Tuesday, May 13, 2014

சாயி புத்ரன் பதில்கள்

5abe19fa-5480-4823-8a4a-c0f6a0b73e23_S_secvpf.gif

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்கிறார்களே இதற்குப் பொருள் என்ன?



( கே. சரவணன், சென்னை - 63)



எளியோர் என யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள். நாளைக்கு அவர்கள் உயர்வடைந்து, நாம் தாழ்கிற நிலை உண்டானால் சிரமப்பட வேண்டிருக்கும் என்ற பொருளில் இதைச் சொல்லியிருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்.



ஆனை -  அதாவது பசுவின் நெய். பூனை -  பூவின் நெய் (தேன்) எனப் பிரித்துப் படிக்க வேண்டும். உடலை வளர்க்க நெய் கலந்து உண்பார்கள். நெய் கலந்து உண்ணும் வசதியான வாழ்க்கைக்கு ஒரு காலம் இருப்பதைப் போல, பூ நெய்யைத் தேட வேண்டிய ஒரு காலமும் உண்டு. அதாவது நோய் வந்து விட்டால் மருந்துகளை தேனில் குழைத்துக் கொடுப்பார்கள். இந்த மருந்துகள் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்த முடியாத காலமும் வரும்.



உடம்பை வளர்ப்பவர்களே, ஒரு நாள் நோயும் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்பது இதற்குப் பொருள்.

Monday, May 12, 2014

அட்டாங்க யோகம்

yogam

தியானம் என்பது யோக மார்க்கத்தில் ஒரு படி நிலை. இதில் இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிராத்தியாகரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகைகள் உள்ளன. இதனைத்தான் அட்டாங்கயோகம் என்கிறார்கள்.

இமயம் என்பது தன்னை அடக்குவதாகும். தன்னை அடக்குவதாவது் அகிம்சை, உண்மை, களவுசெய்யாமை, பிறர் பொருள் விரும்பாமை, பிரம்மச்சர்யம் என ஐந்து வித விக்ஷயங்களைத் தவறாது கடைப்பிடிப்பதாகும்.

நியமம் என்பது தவம், சுத்தம், திருப்தி, ஞானநூல் ஆராய்ச்சி, ஈஸ்வர ஆதாரனம் என ஐந்து வகைகளைப் பின்பற்றுதல். இவற்றையெல்லாம் செய்த பின் தியானம் செய்வதுதான் முறை. மற்றவை பெயருக்காகச் செய்யப்படுபவை.

பாபாவின் அடியார்கள்!

Image

 

பாபாவின் அடியார்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி, உயர் அதிகாரி, கடைநிலை ஊழியர் என்ற பாகுபாடு கிடையாது. அவர் எல்லோரையும் சமமாகவே நடத்தினார்.



நானாசாகேப் சந்தோர்க்கர் ஆங்கில அரசில் உயர் அதிகாரி. கபர்டே அமராவதியில் பெரும் பணக்காரர், புகழ் பெற்ற வக்கீல். சிறந்த அறிவாளி. பஞ்சதசியைப் படித்து விளக்கம் சொல்வதில் நிபுணர்.



தீட்சித் மும்பையில் திறமைமிக்க சட்ட நிபுணர்.  ஆங்கில அரசாங்கம் திலகர் மீது குற்றம் சுமத்திய போது அவருக்காக வாதாடியவர். மிக்க வசதி படைத்தவர். பாபா சொல்லை வேத வாக்காகக் கருதியவர்.



எம்.பி. ரேகே, இந்தூரில் நீதிபதி. மகல்சாபதி ஒரு பொற்கொல்லர். கந்தோபா ஆலயத்தில் அர்ச்சகர். வறுமையான வாழ்வு. இவர் மற்றவர்களிடம் பணம் பெறுவதைக் கூட தடுத்தவர் பாபா. இதற்கான காரணம், பாபாவுக்கு மட்டுமே தெரியும்.



மகல் சாபதி 14 ஆண்டுகள் பாபாவுடன் இரவில் படுத்து உறங்கியவர். அவருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக தன்னோடு இரவைக் கழிப்பதைத் தவிர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அடுத்த ஓர் ஆண்டில் ஆண்வாரிசு கிடைக்கப் பெற்றார்.



தாசகணு மகராஜ், போலீஸ்காரர். கீர்த்தனைக்காரர். பாபாவின் புகழைப் பரப்புவதில் இவரும் நானா சாகேப் சந்தோர்க்கரும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். படிப்பறிவு குறைவு, ஆனால் ஈசா உபநிடதத்திற்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு பாபா இவரை உயர்த்தி விட்டார்.



மாதவ்ராவ் தேஷ்பாண்டே (சாமா), சீரடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர். பாபாவைப் பார்த்து, இவர் இரவில் ஏதேதோ உளறுகிறார், பாபா ஒரு பைத்தியம் என்றவர். ஆனால், பின்னாளில் சிவபெருமானுக்கு ஒரு நந்தி தேவர் மாதிரி பாபாவுக்கு நெருக்கமாகி விட்டார். பாபாவின் ஆசியால் விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கற்று பேராசிரியர் ஜி.கே. நார்கேவுக்கு விளக்கம் தரும் அளவுக்கு அதில் புலமை பெற்றுவிட்டார்.

Sunday, May 11, 2014

உனக்கு உறுதுணையாக இருப்பேன்!

12



என்பெயர்செ. பிரமிளா. அரசுப்பள்ளி ஆசிரியை. 2009 ல்திருமணம். இரண்டே மாதங்களில் கருவுற்றேன்.  பிப்ரவரி 2010  ல் எனக்கு சத்திரத்தில் சீமந்தம் நடந்தது. அன்று என்னிடம் சண்டையிட்டுப் போன கணவர், ஏப்ரல் 2010ல் பெண் குழந்தை பிறந்த ஆறாவது நாள் என்னை பார்க்க வந்து, விவாகரத்து கேட்டார். அவரது வற்புறுத்தலின் பேரில் கோர்ட்டிற்க்கு சென்று கையெழுத்திட்டேன்.



என் மீதுதான் தவறு இருப்பது போல சித்தரிக்கப்பட்டது. மனம் நொந்து, எதற்காகப் பிறந்தோம் என வேதனைப்பட்டேன். ஒருநாள் உதயக்குமாரி என்ற ஆசிரியை, சாயி வரதராஜன் எழுதிய சாயியின் குரல் என்ற புத்தகம் கொடுத்து, பாபாவை வேண்டு, உனக்கு அற்புதம் நடக்கும் என்று கூறினார்.



அந்தப் புத்தகத்தைப் படித்தேன். கர்மாவைப்பற்றி எழுதியிருந்தார். படித்ததும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது. காரணம், என் வாழ்வில் என்ன நடந்ததோ அது அத்தனையும் அதில் இருந்தது. இனி வரப்போகும் வாழ்க்கை பற்றியும் அதில் இருந்தது.



இன்றுவரைஅதில் குறிப்பிட்ட விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்போதுதான் பாபாவையும் அவர் மகிமையையும் உணர்ந்தேன்.



பிறகு, அதே ஆசிரியையுடன் கௌரிவாக்கம் பாபா ஆலயம் சென்று பாபாவின் கால்களில் விழுந்து அழுதேன். அப்போது அங்கிருந்தவர், தலையில் கை வைத்து கவலைப்படாதே உன் கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரும் என்றார்.



ஒருநாள் என் தாயாரின் வீட்டில் இருந்தேன்.  கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். தேஜசான முகம் கொண்ட மூன்று பிராமணர்கள் நின்றிருந்தார்கள். என்னிடம் தட்சணை கேட்டார்கள். கொடுத்தேன். பாபாவின் விக்ரகத்தை என் தலையில் வைத்து, கணவன் எவ்வளவு கொடுமைகளை செய்தாலும் அவன் உன்னை தேடி வரும் போது விட்டுக் கொடுத்துப்போ என்று கூறிச் சென்றார்கள்.



2011ல் முறைப்படி விவாகரத்து பெற்றோம். சாயிதரிசனத்தில் நான் படிக்கும் போது ஒரு தலைப்பு, கலக்கம் அடையாதே! திகைப்படையாதே! நடப்பது எல்லாம் நல்லதாக நடக்கும் என்று சாயி வரதராஜன் எழுதியிருந்தார்.



சரி, பாபா ஏதோ நல்லது நடக்கும் என்று உரைக்கிறார்  நான் அமைதியாக இருந்தேன். விவாகரத்து ஆன இரண்டு நாட்களிலேயே என் கணவர் என்னிடம் நாம் சேர்ந்து வாழலாம் என்று கேட்டார். அவர் செய்த கொடுமைகளுக்கு எந்த பெண்ணும் வாழமாட்டாள்.



ஆனால், பாபாவின் உத்தரவு நீ விட்டுக்கொடுத்துப் போ என்ற வார்த்தை. அதனால் வாழ சம்மதித்தேன்.



நாங்கள் இருவரும் சேர்ந்த பிறகு, முதல் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக காரில் திருப்பதிக்கு திருத்தணி வழியாக சென்று கொண்டிருந்தோம். அதுவரை உறங்கி வந்த நான் விழித்தேன். மலைப்பகுதியில் ஓர் அழகிய ஆலயத்தைப்பார்த்து என் கணவரிடம் இந்த ஆலயம் மிக அழகாக இருக்கிறது என்றேன்.



”இது நம் மதத்தவர் ஆலயமில்லை” என்றார் அவர். சிறிது தூரம் சென்றபோது, பாபா உட்கார்ந்திருப்பதைப் போல் பெரிய பேனர். தெலுங்கில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது பாபாஆலயம் என்பதை அறிந்து சென்று தரிசித்தோம்.



திருப்பதி சென்று ப்ரகாரத்தை வலம் வரும் போது, பாபாவைப் போல ஒருவர் கப்னிஅணிந்து, தலைப்பாகையுடன் காட்சியளித்தார். அவரைப் பார்த்தவர்கள், ”இவர் பாபா போல இருக்கிறார்” என்றார்களே தவிர, அருகே யாரும் செல்லவில்லை. எனக்கும் பயமாக இருந்தது.



ஒரு இளைஞர் ஓடி வந்து கால்களில் விழுந்த போது, அவர் தன் காதுகளில் கை வைத்து ஒரு முத்து ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அதைப் பார்த்து நானும் அவரது கால்களில் விழுந்தேன். பாபா டாலர் ஒன்றை கொடுத்தார். பாபாவிடமே பாபாவின் டாலரைப் பெற்றேன் என மகிழ்ந்தேன்.



எனக்கு முதல் பிரசவத்திற்குப் பிறகு அதிக மன வேதனையாலும் உடல் அலைச்சலாலும் குடல் இறக்க நோய் வந்து பெரும் அவதிக்குள்ளானேன்.



ஜூன் 2012ல் இரண்டாவதாக கருவுற்றேன்.  ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என ரிப்போர்ட் வந்தது. ஸ்கேன் சென்ட்டரில் அழுது கொண்டிருந்த போது, என் குறையைக் கேட்ட வயதான பெண்மணி, ”வீட்டில் இருந்தபடி வியாழக்கிழமை பூஜை செய். உனக்கு அழகிய குழந்தை பிறக்கும்”என்றார்.



டி.என்.சி. செய்து கொண்ட பிறகு அந்த பூஜையை முறைப்படி செய்தேன். பெருங்களத்தூர் பாபா ஆலயத்தில் கூட்டுப்பிரார்த்தனையில் என் கோரிக்கை வைக்கப்பட்டது.



ஒரு நாள் கனவில் பாபா வந்து, ”இவளுக்கு பல வியாதிகள் வரப்போகிறது. ஆனால், கவலைப்படாதே. உன்னை காப்பேன்” என்று கூறினார்.



கனவு கண்ட மறுநாளே கரு உறுதிப்பரிசோதனை செய்தேன். பாசிடிவ் என ரிசல்ட் வந்தது. ஆனால் நோய் வரும் என பாபா சொன்னாரே என பயந்தேன். நான் பயந்தபடி நடந்தது. ஐந்தாம் மாதத்தில் கர்ப்பக்கால சர்க்கரை நோய், கருப்பை பலவீனம், தைராய்டு நோய், இரத்த அழுத்தம் என வந்தன. குடல் இறக்க நோயினால் வயிறு பெரிதாகி அதிகமாக பாதிக்கப்பட்டேன். இந்த நிலையில் குழந்தை எப்படி பிறக்குமோ என பயந்தேன் சிசேரியன் தான் என்றார்கள்.



குடல் இறக்க சிகிச்சை, சிசேரியன், குடும்பக்கட்டுப்பாடு மூன்றையும் ஒரே நேரத்தில் செய்யுமாறு கெஞ்சினேன். மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கோரிக்கையுடன் பல மருத்துவமனைகளுக்கு அலைந்தேன்.



போரூரில் ஒரு ஹாஸ்பிடலில் கால் வைத்ததும், பாபா வரவேற்பது போன்ற சிலை உள்ளது. திரும்பும் இடமெல்லாம் பாபா. இந்த இடத்தைத் தேர்வு செய்தேன்.



பாபாவிடம் வலியையும் வேதனையையும் தாங்க முடியவில்லையே என அழுதேன். யாராவது ஒரு டாக்டர் வந்து மூன்று அறுவை சிகிச்சைகளையும் செய்வதாகச் சொன்னால், இரண்டு முறை உனது சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்வேன் என வேண்டினேன்.



ஆபரேஷனுக்கு முதல் நாள் இரவு குடல் சிகிச்சை மருத்துவர்கள் வந்து, குடல் அறுவை சிகிச்சையையும் செய்வதாக் கூறினார்கள்.



வியாழன் 11 மணிக்கு அறுவை சிகிச்சை. எப்படியாவது எனக்கு தரிசனம் தந்து, சிகிச்சையை செய்ய வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன்.



யாரும் வரவில்லை. மயக்க மருந்து போட்டதும், மயங்கிவிட்டேன். பிறகு விழித்தபோது எந்த வலியும்இல்லை. மருத்துவர்கள் அடிக்கடி வந்து வலிக்கிறதா எனக்கேட்டனர். இல்லை என்றேன்.



குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு நர்ஸ் வந்து, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்? எனக் கேட்டார்.



முடிவு செய்யவில்லை. ஆனால் பெயருக்கு முன்போ, பின் போ சாய் என வைப்போம் என்றேன்.



உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்களுக்குக் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பெயரும்”சாய்”தான் என்றார். மகிழ்ச்சியால் துள்ளினேன். நீங்களா வந்து எனக்கு அறுவை சிகிச்சை செய்தீர்கள்? என பாபாவிடம் கேட்டேன்.



வீட்டிற்கு வந்ததும், ராகவி சாய் எனப் பெயர் சூட்டினோம். டிசம்பர் 12 சாயிதரிசனம் இதழில் சாயி வரதராஜன் எழுதிய சாயியின் குரலில், நடப்பது நடந்தே தீரும் என்ற தலைப்பில் குழந்தையின் மரணப் போராட்டத்தைப் பற்றியும், குழந்தை பிழைக்கும் என்றும் இறுதியில் என் பெயரும் பிழைக்கும் என்றும் பாபா சொல்லி இருந்தார்.



இதைப் பார்த்ததும் சற்று பயமும் இருந்தது. மறுநாள் ராகவி சாய்க்கு பாலூட்டும் போது எனது பெரியமகள் பைரவி ஒரு கனமான பொருளை எடுத்து எதிர்பாராத வகையில் குழந்தையின் மீது வீச, குழந்தை வீல் எனக் கத்த, அனைவரும் பயந்து கதறிவிட்டோம்.



குழந்தையின் தலையைத் தொட்டுப் பார்த்தால் அடிபட்ட அறிகுறி எதுவுமில்லை. குழந்தை நன்றாக இருந்தது. சத்சரித்திரத்தில்நெருப்பில்விழ இருந்தகுழந்தையைக்காப்பாற்றியகதை இருக்கிறது. அதுபோலஎன்குழந்தையும் காப்பாற்றப்பட்டதைஉணர்ந்தேன்.



சாயிதரிசனம் இதழில் வரும் அத்தனை விஷயங்களும் பாபா தனது பக்தர்களுக்குத் தெரிவிக்கும் கருத்துக்கள். சாயிபாபாவை அடைந்தவர்களுக்கு அவர் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சாட்சி.



செ. பிரமிளாதேவி, குரோம்பேட்டை

புகழ்த்துணையாரும் புதுப்பெருங்களத்தூரும்!

suvarnapureeswarar



கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது அழகாபுத்தூர் என்னும் அழகிய கிராமம். இவ்வூரில் சுவர்ணபுரீஸ்வரர் என்னும் படிக்காசுநாதர் சிவன் கோயில் உள்ளது இவ்வூரில் புகழ்த்துணையார் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு சிவன் மீது அபார பக்தி. அவர் தினமும் அருகிலுள்ள அரசலாற்றில் புனிதநீர் எடுத்து சிவனுக்கு அபிசேகம் செய்து நைவேத்தியம் படைப்பார். ஒரு நாள் கூட இதிலிருந்து அவர் தவறியதில்லை.  நான் தினமும் பூஜை செய்கிறேன். எனக்கு ஏதாவது பலனைக் கொடு என சிவபெருமானிடம் கேட்டதும் இல்லை. அவருக்குத் துணையாக அவரது துணைவியார் செயல்பட்டார். கணவரது குறிப்பறிந்து அவரது சிவபக்திக்கு எந்தக் குறையும் வராது கணவருக்கேற்ற குணவதியாகத் திகழ்ந்தார்.



வயல்வெளிகள் நிறைந்த பசுமையான ஊர். மக்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தனர். புகழ்த்துணையாரின் தூய பக்தியை உலகத்தாருக்கு வெளிப்படுத்த எண்ணினான் சிவன்.



சிவன் சோதித்து நன்மை செய்வதே வழக்கம். அந்த ஊரில் பஞ்சம் ஏற்படச் செய்தார். மழை பொய்த்தது. அரசலாறு வறண்டது. குடிப்பதற்கே தண்ணீரில்லை. வயல்கள் எல்லாம் காய்ந்து, பூமி வெடித்தது.



சோற்றுக்கே கஷ்டப்பட்ட மக்கள், ஊரை காலி செய்து விட்டு பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்குச் சென்றார்கள்.



புகழ்த்துணையார் தான் சேமித்து வைத்திருந்த தானியத்தை வைத்து தினமும் சிவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். அரசலாற்றில் குழி தோண்டி அதில் ஊறும் நீரை அபிஷேகம் செய்தார். மக்கள் எல்லோரும் வாழ வழியின்றி வறுமையில் ஊரை காலி செய்துவிட்டார்களே, இது என்ன சோதனை இறைவா என மனம் வருந்தினார்.



அன்றிரவு சிவபெருமான் இவரது கனவில் தோன்றி, உன் பக்திக்கு மெச்சினேன். தினமும் இங்குள்ள பீடத்தில் ஒரு தங்க நாணயத்தை வைத்து விடுவேன். அதை வைத்து பிழைத்துக் கொள்வீராக என்று சொன்னார்.



தனக்குக் கிடைத்த தங்கக்காசை சிவ பூஜைக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். வருண பகவானும் மழையைப் பொழியச் செய்தார். புகழ்த்துணையார் வெளியூர் சென்றவர்களையெல்லாம் அழைத்து வந்து விவசாயத்தையும் மற்ற பணிகளையும் செய்ய வைத்தார். ஊரும் மக்களும் செழிப்புற்றனர்.



நம்பிக்கை, பொறுமையுடன் கடவுளுக்கு சேவை செய்த புகழ்த்துணையார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார்.



புகழ்த்துணையார் போலும் அகில இந்திய சாயி சமாஜத்தை நிறுவி இந்தியா முழுவதும் சாயிபாபா புகழை பரப்பியத் தமிழ்த் திருமகன் குருஜி  நரசிம்ம சுவாமிகள். கயிலையே மயிலையாக கொண்டுள்ள மயிலாப்பூரில் சற்குரு சாயிபாபாவுக்கு ஆலயத்தை அமைத்ததுடன், சாயிநாதனின் உயர்ந்த சீடனாக சமாதி கொண்டு மக்களுக்கு அருள் வழங்கி வருகிறார்கள்.



நரசிம்ம சுவாமிகள் வழியில் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த சாயி வரதராஜன் அவர்கள் கனவில் பாபா தோன்றவில்லை. அவரது நெஞ்சில் குடி கொண்டுள்ளார். உன்னில் நானிருக்கிறேன், என்னில் இருக்கும் நீ, ஏழைகள் துயர் நீக்கும் மகராஜாக ஆகு என சத்குருதேவர் ஆக்கி வைத்திருக்கிறார். அதோடு நமக்கு அடையாளமும் காட்டியிருக்கிறார்.



குருதேவர் சாயி வரதராசனார், வறுமையைக் கண்டு அஞ்சியதுமில்லை. வளமையைக் கண்டு சந்தோக்ஷப்பட்டதுமில்லை. பாபா.. பாபா என்று அவர் நினைவில் வாழ்வதுடன், அறியாமையில் வாழ்கிற, விதியே என்று வீதியில் அலையும் அடித்தட்டு மக்களுக்கு பாபாவின் அருளாலும், உதியின் மகிமையாலும், புத்துணர்ச்சி தருகிற சித்தனாக, சத்குரு சாயிநாதனின் தூதுவனாக மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்.



கூட்டுப்பிரார்த்தனை மூலம் நலம் பெற்றவர்கள், வளம் பெற்றவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.



சாயிதரிசனம் பத்திரிகை நடத்துவதிலாகட்டும், சாய்நாத் பப்ளிகேக்ஷன்ஸ் மூலம் விற்பனையிலாகட்டும், லாபமா? நஷ்டமா என்பது அவருக்குத் தெரியாது.



சாயிபக்தர்கள் மட்டுமல்ல, மக்கள் எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி, வேறு ஒன்றரியேன் பராபரமே என்ற திருவாக்குக்கு ஒப்ப செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.



இவருடைய துணைவியார் சாயி ஜெயந்தி அவர்கள் திருவள்ளுவருக்கு வாசுகி போல் குடும்பப்பொறுப்பையும் _ சாயிதரிசனம் பத்திரிகை, _ சாயிநாத் பப்ளிகேக்ஷன்ஸ் புத்தக வெளியீடு, சீரடி சாய் சம தர்ம சமாஜ், சாய்பாபா பிரார்த்தனை மையம் ஆகியவற்றை சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்.



மனைவி அமைவதெல்லாம் தெய்வம் கொடுத்த வரம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை, சாயி வரதராசனார் அவர்களுக்கு மனைவி அமைந்தது சற்குரு சாயிபாபா கொடுத்த வரம் என்றே சொல்லலாம்.



அன்றைய காலக் கட்டத்திற்கு புகழ்த்துணையார் சிவபக்தி சிறந்ததே. தீவிரவாதமும், ஜாதிமதப் பிரச்சினைகளும், வாய்மை பொய்த்து, பொய்மை ஆளுகின்ற இந்தக் காலக்கட்டத்திற்கு, சீரடி சாயி மகானின் நம்பிக்கை - பொறுமையுடன் அன்பையும் போதிக்கின்ற வகையில் செயல்பட்டாக வேண்டும்.



பரமஹம்சராமகிருஷ்ணருக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்து, உலகமெங்கும் இந்து சம தர்ம முழக்கம் எழுப்பினார்.



நமக்குக் கிடைத்த கலியுக தெய்வமாக, சுயம்பு முத்தமாகத் தோன்றிய சற்குரு சாயிநாதரின் புகழ் பரப்பும் சீடனாக குருதேவர் திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்ற உயர்ந்த குறிக்கோளோடு அரும் பணியாற்றி வருகிறார்.



ராமருக்கு அனுமன் போலவும், அணில் போலவும் செயல்படுவதுடன் எறும்பு போல் நம்மால் முடிந்ததை சேமித்துக் கொடுப்போம். சாயி பந்துக்களே வசதியுள்ளவர்கள் திருப்பணிக்கு வாரி வழங்குங்கள். வசதியில்லாதவர்கள் தங்களால் இயன்றதை செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாதவர்கள் சாய்ராம் என்ற முழக்கத்தை திசையெங்கும் ஒலிக்கச் செய்யுங்கள்.



சாயியைப் பணிக  சகல நலம் - வளம் பெறுக.



சாயிதாசன் டி.கோபால், விருகம்பாக்கம்

Saturday, May 10, 2014

நீ என் தாசனாக மாறு! – பகுதி 6

Image

பக்தன் எப்படி இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பாபா தெளிவுபடுத்தினார். அவைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது:



 ஆத்ம விசாரணை செய்யவேண்டும்



பாபா சொன்னார்: “போய் உம்மிடத்தில் உட்கார்ந்து கொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் மலிவாகவே வாங்கலாம். ஆனால் உலகமெங்கும் தேடினாலும் ஆத்ம விசாரம் செய்யும் ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கடினம்.”



ஆத்ம விசாரம் என்பது, என்னைப் போல இவர்களும் நன்மை அடையவேண்டும் என நினைப்பது. மழை எல்லோருக்காகவும் பொழி கிறது,



சூரியனும் சந்திரனும் எல்லோருக்காகவும் ஒளிர்கின்றன. இருள் எல்லோருக்காவும் சூழ்கிறது. காற்று எல்லோருக்காகவும் வீசுகிறது. மண் எல்லோரையும் தாங்குகிறது. நெருப்பு எல்லோருக்காகவும் எரிகிறது. இதுதான் ஆத்ம விசாரம்.



தனது சேவையில் எதையும் பாகுபடுத்திப் பார்க்கக்கூடாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! என்றார்கள்.



யாதும் ஊரே! யாவரும் நண்பர்! என்றார்கள். என்னாடு, என் மக்கள் என்றார்கள். எவ்வெவ்வுயிரும் என்னுயிரே என்றார்கள். உன்னைப் போல பிறனை நேசி என்றார்கள். அன்பே சிவம் என்றார்கள்.



இப்படி, அன்பால், அரவணைப்பால், இரக்கத்தால், கருணையால் பிறரை உண்மையாக நேசித்து அவர்களுக்கு உதவுவதுதான் ஆத்ம விசாரம்.



இவற்றையெல்லாம் நீ சரியாகச் செய்வாயானால், செய்ய முயற்சிப்பாயானால் அதுவே நீ சாயி பக்தனாக இருப்பதற்கானத் தகுதி. இந்த தகுதியை பெற்றுவிட்டால் உன்னை விட்டு இமைப்பொழுதும் பாபா நீங்கவே மாட்டார்.



      ஜெய் சாய்ராம்!                                                                                                                                        சாயி வரதராஜன்

சாயி புத்ரன் பதில்கள்

Image

 

கர்மா என்பதை புரியும் படி சொல்லுங்களேன்.
(கே. மகேஷ், சென்னை - 60)
ஒரு செல்வந்தர் வீட்டில் வறியவன் ஒருவன் வேலை செய்துவந்தான். முதலாளிக்கு உண்மையான விசுவாசி. அவனை கொல்லைப் புற வழியாக வரவழைத்துதான் பேசுவார் செல்வந்தர். வீட்டில் மீதமான பழைய சாதத்தை கொல்லைப்புறத்தில் வைக்கப்பட்ட பழைய பாத்திரத்திலிட்டுக் கொடுப்பார்.
தனக்காக உழைப்பவனாயிற்றே என்ற எண்ணம் ஒருபோதும் அவருக்கு வந்ததில்லை. அவன் விதி அப்படிப்பட்டது என்று நினைப்பார் போலும்.
ஒருநாள் செல்வந்தரும் அவரது வேலைக்காரனும் இறந்துபோனார்கள். அவர்களது பூர்வ ஜென்ம நன்மை தீமைகளை இறைவன் கணக்கிட்டு, வேலைக்காரனை செல்வந்தர் மகன் வயிற்றிலும், செல்வந்தரை வேலைக்காரர் மகன் வயிற்றிலும் பிறக்க வைத்தார்.
அது மட்டுமல்ல, பூர்வ நினைவுகளையும் கொடுத்து வைத்தார். தன் வீட்டுக்கு ஏழ்மைக்கோலத்தோடு வரும் தனது முதலாளியைப் பார்த்து, செல்வச்செழிப்பில் இருக்கும் அந்த வேலைக்காரன், எழுந்து நின்று மரியாதை செலுத்துவான்.
என் இடத்தில் இருக்கிறாயா துஷ்டனே என பழைய முதலாளி வந்து இவனை கொட்டகைக்குத்துரத்துவான். இதை கவனிக்கும் செல்வந்தன் பிள்ளை, தனது பூர்வத் தந்தையாகிய வேலைக்காரக் குழந்தையை அடித்து, கொட்டகைக்கு விரட்டிவிட்டு, இப்போதைய தனது குழந்தையாகிய பூர்வ வேலைக்காரனை தூக்கி வைத்துக் கொஞ்சுவான். பூர்வ நினைவு இருப்பதால், வேலைக்காரக் குழந்தை, தான் தான் அவனது தந்தை என எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அங்கே அவன் பேச்சு எடுபடாது.
இதுதான் கர்மா என்பது..

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...