Sunday, May 11, 2014

உனக்கு உறுதுணையாக இருப்பேன்!

12



என்பெயர்செ. பிரமிளா. அரசுப்பள்ளி ஆசிரியை. 2009 ல்திருமணம். இரண்டே மாதங்களில் கருவுற்றேன்.  பிப்ரவரி 2010  ல் எனக்கு சத்திரத்தில் சீமந்தம் நடந்தது. அன்று என்னிடம் சண்டையிட்டுப் போன கணவர், ஏப்ரல் 2010ல் பெண் குழந்தை பிறந்த ஆறாவது நாள் என்னை பார்க்க வந்து, விவாகரத்து கேட்டார். அவரது வற்புறுத்தலின் பேரில் கோர்ட்டிற்க்கு சென்று கையெழுத்திட்டேன்.



என் மீதுதான் தவறு இருப்பது போல சித்தரிக்கப்பட்டது. மனம் நொந்து, எதற்காகப் பிறந்தோம் என வேதனைப்பட்டேன். ஒருநாள் உதயக்குமாரி என்ற ஆசிரியை, சாயி வரதராஜன் எழுதிய சாயியின் குரல் என்ற புத்தகம் கொடுத்து, பாபாவை வேண்டு, உனக்கு அற்புதம் நடக்கும் என்று கூறினார்.



அந்தப் புத்தகத்தைப் படித்தேன். கர்மாவைப்பற்றி எழுதியிருந்தார். படித்ததும் என் கண்களில் கண்ணீர் வடிந்தது. காரணம், என் வாழ்வில் என்ன நடந்ததோ அது அத்தனையும் அதில் இருந்தது. இனி வரப்போகும் வாழ்க்கை பற்றியும் அதில் இருந்தது.



இன்றுவரைஅதில் குறிப்பிட்ட விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்போதுதான் பாபாவையும் அவர் மகிமையையும் உணர்ந்தேன்.



பிறகு, அதே ஆசிரியையுடன் கௌரிவாக்கம் பாபா ஆலயம் சென்று பாபாவின் கால்களில் விழுந்து அழுதேன். அப்போது அங்கிருந்தவர், தலையில் கை வைத்து கவலைப்படாதே உன் கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரும் என்றார்.



ஒருநாள் என் தாயாரின் வீட்டில் இருந்தேன்.  கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். தேஜசான முகம் கொண்ட மூன்று பிராமணர்கள் நின்றிருந்தார்கள். என்னிடம் தட்சணை கேட்டார்கள். கொடுத்தேன். பாபாவின் விக்ரகத்தை என் தலையில் வைத்து, கணவன் எவ்வளவு கொடுமைகளை செய்தாலும் அவன் உன்னை தேடி வரும் போது விட்டுக் கொடுத்துப்போ என்று கூறிச் சென்றார்கள்.



2011ல் முறைப்படி விவாகரத்து பெற்றோம். சாயிதரிசனத்தில் நான் படிக்கும் போது ஒரு தலைப்பு, கலக்கம் அடையாதே! திகைப்படையாதே! நடப்பது எல்லாம் நல்லதாக நடக்கும் என்று சாயி வரதராஜன் எழுதியிருந்தார்.



சரி, பாபா ஏதோ நல்லது நடக்கும் என்று உரைக்கிறார்  நான் அமைதியாக இருந்தேன். விவாகரத்து ஆன இரண்டு நாட்களிலேயே என் கணவர் என்னிடம் நாம் சேர்ந்து வாழலாம் என்று கேட்டார். அவர் செய்த கொடுமைகளுக்கு எந்த பெண்ணும் வாழமாட்டாள்.



ஆனால், பாபாவின் உத்தரவு நீ விட்டுக்கொடுத்துப் போ என்ற வார்த்தை. அதனால் வாழ சம்மதித்தேன்.



நாங்கள் இருவரும் சேர்ந்த பிறகு, முதல் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக காரில் திருப்பதிக்கு திருத்தணி வழியாக சென்று கொண்டிருந்தோம். அதுவரை உறங்கி வந்த நான் விழித்தேன். மலைப்பகுதியில் ஓர் அழகிய ஆலயத்தைப்பார்த்து என் கணவரிடம் இந்த ஆலயம் மிக அழகாக இருக்கிறது என்றேன்.



”இது நம் மதத்தவர் ஆலயமில்லை” என்றார் அவர். சிறிது தூரம் சென்றபோது, பாபா உட்கார்ந்திருப்பதைப் போல் பெரிய பேனர். தெலுங்கில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது பாபாஆலயம் என்பதை அறிந்து சென்று தரிசித்தோம்.



திருப்பதி சென்று ப்ரகாரத்தை வலம் வரும் போது, பாபாவைப் போல ஒருவர் கப்னிஅணிந்து, தலைப்பாகையுடன் காட்சியளித்தார். அவரைப் பார்த்தவர்கள், ”இவர் பாபா போல இருக்கிறார்” என்றார்களே தவிர, அருகே யாரும் செல்லவில்லை. எனக்கும் பயமாக இருந்தது.



ஒரு இளைஞர் ஓடி வந்து கால்களில் விழுந்த போது, அவர் தன் காதுகளில் கை வைத்து ஒரு முத்து ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அதைப் பார்த்து நானும் அவரது கால்களில் விழுந்தேன். பாபா டாலர் ஒன்றை கொடுத்தார். பாபாவிடமே பாபாவின் டாலரைப் பெற்றேன் என மகிழ்ந்தேன்.



எனக்கு முதல் பிரசவத்திற்குப் பிறகு அதிக மன வேதனையாலும் உடல் அலைச்சலாலும் குடல் இறக்க நோய் வந்து பெரும் அவதிக்குள்ளானேன்.



ஜூன் 2012ல் இரண்டாவதாக கருவுற்றேன்.  ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என ரிப்போர்ட் வந்தது. ஸ்கேன் சென்ட்டரில் அழுது கொண்டிருந்த போது, என் குறையைக் கேட்ட வயதான பெண்மணி, ”வீட்டில் இருந்தபடி வியாழக்கிழமை பூஜை செய். உனக்கு அழகிய குழந்தை பிறக்கும்”என்றார்.



டி.என்.சி. செய்து கொண்ட பிறகு அந்த பூஜையை முறைப்படி செய்தேன். பெருங்களத்தூர் பாபா ஆலயத்தில் கூட்டுப்பிரார்த்தனையில் என் கோரிக்கை வைக்கப்பட்டது.



ஒரு நாள் கனவில் பாபா வந்து, ”இவளுக்கு பல வியாதிகள் வரப்போகிறது. ஆனால், கவலைப்படாதே. உன்னை காப்பேன்” என்று கூறினார்.



கனவு கண்ட மறுநாளே கரு உறுதிப்பரிசோதனை செய்தேன். பாசிடிவ் என ரிசல்ட் வந்தது. ஆனால் நோய் வரும் என பாபா சொன்னாரே என பயந்தேன். நான் பயந்தபடி நடந்தது. ஐந்தாம் மாதத்தில் கர்ப்பக்கால சர்க்கரை நோய், கருப்பை பலவீனம், தைராய்டு நோய், இரத்த அழுத்தம் என வந்தன. குடல் இறக்க நோயினால் வயிறு பெரிதாகி அதிகமாக பாதிக்கப்பட்டேன். இந்த நிலையில் குழந்தை எப்படி பிறக்குமோ என பயந்தேன் சிசேரியன் தான் என்றார்கள்.



குடல் இறக்க சிகிச்சை, சிசேரியன், குடும்பக்கட்டுப்பாடு மூன்றையும் ஒரே நேரத்தில் செய்யுமாறு கெஞ்சினேன். மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கோரிக்கையுடன் பல மருத்துவமனைகளுக்கு அலைந்தேன்.



போரூரில் ஒரு ஹாஸ்பிடலில் கால் வைத்ததும், பாபா வரவேற்பது போன்ற சிலை உள்ளது. திரும்பும் இடமெல்லாம் பாபா. இந்த இடத்தைத் தேர்வு செய்தேன்.



பாபாவிடம் வலியையும் வேதனையையும் தாங்க முடியவில்லையே என அழுதேன். யாராவது ஒரு டாக்டர் வந்து மூன்று அறுவை சிகிச்சைகளையும் செய்வதாகச் சொன்னால், இரண்டு முறை உனது சத்சரித்திரத்தைப் பாராயணம் செய்வேன் என வேண்டினேன்.



ஆபரேஷனுக்கு முதல் நாள் இரவு குடல் சிகிச்சை மருத்துவர்கள் வந்து, குடல் அறுவை சிகிச்சையையும் செய்வதாக் கூறினார்கள்.



வியாழன் 11 மணிக்கு அறுவை சிகிச்சை. எப்படியாவது எனக்கு தரிசனம் தந்து, சிகிச்சையை செய்ய வேண்டும் என பாபாவிடம் வேண்டினேன்.



யாரும் வரவில்லை. மயக்க மருந்து போட்டதும், மயங்கிவிட்டேன். பிறகு விழித்தபோது எந்த வலியும்இல்லை. மருத்துவர்கள் அடிக்கடி வந்து வலிக்கிறதா எனக்கேட்டனர். இல்லை என்றேன்.



குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு நர்ஸ் வந்து, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்? எனக் கேட்டார்.



முடிவு செய்யவில்லை. ஆனால் பெயருக்கு முன்போ, பின் போ சாய் என வைப்போம் என்றேன்.



உங்களுக்கு ஒன்று தெரியுமா? உங்களுக்குக் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பெயரும்”சாய்”தான் என்றார். மகிழ்ச்சியால் துள்ளினேன். நீங்களா வந்து எனக்கு அறுவை சிகிச்சை செய்தீர்கள்? என பாபாவிடம் கேட்டேன்.



வீட்டிற்கு வந்ததும், ராகவி சாய் எனப் பெயர் சூட்டினோம். டிசம்பர் 12 சாயிதரிசனம் இதழில் சாயி வரதராஜன் எழுதிய சாயியின் குரலில், நடப்பது நடந்தே தீரும் என்ற தலைப்பில் குழந்தையின் மரணப் போராட்டத்தைப் பற்றியும், குழந்தை பிழைக்கும் என்றும் இறுதியில் என் பெயரும் பிழைக்கும் என்றும் பாபா சொல்லி இருந்தார்.



இதைப் பார்த்ததும் சற்று பயமும் இருந்தது. மறுநாள் ராகவி சாய்க்கு பாலூட்டும் போது எனது பெரியமகள் பைரவி ஒரு கனமான பொருளை எடுத்து எதிர்பாராத வகையில் குழந்தையின் மீது வீச, குழந்தை வீல் எனக் கத்த, அனைவரும் பயந்து கதறிவிட்டோம்.



குழந்தையின் தலையைத் தொட்டுப் பார்த்தால் அடிபட்ட அறிகுறி எதுவுமில்லை. குழந்தை நன்றாக இருந்தது. சத்சரித்திரத்தில்நெருப்பில்விழ இருந்தகுழந்தையைக்காப்பாற்றியகதை இருக்கிறது. அதுபோலஎன்குழந்தையும் காப்பாற்றப்பட்டதைஉணர்ந்தேன்.



சாயிதரிசனம் இதழில் வரும் அத்தனை விஷயங்களும் பாபா தனது பக்தர்களுக்குத் தெரிவிக்கும் கருத்துக்கள். சாயிபாபாவை அடைந்தவர்களுக்கு அவர் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சாட்சி.



செ. பிரமிளாதேவி, குரோம்பேட்டை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...