Monday, June 10, 2013

உங்கள் வாழ்க்கையில் சுபீட்சம் இன்று முதல் ஆரம்பிக்கும்!





ஒருவருடைய நடத்தை இழிவானதாகக் கருதப்பட்டால் அவரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியதே நியாயம்,. திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும், பின்னால் புறங்கூறுதல் செய்யலாகாது.
எவரையும் நிந்தனை செய்யக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது. உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து அங்கிருந்து நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.
மூன்று உலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக்காண முடியாது. நிந்தை செய்யப்படுபவனுக்கு நிந்தை செய்பவன் பரம மங்களத்தைச் செய்கிறான்.
சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்கங்கொட்டையை பயன்படுத்துகிறார்கள். சிலர் சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் சுத்தமான நீரை பயன்படுத்துகிறார்கள். நிந்தை செய்பவனோ தனது நாக்கைப் பயன்படுத்துகிறான்.
நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்கு உரியவர்கள். பிறருக்கு நன்மை செய்யத் தங்கள் மனதை வீழ்ச்சியடையச் செய்துகொள்கிறார்கள். அவர்களது பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது. நிந்தை என்ற பெயரில் ஒவ்வொரு படியிலும் நம் தோஷங்களைத் தெரிவித்து, எதிர்காலத்தில் விளையக்கூடிய அநேக அனர்த்தங்களை வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தைப் போற்ற வார்த்தைகளே இல்லை.

நிந்தை செய்கிறவர்களை சாதுக்களும் ஞானிகளும் பலவிதமாகப் போற்றுவார்கள். ஏனெனில் இவர்கள் சாதுக்கள் மற்றும் ஞானிகளின் பாவங்களையும் அல்லவா துடைத்துவிடுகிறார்கள். அப்படிப் பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நாம் மனதார நமஸ்காரம் செய்யவேண்டும்.
ஒருமுறை சிறந்த சாயி பக்தர் ஒருவர் வேறு ஒருவரைப் பற்றிப் பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமர்சித்து நிந்தை செய்தார். அந்த நிந்தையே பிரவாகம் போல பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை அறியாமலேயே, வசைச் சொல் கூறுவதும், நிந்தனை செய்வதுமே முக்கியப் பேச்சாக இருந்தது.
இது பாபாவுக்குப் பிடிக்காத விஷயம். நிந்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் இதைக் கேட்டு வெறுப்படைந்தார்கள். நிந்தை செய்தவர் சற்று ஓய்ந்துவிட்டு, காலைக்கடன் கழிப்பதற்காக ஓடைப்பக்கம் போயிருந்தார். பக்தர்களின் கூட்டமோ பாபாவை தரிசிக்க மசூதிக்கு வந்தது.
பக்தர்களுடன் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் அந்த நிந்தை எதைப் பற்றியது? யார் நிந்தை செய்தது? என்று கேட்டார்.
நிந்தை செய்தவர் ஓடைப்பக்கம் போயிருப்பதாகச் சொன்னதும், பாபா எதுவும் பேசாமல் திரும்பிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் நிந்தை செய்த பக்தரும் பாபா கோஷ்டியில் சேர்ந்துகொண்டார்.
ஒரு காம்பவுண்டு அருகில் அனைவரும் வந்துகொண்டிருந்தபோது, அதோ அங்கு இருக்கும் பன்றியைப் பாருங்கள்.. அதன் நாக்கு பொது மக்கள் கழித்த மலத்தை எவ்வளவு இன்பமாக ரசித்து சுவைத்து சாப்பிடுகிறது.. தனது பந்துக்களையும் உறுமலால் விரட்டி விட்டு தன் பெரும் பசியைத் தணித்துக் கொண்டிருக்கிறது..
அதைப் போல, பல ஜென்மங்களாகச் செய்த புண்ணிய பலத்தால் கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தனது நாசத்திற்கே வழி செய்கிற உனக்கு இந்த சீரடி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்? என்று சொன்னார்.
நிந்தை செய்தவருக்கு இந்த வார்த்தைகள் தேள் கொட்டியதைப் போலிருந்தது. காலையில் நடந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பாபாவின் வார்த்தைகள் அவருக்கு புத்தியைத் தந்தது.
இப்படி பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கு  ஏற்றவாறு பிரசங்க வடிவில் போதனை தருவார். பாபா சொன்ன விஷயங்கள் சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது பலன்தரும்.
நான் எங்கும் இருக்கிறேன். நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும், இந்த தேசத்திலும் வெளி தேசத்திலும், எங்கும் இருக்கிறேன். ஒளியையுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்து இருக்கிறேன்.
மூன்றரை முழம் உயரமுள்ள இம்மனிதக் கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன். என்னை வேறு ஒன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவு பகலாகத் தொழுபவன் இரண்டு என்னும் மாயையை (தான் வேறு கடவுள் வேறு என்று எண்ணுதல்) வென்று என்னுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்று விடலாம். கடல் அலைகளைப் பிரிந்துவிடலாம். கண் கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருந்து வேறுபடமாட்டான்.
ஜனன மரண சுழலில் இருந்து நிச்சயமாக விடுபட வேண்டும் என்று உறுதியாக நினைப்பவன் தர்ம சாஸ்திர விதிகளின் படி வாழ்க்கை நடத்த கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் தனக்குள்ளே அடங்கிய மனத்தினனாக இருக்க வேண்டும்.
பிறர் மனத்தைப் புண்படுத்தவோ, தாக்கவோ கூடிய சொற்களைப் பேசக்கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக்கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாகக் கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேகத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றி கவலைப்படமாட்டான். அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.
எவன் ஒருவன் வேறொன்றிலும் நாட்டம் இல்லாது என்னையே வரித்து, எனது புண்ணியக்கதைகளைக் கேட்டுக்கொண்டு என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாது இருக்கிறானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் இன்று முதல் உங்கள் வாழ்க்கியில் சுபிட்சம் ஆரம்பிக்கும்.








No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...