Tuesday, November 26, 2013

குசால்பாவு

விடியற்காலையில் (சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்) தோன்றும் கனவுகள் உண்மையாகிப் பலனளிக்கும். மற்ற நேரங்களில் தோன்றும் கனவுகளால் பலனேதும் இல்லை. 
இதுவே மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆயினும், ஷீரடி சம்பந்தப்பட்ட கனவுகள் எங்கே தோன்றினாலும் எப்பொழுது தோன்றினாலும் ஸித்தியாகும். இதுவே பக்தர்களின் இடையூறற்ற அனுபவம்.  இது சம்பந்தமாக இப்பொழுது ஒரு சிறுகதை சொல்கிறேன். செவிமடுப்பவர்கள் மனமகிழ்ச்சியடைந்து மேலும் கேட்க ஆவலுறுவார்கள். 

      ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், ''குதிரை வண்டியில் ராஹாதாவுக்குச் சென்று குசால்பாவுவை அழைத்துக்கொண்டு வாரும்.
 ''அவரைச் சந்திக்க மனம் ஏங்குகிறது; பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. 'பாபா உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; ஆகவே வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்.
பாபாவின் ஆணைக்கு வந்தனம் செலுத்திவிட்டு, தீக்ஷிதர் ஒரு குதிரைவண்டியில் போனார். குசால்பாவுவைச் சந்தித்து, உடனே தாம் வந்த காரணத்தைத் தெரிவித்தார். 
பாபாவின் செய்தியைக் கேட்ட குசால்பாவு ஆச்சரியமடைந்தார். அவர் சொன்னார், நான் இப்பொழுதுதான் தூக்கத்தி­ருந்து எழுந்தேன். கனவில் பாபா எனக்கு இதே ஆணையைத்தான் இட்டார். மதிய உணவு முடிந்தபின் இப்பொழுதுதான் சிறிது நேரம் ஓய்வாகப் படுத்தேன். கண்களை மூடியவுடன் பாபா இதைத்தான் என் கனவில் சொன்னார்.
அவர் என்னிடம் சொன்னார்,  'உடனே கிளம்பி ஷீரடிக்கு வாரும் என்று. எனக்கும் அவரை சந்திக்கவேண்டுமென்ற தாபம் இருந்தது. என்னுடைய குதிரை இங்கு இல்லாமல் நான் என்ன செய்வது? ஆகவே என் மகனிடம் இச் செய்தியைச் சொல்லியனுப்பினேன்.
 ''ஆனால், அவன் கிராம எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே உங்களுடைய குதிரைவண்டி வந்துவிட்டது. தீக்ஷிதர் கேலி­யாகச் சொன்னார், ''ஆமாம், அதற்காகத்தான் பாபா எனக்கு ஆணையிட்டு இங்கு அனுப்பினார்.
 ''நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் ஷீரடிக்கு வந்தார். 

 தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 

சாந்தம் அடை!

 அக்கினியின்மீதும் அவருக்கு அம்மாதிரியான ஆதிபத்தியம் இருந்தது. இதுவிஷயமாக ஒரு சுருக்கமான காதையை கவனத்துடன் கேளுங்கள். செவிமடுப்பவர்களே! அது பாபாவினுடைய அபூர்வமான சக்தியை விளக்கும். 
     ஒருநாள் நடுப்பகல்வேளையில் துனியின் தீ பலமாக எழும்பியது. அந்நேரத்தில் துனிக்குப் பக்கத்தில் நிற்பதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? ஜுவாலைகள் திகுதிகுவென்று உயரமாக எரிந்தன. 
      தீ பயங்கரமாக எரிந்து, பல சிகரங்கள் உயரமாகக் கிளம்பிக் கூரையின் மரப்பலகைகளைத் தொட்டன. தீவிபத்தில் மசூதியே எரிந்து சாம்பலாகிவிடும் போலத் தோன்றியதுõ 
      பாபா என்னவோ அமைதியாகவே இருந்தார். முற்றும் வியப்படைந்த மக்கள் கவலையால் பீடிக்கப்பட்டு உரக்கக் கூவினர், ''ஐயோ, எவ்வளவு அமைதியாகவும் படபடப்பின்றியும் இருக்கிறார்”.
      யாரோ ஒருவர் அலறினார், ''ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவாருங்கள்!’ மற்றவர் சொன்னார், ''யார் அதைத் துனியில் கொட்டுவது? கொட்ட முயன்றால் ஸட்கா (பாபாவின் கைத்தடி) பலமாக உம்மீது விழும். யார் இதைச் செய்ய தைரியமாக முன்வருவார்?”.
     எல்லாரும் தைரியத்தை இழந்து தத்தளித்தனர்; ஆனால் யாருக்குமே கேட்பதற்கு தைரியம் இல்லை. பிறகு பாபாவே தாமிருந்த நிலையி­ருந்து சிறிது நெளிந்து ஸட்காவின்மீது கரத்தை வைத்தார். 
      கொழுந்துவிட்டெரியும் தீயைப் பார்த்துக்கொண்டே ஸட்காவைக் கையிலெடுத்துக்கொண்டு, ''நகரு, பின்வாங்கு, போ என்று சொல்லி­க்கொண்டே அடிமேல் அடியாக அடித்தார்.
     துனியி­ருந்து ஒரு கை தூரத்தில் இருந்த கம்பத்தை ஸட்காவால் அடித்துக் கொண்டும் துனியை முறைத்துப் பார்த்துக்கொண்டும், ''சாந்தம் அடை; சாந்தம் அடை என்று திரும்பத் திரும்பச் சொன்னார். 
      ஒவ்வொரு அடிக்கும் துனி தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்து பின்வாங்கியது. படிப்படியாக துனி சாந்தமடைந்தது. மக்களுடைய பீதியும் அடியோடு தொலைந்துபோயிற்று. 
      ஞானிகளில் சிறந்தவரும் இறைவனின் அவதாரமுமான ஸாயீ இவ்வாறே இருந்தார். அவருடைய பொற்பாதங்களில் சரணடைந்தால், தம் கிருபைசெய்யும் கரத்தை உம்முடைய சிரத்தின்மீது வைப்பார். 
     எவர் இந்த அத்தியாயத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் நித்தியபாராயணம் செய்கிறாரோ, அவர் சாந்தமான மனநிலையையும் ஆபத்துகளி­ருந்து முழு விடுதலையையும் அனுபவிப்பார். 
     நான் இன்னும் வேறென்ன சொல்லுவேன்? மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நியமநிஷ்டையுடன், விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்துகொண்டு ஸாயீயை முழுமனத்துடன் வழிபட்டால், முழுமுதற்பொருளை அடைவீர்கள். 

      உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். 


கடைசியில் நீங்கள் நிஷ்காமமானவராக (எதையும் வேண்டாதவராக) 

ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் துர்லபமாகிய (எளிதில் கிடைக்காத) 

ஸாயுஜ்ய முக்திநிலையை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) அடைவீர்கள். 

அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும். 


     இக்காரணம்பற்றி, பரமார்த்த சுகத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் 

இந்த அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யவேண்டும். 


     அம்மாதிரியான பாராயணம் சித்தத்தைத் தூய்மைப்படுத்தி ஆன்மீக 

நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் 

விரட்டியடிக்கப்படும்; விரும்பினவும் நன்மைகளும் விளையும். 

பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் எல்லாரும் (அம்மாதிரியான 

பாராயணத்தால்) அனுபவிக்கலாம்.

ஸ்ரீ சாசாயி சத்சரித்திலிருந்து

Monday, November 25, 2013

காகாஜி வைத்யா

ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.  இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக்கொண்டுவந்தால், ஸாயீலீலை ரசவாதம் புரியும். பிறவியெனும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். ஸமர்த்த ஸாயீ மஹத்தான சக்தி பெற்றவர் அல்லரோ.
நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்துவந்தார். அங்கிருந்த தேவியின் கோயில் பூஜை செய்பவராக இருந்தார். 
தேவியின் பெயர் ஸப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளாலும் வேதனைகளாலும் துன்புற்ற பூஜாரி  மன உளைச்சலுற்றார். காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை. 
மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளி­ருந்தும் சஞ்சலங்களி­ருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார். 
    தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பாவத்தையும் மெச்சித் திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்களே!  இந்த அற்புதத்தைக் கேளுங்கள்!
 தேவி ஸப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, ''பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும் என்று கூறினார்.
  'யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது? என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார். 
மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார். 
 பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவர் ஆகத்தான்  இருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனவுளைச்சல் நிற்கவில்லை. 
திரியம்பகேசுவரத்தில் பத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை. 
  உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார். 
 தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவ­லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும் மனம் அமைதியற்று இருந்தது. 
 மறுபடியும் தேவியின் கோயிலுக்குச் சென்று, ''என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனத்திற்கு அமைதி கொடுங்கள். என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டாம் என்று மனமுருகி வேண்டினார். 
      தீனமான குர­ல் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினார். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி, ''பாபா என்று நான் குறிப்பிட்டது ஷீரடியில் வாழும் ஸமர்த்த ஸாயீயை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையே? எனச் சொல்­ அருள் செய்தார். 

      ''இந்த ஷீரடி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; ஷீரடி விஜயம் எப்படி நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லையே? என்று காகாஜி குழம்பினார். 
     ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமல்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார். 
     ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசம் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளும் இறைவனும் அத்வைதம். 
 ''என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன். இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையுமாகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை. 
  ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்லமுடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.  பக்தர்களில் சிரேஷ்டமானவருக்கு தரிசனம் செய்யவேண்டுமென்ற தாபம் எவ்வளவோ, பக்தியும் பாவமும் நிட்டையும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே அவருடைய ஆனந்த அனுபவம் விளைகிறது. 
இவ்விதமாகக் காகாஜி, 'ஷீரடி தரிசனத்திற்கு எப்படிச் செல்வேன்?என்று மூளையைக் குழப்பிக்கொண் டிருந்தபோது அவருடைய விலாசத்தைத் தேடிக்கொண்டு ஷீரடியி­ருந்து ஒரு விருந்தாளி வந்துசேர்ந்தார்.
    விருந்தாளி என்ன சாமானியமான ஆளா? , இல்லவேயில்லை. எவரை பாபா மற்றவர்களைவிட அதிகமாக விரும்பினாரோ, எவருடைய பிரேமை இணையில்லாததோ, எவரிடத்தில் உயர்ந்த அதிகாரம் இருந்ததோ, அவரே விருந்தாளியாக வந்திருந்தார்õ   அவருடைய பெயர் மாதவராவ் தேச்பாண்டே (சாமா). அவரொருவரால்தான் பாபாவிடம் இனிமையாகப் பேசியும் புகழ்ந்தும் வெற்றி காணமுடியும். வேறெவராலும் இதைச் செய்ய இயலாது. 
      சதாசர்வகாலமும் இருவருக்குமிடையே அன்புப் பூசல்கள் நடக்கும். ஒருவரையொருவர் ஏகவசனத்தில் ('நீ, வா, போஃ என்னும் ரீதியில்) பேசி சகஜமாக உறவாடுவர். பாபா மாதவராவிடம் மகனைப் போன்று பாசம் வைத்திருந்தார். வணிக்கு அப்பொழுது வந்துசேர்ந்த விருந்தாளி இவர்தான். 
குழந்தை நோயுற்றபோது, தாயார் தேவியிடம் வேண்டிக்கொண்டார், ''இக்குழந்தையை உன்னுடைய பொறுப்பில் விட்டுவிடுகிறேன்; ஆக்குவதோ அழிப்பதோ உன் பாடு. குழந்தை பிழைத்தெழுந்து என்னுடையதாகிவிட்டால், கட்டாயம் அவனை உன் பாதங்களில் கொண்டுவந்து போடுகிறேன். இவ்விதமாக தேவிக்கு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டபின் குழந்தை நோயி­ருந்து விடுபட்டது. 
     வைத்தியரானாலும் சரி, இறைவனாயினும் சரி, வேலை முடிந்தவுடன் அவர்களை மறந்துவிடுகிறோம். சங்கடம் வரும்போதுதான் வேங்கடரமணன் நிறைவேற்றப்படாமல் கிடக்கும் நேர்த்திக்கடன் பயத்திற்குக் காரணம் ஆகிறது. 
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, காலம் உருண்டது. நேர்த்திக்கடன் முழுமையாக மறந்துபோய்விட்டது. கடைசியாக, தாயார் தம் இறுதிக்காலத்தில் மாதவராவிடம் விநயமாகத் தெரிவித்தார்.
  ''பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரார்த்தனையை நேர்ந்துகொண்டேன். அது தாமதமாகித் தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்துவிட்டது. இவ்விதமாக இழுத்துக்கொண்டே போவது நன்றன்று. ஆகவே நீ போய் தேவியை தரிசனம் செய்துவிட்டு வா.
தேவிக்கு நேர்ந்துகொண்ட பிரார்த்தனை இன்னுமொன்றும் இருந்தது. தாயாரின் இரண்டு முலைகளிலும் கட்டிகள் தோன்றித் தாங்கமுடியாத வலி­யையும் துன்பத்தையும் அளித்தன. 
 ''தாயே, உன் பாதங்களில் விழுகிறேன். இந்த வ­லியையும் துன்பத்தையும் நிவிர்த்தி செய்; நான் வெள்ளியால் இரண்டு முலைகள் செய்து உன் சன்னிதியில் ஆரத்திபோல் சுற்றியபின் பாதங்களில் ஸமர்ப்பிக்கிறேன்.
   செய்யலாம், செய்யலாம் என்று சொல்­ இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது. 
    தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, 'நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களி­ருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார். 
மறுபடியும், 'போவோம், போவோம் என்று சொல்லி­யே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவராவ் மறந்தே போனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.
 30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜோதிடர் ஷீரடிக்கு வந்துசேர்ந்தார்.  ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண் டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும்பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார். 
ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்லி­ எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச்செய்து மதிப்புப் பெற்றிருந்தார். 
மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தைப்பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார். 
ஜோதிடர் கூறினார், ''உமது தாயார் மரணத் தறுவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்கச் சொன்னார். ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள். மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார். 
      மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார். 
பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, ''என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள் என்று வேண்டினார்.
 ''நீரே எனது ஸப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்.
பாபா பதில் கூறினார், ''நீ ஸப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவிக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே ஸமர்ப்பணம் செய்.
பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்குப் போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்குத் திரும்பினார். 
பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் உதீ பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார். 
      ஸப்தசிருங்கிக்கு வந்துசேர்ந்து, குல உபாத்தியாயருக்காகத் தேடினார். தெய்வாதீனமாகக் காகாஜியின் வீட்டை அனாயாசமாகச் சென்றடைந்தார். 
      காகாஜியோ இங்கு பாபா தரிசனத்திற்காகத் துடித்துக்கொண் டிருக்கிறார். அதே சமயத்தில் மாதவராவும் அங்கு வந்துசேர்கிறார். இது சாமானியமாக நடக்கக்கூடிய சம்பவமா என்ன? 
காகாஜி அவரை யார் என்றும் எங்கிருந்து வந்திருக்கிறாரென்றும் விசாரித்தார். மாதவராவ் ஷீரடியி­ருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் காகாஜி அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். போற்றத்தக்க இந்த சம்பவக் கூடலைக் கண்டு இருவரும் துள்ளிக் குதித்தனர். 
 இவ்வாறாக, இருவரும் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன் ஸாயீ லீலையைப் புகழ்ந்து கொண்டே நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகளை முடித்தனர். அது முடிந்ததும் உபாத்தியாயர் (காகாஜி) ஷீரடிக்குக் கிளம்பினார். 
மாதவராவின் மதிப்பிற்குரிய சங்கமும் தோழமையும் கிடைக்குமென்று கனவிலும் எதிர்பாராத காகாஜி ஆனந்தத்தால் நிரம்பினார். அவருடைய கவனம் முழுவதும் ஷீரடி செல்லும் பாதைக்குத் திரும்பியது. 
நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகள் முடிந்தவுடன், ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியவர்களாய் இருவரும் சீக்கிரமாக ஷீரடிக்குக் கிளம்பினர். 
    அவர்கள் கிளம்பிய வேகம், காகாஜியின் மனத்தில் முன்னமிருந்த ஆவலையும் துடிப்பையும் ஒத்திருந்தது. கோதாவரிக் கரையை சீக்கிரமாகச் சென்றடைந்தனர். அங்கிருந்து ஷீரடி சமீபத்தில் இருந்தது. 
காகாஜி பாபாவை வணங்கி அவருடைய பாதங்களைத் தம் கண்ணீரால் குளிப்பாட்டினார். பாபாவின் தரிசனத்தால் சாந்தியையும் மகிழ்ச்சியையும் திரும்பப்பெற்றார். 
இதற்காகத்தான் தேவி அவருடைய கனவில் தோன்றினாள். ஸமர்த்த ஸாயீயைக் கண்டவுடனே காகாஜி உண்மையான சந்தோஷமடைந்தார். அவருடைய மனோரதம் நிறைவேறியது. 
ஸாயீ தரிசனம் கண்ட காகாஜி மனம் மகிழ்ந்தார். அவருடைய இதயம் நெகிழ்ந்தது. பாபாவின் அருள் அவர்மீது பொழிந்தவுடன் மனம் நிச்சிந்தையாகியது; கவலைகள் பறந்தோடின. 
வியப்புறும் வகையில் மனத்தின் சஞ்சலங்கள் ஓய்ந்தன. அவர் தமக்குத் தாமே, 'ஓ இதென்ன அசாதாரணமான லீலை என்று சொல்லி­க்கொண்டார். 
      ''என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை; ஒரு கேள்வியும் கேட்கவில்லை; சமாதானமும் செய்யவில்லை; ஆசீர்வாதமும் செய்யவில்லை; வெறும் தரிசனமே எனக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் அளித்துவிட்டது”.
''சஞ்சலங்களால் அலைபாய்ந்துகொண் டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மஹிமையே அன்றி வேறெதுவும் இல்லை.
ஸாயீ பாதங்களில் பார்வை குத்திட்டது; வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாபாவின் லீலையை எண்ணியெண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது. 
    உபாத்தியாயர் (காகாஜி) பாவத்துடன் ஸாயீயின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டார். 

இவ்விதமாகக் காகாஜி பன்னிரண்டு நாள்கள் ஷீரடியில் தங்கினார். மனம் சாந்தியடைந்து நிலைபெற்று, ஸப்தசிருங்கிக்குத் திரும்பினார். 

ஸாயீ தயையே உருவானவர்

இடிக்கும் மின்னலுக்கும் அதிபதியும் மேகங்களின்மீது ஆட்சிசெலுத்துபவருமான இந்திரனை ஒருமுறை பாபா தொழுததைக் கண்டு நான் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டேன். 
      மிகப் பயங்கரமான நேரம் அது; வானம் முழுவதும் மேகமூட்டத்தால் கறுத்துவிட்டது. பறவைகளும் மிருகங்களும் பயத்தால் நடுங்கின. ஆக்கிரோஷமான சூறைக்காற்றுக்குப் பின், பலத்த மழை பொழிய ஆரம்பித்தது.   அது சூரியன் அஸ்தமித்துவிட்ட முன்னிரவு நேரம். திடீரென்று சுழற்காற்று அடித்து பலமாகச் சத்தமிட்டபோது எங்கும் ஒரே கலவரமாக இருந்தது.      இது போதாதென்று மேகங்கள் இடித்துக் கர்ஜித்தன; மின்னல்கள் பளபளத்தன; சூறைக்காற்று மேலும் மேலும் சீறியது; பின்னர் கனத்த மழை பொழிந்தது.   மேகங்கள் கொட்டோகொட்டென்று கொட்டின; ஆலங்கட்டி பெரியதாகவும் வேகமாகவும் விழுந்தது. சிர்டீ கிராமமக்கள் அனைவரும் என்ன நேருமோ என்று பீதியடைந்தனர்; ஆடுமாடுகள் பரிதாபமாகக் கதறின. 
      மசூதியின் சார்ப்பில் ஆண்டிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கினர்; மாடுகளும் கன்றுகளும் அங்கு வந்து குழுமினõ மசூதியில் இடமில்லை. 
தண்ணீர், தண்ணீர், தண்ணீர், எங்கே பார்த்தாலும் தண்ணீர் மழை பொழிந்த வேகத்தில் வைக்கோல் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டது. அறுத்துக் கட்டுக்கட்டிக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தானியங்களெல்லாம் முழுக்க நனைந்து போயின. ஜனங்களிடையில் பீதியும் அமளியும் நிலவியது.
  கிராமமக்கள் பயத்தால் நடுநடுங்கி ஸபாமண்டபத்தில் நெருக்கியடித்தனர். சிலர் பாதுகாப்புக்காக மசூதியின் சார்ப்புகளின் கீழே நின்றனர். அவர்களனைவரும் பாபாவை வேண்டிக்கொள்வதற்காகவே வந்திருந்தனர். 
     ஜோகாயி, ஜாகாயி, மாரியாயி, சனி, சங்கர், அம்பாபாயி, மாருதி, கண்டோபா, மஹால்ஸாபதி -- இந்தத் தெய்வங்களெல்லாம் சிர்டீயில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு இடத்தில் இருந்தன.
 
     ஆனால் ஆபத்துக்காலத்தில் கிராம மக்களுக்கு இந்த தேவதைகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களுடைய நடமாடும் தெய்வமான ஸாயீயே ஆபத்துநேரத்தில் அவர்களை மீட்பதற்காக ஓடிவந்தார். 
     அவருக்குக் கோழியோ ஆடோ பலி­யிடத் தேவையில்லை; பணமும் ஸமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காகவுமே அவர் பசி கொண்டார். அதன்பிறகு, அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்துபோயின. 
      மக்கள் எவ்வளவு அதிர்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்தபோது மஹராஜினுடைய இதயம் கருணையால் உருகியது. தம்முடைய ஆசனத்தைவிட்டு எழுந்து, மசூதியின் வாசல் விளிம்பிற்கு வந்து நின்றுகொண்டார். 
      வானம் இடித்தது; மின்னல்கள் பளபளத்தன. இதன் நடுவே ஸாயீமஹராஜ் பலம் கொண்டமட்டும் தம்முடைய குரலை உச்சஸ்வரத்திற்கு உயர்த்தி கர்ஜித்தார்.
 
     ஸாதுக்களுக்கும் ஞானிகளுக்கும் தங்களுடைய உயிரைக் காட்டிலும் பக்தர்களுடைய உயிரே பெரிது. அவர்களுடைய விருப்பப்படியேதான் தேவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்காக தேவர்களும் பூமிக்கு இறங்கி வருகின்றனர். 
     பக்தர்கள் உதவிநாடி வேண்டும்போது, தேவர்களும் பக்தர்களுடைய ஈடுபாட்டை ஞாபகப்படுத்திக்கொண்டு அவர்களுக்காகப் பரிந்து ஓடிவந்து காப்பாற்றவேண்டும். 
     கர்ஜனைக்கு மேல் கர்ஜனை பயங்கரமாக வானைப் பிளந்தது. இச்சத்தம் அங்கிருந்தோரையெல்லாம் செவிடாக்கியது; மசூதியே நடுங்கி ஆடுவதைப் போலத் தோன்றியது.
 
     உச்சஸ்வரத்தில் பாபாவினுடைய குரல் மலைப்பள்ளத்தாக்கின் எதிரொலி­யைப்போல் மசூதிகளின் மூலமாகவும் கோயில்களின் மூலமாகவும் முழங்கியது. உடனே மேகங்கள் இடிப்பதை நிறுத்தின; மழையும் அடங்கியது. 
     பாபாவினுடைய கர்ஜனை ஸபாமண்டபத்தையே உலுக்கியது. பக்தர்கள் திகைத்துப்போய், எங்கு இருந்தனரோ அங்கேயே அசைவற்று நின்றனர். 
     பாபாவினுடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ. மழை குறைந்தது; சூறாவளிக் காற்று நின்றது; மேகமூட்டமும் பார்வையை மறைத்த நீராவிப்படலமும் கலைந்தன.
 
     படிப்படியாக மழை குறைந்தது; ஊதல் காற்று அடங்கியது; அந்த நேரத்தில் வானத்தின் கருமை மறைந்து, நக்ஷத்திரக் கூட்டங்கள் தெரிய ஆரம்பித்தன. 
     சிறிது நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிட்டது; காற்று மந்தமாகியது; வானத்தில் நிலா தோன்றியது; சகலரும் ஆனந்தமடைந்தனர்.
 
     இந்திரனுக்குக் கருணை பிறந்தது போலும்õ மேலும், ஒரு ஞானியினுடைய ஆணைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமன்றோ? ஆகவே, மேகங்கள் பலதிசைகளில் சிதைந்து ஓடின. புயலுக்குப்பின் அமைதி நிலவியது.
 
      மழை முழுக்க நின்றுவிட்டது; இதமான காற்று வீச ஆரம்பித்தது; வானத்தின் உறுமல்கள் சுத்தமாய் நின்றுவிட்டன. பறவைகளும் மிருகங்களும் தைரியமடைந்தன.
 
      வீடுகளின் சார்ப்புகளில் ஒண்டிக்கொண்டிருந்த ஆடுமாடுகள் குட்டிகளுடனும் கன்றுகளுடனும் வெளியே வந்து தைரியமாகவும் சுதந்திரமாகவும் உலாவின. பறவைகள் வானத்தில் உயரப் பறந்தன. 
      பயங்கரமான இந்நிகழ்ச்சியை அனுபவித்த மக்கள், பாபாவினுடைய உபகாரத்திற்கு மனதார நன்றி தெரிவித்துவிட்டுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர். உறுதியான சமநிலையை அடைந்த ஆடுமாடுகள் கால்போனபோக்கில் நடமாடின. 
      இவ்விதமாக, இந்த ஸாயீ தயையே உருவானவர். தாய் தன் 


குழந்தையின்மீது செலுத்தும் பாசத்தைப் போன்று அவர் பக்தர்களின்மீது 

செலுத்தும் பாசம் மிக உயர்ந்ததுõ அதுபற்றித் திருப்தியான அளவிற்கு நான் 

எவ்வாறு பாடுவேன்? 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Sunday, November 24, 2013

முழு முதற்பொருளே பாபா!

             
              பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியது. ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; பு­லியும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவிவந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைக்குகந்த புக­டம் அவர். 
     செவிமடுப்பவர்களே! ஸாயீ எப்படி வாழ்ந்தார்? எங்கு உறங்கினார்? என்பனபற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவே.
      நான்கு முழம் நீளமும் ஒரு சாண் அகலமுமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களி­ருந்தும் கந்தைத் துணிகளால் பிணைக்கப்பட்டு தூலத்தி­ருந்து ஓர் ஊஞ்சலைப்போல் தொங்கவிடப்பட்டிருந்தது. 

      அந்தப் பலகையின்மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது. 
        அப்பலகையின்மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார்; அல்லது உறங்கிக்கொண்டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின்மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.
      பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கப்பட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவைத் தாங்கியது? அஷ்டமகாசித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால், பலகை எல்லாம் பெயரளவுக்குத்தானே.

ஸ்ரீ சாயிசத்சரித்திரத்திலிருந்து

ஸித்திக் பாலகே


கல்யாணில் வசித்த ஸித்திக் பாலகே என்ற முஸ்லீம், மெக்கா-மெதினா யாத்திரையை முடித்தவுடன் சிர்டீக்கு ஒருமுறை வந்தார். 
     வயது முதிர்ந்த இந்த ஹாஜி வடக்கு நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது. 
      நேரம் இன்னும் பழுக்கவில்லை; மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகளனைத்தும் வீண்; அலுப்பையும் சலி­ப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளைக் கையாண்டும், பாபா அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்துவிட்டார். 
     மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹஸியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஸித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை.
 
     பாலகே மனமுடைந்து போனார். ''மசூதியின் படிகளிற்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னே. நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையே. எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடையச் செய்து அவரருளைப் பெறமுடியும்?” இவ்வெண்ணமே பாலகேயின் மனத்தை இரவும் பகலும் ஒரு வியாதியைப்போல் வாட்டியது.
 
     ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், ''சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும்.
    ''நந்திதேவரை முத­ல் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?”  பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றியது.
     மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, கதை கேட்பவர்களுக்கு இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டக் கூற்றாகத் தெரியலாம். ஆனால், சிர்டீக்கு பாபா தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது. 
     பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரவம் ஏதுமில்லாமலும் பேசவேண்டுமென்று நினைத்தவர்கள், மாதவராவையே முத­ல் அழைத்துக்கொண்டு சென்றனர்.
 
     மாதவராவ் முத­லில் மெல்லி­ய குர­லில் இனிமையாக யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பதுபற்றி இதமாக அறிமுகப்படுத்துவார். ஸமர்த்த ஸாயீ இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார். 
      இதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, ''என்னுடைய மனத்தி­ருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சினார். 
      தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, கஷ்டமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார்.
 
      மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். ''பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப்படுகிறாரே,  அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா?” என்று கேட்டார். 
      ''அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்றுவந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சிர்டீக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்கமுடிகிறது? , அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள்”.
      ''எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆன உடனே திரும்பிவிடுகிறார்கள். இவரைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப்போகச் செய்யவேண்டும்?”
      ''இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனத்துள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்­லிவிட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்றுவிடுவார்.    
  ''சாமா, நீ இன்னும் 'இன்று பிறந்த சிசுவாகவே இருக்கிறாய்; அல்லா அனுக்கிரஹம் அவருக்கு இல்லாவிட்டால் என்னால் என்ன செய்யமுடியும்? அல்லாமியாவிடம் கடன்படாதவர் எவராவது இந்த மசூதியின் படிகளில் ஏறமுடியுமா? இங்கிருக்கும் பக்கீரின் வழிமுறைகள் எந்த ஆராய்ச்சியாலும் அறிந்துகொள்ளமுடியாதவை; அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது.
      ''எது எவ்வாறு இருப்பினும், பாரவிக் கிணற்றுக்கப்பால் நேராகப் போகும் ஒற்றையடிப் பாதையில் அவர் ஜாக்கிரதையாக நடந்து வருவாரா என்று ஸ்பஷ்டமாகக் (தெளிவாகக்) கேள்.
      ஹாஜி சொன்னார், ''எவ்வளவு சிரமமான செயலாக இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக நடந்து வருவேன். எனக்கும் பிரத்யக்ஷமாகப் பேட்டி அளியுங்கள். உங்களுடைய பொற்பாதங்களினருகில் அமர என்னை அனுமதியுங்கள்.
     இந்தப் பதிலை சாமாவிடமிருந்து கேட்டபிறகு பாபா சொன்னார், ''மேற்கொண்டு அவரை, நான்கு தவணைகளில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவாரா என்று கேள்.
      இந்தச் செய்தியைச் சொன்ன மாதவராவிற்கு ஹாஜி பதிலுரைத்தார், ''என்ன கேள்வி கேட்கிறீர்? பாபா கேட்டால் நான் நாற்பது லட்சங்களும் கொடுப்பேன்; ஆயிரங்களைப் பற்றிய கதை என்ன?”
      பாபா இதைக் கேட்டுவிட்டு மேலும் சொன்னார், ''இன்று மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப்போகிறோம். எந்தப் பகுதி மாமிசம் அவருக்கு வேண்டுமெனக் கேள்.
      ''மாமிசம் சேர்ந்த எலும்புகள் வேண்டுமா? அல்லது அவர் கொட்டைகளின்மீது மனத்தை வைத்திருக்கிறாரா? போ, அவருக்கு எது வேண்டுமென்று நிச்சயமாக அந்தக் கிழவரைக் கேட்டுக்கொண்டு வா.
     மாதவராவ் பாபாவினுடைய செய்தியை முழுமையாக ஹாஜிக்குத் தெரிவித்தார். ஹாஜி திட்டவட்டமாகப் பதிலுரைத்தார், ''எனக்கு அதில் எதுவுமே வேண்டா.
      ''ஏதாவது எனக்குக் கொடுக்கவேண்டுமென்று பாபாவுக்கு எண்ணமிருந்தால், எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. அவருடைய கொலம்பாவி­ருந்து (சோற்றுப்பானை) ஒருபிடி உணவு கிடைத்தால் என்னை மஹா பாக்கியசாலி­யாகக் கருதுவேன்.
      மாதவராவ் ஹாஜியினுடைய பதிலை பாபாவுக்குத் தெரிவித்தார். பாபா இதைக் கேட்டவுடனே கடுங்கோபம் கொண்டார். 
     கொலம்பாவையும் குடிநீர்ப்பானைகளையும் கதவு வழியாக வெளியே எடுத்தெறிந்தார். ஆக்ரோஷமாகத் தம்முடைய கைகளைக் கடித்துக்கொண்டு வெளியே வந்து ஹாஜியின் அருகில் நின்றார். 
     கப்னியை இரண்டு கைகளால் பிடித்து ஹாஜிக்கு எதிரில் கப்னியைத் தூக்கிக்கொண்டு நின்று, அவர் சத்தம்போட்டார், ''நீர் உம்மை என்னவென்று நினைத்துக்கொண்டு என்முன்னே கர்வம் காட்டுகிறீர்?”
      ''உம்முடைய வயோதிக ஞானத்தை டம்பமடிக்கிறீரா? இப்படித்தான் உம்முடைய குர்ஆனைப் படித்தீரா? மெக்காவுக்கும் மெதினாவுக்கும் புனிதயாத்திரை சென்றது இதற்காகத்தானா?”  பாபா கன்னாபின்னாவென்ற வார்த்தைகளால் அவரை வசை மொழிந்து கடிந்து கொண்டார். ஹாஜி திகைத்துச் செயலற்றுப் போய்விட்டார். பாபா திரும்பிச் சென்றுவிட்டார்.
      மசூதியின் முற்றத்தினுள் நுழையும்போது தோட்டத்துப் பெண்கள் சிலர் மாம்பழம் விற்பதைப் பார்த்தார். அவர்களிடமிருந்த பழக்கூடைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி ஹாஜிக்கு அனுப்பிவைத்தார்.
     உடனே திரும்பி, மறுபடியும் பாலகேயிடம் சென்று, ஐம்பத்தைந்து ரூபா எடுத்து ஒவ்வொன்றாக ஹாஜியின் கையில் எண்ணினார் (கொடுத்தார்). 
     இதற்குப் பிறகு இவ்விருவர்களிடையே பிரேமை வளர்ந்தது. ஏற்கெனவே நடந்ததையெல்லாம் இருவருமே முற்றிலும் மறந்துவிட்டதைப்போல, ஹாஜி விருந்துக்கு அழைக்கப்பட்டார். ஹாஜி மகிழ்ச்சியில் திளைத்தார்.
 

     சிலநாள்களுக்குப் பிறகு, ஹாஜி சிர்டீயை விட்டுச் சென்றுவிட்டார்; ஆனால், மறுபடியும் திரும்பிவந்தார். பாபாவின்மீது மேலும் மேலும் பிரேமை கொண்டார். அதற்குப் பிறகும் பாபா அவருக்கு அவ்வப்போது பணம் கொடுப்பதைத் தொடர்ந்தார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...