சீரடி சாயி நாத மகராஜின் தீவிர பக்தர்களில் ஒருவரும், மிகவும் ஆசாரச் சீலருமான தாசகணு மகராஜ் தன் ஆசாரக் கொள்கைகளில் தீவிர பற்றுடையவர்.
குல வழக்கப்படி வெங்காயத்தை முற்றிலும் தனது சாப்பாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தவர். வெங்காயத்திற்கு சிற்றின்பத்தைத் தூண்டும் சக்தி உள்ளது என்பதால் அதை விலக்கி வைத்ததாகக் கூறுவர். ஆனால், சத்குரு சாயிநாதரோ, ஆச்சாரங்களை அதிகமாக மதிப்பவர் அல்ல. அதன்படி நடந்தே ஆக வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்பவரும் அல்ல.
ஒருநாள் பாபா, தாசகணுவிடம் வெங்காயங்களை அதிகமாகக் கொண்ட உணவைத் தயாரிக்கும்படி பணித்தார். அந்த உணவை தனக்குப் பரிமாறும்படி பாபா கேட்டுக்கொண்டார்.
தாசகணுவையும் சிறிது உண்ணுமாறு கூறினார். அதை அவர் உண்ணமாட்டார் என்பது தெரியும் என்றாலும், ஏதோ ஒரு காரணம் கொண்டு பாபா அதனை சாப்பிடுமாறு வற்புறுத்தியதால், அந்த பதார்த்தத்தை சாப்பிடுவது போல பாவனை செய்தார் தாசகணு.
இதனை பாபாவுக்குத் தெரியாமல் செய்ததால், தான் சாப்பிட்டுவிட்டதாக ஆகிவிடும் என அவர் நினைத்தார். ஆனால் எல்லாம் அறிந்த குரு நாதரை ஏமாற்ற முடியுமா? அதனை கண்டு கொண்டு பாபா வலுக்கட்டாயமாக அந்த வெங்காயப் பதார்த்தத்தை தாசகணு சாப்பிட வைத்தார். அதன் பிறகு, பாபா உயிருடன் இருக்கும்வரை வெங்காயத்தை சாப்பிடும் வழக்கத்தை தாசகணு தொடர்ந்திருந்தார்.
பாபாவின் ஒவ்வொரு செய்கையிலும் ஓர் உண்மை பொதிந்திருக்கும் என்பது அவர் அடியவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அடியவர்கள் உள்ளத்தில் எழுந்த கேள்வி, ”பாபா எதற்காக தாசகணுவை வெங்காயம் சாப்பிட வலியுறுத்தினார்?” என்பதே.
ஒருவன் வெங்காயத்தை சாப்பிட்டு அதன் பிறகு சிற்றின்ப ஆசையை அவன் கடந்துவிட்டான் என்றால் அதுதான் அவன் பிறப்பின் பெரிய வெற்றி. அதன் பின்பு அவனுக்கு யாதொரு கெடுதலும் வராது என்று பாபா விளக்கமளித்தார்.
தாசகணுவுக்கு ஒரு முறை, இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றான கங்கை - யமுனை சங்கமிக்கும் பிரயாகைக்குச் சென்று புனித நீராடும் ஆவல் ஏற்பட்டது. ஆனால் குரு நாதர் இதை யெல்லாம் அனுமதிக்க மாட்டார் என்பது தாசகணுவுக்குத்தெரியும். இருப்பினும் பாபாவின் அனுமதி பெறாமல் புனித யாத்திரை மேற்கொள்ள முடியாது. ஆகவே,வெகு தயக்கத்துடன் பாபாவிடம் அனுமதி கேட்டார்.
இதைக் கேட்டதும் பாபா புன்சிரிப்புடன், ”புனித நீராட வேண்டும் என்ற உன் ஆவல் எனக்கும் புரிகிறது. அதற்காக நீ அவ்வளவு தூரம் போக வேண்டுமா?” என்று வினவ, தாசகணுவும் போக வேண்டும் என்றார்.
”பிரயாகைக்குச் சென்று புனித நீராட வேண்டும். அவ்வளவு தானே? அந்தப் பிரயாகை இங்கேயே இருக்கிறதே! அப்புறம் எதற்காக நீ அங்கு செல்ல வேண்டும்?” என பாபா கேட்டார்.
தாசகணுவுக்கு பாபாவின் பேச்சு புரியவில்லை. பாபா, “மனதார என்னை நம்பு. பிரயாகை இங்கேயும் இருக்கிறது” என்றார்.
தாசகணுவுக்கு அப்போதுதான் பாபாவின் மகிமையால் ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போகிறது. பாபா ஏதோ செய்து காண்பிக்கப்போகிறார் என்று உணர்ச்சி வசத்தால், பாபாவின் பாதங்களில் தலை வைத்து வணங்கினார்.
என்னே ஆச்சர்யம்! பாபாவின் திருப்பாதங்களின் இரு கட்டை விரல்களிலும் இருந்து கங்கையும் யமுனையும் அப்படியே கசியத் தொடங்கின. பக்தர்கள் பிரமித்துப் பார்த்தார்கள். அனைவரும் புனித நீரை தலையில் தெளித்து தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டார்கள். தாசகணுவின் பிரயாகை ஆசை நிறைவேறியது.
தாசகணுவுக்கு ஈசா உபநிடதத்துக்கு உரை எழுதும் ஆசை இருந்தது. ஆனால், அதன் உட்பொருள் முழுவதும் விளங்காமல் இருந்தது. பாபாவிடம் கேட்டு தன் சந்தேகங்களுக்கு தீர்வு காண நினைத்தார். அதற்கு விளக்கம் அளிக்க மறுத்த பாபா, நேராக மும்பையில் உள்ள வில்லேபார்லேக்கு செல். அங்கு காகா தீட்சித்தின் வீடு உள்ளது. அவர் வீட்டு வேலைக்காரி இதற்கான விளக்கத்தை உனக்கு அளிப்பார் என்றார்.
மிகப் பெரிய அறிவு ஜிவிகளுக்கே குழப்பமான இந்த உபநிடதம், ஓர் வேலைக்கார சிறுமிக்கு எப்படி தெரியப் போகிறது என நினைத்து மனக் குழப்பத்துடன் மும்பை சென்றார். காகா சாகேப் தீட்சித் வீட்டில் தங்கி இரவுப் பொழுதை கழித்தார்.
இளம் காலையில் ஓர் அழகான, அற்புதமான பாடல் ஒன்று அவரை துயில் எழுப்பியது. அதைப் பாடிய பெண் ஓர் அழகான புடவையைப் பற்றி விவரித்துப் பாடிய பாடல் அது.
அந்தப்பாட்டுக்குச் சொந்தக்காரி யார்? அழகான ஒரு புடவைப் பற்றி விவரித்துப் பாடிய பாடல். அந்த அளவுக்கு கற்பனை வளத்துடன் இனிய குரலில் பாடுகிறவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி வெளியே சென்று பார்த்தார்.
வெளியில் கந்தல் துணி அணிந்திருந்த ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அந்த வீட்டு வேலைக்காரியின் சகோதரி என விசாரித்ததில் தெரிந்தது. அழகான புடவைக்காக ஆசைப்பட்டு இவ்வாறு பாடியிருக்க வேண்டும் என நினைத்த தாசகணு, அங்கு வந்த செல்வந்தரிடம் கூறி, அச்சிறுமிக்கு உதவுமாறு கூறியதில், அழகிய புடவை ஒன்று சிறுமிக்குக் கிடைத்தது. அந்த சிறுமியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்த நாளும் வந்தது. அன்றும் அதே சிறுமி அழகிய குரலில் இன்னொடு பாட்டுப் பாடி அசத்தினாள். தாசகணு வெளியே வந்து பார்த்தார். அதே சிறுமி மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கொண்டு இருந்தாள். அன்றும் அவள் கந்தல் உடையில்தான் இருந்தாள். புதுப்புடவையை ஏன் கட்டிக் கொள்ளவில்லை?
தாசகணு மனதில் பளிச்சென்ற மின்னல். அதில் தோன்றிய ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போன்ற விளக்கம். அந்தப் பெண்ணுடைய மகிழ்ச்சிக்குக்காரணம் புடவையல்ல. அவள் மனமே.
ஒருவரின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் காரணம் அவர்களது செழுமையோ, வறுமையோ அல்ல. நிலையற்ற அது, வரும் போகும். ஒருவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் தூய உள்ளமும்,. கள்ளம் கபடம் அற்ற பிள்ளைத் தனமுமே.
நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். அவர் சந்தோக்ஷமாக இருப்பதற்காக நம்மைப் படைத்துள்ளார். ஏதாவது நமக்குச் செய்ய வேண்டும் என்றால், எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எனவே, அனைத்து பாரங்களையும் நம் குரு நாதரிடம், நீயே சத்யம், நீயே நித்யம் - நீயே சர்வமும் என்று நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, அந்தச் சிறுமியைப் போல எப்பொழுதும் உற்சாகத்துடன் இருந்தால், நமக்கு நற்பயன் கிட்டும்.
ஈஸா வாஸ்யத்தின் உட்பொருளும், அதன் விளக்கமும் தாசகணுக்கும் நமக்கும் இப்பொழுது புரிந்துவிட்டது. இதைப் புரிய வைக்க தீர்க்க தரிசனத்துடன் சீரடி வாசன் இங்கே தன்னை அனுப்பியதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் தாசகணு மகராஜ்.
தாசகணுவின் பஜனைப்பாடல்கள் பாபாவை மிகவும் கவர்ந்தவை. அவரை கவி பாடும் கவிச் சக்கரவர்த்தியாகவே பாபா மாற்றிவிட்டார். பாபாவிடம் பக்தி, பரவசம், பற்று இவற்றின் இலக்கணமாகவே வாழ்ந்து காட்டியவர் தாசகணு மகராஜ். அவர் பாபா மீது இயற்றி, பாபா முன்னால் பாடி, பாபாவின் ஆசி பெற்றதுதான் ஸ்ரீ சாயி நாத ஸ்தவன மஞ்சரி.
இந்த நூல் 1918 ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் நாள் பாபாவின் முன்னால் பாடப்பட்டது. பாபா ஆசியளித்தார். அதன் பிறகு 37 நாட்களில் பாபா சமாதியடைந்தார். இன்றும் பாபா சமாதியிலிருந்துகொண்டே பக்தர்களின் எல்லா துயரங்களுக்கும் தீர்வளிக்கிறார் என்பதுதான் உண்மை.. நிதர்சனமான உண்மை.
சாயி குப்புசாமி,
சென்னை - 88
Tuesday, September 16, 2014
கஷ்டத்தைக் கடந்து வா! கடவுள் துணை இருப்பார்!
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment