Tuesday, June 16, 2015

முதலில் உனக்கு அற்புதம் நடக்கும்!

நீண்ட நாட்களாக சீரடிக்குப் போகும் ஆசை இருந்ததால், சீரடி செல்லும் நண்பரை அணுகி, என்னையும் சீரடிக்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டேன். அதற்கு அவர், ”நீங்கள் நினைத்தவுடன் சீரடி செல்லமுடியாது, பாபா அழைத்தால்தான் போக முடியும்!”  என்று கூறினார். நான் இதை நம்பவில்லை.
டிக்கெட் எடுத்தால் யார் வேண்டுமானாலும் போகலாமே, இவர் ஏன் இப்படி கூறுகிறார் என நினைத்தேன். பிறகு பெங்களூர் சென்றுவிட்டேன். பெங்களூரில் இருந்தபோது, எனக்குத் தெரிந்த நபர் போன் செய்து, ”சீரடி போகிறோம், உங்களுக்கும் ஒரு டிக்கெட் எடுக்கட்டுமா?” எனக் கேட்டார்.
”எனக்கும் என் மனைவிக்குமாக டிக்கெட் எடுங்கள், அதற்கான பணத்தை வந்து தந்து விடுகிறேன்” எனக் கூறினேன்.
ஜூன் 2010ல் பெங்களூர் வழியாகப் புறப்பட்டு கோபர்கானில் இறங்கி வேன் மூலம் சீரடி அடைந்தோம். அன்று வியாழக்கிழமை. பாபாவை தரிசித்தபோது அவரது கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனம் திருப்தி அடையவில்லை. ஒரு நிமிட தரிசனத்துக்காகவா வேலூரிலிருந்து வந்தேன்- என நினைத்தபடி அறைக்கு வந்தேன்.
மறுநாள், நான் தரிசனத்திற்குச் சென்றபோது கூட்டம் அவ்வளவாக இல்லை. அதிகமான நேரம் பாபாவை தரிசித்து பிரார்த்தனை செய்யமுடிந்தது. பாபா என்னை திருப்திபடுத்தினார்.
அங்கு எனது மனைவியும் சிலரும் ஷாப்பிங் சென்றனர். ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது, பசிக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கும்போதே, யாரோ ஒருவர் சுடச்சுட கீ ரைஸ் எடுத்துவந்து பரிமாறி பசி போக்கினார். இது சீரடியில் எனது முதல் அனுபவம். வீடு திரும்பினோம்.
ஒருமுறை வேலூரில் உதிபாபா மாணிக்கம் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆலயத்திற்குச்செல்லவிரும்பினேன். ஆலயத்திற்குக் கிளம்பி விமான நிலையம் வரை வந்துவிட்டேன், ஆனால் கோயில் எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. எதிரில் வந்தவர்களிடம் விசாரித்தாலும் தெரியாது என்று கூறிவிட்டார்கள்.
வருத்தத்தோடு, ”உன்னை தரிசிக்கும் ஆவலில் கிளம்பிவிட்டேன், வழி தெரியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்.. நீ என்னை அழைத்துச்சென்றால் வருகிறேன்!”  எனக் கூறி காரைத் திருப்பிக்கொண்டு வேலூருக்கு வர முற்பட்டேன்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஐயப்ப பக்தர் ஒருவர், நான் கோயிலுக்குத்தான் செல்கிறேன், வாருங்கள் என அழைத்துச் சென்றார். பாபாவையும் உதி பாபாவையும் தரிசித்து மகிழ்ந்தேன்.
அந்தக் கோயிலில் சாயி தரிசனம் இதழை இலவசமாக விநியோகம் செய்துகொண்டிருந்தார்கள். அதன் பிறகு பெருங்களத்தூரிலிருந்து மாதா மாதம் எனக்கு பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் பாபா செய்த அற்புதங்களைப் படிக்கும்போது, எனக்கும் இப்படி நடக்குமா என நினைத்தேன். சாயி வரதராஜன் எழுதிய பகுதிகளை படிக்கும்போது அவரை சந்தித்து குறைந்தது ஒருமுறையாவது அவர் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
நானும் என் மனைவியும்தான் பெருங்களத்தூர் செல்ல நினைத்தோம். ஆனால், எங்களுடன் முதன் முறை சீரடி வந்த அனைவரும் வருவதாகக் கூற, எட்டு பேருடன் பெருங்களத்தூர் புறப்பட்டோம்.
அன்று வியாழக்கிழமை. சாயி வரதராஜன் ஆலயத்தில் இருந்தார். அனைவரும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தோம். நான், என் பங்கிற்கு, ”எல்லாருக்கும் பாபா கனவில் வருகிறார். என் கனவில் வரவில்லையே, என் பக்தி போதாதா?” எனக் கேட்டேன்.
சிறிது நேரம் கழித்து, ”பாபா உங்களுடனேயே இருக்கும்போது கனவில் வரவேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?ள” எனக் கேட்டார் சாயி வரதராஜன்.
என்னை திருப்தி படுத்த அவர் கூறுகிற வார்த்தை என நினைத்தேன். ஆனால் இதை எப்படி உறுதிப்படுத்திக்கொண்டேன் என பிறகு கூறுகிறேன்.
என்னுடன் வந்த சிலர், தங்களுக்குப் பேரன் பேத்திகள் பிறக்க வேண்டும் என பிரார்த்தனையை வைத்தார்கள். என் மகளுக்குக் குழந்தையில்லை என்பதால், தத்து எடுக்க முடிவு செய்திருந்தோம்.
இதற்காகவும் பிரார்த்தித்த சாயி வரதராஜன், என்னைப் பார்த்து, ”முதலில் உங்களுக்கும் பிறகு அவர்களுக்கும் கிடைக்கும் என்றார்.  மகிழ்ச்சியோடு கிளம்பினோம்.
2012ல் இரண்டாவது முறையாக சீரடி செல்ல முடிவு செய்தோம். என் மனைவி, ”சீரடிக்கு முதல் முறை வந்து பேரன் பேத்திக்காகப் பிரார்த்தனை வைத்தேன், பெருங்களத்தூரிலும் பிரார்த்தனை வைத்தேன். இதுவரை நடக்கவில்லை. இரண்டாவது முறை அழைத்திருக்கிறாய். என்ன செய்யப்போகிறாய்? என தினமும் பாபாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சீரடி கிளம்ப 15 நாட்கள் இருக்கும்போது, தான் பதிவு செய்த ஏஜென்சியிலிருந்து தனக்குக்குழந்தை கிடைத்துவிட்டதாக என் மகள் போன் செய்தாள். சாயி வரதராஜன் கூறியமாதிரி, முதலில் எங்களுக்குத்தான் முதலில் அற்புதம் நடந்தது.
சீரடிக்குப் போன கையோடு, பெருங்களத்தூரும் சென்று நன்றி கூறிவிட்டு, பிரார்த்தனையில் கலந்து கொண்டு திரும்பினேன். பாபா என் னோடு இருக்கிறார் என்று சாயி வரதராஜன் சொன்னதை எப்படி நம்புவது என எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெருங்களத்தூர் போய் திரும்பிய பிறகு,சாயி தரிசனம் புத்தகம் வந்தது. அதைப் பிரித்தவுடன் என் கண்ணில் பட்ட வரிகள்,  நான் உன்னுடன் இருக்கிறேன்என்பது.
இதைப் படித்ததும் திருப்தி ஏற்பட்டதே தவிர, நம்பிக்கை வரவில்லை. இன்னும் சில சோதனைகள் செய்ய குரங்கு மனது விரும்பியது. நான் வாசலில் நிற்கும்போது பாபா என் கண்ணில் பட வேண்டும் எனக் கேட்பேன். ஒவ்வொரு முறையும் ஒரு காரில் பாபா படம் ஒட்டி வரும்.
 பாபாவைப் பற்றி யாராவது இன்று என்னிடம் பேச வேண்டும் என நினைப்பேன். மாலைக்குள் யாராவது வந்து என்னிடம் அவர் பற்றி பேசுவார்கள். அரியூரில் தங்கக் கோயில் போகும் வழியில் ஒரு பாபா ஆலயம் உள்ளது. அங்கு வெள்ளை நிற நாய் ஒன்று இருக்கும். ஒரு சமயம், பாபாவிடம், நீங்கள் என்னுடன் இருப்பது உறுதியானால், இன்று வெள்ளை நாய்க்கு பதில் கருப்பு நாய் இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு அரியூர் கோயிலுக்குச் சென்றேன்.
என்ன அதிசயம்- அங்கே கருப்பு நாய் இருந்தது. அலமாரியை சுத்தம் செய்தபோது சாயி தரிசனம் அக்டோபர் 2011 மற்றும் நவம்பர் இதழ்கள் கண்ணில் பட்டன. அதில் ஒரு பகுதியில் இருந்த வார்த்தைகள் கன்னத்தில் பளார் என்று அறைந்தது போலிருந்தது.
”என் மகனே!  நான் இருக்கிறேன் என்பதை நம்புகிறாய். ஆனால் நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை நம்ப மறுக்கிறாய். என் படத்தை எங்கு பார்த்தாலும் பூரிப்படைகிறாய், நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை உனக்கு எவ்வளவு முறைதான் விளக்கிச் சொல்வது. முட்டாள்.. நம்பு!  நான் உன்னுடன்தான் இருக்கிறேன்!” என்றிருந்தது.
இந்த அனுபவங்களுக்குப் பிறகு பாபா என்னுடன் எப்போதும் இருப்பதை உணர்கிறேன்.

கே.வி. சுந்தரம்,
ஆடிட்டர், வேலப்பாடி, வேலூர்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...