். என் சமாதி என் பக்தருடன் உறவாடும், என் எலும்புகள் அவர்களுடைய நலனை விசாரிக்கும் என பாபா கூறியிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, கனடாவில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும்,சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா என எந்த நாட்டில் இருந்தாலும் உங்களை பாபா தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கால்களில் பக்தி என்கிற நூலைக் கட்டி வைத்திருக்கிறார். அதைக் கொண்டு உங்களை தன் விருப்பப்படி ஆட்டுவிக்கிறார். பொம்மலாட்டக்காரன் கையில் உள்ள பொம்மையைப் போல நீங்கள் அவரால் ஆட்டப்பட வேண்டும். அப்படித்தான் ஆடுகிறீர்கள் என்றாலும் முழுவதும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஆட்டப்பட வேண்டும் என்பதற்காக அவரை வணங்கி வழிபாடு செய்யுங்கள்.
இந்த ஆண்டு முழுவதும் இனி வரும் காலங்கள் யாவிலும் நீங்கள் சிரமமின்றி வாழவேண்டும் என்றால் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் உங்களது எல்லா செயல்களுக்கும் அவர் சூத்திரதாரியாகிவிடுவார். நீங்கள் நினைத்ததும், நினைக்காததும் உங்களுக்குச் சாதகமாக நடக்கும்.
நீங்கள் முழுக்க முழுக்க அவரை சரண் அடைந்து வழிபட ஆரம்பித்துவிட்டால் அவர் உங்களை வழி நடத்துவதை சுலபமாக உணரமுடியும். நமக்கு எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக அவர் வருவதையும்;, நமக்கு முன்னால் செல்வதையும் பக்கத்தில் இருப்பதையும் உணரலாம்.
இனியாவது நாம் நமது கர்வத்தை விட்டு விட்டு அவரை கபடம் இல்லாத மனத்துடன் வணங்க வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வத்துடன் மணியடிக்கக் கூடாது. இது அகம்பாவமாகும். அகம்பாவத்துடன் அவரை நான் கும்பிடுகிறேன் என் பக்கத்தில் அவர் இருக்கிறார் என சொல்லிக் கொண்டு மனம் போன போக்கில் போகக்கூடாது. நமது மனதை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்.
நமது மனதில் எளிமை இருக்கவேண்டும், தெளிவு இருக்க வேண்டும், பணிவு இருக்க வேண்டும், நம்பிக்கை இருக்கவேண்டும். அது மட்டுமல்ல அவர் தனது சக்தியை முழுமையாக நம்மிடம் பிரயோகிக்கும் அளவுக்கு நாம்ஒரு குழந்தையைப் போல மாறி விடவேண்டும்.
வளர்ந்த உங்களைத் தூக்கி விளையாட உங்கள் பெற்றோரால் இயலுமா? ஆனால் நீங்கள் குழந்தையாக இருந்தபோது அவர்கள் தூக்கிக் கொஞ்சினார்கள், விளையாட்டுக் காட்டினார்கள், சுமந்து சென்றார்கள் அல்லவா? அப்படியே பாபா உங்களைத் தூக்கி சுமக்க வேண்டும் என்றால் கபடம், ஞ்சனை, பொறாமை, பொய், ஏமாற்றுதல், கள்ளத்தனம் போன்ற குணங்களை விட்டவர்களாக அவரை வழிபட வேண்டும்.
அவருடைய திருநாமத்தையே சொல்லிப் பழக வேண்டும். இதனால் பாவம் போகிறது, நமது கோபம் போகிறது. இன்னல் மறைகிறது, கேடு வருவது தவிர்க்கப்படுகிறது. வேண்டிய அனைத்தும் விரைவில் வந்து கிடைப்பதற்கான சூழல் உண்டாகிறது.
அதுமட்டுமல்ல, அறியாமை மிக்க குணமும், எதையும் அடைந்துவிட வேண்டும் எனத் துடித்து தர்மத்திற்கு மாறாக நடக்கிற குணமும் நம்மை விட்டு அகன்று, மனதில் இரக்கமும் கருணையும் பிறக்க வாழும் நிலை உண்டாகிவிடுகிறது.
நமக்கு எது தேவை என்ற எண்ணம், தேடல் நம்மைவிட்டு நீங்கத் தொடங்கிவிடுகிறது. காரணம், அவை அனைத்தையும் பாபாவே நமக்காகக்கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார். எனவே, நாளையைப் பற்றிய கவலை வேண்டாம் என்ற நிலை உண்மையான பக்தனுக்கு உண்டாகிறது.
எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற தேவை இல்லாத பயம் மறைந்துவிடுகிறது. எல்லாவற்றையும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற தைரியமும் தெளிவும் வந்து விடுகிறது. ஆகவே, நீங்கள் இந்த உணர்வை அனுபவமாகப் பெற  முதலில் சாயி பாபாவை வணங்க வேண்டும்.
இதுவரைக்கும் அவரை இப்படித்தான் கும்பிட்டு வருகிறேன். எனக்கு எதுவும் கிடைத்தபாடில்லை. அவர் எனக்கு எல்லாவற்றையும் சரியாகத் தருகிறார் என்பதை நான் எப்படி புரிந்துகொள்வது? சரியாகத் தரும் வகையில் நான் இருப்பதை எப்படி உணர்ந்து கொள்வது எனக் கேட்பாயானால், கூறுகிறேன் கவனி!
உனது மனம் எதையாவது வேண்டிக் கொண்டே இருக்கிறதா? பரபரக்கிறதா? வரவேண்டியதற்காக ஏங்குகிறதா? போனதற்காக கவலைப்படுகிறதா? சூழ்நிலை மாறும்போது நீ உணர்ச்சி வசப்படுகிறாயா? ஆபத்து அல்லது சங்கட நேரத்தில் மனம் அலைபாய்கிறதா? ஆம் என்று சொன்னால் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்று பொருள்.
அடப் போய்யா... பாபா பார்த்துக் கொள்வார் என மனம் தைரியமாக நீ எதிர்கொள்கிற எதைப் பார்த்தும் துச்சமாக நினைக்கிறதா? சித்தம் கலங்காமல் இருக்கிறதா? எது வந்தாலும் பாபா நீயே கதி எனக் கூறுகிறதா? அப்படியானால் நீ பக்குவப்பட்டு விட்டாய் என்று அர்த்தம். மன ஒருமை உனக்கு கை வரப்பட்டுள்ளது. நீ அவரை சரணாகதி அடைந்து இருக்கிறாய். எதற்கும் கவலைப்படாதே அவர் உன்னை வழிநடத்துவார்.
இதையெல்லாம் பின்பற்றி இந்த ஆண்டு முதல் உண்மையான சாயி பக்தராக வாழ முடிவு செய்து கொண்டபிறகு, பாபா என்னை உன்னைப் போல மாற்றுங்கள் என வேண்டுதல் செய். பக்தி தானாக எப்போதும் மனதில் இருக்கும். தவறு செய்யாத அறநெறி வாழ்க்கை அமையும். மனது அலையாது. உடம்புக்கு எதுவும் வராது.  நீ நினைத்தது எல்லாம் நிறைவேறும், உன்னைப் பார்த்து நாலுபேர் நல்லவர்களாக மாறுவார்கள்.
வாழ்க நீ! உனது பக்தி வளர்க! ஓங்குக செல்வம்!

ஸ்ரீ சாயி வரதராஜன்

படித்ததில் வலித்தது....

கிட்டத்தட்ட 70 வயதுக்கு மேலிருக்கும் அந்த பெரியவருக்கு....

என்னோடு விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் ஏறி எனதருகே அமர்ந்தார்.

பளிரென நரைத்தும், கொஞ்சம் கூட கொட்டாத தலைமயிர்கள். உழைப்பின் மூலம் உறுதியடைந்த தேகக்கட்டு, பழைய வார் செருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுக்கு தெளித்த வேட்டி, சட்டையுடன், கையில் சுருட்டி வைத்திருந்த தஞ்சை மஹாராஜா துணிக்கடையின் மஞ்சப்பை.

’கோயம்பேடு போகும்லய்யா’ என்றார் என்னிடம். 
 
’போகும் தஞ்சாவூருங்களா? ’ என்றேன். 
 
’ஆமாய்யா பயவூட்டுக்கு வந்துட்டு போறேன்’ என்றார்.

’நீயும் தஞ்சாவூராய்யா’ என்றவரிடம் தலையாட்டிவிட்டு, ’பையன் என்ன பண்றாப்ல’ என்றேன். 
 
’இங்க தான் ஏதோ மார்பில்ஸ் கம்பேனி வச்சுருக்குறான். ஊர் பக்கமே வரமாட்டங்கிறான். ஏதோ பாக்கனும்போல இருந்துச்சு. ஆதான் ரெண்டு நாளைக்கு முந்தி வந்தேன். பேரன், பேத்திகள கண்ணாற பாத்துட்டு இப்போ போறேன்’  என்றவரிடம் ஒரு ஏக்கம் தெரிந்தது.

’ரெண்டு பொம்பளபுள்ளய, ஒரு பய எல்லோருக்கும் கல்யாணம் செஞ்சு வச்ச ரெண்டு வருசத்துல அவ போயிட்டா. அதுக்கப்பறம் நான் மட்டும்தான். மொதல்ல எப்பயாச்சாவதும் எம் பெரிய பொண்ணாவது வந்து பாக்கும். இப்பெல்லாம் யாரும் வர்றது இல்ல’  என்றார் நான் கேட்காமலேயே. இப்போது எனக்கேதோ அவரிடம் கேட்க வேண்டும்போல் இருந்தது.

’பையன் நல்லா பாத்துக்கிறாப்லள?’ என்றதும், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சைரன் ஒலி எழுப்பிக்கொண்டிருந்த அவசர ஊர்தி வாகனத்தையே உத்துக் கவனித்துக்கொண்டிருந்தார். காதில் விழவில்லையோ என்ற எண்ணத்தில் நான் மீண்டும் ’பையன் உங்கள பாத்துக்குறாருல்ல’ என்றேன். தயக்கத்துடன் ம்ம்ம்ம் என்றவர் சிறிது நேர அமைதிக்கு பிறகு...
’பாத்துக்கிட்டுதான் இருந்தான். நெலத்தெல்லாம் எம் மருமவ பேருக்கு மாத்துர வரைக்கும். அதுக்கப்பறம் அவன் ஊருக்கும் வர்றதுல்ல செலவுக்கும் பணம் கொடுக்கிறதுமில்லா. இருக்கிற ரெண்டு பசுமாடு தான் எனக்கிப்ப கஞ்சியூத்துது’ என்றபோது அவர் கண்களில் கண்ணீர் கட்டியிருந்தது.

’அவன் என்னப்பண்ணுவான் பாவம் அவ ஆட்ன படி ஆடுறான். இப்பக்கூட அவன் வர்றதுக்குல்ல சொல்லாம கெளம்பிவந்துட்டேன். ஏதோ சாட மாடையா அவ கெளம்பித்தொலன்னு பேசறப்பையே கெளம்பிடனுன்னு தான் வந்துட்டேன்.  இந்த மாதிரி இழுத்துக்கிட்டு கெடக்காமா படுத்திருக்கும்போதே உசுரு போயிடனும்னு தான் வேண்டிகிட்டிருக்கேன்’ என்று இப்போது தூரத்தில் கேட்கும் ஆம்புலன்சு ஒலியை கவனித்தப்படியே பேசியவரிடம் மேற்கொண்டு பேசி எதையும் கிளற வேண்டாமென்று தோன்றியது.

நான் இறங்கவேண்டிய ஈக்காட்டுதாங்கல் நிறுத்தம் வந்தும் ஏனோ இறங்கவில்லை. இவரை கோயம்பேடு அழைத்துச்சென்று பேருந்து ஏற்றிவிடவேண்டும்போல் தோன்றியது அப்படியே அவருடனேயே அமர்ந்துவிட்டேன்.

ஏனென்று தெரியவில்லை, அவரருகில் அமர்ந்திருப்பது எனக்கு பிடித்திருந்தது. அவர் மீது வீசிய வியர்வை நாற்றம் இப்போது வா(பா)சமாக மாறிப்போயிருந்தது.

கோயம்பேடு வந்தறங்கியதும் பேருந்து நிலையத்தினுள் உள்ள உணவகத்தை காட்டி ’சாப்பிடலாமா’ என்றேன். ’வீட்லேயே சாப்ட்டுதான் பஸ் ஏறினேன்’ என்று அவர் சொன்ன பதில் பொய்யென்று அவர் முகம் காட்டிக்கொடுத்தது. வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று ’என்ன வேணுமோ வாங்கிக்க’ என்ற என்னை வெறிக்க பார்த்துவிட்டு ’ஒரு தோச மட்டும் போதும்’ என்றார். இருவரும் வாங்கி சாப்பிட்டோம். அவர் சாப்பிடும் வரை பேசவே இல்லை. பின்னர் அரசு குடிநீர் ஒன்றை வாங்கிக்கொடுத்து தஞ்சை செல்லும் பேருந்து ஒன்றின் இருக்கையில் அந்த தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு கிழே இறங்கி நடத்துநரிடம் டிக்கெட் எடுக்க எனது பர்சை எடுத்தபோது என் கையை பிடித்து அவர் கசங்கிய பையில் இருந்த கசங்காத ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து தஞ்சாவூர் ஒன்னு என்றார். டிக்கெட் போக மீதம்கொடுத்த ரூபாயில் இருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து என் கையில் திணித்தார். ’தயவு செஞ்சு வாங்கிக்கய்யா நான் இன்னும் அந்த நெலமைக்கு வரல’  என்றதும் கண்முட்டிய கண்ணீருடனும் உயிர் வீங்க வைக்கும் வலியுடனும் விருவிருவென நடந்து வெளியில் வந்து பேருந்து பிடித்து என்னுடைய அறையில் நுழைந்தேன்.

என் கையில் திணித்து கசங்கிய அந்த 50 ரூபாய் நோட்டை வெறித்து பார்த்தபடியும் அவரை பற்றி எண்ணிப்பார்த்தப்படியுமே படுக்கையில் நெடுநேரமாக கிடக்கிறேன்
.
அனைத்தையும் மறந்து ................

பெற்றோர்களை மதிக்காவிட்டாலும், மனம் நோக செய்யாதீர்கள்....

படித்ததில் பிடித்தது⁠⁠⁠⁠  இல்லை இல்லை படித்ததில் வலித்தது.

Monday, August 1, 2016

ரெட்டியார் பட்டியில் பாபாவுக்கு புதிய கோயில்



திருநெல்வேலி நகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெட்டியார் பட்டியில் பாபாவுக்கு புதிய கோயில் அமைந்து வருகிறது. இந்த ஆலயத்தை சென்னை சாலிகிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் பார்வதி பவன் ஓட்டல் மற்றும் இனிப்பகங்களை நடத்தி வரும் தோத்தாத்ரி அவர்கள் பெரிய பொருட் செலவில் கட்டி வருகிறார்.
ஏற்கனவே சாலி கிராமத்தில் பார்வதி பவன் அருகில் பாபாவுக்கு ஆலயம் அமைத்துள்ளார். இங்கு சீரடியில் நடப்பது போன்ற வழிபாடுகள், அன்னதானம் போன்றவை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதற்காக ப்ரத்யேகமாக சீரடியில் இருந்து குருக்கள் வரவழைக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன.
ரெட்டியார் பட்டியில் அமைந்துள்ள பாபா ஆலயத்தில் சேவை சாதிக்கவும் சீரடியில் இருந்து குருக்கள் தருவிக்கப்பட்டுள்ளார்.  சாயி பக்தர்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகிற விழாவுக்கு வருகை தந்து தங்கள் கைகளால் பாபா ஆலயக் கட்டிடப் பணியில் ஆளுக்கு ஒரு செங்கல்லை வேண்டி வைக்கவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். சாயி தரிசனம் வாசகர்கள், சாயி பக்தர்கள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு பாபாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்: 09789984551

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...