Monday, May 5, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 1

Image

ஒருவர் சாயி பக்தராக வேண்டுமானால் பிரச்சினையை முன்னிறுத்தி பிரார்த்தனை செய்தால் போதும், ஒன்பது வார விரதமிருந்தால் போதும், சப்தாகம் எனப்படுகிற ஏழு தினங்களுக்குள் சாயியின் சத்சரித்திரத்தைப் படித்தால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள்.



இவையெல்லாம் நமது வேண்டுதல் நிறைவேறுவதற்கான நேர்த்திகளே!



பாபாவின் பக்தராக வேண்டுமானால் வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஒரு சில வழியை மட்டும் பார்க்கலாம்.



எப்போதும் அவரது நாமாவை ஜபிக்க வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மென்மையானவராக மாறவேண்டும். சமபாவம் உள்ளவராக இருக்கவேண்டும். ஆத்ம விசாரம் செய்யவேண்டும்.



இப்படி செய்தால்தான் ஒருவர் சாயி பக்தராக மாறமுடியும். இதற்கு ஆதாரம் இருக்கிறதா சாயி எனக் கேட்கலாம்.



சத்சரித்திரம் இருபத்தேழாம் அத்தியாயத்தில் இதற்கான பதில் இருக்கிறது.



பாபாவின் தீவிரமான பக்தரான சாமாவுக்கு அருள் செய்யவேண்டும் என்ற எண்ணமும், மசூதிக்கு வழக்கமாக வந்து ராமாயணம் படிக்கிற ராம பக்தரை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பாபா மனதில் எழுந்தது. அதற்காக ஓர் உபாயம் செய்தார் பாபா.



வழக்கமாக காலையில் ராமாயணத்தையும், விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த ராம பக்தரைக் கூப்பிட்டு, ”எனக்குத் தாங்கமுடியாத வயிற்றுவலி. குடலே வெடித்துவிடும் போலிருக்கிறது. சீக்கிரம் போய் பேதி மருந்து வாங்கிவாரும். ஒரு சிட்டிகை வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.



தான் படித்துக்கொண்டிருந்த பகுதியில் அடையாளம் வைத்துவிட்டு, ராமதாசி கடைக்குப்போனார். அவர் சென்றதும், இருக்கையிலிருந்து எழுந்துவந்து, அங்கிருந்த புத்தகங்களில் விஷ்ணு சகஸ்ர நாம புத்தகத்தை எடுத்து வந்த பாபா,



சாமாவிடம், அதன் பெருமையைச் சொன்னார், “ ”சாமா, இந்தப் புத்தகம் பரம மங்களத்தை அளிக்கக்கூடியது. நான் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டேன். உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்ட நிலையில், இதை எனது மார்பின் மீது வைத்துக்கொண்டேன். உடனே இதயப் படபடப்பு நீங்கி நலமடைந்தேன். இதை நீ வைத்துக்கொள்.. தினமும் ஒரு நாமாவைப் படித்து அதை தியானம் செய். உனக்கு மங்களம் உண்டாகும்” என்றார்.



அடுத்தவர் பொருளை வாங்க விரும்பாத சாமா, ”நான் இதைத் திருடிவிட்டதாக இந்த ராமதாசி சண்டை போடுவார். இது சமஸ்கிருதத்திலுள்ளது. எனக்கு உச்சரிப்பு சரியாக வராது” என மறுத்தார்.



ஆனால் பாபா வலுக்கட்டாயமாக அவரது கையில் அந்தப் புத்தகத்தைத் திணித்துவிட்டார். இந்த நேரத்தில் அங்குவந்த ராமதாசி, சாமாவின் மேல் கோபம் கொண்டு சண்டை போட்டார். பாபா அவர்களை சமாதானப்படுத்தினார். இந்த நிகழ்வின் போதுதான், பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளை இனி ஒவ்வொன்றாக இனி பார்ப்போம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...