Monday, June 10, 2013

உங்கள் வாழ்க்கையில் சுபீட்சம் இன்று முதல் ஆரம்பிக்கும்!





ஒருவருடைய நடத்தை இழிவானதாகக் கருதப்பட்டால் அவரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியதே நியாயம்,. திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும், பின்னால் புறங்கூறுதல் செய்யலாகாது.
எவரையும் நிந்தனை செய்யக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது. உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து அங்கிருந்து நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.
மூன்று உலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக்காண முடியாது. நிந்தை செய்யப்படுபவனுக்கு நிந்தை செய்பவன் பரம மங்களத்தைச் செய்கிறான்.
சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்கங்கொட்டையை பயன்படுத்துகிறார்கள். சிலர் சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் சுத்தமான நீரை பயன்படுத்துகிறார்கள். நிந்தை செய்பவனோ தனது நாக்கைப் பயன்படுத்துகிறான்.
நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்கு உரியவர்கள். பிறருக்கு நன்மை செய்யத் தங்கள் மனதை வீழ்ச்சியடையச் செய்துகொள்கிறார்கள். அவர்களது பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது. நிந்தை என்ற பெயரில் ஒவ்வொரு படியிலும் நம் தோஷங்களைத் தெரிவித்து, எதிர்காலத்தில் விளையக்கூடிய அநேக அனர்த்தங்களை வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தைப் போற்ற வார்த்தைகளே இல்லை.

நிந்தை செய்கிறவர்களை சாதுக்களும் ஞானிகளும் பலவிதமாகப் போற்றுவார்கள். ஏனெனில் இவர்கள் சாதுக்கள் மற்றும் ஞானிகளின் பாவங்களையும் அல்லவா துடைத்துவிடுகிறார்கள். அப்படிப் பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நாம் மனதார நமஸ்காரம் செய்யவேண்டும்.
ஒருமுறை சிறந்த சாயி பக்தர் ஒருவர் வேறு ஒருவரைப் பற்றிப் பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமர்சித்து நிந்தை செய்தார். அந்த நிந்தையே பிரவாகம் போல பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை அறியாமலேயே, வசைச் சொல் கூறுவதும், நிந்தனை செய்வதுமே முக்கியப் பேச்சாக இருந்தது.
இது பாபாவுக்குப் பிடிக்காத விஷயம். நிந்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் இதைக் கேட்டு வெறுப்படைந்தார்கள். நிந்தை செய்தவர் சற்று ஓய்ந்துவிட்டு, காலைக்கடன் கழிப்பதற்காக ஓடைப்பக்கம் போயிருந்தார். பக்தர்களின் கூட்டமோ பாபாவை தரிசிக்க மசூதிக்கு வந்தது.
பக்தர்களுடன் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் அந்த நிந்தை எதைப் பற்றியது? யார் நிந்தை செய்தது? என்று கேட்டார்.
நிந்தை செய்தவர் ஓடைப்பக்கம் போயிருப்பதாகச் சொன்னதும், பாபா எதுவும் பேசாமல் திரும்பிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் நிந்தை செய்த பக்தரும் பாபா கோஷ்டியில் சேர்ந்துகொண்டார்.
ஒரு காம்பவுண்டு அருகில் அனைவரும் வந்துகொண்டிருந்தபோது, அதோ அங்கு இருக்கும் பன்றியைப் பாருங்கள்.. அதன் நாக்கு பொது மக்கள் கழித்த மலத்தை எவ்வளவு இன்பமாக ரசித்து சுவைத்து சாப்பிடுகிறது.. தனது பந்துக்களையும் உறுமலால் விரட்டி விட்டு தன் பெரும் பசியைத் தணித்துக் கொண்டிருக்கிறது..
அதைப் போல, பல ஜென்மங்களாகச் செய்த புண்ணிய பலத்தால் கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தனது நாசத்திற்கே வழி செய்கிற உனக்கு இந்த சீரடி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்? என்று சொன்னார்.
நிந்தை செய்தவருக்கு இந்த வார்த்தைகள் தேள் கொட்டியதைப் போலிருந்தது. காலையில் நடந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பாபாவின் வார்த்தைகள் அவருக்கு புத்தியைத் தந்தது.
இப்படி பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கு  ஏற்றவாறு பிரசங்க வடிவில் போதனை தருவார். பாபா சொன்ன விஷயங்கள் சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது பலன்தரும்.
நான் எங்கும் இருக்கிறேன். நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும், இந்த தேசத்திலும் வெளி தேசத்திலும், எங்கும் இருக்கிறேன். ஒளியையுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்து இருக்கிறேன்.
மூன்றரை முழம் உயரமுள்ள இம்மனிதக் கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன். என்னை வேறு ஒன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவு பகலாகத் தொழுபவன் இரண்டு என்னும் மாயையை (தான் வேறு கடவுள் வேறு என்று எண்ணுதல்) வென்று என்னுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்று விடலாம். கடல் அலைகளைப் பிரிந்துவிடலாம். கண் கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருந்து வேறுபடமாட்டான்.
ஜனன மரண சுழலில் இருந்து நிச்சயமாக விடுபட வேண்டும் என்று உறுதியாக நினைப்பவன் தர்ம சாஸ்திர விதிகளின் படி வாழ்க்கை நடத்த கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் தனக்குள்ளே அடங்கிய மனத்தினனாக இருக்க வேண்டும்.
பிறர் மனத்தைப் புண்படுத்தவோ, தாக்கவோ கூடிய சொற்களைப் பேசக்கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக்கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாகக் கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேகத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றி கவலைப்படமாட்டான். அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.
எவன் ஒருவன் வேறொன்றிலும் நாட்டம் இல்லாது என்னையே வரித்து, எனது புண்ணியக்கதைகளைக் கேட்டுக்கொண்டு என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாது இருக்கிறானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் இன்று முதல் உங்கள் வாழ்க்கியில் சுபிட்சம் ஆரம்பிக்கும்.








Sunday, June 9, 2013

உனது பைசாக்கள் நோட்டுக்களாகும்!-3




உனது பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருக்கிறது பார், எடுத்துக் கொடு என்றார் பாபா. பாக்கெட்டில் பணம் இருப்பது நினைவுக்கு வரவே அதை பாபாவிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக அவரது பாதங்களில் அமர்ந்து அவரது ஆசீயைப் பெற்றுக்கொண்டான்.
சீரடியில் பாபாவுடன் ஏற்பட்ட அவனது அனுபவம், அவனை அங்கேயே தங்கத் தூண்டியது. தனது எண்ணத்தை மாமாவிடம் தெரிவித்தான். எனது வயலில் வேலை பார்த்துக்கொண்டு மீதி நேரத்தை சாயி தரிசனம் செய்ய செலவிடு என மாமா கூறினார்.
அதன் படி, மாமாவின் வயலில்வேலை செய்ய ஆரம்பித்தான். ஒரு வருடம் உருண்டோடியது. பாபு ராவின் கடுமையான உழைப்பால் தரிசு நிலத்தில் நிறைய மகசூல் கிடைத்து மாமாவுக்கு லாபம் வந்தது. அனைத்தையும் பாபு ராவ் மாமாவிடமே தந்தான்.
ஒருநாள் மாமாவின் நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வந்திருந்தார். வயல் பக்கம் வந்த அவர், மாமாவிடம், இந்தத் தரிசு நிலத்தை எப்படி இவ்வளவு அற்புதமாகப் பண்படுத்த முடிந்தது என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
எல்லாம், எனது இந்த மருமகன் செய்ததுதான் என்றார் மாமா.
பாபு ராவிடம், எனது வயலில் பங்குதாரராக வரமுடியுமா? எனக்கேட்டார் அந்த நண்பர். பாபுராவ் ஒப்புக்கொண்டான்.
சீரடியில் தனது மாமா நிலத்தில் உழைத்துவிட்டு, கோபர்கான் சென்று அங்கும் இரவு வரை கடுமையாக உழைத்தான். நேரம் கிடைக்கும்போது பாபாவையும் தரிசித்து வந்தான். அந்த ஆண்டு இறுதியில் விளைந்ததில், பாபு ராவுக்குக் கிடைத்த பங்குத் தொகை ஒரு லட்ச ரூபாய். வெறும் மூன்று அணாவுடன் சீரடிக்கு வந்த பாபுராவ், ஒரே ஆண்டில் ஒரு லட்ச ரூபாயை, வெறும் விவசாயத்தில் பெற்றார் என்றால் அது பாபாவின் கருணையல்லவா? (அந்தக் காலத்தில் ஒரு ஏக்கர் நிலம் 94 ரூபாய். ஒரு லட்ச ரூபாயில் ஆயிரம் ஏக்கர் வாங்கலாம்).
பாபு ராவ் மாதிரி பாபாவின் அனுக்கிரகத்தைப் பெற என்ன செய்யவேண்டும் என்பதை தியானிக்கலாமா?

1.பாபாவின் மீது தீவிர பக்தி செலுத்த வேண்டும். அவரை எப்போது தரிசிப்பது என்று ஏங்க வேண்டும்.
2. என்ன ஆனாலும் சரி, அவரை தரிசித்தாக வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்.
3. விரதத்தை தேவைக்கு ஏற்ப அனுசரிக்க வேண்டும்.
பாபு ராவ் சீரடிக்குப் போகும் வழியில்தான் விரதம் இருக்க ஆரம்பித்தார். அதுபோல குறுகிய காலமாக இருந்தாலும் பாபாவுக்காக விரதமிருக்கலாம். வழியில் உபசரிப்பும் உணவும் உணவுக்குப் பணமும் கிடைத்த போதும் பாபு ராவ் உண்பதைத் தவிர்த்தார்.
விரதத்திற்கு பங்கம் வரும் வகையில் எது நேரிட்டாலும் அதை நிராகரித்து நமது இலட்சியத்தை நோக்கி நடக்கவேண்டும்.
பாபா நம்மிடம் இருப்பதைத் தட்சணையாகக் கேட்பார் என்பதை அறிய வேண்டும்.
எல்லாவற்றையும் இழந்த நிலையில் நம்மிடம் என்ன இருக்கும்?
இதயம்தானே!
அந்த இதயத்தை அவருக்குக் காணிக்கையாக தந்துவிட்டு அவரது பாதத்தில் அமர்ந்திட வேண்டும். இந்த சுகானுபவம் தொடரும் வகையில் அவரை தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் செய்தாகிவிட்டது. நம் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
நிச்சயம் தீரும்! எப்போது?
இதயத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு அதில் இதுவரை இருக்க கடன் பற்றிய பிரச்சினையோ வேலையின்மை பற்றிய பிரச்சினையோ, திருமணத்தடை பற்றிய பிரச்சினையோ வேறுவித பிரச்சினை பற்றி கவலைப்படாமல், நமக்கில்லை கவலை, நம்மைப் பற்றி நமது சாயி நாதனுக்கு அன்றோ தினம் தினம் கவலை என்று நினைத்து, கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும்.
நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்து கொண்டோ, கவனித்துக் கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனதை சாயிக்கும் அவரது கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.
நமது இலக்கு என்னவோ அதை நோக்கி கடுமையாக முயற்சிக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே வருடத்தில் பிரச்சினைகள் தீர்ந்து அனைத்தும் பல மடங்கு உருவாகும்.
சில்லரைகள் நோட்டாக மாறிக்கொள்ளும், செலவுகள் வரவாகும். இழப்புகள் மாறி லாபமாகும். எல்லாம் நமக்கு சாதகமாகும்.

Saturday, June 8, 2013

உனது பைசாக்கள் நோட்டுக்களாகும்!-2






பூனாவுக்கு அருகில் சாஸ்வாட் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவன் பாபு ராவ் போராங்கே. இளம் வயதிலேயே பெற்றோர் இருவரும் காலமாகிவிட்டபிறகு, உறவுக்காரர்கள் அவனது சொத்துகளை அபகரித்துக் கொண்டார்கள்.  பாபு ராவ் அனாதையாகிவிட்டான். படிக்கவும் வசதியில்லை, ஏதேனும் வேலை செய்து பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான் பாபுராவ்.
பாபுராவின் மாமா ஒருவர் சீரடியில் இருந்தார். அங்கு வயலில் கரும்பு பயிரிட்டு வெல்லம் காய்ச்சி விற்பனை செய்துவந்தார். கிராமத்திற்கு வரும் போதெல்லாம் பாபாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். பாபாவின் லீலைகள் பற்றிய மாமாவின் பேச்சில் மயங்கிய பாபுராவுக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. நாளடைவில் பாபாவின் பக்தனாகவும் ஆகிவிட்டான்.
ஒரு மனிதனுக்கு நல்ல காலம் பிறந்தபிறகுதானே அவனுக்கு ஞானிகள் பற்றிய நினைவு வந்து, அவர்களைத் தேடத் தொடங்கி அவர்கள் மூலம் நிவாரணம் பெறும் வழியை அறிய முடிகிறது.
அப்படித்தான் பாபாவை அறிந்த பாபுராவுக்கு பாபாவை தரிசிக்கும்  ஆவல் அதிகமாகிக்கொண்டே வந்தது. எப்படியும் பாபாவை தரிசித்தே ஆகவேண்டும்! கையில் காசு இல்லை. வழிச் செலவுக்கு என வெறும் மூன்று அணாக்கள் (பதினெட்டு பைசா) மட்டுமே உள்ளன. இதை வைத்துக்கொண்டு சீரடிக்குப் போய்ச் சேர முடியாது.. ஆனாலும் நான் போவேன், அவரை தரிசிப்பேன் என்று உறுதி கொண்டு புறப்பட்டுவிட்டான்.
பூனாவிலிருந்து கோபர்கானுக்கு டிக்கெட் வாங்கினான். ரயில் அகமத் நகர் வந்ததும், பாபாவை தரிசிக்கும் வரை உண்ணா நோன்கு இருப்பதாக வேண்டிக்கொண்டான். கோபர்கானிலிருந்து கோதாவரிக் கரைவரை மூன்று மைல் தூரத்துக்கு குதிரை வண்டியில் வந்தவன், அதற்கு மேல் போக வழியில்லாமல் இறங்கினான். இனி சீரடிக்கு நடந்தே வருவேன் என நடக்கத் தொடங்கினான்.
சீரடிக்குப் போகும் வழியில் மாமா வீடு இருந்தது. அங்கு வந்த பாபுராவைப் பார்த்த மாமி, ஏதேனும் சாப்பிடுமாறு வற்புறுத்தினாள். தனது விரதம் பற்றி எடுத்துக்கூறிவிட்டு, நேராக சீரடிக்கு வந்தான்.
லெண்டித் தோட்டத்திற்கு அருகே அவனது மாமாவைப் பார்த்தான். நலம் விசாரித்த அவர்,ஏதேனும் சாப்பிட்டாயா? என்று கேட்டார். இல்லை என்று சொன்னதும், அவனிடம் ஒரு ரூபாய் தந்து சாப்பிடுமாறு கூறி அனுப்பி வைத்தார்.
ஒரு ரூபாயை பாக்கெட்டில் வைத்துக்கொண்ட பாபு ராவ், பாபாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் மசூதிக்கு வந்தான். துவாரகாமாயி வந்து பாபாவை தரிசித்தான், மனமெல்லாம் புல்லரிக்க அவரது பாதங்களில் தலை வைத்தான்.
பாபா அவனை ஆசீர்வதித்து அவனிடம் அன்பொழுகப் பேசினார். பிறகு தன் வழக்கப்படி தட்சணை கேட்டார். பாபுராவுக்கு தன்னிடம் மாமா கொடுத்த ஒரு ரூபாய் நினைவில் இல்லை. அவன் எடுத்து வந்திருந்த மூன்றணாவும் செலவாகிப் போயிருந்தது. இதனால் பாபாவிடம்,  ‘உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே!’ , என்றான்.

                                        இதன் தொடர்ச்சி நாளை......

Friday, June 7, 2013

உனது பைசாக்கள் நோட்டுக்களாகும்!





என்னை நம்பி என்பால் லயமாகிற என் பக்தனின்  எல்லாப் பொறுப்புகளையும் நான் ஏற்கிறேன். பாபா


என்னிடம் கூட்டுப்பிரார்த்தனைக்காக வரும் பெரும்பாலான சாயி பக்தர்கள் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பதாகவும், அதிலிருந்து மீள வழி தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கே வந்துவிடுவதாவும் சொல்வார்கள்.
தற்கொலை எதையும் சாதித்துத் தராது என்பதை எடுத்துச் சொல்லி அவர்களை பாபாவின் பக்கம் திருப்பிவிடுவேன். அவ்வப்போது எதை எப்படிச் செய்தால் கடன் அடையும், வருமானம் எப்படி வரும் என்றெல்லாம் கேட்பார்கள்.
நான் சொன்னால் நம்பமாட்டீர்கள்..
பாபாவை நம்பி அவரிடம் தன்னை ஒப்படைத்துவிடுகிறவனின் கடனை அவர் அடைத்துவிடுகிறார். இதை நான் அனுபவமாகவே உணர்ந்திருக்கிறேன்.
என்னுடைய ஹரிபாலாஜி புக்ஸ் என்ற புத்தக வெளியீட்டகம், முருகானந்தம் புத்தக வெளியீட்டகம், குளோபல் ஹெல்த் போன்ற புத்தக நிறுவனங்கள் மூலம் நாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் மற்றும் பிற பதிப்பகங்களுக்காக நான் எழுதிய புத்தகங்களின் விற்பனை உரிமை போன்ற அனைத்தும் கைவசம் வைத்திருந்த நிலையில், தொழில் நன்றாக நடந்துகொண்டிருந்தது. அவற்றை கண்டுகொள்ள நேரம் இல்லாமல் போய்விட்டதால், ஒரே ஆண்டில் அனைத்தையும் இழந்து கடனில் தவிக்கவேண்டியதாகி விட்டது.
எல்லாம் போன பிறகு நண்பர்கள் ஒதுங்கினர்.  ஏஜென்சிகள் கைவிட்டன. உறவுகள் நீங்கினார்கள். உதவி பெற்றவர்கள், உயர்ந்த அனைவரும் புறக்கணித்துவிட்ட நிலை ஏற்பட்டுப்போனது.
அந்த நேரத்தில் டாக்டர் அருண் சின்னையா என்ற சித்த மருத்துவர், நீங்கள் பாபாவை பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். பிடித்துக்கொண்டேன்..
பாபா சிறிது நம்பிக்கைத் தருவதுபோல தந்து திடீரென கவிழ்த்துவிட்டார்.
திக்குத் தெரியாத நிலையில் நின்றிருந்த நிலையிலும் நான் பாபாவின்திருநாமத்தை சொல்லிக் கொண்டேயிருந்தேன். பாபா எல்லா இடங்களிலும் போய் வந்துவிட்டேன், இனி போகும் இடமில்லை. என்ன செய்தாலும் உன் பாதங்களே கதி! என்று அவரது திருவடியில் வீழ்ந்துவிட்டேன். அதன் பிறகு நடந்த, நடந்துவரும் அனைத்திற்கும் நீங்களே சாட்சி...
பாபாவை சரணடைந்து இப்படி நிறைய செல்வத்தை அடைந்த ஒரு பக்தரைப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.

இதன் தொடர்ச்சி நாளை.........

Thursday, June 6, 2013

பாபா காட்டிய மூன்று உலகங்கள்




சத்சரித்திரம் பதிவு செய்யாத பல அற்புத லீலைகள் உள்ளன. அவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.
  பாபாவின் முதன்மை பக்தர் என்று சொல்லிக்கொள்ளும் பெருமை சாமாவுக்கு உண்டு. கிருஷ்ணனுக்கு அர்ஜுனன் என்றால், பாபாவுக்கு சாமா. குழந்தைத்தனமாகவும், உரிமையோடும் பாபாவிடம் உறவு கொண்டாடுவார் சாமா.
சாமாவுக்கு சத்தியலோகம், வைகுந்தம், கைலாயம் போன்றவை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதைப் பற்றி பாபாவிடமே கேட்டார். இருக்கிறது என்று சொன்னதும், ஹரே தேவா! அதை ஏன் இன்னும் என்னிடம் காட்டவில்லை? என்றார் சாமா.
அவையெல்லாம் மேலான ஐஸ்வர்யம் உள்ள இடங்கள். அவற்றை நம்மால் காணக்கூட முடியாது என்றார் பாபா. அதை எப்படியேனும் நான் பார்த்தாக வேண்டும் என சாமா அடம்பிடித்தார். உடனே சாமாவை கண்களை மூடச் சொன்னார் பாபா.  சாமா கண்களை மூடியதும் அவருக்கு ஞான திருஷ்டி உண்டாயிற்று.
முதலில் வைரம் போன்ற உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கும் ஒருவரையும் பார்த்தார் சாமா. அவரது இரு பக்கங்களிலும் வரிசையாக சிம்மாசனங்களும், அவற்றில் தேவர்கள் மற்றும் ரிஷிகள் பலரும் அமர்ந்திருந்தார்கள்.
சாமா உன் கண்களைத் திற என்றார் பாபா. கண்களைத் திறந்தபோது, மீண்டும் மூடிக்கொள் என்றார்.
இப்போது சாமா வைகுந்தத்தையும் அதில் நாராயணன் லட்சுமி தேவியையும் தரிசித்தார். இங்கும் பல அதிசயங்களைக் கண்டார்.
அடுத்து அவரை கண்களைத் திறந்து மூடுமாறு பாபா சொன்னபோது, சாமா கண்களைத் திறந்து மூடினார்.  இந்த முறை அவர் கைலாயத்தை தரிசித்தார். இவற்றையெல்லாம் தரிசித்த போது சாமாவுக்கு பயம் வந்துவிட்டது. திகிலோடு கண் திறந்தார். அவரைத் தட்டிக் கொடுத்த பாபா, சாமா,  இவையெல்லாம் நமக்கு வேண்டாம். நமது வழி முறைகள் வழக்கத்திற்கு மாறானதுஎன்றார்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...