என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே என்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றுவேன். அவர்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று நமது சமர்த்த சத்குரு சாயி பாபா வாக்களித்தபடி இன்றும் நிறைவேற்றி வருகிறார்.
அதை அனுபவப்பூர்வமாகவும், ஸ்ரீ சாயி தரிசனம் மூலமாகவும் புரிந்துகொள்ளலாம். பக்தர்களால் நினைக்கப்படும் சாயியின் ஓர் அம்சமாக, மற்றவர்களுக்காகவே தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்,
நம்மிடையே மனித உருவில் நடமாடிக் கொண்டு இருப்பவர் நம் மானசீக குரு ஸ்ரீ சாயி வரதராஜன். எனக்கு புதுப்பெருங்களத்தூர் வந்து பாபாவிடமும் சாயி வரதராஜனிடமும் ஆசி பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வர முடிவதில்லை.
ஆனால் வீட்டிலிருந்தபடியே, பாபாவை நினைத்துக்கொண்டும், மானசீக குருவான சாயி வரதராஜனை நமஸ்கரித்தும் சாயி நாம ஸ்மரணை செய்து கொண்டே நாளை ஆரம்பிப்பேன். கண் விழித்ததும் அன்றைய நாளை ஆரம்பிக்கும் முன் எனது வாய் தானாகவே சாயி ராம் என்று கூறிய பின்னர்தான் மற்ற ஸ்லோகங்களைக்கூறும். அதன் பிறகே வேலைகளை ஆரம்பிப்பேன்.
சாயி ராம் நாம ஸ்மரணை அந்தளவில் என் இரத்தத்தில் ஊறியிருப்பதற்குக் காரணம் ஸ்ரீ சாயி வரதராஜன்தான். அவருடைய சத்சங்கத்திற்கு என்னால் அதிக அளவு சென்று சேர்ந்துகொள்ள முடிவதில்லை. எனினும் அவருடைய இரண்டு மூன்று சத்சங்கத்தைக் கேட்டிருக்கிறேன். அதுவே என்னை இந்தளவுக்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்றால், அவரின் தினசரி சத்சங்கங்களில் பங்கேற்றால் நமது வாழ்க்கையே மாறிவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
எளிமையான, ஆடம்பரமில்லாதவராக, எந்த பக்தர் வந்தாலும் அவர்களுக்கு மரியாதைக்கொடுத்து ஆறுதல் அளிப்பவர் அவர் என்பதை அனுபவித்து அறிந்திருக்கிறேன்.
அவர் மூலமாக எங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல என்றாலும், மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக சாயி வரதராஜன் எந்த வீட்டுக்கும், யார் நிகழ்ச்சிக்கும் போகமாட்டார் என்பதும், தன் சித்தப் போக்கில் போய்க்கொண்டிருப்பார் என்பதும் பலருக்கும் தெரிந்த விக்ஷயம்தான்.
ஒரு சமயம் எனது மாமாவுக்கு முதுகுத் தண்டில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அவர் முன்போல நடக்க வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன். அதைத் தொலை பேசியில் சாயி வரதராஜனிடம் தெரிவித்தபோது அழுதே விட்டேன்.
அதுவரை அவரை நேரில் பார்த்திராத போதும் அவர் ஆறுதல்கூறி, பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை என் மாமியிடம் கூறினேன். அவர் புதுப்பெருங்களத்தூர் சென்று, ஸ்ரீ சாயி வரதராஜனிடம், ”நான் உஷாவின் மாமி, என் கணவருக்குத்தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அவர் பழைய நிலைக்கு வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அதை செவி கொடுத்து, பாபாவிடம் வேண்டி விபூதி ஜெபித்து அவர் நிச்சயம் விரைவில் நடப்பார் எனக் கூறி ஆசீர்வதித்தார். அதற்கேற்றார் போல், விரைவில் என் மாமா எழுந்து நடக்க ஆரம்பித்தார். சாயி பக்தர்கள் சாயி வரதராஜனை பாபாவாகவே நினைத்துக்கொண்டு (அதில் நானும் ஒருத்தி), அவர் காலடி அவரவர் வீட்டில் பட்டால் வீடே புண்ணிய ஷேத்திரமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைத்து வாழும் ஒரு பக்தரின் நிகழ்ச்சியைக் கூறுகிறேன். அவர் மூலமாக நானும் எங்கள் வீட்டவரும் பாக்கியசாலிகள் ஆனோம்.
எனக்குத் தெரிந்த ஒரு சாயி பக்தர் மிகவும் வயதானவர். மிகவும் முடியாமல், உடம்பு சரியில்லாத தால் அவரும் அவர் மனைவியும் ரொம்ப நாளாகவே சாயி வரதராஜன் நம் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முழு நம்பிக்கையோடு இருந்தார்கள்.
என்னிடம், சாயி வரதராஜனை நம் வீட்டிற்கு வருமாறு பிரார்த்தனை செய்யேன் என்று மிக நாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் பாபாவை வேண்டி, இதை தொலை பேசிவாயிலாக சாயி வரதராஜனிடம் தெரிவித்தேன்.
நிலைமையை உணர்ந்துகொண்டு அவர், சரி, நங்க நல்லூர் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டார். இதை நான் நினைத்துக்கூட பார்க்கவே இல்லை. என்ன ஏற்பாடு செய்வது என்பது கூட தெரியவில்லை. அவரிடமே கேட்டபோது, ஒன்றும் செய்ய வேண்டாம், நான் வந்து பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறிவிட்டார்.
எனக்கும் எல்லாம் புதிதானதால், அந்த பக்தர் வீட்டில் பாபாவின் ஒரு சின்ன சிலை வைத்து அதில்
சிறிது பூ வைத்து அலங்கரித்திருந்தார்கள். எனக்குள் ஓர் ஆவல் ஸ்ரீ சாயி வரதராஜன் வரப்போகிற அந்த பக்தர் வீட்டிலிருந்து நான் வசிக்கும் இடம் மூன்றாம் வீடு. என் தாயாருக்கும் நடக்க முடியாத நிலை. அவருக்கு ஸ்ரீ சாயியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அத்தனை வேலை பளுவில் அவர் வருகிறார்.. என் வீட்டிற்கும் வருவாரா? இப்போது வர ஒப்புக்கொண்டதே பெரிய விக்ஷயம்.. அதில் இந்த வேண்டுகோளை ஏற்பாரா என்ற ஐயம். இருந்தும் பாபாவிடம் கூறிவிட்டு, அவரிடம் ஓர் ஐந்து நிமிடமாவது என் வீட்டிற்கு வந்து ஆசி புரிய வேண்டும் என வேண்டினேன்.
ஒரு சாதாரண சாயி பக்தைக்காக மனம் உவந்து எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவருடன் ஸ்ரீ பாபா மாஸ்டர் அருணாச்சலம், ஸ்ரீ சாயி கலியன், _ ஸ்ரீ சாயி வீரமணி அவர்களும் வந்து அருள் பாலித்தனர். எனக்கு ஆனந்தத்தில் என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
இன்றும் நினைத்தால் இனிமையாக இருக்கிறது.. எங்கள் வீடு நிஜமாகவே சிறந்த மகான்கள் வந்து அருள் பாலித்த வீடாகக் கருதுகிறேன்.
ஸ்ரீ சாயி வரதராஜன் கீரப்பாக்கம் பாபா கோயில் கட்டுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். முழுக்க முழுக்க அவருடன் இருந்து இந்த சேவையில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது,
ஆனால் இயலாமையால் முடிந்தவரை வீட்டிலிருந்தே அவருக்காக சேவை செய்கிறேன். அவர் நல்லபடியாக சீக்கிரம் கோயில் கட்ட ஆசி புரிய வேண்டும் என்று பிரார்த்தித்து வருகிறேன்..பாபாவும் ஸ்ரீ சாயி வரதராஜனும் எனக்கு ஆசி புரிய வேண்டும்.
உஷா ரவிச்சந்திரன்,
நங்கநல்லூர்
No comments:
Post a Comment