Sunday, November 24, 2013

ஸித்திக் பாலகே


கல்யாணில் வசித்த ஸித்திக் பாலகே என்ற முஸ்லீம், மெக்கா-மெதினா யாத்திரையை முடித்தவுடன் சிர்டீக்கு ஒருமுறை வந்தார். 
     வயது முதிர்ந்த இந்த ஹாஜி வடக்கு நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது. 
      நேரம் இன்னும் பழுக்கவில்லை; மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகளனைத்தும் வீண்; அலுப்பையும் சலி­ப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளைக் கையாண்டும், பாபா அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்துவிட்டார். 
     மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹஸியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஸித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை.
 
     பாலகே மனமுடைந்து போனார். ''மசூதியின் படிகளிற்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னே. நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையே. எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடையச் செய்து அவரருளைப் பெறமுடியும்?” இவ்வெண்ணமே பாலகேயின் மனத்தை இரவும் பகலும் ஒரு வியாதியைப்போல் வாட்டியது.
 
     ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், ''சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும்.
    ''நந்திதேவரை முத­ல் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?”  பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றியது.
     மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, கதை கேட்பவர்களுக்கு இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டக் கூற்றாகத் தெரியலாம். ஆனால், சிர்டீக்கு பாபா தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது. 
     பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரவம் ஏதுமில்லாமலும் பேசவேண்டுமென்று நினைத்தவர்கள், மாதவராவையே முத­ல் அழைத்துக்கொண்டு சென்றனர்.
 
     மாதவராவ் முத­லில் மெல்லி­ய குர­லில் இனிமையாக யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பதுபற்றி இதமாக அறிமுகப்படுத்துவார். ஸமர்த்த ஸாயீ இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார். 
      இதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, ''என்னுடைய மனத்தி­ருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சினார். 
      தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, கஷ்டமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார்.
 
      மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். ''பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப்படுகிறாரே,  அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா?” என்று கேட்டார். 
      ''அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்றுவந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சிர்டீக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்கமுடிகிறது? , அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள்”.
      ''எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆன உடனே திரும்பிவிடுகிறார்கள். இவரைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப்போகச் செய்யவேண்டும்?”
      ''இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனத்துள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்­லிவிட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்றுவிடுவார்.    
  ''சாமா, நீ இன்னும் 'இன்று பிறந்த சிசுவாகவே இருக்கிறாய்; அல்லா அனுக்கிரஹம் அவருக்கு இல்லாவிட்டால் என்னால் என்ன செய்யமுடியும்? அல்லாமியாவிடம் கடன்படாதவர் எவராவது இந்த மசூதியின் படிகளில் ஏறமுடியுமா? இங்கிருக்கும் பக்கீரின் வழிமுறைகள் எந்த ஆராய்ச்சியாலும் அறிந்துகொள்ளமுடியாதவை; அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது.
      ''எது எவ்வாறு இருப்பினும், பாரவிக் கிணற்றுக்கப்பால் நேராகப் போகும் ஒற்றையடிப் பாதையில் அவர் ஜாக்கிரதையாக நடந்து வருவாரா என்று ஸ்பஷ்டமாகக் (தெளிவாகக்) கேள்.
      ஹாஜி சொன்னார், ''எவ்வளவு சிரமமான செயலாக இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக நடந்து வருவேன். எனக்கும் பிரத்யக்ஷமாகப் பேட்டி அளியுங்கள். உங்களுடைய பொற்பாதங்களினருகில் அமர என்னை அனுமதியுங்கள்.
     இந்தப் பதிலை சாமாவிடமிருந்து கேட்டபிறகு பாபா சொன்னார், ''மேற்கொண்டு அவரை, நான்கு தவணைகளில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவாரா என்று கேள்.
      இந்தச் செய்தியைச் சொன்ன மாதவராவிற்கு ஹாஜி பதிலுரைத்தார், ''என்ன கேள்வி கேட்கிறீர்? பாபா கேட்டால் நான் நாற்பது லட்சங்களும் கொடுப்பேன்; ஆயிரங்களைப் பற்றிய கதை என்ன?”
      பாபா இதைக் கேட்டுவிட்டு மேலும் சொன்னார், ''இன்று மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப்போகிறோம். எந்தப் பகுதி மாமிசம் அவருக்கு வேண்டுமெனக் கேள்.
      ''மாமிசம் சேர்ந்த எலும்புகள் வேண்டுமா? அல்லது அவர் கொட்டைகளின்மீது மனத்தை வைத்திருக்கிறாரா? போ, அவருக்கு எது வேண்டுமென்று நிச்சயமாக அந்தக் கிழவரைக் கேட்டுக்கொண்டு வா.
     மாதவராவ் பாபாவினுடைய செய்தியை முழுமையாக ஹாஜிக்குத் தெரிவித்தார். ஹாஜி திட்டவட்டமாகப் பதிலுரைத்தார், ''எனக்கு அதில் எதுவுமே வேண்டா.
      ''ஏதாவது எனக்குக் கொடுக்கவேண்டுமென்று பாபாவுக்கு எண்ணமிருந்தால், எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. அவருடைய கொலம்பாவி­ருந்து (சோற்றுப்பானை) ஒருபிடி உணவு கிடைத்தால் என்னை மஹா பாக்கியசாலி­யாகக் கருதுவேன்.
      மாதவராவ் ஹாஜியினுடைய பதிலை பாபாவுக்குத் தெரிவித்தார். பாபா இதைக் கேட்டவுடனே கடுங்கோபம் கொண்டார். 
     கொலம்பாவையும் குடிநீர்ப்பானைகளையும் கதவு வழியாக வெளியே எடுத்தெறிந்தார். ஆக்ரோஷமாகத் தம்முடைய கைகளைக் கடித்துக்கொண்டு வெளியே வந்து ஹாஜியின் அருகில் நின்றார். 
     கப்னியை இரண்டு கைகளால் பிடித்து ஹாஜிக்கு எதிரில் கப்னியைத் தூக்கிக்கொண்டு நின்று, அவர் சத்தம்போட்டார், ''நீர் உம்மை என்னவென்று நினைத்துக்கொண்டு என்முன்னே கர்வம் காட்டுகிறீர்?”
      ''உம்முடைய வயோதிக ஞானத்தை டம்பமடிக்கிறீரா? இப்படித்தான் உம்முடைய குர்ஆனைப் படித்தீரா? மெக்காவுக்கும் மெதினாவுக்கும் புனிதயாத்திரை சென்றது இதற்காகத்தானா?”  பாபா கன்னாபின்னாவென்ற வார்த்தைகளால் அவரை வசை மொழிந்து கடிந்து கொண்டார். ஹாஜி திகைத்துச் செயலற்றுப் போய்விட்டார். பாபா திரும்பிச் சென்றுவிட்டார்.
      மசூதியின் முற்றத்தினுள் நுழையும்போது தோட்டத்துப் பெண்கள் சிலர் மாம்பழம் விற்பதைப் பார்த்தார். அவர்களிடமிருந்த பழக்கூடைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி ஹாஜிக்கு அனுப்பிவைத்தார்.
     உடனே திரும்பி, மறுபடியும் பாலகேயிடம் சென்று, ஐம்பத்தைந்து ரூபா எடுத்து ஒவ்வொன்றாக ஹாஜியின் கையில் எண்ணினார் (கொடுத்தார்). 
     இதற்குப் பிறகு இவ்விருவர்களிடையே பிரேமை வளர்ந்தது. ஏற்கெனவே நடந்ததையெல்லாம் இருவருமே முற்றிலும் மறந்துவிட்டதைப்போல, ஹாஜி விருந்துக்கு அழைக்கப்பட்டார். ஹாஜி மகிழ்ச்சியில் திளைத்தார்.
 

     சிலநாள்களுக்குப் பிறகு, ஹாஜி சிர்டீயை விட்டுச் சென்றுவிட்டார்; ஆனால், மறுபடியும் திரும்பிவந்தார். பாபாவின்மீது மேலும் மேலும் பிரேமை கொண்டார். அதற்குப் பிறகும் பாபா அவருக்கு அவ்வப்போது பணம் கொடுப்பதைத் தொடர்ந்தார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...