Monday, August 8, 2016

உன் வீட்டுக்கு வருகிறேன்


சிட்டுக்குருவியின் காலில் ஏற்ற நேரத்தில் நூலைக் கட்டி பாபா இழுப்பார் என்பதற்கு நானும் எனது குடும்பத்தாரும் ஓர் எடுத்துக்காட்டு.
எப்படியெல்லாம் எங்களோடு இருந்து எங்களை பாபா வழிநடத்தினார் என்பதையும் பெருங்களத்தூருக்கு எப்படி இழுத்தார் என்பதையும் எழுதுகிறேன். ஹேமாட்பந்த் கூறுவதைப் போல பாபா என்னுள் இருந்து எழுதுவதாக நினைக்கிறேன்.
என் பெயர் பவானி. கணவர் தினேஷ் சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறோம். இரு மகன்கள். அழகான குடும்பம். எனது கணவர் சாயி பக்தர்.
மைலாப்பூர் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அங்கிருந்துதான்  ஒருமுறை பாபா விக்கிரகம் ஒன்றை வாங்கிவந்தார். இதை எங்களது பூஜை அறையில் வைத்து மற்ற தெய்வ விக்கிரகங்களுக்கு பூஜை செய்வதைப் போலவே செய்துவந்தேன்.
எங்கள் பக்கத்து வீட்டில் ஓர் அக்கா பாபாவுக்கு ஒன்பது வார விரதமிருந்து புத்தக விநியோகம் செய்தார். அதன் பிறகுதான் பாபாவை எப்படி வழி படுவது என்பதை அறிந்துகொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக தம்பதியருக்குள் பிரச்சினை ஏற்பட்டது. சில சமயம் பொறுமையை இழக்கும் நிலை கூட ஏற்பட்டது. கர்மவினையின் காரணமாகவும் ஏற்பட்ட பிரச்சினையான காலக்கட்டத்தில் பாபா என்னோடு வந்து கலந்ததை நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் பாபாவின் வழித்தடத்திலேயே இன்றுவரை நடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடங்கள் கடந்தும் குடும்பத்தில் பிரச்சினைகளும், பொருளாதார நெருக்கடியும், வியாபாரத்தில் மந்தமும் ஏற்பட்டது. இதனால் சற்று துவண்டிருந்தோம்.
நானும் என் கணவரும் ஒரு முறை சென்னை சாலிகிராமத்தில் பார்வதி பவன் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றிருந்தோம். அங்கிருந்த புக் ஸ்டாலில் உனது பிரார்த்தனை கேட்கப்பட்டது என்ற தலைப்பு தரப் பட்ட புத்தகத்தைப் பார்த்ததும் வாங்கினேன். அத்துடன் அங்கு கோயில் கொண்டுள்ள குபேர சாயியையும் தரிசித்துவிட்டு வந்தேன்.
புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் பாபா என்னுடன் இன்னும் அதிக அதிகமாக நெருங்குவதையும், பேசுவதையும் உணர்ந்தேன்.
பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நான் தனியாக பெருங்களத்தூருக்கு வந்தேன். அன்று சனிக்கிழமை என்பதால் கோயிலில் யாரும் இல்லை. பாபாவை நன்றாக தரிசனம் செய்துவிட்டு, உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற புத்தகத்தை வாங்கிவந்தேன்.
அதன் பிறகு நான் பெருங்களத்தூர் சென்றதையும், சாயி வரதராஜனின் கூட்டுப் பிரார்த்தனை மகிமைகளையும் என் கணவரிடம் பகிர்ந்துகொண்டேன்.
ஓர் ஆவல் ஏற்பட்டு அவர் என்னுடன் அடுத்த வாரமே பெருங்களத்தூர் வந்தார். அவருக்கு ஒரு திருப்தியும் ஏற்படவில்லை. பாபா எங்களை நீங்கள் இங்கு இழுத்ததற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள்தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டு வந்தேன்.
நான் புத்தகங்களைப் படித்து அவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது என் கணவர் மீண்டும் பெருங்களத்தூர் சென்று அவரைப் பார்த்துவிட்டு வரலாம் எனக் கூப்பிட்டார். சந்தோக்ஷத்துடன் அவருடன் வந்து சாயி வரதராஜனை தரிசித்து கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம்.
மாதங்கள் செல்லச் செல்ல என் கணவர் வாரம் தோறும் தவறாமல் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள என்னையும் அழைத்து வருகிறார். ஒரு வாரம் கூட தவறியதில்லை.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சாயி தரிசனம் இதழில் வெளியான ஸ்ரீ சாயியின் குரலில் மகளே! நான் இங்கு இருந்து தான் உன் வீட்டிற்கு வந்தேன் என்பதையும் உன் பிரச்சினைகளை நானே கவனித்து வருகிறேன் என்பதையும் எனக்கு உறுதிபடுத்தினார். அப்போதுதான் எனக்கு உன் வீட்டுக்கு வருகிறேன் என்ற புத்தகத்தை நான் இங்கிருந்து வாங்கி சென்ற தும் ஞாபத்திற்கு வந்து மெய் சிலிர்த்துப் போனேன்.
இன்னொரு சம்பவம், நாங்கள் சீரடிக்கு செல்வதற்காக அக்டோபர் மாதம் சீரடி செல்ல தீர்மானித்து அது கடைசியில் அவசர வேலை காரணமாக சீரடி செல்ல முடியாமல் போனது. அதையும் பாபா டிசம்பர் மாத சாயி தரிசனம் இதழில், நீ சீரடி செல்லத் தீர்மானித்து அது கடைசியில் போகமுடியாமல் போயிருக்கலாம். இந்த ஆண்டு கண்டிப்பாக உங்களை வந்து தரிசிப்பேன் எனத் தீர்மானம் செய்துகொள் எனக் கூறியிருக்கிறார்.
இன்றும் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு வாழ பாபா, சாயி வரதராஜன் அவர்கள் மூலம் ஆன்மிகத்தையும் வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சிட்டுக்குருவியை இழுத்தது போல இன்னும் பல குடும்பங்களை பாபா, அப்பா சாயி வரதராஜன் மூலம் தம் வசம் இழுப்பார்.

பவானி தினேஷ், அம்பத்தூர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...