ஆலயத்தில் இறைவனைத் தேடுவது ஆரம்ப நிலை பக்தி. தனக்குள்ளேயே இறைவனைத் தேடுவது அடுத்த நிலை பக்தி. தானே இறைவனாக ஆவது மேலான பக்தி.
முதல் நிலை பக்திதான் நம்மில் எல்லோருக்கும் இருக்கும். அடுத்த நிலை வந்துவிட்டால் தனித்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.
தானே பூரணத்துவம் அடைந்தவர்களைத் தேடி, பூரணத்துவம் அடையாதவர்கள் செல்வது வழக்கம். இவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறத்தான் செல்வார்கள்.
ஆனால், அமிதாஸ் என்ற பக்தர் பாபாவை தரிசிக்கச்சென்றதற்கு வேறு காரணம் இருந்தது. அவர் தீவிரமான கிருஷ்ண பக்தர். எப்போதும் ஹரிநாமாவைச் சொல்வதும், ஹரி பஜனை செய்வதுமாக இருப்பார். தனது பூஜைக்காக தன்னிடம் எப்போதும் ஒரு கிருஷ்ணர் போட்டோவை வைத்திருப்பார். அவர் தன்னுடைய பஜனையின் போது அந்தப் போட்டோவைப் பார்த்துக் கொள்வார்.
திடீரென அந்த போட்டோவில் கிருஷ்ணர் தெரியாமல் யாரோ ஒரு முஸ்லிம் துறவி தெரிவதை கவனித்தார். பஜனையை விட்டு போட்டோவைப்பார்த்தால் _ கிருஷ்ணர். பஜனை செய்து கொண்டே பார்த்தால் முஸ்லிம் துறவி.. அமிதாசுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..
யார் இந்த துறவி என்பதும் தெரியாமல் பல நாட்கள் தவித்தார். ஒரு வழியாக அவர் சீரடியில் வாழ்கிற பாபா என்பது தெரிந்து, அவரை தரிசிக்க வந்தார்.
பாபாவை தரிசித்த மாத்திரத்தில் கிருஷ்ணரும் இவரும் வேறு வேறு அல்லர் என்பதை உணர்ந்து கொண்டு பாபாவின் அருகிலேயே பல நாட்கள் தங்கினார். பல நாட்கள் பல மாதங்களானது. இதற்காக சீரடியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.
யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் அவர்களை பராமரிக்க, அமிதாசைத்தான் அனுப்பி வைப்பார் பாபா. தன் இதமான வார்த்தைகளாலும், மென்மை யான பராமரிப்பாலும் நோயாளிகளை கவனித்துக்கொள்வார் அமிதாஸ்.
அமிதாஸ் குஜராத்தி பிராமணர். சௌராஷ்டிராவில் கேத்வாட் ராஜ்யத்தில் பவ்நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். கற்பனை வளம் செறிந்த கவிஞர். பஜனையை இயற்றிப்பாடுவதில் கைதேர்ந்தவர். பாபாவுடன் வாழ்ந்தபோது, அவர் பாபாவை பூரணமான பரப்பிரம்மம் என்பதை உணர்ந்தார்.
அதை தனது தாய் மொழியைப் பேசும் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கவிதை நூலாகவும், உரை நூலாகவும் ஆக்கிக் கொடுத்தார். பாபாவின் வாழ்க்கை, அவரது பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு ஆகியவை பற்றி எழுதிய புத்தகத்துக்கு பூரண பரப்பிரம்மா ஸ்ரீ சத்குரு சாயிநாத் மகராஜ்னி என்று பெயர்.
இந்த பிராமணர், ஒரு முறை பாபாவிடம் மெதுவாக ஓர் ஆசையை வெளியிட்டார். அதாவது தான் கடைசி காலத்தில் சீரடியிலேயே இறக்கவேண்டும் என்ற ஆசையைக் கூறினார். அவரது அன்பால் உருகிப்போயிருந்த பாபா சொன்னார். ” நீ எங்கு இறந்தாலும் என்னோடுதான் இருப்பாய்! “ என்றார்.
இவர் சாயிக்கு சேவை செய்த படி சீரடியிலேயே தனது இறுதி மூச்சை நிறுத்தினார். லெண்டிபாக்கில் உள்ள பக்தர்கள் சமாதிகளில் இவருடையதும் ஒன்று . முக்தாராம் சமாதிக்கு அருகில் இவர் சமாதி கொண்டிருக்கிறார்.
நான் என்ற அகந்தையும், சுய நலமும் இறந்து போனால், நாம் எங்கிருந்தாலும் பாபாவுடன்தான் இருப்போம். அவருக்குச் செய்கிற தூய்மையான தொண்டு ஒன்றே நம்மை உலகியல் நிலைகளை தாண்டச் செய்து அவரோடு ஒன்றச் செய்து விடும்.
No comments:
Post a Comment