Sunday, June 9, 2013

உனது பைசாக்கள் நோட்டுக்களாகும்!-3




உனது பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருக்கிறது பார், எடுத்துக் கொடு என்றார் பாபா. பாக்கெட்டில் பணம் இருப்பது நினைவுக்கு வரவே அதை பாபாவிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக அவரது பாதங்களில் அமர்ந்து அவரது ஆசீயைப் பெற்றுக்கொண்டான்.
சீரடியில் பாபாவுடன் ஏற்பட்ட அவனது அனுபவம், அவனை அங்கேயே தங்கத் தூண்டியது. தனது எண்ணத்தை மாமாவிடம் தெரிவித்தான். எனது வயலில் வேலை பார்த்துக்கொண்டு மீதி நேரத்தை சாயி தரிசனம் செய்ய செலவிடு என மாமா கூறினார்.
அதன் படி, மாமாவின் வயலில்வேலை செய்ய ஆரம்பித்தான். ஒரு வருடம் உருண்டோடியது. பாபு ராவின் கடுமையான உழைப்பால் தரிசு நிலத்தில் நிறைய மகசூல் கிடைத்து மாமாவுக்கு லாபம் வந்தது. அனைத்தையும் பாபு ராவ் மாமாவிடமே தந்தான்.
ஒருநாள் மாமாவின் நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வந்திருந்தார். வயல் பக்கம் வந்த அவர், மாமாவிடம், இந்தத் தரிசு நிலத்தை எப்படி இவ்வளவு அற்புதமாகப் பண்படுத்த முடிந்தது என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
எல்லாம், எனது இந்த மருமகன் செய்ததுதான் என்றார் மாமா.
பாபு ராவிடம், எனது வயலில் பங்குதாரராக வரமுடியுமா? எனக்கேட்டார் அந்த நண்பர். பாபுராவ் ஒப்புக்கொண்டான்.
சீரடியில் தனது மாமா நிலத்தில் உழைத்துவிட்டு, கோபர்கான் சென்று அங்கும் இரவு வரை கடுமையாக உழைத்தான். நேரம் கிடைக்கும்போது பாபாவையும் தரிசித்து வந்தான். அந்த ஆண்டு இறுதியில் விளைந்ததில், பாபு ராவுக்குக் கிடைத்த பங்குத் தொகை ஒரு லட்ச ரூபாய். வெறும் மூன்று அணாவுடன் சீரடிக்கு வந்த பாபுராவ், ஒரே ஆண்டில் ஒரு லட்ச ரூபாயை, வெறும் விவசாயத்தில் பெற்றார் என்றால் அது பாபாவின் கருணையல்லவா? (அந்தக் காலத்தில் ஒரு ஏக்கர் நிலம் 94 ரூபாய். ஒரு லட்ச ரூபாயில் ஆயிரம் ஏக்கர் வாங்கலாம்).
பாபு ராவ் மாதிரி பாபாவின் அனுக்கிரகத்தைப் பெற என்ன செய்யவேண்டும் என்பதை தியானிக்கலாமா?

1.பாபாவின் மீது தீவிர பக்தி செலுத்த வேண்டும். அவரை எப்போது தரிசிப்பது என்று ஏங்க வேண்டும்.
2. என்ன ஆனாலும் சரி, அவரை தரிசித்தாக வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்.
3. விரதத்தை தேவைக்கு ஏற்ப அனுசரிக்க வேண்டும்.
பாபு ராவ் சீரடிக்குப் போகும் வழியில்தான் விரதம் இருக்க ஆரம்பித்தார். அதுபோல குறுகிய காலமாக இருந்தாலும் பாபாவுக்காக விரதமிருக்கலாம். வழியில் உபசரிப்பும் உணவும் உணவுக்குப் பணமும் கிடைத்த போதும் பாபு ராவ் உண்பதைத் தவிர்த்தார்.
விரதத்திற்கு பங்கம் வரும் வகையில் எது நேரிட்டாலும் அதை நிராகரித்து நமது இலட்சியத்தை நோக்கி நடக்கவேண்டும்.
பாபா நம்மிடம் இருப்பதைத் தட்சணையாகக் கேட்பார் என்பதை அறிய வேண்டும்.
எல்லாவற்றையும் இழந்த நிலையில் நம்மிடம் என்ன இருக்கும்?
இதயம்தானே!
அந்த இதயத்தை அவருக்குக் காணிக்கையாக தந்துவிட்டு அவரது பாதத்தில் அமர்ந்திட வேண்டும். இந்த சுகானுபவம் தொடரும் வகையில் அவரை தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் செய்தாகிவிட்டது. நம் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
நிச்சயம் தீரும்! எப்போது?
இதயத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு அதில் இதுவரை இருக்க கடன் பற்றிய பிரச்சினையோ வேலையின்மை பற்றிய பிரச்சினையோ, திருமணத்தடை பற்றிய பிரச்சினையோ வேறுவித பிரச்சினை பற்றி கவலைப்படாமல், நமக்கில்லை கவலை, நம்மைப் பற்றி நமது சாயி நாதனுக்கு அன்றோ தினம் தினம் கவலை என்று நினைத்து, கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும்.
நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்து கொண்டோ, கவனித்துக் கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனதை சாயிக்கும் அவரது கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.
நமது இலக்கு என்னவோ அதை நோக்கி கடுமையாக முயற்சிக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே வருடத்தில் பிரச்சினைகள் தீர்ந்து அனைத்தும் பல மடங்கு உருவாகும்.
சில்லரைகள் நோட்டாக மாறிக்கொள்ளும், செலவுகள் வரவாகும். இழப்புகள் மாறி லாபமாகும். எல்லாம் நமக்கு சாதகமாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...