பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:
சமபாவம் உள்ளவராக இருக்கவேண்டும்:
பாபா ராமதாசியிடம், ”ஒரு ராமதாசிக்கு ’என்னுடையதுள’ என்ற எண்ணமே உதவாது. எதையும், எல்லாரையும் சமபாவணையாகப் பார்க்கவேண்டும்.” என்றார்.
அதாவது, ஒரு சாயி பக்தனுக்கு சுயநலம் இருக்கக்கூடாது என்கிறார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒருநாள் போகப்போகிறோம். அந்த நாள் இன்றாகவும் இருக்கலாம், நாளையாகவும் இருக்கலாம், நான்கு வருடங்கள் கழித்தோ, நாற்பது வருடங்கள் கழித்தோ வருவதாகவும் இருக்கலாம்.
நிரந்தரமானது எதுவுமில்லை. நன்மையோ, தீமையோ அவற்றுக்கு ஒரு முடிவு உண்டு. அது உன்னோடு முடிந்துவிடும். தொடராது. நல்லவை உனக்குப் பிறகும் தொடரவேண்டும், தீயவை உன்னோடு இன்றோடு முடிந்துவிடட்டும். இது எப்போது சாத்தியமாகும்? அனைத்தையும் சமமாகப் பார்க்கும்போது சாத்தியமாகும்.
நாங்கள் கோயில் கட்ட இடம் பார்த்தபோது, ஒரு தம்பி சொன்னார்் சார், நாங்கள் எஸ்.சி, எஸ்.டி வசிக்கிற பகுதி என்பதால் இங்கு கோயில் அமைவதை சிலர் விரும்பவில்லை. இதனால் வேறு விதமாக திசை திருப்புகிறார்கள்.. என்றார்.
இறைவனின் பார்வையில் எல்லோருமே எஸ்.சி. எஸ்.டி தான். அதாவது அவனது பட்டியலில் இடம் பெற்றவர்கள்தாம் நாம். பல ஜென்மங்களாக வந்து வந்து போகிற பழங்குடிகள் நாம். ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்திப் பார்ப்பது பாவம். பாபா
இதை அழகாகச் சொன்னார்: ”புலையனும் நானே, நோயாளியும் நானே, கருப்பு நாயும் நானே- நகரும் நகராப் பொருட்கள் அனைத்திலும் வியாபித்து இருப்பவனும் நானே”
ஆதிசங்கரர் ஒருநாள் கங்கையில் குளித்து விட்டு கோயிலுக்கு போய்க்கொண்டிருந்தார். புலாலை சுமந்தபடி நடந்த புலையன் ஒருவன் தற் செயலாக அவரைத் தொட்டுவிட்டான். அடே, என்ன அடாத செயல்? என்னை ஏன் தொட்டாய்? என அதட்டினார்.
அதற்கு அவன், ”ஆத்மாவை எதுவும் தொடமுடியாது. என்னை ஒதுங்கிப் போகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொன்னது எனது இந்த உடம்பையா? ஆத்மாவையா?” எனக் கேட்டான்.
ஆத்மாவில் மேலும் இல்லை. கீழும் இல்லை. இதை உணர்ந்துகொள்ள வேண்டும். சமபாவனை உணர்வு வர, சிந்திக்கவேண்டும். பாபா எல்லோரிடமும் உள்ளார். எல்லா நைவேத்தியத்தையும் சாப்பிடுகிறார். எல்லா குடிசைகளிலும் வசிக்கிறார். அருவருப்பான இடம் என அவருக்கு எதுவுமே இல்லை. அவருக்கே அப்படியென்றால், அவரது பக்தன் என்று சொல்லிக்கொள்கிற நான் எப்படியிருக்க வேண்டும்?
இப்படி நினைத்து சிறிது சிறிதாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment