Monday, November 25, 2013

ஸாயீ தயையே உருவானவர்

இடிக்கும் மின்னலுக்கும் அதிபதியும் மேகங்களின்மீது ஆட்சிசெலுத்துபவருமான இந்திரனை ஒருமுறை பாபா தொழுததைக் கண்டு நான் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டேன். 
      மிகப் பயங்கரமான நேரம் அது; வானம் முழுவதும் மேகமூட்டத்தால் கறுத்துவிட்டது. பறவைகளும் மிருகங்களும் பயத்தால் நடுங்கின. ஆக்கிரோஷமான சூறைக்காற்றுக்குப் பின், பலத்த மழை பொழிய ஆரம்பித்தது.   அது சூரியன் அஸ்தமித்துவிட்ட முன்னிரவு நேரம். திடீரென்று சுழற்காற்று அடித்து பலமாகச் சத்தமிட்டபோது எங்கும் ஒரே கலவரமாக இருந்தது.      இது போதாதென்று மேகங்கள் இடித்துக் கர்ஜித்தன; மின்னல்கள் பளபளத்தன; சூறைக்காற்று மேலும் மேலும் சீறியது; பின்னர் கனத்த மழை பொழிந்தது.   மேகங்கள் கொட்டோகொட்டென்று கொட்டின; ஆலங்கட்டி பெரியதாகவும் வேகமாகவும் விழுந்தது. சிர்டீ கிராமமக்கள் அனைவரும் என்ன நேருமோ என்று பீதியடைந்தனர்; ஆடுமாடுகள் பரிதாபமாகக் கதறின. 
      மசூதியின் சார்ப்பில் ஆண்டிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கினர்; மாடுகளும் கன்றுகளும் அங்கு வந்து குழுமினõ மசூதியில் இடமில்லை. 
தண்ணீர், தண்ணீர், தண்ணீர், எங்கே பார்த்தாலும் தண்ணீர் மழை பொழிந்த வேகத்தில் வைக்கோல் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டது. அறுத்துக் கட்டுக்கட்டிக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தானியங்களெல்லாம் முழுக்க நனைந்து போயின. ஜனங்களிடையில் பீதியும் அமளியும் நிலவியது.
  கிராமமக்கள் பயத்தால் நடுநடுங்கி ஸபாமண்டபத்தில் நெருக்கியடித்தனர். சிலர் பாதுகாப்புக்காக மசூதியின் சார்ப்புகளின் கீழே நின்றனர். அவர்களனைவரும் பாபாவை வேண்டிக்கொள்வதற்காகவே வந்திருந்தனர். 
     ஜோகாயி, ஜாகாயி, மாரியாயி, சனி, சங்கர், அம்பாபாயி, மாருதி, கண்டோபா, மஹால்ஸாபதி -- இந்தத் தெய்வங்களெல்லாம் சிர்டீயில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு இடத்தில் இருந்தன.
 
     ஆனால் ஆபத்துக்காலத்தில் கிராம மக்களுக்கு இந்த தேவதைகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களுடைய நடமாடும் தெய்வமான ஸாயீயே ஆபத்துநேரத்தில் அவர்களை மீட்பதற்காக ஓடிவந்தார். 
     அவருக்குக் கோழியோ ஆடோ பலி­யிடத் தேவையில்லை; பணமும் ஸமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காகவுமே அவர் பசி கொண்டார். அதன்பிறகு, அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்துபோயின. 
      மக்கள் எவ்வளவு அதிர்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்தபோது மஹராஜினுடைய இதயம் கருணையால் உருகியது. தம்முடைய ஆசனத்தைவிட்டு எழுந்து, மசூதியின் வாசல் விளிம்பிற்கு வந்து நின்றுகொண்டார். 
      வானம் இடித்தது; மின்னல்கள் பளபளத்தன. இதன் நடுவே ஸாயீமஹராஜ் பலம் கொண்டமட்டும் தம்முடைய குரலை உச்சஸ்வரத்திற்கு உயர்த்தி கர்ஜித்தார்.
 
     ஸாதுக்களுக்கும் ஞானிகளுக்கும் தங்களுடைய உயிரைக் காட்டிலும் பக்தர்களுடைய உயிரே பெரிது. அவர்களுடைய விருப்பப்படியேதான் தேவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்காக தேவர்களும் பூமிக்கு இறங்கி வருகின்றனர். 
     பக்தர்கள் உதவிநாடி வேண்டும்போது, தேவர்களும் பக்தர்களுடைய ஈடுபாட்டை ஞாபகப்படுத்திக்கொண்டு அவர்களுக்காகப் பரிந்து ஓடிவந்து காப்பாற்றவேண்டும். 
     கர்ஜனைக்கு மேல் கர்ஜனை பயங்கரமாக வானைப் பிளந்தது. இச்சத்தம் அங்கிருந்தோரையெல்லாம் செவிடாக்கியது; மசூதியே நடுங்கி ஆடுவதைப் போலத் தோன்றியது.
 
     உச்சஸ்வரத்தில் பாபாவினுடைய குரல் மலைப்பள்ளத்தாக்கின் எதிரொலி­யைப்போல் மசூதிகளின் மூலமாகவும் கோயில்களின் மூலமாகவும் முழங்கியது. உடனே மேகங்கள் இடிப்பதை நிறுத்தின; மழையும் அடங்கியது. 
     பாபாவினுடைய கர்ஜனை ஸபாமண்டபத்தையே உலுக்கியது. பக்தர்கள் திகைத்துப்போய், எங்கு இருந்தனரோ அங்கேயே அசைவற்று நின்றனர். 
     பாபாவினுடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ. மழை குறைந்தது; சூறாவளிக் காற்று நின்றது; மேகமூட்டமும் பார்வையை மறைத்த நீராவிப்படலமும் கலைந்தன.
 
     படிப்படியாக மழை குறைந்தது; ஊதல் காற்று அடங்கியது; அந்த நேரத்தில் வானத்தின் கருமை மறைந்து, நக்ஷத்திரக் கூட்டங்கள் தெரிய ஆரம்பித்தன. 
     சிறிது நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிட்டது; காற்று மந்தமாகியது; வானத்தில் நிலா தோன்றியது; சகலரும் ஆனந்தமடைந்தனர்.
 
     இந்திரனுக்குக் கருணை பிறந்தது போலும்õ மேலும், ஒரு ஞானியினுடைய ஆணைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமன்றோ? ஆகவே, மேகங்கள் பலதிசைகளில் சிதைந்து ஓடின. புயலுக்குப்பின் அமைதி நிலவியது.
 
      மழை முழுக்க நின்றுவிட்டது; இதமான காற்று வீச ஆரம்பித்தது; வானத்தின் உறுமல்கள் சுத்தமாய் நின்றுவிட்டன. பறவைகளும் மிருகங்களும் தைரியமடைந்தன.
 
      வீடுகளின் சார்ப்புகளில் ஒண்டிக்கொண்டிருந்த ஆடுமாடுகள் குட்டிகளுடனும் கன்றுகளுடனும் வெளியே வந்து தைரியமாகவும் சுதந்திரமாகவும் உலாவின. பறவைகள் வானத்தில் உயரப் பறந்தன. 
      பயங்கரமான இந்நிகழ்ச்சியை அனுபவித்த மக்கள், பாபாவினுடைய உபகாரத்திற்கு மனதார நன்றி தெரிவித்துவிட்டுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர். உறுதியான சமநிலையை அடைந்த ஆடுமாடுகள் கால்போனபோக்கில் நடமாடின. 
      இவ்விதமாக, இந்த ஸாயீ தயையே உருவானவர். தாய் தன் 


குழந்தையின்மீது செலுத்தும் பாசத்தைப் போன்று அவர் பக்தர்களின்மீது 

செலுத்தும் பாசம் மிக உயர்ந்ததுõ அதுபற்றித் திருப்தியான அளவிற்கு நான் 

எவ்வாறு பாடுவேன்? 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...