சத்சரித்திரம் 11ம் அத்தியாயம் பல வழிகளில் சிறப்புடையது. சத்சரிதம் முழுவதையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் இந்த ஒரு அத்தியாயத்தை முழுமையான மனத்துடன் பாராயணம் செய்தால், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என்பது பலருடைய அனுபவமாக இருக்கிறது.
அத்தியாயத்தின் கடைசிப் பாராவுக்கு முன் பாராவில், “தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதி அடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார்” என்று சொக்கலிங்கம் சுப்பிரமணியன் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். இந்த வரிகளைப்படிக்கும்போது, பைபிளில் சொல்லப்பட்ட ”எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி” என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
கடவுள் தீயவர்களை அழிக்க அவதரித்து வருகிறார். ஆனால், குருமார்களான ஞானியர், தீயவர்களைத் திருத்தவே அவதரிக்கிறார்கள். அவர்களுக்கு நல்லவர் கெட்டவர் என்ற பேதம் ஏதும் கிடையாது.
பாபா அப்படிப்பட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கடவுள். பாபாவிடம் வருகிற யாராக இருந்தாலும், அவர்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கஷ்ட நிலையிலிருந்து நீங்கி, சுகத்தை அடைகிறார்கள். கெட்டவர்களாக இருந்தாலும் படிப்படியாக நல்ல மனிதர்களாக மாறுகிறார்கள்.
படித்தவர் - படிக்காதவர், பக்தியுள்ளவர் - பக்தி இல்லாதவர், நல்லவர் - கெட்டவர், மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், தீண்டத்தக்கவர் - தீண்டத்தகாதவர், சிறியோர் - பெரியோர், அரசன் - ஆண்டி, பாகவதர் - பாமரர், மனிதர் - மற்ற விலங்கு என எந்த வேறுபாடும் பார்க்காதவர் நமது சாயி பாபா.
நீங்கள் இப்போது எந்த நிலையிலிருந்தாலும் பயப்பட வேண்டாம். அவரை சரணடைந்து விட்டால் போதும், எந்த மனிதனையும் ஆசீர் வதிக்கிற கரங்களை உடையவராக நமது பாபா இருக்கிறார். ஒரே ஒரு விக்ஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். பாபாவை கும்பிட்டால் கஷ்டம் போய் விடும் என்ற நினைப்பு தவறானது. அதை மட்டும் கவனிக்க வேண்டும்.
ஏன்? எப்படி?
கும்பிடுகிற எல்லோரும் நம்பிக்கையோடு கும்பிடுவது கிடையாது. நம்புகிற எவரும் முழு மனதுடன் நம்புவதும் கிடையாது. முழு மனதுடன் நம்புகிறேன் என்று கூறுபவர்கள் அவரையே முழுமையாக சரண் அடைவதும் கிடையாது.
சரண் அடைந்துவிட்டேன் என்பவர்கள், இது எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் இருப்பதில்லை.
பணிய வேண்டும்!
சாயி பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முதலில் பணிய வேண்டும். பணிதல் என்றால், பணிவுடன் இருத்தல் என்றே பொருள் கொள்ளலாம். நாம் நல்ல வசதி படைத்தவராக இருக்கலாம், மக்களால் மதிக்கப்படுகிறவராகவோ, போற்றப்படுகிறவராகவோ இருக்கலாம்.. மெத்தப் படித்த ஞானியாக இருக்கலாம்.. இந்த நாட்டை ஆளும் அரசராகவும் இருக்கலாம்..
தன் நிலையை எண்ணி கர்வப்படாமல், கடவுள் முன்னால் சர்வ சாதாரணமாக வீழ்ந்து பணிய வேண்டும். நம்முடைய இந்த நிலைக்கு அவர்தான் காரணம்.. அவர் முன் என்றால், விக்கிரகத்தின் முன்பு வீழ்ந்து பணிதல் என்று பொருள் அல்ல.. அவர் அனைத்து படைப்புயிர்களிலும் வியாபித்து இருக்கிறார் என்பதை உணர்ந்து, அனைவரிடமும் பணிவோடு இருக்க வேண்டும்.
சரணாகதி அடைய வேண்டும்!
சரணம் என்றால் பாதம் என்று பொருள். உங்கள் பாதமே கதி..என்று வீழ்ந்து விடுவதற்குத்தான் சரணாகதி என்று பொருள். இவ்வாறு வீழ்ந்து விட்ட பிறகு, எப்போது தூக்கி விடுவீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? என்றெல்லாம் எந்த விதமான கேள்வியையும் கேட்கவே கூடாது.
நான் அவர் கையில் ஒரு கருவி. அவருக்கு நான் அடிமை.. அவரது ஏவலாள்.. அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அதைச் செய்யட்டும் என அவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுப் பேசாமல்; அவரது நாமாவைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
அவரது பாதுகாப்பை நாட வேண்டும்!
நாம் இன்றைக்கு நலமோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் பகவானின் பாதுகாப்பு நமக்கு இருப்பதால்தான் என்பதே உண்மை.
இயற்கையால், மனிதர்களால், விலங்குகளால், அமானுஷ்யங்களால், கிரகங்களால் எப்போதும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. இவை எந்த நிலையிலும் நம்மை தொல்லை தராமல் இருப்பதற்காக நாம் அவரது பாதுகாப்பை நாட வேண்டும்.
ஒரு மனிதனுக்கு பாதுகாப்பு என்பது இறைவனுடைய திருநாமம். அது எப்போதும் அவனது நாவில் இருக்குமானால், எந்த நிலையிலும் அவன் காப்பாற்றப்படுவான்.
பாபா என்ற பெயர் மட்டுமல்ல, வேறு எந்தப்பெயரை நித்தியப் பாராயணமாக மனதில் பதித்திருந்தாலும், அதை சொல்லிக் கொண்டே இருந்தாலும் அது கவசமாக நம்மை காப்பாற்றும்.
தபோல்கர் ஓர் உதாரணம்!
பாபா தபோல்கரைப் பற்றிக் கூறியதையும், தபோல்கர் பாபாவையும் வாக்கை நம்பியதையும் தியானிக்கலாம். தபோல்கர் பாபாவை தரிசிக்க வந்தபோது, அவருடன் வந்திருந்த அண்ணா சிஞ்சணீகர் என்ற பக்தர், தபோல்கருக்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அப்போது பாபா என்ன பதில் சொன்னார் என்று பாருங்கள்:
”அவருக்கு ஏதாவது உத்தியோகம் கிடைக்கும். ஆனால் அவர் என்னுடைய சேவையில் இறங்க வேண்டும். இறங்கினால் சுகமான வாழ்க்கை நடத்துவார். அவருடைய உணவுத்தட்டு என்றும் நிறைந்திருக்கும். உயிருள்ள வரையில் காலி ஆகவே ஆகாது. என்னிடம் முழு விசுவாசத்துடன், இடை விடாது என் பாதுகாப்பை நாடுவாரேயானால், அவருடைய பிரச்சினைகள் முடிவுறும்.”
என்னை சந்திக்க வரும் ஓய்வு பெற்றவர்களில் பலர், இன்னும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். ”ஏதேனும் வேலை கிடைக்க, அனுக்கிரகம் செய்ய, பிரார்த்தனை செய்யுங்கள்” என்பார்கள்.
உண்மையாகவே, அவர்களுக்குப் பிரார்த்தனை செய்கிற அதே வேளையில், பரிதாபப்படவும் செய்வேன்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், தங்களை முதியவர்களாக நினைத்துக்கொள்கிற பலர், வயதாகிவிட்டதாக தங்களுக்குள்ளேயே முடிவு செய்து, வீட்டில் முடங்கிவிடுகிறார்கள்.
இதனால், குடும்பத்தில் அவர்களுக்கு இருந்த பழைய அந்தஸ்து பறிக்கப்பட்டு, பிள்ளைகள் வசம் தரப்படுகிறது. பிள்ளைகள் ஏன், மனைவி கூட, இவரை வேண்டாத விருந்தாளி போல பார்க்கிற நிலை பல வீடுகளில் உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு, பகவான் என்ன வேலை தரமுடியும்?
எந்த வேலையை வேண்டுமானாலும் தரலாம். முதுமை என்பதற்கு இயலாமை என்று பொருள் கிடையாது, அனுபவம் என்று பொருள். அந்த அனுபவத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அப்படி சாதிக்க விரும்புவோர் முதலில் பாபாவின் சேவையைச் செய்யவேண்டும்.
அனைத்தையும் இழந்து சாயி பாபாவை சரணடைந்த காலஞ் சென்ற சின்மயா நகர் வடிவேலன் அவர்கள், சாயியைச் சரணடைந்து, அவர் சேவையை செய்து அனைத்தையும் மீண்டும் பெற்றுக் கொண்டே வந்தார். ஆனால் என்ன காரணமோ, பாபா அவரை தம்மிடம் அழைத்துக் கொண்டார்.
அண்ணாநகரில் வசிக்கிற சண்முகம், சாயி தொண்டை முதன்மையாக நினைத்துச் செய்கிறார். இதனால் விளைந்த பலன், அனைத்து செல்வங்களையும் இழந்து, கஷ்டப்பட்ட நிலை மாறி, பழைய நிலைக்கு மீண்டும் வந்துவிட்டார்.
சென்னை சாலி கிராமத்தில் பார்வதி பவன் என்ற ஹோட்டல் முதலாளி தோத்தாத்ரி அவர்கள், வாரம் தோறும் மற்றவர்கள் மலைக்கும் அளவுக்கு தனது ஹோட்டலிலேயே சாயி சேவை செய்கிறார். இதன் விளைவு? பெருத்த நட்டத்திலிருந்து மீண்டு, இன்று பல புதிய நிறுவனங்களுக்கு உரிமையாளராகிக் கொண்டு வருகிறார்.
இந்தியன் வங்கிக் கிளை ஒன்றின் மேலாளரான வெங்கட்ராமன் என்ற சாயி பக்தர், சதா சாயி நாமம் சொல்வதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு விட்டார். அவருடைய தேவைகள் அனைத்தையும் இன்று பாபா கவனிக்கிறார்.
இப்படி நிறைய பேரை உதாரணமாகக் கூறலாம். உங்களில் யாரேனும் கேட்கலாம்.. ”சாமி, நானும் தான் சாயியைக் கும்பிடுகிறேன்.. ஆனால் இன்னும் கஷ்டப்படுகிறேனே? அது ஏன்? என்று.
பாபா சொன்ன அந்த வார்த்தையை மீண்டும் சொல்லிப் பாருங்கள்.. நீங்கள் அவரது சேவையில் இறங்கவேண்டும். அவரிடம் முழு விசுவாசத்துடன் இடைவிடாது, அவருடைய பாதுகாப்பை நாட வேண்டும்.. இப்படி செய்தால்தான் உங்கள் பிரச்சினை போகும்.
பாபாவுக்குச் சேவை செய்வதாக சொல்லி, அவரது கஜானாவிலிருந்து கொள்ளை அடிப்பதும், ஏமாற்று வேலை செய்வதும் சேவை ஆகாது. ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். அடுத்து, பாபா மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும். என்ன நடந்தாலும் சாயி பார்த்துக் கொள்வார் என எண்ண வேண்டும். அந்த நிலையில் பாபாவின் பாதுகாப்பைக் கோரிப் பெற வேண்டும். இதில் கவனமாக இருந்தால், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
பாபாவை எப்படி விசுவாசிக்க வேண்டும்?
இறைவனை வணங்காதவர்களையும், நாமத்தைச் சொல்லாதவர்களையும், நம்பிக்கையும் பக்தியும் இல்லாதவர்களையும், பஜனை பாடாதவர்களையும், இறைநாட்டமுடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள். அத்தகைய ஞானிகளின் சிகரம் சாயி என்பதை முழுமையாக நம்பவேண்டும்.
சிலை, யாககுண்டம், அக்கினி, ஒளி, சூரிய மண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்கு உரிய புனிதமான ஏழு பொருட்களுக்கும், இயற்கை சக்திகளுக்கும், மனிதர்களுக்கும் மேலானவர் குரு ராஜர். வேறு எதிலும் மனதை சிதறவிடாது ஒரு முகமாக அவரை வழிபட வேண்டும் என்பதை அறிந்து அவரை வழிபட வேண்டும்.
ஆத்மாவுக்கு இதமானதை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரசவ வலியைக் கொடுத்தது வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையா விடின் அவனுடைய வாழ்க்கையே வீண் என்பதை உணர்ந்து அவரை வணங்க வேண்டும்.
சாயியின் காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகிறதோ, அப்பொழுதெல்லாம் சாயீ கண் முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவு பகலாக நிலைத்துவிடுவார். கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும் போதும், சாப்பிடும்போதும் அவர் உம்முன் தோன்றுவர். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனே இருப்பார் என்கிற சத்சரித வாக்கை முழுமையாக நம்பி, அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் நிச்சயம் என் ஆசீர்வாதம் உனக்கு உண்டு என்பார் பாபா.
Monday, September 15, 2014
என் ஆசி உனக்கு உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment