Sunday, May 11, 2014

புகழ்த்துணையாரும் புதுப்பெருங்களத்தூரும்!

suvarnapureeswarar



கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது அழகாபுத்தூர் என்னும் அழகிய கிராமம். இவ்வூரில் சுவர்ணபுரீஸ்வரர் என்னும் படிக்காசுநாதர் சிவன் கோயில் உள்ளது இவ்வூரில் புகழ்த்துணையார் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு சிவன் மீது அபார பக்தி. அவர் தினமும் அருகிலுள்ள அரசலாற்றில் புனிதநீர் எடுத்து சிவனுக்கு அபிசேகம் செய்து நைவேத்தியம் படைப்பார். ஒரு நாள் கூட இதிலிருந்து அவர் தவறியதில்லை.  நான் தினமும் பூஜை செய்கிறேன். எனக்கு ஏதாவது பலனைக் கொடு என சிவபெருமானிடம் கேட்டதும் இல்லை. அவருக்குத் துணையாக அவரது துணைவியார் செயல்பட்டார். கணவரது குறிப்பறிந்து அவரது சிவபக்திக்கு எந்தக் குறையும் வராது கணவருக்கேற்ற குணவதியாகத் திகழ்ந்தார்.



வயல்வெளிகள் நிறைந்த பசுமையான ஊர். மக்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தனர். புகழ்த்துணையாரின் தூய பக்தியை உலகத்தாருக்கு வெளிப்படுத்த எண்ணினான் சிவன்.



சிவன் சோதித்து நன்மை செய்வதே வழக்கம். அந்த ஊரில் பஞ்சம் ஏற்படச் செய்தார். மழை பொய்த்தது. அரசலாறு வறண்டது. குடிப்பதற்கே தண்ணீரில்லை. வயல்கள் எல்லாம் காய்ந்து, பூமி வெடித்தது.



சோற்றுக்கே கஷ்டப்பட்ட மக்கள், ஊரை காலி செய்து விட்டு பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்குச் சென்றார்கள்.



புகழ்த்துணையார் தான் சேமித்து வைத்திருந்த தானியத்தை வைத்து தினமும் சிவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். அரசலாற்றில் குழி தோண்டி அதில் ஊறும் நீரை அபிஷேகம் செய்தார். மக்கள் எல்லோரும் வாழ வழியின்றி வறுமையில் ஊரை காலி செய்துவிட்டார்களே, இது என்ன சோதனை இறைவா என மனம் வருந்தினார்.



அன்றிரவு சிவபெருமான் இவரது கனவில் தோன்றி, உன் பக்திக்கு மெச்சினேன். தினமும் இங்குள்ள பீடத்தில் ஒரு தங்க நாணயத்தை வைத்து விடுவேன். அதை வைத்து பிழைத்துக் கொள்வீராக என்று சொன்னார்.



தனக்குக் கிடைத்த தங்கக்காசை சிவ பூஜைக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். வருண பகவானும் மழையைப் பொழியச் செய்தார். புகழ்த்துணையார் வெளியூர் சென்றவர்களையெல்லாம் அழைத்து வந்து விவசாயத்தையும் மற்ற பணிகளையும் செய்ய வைத்தார். ஊரும் மக்களும் செழிப்புற்றனர்.



நம்பிக்கை, பொறுமையுடன் கடவுளுக்கு சேவை செய்த புகழ்த்துணையார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார்.



புகழ்த்துணையார் போலும் அகில இந்திய சாயி சமாஜத்தை நிறுவி இந்தியா முழுவதும் சாயிபாபா புகழை பரப்பியத் தமிழ்த் திருமகன் குருஜி  நரசிம்ம சுவாமிகள். கயிலையே மயிலையாக கொண்டுள்ள மயிலாப்பூரில் சற்குரு சாயிபாபாவுக்கு ஆலயத்தை அமைத்ததுடன், சாயிநாதனின் உயர்ந்த சீடனாக சமாதி கொண்டு மக்களுக்கு அருள் வழங்கி வருகிறார்கள்.



நரசிம்ம சுவாமிகள் வழியில் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த சாயி வரதராஜன் அவர்கள் கனவில் பாபா தோன்றவில்லை. அவரது நெஞ்சில் குடி கொண்டுள்ளார். உன்னில் நானிருக்கிறேன், என்னில் இருக்கும் நீ, ஏழைகள் துயர் நீக்கும் மகராஜாக ஆகு என சத்குருதேவர் ஆக்கி வைத்திருக்கிறார். அதோடு நமக்கு அடையாளமும் காட்டியிருக்கிறார்.



குருதேவர் சாயி வரதராசனார், வறுமையைக் கண்டு அஞ்சியதுமில்லை. வளமையைக் கண்டு சந்தோக்ஷப்பட்டதுமில்லை. பாபா.. பாபா என்று அவர் நினைவில் வாழ்வதுடன், அறியாமையில் வாழ்கிற, விதியே என்று வீதியில் அலையும் அடித்தட்டு மக்களுக்கு பாபாவின் அருளாலும், உதியின் மகிமையாலும், புத்துணர்ச்சி தருகிற சித்தனாக, சத்குரு சாயிநாதனின் தூதுவனாக மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்.



கூட்டுப்பிரார்த்தனை மூலம் நலம் பெற்றவர்கள், வளம் பெற்றவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.



சாயிதரிசனம் பத்திரிகை நடத்துவதிலாகட்டும், சாய்நாத் பப்ளிகேக்ஷன்ஸ் மூலம் விற்பனையிலாகட்டும், லாபமா? நஷ்டமா என்பது அவருக்குத் தெரியாது.



சாயிபக்தர்கள் மட்டுமல்ல, மக்கள் எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி, வேறு ஒன்றரியேன் பராபரமே என்ற திருவாக்குக்கு ஒப்ப செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.



இவருடைய துணைவியார் சாயி ஜெயந்தி அவர்கள் திருவள்ளுவருக்கு வாசுகி போல் குடும்பப்பொறுப்பையும் _ சாயிதரிசனம் பத்திரிகை, _ சாயிநாத் பப்ளிகேக்ஷன்ஸ் புத்தக வெளியீடு, சீரடி சாய் சம தர்ம சமாஜ், சாய்பாபா பிரார்த்தனை மையம் ஆகியவற்றை சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்.



மனைவி அமைவதெல்லாம் தெய்வம் கொடுத்த வரம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை, சாயி வரதராசனார் அவர்களுக்கு மனைவி அமைந்தது சற்குரு சாயிபாபா கொடுத்த வரம் என்றே சொல்லலாம்.



அன்றைய காலக் கட்டத்திற்கு புகழ்த்துணையார் சிவபக்தி சிறந்ததே. தீவிரவாதமும், ஜாதிமதப் பிரச்சினைகளும், வாய்மை பொய்த்து, பொய்மை ஆளுகின்ற இந்தக் காலக்கட்டத்திற்கு, சீரடி சாயி மகானின் நம்பிக்கை - பொறுமையுடன் அன்பையும் போதிக்கின்ற வகையில் செயல்பட்டாக வேண்டும்.



பரமஹம்சராமகிருஷ்ணருக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்து, உலகமெங்கும் இந்து சம தர்ம முழக்கம் எழுப்பினார்.



நமக்குக் கிடைத்த கலியுக தெய்வமாக, சுயம்பு முத்தமாகத் தோன்றிய சற்குரு சாயிநாதரின் புகழ் பரப்பும் சீடனாக குருதேவர் திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்ற உயர்ந்த குறிக்கோளோடு அரும் பணியாற்றி வருகிறார்.



ராமருக்கு அனுமன் போலவும், அணில் போலவும் செயல்படுவதுடன் எறும்பு போல் நம்மால் முடிந்ததை சேமித்துக் கொடுப்போம். சாயி பந்துக்களே வசதியுள்ளவர்கள் திருப்பணிக்கு வாரி வழங்குங்கள். வசதியில்லாதவர்கள் தங்களால் இயன்றதை செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாதவர்கள் சாய்ராம் என்ற முழக்கத்தை திசையெங்கும் ஒலிக்கச் செய்யுங்கள்.



சாயியைப் பணிக  சகல நலம் - வளம் பெறுக.



சாயிதாசன் டி.கோபால், விருகம்பாக்கம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...