Friday, July 3, 2015

நல்லவர்களாக இருப்பதில் என்ன பயன்?

இந்தப் பிறவியின் சுகதுக்கங்கள் அனைத்தும் முன் பிறவிகளில் நாம் செய்த பிழைகளுக்காக படவேண்டிய கஷ்டங்கள் என்றால், இப்போது நல்லவர்களாக இருப்பதில் என்ன பயன்?
(வி.மேகலை,சைதாப்பேட்டை)
நல்லது செய்தால் நல்லதுதானே நடக்க வேண்டும், கெட்டது ஏன் வருகிறது என எண்ணமிடுவீர்கள். இதன் விளைவாகத்தான் கடவுள் மீது வெறுப்பும், நாம் நல்லவர்களாக இருப்பதால் என்ன பயன் என்றும் கேட்கத் தோன்றும்.
அரசு வேலை செய்கிறவன் சம்பளம் வாங்குகிறான். ஓய்வு காலத்தில் பென்க்ஷன் என்ற ஒன்று வருகிறதே எப்படி? பென்சன்தாரர் போய் விட்டால் வாரிசுதாரர் வாங்குவது எப்படி?
அப்படித்தான் இந்த ஜென்மத்தில் நல்லவர்களாக இருந்து செய்யப்படும் செயல்கள் அடுத்த ஜென்மத்திற்கு பென்சனாக வழங்கப்படுகிறது. இந்த ஜென்மத்தில் செய்யும் செயலுக்கும் சம்பளம் கிடைக்கிறது. போன ஜென்ம வினைப்படி உனக்குத்தலை போகவேண்டும் என்று இருந்தால், கடவுள் நம்பிக்கை மற்றும் இப்போது நீ செய்யும் நல்ல செயல்களால், உனக்கு தலையில் சிறுகாயத்தோடு முடிந்துபோகும். ஆனால் அந்த வேதனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்.
கர்ம வினையை அனுபவித்தே ஆகவேண்டும், கடவுளை கஷ்டப்பட்டே தேட வேண்டும். எந்த சூழலிலும் தளர்வை அறியாத திடமனம் வேண்டும்.
இறைவன் திருமுன்னர் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கு ஒன்று தினமும் குயவனை திட்டிக்கொண்டே இருந்ததாம்.
பாவிப் பயலே!  என்னை எதற்கு அகல் விளக்காகப் படைத்தாய். சூளையில் நீ சுட்டது போதாது என்று, தினம் தினம் என்னை இவர்களும் திரி போட்டு சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என் தலை எழுத்து தினமும் சூடு பட்டுக்கொண்டே இருக்கிறேன்.” என்றதாம் அது.
அந்த அகல் விளக்கு என்ன பாக்கியம் செய்ததோ இறைவனை எப்போதுமே தரிசனம் செய்து கொண்டிருக்கிறது என்று அதற்குத் தெரியாது, ஆனால் நமக்குத் தெரியும் அல்லவா?
குலசேகர ஆழ்வார் வேண்டினார், பெருமாளே உன் படியாய் கிடக்கின்ற பாக்கியத்தைக் கொடு என்று  படியாக கிடந்தால் எல்லோரும் ஏறி மிதிக்கமாட்டார்களா? இது அவருக்குத் தெரியாதா?
கஷ்டப்பட்டாலும் கடவுள் திருமுன்னர் இருக்கலாம் என்று கேட்டார். மகாராஜாவான அவருக்கு அந்த ஜென்மத்தில் பிறர் மிதிக்கும் படியாகக் கிடந்து கஷ்டப்படுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. பக்தனாக இருந்தார். பலருக்கு அந்த வாய்ப்பு இந்த ஜென்மத்தில் கிடைக்காமல் போகிறது.
நீங்கள் செய்த பாக்கியம், கஷ்டத்தைக் கொடுத்து கடவுளும் கூடவே இருக்கிறான். விரைவில் உங்களை விடுவித்துவிடுவான்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...