Saturday, September 20, 2014

சாயி புத்ரன் பதில்கள்

vanamali

வனமாலி என்பதற்கு என்ன பொருள்?

(ஜி. முரளி, சென்னை)

பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைக்கு வன மாலை என்று பொருள். இதை அணிந்தவர் (மகா விஷ்ணு) வனமாலி.

சாயி புத்ரன் பதில்கள்

அஷ்டபந்தன பூசை என்பது என்ன?

(ஏ. செந்தில், பள்ளிப்பட்டு)

புதுமனை புகுவிழாவின்போது வீட்டின் எட்டு திசைகளிலும் அந்தந்த திசைக்குரிய திக்குப் பாலர்களின் பெயர்களைக் கூறி இரண்டிரண்டு பூக்களைப் போட்டு பூஜை செய்வது அஷ்டபந்தன பூஜை எனப்படும்.

சாயி புத்ரன் பதில்கள்

இறந்தவர்களை தெற்கு நோக்கி வைப்பது ஏன்?

(என். பாலு, காஞ்சிபுரம்)

தெற்கு திசை எமனுக்கு உரியது.  இறந்தவர் தலையை தெற்கு திசையில் வைத்து அந்த உடலை எமனுக்கு அர்ப்பணிப்பதாகச் செய்வதுதான் இறந்தவரின் தலையை தென் திசையில் வைத்துக் கிடத்துவதன் பொருள்.

Friday, September 19, 2014

எங்கள் வீடு மகான்கள் வந்து அருள் பாலித்த வீடு!

25128

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே என்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றுவேன். அவர்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று நமது சமர்த்த சத்குரு சாயி பாபா வாக்களித்தபடி இன்றும் நிறைவேற்றி வருகிறார்.



அதை அனுபவப்பூர்வமாகவும்,  ஸ்ரீ  சாயி தரிசனம் மூலமாகவும் புரிந்துகொள்ளலாம். பக்தர்களால் நினைக்கப்படும் சாயியின் ஓர் அம்சமாக, மற்றவர்களுக்காகவே தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்,



நம்மிடையே மனித உருவில் நடமாடிக் கொண்டு இருப்பவர் நம் மானசீக குரு  ஸ்ரீ  சாயி வரதராஜன்.  எனக்கு புதுப்பெருங்களத்தூர் வந்து பாபாவிடமும் சாயி வரதராஜனிடமும் ஆசி பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வர முடிவதில்லை.



ஆனால் வீட்டிலிருந்தபடியே, பாபாவை நினைத்துக்கொண்டும், மானசீக குருவான சாயி வரதராஜனை நமஸ்கரித்தும் சாயி நாம ஸ்மரணை செய்து கொண்டே நாளை ஆரம்பிப்பேன். கண் விழித்ததும் அன்றைய நாளை ஆரம்பிக்கும் முன் எனது வாய் தானாகவே சாயி ராம் என்று கூறிய பின்னர்தான் மற்ற ஸ்லோகங்களைக்கூறும். அதன் பிறகே வேலைகளை ஆரம்பிப்பேன்.



சாயி ராம் நாம ஸ்மரணை அந்தளவில் என் இரத்தத்தில் ஊறியிருப்பதற்குக் காரணம் ஸ்ரீ சாயி வரதராஜன்தான். அவருடைய சத்சங்கத்திற்கு என்னால் அதிக அளவு சென்று சேர்ந்துகொள்ள முடிவதில்லை. எனினும் அவருடைய இரண்டு மூன்று சத்சங்கத்தைக் கேட்டிருக்கிறேன். அதுவே என்னை இந்தளவுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்றால், அவரின் தினசரி சத்சங்கங்களில் பங்கேற்றால் நமது வாழ்க்கையே மாறிவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.



எளிமையான, ஆடம்பரமில்லாதவராக, எந்த பக்தர் வந்தாலும் அவர்களுக்கு மரியாதைக்கொடுத்து ஆறுதல் அளிப்பவர் அவர் என்பதை அனுபவித்து அறிந்திருக்கிறேன்.



அவர் மூலமாக எங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல என்றாலும், மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக சாயி வரதராஜன் எந்த வீட்டுக்கும்,  யார் நிகழ்ச்சிக்கும் போகமாட்டார் என்பதும், தன் சித்தப் போக்கில் போய்க்கொண்டிருப்பார் என்பதும் பலருக்கும் தெரிந்த விக்ஷயம்தான்.



ஒரு சமயம் எனது மாமாவுக்கு முதுகுத் தண்டில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அவர் முன்போல நடக்க வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன். அதைத் தொலை பேசியில் சாயி வரதராஜனிடம் தெரிவித்தபோது அழுதே விட்டேன்.



அதுவரை அவரை நேரில் பார்த்திராத போதும் அவர் ஆறுதல்கூறி, பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை என் மாமியிடம் கூறினேன். அவர் புதுப்பெருங்களத்தூர் சென்று, ஸ்ரீ சாயி வரதராஜனிடம், ”நான் உஷாவின் மாமி, என் கணவருக்குத்தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அவர் பழைய நிலைக்கு வர வேண்டும்”  என்று கோரிக்கை வைத்தார்.



அதை செவி கொடுத்து, பாபாவிடம் வேண்டி விபூதி ஜெபித்து அவர் நிச்சயம் விரைவில் நடப்பார் எனக் கூறி ஆசீர்வதித்தார். அதற்கேற்றார் போல், விரைவில் என் மாமா எழுந்து நடக்க ஆரம்பித்தார். சாயி பக்தர்கள் சாயி வரதராஜனை பாபாவாகவே நினைத்துக்கொண்டு (அதில் நானும் ஒருத்தி), அவர் காலடி அவரவர் வீட்டில் பட்டால் வீடே புண்ணிய ஷேத்திரமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைத்து வாழும் ஒரு பக்தரின் நிகழ்ச்சியைக் கூறுகிறேன். அவர் மூலமாக நானும் எங்கள் வீட்டவரும் பாக்கியசாலிகள் ஆனோம்.



எனக்குத் தெரிந்த ஒரு சாயி பக்தர் மிகவும் வயதானவர். மிகவும் முடியாமல், உடம்பு சரியில்லாத தால் அவரும் அவர் மனைவியும் ரொம்ப நாளாகவே சாயி வரதராஜன் நம் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முழு நம்பிக்கையோடு இருந்தார்கள்.



என்னிடம், சாயி வரதராஜனை நம் வீட்டிற்கு வருமாறு பிரார்த்தனை செய்யேன் என்று மிக நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் பாபாவை வேண்டி, இதை தொலை பேசிவாயிலாக சாயி வரதராஜனிடம் தெரிவித்தேன்.



நிலைமையை உணர்ந்துகொண்டு அவர், சரி, நங்க நல்லூர் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டார். இதை நான் நினைத்துக்கூட பார்க்கவே இல்லை. என்ன ஏற்பாடு செய்வது என்பது கூட தெரியவில்லை. அவரிடமே கேட்டபோது, ஒன்றும் செய்ய வேண்டாம், நான் வந்து பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறிவிட்டார்.



எனக்கும் எல்லாம் புதிதானதால், அந்த பக்தர் வீட்டில் பாபாவின் ஒரு சின்ன சிலை வைத்து அதில்



சிறிது பூ வைத்து அலங்கரித்திருந்தார்கள். எனக்குள் ஓர் ஆவல்  ஸ்ரீ சாயி வரதராஜன் வரப்போகிற அந்த பக்தர் வீட்டிலிருந்து நான் வசிக்கும் இடம் மூன்றாம் வீடு. என் தாயாருக்கும் நடக்க முடியாத நிலை. அவருக்கு  ஸ்ரீ  சாயியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அத்தனை வேலை பளுவில் அவர் வருகிறார்.. என் வீட்டிற்கும் வருவாரா? இப்போது வர ஒப்புக்கொண்டதே பெரிய விக்ஷயம்.. அதில் இந்த வேண்டுகோளை ஏற்பாரா என்ற ஐயம். இருந்தும் பாபாவிடம் கூறிவிட்டு, அவரிடம் ஓர் ஐந்து நிமிடமாவது என் வீட்டிற்கு வந்து ஆசி புரிய வேண்டும் என வேண்டினேன்.



ஒரு சாதாரண சாயி பக்தைக்காக மனம் உவந்து எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவருடன் ஸ்ரீ பாபா மாஸ்டர் அருணாச்சலம்,  ஸ்ரீ  சாயி கலியன், _ ஸ்ரீ சாயி வீரமணி அவர்களும் வந்து அருள் பாலித்தனர். எனக்கு ஆனந்தத்தில் என்ன கூறுவதென்றே தெரியவில்லை.



இன்றும் நினைத்தால் இனிமையாக இருக்கிறது.. எங்கள் வீடு நிஜமாகவே சிறந்த மகான்கள் வந்து அருள் பாலித்த வீடாகக் கருதுகிறேன்.



ஸ்ரீ சாயி வரதராஜன் கீரப்பாக்கம் பாபா கோயில் கட்டுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். முழுக்க முழுக்க அவருடன் இருந்து இந்த சேவையில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது,



ஆனால் இயலாமையால் முடிந்தவரை வீட்டிலிருந்தே அவருக்காக சேவை செய்கிறேன். அவர் நல்லபடியாக சீக்கிரம் கோயில் கட்ட ஆசி புரிய வேண்டும் என்று பிரார்த்தித்து வருகிறேன்..பாபாவும்  ஸ்ரீ சாயி வரதராஜனும் எனக்கு ஆசி புரிய வேண்டும்.



உஷா ரவிச்சந்திரன்,



நங்கநல்லூர்

Thursday, September 18, 2014

எங்கிருந்தாலும் என்னோடுதான் இருக்கிறாய்!

sai29

ஆலயத்தில் இறைவனைத் தேடுவது ஆரம்ப நிலை பக்தி. தனக்குள்ளேயே இறைவனைத் தேடுவது அடுத்த நிலை பக்தி. தானே இறைவனாக ஆவது மேலான பக்தி.



முதல் நிலை பக்திதான் நம்மில் எல்லோருக்கும் இருக்கும். அடுத்த நிலை வந்துவிட்டால் தனித்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.



தானே பூரணத்துவம் அடைந்தவர்களைத் தேடி, பூரணத்துவம் அடையாதவர்கள் செல்வது வழக்கம். இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறத்தான் செல்வார்கள்.



ஆனால், அமிதாஸ் என்ற பக்தர் பாபாவை தரிசிக்கச்சென்றதற்கு வேறு காரணம் இருந்தது. அவர் தீவிரமான கிருஷ்ண பக்தர். எப்போதும் ஹரிநாமாவைச் சொல்வதும், ஹரி பஜனை செய்வதுமாக இருப்பார். தனது பூஜைக்காக தன்னிடம் எப்போதும் ஒரு கிருஷ்ணர் போட்டோவை வைத்திருப்பார். அவர் தன்னுடைய பஜனையின் போது அந்தப் போட்டோவைப் பார்த்துக் கொள்வார்.



திடீரென அந்த போட்டோவில் கிருஷ்ணர் தெரியாமல் யாரோ ஒரு முஸ்லிம் துறவி தெரிவதை கவனித்தார். பஜனையை விட்டு போட்டோவைப்பார்த்தால் _ கிருஷ்ணர். பஜனை செய்து கொண்டே பார்த்தால் முஸ்லிம் துறவி.. அமிதாசுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..



யார் இந்த துறவி என்பதும் தெரியாமல் பல நாட்கள் தவித்தார். ஒரு வழியாக அவர் சீரடியில் வாழ்கிற பாபா என்பது தெரிந்து, அவரை தரிசிக்க வந்தார்.



பாபாவை தரிசித்த மாத்திரத்தில் கிருஷ்ணரும் இவரும் வேறு வேறு அல்லர் என்பதை உணர்ந்து கொண்டு பாபாவின் அருகிலேயே பல நாட்கள் தங்கினார். பல நாட்கள் பல மாதங்களானது. இதற்காக சீரடியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.



யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் அவர்களை பராமரிக்க, அமிதாசைத்தான் அனுப்பி வைப்பார் பாபா. தன் இதமான வார்த்தைகளாலும், மென்மை யான பராமரிப்பாலும் நோயாளிகளை கவனித்துக்கொள்வார் அமிதாஸ்.



அமிதாஸ் குஜராத்தி பிராமணர். சௌராஷ்டிராவில் கேத்வாட் ராஜ்யத்தில் பவ்நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். கற்பனை வளம் செறிந்த கவிஞர். பஜனையை இயற்றிப்பாடுவதில் கைதேர்ந்தவர். பாபாவுடன் வாழ்ந்தபோது, அவர் பாபாவை பூரணமான பரப்பிரம்மம் என்பதை உணர்ந்தார்.



அதை தனது தாய் மொழியைப் பேசும் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கவிதை நூலாகவும், உரை நூலாகவும் ஆக்கிக் கொடுத்தார். பாபாவின் வாழ்க்கை, அவரது பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு ஆகியவை பற்றி எழுதிய புத்தகத்துக்கு பூரண பரப்பிரம்மா ஸ்ரீ சத்குரு சாயிநாத் மகராஜ்னி என்று பெயர்.



இந்த பிராமணர், ஒரு முறை பாபாவிடம் மெதுவாக ஓர் ஆசையை வெளியிட்டார். அதாவது தான் கடைசி காலத்தில் சீரடியிலேயே இறக்கவேண்டும் என்ற ஆசையைக் கூறினார். அவரது அன்பால் உருகிப்போயிருந்த பாபா சொன்னார். ” நீ எங்கு இறந்தாலும் என்னோடுதான் இருப்பாய்! “ என்றார்.



இவர் சாயிக்கு சேவை செய்த படி சீரடியிலேயே தனது இறுதி மூச்சை நிறுத்தினார். லெண்டிபாக்கில் உள்ள பக்தர்கள் சமாதிகளில் இவருடையதும் ஒன்று . முக்தாராம் சமாதிக்கு அருகில் இவர் சமாதி கொண்டிருக்கிறார்.



நான் என்ற அகந்தையும், சுய நலமும் இறந்து போனால், நாம் எங்கிருந்தாலும் பாபாவுடன்தான் இருப்போம். அவருக்குச் செய்கிற தூய்மையான தொண்டு ஒன்றே நம்மை உலகியல் நிலைகளை தாண்டச் செய்து அவரோடு ஒன்றச் செய்து விடும்.

Wednesday, September 17, 2014

வாழ்க்கையைக் கற்றுக்கொள்!

25129

அன்புள்ள குழந்தாய்!
பலமுறை உனக்கு புத்தி சொல்லியும் நீ கேட்க மறுக்கிறாய். உன் மகளுக்குத் தற்போதுதான் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். இதற்குள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் ஏகப்பட்ட குறைகளை கூறுகிறாள்.
நீ, தவறு இழைத்துவிட்டதாக நினைத்து என்னிடம் முறையிடுகிறாய். நீ பார்த்து செய்த கல்யாணம்தானே பாபா, எதற்காக இப்படி என் குழந்தைக்கு நடக்கிறது? என என்னிடம் கேட்கிறாய்.
நீ கலங்குவதைப் பார்த்தால் மாப்பிள்ளை வீட்டார் கொடுமைக்காகவே பிறந்து வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. தவறு என் மீதும் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் மீதும் இல்லை. உன் மகள் மீது இருக்கிறது.
கல்யாணம் ஆன இரண்டு மூன்று மாதங்களிலேயே நிறைய பெண்கள் செய்கிற தவறு, தனது கணவன் தனது தாயார் பேச்சை கேட்கிறார், தனது நாத்தனார் பேச்சை மட்டும் கேட்டு, அவர்கள் சொல்கிற படிதான் நடக்கிறார். என்னை கண்டுகொள்வதில்லை.. இதனால் மனம் உடைந்து போகிறேன். மன இறுக்கத்தோடு இருக்கிறேன். ஒரு சாதாரண விருந்தாளி போல அங்கு தங்கியிருக்கிறேன். எனக்கு இவனோடு வாழப்பிடிக்கவில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள்.
மகளின் வாழ்க்கையை அவளது கணவன் குடும்பத்தார் கெடுக்கிறார்கள் என்று நினைத்து, மாப்பிள்ளையை அழைத்து பேசுவது, மகளிடம் கூறி பேசவைப்பது என செயல்படத் தொடங்கி பல பெண்களின் பெற்றோர், தங்கள் மகளின் வாழ்வை கெடுத்துவிடுகிறார்கள்.
ஒருவரைப் பற்றிய மதிப்பீடு மூன்று மாதங்களில் மட்டுமே என்ன தெரியவரும்? எடுத்தவுடனே மாமியார் வீட்டில் அரசாட்சி செய்யவேண்டும் என்று நினைப்பதும், கணவன் தான் சொன்னபடியெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், வாங்குகிற சம்பளத்திற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் இளம் பெண்ணின் எதிர்பார்ப்பு. இது தவறான எதிர்பார்ப்பு.
நேற்று வந்தவளுக்காக, தன்னை பெற்று வளர்த்தவர்களையும், கூடப் பிறந்தவர்களையும் எந்த ஆண் மகனும் இழந்துவிடத் தயாராக இருக்கமாட்டான். காலம் செல்லச் செல்லத்தான் பெற்றோரையும் தனது சுற்றத்தாரையும் மெல்ல மெல்ல தவிர்த்து மனைவிக்கு முக்கியத்துவம் தர ஆரம்பிப்பான்.
ஒரு குழந்தை பிறந்த பிறகு அல்லது ஓரிரு ஆண்டுகள் கழிந்த பிறகு மனைவியின் மீது தனிக் கரிசனம் தோன்ற ஆரம்பிக்கும். இதுதான் இயல்பாக நடந்து வருகிற விக்ஷயம். அதுவரை பெண் பொறுமை காக்கவேண்டும்.
பெற்றோராகட்டும், அக்காள் தங்கை போன்ற உறவுகளாகட்டும், தனது மகன் அல்லது தம்பி தன் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான விக்ஷயம். இதனால், அவர்கள் இவனிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று நினைப்பதும், தனது கணவனை அடிமையைப் போல வைத்திருக்கிறார்கள் என தானே ஒரு முடிவுக்கு வந்து அதற்காக அவனிடம் சண்டை போடுவதும், பிரச்சினையை வளர்ப்பதும் புதிய மனைவியாக ஒரு வீட்டுக்குப் போன உனது பெண் தன்னுடைய வாழ்வுக்கு தானே வைத்துக்கொள்ளும் உலை ஆகும்.
அக்காவோ, மாமாவோ, அண்ணனோ அல்லது அம்மாவோ யாராக இருந்தாலும் அந்த வீட்டுக்கு உன் மகளை விட முன்னே வந்தவர்கள். அவர்கள் பேச்சை அவன் இன்றுதான் புதிதாகக் கேட்கிறான் என்றில்லை.. ஏற்கனவே கேட்டுக்கொண்டுதான் வந்திருக்கிறான்.. இன்னும் கேட்பான்.. அப்படி கேட்டு நடப்பதுதான் அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் மனைவி பேச்சைக் கேட்டு, வீணாகிப்போய்விட்டான் என்ற பேச்சுக்கு அவன் ஆளாவதோடு, புதிய மனைவியின் கஷ்டத்திற்கும் அவன் காரணமாகிவிடுவான்.
நீ உனது மகளுக்காகப் புலம்புவதைப் போலவே உனது மருமகனின் தாயார் தனது மகளுக்காகப் புலம்பக்கூடாதா? அவளை வீட்டிற்குள் வைத்துப் பராமரிக்கக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கப்போகிறது? அவர்கள் இருப்பதால் உன் மகளுக்கு என்ன குறைவு வந்துவிட்டது? எதற்காக அவள் அவர்களை வெறுக்கவேண்டும்..
புதிதாக திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்குப்போகிற மருமகள், அந்தக் குடும்பத்தில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
தனது வீட்டுச் சூழல் வேறு, புதிதாகப் புகுந்து உள்ள வீட்டின் சூழல் வேறு என்பதைப் புரிந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. அப்படி செய்யாமல் தனக்கு ஏற்ப அனைவரும் மாறவேண்டும் என எதிர்பார்ப்பதும், திருமணமாகி வந்தவுடனே, தான்தான் புகுந்த வீட்டுக்கு உரிமைக்காரி, மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் போக வேண்டும் என நினைப்பதும் மிகவும் தவறுதலான விக்ஷயமாகும்.
திருமணமான புதிதில் கணவன் மனைவியிடம் நீ யாரையாவது விரும்பியிருக்கிறாயா எனக் கேட்பான். உடனே மனைவி, ஆமாம்.. நாலு பேரை விரும்பினேன்.. தப்பெல்லாம் செய்யவில்லை.. என்னை நாலு பேர் பார்த்தார்கள்.. நான்தான் பார்க்கவில்லை என்பதுபோல எதையேனும் சொல்லி வைத்தால், அது கணவனின் உள்மனதை பாதித்து, மனைவி மீது ஒரு சந்தேகத்தை வளர்க்கக் காரணமாக அமைந்துவிடும்.
பிற்காலத்தில் தன் மனைவி யாரிடமாவது பேசினாலோ, பழகினாலோ கணவன் தவறாக அவளைப் புரிந்துகொண்டு நடத்துவான். வாழ்க்கை கசந்துபோகும். இப்படியே, மனைவி கணவனிடம், திருமணத்திற்கு முந்தையை வாழ்க்கையைப் பற்றி கேட்டுக் கொண்டு, அதை வைத்தே கணவனை குத்திக்காட்டிக்கொண்டிருப்பாள். இதுவும் அவனது மனதை பாதித்து நிறைய பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும். ஆகவே, இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதைவிட இன்னும் சிரிப்பான விசயம் என்னவெனில், தன் கணவனுக்கு ஆண்மையே இல்லை என்பதுபோல சொல்லிக்கொண்டு சில புதிய பெண்கள், வாழ்க்கையைத் துறந்து தாய் வீடு வந்து விடுகிறார்கள்.
நாலு பேருக்குத் தெரியாமல் வைக்கிற இந்த விக்ஷயத்தை நாலு பேர் அறிய விவாதிக்க வேண்டுமா என நினைக்கலாம்! துவக்கத்தில் எல்லாருக்குமே இப்படித்தான் இருக்கும். அதை பழக்கத்தின் மூலமும், அனுசரணையின் மூலமும் தான் சரி செய்யவேண்டும் என்பதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்வதில்லை.
இவையெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் என்ற உண்மை இளம் பெண்ணுக்குத் தெரியாமல் போவது இயல்பு. ஆனால், பெண்ணைப் பெற்று வளர்த்து இவ்வளவு காலமாகக் குடும்பம் நடத்திய உனக்கும் தெரியாமல் போவதுதான் வேடிக்கை.
நான் உன் மகளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிவிட்டேன், புரிகிற விதத்தில் பேசிப் பார்த்து விட்டேன்..நான் அவளோடு இருப்பதை அவள் உணர மறுக்கிறாள்.. வாழ்க்கையைக் கற்றுத் தருவதை அவள் புரிந்துகொள்ளவில்லை. இதனால் உனது மகளின் எதிர்காலம்தான் கெடப்போகிறது. அதை எச்சரித்துத் தடுக்கவே இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேர், குழந்தை பெற்று அது பேசத்தொடங்கிய பிறகு, குழந்தைக்கு நல்ல குருவைத்தேடி அலைகிறார்கள். ஆனால், பிறந்த குழந்தையே பிறருக்கு குருவாக இருப்பதை பலர் அறிவது கிடையாது.
பிறந்த குழந்தையை யார் தூக்கினாலும் பேசாமல் அனைவரிடமும் செல்லும்.. எதையும் காதில் போட்டுக் கொள்ளாது.. எந்தப் பிரச்சினையிலும் தலையிடாது.. சிறிது வளர்ந்த பிறகு, யார் முதன்மையானவர் என்பதை உணர்ந்து அவர்களிடம் அதிக நெருக்கம் காட்டும். பிழைக்கத் தெரிந்த பிள்ளை, சமயத்திற்கு ஏற்ப அனைவரிடமும் ஒட்டிக்கொள்ளும்...
அவர்கள் ரசிக்கத் தக்க விதத்திலும், ஏற்கத் தக்க விதத்திலும் நடந்துகொள்ள முயற்சிக்கும். ஒவ்வொரு நொடியையும் பிறர் ரசிக்குமாறும்,தனக்கு முக்கியத்துவம் தருமாறும் குழந்தை பார்த்துக்கொள்ளும்.
பிறந்து அறிவு முதிர்ச்சியே இல்லாத ஒரு குழந்தைக்கு இருக்கிற இயற்கை அறிவுகூட, வளர்ந்து திருணமாகி வாழ்க்கைப் பட்ட பல பெண்களுக்கு இருப்பதில்லை என்பது வருத்தமான விக்ஷயம்.. போன உடனேயே மாமியாரைத் தள்ளிவைப்பது, நாத்தனாரைக் கொடுமைக்காரி என்பது, கணவன் விட்டில் பூச்சி போல பெற்றவர்களையும், அவனுக்கு உரியவர்களையும் சுற்றிச் சுற்றி வருகிறான், தனக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது போன்று நடக்கிறார்கள். இது வாழ்க்கைக்கு உகந்தது கிடையாது.
அனைவரது நல்லெண்ணத்தையும் சம்பாதித்த பிறகு, அந்த வீட்டில் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை புதிய பெண் தெரிந்துகொள்ள வேண்டும். கணவனின் சம்பாத்தியம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்கு முன், தான் என்னென்ன சம்பாதிக்க வேண்டும் என்பதை பெண்தான் முன்னதாக முடிவு செய்யவேண்டும்.
தன் மீது நல்ல அபிப்பிராயத்தை கணவன் வீட்டிலிருந்து சம்பாதிக்க வேண்டும்.. பிறரது அன்பை சம்பாதிக்கவேண்டும்.. குடும்பத்தில் மரியாதையை சம்பாதிக்க வேண்டும்.. பிறந்த வீட்டுக்குப் பெருமையை சம்பாதிக்க வேண்டும்..
இப்படி தனது குணத்தாலும் நடத்தையாலும் முதலில் சம்பாத்தியம் செய்த பிறகு, கணவனின் சம்பாத்தியத்தின் மீது கண் வைத்தால் அது உருப்படியாக நம் கைக்கு வரும் என்பதை பெண் புரிந்துகொள்ள வேண்டும்.
மணமான பிறகு கணவன் வீட்டுக்கு வாழப் போகவேண்டும்.. தனது தாய் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக கணவனை வைத்துக்கொண்டு அவன் சம்பாத்தியத்தை முழுமையாக தன்னிடம் தந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.. இது அவனது தன்மானத்திற்கு இழுக்காக முடியும்..
இப்படி ஒவ்வொரு விக்ஷயமாக யோசித்து நடக்க உன் மகளுக்கு புத்தி சொல்லிக் கொடு.மற்றவர்கள் நடந்து கொள்கிற விதத்தைப் பார்த்து மன இறுக்கம் அடையாமல், எதையும் ரிலாக்ஸாக எடுத்துக்கொள்ள கற்றுக் கொடு..
வாழ்க்கை என்பது நீண்ட தூரம் போகவேண்டிய ஒரு பயணம். இதில் நாலும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்தையும் எதிர்கொண்டால்தான் வாழ்க்கை சுகமாகப் போகும்.
இந்த நாட்டில் மணமாகி வாழ்க்கைப்பட்டுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகிதப் பெண்கள் இப்படித்தான் வாழ்க்கையில் பல விக்ஷயங்களைத்தாங்கிக் கொண்டு குடும்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் நீயும் விதிவிலக்கு அல்லவே-
துன்பத்தில் இன்பம் என்பதுதான் அனைவருக்கும் தரப்பட்ட வாழ்க்கை நியதி.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு, இனி வாழப் போகிற வாழ்க்கை வேறு... புதிய வாழ்க்கைக்கு உன்னை தயார் படுத்திக்கொண்டு புதிய இல்லத்தில் வாழ்க்கைக்காகக் காத்திரு என்று அவளுக்குச் சொல்லிக்கொடு.. அமைதியாக, பொறுமையாக இருந்து அனைத்தையும் சகிப்பதற்கு கற்றுக் கொடு..
உனக்கு முன்னால் அந்த வீட்டுக்குச் சென்று உன் மகள் நன்றாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன். எல்லோரும் உன் மகளைப் போல நல்லவர்கள்தான்.. புரிய வை.
அன்புடன் அப்பா
சாயி பாபா

Tuesday, September 16, 2014

கஷ்டத்தைக் கடந்து வா! கடவுள் துணை இருப்பார்!

sai15சீரடி சாயி நாத மகராஜின் தீவிர பக்தர்களில் ஒருவரும், மிகவும் ஆசாரச் சீலருமான தாசகணு மகராஜ் தன் ஆசாரக் கொள்கைகளில் தீவிர பற்றுடையவர்.
குல வழக்கப்படி வெங்காயத்தை முற்றிலும் தனது சாப்பாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தவர். வெங்காயத்திற்கு சிற்றின்பத்தைத் தூண்டும் சக்தி உள்ளது என்பதால் அதை விலக்கி வைத்ததாகக் கூறுவர். ஆனால், சத்குரு சாயிநாதரோ, ஆச்சாரங்களை அதிகமாக மதிப்பவர் அல்ல. அதன்படி நடந்தே ஆக வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்பவரும் அல்ல.
ஒருநாள் பாபா, தாசகணுவிடம் வெங்காயங்களை அதிகமாகக் கொண்ட உணவைத் தயாரிக்கும்படி பணித்தார். அந்த உணவை தனக்குப் பரிமாறும்படி பாபா கேட்டுக்கொண்டார்.
தாசகணுவையும் சிறிது உண்ணுமாறு கூறினார். அதை அவர் உண்ணமாட்டார் என்பது தெரியும் என்றாலும், ஏதோ ஒரு காரணம் கொண்டு பாபா அதனை சாப்பிடுமாறு வற்புறுத்தியதால், அந்த பதார்த்தத்தை சாப்பிடுவது போல பாவனை செய்தார் தாசகணு.
இதனை பாபாவுக்குத் தெரியாமல் செய்ததால், தான் சாப்பிட்டுவிட்டதாக ஆகிவிடும் என அவர் நினைத்தார். ஆனால் எல்லாம் அறிந்த குரு நாதரை ஏமாற்ற முடியுமா? அதனை கண்டு கொண்டு பாபா வலுக்கட்டாயமாக அந்த வெங்காயப் பதார்த்தத்தை தாசகணு சாப்பிட வைத்தார். அதன் பிறகு, பாபா உயிருடன் இருக்கும்வரை வெங்காயத்தை சாப்பிடும் வழக்கத்தை தாசகணு தொடர்ந்திருந்தார்.
பாபாவின் ஒவ்வொரு செய்கையிலும் ஓர் உண்மை பொதிந்திருக்கும் என்பது அவர் அடியவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அடியவர்கள் உள்ளத்தில் எழுந்த கேள்வி, ”பாபா எதற்காக தாசகணுவை வெங்காயம் சாப்பிட வலியுறுத்தினார்?” என்பதே.
ஒருவன் வெங்காயத்தை சாப்பிட்டு அதன் பிறகு சிற்றின்ப ஆசையை அவன் கடந்துவிட்டான் என்றால் அதுதான் அவன் பிறப்பின் பெரிய வெற்றி. அதன் பின்பு அவனுக்கு யாதொரு கெடுதலும் வராது என்று பாபா விளக்கமளித்தார்.
தாசகணுவுக்கு ஒரு முறை, இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றான கங்கை - யமுனை சங்கமிக்கும் பிரயாகைக்குச் சென்று புனித நீராடும் ஆவல் ஏற்பட்டது. ஆனால் குரு நாதர் இதை யெல்லாம் அனுமதிக்க மாட்டார் என்பது தாசகணுவுக்குத்தெரியும். இருப்பினும் பாபாவின் அனுமதி பெறாமல் புனித யாத்திரை மேற்கொள்ள முடியாது. ஆகவே,வெகு தயக்கத்துடன் பாபாவிடம் அனுமதி கேட்டார்.
இதைக் கேட்டதும் பாபா புன்சிரிப்புடன், ”புனித நீராட வேண்டும் என்ற உன் ஆவல் எனக்கும் புரிகிறது. அதற்காக நீ அவ்வளவு தூரம் போக வேண்டுமா?” என்று வினவ, தாசகணுவும் போக வேண்டும் என்றார்.
”பிரயாகைக்குச் சென்று புனித நீராட வேண்டும். அவ்வளவு தானே? அந்தப் பிரயாகை இங்கேயே இருக்கிறதே! அப்புறம் எதற்காக நீ அங்கு செல்ல வேண்டும்?” என பாபா கேட்டார்.
தாசகணுவுக்கு பாபாவின் பேச்சு புரியவில்லை. பாபா, “மனதார என்னை நம்பு. பிரயாகை இங்கேயும் இருக்கிறது” என்றார்.
தாசகணுவுக்கு அப்போதுதான் பாபாவின் மகிமையால் ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போகிறது. பாபா ஏதோ செய்து காண்பிக்கப்போகிறார் என்று உணர்ச்சி வசத்தால், பாபாவின் பாதங்களில் தலை வைத்து வணங்கினார்.
என்னே ஆச்சர்யம்! பாபாவின் திருப்பாதங்களின் இரு கட்டை விரல்களிலும் இருந்து கங்கையும் யமுனையும் அப்படியே கசியத் தொடங்கின. பக்தர்கள் பிரமித்துப் பார்த்தார்கள். அனைவரும் புனித நீரை தலையில் தெளித்து தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டார்கள். தாசகணுவின் பிரயாகை ஆசை நிறைவேறியது.
தாசகணுவுக்கு ஈசா உபநிடதத்துக்கு உரை எழுதும் ஆசை இருந்தது. ஆனால், அதன் உட்பொருள் முழுவதும் விளங்காமல் இருந்தது. பாபாவிடம் கேட்டு தன் சந்தேகங்களுக்கு தீர்வு காண நினைத்தார். அதற்கு விளக்கம் அளிக்க மறுத்த பாபா, நேராக மும்பையில் உள்ள வில்லேபார்லேக்கு செல். அங்கு காகா தீட்சித்தின் வீடு உள்ளது. அவர் வீட்டு வேலைக்காரி இதற்கான விளக்கத்தை உனக்கு அளிப்பார் என்றார்.
மிகப் பெரிய அறிவு ஜிவிகளுக்கே குழப்பமான இந்த உபநிடதம், ஓர் வேலைக்கார சிறுமிக்கு எப்படி தெரியப் போகிறது என நினைத்து மனக் குழப்பத்துடன் மும்பை சென்றார். காகா சாகேப் தீட்சித் வீட்டில் தங்கி இரவுப் பொழுதை கழித்தார்.
இளம் காலையில் ஓர் அழகான, அற்புதமான பாடல் ஒன்று அவரை துயில் எழுப்பியது. அதைப் பாடிய பெண் ஓர் அழகான புடவையைப் பற்றி விவரித்துப் பாடிய பாடல் அது.
அந்தப்பாட்டுக்குச் சொந்தக்காரி யார்? அழகான ஒரு புடவைப் பற்றி விவரித்துப் பாடிய பாடல். அந்த அளவுக்கு கற்பனை வளத்துடன் இனிய குரலில் பாடுகிறவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி வெளியே சென்று பார்த்தார்.
வெளியில் கந்தல் துணி அணிந்திருந்த ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அந்த வீட்டு வேலைக்காரியின் சகோதரி என விசாரித்ததில் தெரிந்தது. அழகான புடவைக்காக ஆசைப்பட்டு இவ்வாறு பாடியிருக்க வேண்டும் என நினைத்த தாசகணு, அங்கு வந்த செல்வந்தரிடம் கூறி, அச்சிறுமிக்கு உதவுமாறு கூறியதில், அழகிய புடவை ஒன்று சிறுமிக்குக் கிடைத்தது. அந்த சிறுமியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்த நாளும் வந்தது. அன்றும் அதே சிறுமி அழகிய குரலில் இன்னொடு பாட்டுப் பாடி அசத்தினாள். தாசகணு வெளியே வந்து பார்த்தார். அதே சிறுமி மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கொண்டு இருந்தாள். அன்றும் அவள் கந்தல் உடையில்தான் இருந்தாள். புதுப்புடவையை ஏன் கட்டிக் கொள்ளவில்லை?
தாசகணு மனதில் பளிச்சென்ற மின்னல். அதில் தோன்றிய ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போன்ற விளக்கம். அந்தப் பெண்ணுடைய மகிழ்ச்சிக்குக்காரணம் புடவையல்ல. அவள் மனமே.
ஒருவரின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் காரணம் அவர்களது செழுமையோ, வறுமையோ அல்ல. நிலையற்ற அது, வரும் போகும். ஒருவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் தூய உள்ளமும்,. கள்ளம் கபடம் அற்ற பிள்ளைத் தனமுமே.
நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். அவர் சந்தோக்ஷமாக இருப்பதற்காக நம்மைப் படைத்துள்ளார். ஏதாவது நமக்குச் செய்ய வேண்டும் என்றால், எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எனவே, அனைத்து பாரங்களையும் நம் குரு நாதரிடம், நீயே சத்யம், நீயே நித்யம் - நீயே சர்வமும் என்று நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, அந்தச் சிறுமியைப் போல எப்பொழுதும் உற்சாகத்துடன் இருந்தால், நமக்கு நற்பயன் கிட்டும்.
ஈஸா வாஸ்யத்தின் உட்பொருளும், அதன் விளக்கமும் தாசகணுக்கும் நமக்கும் இப்பொழுது புரிந்துவிட்டது. இதைப் புரிய வைக்க தீர்க்க தரிசனத்துடன் சீரடி வாசன் இங்கே தன்னை அனுப்பியதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் தாசகணு மகராஜ்.
தாசகணுவின் பஜனைப்பாடல்கள் பாபாவை மிகவும் கவர்ந்தவை. அவரை கவி பாடும் கவிச் சக்கரவர்த்தியாகவே பாபா மாற்றிவிட்டார். பாபாவிடம் பக்தி, பரவசம், பற்று இவற்றின் இலக்கணமாகவே வாழ்ந்து காட்டியவர் தாசகணு மகராஜ். அவர் பாபா மீது இயற்றி, பாபா முன்னால் பாடி, பாபாவின் ஆசி பெற்றதுதான் ஸ்ரீ சாயி நாத ஸ்தவன மஞ்சரி.
இந்த நூல் 1918 ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் நாள் பாபாவின் முன்னால் பாடப்பட்டது. பாபா ஆசியளித்தார். அதன் பிறகு 37 நாட்களில் பாபா சமாதியடைந்தார். இன்றும் பாபா சமாதியிலிருந்துகொண்டே பக்தர்களின் எல்லா துயரங்களுக்கும் தீர்வளிக்கிறார் என்பதுதான் உண்மை.. நிதர்சனமான உண்மை.
சாயி குப்புசாமி,
சென்னை - 88

Monday, September 15, 2014

அற்புதமான சக்தி!

bless

ஒருவர் பாபாவிடம் பக்தி செலுத்தலாம்,செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம்,ஆயினும்,தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை. பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை,அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை.எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ,அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்?இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!

மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.

என் ஆசி உனக்கு உண்டு!

foursai

சத்சரித்திரம் 11ம் அத்தியாயம் பல வழிகளில் சிறப்புடையது. சத்சரிதம் முழுவதையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் இந்த ஒரு அத்தியாயத்தை முழுமையான மனத்துடன் பாராயணம் செய்தால், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என்பது பலருடைய அனுபவமாக இருக்கிறது.
அத்தியாயத்தின் கடைசிப் பாராவுக்கு முன் பாராவில், “தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதி அடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்” என்று சொக்கலிங்கம் சுப்பிரமணியன் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். இந்த வரிகளைப்படிக்கும்போது, பைபிளில் சொல்லப்பட்ட ”எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி” என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
கடவுள் தீயவர்களை அழிக்க அவதரித்து வருகிறார். ஆனால், குருமார்களான ஞானியர், தீயவர்களைத் திருத்தவே அவதரிக்கிறார்கள். அவர்களுக்கு நல்லவர் கெட்டவர் என்ற பேதம் ஏதும் கிடையாது.
பாபா அப்படிப்பட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கடவுள். பாபாவிடம் வருகிற யாராக இருந்தாலும், அவர்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கஷ்ட நிலையிலிருந்து நீங்கி, சுகத்தை அடைகிறார்கள். கெட்டவர்களாக இருந்தாலும் படிப்படியாக நல்ல மனிதர்களாக மாறுகிறார்கள்.
படித்தவர் - படிக்காதவர், பக்தியுள்ளவர் - பக்தி இல்லாதவர், நல்லவர் - கெட்டவர், மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், தீண்டத்தக்கவர் - தீண்டத்தகாதவர், சிறியோர் - பெரியோர், அரசன் - ஆண்டி, பாகவதர் - பாமரர், மனிதர் - மற்ற விலங்கு என எந்த வேறுபாடும் பார்க்காதவர் நமது சாயி பாபா.
நீங்கள் இப்போது எந்த நிலையிலிருந்தாலும் பயப்பட வேண்டாம். அவரை சரணடைந்து விட்டால் போதும், எந்த மனிதனையும் ஆசீர் வதிக்கிற கரங்களை உடையவராக நமது பாபா இருக்கிறார். ஒரே ஒரு விக்ஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். பாபாவை கும்பிட்டால் கஷ்டம் போய் விடும் என்ற நினைப்பு தவறானது. அதை மட்டும் கவனிக்க வேண்டும்.
ஏன்? எப்படி?
கும்பிடுகிற எல்லோரும் நம்பிக்கையோடு கும்பிடுவது கிடையாது. நம்புகிற எவரும் முழு மனதுடன் நம்புவதும் கிடையாது. முழு மனதுடன் நம்புகிறேன் என்று கூறுபவர்கள் அவரையே முழுமையாக சரண் அடைவதும் கிடையாது.
சரண் அடைந்துவிட்டேன் என்பவர்கள், இது எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் இருப்பதில்லை.
பணிய வேண்டும்!
சாயி பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முதலில் பணிய வேண்டும். பணிதல் என்றால், பணிவுடன் இருத்தல் என்றே பொருள் கொள்ளலாம். நாம் நல்ல வசதி படைத்தவராக இருக்கலாம், மக்களால் மதிக்கப்படுகிறவராகவோ, போற்றப்படுகிறவராகவோ இருக்கலாம்.. மெத்தப் படித்த ஞானியாக இருக்கலாம்.. இந்த நாட்டை ஆளும் அரசராகவும் இருக்கலாம்..
தன் நிலையை எண்ணி கர்வப்படாமல், கடவுள் முன்னால் சர்வ சாதாரணமாக வீழ்ந்து பணிய வேண்டும். நம்முடைய இந்த நிலைக்கு அவர்தான் காரணம்.. அவர் முன் என்றால், விக்கிரகத்தின் முன்பு வீழ்ந்து பணிதல் என்று பொருள் அல்ல.. அவர் அனைத்து படைப்புயிர்களிலும் வியாபித்து இருக்கிறார் என்பதை உணர்ந்து, அனைவரிடமும் பணிவோடு இருக்க வேண்டும்.
சரணாகதி அடைய வேண்டும்!
சரணம் என்றால் பாதம் என்று பொருள். உங்கள் பாதமே கதி..என்று வீழ்ந்து விடுவதற்குத்தான் சரணாகதி என்று பொருள். இவ்வாறு வீழ்ந்து விட்ட பிறகு, எப்போது தூக்கி விடுவீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? என்றெல்லாம் எந்த விதமான கேள்வியையும் கேட்கவே கூடாது.
நான் அவர் கையில் ஒரு கருவி. அவருக்கு நான் அடிமை.. அவரது ஏவலாள்.. அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்யட்டும் என அவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுப் பேசாமல்; அவரது நாமாவைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
அவரது பாதுகாப்பை நாட வேண்டும்!
நாம் இன்றைக்கு நலமோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் பகவானின் பாதுகாப்பு நமக்கு இருப்பதால்தான் என்பதே உண்மை.
இயற்கையால், மனிதர்களால், விலங்குகளால், அமானுஷ்யங்களால், கிரகங்களால் எப்போதும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. இவை எந்த நிலையிலும் நம்மை தொல்லை தராமல் இருப்பதற்காக நாம் அவரது பாதுகாப்பை நாட வேண்டும்.
ஒரு மனிதனுக்கு பாதுகாப்பு என்பது இறைவனுடைய திருநாமம். அது எப்போதும் அவனது நாவில் இருக்குமானால், எந்த நிலையிலும் அவன் காப்பாற்றப்படுவான்.
பாபா என்ற பெயர் மட்டுமல்ல, வேறு எந்தப்பெயரை நித்தியப் பாராயணமாக மனதில் பதித்திருந்தாலும், அதை சொல்லிக் கொண்டே இருந்தாலும் அது கவசமாக நம்மை காப்பாற்றும்.
தபோல்கர் ஓர் உதாரணம்!
பாபா தபோல்கரைப் பற்றிக் கூறியதையும், தபோல்கர் பாபாவையும் வாக்கை நம்பியதையும் தியானிக்கலாம். தபோல்கர் பாபாவை தரிசிக்க வந்தபோது, அவருடன் வந்திருந்த அண்ணா சிஞ்சணீகர் என்ற பக்தர், தபோல்கருக்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அப்போது பாபா என்ன பதில் சொன்னார் என்று பாருங்கள்:
”அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும். ஆனால் அவர் என்னுடைய சேவையில் இறங்க வேண்டும். இறங்கினால் சுகமான வாழ்க்கை நடத்துவார். அவருடைய உணவுத்தட்டு என்றும் நிறைந்திருக்கும். உயிருள்ள வரையில் காலி ஆகவே ஆகாது. என்னிடம் முழு விசுவாசத்துடன், இடை விடாது என் பாதுகாப்பை நாடுவாரேயானால், அவருடைய பிரச்சினைகள் முடிவுறும்.”
என்னை சந்திக்க வரும் ஓய்வு பெற்றவர்களில் பலர், இன்னும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். ”ஏதேனும் வேலை கிடைக்க, அனுக்கிரகம் செய்ய, பிரார்த்தனை செய்யுங்கள்” என்பார்கள்.
உண்மையாகவே, அவர்களுக்குப் பிரார்த்தனை செய்கிற அதே வேளையில், பரிதாபப்படவும் செய்வேன்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், தங்களை முதியவர்களாக நினைத்துக்கொள்கிற பலர், வயதாகிவிட்டதாக தங்களுக்குள்ளேயே முடிவு செய்து, வீட்டில் முடங்கிவிடுகிறார்கள்.
இதனால், குடும்பத்தில் அவர்களுக்கு இருந்த பழைய அந்தஸ்து பறிக்கப்பட்டு, பிள்ளைகள் வசம் தரப்படுகிறது. பிள்ளைகள் ஏன், மனைவி கூட, இவரை வேண்டாத விருந்தாளி போல பார்க்கிற நிலை பல வீடுகளில் உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு, பகவான் என்ன வேலை தரமுடியும்?
எந்த வேலையை வேண்டுமானாலும் தரலாம். முதுமை என்பதற்கு இயலாமை என்று பொருள் கிடையாது, அனுபவம் என்று பொருள். அந்த அனுபவத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அப்படி சாதிக்க விரும்புவோர் முதலில் பாபாவின் சேவையைச் செய்யவேண்டும்.
அனைத்தையும் இழந்து சாயி பாபாவை சரணடைந்த காலஞ் சென்ற சின்மயா நகர் வடிவேலன் அவர்கள், சாயியைச் சரணடைந்து, அவர் சேவையை செய்து அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொண்டே வந்தார். ஆனால் என்ன காரணமோ, பாபா அவரை தம்மிடம் அழைத்துக் கொண்டார்.
அண்ணாநகரில் வசிக்கிற சண்முகம், சாயி தொண்டை முதன்மையாக நினைத்துச் செய்கிறார். இதனால் விளைந்த பலன், அனைத்து செல்வங்களையும் இழந்து, கஷ்டப்பட்ட நிலை மாறி, பழைய நிலைக்கு மீண்டும் வந்துவிட்டார்.
சென்னை சாலி கிராமத்தில் பார்வதி பவன் என்ற ஹோட்டல் முதலாளி தோத்தாத்ரி அவர்கள், வாரம் தோறும் மற்றவர்கள் மலைக்கும் அளவுக்கு தனது ஹோட்டலிலேயே சாயி சேவை செய்கிறார். இதன் விளைவு? பெருத்த நட்டத்திலிருந்து மீண்டு, இன்று பல புதிய நிறுவனங்களுக்கு உரிமையாளராகிக் கொண்டு வருகிறார்.
இந்தியன் வங்கிக் கிளை ஒன்றின் மேலாளரான வெங்கட்ராமன் என்ற சாயி பக்தர், சதா சாயி நாமம் சொல்வதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு விட்டார். அவருடைய தேவைகள் அனைத்தையும் இன்று பாபா கவனிக்கிறார்.
இப்படி நிறைய பேரை உதாரணமாகக் கூறலாம். உங்களில் யாரேனும் கேட்கலாம்.. ”சாமி, நானும் தான் சாயியைக் கும்பிடுகிறேன்.. ஆனால் இன்னும் கஷ்டப்படுகிறேனே? அது ஏன்? என்று.
பாபா சொன்ன அந்த வார்த்தையை மீண்டும் சொல்லிப் பாருங்கள்.. நீங்கள் அவரது சேவையில் இறங்கவேண்டும். அவரிடம் முழு விசுவாசத்துடன் இடைவிடாது, அவருடைய பாதுகாப்பை நாட வேண்டும்.. இப்படி செய்தால்தான் உங்கள் பிரச்சினை போகும்.
பாபாவுக்குச் சேவை செய்வதாக சொல்லி, அவரது கஜானாவிலிருந்து கொள்ளை அடிப்பதும், ஏமாற்று வேலை செய்வதும் சேவை ஆகாது. ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். அடுத்து, பாபா மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும். என்ன நடந்தாலும் சாயி பார்த்துக் கொள்வார் என எண்ண வேண்டும். அந்த நிலையில் பாபாவின் பாதுகாப்பைக் கோரிப் பெற வேண்டும். இதில் கவனமாக இருந்தால், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
பாபாவை எப்படி விசுவாசிக்க வேண்டும்?
இறைவனை வணங்காதவர்களையும், நாமத்தைச் சொல்லாதவர்களையும், நம்பிக்கையும் பக்தியும் இல்லாதவர்களையும், பஜனை பாடாதவர்களையும், இறைநாட்டமுடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள். அத்தகைய ஞானிகளின் சிகரம் சாயி என்பதை முழுமையாக நம்பவேண்டும்.
சிலை, யாககுண்டம், அக்கினி, ஒளி, சூரிய மண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்கு உரிய புனிதமான ஏழு பொருட்களுக்கும், இயற்கை சக்திகளுக்கும், மனிதர்களுக்கும் மேலானவர் குரு ராஜர். வேறு எதிலும் மனதை சிதறவிடாது ஒரு முகமாக அவரை வழிபட வேண்டும் என்பதை அறிந்து அவரை வழிபட வேண்டும்.
ஆத்மாவுக்கு இதமானதை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரசவ வலியைக் கொடுத்தது வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையா விடின் அவனுடைய வாழ்க்கையே வீண் என்பதை உணர்ந்து அவரை வணங்க வேண்டும்.
சாயியின் காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகிறதோ, அப்பொழுதெல்லாம் சாயீ கண் முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவு பகலாக நிலைத்துவிடுவார். கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும் போதும், சாப்பிடும்போதும் அவர் உம்முன் தோன்றுவர். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனே இருப்பார் என்கிற சத்சரித வாக்கை முழுமையாக நம்பி, அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் நிச்சயம் என் ஆசீர்வாதம் உனக்கு உண்டு என்பார் பாபா.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...