Thursday, March 7, 2013

டாக்டருக்கு படிச்சா போதுமா?




ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணி புரிந்தார். அங்கு வந்த பக்தர் ஒருவர் அவரிடம், ‘ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
‘ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்’.
‘நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,’ என்றார் பக்தர்.
ராமகிருஷ்ணர் அவரிடம், ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘டாக்டர்’, என்றார் வந்தவர்.
‘அப்படியானால், இப்போதே என்னை டாக்டராக்குங்கள்...பார்க்கலாம்,’ என்றார் ராமகிருஷ்ணர்.
‘அதெப்படி, படித்தால் தானே டாக்டராக முடியும்,’ என்றார் வந்தவர்.
‘படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் ‘பக்தி’ என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள், காளி கண்ணுக்குத் தெரிவாள்’ என்றார் ராமகிருஷ்ணர்.

Wednesday, March 6, 2013

சாயி சகோதரி சஹானாவின் அனுபவம்



சாயி சகோதரி சஹானாவின் அனுபவம் இங்கே உங்களுக்காக:
எனது இளமைப்பருவங்களில் எனக்கு துறவிகள் என்றாலே அவர்கள் அனைவரும் போலிகள் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. உண்மையில் துறவிகள் யாரையும் நான் நம்புவதே கிடையாது. ஆனால் அந்த எண்ணத்தினை பாபா அவர்கள் மூன்று ஆண்டுகட்கு முன்னர் கிள்ளி எரிந்தார். 

என் அப்பாவின் நண்பர், அவரிடம் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி  அன்று பெங்களூரில் உள்ள பாபா கோயிலில் அன்னதானம் செய்ய மூவாயிரம் ரூபாயும், சேவைக்காக (அது என்ன சேவை என்று எனக்கு தெரியாது) முன்னூறு ரூபாயும் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் எங்களது நிதி நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை. அண்ணன் படிப்பு செலவிற்கே அப்பா திண்டாடி வந்த நேரமது. எனவே எனது அம்மாவும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அவ்வளவு பணம் அளிக்க குடும்ப சூழ்நிலை இடம் தராவிட்டாலும், பாபா மீதுள்ள பக்தியின் காரணமாக சிறிது இனிப்பாவது வாங்கி கோயிலில் வினியோகிக்க அம்மா முடிவு செய்தார். எனவே அதற்காக கோயிலுக்கு சென்ற போது அம்மா, குடும்ப சூழ்நிலைகளையும், பணம் பற்றாக்குறையினையும் பாபாவின் முன் வைத்து புலம்பியவர்,  இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபாவிற்கு தான் என்னவிதமாக பூஜை செய்ய இயலும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பூஜை முடிந்து பிரசாதம் வாங்க சென்ற எனது அப்பாவிடம் பாபாவின் கருணையினால் பிரசாதத்துடன் வியாழக்கிழமை விரதம் என்ற புத்தகம் கிடைத்தது. எனது அம்மாவிற்க்கு ஒரே மகிழ்ச்சி.
அடுத்த அற்புதமும் அவர்களுக்காக வெளியே காத்திருந்தது.
எனது தந்தை கோயிலுக்கு அருகே நிறுத்தியிருந்த வண்டியினை எடுக்கச் சென்றபோது வண்டி ஸ்டார்ட் ஆகாமல் தகராறு செய்துள்ளது. அப்போது இரவு 10 மணி, கடைகள் ஏதும் திறந்திருக்கவில்லை,  என்ன செய்வது என்று புரியாமல் அம்மாவும் அப்பாவும் திகைத்து நின்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஒரு வயதான மனிதன் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தவர், அப்பா அருகில் வந்து என்ன விஷயம் என்று கேட்டுள்ளார். எனது அப்பா விபரம் தெரிவித்தவுடன் வண்டியை அவரே பரிசோதித்து அதில் ஒரு பொருளினை மாற்றவேண்டும் என்றும் கூறியவர், அந்த பொருள் தன்னிடமே உள்ளதாகவும் சொல்லி சைக்கிளில் ஒரு துணியில் சுற்றியிருந்த அந்த  பொருளை எடுத்து மெழுகுவத்தி வெளிச்சத்தில் அவரே மாற்றியுள்ளார். இந்த சேவைக்கு அவர் கேட்ட கட்டணம் என்ன தெரியுமா.... ரூபாய் முன்னூறு(!).
மறுநாள் காலை எங்களிடம் இந்த விபரத்தை தெரிவித்த எனது அப்பா சொன்னது, பாபாவே வந்துதான் இந்த அற்புதத்தினை செய்தார் என்றுதான். நாங்களும் விபரம் அறிந்து,  அதுவும் வண்டிக்கு தேவையான ஒன்றினை அவரே கொண்டுவந்தது, அதுவும் அந்த ஒரு பொருள் மட்டுமே அந்த துணியில் இருந்தது. பாபாவே எங்களது தேவை அறிந்து கொண்டுவந்தது போல் இருந்தது.
அதுமட்டுமில்லை, மறுநாள் என் அப்பா மெக்கானிக்கிடம் சென்று நேற்று  வண்டி பழுதான விபரமும் பொருள் மாற்றிய விபரமும் தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட மெக்கானிக் சொன்னதுதான் அதை விட வியப்பானது. அந்த பொருள் கம்பெனியின் பெரிய  ஷோரூமில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்றும் இல்லாவிட்டால் கம்பெனிக்கே ஆர்டர் செய்தே வாங்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
பாபாவின் கருணையினை என்னவென்று சொல்வது... சொல்ல வார்த்தைகளே இல்லை...நன்றி..நன்றி..நன்றி.
கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வண்டி பிரச்சனை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களது வாழ்க்கைத்தரமும் ஓரளவு உயர்ந்துள்ளது.
இப்போது எனக்கு எல்லாமே பாபாதான்.

Tuesday, March 5, 2013

சாயி சத்சரித்திரம்

என் மகனிடம் சாயி சத்சரித்திரத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன். அவன் கேட்க மறுக்கிறான். இதை நிவர்த்தி செய்ய வழி கூறுங்கள்.
( பி. விவேகானந்தன், சேலம்)
பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் யாராக இருந்தாலும் ஞானிகளின் திவ்விய சரித்திரத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் எழும். இதைப் படிப்பது, கேட்பது,
பாராயணம் செய்வதன் மூலமாக நன்மை விளையும். மற்றபடி அப்புண்ணியம் வெளிப்பட இன்னும் காலமிருந்தாலும் இப்போதைக்குப் படிக்கமாட்டார்கள். ஆகவே, அதை
பாபாவின் பொறுப்பில் விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்.

*********************************************************************************

ஆன்மீகத்தில் போலிகள் நுழைவதை எப்படித் தடுப்பது?
(பி.கே. ஹரிஹரன், கோவை)
போலியாகாமல் இருப்பதுதான்.  நாம் சரியாக இருந்தால் ஆன்மீகத்திற்கு ஒரு போலி குறைந்திருக்கிறான் என்று அர்த்தம். இப்படியே எல்லோரும் நினைக்க ஆரம்பித்தால்
போலிகள் இருக்கமாட்டார்கள்.

சிறந்த வழிபாடு


கடவுள் வழிபாடு சிறந்ததா? சத்குருவை வழிபடுவது சிறந்ததா?
(கே. காண்டிபன், சென்னை - 33)

மேகா என்ற சிவ பக்தனை ராவ் பகதூர் சாடே என்ற பக்தர் சந்தித்தார். அவர்தான் பாபா முதலில் தோன்றிய இடத்தை விலைக்கு வாங்கி சாதே வாடா என்ற சத்திரத்தைக் கட்டியவர்.
இந்த ராவ் பகதூர் மேகாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?
நீர் சத்குருவிடம் பாதங்களை மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் (உடலாலும்) வழிபடுங்கள். நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜன்மத்தில் பரம மங்களங்களை அடைவீர் என்றார். குருவை வழிபடுவது இறைவனை வழிபடுவது ஆகும்.

Monday, March 4, 2013

விளம்பர யுக்தியா பக்தியா



பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் பாபாவை தொட்டுக் கும்பிட அனுமதிக்கிறீர்களே,  இது விளம்பரத்திற்காகவா? இல்லையெனில், சுவாமி விக்ரமூத்தைத் தொடுவது பாவம் என்பது தெரியாமல் செய்கிறீர்களா?
( கே.பி. சர்மா, சத்துவாச்சாரி வேலூர்)
 பாபாவுக்கு விளம்பரம் தேவையில்லை. நமக்கு சாயி தரிசனம் பத்திரிகை மூலம் போதிய அளவு விளம்பரம் இருக்கிறது. எனவே, புதிய விளம்பர நோக்கோடு இதைச் செய்வதில்லை.
மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றும்
அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
என்ற குறள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பக்தனின் அன்புக் குழந்தையான சாயியின் திருமேனியைத் தீண்டும் போதே பரவச உணர்வை பக்தன் அடைகிறான். அவரது வார்த்தைகளைப் படிக்கும்தோறும் கண்கள் நீரைச் சொறிகின்றன. அவற்றைக் கேட்கும்போதும் மயிர்க்கூச்செறிகிறார்கள்.
இப்படிப்பட்ட இன்பத்தைத் தடை செய்ய நான் விரும்புவதில்லை. பல இடங்களில் பெரிய ஆட்கள் வந்தால் தொடச் சொல்வதும், எளிய ஆட்களை தள்ளி நிற்க வைப்பதும் சாதாரணமாக நடக்கிறது. அந்த பாகுபாடுகள் இங்கே வேண்டாம் என்பதற்காக மட்டுமே அனைவரும் பாபாவைத் தொட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Friday, March 1, 2013

பாபா காப்பாற்றுவார்





ஐந்தாண்டுகளாக தீவிரமான சாயி பக்தை.  எங்கள் குடும்பத்தில் பாபா அருளால் பல அற்புதங்கள் நடந்துள்ளன. என் கணவருக்கு ரயில்வேயில் வேலை கிடைக்க முயற்சித்ததோடு, பாபாவிடமும் வேண்டிக்கொண்டோம். ஒரு வியாழன் அன்று என் கணவர் வேலைக்கான உத்தரவுடன் வந்தார். என்னே பாபாவின் கருணை, ஒரு வியாழன் அன்று பெரம்பூரில் ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பணமுள்ள பர்ஸ் மற்றும் செல்போனை மறதியாக வங்கியிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.  
ஓட்டேரியில் என் அக்கா வீட்டிற்கு வந்து, என் அக்காவிற்க்கு பணம் கொடுக்க தேடிய போதுதான் பர்ஸ் காணாமல் போனது தெரியவந்தது. அங்கிருந்து என் செல்லுக்கு போன் செய்தபோது முதலில் ரிங்க் போய் யாரும்
எடுக்கவில்லை. மறுபடியும் முயன்றபோது ஸ்விட்ச் ஆப் என்றது. ஆனாலும் நான் பாபா கைவிடமாட்டார் என்ற தீவிர நம்பிக்கையில் என் கணவரை போனில் அழைத்து வங்கிக்குப் போய் மேனேஜரைப் பார்த்துக்கேட்கச் சொன்னேன்.
என் கணவர் போய் கேட்டபோது, ஒரு அம்மா, ஒருவர் ஒரு பர்சை எடுத்ததை தான் பார்த்ததாகவும் அவரது அடையாளத்தையும் சொன்னார். அவர் வங்கிக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர் என்பதால் மேனேஜர் அவரை வரவழைத்துக் கேட்டார்.
முதலில் மறுத்த அவர், போலீசில் புகா ர் செய்வோம் என்று மேனேஜர் சொன்ன பிறகு, வீடு போய் வேறு ஒருவர் மூலம் பர்ஸ் மற்றும் போனை கொடுத்தனுப்பினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வியாழன் அன்று வெந்நீர் வைக்க உதவுகிற எலக்ட்ரிக் ராடு எடுத்து தண்ணீரில் போட்டு வெந்நீர் வைத்தோம். அதை அப்படியே ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வெந்நீரை மட்டும் எடுத்துவிட்டேன். எட்டு மணி முதல் பத்து மணி வரை மின்சாரம் இல்லாததால் நாங்கள் ஸ்விட்சை அணைக்காதது தெரியவில்லை.
காஸ் சிலிண்டர் மேல் கோணி வைத்து அதன் மேல் இந்த எலக்டிரிக் ராடை வைத்திருந்தோம். கணவரை அலுவலகத்திற்கும், மகளை பள்ளிக்கும் அனுப்பி விட்டு எப்போதும் போல வீனஸ் மார்க்கெட்டில் உள்ள சாயி பக்தர் வீட்டுக்கு பஜனைக்கு சென்றேன்.
பன்னிரண்டே முக்கால் மணிக்கு ஆரத்தி நடக்கும்போது எனக்கு பக்கத்து வீட்டிலிருந்து போன் வந்தது. ஆரத்தி நேரம் என்பதால் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டேன். அவர்கள் என் கணவரை அழைத்து வீட்டிலிருந்து புகை வருவதாகவும் உடனடியாக வரும்படியும் தகவல் சொல்ல,உடனே என் கணவர் வீட்டிற்கு வந்தபோது தெருவில் அக்கம் பக்கத்தில் கூட்டமாக இருந்தது. கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்றதும் ஒரே புகை மண்டலமாக
இருந்தது.
ராடு தகதகவென்று ஒரே சிகப்பாகவும், கோணி புகைந்துகொண்டும் இருந்தது. உடனே ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, ராடை தண்ணீரில் எடுத்துப் போட்டு, கோணி, பாய் அனைத்தையும் நீரில் நன்றாக நனைத்தார் என் கணவர்.
காஸ் சிலிண்டர் ஆனில் இருந்தாலும் எந்த ஒரு விபரீதமும் நடக்காமல் பாபா என் வீட்டையும் கணவரையும் காப்பாற்றி அற்புதம் செய்தார்.
எனக்கு நல்ல அன்பான கணவரையும் நல்ல பிள்ளையையும் கொடுத்த பாபாவுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள். இது நடந்த அடுத்த வியாழன் அன்றே குடும்பத்துடன் சீரடி சென்று பாபாவுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்து நல்ல தரிசனமும் செய்துவந்தோம்.
பாபாவை முழு மனதுடன் நம்பினால் இம்மாதிரி ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றி ரட்சிப்பார் என்பதை உறுதியாக உணர்கிறேன்.
-         சரஸ்வதி குமார்,
              செம்பியம்,
            பெரம்பூர்,
           சென்னை - 11

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...