பாபா யாருக்கும் மந்திரம், தந்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்ததில்லை. எனக்கும் அப்படித்தான். இதை ஷாமா ஒருமுறை என்னிடம் கூறினார்.
ராதாபாய் தேஷ்முக் என்ற மாது சீரடி வந்தார். பாபாவிடம் உபதேசம் பெற முயற்சித்தார். மந்திர உபதேசம் பாபா செய்வதில்லை என்பதை அறிந்து உபவாசம் இருக்க ஆரம்பித்தார். உபவாசத்தின் நான்காம் நாள், ஷாமா இதைப் பற்றி கூறி ஏதாவது ஒரு கடவுளின் மந்திர உபதேசத்தை அவளுக்குக்கூறுங்கள் என்றார்.
பாபா அவளைக் கூப்பிட்டார். ”நான் மந்திர உபதேசம் தருவது வழக்கம் அல்ல. எனது குருவும் அப்படித்தான். நான் என் குரு முன் சென்று நிற்பதற்கே நடு நடுங்குவேன். குருவின் உதவி என்பது ரகசியமானது. சூட்சுமம் நிறைந்தது. நான் யாருடைய காதிலும் உபதேசம் செய்வதில்லை. மேலும் எங்களின் வழிமுறைகள் அலாதியானது ” என்றார்.
பாபா மற்றவர்கள் போல பிரசங்கம் செய்ததில்லை. ஆனால் ஒன்றிரண்டு வார்த்தை அல்லது வாக்கியத்தில் குறிப்புகள் தருவார். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் அளப்பரிய நன்மை உண்டு என்பது என் அனுபவம். மோட்சத்தை அடைவதுதான் மக்களின் நோக்கம். விவேகம், வைக்கியம் தேவை என்றெல்லாம் பாபா என்னிடம் கூறியதில்லை.
ஆனால், எல்லா சமுத்திரத்தையும் உலகங்களையும் கடந்து ஆண்டவனை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். என்னிடம் இந்த உலகம், இங்குள்ள எல்லாமே மாயை என்று கூறியது இல்லை. ஆனால், இந்த உலகமும் அதைத்தாண்டியுள்ள அனைத்தும் உண்மையானவை. ஆகவே, இங்கு என்ன உள்ளதோ அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பாபா அடிக்கடி கர்மா பற்றியும், மறுபிறவி பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். ஆகவே, இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நாம் நல்லதையே செய்யவேண்டும் என்றார். அடிக்கடி மற்றவர்களின் கடந்த பிறவி பற்றியும், வரும் பிறவி பற்றியும் சொல்லியுள்ளார்.
இப்பிறவியில் என்ன செய்கிறோமோ, அதன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்துத்வா தத்துவம். ஆனால் பாபா தான், எந்த மதம், இனம், ஜாதி என எப்போதும் கூறியதில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர்.
பாபா பகவத் கீதை, பாவர்த்த ராமாயணம், ஏக்நாத் பாகவதம், பஞ்சதசி, யோக வசிஷ்ட்டம் ஆகியவற்றில் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். இவற்றில் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.
ஞான தேவரின் ஆரத்தி ஆரம்பித்தவுடன் நெஞ்சின் முன் கரம்கூப்பி, கண்களை மூடி அமர்ந்து விடுவார். கபர்டேயிடம் பஞ்சதசி நமக்கு ஓர் பொக்கிக்ஷம் என்றார். யோக வசிஷ்டத்தை மிகவும் புனிதமாகக் கருதினார்.
No comments:
Post a Comment