Wednesday, September 17, 2014

வாழ்க்கையைக் கற்றுக்கொள்!

25129

அன்புள்ள குழந்தாய்!
பலமுறை உனக்கு புத்தி சொல்லியும் நீ கேட்க மறுக்கிறாய். உன் மகளுக்குத் தற்போதுதான் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். இதற்குள் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் ஏகப்பட்ட குறைகளை கூறுகிறாள்.
நீ, தவறு இழைத்துவிட்டதாக நினைத்து என்னிடம் முறையிடுகிறாய். நீ பார்த்து செய்த கல்யாணம்தானே பாபா, எதற்காக இப்படி என் குழந்தைக்கு நடக்கிறது? என என்னிடம் கேட்கிறாய்.
நீ கலங்குவதைப் பார்த்தால் மாப்பிள்ளை வீட்டார் கொடுமைக்காகவே பிறந்து வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. தவறு என் மீதும் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் மீதும் இல்லை. உன் மகள் மீது இருக்கிறது.
கல்யாணம் ஆன இரண்டு மூன்று மாதங்களிலேயே நிறைய பெண்கள் செய்கிற தவறு, தனது கணவன் தனது தாயார் பேச்சை கேட்கிறார், தனது நாத்தனார் பேச்சை மட்டும் கேட்டு, அவர்கள் சொல்கிற படிதான் நடக்கிறார். என்னை கண்டுகொள்வதில்லை.. இதனால் மனம் உடைந்து போகிறேன். மன இறுக்கத்தோடு இருக்கிறேன். ஒரு சாதாரண விருந்தாளி போல அங்கு தங்கியிருக்கிறேன். எனக்கு இவனோடு வாழப்பிடிக்கவில்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள்.
மகளின் வாழ்க்கையை அவளது கணவன் குடும்பத்தார் கெடுக்கிறார்கள் என்று நினைத்து, மாப்பிள்ளையை அழைத்து பேசுவது, மகளிடம் கூறி பேசவைப்பது என செயல்படத் தொடங்கி பல பெண்களின் பெற்றோர், தங்கள் மகளின் வாழ்வை கெடுத்துவிடுகிறார்கள்.
ஒருவரைப் பற்றிய மதிப்பீடு மூன்று மாதங்களில் மட்டுமே என்ன தெரியவரும்? எடுத்தவுடனே மாமியார் வீட்டில் அரசாட்சி செய்யவேண்டும் என்று நினைப்பதும், கணவன் தான் சொன்னபடியெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், வாங்குகிற சம்பளத்திற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் இளம் பெண்ணின் எதிர்பார்ப்பு. இது தவறான எதிர்பார்ப்பு.
நேற்று வந்தவளுக்காக, தன்னை பெற்று வளர்த்தவர்களையும், கூடப் பிறந்தவர்களையும் எந்த ஆண் மகனும் இழந்துவிடத் தயாராக இருக்கமாட்டான். காலம் செல்லச் செல்லத்தான் பெற்றோரையும் தனது சுற்றத்தாரையும் மெல்ல மெல்ல தவிர்த்து மனைவிக்கு முக்கியத்துவம் தர ஆரம்பிப்பான்.
ஒரு குழந்தை பிறந்த பிறகு அல்லது ஓரிரு ஆண்டுகள் கழிந்த பிறகு மனைவியின் மீது தனிக் கரிசனம் தோன்ற ஆரம்பிக்கும். இதுதான் இயல்பாக நடந்து வருகிற விக்ஷயம். அதுவரை பெண் பொறுமை காக்கவேண்டும்.
பெற்றோராகட்டும், அக்காள் தங்கை போன்ற உறவுகளாகட்டும், தனது மகன் அல்லது தம்பி தன் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான விக்ஷயம். இதனால், அவர்கள் இவனிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று நினைப்பதும், தனது கணவனை அடிமையைப் போல வைத்திருக்கிறார்கள் என தானே ஒரு முடிவுக்கு வந்து அதற்காக அவனிடம் சண்டை போடுவதும், பிரச்சினையை வளர்ப்பதும் புதிய மனைவியாக ஒரு வீட்டுக்குப் போன உனது பெண் தன்னுடைய வாழ்வுக்கு தானே வைத்துக்கொள்ளும் உலை ஆகும்.
அக்காவோ, மாமாவோ, அண்ணனோ அல்லது அம்மாவோ யாராக இருந்தாலும் அந்த வீட்டுக்கு உன் மகளை விட முன்னே வந்தவர்கள். அவர்கள் பேச்சை அவன் இன்றுதான் புதிதாகக் கேட்கிறான் என்றில்லை.. ஏற்கனவே கேட்டுக்கொண்டுதான் வந்திருக்கிறான்.. இன்னும் கேட்பான்.. அப்படி கேட்டு நடப்பதுதான் அவனுக்கு நல்லது. இல்லாவிட்டால் மனைவி பேச்சைக் கேட்டு, வீணாகிப்போய்விட்டான் என்ற பேச்சுக்கு அவன் ஆளாவதோடு, புதிய மனைவியின் கஷ்டத்திற்கும் அவன் காரணமாகிவிடுவான்.
நீ உனது மகளுக்காகப் புலம்புவதைப் போலவே உனது மருமகனின் தாயார் தனது மகளுக்காகப் புலம்பக்கூடாதா? அவளை வீட்டிற்குள் வைத்துப் பராமரிக்கக் கூடாதா? இதில் என்ன தவறு இருக்கப்போகிறது? அவர்கள் இருப்பதால் உன் மகளுக்கு என்ன குறைவு வந்துவிட்டது? எதற்காக அவள் அவர்களை வெறுக்கவேண்டும்..
புதிதாக திருமணம் ஆகி மாமியார் வீட்டுக்குப்போகிற மருமகள், அந்தக் குடும்பத்தில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
தனது வீட்டுச் சூழல் வேறு, புதிதாகப் புகுந்து உள்ள வீட்டின் சூழல் வேறு என்பதைப் புரிந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் நல்லது. அப்படி செய்யாமல் தனக்கு ஏற்ப அனைவரும் மாறவேண்டும் என எதிர்பார்ப்பதும், திருமணமாகி வந்தவுடனே, தான்தான் புகுந்த வீட்டுக்கு உரிமைக்காரி, மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் போக வேண்டும் என நினைப்பதும் மிகவும் தவறுதலான விக்ஷயமாகும்.
திருமணமான புதிதில் கணவன் மனைவியிடம் நீ யாரையாவது விரும்பியிருக்கிறாயா எனக் கேட்பான். உடனே மனைவி, ஆமாம்.. நாலு பேரை விரும்பினேன்.. தப்பெல்லாம் செய்யவில்லை.. என்னை நாலு பேர் பார்த்தார்கள்.. நான்தான் பார்க்கவில்லை என்பதுபோல எதையேனும் சொல்லி வைத்தால், அது கணவனின் உள்மனதை பாதித்து, மனைவி மீது ஒரு சந்தேகத்தை வளர்க்கக் காரணமாக அமைந்துவிடும்.
பிற்காலத்தில் தன் மனைவி யாரிடமாவது பேசினாலோ, பழகினாலோ கணவன் தவறாக அவளைப் புரிந்துகொண்டு நடத்துவான். வாழ்க்கை கசந்துபோகும். இப்படியே, மனைவி கணவனிடம், திருமணத்திற்கு முந்தையை வாழ்க்கையைப் பற்றி கேட்டுக் கொண்டு, அதை வைத்தே கணவனை குத்திக்காட்டிக்கொண்டிருப்பாள். இதுவும் அவனது மனதை பாதித்து நிறைய பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும். ஆகவே, இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கு முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதைவிட இன்னும் சிரிப்பான விசயம் என்னவெனில், தன் கணவனுக்கு ஆண்மையே இல்லை என்பதுபோல சொல்லிக்கொண்டு சில புதிய பெண்கள், வாழ்க்கையைத் துறந்து தாய் வீடு வந்து விடுகிறார்கள்.
நாலு பேருக்குத் தெரியாமல் வைக்கிற இந்த விக்ஷயத்தை நாலு பேர் அறிய விவாதிக்க வேண்டுமா என நினைக்கலாம்! துவக்கத்தில் எல்லாருக்குமே இப்படித்தான் இருக்கும். அதை பழக்கத்தின் மூலமும், அனுசரணையின் மூலமும் தான் சரி செய்யவேண்டும் என்பதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்வதில்லை.
இவையெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம் என்ற உண்மை இளம் பெண்ணுக்குத் தெரியாமல் போவது இயல்பு. ஆனால், பெண்ணைப் பெற்று வளர்த்து இவ்வளவு காலமாகக் குடும்பம் நடத்திய உனக்கும் தெரியாமல் போவதுதான் வேடிக்கை.
நான் உன் மகளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லிவிட்டேன், புரிகிற விதத்தில் பேசிப் பார்த்து விட்டேன்..நான் அவளோடு இருப்பதை அவள் உணர மறுக்கிறாள்.. வாழ்க்கையைக் கற்றுத் தருவதை அவள் புரிந்துகொள்ளவில்லை. இதனால் உனது மகளின் எதிர்காலம்தான் கெடப்போகிறது. அதை எச்சரித்துத் தடுக்கவே இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேர், குழந்தை பெற்று அது பேசத்தொடங்கிய பிறகு, குழந்தைக்கு நல்ல குருவைத்தேடி அலைகிறார்கள். ஆனால், பிறந்த குழந்தையே பிறருக்கு குருவாக இருப்பதை பலர் அறிவது கிடையாது.
பிறந்த குழந்தையை யார் தூக்கினாலும் பேசாமல் அனைவரிடமும் செல்லும்.. எதையும் காதில் போட்டுக் கொள்ளாது.. எந்தப் பிரச்சினையிலும் தலையிடாது.. சிறிது வளர்ந்த பிறகு, யார் முதன்மையானவர் என்பதை உணர்ந்து அவர்களிடம் அதிக நெருக்கம் காட்டும். பிழைக்கத் தெரிந்த பிள்ளை, சமயத்திற்கு ஏற்ப அனைவரிடமும் ஒட்டிக்கொள்ளும்...
அவர்கள் ரசிக்கத் தக்க விதத்திலும், ஏற்கத் தக்க விதத்திலும் நடந்துகொள்ள முயற்சிக்கும். ஒவ்வொரு நொடியையும் பிறர் ரசிக்குமாறும்,தனக்கு முக்கியத்துவம் தருமாறும் குழந்தை பார்த்துக்கொள்ளும்.
பிறந்து அறிவு முதிர்ச்சியே இல்லாத ஒரு குழந்தைக்கு இருக்கிற இயற்கை அறிவுகூட, வளர்ந்து திருணமாகி வாழ்க்கைப் பட்ட பல பெண்களுக்கு இருப்பதில்லை என்பது வருத்தமான விக்ஷயம்.. போன உடனேயே மாமியாரைத் தள்ளிவைப்பது, நாத்தனாரைக் கொடுமைக்காரி என்பது, கணவன் விட்டில் பூச்சி போல பெற்றவர்களையும், அவனுக்கு உரியவர்களையும் சுற்றிச் சுற்றி வருகிறான், தனக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது போன்று நடக்கிறார்கள். இது வாழ்க்கைக்கு உகந்தது கிடையாது.
அனைவரது நல்லெண்ணத்தையும் சம்பாதித்த பிறகு, அந்த வீட்டில் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை புதிய பெண் தெரிந்துகொள்ள வேண்டும். கணவனின் சம்பாத்தியம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்கு முன், தான் என்னென்ன சம்பாதிக்க வேண்டும் என்பதை பெண்தான் முன்னதாக முடிவு செய்யவேண்டும்.
தன் மீது நல்ல அபிப்பிராயத்தை கணவன் வீட்டிலிருந்து சம்பாதிக்க வேண்டும்.. பிறரது அன்பை சம்பாதிக்கவேண்டும்.. குடும்பத்தில் மரியாதையை சம்பாதிக்க வேண்டும்.. பிறந்த வீட்டுக்குப் பெருமையை சம்பாதிக்க வேண்டும்..
இப்படி தனது குணத்தாலும் நடத்தையாலும் முதலில் சம்பாத்தியம் செய்த பிறகு, கணவனின் சம்பாத்தியத்தின் மீது கண் வைத்தால் அது உருப்படியாக நம் கைக்கு வரும் என்பதை பெண் புரிந்துகொள்ள வேண்டும்.
மணமான பிறகு கணவன் வீட்டுக்கு வாழப் போகவேண்டும்.. தனது தாய் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக கணவனை வைத்துக்கொண்டு அவன் சம்பாத்தியத்தை முழுமையாக தன்னிடம் தந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.. இது அவனது தன்மானத்திற்கு இழுக்காக முடியும்..
இப்படி ஒவ்வொரு விக்ஷயமாக யோசித்து நடக்க உன் மகளுக்கு புத்தி சொல்லிக் கொடு.மற்றவர்கள் நடந்து கொள்கிற விதத்தைப் பார்த்து மன இறுக்கம் அடையாமல், எதையும் ரிலாக்ஸாக எடுத்துக்கொள்ள கற்றுக் கொடு..
வாழ்க்கை என்பது நீண்ட தூரம் போகவேண்டிய ஒரு பயணம். இதில் நாலும் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்தையும் எதிர்கொண்டால்தான் வாழ்க்கை சுகமாகப் போகும்.
இந்த நாட்டில் மணமாகி வாழ்க்கைப்பட்டுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகிதப் பெண்கள் இப்படித்தான் வாழ்க்கையில் பல விக்ஷயங்களைத்தாங்கிக் கொண்டு குடும்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் நீயும் விதிவிலக்கு அல்லவே-
துன்பத்தில் இன்பம் என்பதுதான் அனைவருக்கும் தரப்பட்ட வாழ்க்கை நியதி.. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு, இனி வாழப் போகிற வாழ்க்கை வேறு... புதிய வாழ்க்கைக்கு உன்னை தயார் படுத்திக்கொண்டு புதிய இல்லத்தில் வாழ்க்கைக்காகக் காத்திரு என்று அவளுக்குச் சொல்லிக்கொடு.. அமைதியாக, பொறுமையாக இருந்து அனைத்தையும் சகிப்பதற்கு கற்றுக் கொடு..
உனக்கு முன்னால் அந்த வீட்டுக்குச் சென்று உன் மகள் நன்றாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன். எல்லோரும் உன் மகளைப் போல நல்லவர்கள்தான்.. புரிய வை.
அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...