Wednesday, March 6, 2013

சாயி சகோதரி சஹானாவின் அனுபவம்



சாயி சகோதரி சஹானாவின் அனுபவம் இங்கே உங்களுக்காக:
எனது இளமைப்பருவங்களில் எனக்கு துறவிகள் என்றாலே அவர்கள் அனைவரும் போலிகள் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. உண்மையில் துறவிகள் யாரையும் நான் நம்புவதே கிடையாது. ஆனால் அந்த எண்ணத்தினை பாபா அவர்கள் மூன்று ஆண்டுகட்கு முன்னர் கிள்ளி எரிந்தார். 

என் அப்பாவின் நண்பர், அவரிடம் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி  அன்று பெங்களூரில் உள்ள பாபா கோயிலில் அன்னதானம் செய்ய மூவாயிரம் ரூபாயும், சேவைக்காக (அது என்ன சேவை என்று எனக்கு தெரியாது) முன்னூறு ரூபாயும் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் எங்களது நிதி நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை. அண்ணன் படிப்பு செலவிற்கே அப்பா திண்டாடி வந்த நேரமது. எனவே எனது அம்மாவும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அவ்வளவு பணம் அளிக்க குடும்ப சூழ்நிலை இடம் தராவிட்டாலும், பாபா மீதுள்ள பக்தியின் காரணமாக சிறிது இனிப்பாவது வாங்கி கோயிலில் வினியோகிக்க அம்மா முடிவு செய்தார். எனவே அதற்காக கோயிலுக்கு சென்ற போது அம்மா, குடும்ப சூழ்நிலைகளையும், பணம் பற்றாக்குறையினையும் பாபாவின் முன் வைத்து புலம்பியவர்,  இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபாவிற்கு தான் என்னவிதமாக பூஜை செய்ய இயலும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பூஜை முடிந்து பிரசாதம் வாங்க சென்ற எனது அப்பாவிடம் பாபாவின் கருணையினால் பிரசாதத்துடன் வியாழக்கிழமை விரதம் என்ற புத்தகம் கிடைத்தது. எனது அம்மாவிற்க்கு ஒரே மகிழ்ச்சி.
அடுத்த அற்புதமும் அவர்களுக்காக வெளியே காத்திருந்தது.
எனது தந்தை கோயிலுக்கு அருகே நிறுத்தியிருந்த வண்டியினை எடுக்கச் சென்றபோது வண்டி ஸ்டார்ட் ஆகாமல் தகராறு செய்துள்ளது. அப்போது இரவு 10 மணி, கடைகள் ஏதும் திறந்திருக்கவில்லை,  என்ன செய்வது என்று புரியாமல் அம்மாவும் அப்பாவும் திகைத்து நின்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஒரு வயதான மனிதன் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தவர், அப்பா அருகில் வந்து என்ன விஷயம் என்று கேட்டுள்ளார். எனது அப்பா விபரம் தெரிவித்தவுடன் வண்டியை அவரே பரிசோதித்து அதில் ஒரு பொருளினை மாற்றவேண்டும் என்றும் கூறியவர், அந்த பொருள் தன்னிடமே உள்ளதாகவும் சொல்லி சைக்கிளில் ஒரு துணியில் சுற்றியிருந்த அந்த  பொருளை எடுத்து மெழுகுவத்தி வெளிச்சத்தில் அவரே மாற்றியுள்ளார். இந்த சேவைக்கு அவர் கேட்ட கட்டணம் என்ன தெரியுமா.... ரூபாய் முன்னூறு(!).
மறுநாள் காலை எங்களிடம் இந்த விபரத்தை தெரிவித்த எனது அப்பா சொன்னது, பாபாவே வந்துதான் இந்த அற்புதத்தினை செய்தார் என்றுதான். நாங்களும் விபரம் அறிந்து,  அதுவும் வண்டிக்கு தேவையான ஒன்றினை அவரே கொண்டுவந்தது, அதுவும் அந்த ஒரு பொருள் மட்டுமே அந்த துணியில் இருந்தது. பாபாவே எங்களது தேவை அறிந்து கொண்டுவந்தது போல் இருந்தது.
அதுமட்டுமில்லை, மறுநாள் என் அப்பா மெக்கானிக்கிடம் சென்று நேற்று  வண்டி பழுதான விபரமும் பொருள் மாற்றிய விபரமும் தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட மெக்கானிக் சொன்னதுதான் அதை விட வியப்பானது. அந்த பொருள் கம்பெனியின் பெரிய  ஷோரூமில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்றும் இல்லாவிட்டால் கம்பெனிக்கே ஆர்டர் செய்தே வாங்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
பாபாவின் கருணையினை என்னவென்று சொல்வது... சொல்ல வார்த்தைகளே இல்லை...நன்றி..நன்றி..நன்றி.
கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வண்டி பிரச்சனை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களது வாழ்க்கைத்தரமும் ஓரளவு உயர்ந்துள்ளது.
இப்போது எனக்கு எல்லாமே பாபாதான்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...