Sunday, July 5, 2015

பணிவோடு நடந்துகொள்!

என்னைப் பார்க்கிறவர்கள் முதன்முதலில் முகத்திற்கு நேராகச் சொல்லும் வார்த்தை.. ” சாயி வரதராஜன், நீங்கள் எவ்வளவு பெரிய ஆள். இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே! எப்படி இது சாத்தியமானது? என்பதாகத்தான் இருக்கும்.
உயர உயர தோற்றத்தில் எளிமை வந்துவிட்டது, நடத்தையில் எளிமை வந்துவிட்டது. செய்கையிலும் எளிமை வந்துவிட்டது. இது பாபா எனக்கு அளித்த வரப்பிரசாதம்.
தவிர, நான் எல்லையற்ற சக்தி கொண்டவன் அல்ல. ஆனால் சாயி பாபா பரப்பிரம்மம். எல்லையற்ற சக்தி கொண்டவர். அவர் தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம்.
அப்படிப்பட்ட தெய்வம், தன் பக்தர்களுக்காக இறங்கி வந்து என்ன சொன்னது தெரியுமா?
நான் அடிமைகளுள் அடிமை. உங்களுக்குக்கடன் பட்டவன். உங்களது தரிசனத்திலேயே திருப்தி அடைகிறேன். தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு. அங்ங்னமாகவே என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக்கருதுகிறேன்  இப்படித்தான் பாபா சொன்னார்.
தாழ்மையை கற்றுக் கொள்ள வேண்டும்!
எவ்வளவு என ஆழங்காண முடியாத அந்த இறைவன் தன்னை இந்த அளவுக்குத் தாழ்த்திக்கொண்டிருக்கிறான் என்றால், நாம் நம்மை எந்த அளவுக்குத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். அந்த நினைவு எனக்குத்தாழ்மையைத் தந்திருக்கிறது. சாயி பக்தன் என தன்னை நினைத்துக் கொள்கிறவன் முதலில் பணிவுடைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாபா மாதிரி பணிவோடு நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருநாள் நம்மிடமிருக்கும் உடம்பு உட்பட அனைத்தும் போய்விடும். அன்றைக்கு நம்மை மதிப்பவர் யாருமிருக்கமாட்டார்கள். எனவே, இந்த போலியான மரியாதையைத் தேடி, அதை கவுரமாக நினைத்து நிதர்சனத்தைத் தொலைத்து விடக்கூடாது.
பாகுபாடு பார்க்கக்கூடாது
சாயியின் பெயரால் நடக்கிற என்னுடையதர்பாரில் இதுவரை நான் ஏழை -  பணக்காரன், படித்தவன் -  படிக்காதவன், முதலாளி -  தொழிலாளி, வேண்டியவன் - வேண்டாதவன் எனப்பார்த்ததில்லை. இனியும் பார்க்கமாட்டேன்.
நான் இப்படி யாரையாவது நினைத்தால், பாபாவின் பார்வை வேறு மாதிரியாக இருக்கக்கூடும். ஆகவே, பாபாவுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்ய நான் தயாராக இருப்பதில்லை.
அப்படியிருந்தும் சிலரிடம் மட்டும் நெருக்கமாக இருக்கிறேன் என்றால், அவர்கள் பாபாவிடம் மிக நெருங்கியவர்களாக இருப்பதுதான் காரணம். பிறருக்காகத் தங்களைத் தேய்த்துக் கொள்பவர்கள் என்னிடம் நெருக்கம் காட்டுகிறார்கள், அவ்வளவு தான் விக்ஷயம்.
பாகுபாடு என்பது பெண் கொடுக்கல் வாங்கல் போன்ற விக்ஷயங்களில் மட்டும் இருக்கலாம். அதில் தவறு கிடையாது. மற்றபடி இதற்கான அவசியம் எதுவும் இல்லை என்பதால் பாகுபாடு பார்க்கவே வேண்டாம் என்பதை சாயி பக்தன் அறியவேண்டும்.
நம்பிக்கை வேண்டும்
அடுத்து, நான் பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கிறது என உயர்வாகச் சொல்வார்கள். நான் பிரார்த்தனை செய்து அது நடக்காமல் போனவர்களும் இருப்பார்களே? ஆகவே, எனது பிரார்த்தனையால் நடக்கிறது என்பதோ, பாபாவின் சர்வ சக்தியால் நடக்கிறது என்பதோகூட தவறான கருத்தாகும்.
அவரவருக்கு பாபாமீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, பக்தி இருக்கிறதோ, சரணாகதியினுடைய அளவு எவ்வளவோ அவற்றைப்பொறுத்தே நன்மைகளும் அற்புதங்களும் நடக்கும்.
இயேசு கூட, நான் உன்னைக் காப்பாற்றினேன் எனக் கூறாமல், உனது விசுவாசம் உன்னை ரட்சித்தது எனக் கூறியிருக்கிறார். ஆகவே.  உங்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய பிரார்த்தனையின் வெற்றியும் இருக்கிறது எனக் கூறுவேன்.
ஒரு அம்மா சமீபத்தில் தனது மகன் தன் பேச்சைக்கேட்காமல், அவன் விருப்பத்திற்கு வேறு யாரையோ விரும்புகிறான். இதனால் எனக்கு உறக்கமே இல்லை எனக் கூறி பிரார்த்தனைக்கு வந்தார். பிரார்த்தனை செய்து அனுப்பினேன். அடுத்த வாரம் வந்தவர், நீங்கள் உதி கொடுத்து, எதுவும் நடக்கவில்லை. அதே பயம், எப்போது என்ன நடக்குமோ என்ற கவலையால் உறக்கமே வரவில்லை எனக் கூறி, இந்த முறை நன்றாகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
அவருக்கு நம்பிக்கை இல்லை. அதனால் உதி பலன் தரவில்லை. ”பாபாவே நேராக இறங்கி வந்து வரம் கொடுத்தாலும் இந்த நம்பிக்கையில்லாமல்  போனால் எதுவும் நடக்காதுஎன்றேன்.
கண்ணீரோடு உருகிச் செய்யும் பிரார்த்தனைக்கு தனிப்பலனே கிடைக்கும். அதில் சிறிதும் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டாம். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றவேண்டும் ஒரு கட்சித் தலைவரின் விருப்பத்திற்கு மாறாக எந்தத் தொண்டனும் நடக்கமாட்டான். சாதாரண கட்சித் தலைவருக்கே இந்த மரியாதை என்றால், கடவுளிடம் நாம் எப்படியிருக்க வேண்டும். இறைவன் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அவரது அடிச்சுவட்டை பின்பற்றவேண்டும்!
பாபாவினுடைய அடிச்சுவட்டைப்பின்பற்றி நடக்க முயற்சி செய்தால் போதும், நடக்கிற அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார். பாபாவின் அடிச்சுவட்டைப் பின் பற்றுபவன், பாபா போல எளிமை, பற்றின்மை, நம்பிக்கை, பொறுமை உட்பட நற்குணங்களுடன் வாழ்வது என்பதை லட்சியமாக்க வேண்டும்.
நன்றி கூறவேண்டும்
ஒவ்வொரு நொடியும் அவரது தயவால்தான் நாம் பிழைக்கிறோம். ஒவ்வொரு நிகழ்வையும் அவர்தான் நமக்காக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எனக்கு அற்புதம் செய்கிறார் பாபா எனக் கூறும் பக்தர், எனக்கு அற்புதமே செய்யவில்லை என நினைக்கிற பக்தர் என யாராக இருந்தாலும், இன்றைய நாளைக்காணச் செய்த உங்கள் அருளுக்காக நன்றி பாபா எனக் கூறவேண்டும்.
நான் இதையெல்லாம் செய்வதால் அவர் என்னை ஆளுகிறார். அவருடைய ஆளுகையின் கீழ் நான் கவலையின்றித் திரிகிறேன்.

Friday, July 3, 2015

சாயி புத்ரன் பதில்கள்

பெரும்பாலான மனிதர்கள் இறைவனின் அருளைப்பெற காரணமாக இருப்பது எது?
(வி. நரேஷ், சென்னை -  26)
நம்பிக்கையும், பிரார்த்தனையும்.


உண்மையான குருவையும் போலி குருவையும் நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
(வி. மணிமேகலை, திருச்சி)
உண்மையான குரு உங்களுக்கு ஏற்ற நேரத்தில் ஏற்றவற்றைக் கூறி காப்பாற்ற வருவார். போலி குரு, உங்களுக்கு ஏற்ற சமயத்தில் தனக்கு ஏற்றதைக்கூறி உங்களிடமிருந்து திருடவருவார். பலனை எதிர்பார்ப்பவர் போலி குரு. எதிர்பாராதவர்  மெய்யானகுரு என்பதை அறியலாம்.

பாரபட்சம் ஏன்?

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான இருக்க இடம் தேடி எத்தனையோ மக்கள் அலைகிறார்கள். இறைவன் ஏன் பாரபட்சத்துடன் பலரை இப்படி விட்டிருக்கிறான்?
(கே. கோகுல்நாத், பெங்களூர்)
இருக்க இடம் -  இதை பலர், தான் குடியிருப்பதற்கு ஒரு வீடு என நினைக்கிறார்கள். பெரிய வீடு வேண்டும் என்றுதான், எத்தனையோ பேர் பெரிய வீட்டைக் கட்டிவிட்டு நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்.
ஆகவே, இதை வேறுவிதமாகப் பொருள் கொள்ளவேண்டும். ”தான் இன்னொருவர் மனதில் இருக்க இடம் தேவை” என்பதே சரியானது.
ஒருவர் மனதில் இன்னொருவருக்கு இடம் கொடுக்கும்போது பரஸ்பரம் அன்பு அங்கே வளர்கிறது. சமாதானம், நட்பு, உறவு, சமத்துவம் ஆகியவை வளர்கிறது. இதனால் மனிதர்களுக்குள் ஏற்படும் போட்டி பொறாமைகள், களவு, அடுத்துக் கெடுத்தல், ஏற்றத்தாழ்வு பார்த்தல் போன்ற பல விக்ஷயங்களுக்கு இடமில்லாமல் போகிறது. உலகம் முழுவதும் அன்பு மயமாகிறது. சுருக்கமாகச் சொன்னால் உலகமே ஒரு குடும்பமாக மாறுகிறது.
எனவே, இதைத்தான் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக சான்றோர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான் என்பது பழமொழி. இறைவன் இருக்க நமது இதயத்தில் இடம் கொடுத்தால் மடம் என்று சொல்லப்படுகிற அறியாமையை அவன் நீக்கி விடுவான் என்பதே இதற்குப் பொருள்.
ஆகவே, இருக்க இடம் தேவை என்பது, தான் இருக்க இன்னாருவர் மனதில் இடம் வேண்டும் என்பது. அப்போதுதான் வாழ்க்கை என்ற ஒன்று ஆரம்பமாகும். கணவனோ மனைவியோ ஒருவர் மனதில் ஒருவர் இருந்தால் மட்டுமே வாழ்க்கை இனிக்கும். அப்படியல்லாது, வீடு இருந்து ஆள் ஆளுக்குத் தனியாக இருந்தால் அது அடிப்படைத்தேவையல்ல, தனித்தனி நரகம்.


நல்லவர்களாக இருப்பதில் என்ன பயன்?

இந்தப் பிறவியின் சுகதுக்கங்கள் அனைத்தும் முன் பிறவிகளில் நாம் செய்த பிழைகளுக்காக படவேண்டிய கஷ்டங்கள் என்றால், இப்போது நல்லவர்களாக இருப்பதில் என்ன பயன்?
(வி.மேகலை,சைதாப்பேட்டை)
நல்லது செய்தால் நல்லதுதானே நடக்க வேண்டும், கெட்டது ஏன் வருகிறது என எண்ணமிடுவீர்கள். இதன் விளைவாகத்தான் கடவுள் மீது வெறுப்பும், நாம் நல்லவர்களாக இருப்பதால் என்ன பயன் என்றும் கேட்கத் தோன்றும்.
அரசு வேலை செய்கிறவன் சம்பளம் வாங்குகிறான். ஓய்வு காலத்தில் பென்க்ஷன் என்ற ஒன்று வருகிறதே எப்படி? பென்சன்தாரர் போய் விட்டால் வாரிசுதாரர் வாங்குவது எப்படி?
அப்படித்தான் இந்த ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்து செய்யப்படும் செயல்கள் அடுத்த ஜென்மத்திற்கு பென்சனாக வழங்கப்படுகிறது. இந்த ஜென்மத்தில் செய்யும் செயலுக்கும் சம்பளம் கிடைக்கிறது. போன ஜென்ம வினைப்படி உனக்குத்தலை போகவேண்டும் என்று இருந்தால், கடவுள் நம்பிக்கை மற்றும் இப்போது நீ செய்யும் நல்ல செயல்களால், உனக்கு தலையில் சிறுகாயத்தோடு முடிந்துபோகும். ஆனால் அந்த வேதனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்.
கர்ம வினையை அனுபவித்தே ஆகவேண்டும், கடவுளை கஷ்டப்பட்டே தேட வேண்டும். எந்த சூழலிலும் தளர்வை அறியாத திடமனம் வேண்டும்.
இறைவன் திருமுன்னர் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு ஒன்று தினமும் குயவனை திட்டிக்கொண்டே இருந்ததாம்.
பாவிப் பயலே!  என்னை எதற்கு அகல் விளக்காகப் படைத்தாய். சூளையில் நீ சுட்டது போதாது என்று, தினம் தினம் என்னை இவர்களும் திரி போட்டு சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என் தலை எழுத்து தினமும் சூடு பட்டுக்கொண்டே இருக்கிறேன்.” என்றதாம் அது.
அந்த அகல் விளக்கு என்ன பாக்கியம் செய்ததோ இறைவனை எப்போதுமே தரிசனம் செய்து கொண்டிருக்கிறது என்று அதற்குத் தெரியாது, ஆனால் நமக்குத் தெரியும் அல்லவா?
குலசேகர ஆழ்வார் வேண்டினார், பெருமாளே உன் படியாய் கிடக்கின்ற பாக்கியத்தைக் கொடு என்று  படியாக கிடந்தால் எல்லோரும் ஏறி மிதிக்கமாட்டார்களா? இது அவருக்குத் தெரியாதா?
கஷ்டப்பட்டாலும் கடவுள் திருமுன்னர் இருக்கலாம் என்று கேட்டார். மகாராஜாவான அவருக்கு அந்த ஜென்மத்தில் பிறர் மிதிக்கும் படியாகக் கிடந்து கஷ்டப்படுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. பக்தனாக இருந்தார். பலருக்கு அந்த வாய்ப்பு இந்த ஜென்மத்தில் கிடைக்காமல் போகிறது.
நீங்கள் செய்த பாக்கியம், கஷ்டத்தைக் கொடுத்து கடவுளும் கூடவே இருக்கிறான். விரைவில் உங்களை விடுவித்துவிடுவான்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...